அத்தியாயம் 17

இப்படி திடீர் என்று காதலை சொன்ன அவனை நினைத்து கொண்டே வெளியே வந்தாள் அபர்ணா.

 

அவளை முறைத்த படி அங்கு அமர்ந்திருந்தாள் விஜி. அவளை பார்த்து மனதுக்குள் சிரித்து கொண்ட அபர்ணா அவள் எதிரிலே அமர்ந்து டீவியை பார்வை இட ஆரம்பித்தாள்.

 

அப்போது அங்கு வாயை துடைத்த படியே வந்த பாட்டி அபர்ணா அருகில் அமர்ந்து கொண்டாள்.

 

“என்ன பாட்டி வாயை துடைச்சிட்டு வாறீங்க?”, என்று கேட்டாள் விஜி.

 

“அதுவா பாட்டி ஒரு சூப்பரான சாக்லேட் சாப்பிட்டுட்டு வராங்க”, என்று சிரித்து கொண்டே சொன்னாள் அபர்ணா. அவளை முறைத்தாள் பாட்டி.

 

“நான் ஒன்னும் உங்க கிட்ட கேக்கல. பாட்டி கிட்ட தான கேட்டேன்?”, என்று சொன்ன விஜி “அது என்ன சாக்லேட் பாட்டி? எனக்கும் தாங்களேன்?”, என்றாள்.

 

அதை கேட்டு காபி குடித்து கொண்டிருந்த அபர்ணாவுக்கு புரை ஏறியது.

 

“ஹா ஹா, என்ன அப்பு? விஜியும் கேக்குறா? குடுக்க சொல்லிறலாமா?”, என்று கேட்டாள் பாட்டி.

 

“பாட்டி, ஒழுங்கா எந்திரிச்சு போயிரு. இல்லைன்னா கொன்னுருவேன். அதெல்லாம் அந்த சாக்லேட் இனி யாருக்கும் கிடையாது”, என்று திட்டினாள் அபர்ணா.

 

“சே நீ மோசம் அபர்ணாக்கா. எனக்கு சாக்லேட் கொடுக்க கூடாதுன்னு சொல்ற?”, என்று கோபமாக சொன்னாள் விஜி.

 

“அந்த சாக்லேட் அதோ வாரான் பாரு. அந்த தடி பய நரேன் கிட்ட தான் இருக்கு. நீ அவன் கிட்டயே வாங்கிக்கோ விஜி”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள் பாட்டி.

 

“ஓ நரேன் மச்சான் கிட்ட தான் இருக்கா? நான் அவர் கிட்டயே வாங்கிக்கிறேன்”, என்றாள் விஜி.

 

“அவன் கிட்ட கேட்ட உன்னை கொன்னுருவேன்”, என்றாள் அபர்ணா.

 

“புருஷனை கூட மரியாதையா கூப்பிட தெரியலை உனக்கு. நீ சொன்னா நான் கேட்கணுமா? நான் என் மச்சான் கிட்ட கேப்பேன்”

 

“என் நரேனை நான் எப்படி வேணும்னாலும் கூப்பிடுவேன். நீ யார் டி என்னை கேக்குறதுக்கு?”

 

“டி ன்னு சொன்ன பல்லை தட்டிருவேன்”, என்று சண்டைக்கு வந்தாள் விஜி.

 

“ஆமா, இந்தா தட்டுன்னு கொடுத்துட்டு இருப்பேன் பாரு”, என்று நக்கலாக கேட்டாள் அபர்ணா.

 

“புருஷன் கூட வாழ தெரியலை. நீ எல்லாம் பேசுற?”, என்ற விஜியின் குரலில் திடுக்கிட்ட அபர்ணா  “இந்த நாய் இதை எல்லாம் கவனிச்சிருக்கா?”, என்று மனதில் எண்ணி கொண்டாள்.

 

வந்த எரிச்சலை மறைத்து கொண்டு “ஆமா நீ கண்ட பாரு”, என்று சாதாரண குரலில் கேட்டாள் அபர்ணா.

 

“அது தான் தனி தனியா தூங்குறீங்களே? அதுலயே தெரியலையா?”

 

“புருஷன், பொண்டாட்டிக்கு நடுவுல வேவு பாத்துட்டு இருக்கியே? நீயெல்லாம் ஒரு பொண்ணா?”, என்று அபர்ணா கேட்டு கொண்டிருக்கும் போது அங்கு வந்த நரேன் “எதுக்கு அப்பு விஜியை திட்டிட்டு இருக்க?”, என்று கேட்டு அவள் கோபத்தை அதிக படுத்தினான்.

 

“அப்படி கேளுங்க மச்சான். இந்த அக்கா என்கிட்ட தேவை இல்லாம சண்டை போடுது”, என்று போட்டு கொடுத்தாள் விஜி.

 

“எதுக்கு அப்பு?”, என்று கேட்ட நரேன் அபர்ணா அவனை பார்த்து முறைத்ததும் வாயை மூடி கொண்டான்.

 

அவளை பார்த்து “ஹி ஹி”, என்று அசடு வலியுமாறு சிரித்தும் வைத்தான். பின் விஜி புறம் திரும்பி “அப்பு எப்பவுமே தமாஷா சண்டை போட்டு விளையாடுவா விஜி. எதுக்காக உன்னை திட்டினா?”, என்று கேட்டான்.

 

“அதுவா மச்சான்? உங்க கிட்ட ஒரு சாக்லேட் இருக்காமே? அதை கேட்டா இந்த அக்கா கேக்க கூடாதுனு திட்றாங்க?”

 

“என்னது சாக்லெட்டா? என்ன சாக்லேட்? யாரு சொன்னா?”

 

“பாட்டி தான் மச்சான் சொன்னாங்க”

 

“அது சும்மா உளறிருக்கும் விஜி”

 

“இல்லை, உண்மையா தான் சொன்னாங்க. அபர்ணாக்காவும் ஆமான்னு சொன்னாங்க. நீங்க வேணும்னா கேளுங்க. எனக்கு தாங்க மச்சான். பாட்டி உங்க கிட்ட கேக்க சொன்னாங்க. இந்த அபர்ணாக்கா உங்க கிட்ட கேக்க கூடாதுனு சொல்லி திட்றாங்க”

 

“அப்பு என்னடி இது? என்கிட்ட என்ன சாக்லேட் இருக்கு?”, என்று குழப்பமாய் கேட்டான் நரேன்.

 

“என்கிட்டே கேட்டா எனக்கு எப்படி தெரியும்? சாக்லேட் வச்சிருக்கியோ என்னவோ?”, என்று அவனை பார்த்து நக்கலாக கேட்டாள் அபர்ணா.

 

“எதுக்கு இந்த சின்ன பிள்ளையை நீயும் கிளவியும் சேந்து ஏமாத்துறீங்க அப்பு?”

 

“ஆமா இவ பச்சை பாப்பா தான்”, என்று கடுப்புடன் சொன்னாள் அபர்ணா.

 

“சரி சரி கோப படாத அப்பு? என்ன சாக்லேட் அது?”

 

“நீ கிச்சன்ல  வச்சு பாட்டிக்கு  கொடுத்தியே, அந்த சாக்லேட் தான். இவளுக்கும்  வேணுமாம். என்ன குடுக்குறியா?”, என்று எரிச்சலாக  கேட்டாள் அபர்ணா.

 

“ஐயையோ , அப்பு  என்னடி இது?”

 

“என்ன  நொன்னது  இது? உன் ஆசை  முறை பொண்ணு தான்  கேக்குறால்ல? கொடு”

 

“அபர்ணா  அக்காவே கொடுக்க  சொல்லிட்டாங்க. கொடுங்க  மச்சான்”, என்றாள் விஜி.

 

என்ன சொல்லி சமாளிக்க என்று யோசித்தவன் “அது நான் பஸ்ல வரும் போது போர் அடிக்க கூடாதுனு வாங்குனது விஜி. இப்ப காலியாகிட்டு. கடைக்கு போனா வாங்கிட்டு வரேன்”, என்று விஜியை சமாதான படுத்தி அனுப்பி வைத்தான் நரேன். விஜியும் சென்று விட்டாள்.

 

“இப்படி  கொஞ்சி கொஞ்சி சமாதான படுத்துருதுக்கு நீ அந்த சாக்லேட்டையே அவளுக்கு கொடுத்துறலாம்”, என்று முறைப்புடன் கூறி விட்டு டிவி பக்கம் திரும்பி கொண்டாள் அபர்ணா.

 

அவள்  எதிரே அமர்ந்தவன் “நான் பாட்டி இடையில வரும்னு நினைக்கல டி. உனக்கு தவிர இனி அந்த சாக்லேட் யாருக்கும் இல்லை”, என்று அவள் கண்களை பார்த்து கூறினான்.

 

அதில் முகம் சிவந்தவள் “நிஜமா?”, என்று கேட்டாள்.

 

“ஆமா டி அப்பு. உனக்கு தரணும் போல இருக்கு. தரட்டுமா?”

 

“லூசு, அப்பவே சொன்னேன்ல டா? இப்படி பெர்மிஷன் கேக்குறது தான் பிடிக்கலைன்னு”, என்று வெக்கத்துடன் சொன்னாள் அபர்ணா.

 

“ஐ ஜாலி, ப்ளீஸ் உள்ள வா டி”

 

“ம்ம்”

 

“என்ன ம்ம்? ரூமுக்குள்ள வா அப்பு ப்ளீஸ்”

 

“நீ இன்னும் எப்படி என்னை லவ் பண்ண? எவ்வளவு தூரம் லவ் பண்றேன்னு சொல்லவே இல்லை”

 

“அதை எல்லாம் சொல்லி முடிகிறதுக்குள்ளே எந்த கரடியாவது வந்து தடுத்து நிறுத்திரும் டி. ஒரே ஒரு முத்தம் கொடுத்த அப்புறம் பேசலாம். ரொம்ப ஏக்கமா இருக்கு டி அப்பு”

 

“நீ முதல்ல உள்ள போ. நான் வரேன்”

 

“இப்படி சொல்லிட்டு அப்பறம் ஏமாத்திருவ. நீ முதல்ல போ. நான் பின்னாடியே வரேன்”

 

“சரி”, என்று சொல்லி விட்டு அவனுடைய அறைக்குள் சென்றாள். அங்கு இருந்த ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து வெளியேவே பார்த்து கொண்டிருந்தாள். ஜன்னல் வழியே வேப்பமரத்தில் இருந்து வந்த காற்று அவளை சுகமாக தீண்டியது.

 

அறைக்குள் நரேன் நுழையும் அரவம் கேட்டது. அவளுடைய உடம்பெல்லாம் ஒரு பரபரப்பு ஓடியது. நரேனின் காலடியோசை அவளை நெருங்கியது. மூச்சை இழுத்து பிடித்து கொண்டு நின்றாள்.

 

தனக்கு முதுகு காட்டி நின்றவளை திருப்பி முத்தமிட ஒரு தயக்கம் வந்தது நரேனுக்கு. தயக்கத்தை உதறி விட்டு மெதுவாக தன் கையை அவளை நோக்கி கொண்டு சென்றவன் அவள் தோளில் வைத்தான். அவள் உடலில் ஒரு நடுக்கம் பரவியது. கண்களை இருக்க மூடி கொண்டாள்.

 

தோள் மீது கை வைத்து அவளை தன்னை நோக்கி திரும்பியவன் “அப்பு”, என்று அழைத்தான்.

 

“ம்ம்”, என்று முனங்கினாள் அபர்ணா. “ஐ லவ் யு சோ மச் அப்பு குட்டி”, என்று சொல்லி கொண்டே அவளுடைய உதட்டில் முத்தமிட குனிந்தான். அவளும் ஆவலாக அவனுடைய முத்தத்துக்காக கண்களை மூடி காத்திருந்தாள்.

 

இருவருடைய உதடும் நெருங்கும் வேளையில் “நரேன் இங்க வா பா”, என்று அழைத்து விட்டார் சிவப்பிரகாசம்.

 

அடுத்த நொடி “சே, இந்த அப்பா கூப்பிட்டார். இரு அப்பு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

 

“சரியான லூசு”, என்று மனதில் திட்டி கொண்டே அங்கேயே அமர்ந்தாள் அபர்ணா.

 

“லூசாப்பா நீ?”, என்று கேட்டு கொண்டு இருந்த மகனை முறைத்தார் சிவப்பிரகாசம்.

 

“நான் தான் உன்னை முறைக்கணும். நீ என்னை முறைக்கிற? இப்ப எதுக்கு நீ என்னை கூப்பிட்ட? நான் எவ்வளவு முக்கியமான வேலைல இருந்தேன் தெரியுமா?”

 

“அப்படி என்ன வேலை டா வெட்டி முறிச்சிட்டு இருந்த?”, என்று கேட்டார் சிவப்பிரகாசம்.

 

“அது அது வந்து.. ஏதோ ஒன்னு. சரி நீ எதுக்கு கூப்பிட்டனு சொல்லு”

 

“நம்ம விஜியோட அப்பா, இங்க முருகேசன்னு ஒரு பெட்டி கடைக்காரன் இருக்கானாம். அவன் இந்த சுளுக்கு எல்லாம் நல்லா எடுப்பானாம். அங்க போய்ட்டு வருவோமா?”

 

“இதுக்கு தான் கூப்பிட்டியா? ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கூப்பிட்டுருக்க கூடாது? சரி வா போகலாம்”, என்று கூறி அவரை கைத்தாங்கலாக பிடித்து கொண்டான்.

 

பின் இருவரும் சுளுக்கெடுக்க சென்று விட்டார்கள். அங்கே அந்த கடையிலே விஜிக்கும், அபர்ணாவுக்கும் சாக்லெட்டை வாங்கி கொண்டு சிவ பிரகாசத்தை வீட்டுக்கு அழைத்து வந்தான் நரேன்.

 

வீட்டுக்கு வந்ததும்  அங்கு அமர்ந்திருந்த விஜி கையில்  முதலில் சாக்லெட்டை கொடுத்தான் நரேன். அதை பார்த்து நரேனை  முறைத்த அபர்ணா முகத்தை திருப்பி கொண்டு அவளுடைய அறைக்கு சென்று விட்டாள்.

 

அவள் பின்னே  சென்றவன் அவள் அறைக்கு  சென்று மற்றொரு சாக்லெட்டை கொடுத்தான்.

 

“எனக்கு ஒன்னும் வேண்டாம். அவ  கிட்டயே கொடு”, என்று கோபத்துடன்  கூறினாள் அபர்ணா.

 

“அதுக்குள்ள  கோபமா அப்பு குட்டி?”, என்று கேட்டு கொண்டே அந்த சாக்லெட்டை பிரித்து  ஒரு துண்டை அவள் உதட்டில் வைத்தான்.

 

கோபம் அனைத்தையும் மறந்து அதை சாப்பிட ஆரம்பித்தாள் அபர்ணா. அவளை பார்த்து சிரித்தவன் “எனக்கும் தாயேன்”, என்றான்.

 

“உன் கைல இருக்குல்ல? சாப்பிடு”

 

“அது வேண்டாம் டி. இது தான் வேணும்” என்று அவள் உதட்டை சுட்டி காட்டினான்.

 

“நீயா டா இப்படி  கேக்குற? நான் எச்சி வச்ச ஐஸ் கிரீம் கூட சாப்பிட மாட்டியே?”, என்று ஆச்சர்யமாக கேட்டாள் அபர்ணா.

 

“அது சும்மா உன்கிட்ட பிலிம் காட்டுவேன்? ஆனா அப்புறம் அந்த ஐஸ் கிரீமை நான் சாப்பிட தான் செய்வேன்? இப்பவும் சாப்பிடுவேன். இனி எப்பவும் சாப்பிடுவேன். தா”

 

“அது சின்னதா கரைஞ்சி போச்சு டா. கையில எடுக்க முடியாது”

 

“கையில எல்லாம் எடுக்க வேண்டாம். அப்படியே தா”

 

“உனக்கு என்ன பேய் எதாவது பிடிச்சிருக்கா? இப்படி எல்லாம் பேசுறது என் நரேனான்னு எனக்கு சந்தேகமா இருக்கு டா”

 

“ப்ச், போடி. அதெல்லாம் உள்ளுக்குள்ளே நிறைய இருக்கு. எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியாம ஸ்டார்டிங் ஸ்ட்ரபிள் வந்துருது. நான் என்ன பண்ண? இப்பவாது என்னை முத்தம் கொடுக்க விடு டி. ப்ளீஸ்  அப்பு”

 

“உனக்கு முத்தம் கொடுக்க தெரியுமா?”

 

“நீயும் கலாய்க்காத அப்பு. ப்ளீஸ் முத்தம் கொடுக்க விடு. அப்படியே நீ மூச்சு காத்துக்காக தவிக்கிற வரைக்கும் முத்தம் கொடுக்கணும்”

 

“நான் தான் உன் கையை பிடிச்சு தடுக்குறேனா?”, என்று வெட்கத்துடன் கேட்டாள் அபர்ணா.

 

அவள் வெட்கத்தை ரசித்து கொண்டே அவள் அருகே முன்னேறியவள் அவள் முகம் நோக்கி குனிந்தான். இந்த முறையும் அவனை முத்தம் கொடுக்க விடாமல் அவன் கைபேசி தொல்லை பேசியாய் ஒலி எழுப்பியது.

 

அவளை பாவமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த போனை எடுத்து காதில் வைத்தான். அவனை பார்த்து முறைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் அபர்ணா.

போனை எடுத்து காதில் வைத்தவன் “யார் பேசுறது?”, என்று கேட்டான்.

 

“ஹ்ம்ம் ப்ரைம் மினிஸ்டர் பேசுறேன் டா”, என்று சிரித்தான் ராகுல்.

 

“எருமை நீயாடா? வெளங்காதவனே, கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் போன் பண்ணிருக்க கூடாது”

 

“ஆமா, உங்கிட்ட நேரம் பாத்து பேசணும்னு எனக்கு வேண்டுதல் பாரு. நானே கடுப்புல தான் டா கால் பண்ணேன்”

 

“அந்த கடுப்புலயும் எனக்கு  போன் பண்ணனும்னு என்ன அவசியம்? உன் ஆளுக்கு பண்ணிருக்க வேண்டியது தான?”

 

“ஆபிஸ் லைன்ல இருந்து அவ கிட்ட தான் டா பேசிட்டு இருந்தேன். ஆனா அதை கெடுத்து உனக்கு பண்ண சொல்லிட்டாங்க

 

“சரி சரி விசயத்தை சொல்லு”

 

“ஏன் டா ப்ரொஜெக்ட் பினிஷ் பண்றப்பவாடா இப்படி லீவு போடுவ? உன் டீம்லீடர் தான் டா உனக்கு போன் பண்ண சொன்னான்”

 

“அவனுக்கு என்னவாம்?”

 

“அவனுக்கு ஒன்னும் இல்லை. நீ தான் வரணுமாம்”

 

“என்னது நானா? நான் என் அப்புவை கரெக்ட் செய்றதுல பிஸியா இருக்கேன்”

 

“படுத்தாத டா. அவன் ஒன்னும் வர சொல்லலை. நம்ம எம்.டி தான் வர சொன்னார். உன்னோட ப்ராஜெக்ட் பாரின்ல அப்ரூவ் ஆகிருக்காம். அதுல எல்லா வேலையும் பாத்தது நீ தான்னு உன் டீம் லீடர் பாஸ் கிட்ட சொல்லிட்டான். இந்த பாரின் மீட்டிங்க்கு நீ தான் போகணுமாம்”

 

“என்ன டா ராகுல் சொல்ற?”

 

“ஆமா மச்சான். உன்னோட ஆபிஸ் நம்பர் ரீச் ஆகலையாம். அதனால தான் என்னை உங்கிட்ட சொல்ல சொன்னாங்க”

 

“டேய், இப்படி குண்டை போடாதே டா ராகுல். வேற எவனையாவது அனுப்ப சொல்லலாம்ல?”

 

“அதையும் நான் சொல்லி பாத்துட்டேன். அவனுங்க யாருகிட்டயும் விசா இல்லையாம். உங்கிட்ட தான் இருக்காம்”

 

“அது நான் என் பொண்டாட்டி கூட ஹனி மூன் போக எடுத்து வச்சது டா”

 

“ஹனி மூன் போனா மட்டும்? வாழ்ந்து தள்ளிருவ? உன் பொண்டாட்டி உன் பக்கத்துலே இருந்தாலும் கண்ணால பாத்து தான அழகு பாப்ப? அவளை பாத்து எத்தனை மணி நேரம் ஆச்சு? அப்புவை சரி செஞ்சிட்டியா?”

 

“நான் முத்தம் கொடுக்க எல்லாம் முயற்சி செஞ்சேன் தெரியுமா?”

 

“டேய் நரேன், அப்படியா டா? கலக்கிட்ட போ. நான் சொன்ன ஐடியா ஒர்க் அச்சா? முத்தம் கொடுத்தப்பறம் என்ன நடந்தது? எப்படியோ முத்தத்தை கொடுத்துட்டியே? அதுவே நீ தேறிட்டான்னு தான் டா சொல்லணும்”, என்று பாராட்டி பேசினான் ராகுல்.

 

“முத்தம் கொடுத்த அப்புறம் திட்டு தான் கிடைச்சது ராகுல்”

 

“என்னது திட்டு கிடைச்சதா? என்ன டா நரேன் சொல்ற?”

 

“ஆமா டா, பதட்டத்துல அப்புன்னு நினைச்சு….”

 

“அப்புன்னு நினைச்சு…”

 

“பாட்டிக்கு முத்தத்தை கொடுத்துட்டேன் டா”

 

“ஹா ஹா, பாட்டிக்கா?”, என்று விழுந்து விழுந்து சிரித்தான் ராகுல்.

 

“சிரிக்காத ராகுல். அது இடைல வந்து காரியத்தையே கெடுத்துட்டு”

 

“நரேன், எனக்கு ஒரு டவுட்”

 

“என்ன டா?”

 

“நீ முத்தம் கன்னத்துல தான கொடுத்த? உதட்டுல எல்லாம் கொடுக்கலைல?”

 

“உதட்டுல கொடுத்துட்டு அப்புறம் முகம் புல்லா  கிஸ் பண்ணனும்னு நினைச்சு முதலில் உதட்டில் தான் டா ஆரம்பிச்சேன்”

 

“ஹா ஹா, பாட்டி பாவம். உன் தாத்தாவோட நியாபகத்தை எல்லாம் கிளறி விட்டுட்டியா? இருந்தாலும் பாட்டிக்கும் பேத்திக்குமா டா உனக்கு வித்தியாசம் தெரியலை? இதுல இருந்தே தெரியுது. நீ ஒரு ஆணியும் புடுங்க போறதில்லைன்னு. அங்க இருந்து நேரத்தை வீணாக்காம, ஆபிஸ் வேலையாவது சரியா செஞ்சா எம் டிக்காவது நிறைய புது புராஜெக்ட் கிடைக்கும். நைட் பஸ்ஸை பிடிச்சு வர பாரு. நாளைக்கு நைட் உனக்கு டிக்கட் போட்டிருக்காங்களாம். எதுக்கும் பாட்டியை பத்திரமா பாத்துக்கோ டா”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் ராகுல்.

 

“அப்பு கிட்ட உக்காந்து பேசவும் நேரம் இல்லை. ஒரு முத்தம் கொடுக்கவும் நேரம் இல்லை. இப்ப பாரின் வேற கிளம்பணுமா?”, என்று கடுப்புடன் நினைத்தான் நரேன்.

 

தொடரும்…..