Advertisement

 

 

அத்தியாயம் 14

 

பஸ்ஸில் இருந்து இறங்கி பாட்டியும், பேத்தியும் ஊருக்குள் நடந்து சென்றார்கள். கல்யாணம் முடிந்த போது இங்கே ஒரு நாள் வந்திருக்கிறாள் அபர்ணா. ஆனால் அன்று மணமகளுக்கான கூச்சத்துடன் இருந்தவள் சரியாக அந்த ஊரை கவனிக்க வில்லை.

 

இன்று கண்களை சுழற்றி ஒவ்வொரு வீட்டையும், அங்கு இருக்கும் மனிதர்களையும் பார்த்து கொண்டே நடந்தாள். வர வழி முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும், அம்பிகா அம்மா எப்படி இருக்கீங்க? இது யாரு? உங்க பேத்தி தான? கல்யாணத்துல பாத்தது. பேரன் வரலையா? மகனும் மருமகளும் கூட வரலையா? அவங்களையும் கோயில் கொடைக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்ல?”, என்ற கேள்விகளை அனைவரும் கேட்டார்கள்.

 

ஒவ்வொரு வீட்டிலும் கேட்பவரிடம் நின்று பதில் சொல்லி கொண்டிருந்தாள் அம்பிகா பாட்டி. அவளுடன் ஒரு சிரிப்புடன் நின்று நின்று நடந்தாள் அபர்ணா.

 

வீட்டின் அருகே இவர்கள் போனதும் வாசலில் இருந்தே “வள்ளி வள்ளி”, என்று குரல் கொடுத்தாள் அம்பிகா பாட்டி.

 

அப்போது பக்கத்துக்கு வீட்டில் இருந்து ஒரு பெண்மணியும், ஒரு ஆளும் வந்தார்கள்.

 

“வாங்க சித்தி. இந்தாங்க வீட்டு சாவி. சுத்த பத்தமா பெருக்கி வச்சிட்டேன்”, என்று பாட்டி கையில் சாவியை கொடுத்தாள் அந்த வள்ளி.

 

“வள்ளின்னா வள்ளி தான். எப்படி இருக்க நடராஜா?”, என்று அந்த ஆளை பார்த்து கேட்டாள் அம்பிகா பாட்டி.

 

“ஹ்ம்ம் இருக்கேன் அத்தை”, என்று ஒரு முறைப்புடனே சொன்னார் அந்த நடராஜன்.

 

“மாப்பிள்ளைக்கு இன்னும் கோபம் போகலை போல வள்ளி”, என்று கேட்டாள் பாட்டி.

 

“அவரை குறை சொல்லி என்ன பயன் சித்தி? ஆசையா வளர்த்த மக. என் அண்ணன் பையனுக்கு தான் கட்டி வைக்கணும்னு ஆசை பட்டோம். இவருக்கும் அந்த ஆசை தான். அதுக்காக என் மகளை மேல் படிப்பு எல்லாம் படிக்க வச்சோம். ஆனா எங்க?”, என்று இழுத்து பேசிய வள்ளி அபர்ணாவை முறைத்தாள்.

 

“இந்த பொம்பளை எதுக்கு என்னை முறைக்கிது?”, என்று நினைத்து ஒரு புன்னகையை சிந்தினாள் அபர்ணா.

 

ஆனால் அதுவோ அவளை மேலும் முறைத்து விட்டு திரும்பி கொண்டது. அந்த ஆளும் அவளை முறைக்க தான் செய்தார்.

 

“பழசை பத்தி பேசாத வள்ளி”, என்றாள் பாட்டி.

 

“எப்படி பேசாம இருக்க முடியும்? இதுவே என் மாமன் இருந்தா இப்படி எல்லாம் நடக்குமா?”, என்று கேட்டார் நடராஜன்.

 

“இப்ப எதுக்கு நடராஜன் செத்து போன என் வீட்டுக்காரரை இழுக்குற?”

 

“அவர் சொன்னதுல என்ன சித்தி தப்பு? எங்க சித்தப்பா உயிரோட இருந்திருந்தா என் அண்ணன் பையனுக்கு என் மகளை தான கட்டி வச்சிருப்பாரு. இப்ப அவர் இல்லாததுனால தான வேற பொண்ணை பாத்துட்டீங்க? எங்க மக மனசுல வேற நாங்க அப்படி ஒரு நினைப்பை உண்டாக்கிட்டோம். அந்த கோபம் ஆறவே ஆறாது. சரி சரி பஸ்ல வந்தது களைப்பா இருக்கும். செத்த போய் உக்காருங்க. காப்பி தண்ணி எடுத்துட்டு வரேன்”, என்றாள் வள்ளி.

 

“அப்பாடி விட்டுட்டா”, என்று நினைத்து கொண்ட பாட்டியும் “இப்ப எதுவும் வேண்டாம் வள்ளி. சாயங்காலம் ஆகிட்டே. நைட் எதாவது செஞ்சு கொடு போதும். அப்புறம் நடராஜா, நாளைக்கு குத்தகை நிலத்தை எல்லாம் ஓரெட்டு பாத்துட்டு வந்துருவோம் சரியா?”, என்றாள்.

 

“எனக்கு டவுன்ல கொஞ்சம் வேலை இருக்கு அத்தை. என் பையன் சின்ராசை அனுப்புறேன்”

 

“சரி பொடியனையே அனுப்பு. வா அப்பு. உள்ள போகலாம்”, என்று கத்தி சொன்ன அம்பிகா பாட்டி அவள் காதில் மட்டும் விழுமாறு “சீக்கிரம் வீட்டுக்குள்ள வந்துரு அப்பு. பேசியே சாகடிச்சிருவாங்க”, என்றாள்.

 

ஏற்கனவே எதிரி போல் முறைத்து கொண்டிருந்தவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து அபர்ணாவும் உள்ளே சென்றாள். பாட்டி கதவை திறந்ததும் இருவரும் உள்ளே சென்றார்கள்.

 

“கீழே மூணு ரூம் இருக்கு அப்பு. மாடில ரெண்டு ரூம் இருக்கு. நீ கீழ தங்கிக்கிறியா? இல்ல மேல ரூம் வேணுமா?”

 

“நான் மாடிலே தங்கிக்கிறேன் பாட்டி. ஆமா இவங்க ரெண்டு பேரும் எதுக்கு உன்னையும் தாத்தாவையும் திட்டுறாங்க?”

 

“உன்னால தான் அப்பு திட்றாங்க”

 

“என்னாலயா? நான் என்ன பாட்டி செஞ்சேன்? என்னையும் முறைக்க தான் செஞ்சாங்க”

 

“அவங்களுக்கு விஜினு ஒரு பொண்ணு இருக்கா. அவளை நம்ம நரேனுக்கு கட்டி வைக்கணும்னு ரெண்டு பேரும் கனவு கண்டுட்டு இருந்தாங்க போல. வெள்ளைக்கார துரை மாதிரி இருக்குற என் பேரனுக்கு இவன் பொண்ணையா நான் எடுப்பேன்? அவனுக்கு பொருத்தமான உன்னை தான கட்டி வைக்க முடியும். அதுக்கு தான் இப்படி பேசிட்டு போறாங்க”

 

“பாரு டா, நம்ம பப்லிக்கு இங்கயும் முறை பொண்ணு இருக்கா?”

 

“அது இருக்காளுக எக்கச்சக்கமா”

 

“அது சரி பாட்டி. அந்த பொண்ணு நரேனுக்காக மேல் படிப்பு எல்லாம் படிச்சதாமே? என்ன படிச்சிருக்கா”

 

“அட நீ வேற? பன்னிரெண்டாப்பு தான் படிச்சிருக்கா. இந்த ஊருல எட்டு வரைக்கு தான் படிக்க முடியும். அதுக்கு அப்புறம் டவுனுக்கு தான் போகணும். அங்க தான் அவ பன்னிரண்டு வரை படிச்சிருக்கா போல? அதை தான் இப்படி பீத்திக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேரும்”

 

“ஹா ஹா, ஆனா எனக்கு ஒரு சந்தேகம் பாட்டி. ஒரு வேளை என்னை விட்டுட்டு நீ இந்த மாதிரி பொண்ணை உன் பேரனுக்கு கட்டி வச்சிருந்தா அவன் சந்தோசமா இருந்துருப்பான்ல?”

 

“அசடு மாதிரி பேசாத அப்பு. என் பேரனுக்கு பொருத்தமான ஜோடி நீ மட்டும் தான். அந்த வயசுலே உன் தாத்தா காதல் மன்னனா இருந்தவரு. நாங்க ரெண்டு பேரும் சுடாத இடம் இந்த ஊருலே இல்லை தெரியுமா? அப்புறம் என் மகன் காலேஜ் படிக்கும் போதே உன் அத்தையை காதலிச்சான். அப்படி பட்டவங்களோட பேரனும், மகனுமா இருந்துட்டு என் பேரனுக்கு காதல் வராம போயிருமா? அவன்  இன்னும் ரெண்டு நாளுல இங்க இருப்பான் பாரு. சரி சரி நீ போய் குளிச்சிட்டு ஓய்வு எடு. நேத்து நைட்ல இருந்து அலைச்சல் தான் உனக்கு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பாட்டி.

 

“அவனாவது வரதாவது”, என்று நினைத்து கொண்டே மாடி அறைக்கு சென்றவள் குளிக்க சென்றாள்.

 

அதே நேரம் நரேன் கார் அந்த ஊருக்குள் பிரவேசித்தது.

 

வீட்டு வாசலிலே அமர்ந்திருந்த வள்ளியும் நடராஜனும் அபர்ணாவை பற்றி தான் பேசி கொண்டார்கள்.

 

“எப்படி கணக்கு போட்டேன் தெரியுமா வள்ளி? அந்த பயலுக்கு என் மகளை கட்டி வச்சிரணும்னு. எல்லாம் போச்சு”, என்றார் நடராஜன்.

 

“எனக்கும் அந்த ஆசை தாங்க. எம்புட்டு சொத்து. அதை விட தங்கமான குணம். ஆனா அந்த பொண்ணை எடுத்துட்டாங்களே”

 

“அந்த பொண்ணுன்னு சாதாரணமா சொல்லாத வள்ளி. அந்த பொண்ணு பேருல இவுகளை விட அதிகமா சொத்து இருக்கு. அவளோட அப்பனும் ஆத்தாளும் சாகும் போது அவ்வளவு சொத்தையும் சேத்து வச்சிட்டு தான் போயிருக்காங்க. ஆனா சொத்து எதுவும் இல்லைனு நினைச்சு தான் அந்த பிள்ளையை அவளோட சொந்த காரங்க வளர்க்கலையாம். ஆனா நம்ம சிவப்பிரகாசம் தான் ரொம்ப நல்லவனாச்சே. அந்த பொண்ணுக்கு சொத்தே இல்லைனா கூட அவளை நல்ல படியா வளர்த்திருப்பான். இப்படி அவனே வளத்து அவனோட பையனுக்கே கட்டி வச்சு ரெண்டு சொத்தும் வெளியே போக விடாம செஞ்சிட்டாங்க பாத்தியா?”

 

“ஆமாங்க. ஆமா அது என்ன காரு வருது. யாரு வராக?”, என்று வள்ளி கேட்கும் போது நரேன் காரை விட்டு இறங்கி கொண்டிருந்தான்.

 

இறங்கியது தான் தாமதம் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடியே சென்று விட்டான்.

 

“அடேய் என்னை கை தாங்களா கூட்டிட்டு போடா”, என்று சிவப்பிரகாசம் சொன்னதை அவன் எங்கே காதில் வாங்கினான். அவன் நினைவு எல்லாம் அப்புவே நிறைந்திருந்தாள். மொத்த காதலையும்  மனைவி காலடியில் கொட்ட காத்திருந்தவன் காதில் பெற்ற தந்தை குரல் விழுமா என்ன?

 

“சிவகாமி நீயாவது ஒரு கை பிடி டி”, என்று கெஞ்சினார் அவர்.

 

“காலை அசைக்காம சும்மாவே வச்சிருந்தா எப்படி ஒழுங்கா நடக்க முடியும்? ஒழுங்கா நடந்து பழகுங்க”, என்று சொல்லி விட்டு முன்னே நடந்தாள்.

 

“அட பாவிகளா?”, என்று நினைத்து கொண்டே காரில் இருந்து இறங்கினார்.

 

அதற்குள் இவர்களை பார்த்த வள்ளி “வாங்க அண்ணன்  வாங்க மதினி” என்று வரவேற்றாள்.

 

இவர்களும் பதிலுக்கு நலம் விசாரித்தார்கள்.

 

“சித்தி தான் வந்திருக்காங்கன்னு நினைச்சோம். பின்னாடி நீங்களே வாறீங்க?”, என்று கேட்டாள் வள்ளி.

 

“அப்புவும், அத்தையும் தனியா கஷ்ட படுவாங்களேன்னு வந்தோம்”, என்று சிரித்தாள் சிவகாமி.

 

“சரி என்ன மருமகன் அம்புட்டு வேகமா உள்ள ஓடுறாரு?”, என்று கேட்டார் நடராஜன்.

 

“அவனுக்கு அவன் பொண்டாட்டியை பாக்கணுமாம். அதனால தான் என்னை கூட கண்டுக்காம ஓடுறான்”, என்று கூறி எரியும் தீயில் எண்ணையை ஊற்றினார் சிவப்பிரகாசம்.

 

“அப்புறம் வள்ளி எனக்கு அடுப்பு ஏற்பாடு செஞ்சு தாயேன். கொடை வரைக்கும் சமைக்கணுமே. விறகு அடுப்பா இருந்த கூட பரவால்ல. இங்க கேஸ் இல்லை. அதான்”, என்றாள் சிவகாமி.

 

“ஏன் மதினி நான் சமைச்சு தர மாட்டேனா?”, என்று நொடித்து கொண்டாள் வள்ளி.

 

“அதுக்கு இல்லை வள்ளி. இத்தனை பேருக்கு நீ சமைக்கிறது கஷ்டம். அதுவும் இல்லாம சின்ன பசங்க ஆசை பட்டதை கேப்பாங்க. அதான்”

 

“சரி சரி எங்க கேசையே தாரேன்”

 

“விறகு அடுப்பு இருந்தாலே போதும் வள்ளி”

 

“டவுன்ல இருந்தவுக அதுல கஷ்ட பட வேண்டாம் மதினி. எங்க வீட்ல விறகு தான் எரிக்கிறோம். கேஸ் அடுப்பு சும்மா தான் இருக்கு. இப்ப இவரு எடுத்து தருவாரு”

 

“சரி”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள் சிவகாமி.

 

அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கண்டு கொள்ளாமல் போகும் மனைவியே பார்த்து கொண்டிருந்தார் சிவப்பிரகாசம்.

 

“என்ன மச்சான்? இந்த வயசுலயும் அண்ணியை ஆசையா பாக்கீங்க”, என்று கேட்டார் நடராஜன்.

 

“டேய் நடராஜா. தங்கச்சி பக்கத்துலே இருக்காளேன்னு பாக்குறேன். இல்லை வாயில எதாவது வந்திரும்.  ரெண்டு நாள் முன்னாடி மாடி படிக்கட்டுல இருந்து வழுக்கிருச்சு டா. அது நல்ல சுளுக்கு புடிச்சிட்டு. நானே நடக்க முடியாம நின்னுட்டு இருக்கேன். பெத்த மகனும், கட்டுன பொண்டாட்டியும் கண்டுக்காம போறாங்களேன்னு பாத்துட்டு இருந்தா நீ ஆசையை பத்தி பேசுற?”, என்று பொங்கி விட்டார் சிவப்பிரகாசம்.

 

“அட பாவமே, இப்படியா நடக்கணும்? வாங்க வாங்க நான் கை தாங்களா கூட்டிட்டு போறேன்”,. என்று கூறி சிவ பிரகாசம் தோளை பற்றி கொண்ட நடராஜன் “எங்க போனாலும் மச்சான் துணை வேணும் மச்சான். மலை ஏறுனா மச்சான் துணை வேணும்னு கேள்வி பட்டுருக்கீங்களா? என் பொண்ணை உங்க மகனுக்கு கட்டி வச்சிருந்தா, இப்ப இப்படி எல்லாம் ஆகிருக்குமா?”, என்று பேச ஆரம்பித்து பேசிய படியே இருந்தார்.

 

“அட பாவி இவன் வாயை திறந்தா மூடவே மாட்டானே? நான் எதுக்கு மலை ஏற போறேன்? ஒரு படி ஏறுறதுக்கு கூட வந்துட்டு என்னா பேச்சு பேசுறான். இவன் பேச்சை எல்லாம் காது கொடுத்து கேக்குற மாதிரி செஞ்சிட்டானே நான் பெத்த மகன்”, என்று நினைத்து கொண்டு “இதுக்கு மேலே நான் போயிருவேன் நடராஜா”, என்று கழட்டி விட பார்த்தார்.

 

“இல்லை மச்சான். ரூம் குள்ள படுக்க வச்சிட்டே போறேன்”

 

“அதெல்லாம் வேண்டாம் பா. நானே போயிருவேன். வேணும்னா தங்கச்சியை காபி மட்டும் போட்டு கொடுக்க சொல்லு”, என்று சொல்லி பத்தி விட்டார்.

 

அவர் போன பிறகு “ஏண்டி மனுஷனை இப்படியா டி அவன் கூட கோர்த்து விடுறது? எல்லாம் உன் பையனால வந்தது. எங்க அவன்?”, என்று சிவகாமியிடம் கோபித்தார் சிவப்பிரகாசம்.

 

“அவன் அவனோட பொண்டாட்டியை பாக்க போயிருக்கான். பிள்ளைங்க இப்பாவது சண்டை சச்சரவு இல்லாம இருக்கட்டும். ஒடைஞ்ச காலை வச்சிட்டு பேசாம படுங்க”, என்று சொல்லி விட்டு அம்பிகாவை பார்க்க சென்று விட்டாள் சிவகாமி.

 

ஆனால் உள்ளே ஓடி வந்த நரேனோ “அப்பு மேல தான் இருப்பா”, என்று முடிவு செய்து வேகமாக மாடிக்கு சென்று அவள் இருந்த அறை கதவை தள்ளினான். அதுவும் உடனே திறந்து கொண்டது.

 

மனம் முழுவதும் சந்தோசத்துடன் உள்ளே நுழைந்தவன் கண்ணில் பட்டது அவளுடைய பேக்.

 

“மேடம் குளிக்க போயிருக்கா போல? வந்த உடனே அப்படியே அவளை கட்டி புடிச்சு என் காதலை சொல்லுவேன்”, என்று நினைத்து கொண்டு பாத்ரூம் கதவு திறக்க காத்திருந்தான்.

 

குளித்து முடித்து வெளியே வந்த அபர்னாவோ கண் முன் இருந்த நரேனை பார்த்து இரண்டு விசயத்துக்கு அதிர்ச்சியானாள்.

 

ஒன்று அவன் அவளை காண வந்திருப்பது. அது கனவா என்று கூட தோன்றியது. மற்றொன்று அவள் ஒரு பாவாடையை மட்டுமே அணிந்து கொண்டு நின்றாள்.

 

“ஊருக்கு போனா சேலை தான் கட்டணும் அப்பு”, என்று பாட்டி சொன்னதால் அதை பாத்ரூம் உள்ளே கட்ட முடியாததால் அப்படியே வெளியே வந்தாள்.

 

கதவை தாள் போடவில்லை. இவன் வருவான் என்று கனவா கண்டாள். திகைத்து போய் ஒரு நிமிடம் நின்றவளை பார்த்து கொண்டே இருந்தான் நரேன்.

 

அவன் அவளை தேடி வந்தது மனதுக்கு சந்தோசமாக இருந்தாலும், தன்னை விட்டு விலகியே இருப்பது ஒரு வித எரிச்சலையும் கொடுத்தது அவளுக்கு. “அதுவும் நான் எந்த கோலத்தில் இருக்கிறேன்? இதுவே லவ்வரா இருந்தா என்ன எல்லாம் செஞ்சிருப்பாங்க? அதும் கட்டுன புருஷன்னா கேக்கவே வேண்டாம். ஆனா இவனை பாரு அப்படியே மண்ணு மாதிரி நிக்குறான். இவன் முன்னாடி வெறும் பாவாடை என்ன? ஒண்ணுமே இல்லாம நின்னா கூட இவனுக்கு ரொமான்ஸ் வராது”, என்று நினைத்து கொண்டு பையில் இருந்து மாற்று துணியை எடுக்க ஆரம்பித்தாள்.

 

வெளியே அவள் வந்ததில் இருந்து அவள் அதிர்ச்சியை பார்த்து கொண்டிருந்தவனுக்கு முதல் முறை அவள் உடலில் பார்வையை பதிக்க தோன்றியது.

 

அவனுக்கு துணையாக இதுவரை “அப்புவை அப்படி பாக்க கூடாது”. என்று சொல்லி கொண்டிருந்த மனசாட்சி. “உன் பொண்டாட்டி டா. இப்படி பாக்கலாம்”, என்று கூறி உதவியது.

 

அதனால் வைத்த கண் எடுக்காமல் தலை முதல் கால் வரை பார்வையிட்டான். அவனுடைய மோக பார்வையை உணராமல் அவன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று அவள் கோபமாக இருந்தாள்.

 

மெதுவாக அவளை நெருங்கினான் நரேன்.

 

தொடரும்…..

 

Advertisement