Advertisement

 

 

Tamil Novel Episode 5

 

அத்தியாயம்  5

 

“டேய் இப்ப தான மச்சான் படுத்தேன். அப்புறம் ஏன் டா எழுப்புற? நான் உன் கல்யாணத்துக்கு முந்துன நாளே வந்து உங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன். நைட்டும் படுத்தி எடுத்த. இப்பவும் எழுப்புற. எல்லாரும் வர மாதிரி நாளைக்கே வந்துருக்கணும் டா பரதேசி”, என்று புலம்பிய படியே தலையணையை இறுக்கி பிடித்து மறுபடியும் தூங்க போனான் ராகுல்.

 

“டேய் நேரம் ஆகிட்டு டா. அப்பா எழும்ப சொல்றாங்க. மாப்பிள்ளை நான். எனக்கு உதவியா இருக்காம, நீ மூடி அடிச்சிட்டு தூங்குற? ஆறரைக்கு முகூர்த்தம் டா. மணி அஞ்சு ஆகிட்டு. நானே முழிச்சிட்டேன். உனக்கு என்ன?”, என்ற படியே தலையணையை வைத்து ராகுலை மொத்தினான் நரேன்.

 

“ஏன் சொல்ல மாட்ட, முதலிரவு பத்தி என் லட்டு கிட்ட பேசிகிட்டு இருந்த என்னை, நீயும் உன் பொண்டாட்டியும் சேந்து, அழ வச்சிட்டு இப்ப எழுப்பி வேற விடுறியா? நான் கிளம்ப பத்தே நிமிஷம் தான். நீ போய் முதல்ல குளி. அது வரைக்கும்  நான் தூங்குறேன். எப்படியும் இன்னைக்கு பகல் முழுவதும் தூங்க போறது இல்லை. நைட்டும் ட்ராவல் பண்ணனும். ஆனா உனக்கு அப்படியா? இன்னைக்கு பர்ஸ்ட் நைட் அப்படிங்குற பேர்ல ரெஸ்ட். எப்படியும் நீயும் உன் பொண்டாட்டியும் போய் ரூம்ல சண்டை போட்டு தூங்க தான் போறீங்க. என்னையாவது தூங்க விடு டா”

 

“போயும் போயும் உன்னை போய் எழுப்புனேன் பாரு? என்னை சொல்லணும்”, என்று சொல்லி விட்டு தலையில் அடித்து கொண்டு குளிக்க சென்றான்.

 

குளித்து முடித்து அவன் வந்த உடனேயே, ராகுலை எழுப்பினான் நரேன்.

 

“இவன் தூங்க விட மாட்டான்”, என்று நினைத்து கொண்டே எழுந்து குளிக்க சென்றான்.

 

ராகுல் குளித்து முடித்து வெளியே வரும் போது, கிளம்பி கொண்டிருந்தான் நரேன்.

 

அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவனை விட படு ஸ்டைலாக கிளம்ப ஆரம்பித்தான் ராகுல்.

 

“டேய் கல்யாணம் எனக்கு டா”, என்றான் நரேன்.

 

“யாரு இல்லைனு சொன்னது? நீ சும்மா கிளம்புனாலே சூப்பரா இருப்ப. நான் அப்படியா? சூப்பரா கிளம்புனா தான் சுமாராவே இருப்பேன்”, என்ற படியே பவுடரில் குளித்தான்.

 

கை இல்லாத வெள்ளை பனியனை எடுத்து போட்டு விட்டு  வேட்டியை எடுத்து கட்டிய நரேன், “வேட்டி சில தடவை மாதிரி மானத்தை வாங்கிரும்”, என்று நினைத்து கொண்டு பெல்ட்டை எடுத்து இடுப்பில் கட்டினான்.

 

“இன்னும் நேரம் இருக்கு. அப்புறம் சட்டையை போட்டுக்கலாம்”, என்று நினைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்து சீரியஸாக தயாராகி கொண்டிருந்த ராகுலை பார்த்தான்.

 

“இவன் அடங்க மாட்டான்”, என்று நினைத்து சிரித்தவனுக்கு அபர்ணா நினைவு வந்தது.

 

“காலைல எப்ப சாப்பாடு கொடுப்பாங்களோ தெரியாது. அப்புக்கு பசி எடுத்தா அழுது ஒப்பாரியே வைப்பா”, என்று நினைத்து கொண்டு தன் அம்மாவை அழைத்தவன்  எந்த வேலையா இருந்தாலும் அப்பறம் செஞ்சிட்டு, முதலில் அப்புவுக்கு பால் சூடு பண்ணி கொடுக்க சொன்னான். கூடவே பிஸ்கட்டும்.

 

அவனுடைய அக்கறையை பார்த்து சிரித்து கொண்ட சிவகாமி, பால் சூடு பண்ணி அதனுடன் பிஸ்கட், பிரட் எல்லாம் அவளுக்கு கொடுத்து விட்டு அவனுக்கும், ராகுலுக்கும் கொடுத்து விட்டே வேற வேலையை பார்க்க சென்றாள்.

 

“நல்லதா போச்சு. மதியம் தான் சோறை கண்ணுல காட்டுவாங்க. என்ன டா செய்யன்னு யோசிச்சேன். அதுக்குள்ள அம்மா கண்ணுல சாப்பாடை காமிச்சிட்டாங்க. பத்து மணி வரை தாங்கும்”, என்ற படியே பிஸ்கட்டை  எடுத்து மொக்க ஆரம்பித்தான் ராகுல்.

 

“பறக்காத டா, மெதுவா சாப்பிடு”, என்று சொல்லி கொண்டே சூடாக இருந்த பாலை குடிக்க ஆரம்பித்தான் நரேன்.

 

வாயில் இரண்டு பிஸ்கட்டை அடைத்து கொண்டு நரேனை பார்த்த ராகுல் “ஆமா அது என்ன டா நான்?”, என்று அவன் கழுத்தை சுட்டி காட்டி கேட்டான்.

 

அவன் கழுத்தில் இருந்த செயினில் என். எ. என் என்று எழுத்துக்களே டாலராக இருந்தது.

 

சட்டை போடாததால் அது வெளியே தெரிந்தது.

 

அதை கையில் தொட்டு பார்த்து சிரித்த நரேன், “இது அப்பு கிபிட் டா. அவ எ. நான் என். அவளை சுத்தி எப்பவும் நான் தான் இருக்கணும்னு என். எ. என் ன்னு செஞ்சி மாட்டி விட்டுட்டா”, என்றவனுக்கு அவள் அன்று அதை போடும் போது “நாய் சங்கிலி மாட்டி விடுற”, என்று அவளை கிண்டல் அடித்தது நினைவில் வந்தது.

 

“அவளை நினைச்சு பிரீஸ் ஆகி போய் புலம்புறான். ஆனா இது தான் காதல்ன்னு தெரியாம இருக்கானே”, என்று நினைத்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தான் ராகுல்.

 

அங்கே அபர்ணாவோ தன் அத்தையையும், கூட இருப்பவர்களையும் ஒரு வழி ஆக்கி கொண்டிருந்தாள்.

 

“இன்னைக்கு ஒரு நாள் தானே மா, எல்லாத்தையும் போட்டுக்கோ”, என்று கெஞ்சி கொண்டிருந்தாள் சிவகாமி.

 

“அத்தை, இவ்வளவு நகை. இவ்வளவு பூவா? என்னால முடியாது. ப்ளீஸ் செல்ல சிவகாமில்ல? விட்டுரு அத்தை”, என்று சிணுங்கி கொண்டிருந்தாள் அபர்ணா.

 

அவளை கிளப்பி முடித்தவுடன் சிவகாமிக்கு மூச்சு வாங்கியது. அந்த அளவுக்கு இருந்தது அபர்ணா சேட்டை. கிளப்பி முடித்து தலை முதல் கால் வரை ஒரு பார்வை அபர்ணாவை பார்த்த சிவகாமி “அழகு சிலை மாதிரி இருக்க டா அப்பு குட்டி. அப்புறம் உன் அம்மா, அப்பா வலி சொந்த காரங்க எல்லாம் வந்துருக்காங்க. அவங்க எதாவது வந்து பேசுனா, சிரிச்ச முகமா பேசு டா. கோப பட்டுறாதே. இன்னைக்கு கிளம்பி போக போறவங்க கிட்ட வம்பு வேண்டாம். சரியா குட்டி? சரி இதெல்லாம் சாப்பிடு. இப்ப கிளம்பனும். அவன் தான் இதை எல்லாம் கொடுக்கணும்னு போன் பண்ணி கத்துறான். நீ பசி தாங்க மாட்டியாம்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.

 

ஏற்கனவே மலர்ந்திருந்த முகம் மேலும் மலர்ந்தது அவளுடைய நரேனை நினைத்து.

 

சிரித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தவள், அவனை போனில் அழைத்தாள்.

 

அவள் எண்ணை பார்த்ததுமே அவன் முகமும் அதே போல் மலர்ந்தது.

 

“குட் மார்னிங் அப்பு, கிளம்பிட்டியா?”

 

“ஹ்ம்ம் கிளம்பிட்டேன் டா. அத்தை தான் டெக்கரேட் பண்ணி விட்டாங்க.  நீ என்ன செய்ற?”

 

“கிளம்பிட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன். அம்மா சாப்பிட தந்தாங்களா? எப்ப சாப்பாடு தருவாங்கன்னு தெரியாது டி. ஒழுங்கா சாப்பிட்டுக்கோ”

 

“ஹ்ம்ம் சரி டா”

 

“அப்பு?”

 

“என்ன நரேன்?”

 

“உன்னை பாக்கணும் போல இருக்கு, வரவா?”, என்று போனில் கேட்ட நரேனை பார்த்து தலையில் அடித்து கொண்டான் ராகுல். “கேக்குறான் பாரு கேனை தனமா? தோணின உடனே அவ முன்னாடி போய் நிக்க வேண்டாமா?”, என்று பல்லை கடித்தவன் அதன் பின் “அங்க போனாலும் மறுபடியும் ரெண்டும் சண்டை போடும்”, என்று நினைத்து கொண்டான்.

 

“வா டா. அத்தை இப்ப தான் கீழ போனாங்க. உன்னோட சொந்த காரங்களும் மண்டபம் கிளம்பிட்டாங்க. வா”, என்றாள் அபர்ணா.

 

அவளுக்கும் அவனை பார்க்க ஆவலாக இருந்தது. நரேன் வேட்டி இது வரை கட்டியதே இல்லை. “எப்படி இருப்பான்?”, என்று பார்க்கும் ஆவலில் சந்தோஷமாகவே வர சொன்னாள்.

 

ஆனால் அடுத்த நொடி போனை வைத்து விட்டு அவள் முன்னே போய் நின்றவனை பார்த்து திகைத்தாள்.

 

கண் முன்னே சட்டை போடாமல் வெறும் உள்பனியனுடனும், பட்டு வேட்டியிலும் நின்றிருந்தான் நரேன்.

 

“பாவி எப்படி கவர்ச்சியா இருந்து தொலைக்கிறான்? இப்படியே முன்னாடி வந்து நின்னா ஒரு சின்ன பிள்ளை மனசு அலை பாயாது. எப்ப தான் இதெல்லாம் புரியுமோ?”, என்று நினைத்து கொண்டாள்.

 

அவனை பார் என்று ஒரு மனமும், வெக்கத்துடன் பார்க்காதே என்று ஒரு மனமும் பேசியது.

 

நிமிர்ந்து பார்த்து அவனை ரசித்தவளுக்கு அவன் முடி படர்ந்த மார்பில் முகம் புதைக்கணும் என்று ஆவல் வந்தவுடனே தலையை குனிந்து கொண்டாள்.

 

அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை பார்க்காமல், அவளை தலை முதல் கால் வரை அளவெடுத்து கொண்டிருந்தான் நரேன்.

 

கழுத்தில் ஒரு குட்டி செயின், காதில் ஒரு குட்டி கம்மல் மட்டுமே அவளை எப்போதும் அலங்கரித்திருக்கும். ஆனால் இன்று அணிந்திருக்கும் அதிக படியான நகையிலும், பட்டு புடவையிலும், முகத்தில் மிளிர்ந்த சந்தோஷத்திலும் வேறு விதமாக அழகாக தெரிந்தாள் அபர்ணா.

 

வியந்து போய் அவளை பார்த்து கொண்டிருந்தான்.

 

அவன் பார்வை அவளுக்கு மேலும் குறுகுறுப்பை தந்தது.

 

“அழகா இருக்க அப்பு. படத்துல வர அம்மன் மாதிரி. செமையா இருக்கு”, என்று ரசனையாக சொன்னான் நரேன்.

 

“ச் போடா, நீ வேற. எப்ப டா இதை எல்லாம் கழட்டி போடுவோம்னு இருக்கு. தலையை பாரு எவ்வளவு பூவுன்னு. தலையே வலிக்குது டா”

 

“தலை வலிக்குதுன்னா, அம்மாவை எடுக்க சொல்றேன். ஆனா அது கூட ரொம்ப அழகா இருக்கு அப்பு”

 

“நிஜமா?”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“சரி நீ என்ன பழைய செயின் போட்டுருக்க? மாமா புது செயின் எடுத்தாங்களே? கொடுக்க மறந்துட்டாங்களா?”

 

“அவங்க மறக்கலை டி. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்”

 

“ஏன் டா? அதை எடுத்து போடு”

 

“இது பழைய செயினா இருந்தாலும் நீ கொடுத்ததாச்சே”, என்றவனை இமைக்காமல் பார்த்தாள் அபர்ணா.

 

அவள் பார்வையை எல்லாம் உணராமல், “இப்ப தான் தெரியுது அப்பு. என் கூட படிச்ச ராஜேஷ் எதுக்கு உன்னை சுத்தி சுத்தி வந்தான்னு. அவ்வளவு அழகா இருக்க. இத்தனை நாள் எதுக்கு பேக்கு மாதிரி சுத்திகிட்டு இருந்த? இப்ப போலவே அழகா இருக்கலாம்ல?”, என்று வம்பிழுத்தான்.

 

“நானா டா பேக்கு? நீ தான் டா அறிவுகெட்ட  கூமுட்டை. மண்டைல மசாலாவே கிடையாது”

 

“எனக்கா  அறிவு இல்லை? நான்  யூனிவர்சிட்டி டப்பாராக்கும். ஜஸ்ட்  பாஸ் பண்ண உனக்கு தான் அறிவே இல்லை”

 

“எனக்காடா  அறிவு இல்லை? டெய்லி  இப்படி அம்மன் மாதிரி  மேக்கப் பண்ண சொல்ற? உனக்கு  தான் அறிவு இல்லை”

 

“ஆமா  ஆமா ஒரு  பொய்யை சொன்ன  உடனே அதையே உண்மைன்னு  நம்பி பிகு பண்ற. உனக்கு  தான் அறிவு இல்லை”

 

“வேண்டாம்  டா நரேன். என்கிட்ட  காலைலே வம்பிழுக்காத. உன்னை  கொத்துக்கறி போட்டுருவேன்”

 

“ஆமா  ஆமா போட்டுக்கோமா  தாயேன்னு நான் அமைதியா  இருப்பேன் பாரு போடி”

 

“நீ  போடா. கழுதை. இஞ்சி  தின்ன குரங்கு”

 

இங்கே  இவர்கள்  சண்டையை தொடரும்  போது நரேன் அறையில்  நுழைந்த சிவ பிரகாசம்  “கிளம்பிடீங்களா பா? நரேன்  எங்க ?”, என்று கேட்டார்.

 

“அப்புவை பாத்துட்டு வரேன்னு போனான் பா”, என்றான் ராகுல்.

 

“சரி நேரம் ஆகிட்டு. கிளம்பலாமா?”

 

“சரி பா”

 

“சரி அவனை கூட்டிட்டு கீழ வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

 

நரேனை கூப்பிட போன ராகுல் அங்கு அவர்கள் சண்டையை பார்த்து பல்லை கடித்தான்.

 

“டேய் டேய் நிறுத்துங்கடா. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? இன்னைக்கும் இப்படியா  சண்டை போடுவீங்க? வா டா. நேரம் ஆகிட்டு”, என்று நரேனை இழுத்து சென்றான் ராகுல்.

 

ராகுலுடன் போகும் நரேனையே பார்த்து கொண்டிருந்தாள் அபர்ணா.

 

திரும்பி பார்த்த நரேன், அபர்ணாவை பார்த்து சிரித்து விட்டு சென்றான். அவள் இதழ்களிலும் சிரிப்பு படர்ந்தது.

 

அய்யர் மந்திரம் ஓத, அவர் முன்பு பவ்வியமாய் அமர்ந்திருந்தான் நரேன்.

 

“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ”, என்று அவர் சொன்னவுடன் அழைத்து வர பட்டு அவன் அருகில் அமர்ந்தாள் அபர்ணா.

 

அவளை திரும்பி பார்த்தவன் சிரித்தான். தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அபர்ணா.

 

“அம்மாவோட கட்டளை போல? இல்லைன்னா இவளாவது, இப்படி ஊமை மாதிரி உக்காந்திருக்குறதாவது?”, என்று நினைத்து மனதுக்குள் சிரித்து கொண்டிருந்தவனை அய்யர் நடப்புக்கு கொண்டு வந்தார்.

 

கெட்டிமேளம் முழங்க, சொந்தங்களின் ஆசிர்வாதத்தோடு, இத்தனைநாள் நட்பாக தன் உயிரில் கலந்தவளை மஞ்சள் தாலி அணிவித்து மனைவியாக்கி கொண்டான் நரேன்.

 

இருவர் மனதும் சந்தோசத்தை மட்டுமே கொண்டிருந்தது.

 

அவர்களை பார்த்த அனைவருக்குமே மனது நிறைவாக இருந்தது.

 

அங்கே சில கேட்ட எண்ணம் கொண்டவர்கள் தேவை இல்லாததை பேசினார்கள் தான். “எதுக்கு இந்த பொண்ணை எடுத்தீங்க? என்ன தான் நட்பா பழகினாலும், நம்ம ஜாதி இல்லையே”, என்று சொன்னவர்களை “நாங்க கஷ்ட பட்டப்ப எந்த சொந்தங்களும் உதவலையே. நம்ம ஜாதி காரங்க கூட ஏளனமா தான பாத்தாங்க.  அபர்ணா அப்பா, அம்மா மட்டும் தான் எங்களுக்கு சொந்தம். அவங்க மக தான் எங்க வீட்டுக்கு மருமகன்னு நாங்க எப்பவோ முடிவு பண்ணிட்டோம்”, என்று முடித்து விட்டனர் சிவகாமியும், சிவ பிரகாசமும்.

 

அடுத்து பல சடங்குகள் அணிவகுத்தது.

 

ராகுல், நரேனுடனே இருந்து அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தான்.

 

அபர்ணா தோழிகளும் வந்து விட்டதால், சந்தோசம் மட்டுமே அங்கு நிறைந்திருந்தது.

 

சடங்கு முடிந்த உடனேயே இருவருக்கும் சாப்பாடு அளிக்க பட்டது.

 

அவளை அவனுக்கு ஊட்டி விட சொல்லும் போது, அவள் விரலை கடித்து வைத்து அவளிடம் இருந்து ஒரு கொட்டு வாங்கி கொண்டான் நரேன்.

 

அணைத்து நிகழ்வுகளும் வீடியோ மற்றும் போட்டோவாக பதிவு செய்ய பட்டது.

 

இங்க பெண் வீடு, பையன் வீடு ரெண்டுமே ஒன்றாகையால் இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

 

இருவருக்கும் பால், பழம் கொடுக்க பட்டது.

 

“ச்சி எச்சி”, என்று அவன் காதில் முனங்கினாள் அபர்ணா.

 

“என் ஐஸ் கிரீமை புடுங்கி திங்கும் போது இது தெரியலையோ?”, என்று அவளிடம் அடி குரலில் ரகசியம் பேசினான் நரேன்.

 

“கிண்டல் பண்ணா கொன்னுருவேன் டா”

 

“கொல்லு பாப்போம்”

 

இவர்கள் இங்கே ரகசியம் பேசி கொண்டிருக்கும் போது அம்பிகா பாட்டி “என்ன ரெண்டு பெரும் குசுகுசுன்னு ரகசியம் பேசுறீங்க?”, என்று கேட்டார்.

 

“நீங்க வேற பாட்டி. நான் உன்னை கொன்னுருவேன். இல்லை அடிச்சிருவேன்னு அவ சொல்லிருப்பா. அதுக்கு அவன் பதிலுக்கு சண்டை போட்டிருப்பான். இது தான் நடந்திருக்கும்”, என்றான் ராகுல்.

 

இருவரும் அசடு வழிந்து அது தான் உண்மை என்று நிரூபித்தார்கள்.

 

அடுத்து ரெஸ்ட் எடுங்க என்று அவரவர் அறைக்கு அனுப்பி விட்டார்கள்.

 

அன்று இரவு ஏழு மணிக்கு மொட்டை மாடியில் நரேன் மற்றும் ராகுல் அமர்ந்திருந்தார்கள்.

 

“எத்தனை மணிக்கு டா பஸ்?”, என்று கேட்டான் நரேன்.

 

“ஒன்பதரைக்கு தான். உன்னை போருக்கு அனுப்பிட்டு தான் நான் கிளம்பனும் டா நரேன்”

 

“என்னது போரா?”

 

“ஆமா, முதலிரவு அறையில் ரெண்டு பேரும் யுத்தம் தான செய்ய போறீங்க? அதை தான் சொன்னேன்”, என்று சிரித்தான் ராகுல். அவனை முறைத்தான் நரேன்.

 

தொடரும்…..

 

Advertisement