Advertisement

அத்தியாயம் 13

 

வீட்டு வாசலில் இறங்கிய நரேனின் கண்களுக்கு தெரிந்தது சிவகாமி தலையில் அடித்து கொண்ட காட்சி தான்.

 

ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்தவன் பேகை எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.

 

“அம்மா வா நீ?  பையன் வீட்டுக்கு வாரானே. வாப்பா, எப்படி இருக்கன்னு பாசமா விசாரிக்கிறதை விட்டுட்டு ஏண்டா வந்தான்னு நினைச்சு தலையில் அடிக்கிற?”, என்று முறைத்த படி கேட்டான் நரேன்.

 

“நான் உன்னை வரவேற்க்குறது  இருக்கட்டும். பொண்டாட்டியை அடிச்சு துரத்திட்டு  பின்னாடியே வால் பிடிச்சிட்டு வந்துருக்கியே? உன்னை பாத்தா தலையில் அடிக்க தோனுமா தோணாதா ?”, என்று கேட்டாள் சிவகாமி.

 

“தெரிஞ்சிட்டா உனக்கு? சரி அதை விடு. என் பொண்டாட்டி எங்க?”, என்று கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தவன் “அப்பு அப்பு”, என்று கத்தினான்.

 

“எதுக்கு டா  இவ்வளவு வேகமா அவளை தேடுற?”

 

“என் அப்பு கிட்ட காதலை சொல்ல போறேன்”

 

“டேய்  நான் உன் அம்மா டா. என்கிட்டயே  காதலை சொல்ல போறேன்னு சொல்ற?”

 

“நான் என்ன ஒரு பொண்ணு கிட்ட லவ்வை சொல்ல போறேன்ணா சொன்னேன்? என் பொண்டாட்டிகிட்ட சொல்ல போறேன்னு தான சொன்னேன்?”

 

“சரி தான். ஆனா இத்தனை நாள் சொல்லாம இன்னைக்கு என்ன புது ஞானோதயம்?”

 

“அது நேத்து தான் ராகுல் கிட்ட கேட்டு தெளிவு படுத்தினேன்”

 

“விளங்கிரும். உனக்கு லவ் பண்ண சொல்லி கொடுக்கவே ஆள் வேணுமா? இதையும் அப்பு கிட்ட சொல்லு. உன்னை அப்படியே கொஞ்சுவா”

 

“அதெல்லாம் சொல்ல மாட்டேன் மா. சரி அவ கிட்ட நான் பேச போனும். நீ எங்களை பிரிச்சு வைக்கிற மாதிரி என்கிட்ட பேச்சு கொடுத்துட்டே இருக்க?”

 

“அட பாவி நான் உங்களை பிரிச்சு வைக்கிறேனா? சரி தான். போய் தாராளமா பேசு பா. பேசு. ஆனா அவ தான் இங்க இல்ல”

 

“ஐயோ  என்ன மா  சொல்ற? இங்க வந்துருப்பானு தான இங்க வந்தேன்? இங்க வரலைன்னா எங்க போய்ட்டா? நான் போன்  பண்ணா எடுக்க மாட்டிக்கா மா “, என்று பதட்டமானான் நரேன்.

 

“டேய்  டென்ஷன் ஆகாத டா. அப்பு இங்க தான் வந்தா”

 

“லூசு அம்மா, ஒரு நிமிசத்துல எப்படி பயமுறுத்திட்ட. வெளிய எங்கயும் போய்ருக்காளா?”

 

“டேய் மரமண்டை நீ எங்க டா என்னை தெளிவா பேச விட்ட? அவ வெளிய எல்லாம் போகல? நம்ம பூர்வீக ஊருக்கு தான் போய்ருக்கா?”

 

“என்னது???”

 

“ஆமா டா”

 

“எப்ப மா வருவாங்க ரெண்டு பேரும்?”

 

“அது பத்து பதினஞ்சு நாள் ஆகும் டா”

 

“அம்மா, அவ்வளவு நாளா?”

 

“இது சித்திரை மாசம் டா. வருஷம் வருஷம் உன் பாட்டி கோயில் கோடைக்கு போவாங்க தான? அதுக்கு தான் போயிருக்காங்க”

 

“அதுக்கு இந்த அப்பு ஏன் மா போனா?

 

“அத்தை எனக்கு என் புருசனை பிடிக்கலை. அதனால அவனை விட்டு தூரமா போகணும் அப்படின்னு சொன்னா. அதான் உன் பாட்டி ஊருக்கு கிளம்பினாங்க. அவங்க கூட அவளை அனுப்பி வச்சேன்”

 

“அம்மா”, என்று அதிர்ச்சியாக அழைத்தவன் “நிஜமாவே அப்பு என்னை பிடிக்கலைன்னு  சொன்னாளா மா?”, என்று கலக்கத்துடன் கேட்டான்.

 

“இந்த உருக்கமான பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. உன் கண்ணீர் டேமை திறந்து வீட்டை வெள்ளம் ஆக்கிறாத. அப்பு அப்படி எல்லாம்  சொல்லலை. நான் சண்டையான்னு கேட்டு உன்னை விசாரிக்கணும்னு சொன்னதுக்கே யாரும் என் புருசனை விசாரிக்க கூடாதுன்னு தான் சொன்னா. நீ பொம்பளை பிள்ளை மாதிரி  கண்ணை கசக்கி கிட்டு இருக்காம ஊருக்கு கிளம்பி போய் அவளை பாரு”

 

“இந்த கிழவி எதுக்கு அவளை கூட்டிட்டு போச்சு? சரி நீயும் அப்பாவும் வாங்க. நாம ஊருக்கு போவோம்”

 

“டேய் அரை மெண்டல் உங்க அப்பா சுளுக்குன காலை வச்சிக்கிட்டு  எலும்பு முரிஞ்ச மாதிரி நடக்க முடியலை, எந்திக்க முடியலைன்னு படுத்து கிடக்காரு டா. அதனால நாங்க வர முடியாது. நீ கிளம்பு”

 

“அம்மா கல்யாணம் முடிஞ்சு பொங்கல் வைக்க போன அப்ப தான் அந்த ஊரை பாத்துருக்கேன். தனியா எல்லாம் எனக்கு போக தெரியாது மா “

 

“அதுக்கு??”

 

“வா, நாம அப்பாவை தூக்கிட்டு போகலாம்”, என்று கூறி கொண்டே சிவப்பிரகாசம் அறைக்குள் நுழைந்தான்.

 

படுக்கையில் படுத்து காலை ஆட்டி கொண்டு பக்கத்தில் இரண்டு கிண்ணங்களில் மாதுளம்  பழமும் ஆரஞ்சு பழமும் உரித்து வைத்திருந்ததை சாப்பிட்டு கொண்டிருந்த சிவ பிரகாசம் இவனை பார்த்ததும் “நீ எப்ப டா வந்த?”, என்று கேட்டார்.

 

“நான் வரது இருக்கட்டும். நீ சொகுசான வாழ்க்கை வாழ்ந்துட்டு  இருக்க போல?”, என்று நக்கலாக கேட்டான் நரேன்.

 

“எனக்கு கால் முரிஞ்சிருச்சு நரேன்”

 

“நம்பிட்டேன் பா. நம்பிட்டேன்”

 

“டேய் உங்க அம்மா இப்படி நான் படுத்திருக்கும் போது என்னை ராஜா மாதிரி கவனிச்சிக்குறா. சந்தோசமா இருக்கு டா. நீ எதாவது நாரதர் வேலை பாத்து வச்சிராத”

 

“நீ இருக்கியே. போ பா. சரி அதை விடு. நீ எந்திரிச்சு கிளம்பு”

 

“எங்க டா? ஹாஸ்பிட்டலுக்கா?”

 

“இல்லை உன் சொந்த ஊருக்கு”

 

“என்னால காலை அசைக்க முடியாது நரேன்”

 

“இவ்வளவு நேரம் காலை ஆட்டிகிட்டு தான படுத்திருந்த. ஒழுங்கா எந்திரிச்சு கிளம்பு. நானே கிளப்பி விடுறேன். நொண்டி நொண்டியாவது  நீ வந்தே ஆகணும்”, என்று முடிவுடன் கூறி விட்டு கடைசியில் அவரை கிளப்பியே விட்டான்.

 

அப்போது சிவகாமியும் கிளம்பி விட்டாள். “ரெண்டு பேரும் திங்க்ஸ்  எல்லாம் எடுத்து வைங்க. நான் என் ரூமுக்கு போய் குளிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அறைக்கு சென்றான். அப்போது அவனை போனில் அழைத்தான் ராகுல்.

 

அதை எடுத்து காதில் வைத்த நரேன் “சொல்லு மச்சான்”, என்று கேட்டான்.

 

“என்ன சொல்லுன்னு என்னை சொல்ற? நீ தான் டா சொல்லணும். வீட்டுக்கு போய்ட்டியா? அப்புவை பாத்து பேசிட்டியா? சண்டை சமாதானம் ஆகிட்டா?”, என்று கேட்டான் ராகுல்.

 

“அட நீ வேற ஏண்டா? அவ வீட்லயே இல்லை”

 

“எங்க டா போயிருக்கா?”

 

“அவ எங்க சொந்த ஊருக்கு என் பாட்டி கூட கிளம்பி போய்ட்டா மச்சி”

 

“நீ அவளை சரி கட்டிருவேன்னு பாத்தா அவ உனக்கு டாட்டா காட்டிட்டு போய்ட்டாளா? சரி அடுத்து என்ன பிளான்?”

 

“என்ன பிளான்? அவ போயிருக்க ஊருக்கு போக வேண்டியது தான். கிளம்ப போறேன்”

 

“சரி டா. அப்ப இன்னைக்கு நைட் சென்னை கிளம்ப மாட்டியா? ஆபிஸ் க்கு எத்தனை நாள் லீவு சொல்லிருக்க?”

 

“இன்னைக்கு நைட்டா சான்ஸே இல்லை மச்சான். வர பத்து பதினஞ்சு நாள் ஆகும்”

 

“என்னது அவ்வளவு நாளா? வேலைல இருந்து எடுத்துருவாங்க நரேன்”

 

“எடுத்தா எடுக்கட்டும். இந்த வேலை இல்லைனா இன்னொன்னு. எனக்கு என் பொண்டாட்டி தான் பா முக்கியம்”

 

“ஐ. ஐ.டி ல படிச்சிருக்க திமிரா டா உனக்கு? எங்க போனாலும் வேலை கிடைக்கும்னு கொழுப்பு டா உனக்கு”

 

“சரி சரி பொறாமைல இப்படியே பொங்கல் வச்சிட்டு இரு. நான் என் டார்லிங்கை பார்க்க கிளம்பனும்”

 

“சரி டா. வெற்றிகரமா அவ கூட சேருற வழியை பாரு. அப்புறம் அவளை நெருங்குன உடனே மறுபடியும் பொண்டாட்டியா பாக்க தோணலை. பிரண்டா தான் பாக்க தோணுதுன்னு காரியத்தை கெடுத்துறாத மச்சி. அடுத்து என்ன செய்யணும்னு தெரியும் தான? இல்லைனா நாலு அஞ்சு வீடியோ அனுப்பவா?”

 

“விளக்கமாறு பிஞ்சிரும். நான் என் பொண்டாட்டி கிட்டயே எல்லாத்தையும் தெரிஞ்சுக்குறேன். நீ போனை வை டா”, என்று சொல்லி கட் செய்து விட்டு குளித்து முடித்து கிளம்பி விட்டான்.

 

கை தாங்களாக சிவபிரகாசத்தை பின் சீட்டில் ஏற்றியவன் தன்னுடைய அம்மா ஏறி அப்பா அருகில் அமர்ந்ததும் முன்னே அமர்ந்து காரை எடுத்தான்.

 

பின் சிவப்பிரகாசம் வழி காட்ட கார் நரேன் கையில் சீறி பாய்ந்தது.

 

பஸ்ஸில் ஜன்னல் கம்பியில் தலை வைத்திருந்த அபர்ணாவோ ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து  கொண்டு வந்தாள்.

 

காற்று சிலு சிலுவென்று வந்தது.  அதை அனுபவித்த படியே வந்தவள் “பாட்டி என்ன செய்றாங்க?”, என்று நினைத்து தலையை திருப்பி பார்த்தாள்.

 

அம்பிகா பாட்டியோ நல்ல உறக்கத்தில் இருந்தாள். அதை பார்த்து சிரித்து விட்டு மறுபடியும் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

 

வழியில் இருக்கும் மரங்களையும் சின்ன சின்ன ஊர்களையும் பார்த்து கொண்டே வந்தவளுக்கு நரேன் நினைவு வந்தது. தன்னுடைய போனை எடுத்தாள். பல தடவை கால் செய்திருந்தான் அவன்.

 

“இந்த அக்கரைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”, என்று கொஞ்சலுடன் நினைத்து கொண்டாள்.

 

போனில் சேவ் செய்திருந்த அவர்களுடைய புகை படங்களை அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்வை இட்டு கொண்டிருந்தாள்.

 

பின் அவளை அறியாமலே அவனை ஒவ்வொரு போட்டோவிலும் ரசிக்க ஆரம்பித்தாள். போட்டோ எடுத்த தருணங்களையும் நினைவு கூர்ந்து சிரித்து கொண்டாள்.

 

அதை பார்த்து முடித்து விட்டு பேஸ்புக் ஓபன் செய்தாள்.

 

அதில் முதலில் தெரிந்தது நரேன் போஸ்ட் செய்திருந்த பதிவு தான்.  முகத்தில் சிரிப்போடு அதை பார்வையிட்டாள்.

 

“ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா.

ஐ என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா என்று

சந்தோசமாக ஜனகராஜ் மாதிரி நானும் கத்த தான் செய்தேன்.

 

வீட்டுக்கு சென்ற பின்னர் தான் அந்த

கத்தலே அவசியமற்றது என்று தோன்றியது.

 

சாப்பிடு என்று சொல்லும்

அவள் கரங்களை தேடுகிறது மனது.

 

இன்னும் தூங்காம என்ன செய்ற, என்று சொக்கிய கண்களுடன்

கேட்கும் அவள் விழிகளை தேடுகிறது மனது.

 

சீக்கிரம் குளிச்சிட்டு வா என்று விரட்டும்

அவள் விரல்களை தேடுகிறது மனது.

 

இந்த டிரெஸ்ஸில் அழகாக இருக்க டா என்று  

கூறும் அவள் உதட்டை தேடுகிறது மனது.

 

என்னை சுற்றியே இருக்கும் அவளுடைய

வாசனையை தேடுகிறது மனது.

 

அவள் தேடலை எனக்குள்ளே தந்து விட்ட போன

என் பொண்டாட்டி எப்ப வருவாள் என்று காத்திருக்கிறேன்

‘ஐ பொண்டாட்டி ஊருல இருந்து வந்துட்டா’ என்று கத்துவதுக்காக.

 

மிஸ் யு செல்ல பொண்டாட்டி”, என்று முடிந்திருந்தது அந்த பதிவு.

 

இனிமையாக அதிர்ந்தாள் அபர்ணா. “இவன் இப்படி எல்லாம் யோசிப்பானா? என்னை இந்த அளவுக்கு கவனிச்சிருக்கானா? வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டினு சொல்லிட்டு அப்புறம் ஏன் டா விலகியே இருக்குற?”, என்று மனதுக்குள்ளே கேட்டு கொண்டு அவனுடைய முந்தைய பதிவுகளை பார்த்தாள்.

 

பின் அவனுடைய பதிவுகளிலும், அவனுடைய நினைவுகளிலும் மூழ்கி இருந்த அவளை “அதுக்குள்ளே புருஷன் நியாபகமா?”, என்ற பாட்டியின் குரல் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது.

 

“எந்திரிச்சிட்டியா பாட்டி?”

 

“ஹ்ம்ம். நீ என்ன செய்ற?”

 

“சும்மா நரேன் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”

 

“அவனை காய போடுவன்னு பாத்தா நீ அவனை ரசிச்சிகிட்டு வர. இங்க பாரு அப்பு. நீ கொஞ்ச நாள் விலகி இருந்தா தான் அவன் உன்னை இன்னும் நல்லா புரிஞ்சிப்பான் சரியா?”

 

“சரி பாட்டி”

 

“அவன் இங்க வந்தாலும் அவன் கிட்ட நீ சரியா பேசவே கூடாது அப்பு”

 

“வில்லி பாட்டி நீ. சரி பேச மாட்டேன் போதுமா? ஆனா அவன் என்னை தேடி வருவான்னு நினைக்கிற?”

 

“சும்மாவே நீ இல்லைனா அவனுக்கு தூக்கம் வராது. இப்ப பொண்டாட்டியா ஆன அப்புறம் சும்மா அங்க இருந்து என்ன பண்ணுவான்? கண்டிப்பா வருவான்”

 

“எனக்கு நம்பிக்கை இல்லை பாட்டி”, என்று உதடு சொன்னாலும் “வருவானா?”, என்று உள்ளே குறுகுறுப்பாக இருந்தது.

 

“கண்டிப்பா வருவான் பாரேன்”

 

“பாக்கலாம் பாட்டி. சரி இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் ஊருக்கு போக?”

 

“இன்னும் அரை மணி நேரத்துல ஊர் வந்துரும் அப்பு”

 

“அங்க வீடு சுத்தமா இருக்குமா பாட்டி. நாம பொங்கல் வைக்க போனப்ப தான கிளீன் செஞ்சோம்”

 

“அது நேத்தே அங்க இருக்க நம்ம சொந்தகாரன் ஒருத்தன் கிட்ட சொல்லிட்டேன். உங்க தாத்தாக்கு அவன் நெருங்கின சொந்தம் தான். அவன் பொண்ணை தான் நரேனுக்கு கொடுக்க முடியலைன்னு ஒரே வருத்தம் அவனுக்கு. அவன் எல்லாம் ஒதுங்க வச்சிருப்பான்”

 

“என் நரேனுக்கு நான்  தான்னு கடவுள் எழுதி வச்சிருக்கும் போது வேற பொண்ணுக்கு எப்படி பாட்டி அவன் கிடைப்பான்? சரி நாம இப்ப எதுக்கு ஊருக்கு போறோம்?”

 

“எதுக்குன்னு தெரியாமலே கிளம்பி வந்துட்டியா? இன்னும் ரெண்டு வாரத்துல கோயில் கொடை வருது அப்பு”

 

“நீ வருஷம் வருஷம் போவியே அதுவா பாட்டி?”

 

“ஆமா, உங்களை கூப்பிட்டா தான் நீங்க வர மாட்டிங்களே?”

 

“அப்ப ஸ்கூல் காலேஜ் அப்புறம் வேலைனு இருந்தது பாட்டி. இத்தனை நாள் லீவு போட முடியலை அதான். சரி ரெண்டு வாரம் இருக்கும் போது எதுக்கு இப்பவே போறோம்?”

 

“இங்க முளைப்பாரி எல்லாம் எடுப்பாங்க கண்ணு. ஒரு வாரத்துக்கு முன்னாடி கால் நட்டுவாங்க. அடுத்த வாரம் கொடை நடக்கும். எனக்கு அதை எல்லாம் பாக்க பிடிக்கும். நான் ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்தது குத்தகை பணம் கைக்கு வரலை. அப்புறம் ஒரு ரெண்டு இடத்தை விக்கலாம்னு நினைச்சேன் அதான்”

 

“சரி பாட்டி. நானும் முளைப்பாரி எடுக்கட்டுமா?”

 

“ஓ தாராளமா எடேன். ரொம்ப நல்ல விஷயம் அப்பு. அதுக்கு என்ன எல்லாம் செய்யணும்? எப்படி விரதம் எல்லாம் எடுக்கணும்னு நான் சொல்லி தரேன் சரியா?”

 

“சரி பாட்டி”

 

“ரொம்ப சுத்த பத்தமா இருக்கணும் அப்பு. முக்கியமா கல்யாணம் ஆனவங்க புருஷன் பக்கத்துலே போக கூடாது. தினமும் விரதம் இருந்து பூஜை பண்ணனும். ஊர் வந்துட்டு அப்பு. பேக் எல்லாம் எடுத்து வச்சிக்கோ. அடுத்த நிறுத்தத்துல இறங்கணும்”, என்று சொல்லி விட்டு ஒரு பையை கையில் எடுத்து கொண்டாள் அம்பிகா பாட்டி.

 

“ஆமா என்  புருஷன் என்னையே சுத்தி சுத்தி வாரான் பாரு. விலகி இருக்க? அவனுக்கு தான் என் மேல ஆசையே வராதே. நான் ஒரு வாரம் விரதம் இருந்தா அவன் என்ன கவலையா பட போறான்? வருஷ கணக்குல அவனை விட்டு விலகி இருந்தா கூட அவன் என்னை தேட மாட்டான். கடவுளே என் நரேன் மனசுல நான் இருக்கேன்னு அவனுக்கு புரிய வச்சு அவன் கூட நான் சேந்து வாழுறதுக்காக நானும் உன்னை முளைப்பாரி எடுத்து வேண்டிக்கிறேன் பா. நீ தான் எங்களை சேத்து வைக்கணும்”, என்று மனதுக்குள் நினைத்து கொண்டு கீழே இறங்கினாள் அப்பு.

 

இங்கே அவளை விரதத்தில் தள்ள பாட்டி குறியாக இருக்க அங்கே நரேனோ “அப்பு கூட முதலில் எப்படி வாழ ஆரம்பிக்க?”, என்று யோசித்து கொண்டு வந்தான்.

 

இப்போதே அவனுக்கு அவளை பார்க்க வேண்டும் போல் இருந்தது. “எல்லாம் இந்த பாட்டியால தான்”, என்று நினைத்தவன் “இந்த கிழவி எதுக்கு மா  ஊருக்கு போகுது? அதுவும் வருஷம் வருஷம். இந்த தடவை அப்புவையும் கூட்டிட்டு போகுது?”, என்று கேட்டான்.

 

“டேய் பாட்டியை அப்படி சொல்லாத”, என்று அரற்றினாள் சிவகாமி;

 

“பாட்டி தான் இங்க இல்லையே. சரி நீ சொல்லு. எனக்கு அப்புவை சீக்கிரம் பாக்கணும் போல இருக்கு”

 

“உங்க பாட்டி எதுக்கு வருஷம் வருஷம் போறாங்கன்னு எனக்கு முழுசா தெரியாது. ஆனா அரசல் புரசலா  தெரியும்”

 

“ஏய் எங்க அம்மாவை பத்தி உனக்கு என்ன விஷயம் டி தெரியும்? எனக்கே தெரியாதே”, என்று ஆர்வமாக கேட்டார் சிவப்பிரகாசம்.

 

“நம்ம கல்யாணம் முடிஞ்ச புதுசுல கேள்வி பட்டிருக்கேன்”

 

“என்னது?”

 

“உங்க அம்மாவும், அப்பாவும் ஒரு வருஷ கோயில் கொடைல தான் முதல் தடவை பாத்தாங்களாம். அப்ப இருந்து ஒரே லவ்வாம். அதே மாதிரி அடுத்த வருஷம் கொடை அப்ப தான் கல்யாணம் செஞ்சாங்களாம். அவங்களோட காதல் கதையை நினைவு படுத்திக்க தான் வருஷம் வருஷம் அங்க போவாங்களாம்”

 

“பாரு டா. எங்க அம்மாவுக்குள்ள இப்படி ஒரு காதல் கதை இருக்கா?”, என்று ஆச்சர்யமானார் சிவப்பிரகாசம்.

 

“பாட்டி, தாத்தா மாதிரியே நானும் என் அப்புவை லவ் பண்ணுவேன்”, என்று நினைத்து கொண்ட நரேன் “அவளை பாத்ததும் அப்படியே கட்டி புடிச்சு முத்தம் கொடுத்துறணும். கடவுளே அவ என் பொண்டாட்டி அவளை தொட எனக்கு தைரியத்தை கொடு பா. அவளை தொடும் போது எப்பவும் போல அப்புவை அப்படி பாக்க கூடாதுனு உள்ளே இருந்து குரல் கொடுக்குற அந்த மனசாட்சியை தயவு செஞ்சு நீ கொன்னுரு கடவுளே. அவ என்னோட பொண்டாட்டி. அவளை நான் ரசிக்கணும்.  அவளை என்னோட காதலால் குளிப்பாட்டனும். இந்த தடவையும் அவளை விட்டு விலகி இருந்தா ராகுலே நீ ஆம்பளையா டா? உனக்கு ஏன் பீலிங்ஸ் எல்லாம் சரியா வேலை செய்ய மாட்டிக்குன்னு கேட்டுருவான். இந்த தடவை என் அப்புவை இல்லை இல்லை என் பொண்டாட்டியை அடக்கி ஆண்டு அவ கூட வாழ்ந்து முடிக்கணும். கடவுளே, எனக்கு துணையா இரு”, என்று வேண்டி கொண்டான்.

 

தொடரும்…..

 

 

Advertisement