Advertisement

 “அப்பாவே சொல்லிட்டார். நான் போறேன்”, என்று சிட்டாக பறந்து விட்டாள் வளர்மதி.

 

“நீங்களே காட்டுக்கு போய்ட்டு வந்துருக்கீங்க. செத்த உக்காருங்க. நான் வேலையை பாத்துக்குறேன்”, என்று சொன்னாள் பூங்காவனம்.

 

“சரித்தா” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். அடுத்த தெருவுக்கு சென்று கொண்டிருந்த வளர்மதி கவிதா வீட்டுக்கு எதிர் வீட்டில் ஆள் நடமாட்டம் தெரிவதை கண்டு புருவம் உயர்த்தினாள்.

 

“ஏட்டி என்ன வாசல் வரைக்கும் வந்துட்டு உள்ள வராம நிக்க? உள்ளார வா”, என்றாள் கவிதாவின் அம்மா மங்கை.

 

“இல்லத்தை அந்த வீட்ல லைட் எரியுதே? அதான் பாத்தேன்”

“ஓ அதுவா? நீ உள்ளாரா வா சொல்றேன்”

 

படபடக்கும் மனதோடு உள்ளே சென்றாள் வளர். “சொல்லு அத்தை. யாரு வந்துருக்காங்க?”

 

“வாசு அண்ணன் தான் குடும்பத்தோட வந்துருக்காங்க”

 

“என்னது குடும்பதோட வா?”

 

“ஆமா டி இனி இங்க தான் தங்க போறாங்களாம்”

 

“விவரமா சொல்லு அத்தை. எதுக்கு வந்துருக்காங்க?”

 

“அடியே அவங்க வீட்டுக்கு அவங்க வந்துருக்காங்க”

 

“ஐயோ சிரிப்பு காட்டாத அத்தை. இவ்வளவு நாள் வரலையே? இப்ப என்னன்னு கேட்டேன்”

 

“நம்ம மது இருக்காளே? அவ இங்க தான் வேலை பாக்க போறா? நம்ம ஆஸ்பத்திரிக்கு அவ தான் இனி டாக்டர். அதான் இங்கயே வந்துருக்காங்க. அப்படியே அப்சரஸ் மாதிரி இருக்கா”

 

“அப்படியா?”

 

“ஆமா, சரி கவிதா உள்ள தான் இருக்கா. நீ உள்ளார போ. நான் உன் மாமனை எங்கன்னு பாத்துட்டு வரேன்”

 

நாளைக்கு செய்ய வேண்டியதை மனதில் எண்ணி முடித்தவள் தன் தோழியை பார்க்க சென்றாள். சிறிது நேரம் அவளிடம் பேசி கொண்டிருந்து விட்டு எழு மணிக்கு வீட்டுக்கு வந்தாள் வளர்.

 

அவளுடைய அண்ணன் வண்டி அங்கிருக்க வில்லை.

 

“அண்ணன் இன்னும் வரலையா மா?”, என்று பூங்காவனத்திடம் கேட்டாள் வளர்மதி.

 

“வந்துருவான் டி. நீ சாப்பிடுறியா?”

 

“நான் அண்ணன் வந்த அப்புறம் சாப்பிடுறேன்”

 

“சரி நீ படி”

 

“இன்னைக்கு கொஞ்சம் தலை வலிக்கு மா. நாளைக்கு படிக்கேன்”

 

வளர் எப்போதும் தன்னுடைய படிப்பை விட்டு கொடுக்க மாட்டாள் என்பது தெரியுமாதலால் “சரி டிவி பாக்காம இரு. தலைவலி சரியாகிரும். வேணும்னா அண்ணன் கிட்ட மாத்திரை வாங்கிட்டு வர சொல்லி போன் போடு”, என்றாள்.

 

“மாத்திரை போடுறதுக்கா தலை வலின்னு பொய் சொல்றேன்”, என்று நினைத்து கொண்டு “மாத்திரை வேண்டாம் மா அதுவே சரியாகிரும்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

 

வாசலையே அவளுடைய கண்கள் பார்த்து கொண்டு இருந்தது.

 

“ஏய் சின்ன குட்டி உன் அண்ணன் வருவான். நீ ஏன் வாசல்லே தவம் கிடக்க?”, என்று கேட்டார் தங்கராசு.

 

“ஆன் அது அது வந்துப்பா சும்மா தான்”, என்று சமாளித்தாலும் அவள் கண்கள் அவன் அண்ணன் வரவை தான் எதிர்பார்த்து கொண்டிருந்தது. அதே நேரம் உள்ளே வந்தான் செழியன்.

 

அவனை கண்டதும் மலர்ந்து சிரித்தாள் வளர்மதி. அவள் முகத்தை பார்த்தே அவள் தனக்காக தான் காத்திருக்கிறாள் என்று புரிய அவளை பார்த்து சிரித்தவன் “என்ன பாப்பா எதாவது வேணுமா?”, என்று கேட்டான்.

 

“இல்லண்ணே சும்மா, நீ வர நேரம் ஆகிட்டா. அதான்”

 

அவள் தலையை பாசத்துடன் வருடி கொடுத்தவன் “கொஞ்சம் வேலை இருந்துச்சு டா குட்டி. அதான் சாப்பிட்டியா?”, என்று கேட்டான்.

 

“நீ வந்த உடனே சாப்பிடுறேன்னு சொல்லிட்டா பா. சரி முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம்”, என்று பூங்காவனம் சொன்னதும் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

 

“வளர் தண்ணி எடுத்து வை, சாப்பிடுவோம்”

 

“சரிம்மா”, என்று எழுந்து கொண்டவள் தண்ணீர் தட்டு எல்லாத்தையும் நடு காலில் எடுத்து வைத்தாள். அப்போது உள்ளே வந்தாள் தங்கராசுவின் உடன் பிறந்த அக்கா சரசுவின் ஒரே மகள் வள்ளி.

 

“வா கண்ணு”, என்று சொன்னார் தங்கராசு.

 

“ஏய் வாயாடி சரியான நேரத்துக்கு தான் வந்துருக்க. வா சாப்பிடலாம். வளரு பக்கத்துல உக்காரு”, என்றாள் பூங்காவனம்.

 

“நான் எங்க வீட்ல சாப்பிட்டேன் அத்தை. அம்மா இந்த உளுந்தை உன்கிட்ட கொடுக்க சொன்னா. சரி அத்தான் எங்க?”

 

“எதுக்கு டி நீ அண்ணனை கேக்க?”, என்று கேட்டாள் வளர்மதி.

 

“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வளர் வரம் கொடுக்க மாட்டாளே. ஒரு வார்த்தை அவ அண்ணன் கிட்ட பேச விடுறாளா?”, என்று எரிச்சலுடன் நினைத்த வள்ளி “வி. எ. ஓ பரிட்சை வருது. அத்தான் கிட்ட புக் வாங்கணும்”, என்றாள்.

 

“உன் புத்தி எனக்கு தெரியாதா?”, என்று நினைத்து கொண்டு “வா நான் எடுத்து தரேன்”, என்று சொல்லி முதல் ஆளாக அவனுடைய அண்ணன் அறைக்கு சென்றாள்.

 

“இவளை”, என்று பல்லை கடித்த படி அவள் பின்னே சென்றாள் வள்ளி.

“அண்ணா வள்ளிக்கு வி. எ. ஓ புக் வேணுமாம்”, என்று வளர் சொன்னதும் “அந்த ஜன்னல்ல இருக்கு மா. எடுத்து கொடு”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் இளஞ்செழியன்.

 

அவனையே ஏக்க பார்வை பார்த்து கொண்டிருந்த வள்ளியை “ஏய் இந்த புக் தான கேட்ட? இந்தா”, என்று எடுத்து கொடுத்து அவள் கவனத்தை கலைத்தாள் வளர்மதி.

 

அதை எரிச்சலுடன் வாங்கி கொண்டாள் வள்ளி. “அத்தான் பக்கத்துல உக்காந்தாவது சாப்பிடலாம்”, என்று நினைத்து கொண்டு அவள் வெளியே வரும் போது அவளுக்கு முன்னே வந்து செழியன் அருகில் அமர்ந்து கொண்டாள் வளர்மதி.

 

தங்கையை பரிவுடன் பார்த்த செழியன் வாத்சல்யத்துடன் புன்னகைத்தான். அவனுக்கு அந்த பக்கம் பூங்காவனம் அமர்ந்திருந்தாள். வேறு வழியில்லாமல் தன்னுடைய மாமா தங்கராசு அருகில் சென்று அமர்ந்தாள் வள்ளி.

 

எதை எதையோ பேசிய படியே சாப்பிட்டார்கள். வேண்டாம் என்று சொன்ன வள்ளியும் சாப்பிட்டாள், அவனை பார்த்த படியே.

 

“இவ அடங்கவே மாட்டா”, என்று நினைத்து கொண்ட வளர்மதி “எம்மா நான் நாளைக்கு ஸ்கூல் முடிஞ்சு வரும் போது என்னோட பிராண்ட் உஷா வீட்டுக்கு போய்ட்டு வரட்டா?”, என்று ஆரம்பித்தாள்.

 

“போயிட்டு வா கண்ணு. ஆமா நான் கேக்கணும்னு நினைச்சேன். அவளுக்கு கல்யாணம் நின்னு போச்சுன்னு சொன்னியே. எதுக்கு வளரு?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“இந்த கேள்விக்காக தான இந்த பேச்சையே ஆரம்பித்தேன்”, என்று நினைத்து கொண்டு “அவ மாமாக்கு தான் மா கல்யாணம் பண்ணி வைக்க இருந்தாங்க”, என்றாள்.

 

“அது தான் தெரியுமே. அவன் கூட சென்னைல வேலை பாக்குறதா சொன்னியே”

 

“ஆமா மா. அவர் தான் கல்யாணத்தையே நிறுத்திட்டார்”

 

“ஐயையோ எதுக்கு வளரு?”

 

“அதுவா அவருக்கு விவரம் நல்லா தெரியும் மா, படிச்சவரு. உறவுக்குள்ள கல்யாணம் பண்ணுனா பிறக்கிற குழந்தை ஊனமா பிறக்கும். அதனால தான் அவர் நிறுத்திட்டார்”

 

திக்கென்று வளரை பார்த்தாள் வள்ளி. அவளுக்கு உள்ளுக்குள்ளே எரிந்தது.

 

“ஐயையோ அப்படியா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

 

“ஐயோ அத்தை அவ சொல்றதை நம்பிகிட்டு இருக்க? அதெல்லாம் இல்லை. நீயும் என் மாமனை தான கட்டிருக்கா. நீங்க ரெண்டு பேரும் உறவு தான? அதெல்லாம் சும்மா”, என்றாள் வள்ளி.

 

“அதான வளரு? உங்க அப்பாரு எனக்கு உறவு தான்”

 

“அம்மா மறந்துட்டியா? அண்ணனுக்கு முன்னாடி ஒரு பிள்ளை பிறந்துச்சே. ஞாபகம் இருக்கா? அது குறையோட தான் பிறந்துச்சாம். எனக்கு ஆச்சி சொல்லிருக்கா. நீ வேணா அப்பா கிட்ட கேளு”, என்றாள் வளர்மதி.

 

“ஆமா பூவு வளரு சொன்னது சரி தான். உங்கிட்ட காட்டுனா நீ துடிச்சு போவன்னு தான் உன்கிட்ட பிள்ளையை காட்டலை. அந்த குழந்தைக்கு ஒரு கால் வளர்ச்சி குறைவா தான் இருந்தது”, என்று தங்கராசு சொன்னதும் யோசனையில் இறங்கினாள் பூங்காவனம்.

 

“ஐயோ இந்த அத்தை யோசிக்க கூடாதே”, என்று நினைத்து கொண்டு “மாமா நீங்களும் அத்தையை பயமுறுத்துறீங்க? நம்ம ஊருல முக்கால் வாசி சொந்த அத்தை பையனை தான் கல்யாணம் பண்ணிருக்காங்க. அவங்க குழந்தை எல்லாம் ஊனமாவா இருக்கு”, என்று கேட்டாள் வள்ளி.

 

“அம்மா நான் சொல்றது தான் நிஜம். எங்க டீச்சரும் பாடம் எடுக்கும் போது சொன்னாங்க. நீ வேணும்னா அண்ணன் கிட்ட கேட்டு பாரு. நீ சொல்லுண்ணா”, என்று சொன்ன வளர் தன் அண்ணனிடம் கண்ணை காட்டினாள்.

 

அதை புரிந்து கொண்ட செழியன் “ஆமா அம்மா வளர் சொன்னது சரி தான். சொந்தகாரங்களுக்குள்ள ரத்தம் கொஞ்சம் ஒத்து போகும். அதனால பிறக்கிற குழந்தைக்கு கண்டிப்பா பாதிப்பு வரும். வராமலும் போகலாம் தான். ஆனா அப்படி வந்துட்டா என்ன பண்ண? குழந்தை பாவம் தான மா?”, என்றான்.

 

“மொத்தமா கவுத்துட்டாங்களே”, என்று பல்லை கடித்து கொண்டு தன்னுடைய அத்தையை பார்த்தாள் வள்ளி.

 

“செழியன் சொன்னா தப்பாவாங்க இருக்கும். எனக்கும் உங்க அக்கா வீட்டுல சம்பந்தம் பண்ணனும்னு தான் நினைப்பு இருந்தது. இப்ப பயமா இருக்கே”, என்றாள் பூங்காவனம்.

 

“நாம சின்னதுக மனசுல ஆசையே வளக்கலையே பூவு. யாருக்கு எங்க முடிச்சு போட்டுருக்கானு அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். கடவுள் பாத்துக்குவார்”, என்றார் தங்கராசு.

 

நொந்து போன வள்ளி “எனக்கு போதும். நான் வீட்டுக்கு போறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

தன் அண்ணனை பார்த்து வெற்றி புன்னகை புரிந்தாள் வளர்மதி. அவளை பார்த்து பெருமையாக சிரித்த இளைஞ்செழியன் அவள் தலையை பாசமாக வருடி விட்டு சென்றான்.

 

“ஏட்டி வளரு நாளைக்கு உஷா வீட்டுக்கு போயிட்டு சீக்கிரம் வந்துரு. நாளைக்கு உன் அக்காவும் மாமாவும் குட்டி பயலுக்கு காத்து குத்த பத்திரிக்கை கொடுக்க வாறாக”, என்றாள் பூங்காவனம்.

 

“ஐ அக்கா வருதா? எப்ப வாராக மா?”

 

“நைட் வந்துட்டு அடுத்த நாள் தான் போவாங்க”

 

“ஹ்ம்ம் சரி எனக்கு போதும்”, என்று சொல்லி விட்டு தன் அண்ணனின் தட்டையும் எடுத்து கொண்டு சென்றாள் வளர்மதி.

 

“ஏய் அந்த தட்டையும் கொண்டு போ டி”, என்று வள்ளி தட்டை சுட்டி காட்டினாள் பூங்காவனம்.

 

“உன் மருமக தட்டை நீயே கழுவி வை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

 

தன்னுடைய அறையில் இருந்து பாய் தலையணை போர்வை எடுத்தவன் மொட்டை மாடிக்கு சென்றான். பாயை விரித்து தலையணையை போட்டவன் மல்லாக்க படுத்து வானத்தை வெறித்தான்.

 

சுற்றி இருந்த இருள் போலவே தன் வாழ்க்கையும் இருள் சூழ்ந்ததாகவே இருக்குமா என்று சிந்தித்து உறக்கத்தை தொலைத்தான்.

 

அதே நேரம் தன்னுடைய அறையில் மெத்தையில் பிரண்டு கொண்டிருந்தாள் மதுமிதா. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

 

தாகம் தணியும்……

 

Advertisement