அத்தியாயம் 18

 

“என்னல்லாம் நினைச்சு இந்த ஊருக்குள்ள காலை வச்சேன். ஆனா இப்படி எல்லாமே மண்ணா போச்சே. சுத்தி இருக்குற அத்தனை பேரும் எதிரியா வந்தா என்ன தான் செய்றது? அட்லீஸ்ட் காதலையாவது சொல்ல முடிஞ்சதே? அதையும் என்ன இப்படி பொசுக்குன்னு ப்ரொபோஸ் பண்ணிட்டன்னு கேக்குறா ராட்சசி. அதை சொல்றதுக்குள்ளே நான் ஒரு வழி ஆகிட்டேன். ஒரே ஒரு முத்தம் கொடுக்குறதுக்குள்ளே ரவுண்ட் கட்டி தடுக்குறாங்களே? அப்பு குட்டிக்கிட்ட முத்தம் கொடுக்குறேன் கொடுக்குறேன்னு சொல்லி அவளை வேற கடுப்பேத்திட்டேன். கடைசில நாடே கடத்துறாங்களே? இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இந்த ப்ராஜெக்ட் வேலையே செஞ்சிருக்க மாட்டேனே”, என்று வாய் விட்டே புலம்பி கொண்டிருந்தவனின் அருகில் வந்த பாட்டி “என்ன டா லூசு மாதிரி தனியா புலம்பிகிட்டு இருக்க? கேனை தனமான காரியம் தான் செய்றன்னு பாத்தா, இப்ப தனியா புலம்புற?”, என்று கேட்டாள்.

 

“ஆமா, நீ மட்டும் தான் பாட்டி என்னை லூசு ன்னு சொல்லலை. இப்ப நீயும் சொல்லிட்டியா? ரொம்ப சந்தோசம்”, என்று சலித்து கொண்டான் நரேன்.

 

“என்ன சலிச்சிக்கிற? நீ பண்ண காரியத்துக்கு ஓட ஓட விரட்டணும். பேரனாச்சேன்னு விடுறேன். ஆனாலும் ஒன்னு மட்டும் புரியலை. எனக்கு எதுக்கு டா முத்தம் கொடுத்த?”

 

“தெரியாம பண்ணிட்டேன் பாட்டி. அது அப்புக்கு கொடுக்க வந்தேன். நீ கிராஸ் ஆகிட்ட. மன்னிச்சிக்கோ”

 

“அதை விடு. சரி இப்ப என்ன பிரச்சனை? எதுக்கு புலம்பிட்டு இருக்க?”

 

“என்னோட ப்ரொஜெக்ட் அப்ரூவ் ஆகிருக்காம் பாட்டி. அதுக்கு மீட்டிங் பாரின்ல வச்சிருக்காங்களாம். நான் தான் போகணுமாம்”, என்று சோகமாக சொன்னான் நரேன்.

 

“இதுக்கு ஏன் டா இவ்வளவு சோகம்? நல்ல விஷயம் தான? முன்னாடி எல்லாம் ஜாலியா போவியே?”

 

“அதெல்லாம் முன்னாடி பாட்டி”

 

“ஏன் இப்ப என்ன?”

 

“ப்ச் உனக்கு புரியாது. சரி விடு. அப்புவையும் கூட்டிட்டு போகட்டா பாட்டி?”

 

“அவ ஆசையா திருவிழா பாக்க நினைச்சா நரேன். அதை கெடுக்க போறியா?”

 

“சரி சரி நான் மட்டுமே போறேன்”

 

“ஹ்ம்ம் எப்ப டா கிளம்பனும்?”

 

“நைட் போகணும்  பாட்டி. நான் டிக்கட் இருக்கானு பாக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அன்று முழுவதும் சோகமாய் திரிவதும் அப்புவை ஏக்கமாக பார்ப்பதுமாக இருந்தான் நரேன். அவனை பார்த்து “இவன் எப்ப தான் திருந்துவானோ? எத்தனை தடவை அவன் கிட்ட இருக்கேன்? ஒரு கிஸ் பண்றதுக்கு என்னவாம்? இவன் நல்ல நேரம் பாத்து தான் முத்தமே கொடுப்பான் போல? முத்தத்துக்கே இப்படின்னா…”, என்று எண்ணி தலையில் அடித்து கொண்டாள் அபர்ணா.

 

எட்டு மணிக்கு பஸ் என்பதால் ஏழு மணிக்கு குளித்து முடித்து அறையில் கிளம்பி கொண்டிருந்தான் நரேன்.

 

“நரேனை சாப்பிட கூட்டிட்டு வா மா அப்பு”, என்றாள் சிவகாமி.

 

“இதோ கூட்டிட்டு வரேன் அத்தை”, என்று சொல்லி விட்டு அவனுடைய அறைக்கு சென்றாள்.

 

இடுப்பில் பேண்ட் அணிந்து கொண்டு, உள் பனியனுடன் கண்ணாடி முன் நின்று தலை வாரி கொண்டிருந்தான் நரேன்.

 

“கிளம்பிட்டியா டா?”, என்று கேட்டு கொண்டே உள்ளே வந்தாள் அபர்ணா.

 

“ஹ்ம்ம் கிளம்பிட்டே இருக்கேன் அப்பு”, என்று அவளை பார்த்து சிரித்தான்.

 

“எத்தனை நாள் ஆகும் வர?”

 

“ஆபிஸ் போனா தான் அப்பு தெரியும்”

 

“ஓ, சரி வா அத்தை சாப்பிட கூப்பிடுறாங்க”

 

“அப்பு”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் நரேன்.

 

“ம்ம்”

 

“உன்கிட்ட நிறைய பேசணும்னு வந்தேன் டி. ஆனா எதையுமே சொல்லாமலே போறேன்”

 

“ம்ம்”

 

“போயிட்டு வந்து உங்கிட்ட மனசு விட்டு பேசுவேன் டி”

 

“ம்ம்”

 

“என்ன நான் பேசிட்டே இருக்கேன். நீ ம்ம் ம்முனு சொல்லிட்டு இருக்க?”

 

“நீ சொன்னதுக்கு சரி சொன்னேன். அதுக்கு ம்ம் னு தானே சொல்ல முடியும்?”

 

“என் மேல உனக்கு கோபமா அப்பு?”

 

“உன் மேலயா? கோபமா? இல்லையே நரேன்”

 

“பொய் சொல்லாத அப்பு. உனக்கு என் மேல கோபம் தான்”

 

“எதுக்கு டா நான் உன் மேல கோப பட போறேன்?”

 

“உனக்கு முத்தம் கொடுக்க கிட்ட வந்து வந்து கொடுக்க முடியாம போயிருச்சு. அதுக்கு கோபம் தான? நான் என்ன டி செய்றது? யாராவது கூப்பிட்டுறாங்க”

 

“இப்ப எதுக்கு அதை பத்தி பேசுற விடு”

 

“இப்பவாது கொடுத்துக்கட்டா அப்பு? இப்பவும் கொடுக்காம போனா மனசுக்குள்ள ஏதோ தோத்து போன மாதிரி இருக்கும். கொடுத்துட்டா  கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்”

 

“ம்ம்”, என்று தலை குனிந்து முனங்கியவளுக்கு “இப்ப அத்தை கூப்பிட போறாங்க. தெறிச்சு ஓட போறான்”, என்று யோசனை ஓடியது.

 

அவளை நெருங்கி வந்தவனோ அவள் உதடுகளையே பார்த்தான். பின் அவன் முகம் நோக்கி குனியும் போது “அப்பு, நரேன் சாப்பிட வாங்க”, என்ற சிவகாமியின் குரல் கேட்டது.

 

“சே, பாத்தியா அப்பு? இப்படி தான் எப்பவும் நடக்குது. நான் என்ன செய்ய?”, என்று பாவமாக சொன்னான்.

 

அவன் முகத்தில் இருந்த தவிப்பையும், கண்களில் இருந்த ஏக்கத்தையும் பார்த்தவள் “ஆரம்பிச்ச காரியத்தை எப்ப தான் முடிக்க உனக்கு தைரியம் வருமோ? யார் கூப்பிட்டாலும் நீ இப்படி தான் இருப்பன்னு புரிஞ்சு போச்சு. என்னைக்கு டா வளர போற?”, என்று கேட்டு கொண்டே அவனை தன் அருகே இழுத்தவள் அவனுடைய உதடுகளில் அழுந்த முத்த மிட்டாள்.

 

அதிர்ச்சியில் உறைந்து நின்றான் நரேன். “முத்தம் கொடுக்க ஒரு செகண்ட் போதும். இது ஏன் என் மரமண்டைக்கு புரியலை”, என்று நினைத்து கொண்டே முத்தத்தில் திளைத்தான்.

 

பல முறை அவளை நெருங்க முயற்சித்தும் முடியாததால் ஒரு வெறுமையான மனநிலையில் கிளம்பி கொண்டிருந்தவனுக்கு எதிர்பாராமல் கிடைத்த இந்த இதழ் முத்தம் பாலைவனத்தில் இருக்கும் போது உண்டான தாகத்துக்கு வற்றாத நீரூற்று கிடைத்தது போல இருந்தது.

 

இருவரின் உதடுகளும் சண்டை போட்டு கொண்டிருந்தன. அவள் பிரிய நினைத்தாலும் அவன் பிரிய கூடாது என்பது போல அவள் உதட்டை இறுக்கி பிடித்திருந்தான். அவள் கைகள் அவன் பனியனை இறுக்கி பிடித்தது.

 

உதடுகளின் யுத்தம் நீண்டு கொண்டே போக வேண்டும் போல் தோன்றியது நரேனுக்கு. முதல் முறை அவசர முத்தம் கொடுத்த போது முத்தம் கொடுத்துட்டே இருக்கணும் போல இருந்தது என்று அபர்ணா சொன்னதை இப்போது நினைத்து பார்த்தவனுக்கும் அவள் உதட்டை விட்டு பிரியவே கூடாது என்று தோன்றியது.

 

அவளுடைய இரு உதடுகளுக்கிடையே தன் உதட்டை நுழைத்து சுவைத்து கொண்டிருந்த நரேன் மொத்தமாக அவளிடம் தன்னை தொலைத்து கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்கு பிறகு தான் அவளை விலக்கினான்.

 

“அப்பு வரியா? நரேன் வா டா. எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?”, என்று சிவகாமியின் குரல் கேட்டது.

 

“இதோ கிளம்பிட்டு இருக்கான் அத்தை. அஞ்சு நிமிசத்துல வரோம்”. என்று குரல் கொடுத்த அப்பு அவனை வெட்கத்துடன் பார்த்தாள்.

 

“யார் கூப்பிட்டாலும் இதோ வரேன்”, என்று கூறி விட்டு முத்தத்தை கொடுக்காம விலகின தன் மடத்தனத்தை நொந்து கொண்டான் நரேன்.

 

“இப்பவாது யாராவது கூப்பிட்டா என்ன செய்யணும்னு தெரியுதா மக்கு?”, என்று சிறு கூச்சத்துடன் கேட்டாள் அபர்ணா.

 

“இப்ப தான் புரியுது அப்பு”, என்று அசடு வழிந்தான் நரேன்.

 

“இப்ப புரிஞ்சதே அதிசயம் தான். சரி வா.  சாப்பிட போகலாம் “, என்று சொல்லி விட்டு வெளியே செல்ல  திரும்பினாள்.

 

அப்போது அவள் கை பற்றி நிறுத்தினான் நரேன். அவனை குழப்பமாக பார்த்தவள் “என்ன டா?”, என்று கேட்டாள்.

 

“யாராவது கூப்பிட்டா என்ன செய்யணும்னு புரிஞ்சிட்டு. அது கூட இன்னொன்னும் புரிஞ்சிருக்கு. நீ அம்மா கிட்ட அஞ்சு நிமிசத்துல வரோம்னு தான சொன்ன? இன்னும் நாலு நிமிஷம் இருக்கே. அந்த கேப்ல என்ன செய்யணும்னும் புரிஞ்சிருச்சு”, என்று கண்களில் ஒளியுடன் கூறினான் நரேன். அவன் கண்கள் அவள் உதடுகளையே அளவெடுத்தது.

 

“நரேன்”, என்று ஆச்சர்யமாக அழைத்தாள் அபர்ணா.

 

பற்றி இருந்த கையை சுண்டி இழுத்தான் நரேன். அவள் அவன் மீதே விழுந்தாள். வெகு அருகாமையில் தெரிந்த அவளுடைய முகத்தை காதலாக பார்த்தவன் அவள் கன்னத்தில் புரண்டு விழுந்த முடி கற்றையை அவள் காதோரம் விலக்கி விட்டு அவளுடைய இதழ்களில் முத்த மிட்டான். அவன் கரங்கள் அவள் முதுகில் படர்ந்து அவளை அவனுடன் இறுக்கி கொண்டது.

 

நரேன் தன்னிடம் இப்படி எல்லாம் நடந்து கொள்ளணும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த அபர்ணாவுக்கு அவன் செய்கைகள் அனைத்தும் பிடித்திருந்தது. காதலனாக மாறிய தன் கணவனின் செய்கையில் குளிர்ந்து சிவந்து போனாள்.

 

சிறிது நேரம் கழித்து விட்டவன் அவள் முகம் முழுவதும் தன் உதடுகளை பதித்தான். மனம் முழுவதும் காதலை கொண்டு அதை முகத்தில் பிரதி பலித்து கண் முன்னே சிவந்து நின்ற மனைவியை ரசித்தவன் அவளுடைய கன்னத்தை மென்மையாக வருடி “ஊருக்கு போயிட்டு சீக்கிரம் வந்துறேன் டி. வா சாப்பிட போகலாம்”, என்றான்.

 

தன்னுடைய கன்னத்தில் பதிந்திருந்த அவனுடைய கை மேல் தன் கையை வைத்து அழுத்தி கண்ணீருடன் கூடிய ஒரு புன்னகையை சிந்தினாள் அபர்ணா.

 

அந்த கண்ணீர் கூட அவளுடைய காதலை அவனுக்கு தெரிவித்தது. தன் விரல் கொண்டு அதை துடைத்தவன் அவளுடைய நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவள் கை பற்றி வெளியே அழைத்து வந்தான்.

 

பின் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் போது அவள் அருகே அமர்ந்து கொண்டு அவளுடைய ஒற்றை கையை பற்றிய படியே தான் சாப்பிட்டான்.

 

போகும் போது உண்மையிலே பிரிவின் வலி இருவரையும் வாட்டியது மற்றும் உண்மை.  இதுவரை உணராத ஒரு உணர்வை அடைந்தான் நரேன். அவளை விட்டு விலக முடியாமல் தவித்தான்.  வேறு வழியில்லாமல் அனைவரிடமும் சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அடுத்த நாள் காலையில் சென்னையில் இறங்கிய நரேன் அபர்ணாவுக்கு போன்  செய்து வந்து விட்டேன் என்று சொல்லி விட்டு ராகுலுடன் ஆபிஸ் கிளம்பி விட்டான்.

 

நரேன் முகத்தில் இது வரை இல்லாத ஒரு புத்துணர்ச்சியை கண்ட ராகுல் என்ன மச்சான்? உன் தலைக்கு மேல ஒரு ஒளி வட்டம் தெரியுது?”, என்று புன்னகையுடன் கேட்டான்.

 

அப்படியா? எனக்கு ஒன்னும் தெரியலையே”, என்று சொல்லி சிரித்தான் நரேன்.

 

உனக்கு எப்படி தெரியும்? பாக்குற எங்களுக்கு தான தெரியும்? சரி என்ன அப்பு கிட்ட காதலை சொல்லிட்டியா?”

 

ம்ம்”

 

கலக்குற மச்சான். நான் கொடுத்த முத்த ஐடியா ஒர்க் அவுட் ஆகிருச்சா?”

 

ஆமா டா”, என்று சிறு கூச்சத்துடன் சொன்னான் நரேன்.

 

அதிசயம். ஆனால் உண்மை. நம்ப முடியலையே டா. உனக்குள்ள இப்படி ஒரு டேலண்ட்டா?”

 

ப்ச், கிண்டல் பண்ணாத டா. நான் எங்க கொடுத்தேன்? நான் கிட்ட போகும் போதெல்லாம் யாராவது கரடியா வந்து காரியத்தை கெடுத்துட்டு இருந்தாங்க. ஏன் நீயும் தான் போன் பண்ண? நான் கொடுத்துக்கவே மாட்டேன்னு நினைச்சு கடைசில அவளே கொடுத்துட்டா டா”

 

ஹா ஹா, அதானே பாத்தேன்? நீயாவது கொடுக்குறதாவது?”

 

கொன்னுருவேன். அப்பறம் நானும் கொடுத்தேன் தெரியுமா?”

 

யாருக்கு பாட்டிக்கா?”

 

ஏய், அது முன்னாடி டா. அப்புறம் அப்புவுக்கு கொடுத்தேன். சரி சரி ஆபிஸ் வந்துட்டு. நான் டீடெயில்ஸ் கேட்டுட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

அன்றைக்கு முழுவதும் அவனுக்கு பல வேலைகள் இருந்ததால் அனைத்தையும் கேட்டு கொண்டு மதியம் மூணு மணி போல் வீட்டுக்கு வந்து விட்டான். பின் இரவு விமானத்தில் செல்ல தேவையான அனைத்தையும் எடுத்து வைத்ததில் நேரம் சரியாக இருந்தது.

 

இங்கு அப்புவோ அனைவருடனும் கதை பேசி கொண்டும், சிரித்து கொண்டும் இருந்தாள். விஜி அபர்ணாவிடம் சரியாக பேச வில்லை என்றாலும் அவளுடைய தம்பி அபர்ணாவிடம் நன்கு ஒட்டி கொண்டான்.  அதுவும் “நரேன் மச்சான் எப்ப வருவாங்கக்கா?”, என்று அபர்ணாவிடம் கேட்டு விஜி வெறுப்பேற்றிய போது அபர்ணாவே கொந்தளித்து விட்டாள்.

 

“இன்னொரு தடவை அவனை கேட்ட, கொன்னுருவேன்”. என்று மிரட்டி விட்டு அவளை முறைத்து விட்டு சென்று விட்டாள். பாட்டியும் குத்தகை நிலங்களை பார்க்க கிளம்பியதால் பாட்டியுடன் அபர்ணாவும் விஜியின் தம்பியும்  கிளம்பி விட்டார்கள்.

 

அந்த புது விதமான கிராமத்து சூழலை நன்கு அனுபவித்தாள் அபர்ணா. “இப்ப நரேன் கூட இருந்தா நல்லா இருந்துருக்கும்”, என்று மட்டும் அடிக்கடி அவளுடைய நினைவில் வந்தான் நரேன்.

 

அன்று இரவு பிளைட் கிளம்புவதற்கு முன் அனைவரிடமும் போனில்  பேசியவன் கடைசியில் அபர்ணாவிடமும் பேசினான்.

 

வைக்கும் தருவாயில் “உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் டி அப்பு. லவ் யு பை”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

 

அடிக்கடி அவன் கூறும் காதலில் குதூகலமாக இருந்தாள் அபர்ணா. அங்கே இரண்டு நாளில் வேலை முடிவது போல இருந்த நரேனுக்கு நான்கு நாட்களாக இழுத்து கொண்டு போனது.

 

அவனுக்கு இரவு ஆகும் போது அபர்ணாவுக்கு பகலாக இருப்பதால் இருவருக்கும் பொதுவான நேரத்தை தேர்ந்தெடுத்தவன் அவளுக்கு போன் செய்தான்.

 

முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கும் பேச்சு எப்படியோ தொடர்ந்து அவர்கள் சிறு வயதில் செய்த சேட்டைகள் என அனைத்தும் இடம் பெற்று பேச்சு முற்று பெறாமல் தொடரும். போனை வைக்கவே மனதில்லாமல் வைக்கும் நரேனுக்கு ராகுல் எதனால் எப்போதும் போன் பேசி கொண்டிருக்கிறான் என்று இப்போது புரிந்தது.

 

அவன் மனதில் தன் மனைவி மீதான காதல் மலர்ந்து மனம் பரப்பியது. அங்கே நாலு நாள் வேலை, திரும்பி வர இரண்டு நாள் என ஆன  போதும் அவளை காண போகிறோம் என்று உற்சாகமாகவே கிளம்பி வந்தான். சென்னை வந்து மொத்தமாக ஒரு மாதத்துக்கு லீவ் எழுதி  கொடுத்தவன் அபர்ணாவை காண மின்னலென கிளம்பினான்.

 

இத்தனை  நாள் பிரிந்திருந்த  ஏக்கத்தை , அவள் மீதுள்ள  காதலை அவளிடம் ஒப்புவிக்க  அவன் மனம் துடித்தது.

 

அவளிடம்  இருந்து கிடைத்த  முத்தத்தை மறக்க முடியாமல்   தவித்தவனுக்கு இன்னும் வேண்டும்  போல இருந்தது. அது மட்டும் அல்லாமல்  மொத்தமாக அவளே வேண்டும் என்று தவித்தான். மனதில் இது வரை எண்ணாத அனைத்து எண்ணங்களும் நரேனுக்கு வந்திருந்தது. காதல், மோகம் என்று கலவையான உணர்வில் தவித்தவன் அவளுக்காக வெகுவாக ஏங்கினான்.

 

“இந்த திருவிழா  முடிந்த பிறகு, எங்கயாவது  அவளை கூட்டிட்டு போகணும். அது  வரைக்கும் இந்த கிராமத்திலே ஹனிமூன்  கொண்டாட வேண்டியது தான்”, என்று உற்சாகமாக  ஊருக்கு வந்தான்.

 

அதே  நேரம் “இந்த  மாலையை எல்லாரும்  கழுத்துல போட்டுக்கோங்க. அப்புறம்  இந்த மஞ்சள் துணியை ஒரு வாரம் யாரும்  கையில் இருந்து அவுக்க கூடாது. இன்னைக்கு தான் காப்பு கட்டிருக்காங்க. அதனால கோயில் கொடை முடியுற வரைக்கும் எல்லாரும் சுத்தபத்தமா இருக்கணும். கொண்டு வந்த  தானியங்களை அவரவர் முளைப்பாரி பானைல போடுங்க”, என்று பூஜாரி சொல்லி கொண்டிருக்க அவர் சொல் படியே அபர்ணாவும் அவளுடன் இருந்த மற்ற பெண்களும் செய்து கொண்டிருந்தார்கள்.

 

“காலைல இங்க வந்து சாமிக்கு பூஜை பண்ணனும். அதே மாதிரி சாயங்காலமும் இங்க வந்து சாமியை கும்பிட்டுட்டு  விரதத்தை முடிக்கணும்”, என்று பூஜாரி சொன்னவுடனே சரி என்று கேட்டு கொண்டே அனைத்து பெண்களும் வெளியே வந்தார்கள்.

 

அபர்ணா வெளியே வரும் போது பாட்டி அவளுக்காக வெளியே காத்திருந்தாள்.

 

“என்ன ஆத்தா? முளைப்பாரி போட்டாச்சா?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“போட்டாச்சு பாட்டி. வீட்டுக்கு போகலாமா?”, என்று சிரித்து கொண்டே அபர்ணா கேட்டதும் பாட்டியும் “நீயும் உன் புருசனும் சந்தோசமா இருக்க இந்த அம்மா துணை செய்வா. வா போகலாம். சரி இந்த நரேன் பையன் எப்ப வருவான்னு சொன்னானா?”, என்று கேட்டாள்.

 

“இன்னைக்கு வந்துருவான் பாட்டி”, என்று அபர்ணா சொன்னதும், இருவரும் பேசி கொண்டே  வீட்டை நோக்கி நடந்தார்கள்.

 

“அம்மா அம்மா”, என்று கத்திய படியே உள்ளே நுழைந்தான் நரேன்.

 

“வா நரேன், வேலை எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?”, என்று கேட்டாள் சிவகாமி.

 

“அதெல்லாம் முடிஞ்சிருச்சு மா. சரி அப்பு எங்க?”

 

“அப்புவும், பாட்டியும் கோயிலுக்கு போயிருக்காங்க டா. சரி நீ குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்”

 

“ஹ்ம்ம் சரி, நான் அப்பு ரூம்லே தங்கிக்கவா?”

 

“சரி டா மேல போ”, என்று சொல்லி விட்டு கிட்சன் உள்ளே சென்று விட்டாள் சிவகாமி.

 

மாடி படியில் ஏறியவன்  “நல்லதா போச்சு. அம்மா இருக்கும் போதே, கேட்டு அப்பு ரூம்க்கு வந்துட்டோம். பாட்டி இருக்கும் போது கேட்டுருந்தா அது சதி பண்ணி கெடுத்துருக்கும்”, என்று நினைத்த படியே சென்றான்.

 

அவள் அறைக்கு சென்றதும் அந்த அறை முழுவதும் அவள் வாசனை சூழ்ந்திருப்பதை போல உணர்ந்தான்.

 

குளித்து முடித்து வெளியே வந்தவன் உடை மாற்றி கொண்டிருக்கும் போது கீழே பேச்சு குரல் கேட்டது. “அப்பு வந்துட்டா போல? இந்த ரூம்ல குளிக்கிற பாத்ரூம் மட்டும் தான் இருக்கு. லெட்டின் கீழ தான் இருக்கு. கீழ உள்ள ரூம்க்கு அப்புவை கடத்திட்டு போயிறலாமா?”, என்று எண்ணியவன் “வேண்டாம் வேண்டாம் இப்ப ரூம் பத்தி பேசினா, உன்னை யாரு இங்க வர சொன்னான்னு பாட்டி கேப்பா”, என்று நினைத்து கொண்டே கீழே வந்தான்.

 

கீழே மஞ்சள் நிற சேலை அணிந்து சிவகாமியிடம் பிரசாதத்தை நீட்டி கொண்டிருந்த அபர்ணாவின் முதுகை பார்த்த நரேன் “யாரு இந்த சாமியார் அம்மா. என் அப்பு எங்க?”, என்று நினைத்து கொண்டே கீழே வந்தான்.

 

அவனை பார்த்து திரும்பியவள் கண்டதும் அதிர்ச்சியில் சிலையாக போனான் நரேன். “வந்துட்டியா நரேன்? இந்தா பிரசாதம் எடுத்துக்கோ”, என்று அவள் சொன்னதும் அதை பொம்மை போல் எடுத்து கொண்டவன் அவளுடைய அந்த சாமியார் தோற்றத்தையே வெறித்து பார்த்த படி நின்றான்.

 

தொடரும்…..