Advertisement

அத்தியாயம் 12

 

“என்ன நரேன் அதிர்ச்சியாகுற? நீ அவளை விரும்புறது உனக்கே தெரியலையா?”, என்று கேட்டான் ராகுல்.

 

“என்ன டா இப்படி கேக்குற? எனக்கு எப்பவுமே அப்புவை பிடிக்கும் தான? பிடிச்சா அது காதலா?”, என்று கேட்டான் நரேன்.

 

“ஒருத்தரை பிடிச்சாலே அது காதல் தான்னு சொல்ல மாட்டேன். ஆனா உனக்கு அப்பு மேல இருக்குறது காதல் தான்னு எனக்கு தெரியும்?”

 

“எப்படி அப்படி சொல்ற?”

 

“சின்ன வயசுல இருந்து இப்ப வர யாராவது அப்புவை பாத்து சைட் அடிச்சாலோ லவ் லட்டர் கொடுத்தாலோ நீ என்ன செய்வ?”

 

“பயங்கர கோபம் வரும். நிறைய பேரை அடிக்கவே செஞ்சிருக்கேன்”

 

“ஏன்?”

 

“என்ன ஏன்? என் அப்புவை லவ் பண்ணா எனக்கு கோபம் வராதா?”

 

“சரி டா லூசு. அப்படி நீ அடிக்கிறது அப்புவுக்கு தெரியுமா?”

 

“தெரியாது. அவ முன்னாடி காட்டிக்க மாட்டேன். உன்னை போய் எல்லாம் பாக்குறாங்களேன்னு கிண்டல் அடிப்பேன். ஆனா அப்புறமா போய் வெழுத்துருவேன் அவனுங்களை”

 

“ஏன் அவ கிட்ட சொல்லலை?”

 

“தோணல சொல்லல”

 

“சரி, நீ ஏன் உன்னை லவ் பண்ணவங்களை கல்யாணம் பண்ணல? உங்க வீட்ல கட்டாய படுத்துனாங்களா? அப்புவை தான் கட்டிக்கணும்னு சொல்லி கட்டி வச்சாங்களா?”

 

“இல்லையே டா. அப்பா பொண்ணு யாரா இருந்தாலும் பரவால்லன்னு தான் சொன்னாங்க”

 

“அப்புறம் ஏன் நீ உன்னை லவ் பண்ண பொண்ணுங்களை எல்லாம் கட்டிக்கல? நிறைய பேர் மாயா மாதிரி இல்லாம உண்மையாவே உன்னை விரும்புனாங்க தான?”

 

“அவங்க விரும்புனா எப்படி டா கட்டிக்க முடியும்? எனக்கு புடிக்கணுமே”

 

“நீ கூட தான் நம்ம ஆபிஸ்ல முன்னாடி வேலை பாத்த மைதிலியை பார்த்து அழகா இருக்கான்னு  சொல்லிருக்க? அவளை ஏன் லவ் பண்ணல?”

 

“எனக்கு நயன்தாராவை கூட தான் பிடிக்கும். அது மாதிரி தான் மைதிலியை பார்த்து சொன்னேன். அப்படி சொன்னா லவ் பண்ணனுமா?”

 

“சரி விடு, உலகத்துல உனக்கு தெரிஞ்ச, நீ பார்த்த பொண்ணுங்களை எல்லாம் உன் கண்ணு முன்னாடி கொண்டு வா. அதுல யார் உன் கண் முன்னாடி வந்தா அவங்களை கட்டிக்கணும்னு உனக்கு தோணிருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்து பதில் சொல்லு. கண்ணை மூடு நரேன்”

 

“ம்ம்”, என்று கண்ணை மூடி அவன் அறிந்த அணைத்து பெண்களையும் நினைத்து பார்த்தான். அவன் மனக்கண்ணில் எவரையுமே கல்யாணம் செய்ய என்று தோன்றவில்லை.

 

ஆனால் கடைசியாக அப்பு முகம் நினைவில் வந்தது. கல்யாணம் அன்று அவள் அணிந்திருந்த புடவை, நகை என அனைத்தும் நினைவில் வந்தது. கல்யாணம் அன்று அவள் அழகை ரசித்ததை இன்று அவனை அறியாமலே நினைத்து பார்த்தான்.

 

சிறிது நேரம் கண் விழித்தவனை குறுகுறுவென்று பார்த்து கொண்டிருந்தான் ராகுல். ராகுல் முகத்தை பார்த்ததும் சிரிப்பு வந்தது நரேனுக்கு.

 

“டேய் நானே கொலை வெறியோட உன் எக்சிபிரசனை பாத்துட்டு இருக்கேன். நீ இவ்வளவு நேரம் கழிச்சு கண்ணை திறந்ததும் இல்லாம பல்லை காட்டுற? சொல்லு டா. யார் முகத்தை பார்த்து கல்யாணம் பண்ணனும் தோணுச்சு?”, என்று கேட்டான் ராகுல்.

 

“அப்பு முகத்தை தவிர வேற யாரோட முகமும் தோணலை டா”

 

“இப்ப புரியுதா உன் மனசுல அவ இருக்கான்னு. உங்க அப்பா, அம்மா உன் மனசு தெரிஞ்சு தான் கல்யாணம் செஞ்சி வச்சிருக்காங்க. ஏன் நரேன் உங்க வீட்ல அம்மா, அப்பா இல்ல பொண்ணு அப்பு. அவளுக்கு நரேனுக்கு முன்னாடியே நம்ம தான் கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு நினைச்சு ஒரு டாக்டர் மாப்பிள்ளையை பாத்துருந்தாங்கன்னு வை, நீ அப்ப என்ன செஞ்சிருப்ப. அப்படி இரு சிட்டுவேஷனை நினைச்சு பாத்து சொல்லு பாப்போம். இல்ல அவளே நான் வேற ஒருத்தனை லவ் பண்றேன்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்பா?”

 

“என் அப்பு என்னை தான் விரும்புறா. வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா”

 

“விளக்கெண்ணெய். இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அவன் அவன் கல்யாணம் முன்னாடியே குடும்பம் நடத்தி வயித்துல அவனோட பிள்ளை மூணு மாசம் இருக்கும் போது தான் கல்யாணம் பண்றான். இவன் கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு ஒரு மாசம் அப்புறமும் பிரிஞ்சு வாழ்ந்துட்டு என் உசுரை வாங்குறான். எங்க அம்மா வியாழக்கிழமையை வெள்ளி கிழமைன்னு நினைச்சு சாம்பாரை வச்சிட்டாளேன்னு கடுப்புல உன் வீட்டை தேடி வந்தது குத்தமா டா? உனக்கு பாடம் நடத்தி என் ஆயுள் போயிரும் போல? காதலிக்கிறதை தான் டா சொல்லி கொடுக்குறேன். அதுக்கு மேல எப்படி குடும்பம் நடத்தணும்னு கேட்டுறாதே. எனக்கே அறையும் குறையுமா தான் தெரியும்”

 

“சே சே அதெல்லாம் நான் பாத்துக்குவேன் டா ராகுல்”

 

“ஹ்ம்ம் இதுல எல்லாம் விவரமா இரு. மத்ததுல கோட்ட விடு. ஒரு இமாஜினேஷன்க்கு சொன்னேன் டா. யோசிச்சு சொல்லு. அவ வேற யாரையும் கல்யாணம் பண்ண கூடிய சூழ் நிலை வந்தா என்ன செஞ்சிருப்ப?”

 

ஒரு நிமிடம் யோசித்த நரேனுக்கு அப்புவை தன்னால் விட்டு கொடுக்க முடிந்திருக்காது என்று புரிந்தது.

 

“அப்பு வேற யாரையாவது லவ் பண்ணிருந்தா நல்லா இரு னு வாழ்த்திட்டு கண்டிப்பா அழுத்துருப்பேன் மச்சி. ஆனா வேற மாப்பிள்ளை அவளுக்கு பாத்திருந்தா கண்டிப்பா எங்க அப்பாவை உண்டு இல்லைனு ஆக்கிருப்பேன். இப்ப தான் எனக்கு புரியுது டா. கண்டிப்பா என்னால அப்புவை விட்டு கொடுத்திருக்க முடியாது டா. எனக்கு சண்டை போடா கூட அவ வேணும்”

 

“ஹ்ம்ம் நீ உபயோக படுத்துற எல்லாமே அவ வாங்கி கொடுத்ததுன்னு பெருமையா சொல்லுவ நரேன். அப்ப எல்லாம் உன் கண்ணுல காதல் இருக்கிறதை நான் பாத்துருக்கேன். அன்னைக்கு இந்த செயின் பத்தி சொல்லும் போது உன் முகத்துல வந்த சந்தோசத்தை பாக்கணுமே? உன்னோட வாட்ச், சட்டை, பேண்ட், ஏன் கர்ச்சீப் கூட அவ வாங்கி கொடுத்ததா தான் இருக்கும். எங்க இல்லைனு சொல்லு பாப்போம். உன்னோட ஜட்டி, பனியனை தவிர உன் சட்டை பாக்கெட்டில் இருக்குற பேனா கூட அப்பு வாங்கி கொடுத்தது தான?”

 

ராகுலின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு மார்கமாக முழித்தான் நரேன்.

 

“என்ன டா இப்படி முழிக்கிற?”, என்று கேட்டான் ராகுல்.

 

“இல்லை போன வாரம் வரைக்கும் நீ சொன்னது சரிதான். ஆனா போன வாரத்துல அப்பு தான் எனக்கு ஜட்டி, பனியன் கூட வாங்கி தந்தா. அன்னைல இருந்து பழசை போடாம அவ வாங்கி கொடுத்ததை தான் போடுறேன்”, என்று சொல்லி அசடு வழிந்தான் நரேன்.

 

“உன்னை காரி துப்பனும் போல இருக்கு டா நரேன். ஆனா முடியலை”

 

“சே சே நீ உன் நண்பனை அப்படி எல்லாம் செய்ய மாட்ட. அதான் உன்னால முடியலை”

 

“வெங்காயம், உன்னை துப்புர அளவு எச்சி வரலை டா பரதேசி. மனசெல்லாம் காதலை வச்சிட்டு அது புரியாம தவிச்சி கிட்டு கிடக்குற”

 

“நீ சொல்றது இப்ப புரியுது ராகுல். ஆனா?”

 

“என்ன ஆனா ? ரொமான்ஸ் பத்தி தான கேக்க வர?”

 

“ம்ம்”

 

“சின்ன வயசுல இருந்து அவளை நல்லா கேர் எடுத்து தான் பாத்துருப்ப. ஆனா உன் கூட இருக்குற அவளை தப்பான பார்வை பாக்குறது தப்புனு உன் மனசுல பிக்ஸ் பண்ணி வச்சிருக்க. அதை எல்லாம் அழிச்சிட்டு இப்ப அவ உன் பொண்டாட்டின்னு மட்டும் நினை. அவ மேல உள்ள கேர் கூட பொண்டாட்டி அப்படின்னு உரிமையா நினைச்சா, உன் ஆசை எல்லாம் அவ பக்கம் திரும்பிரும் டா. உன் மனசுல உள்ள பீலிங்ஸ் எல்லாம் அவ கிட்ட காட்டலாம் அப்படினு நினை. தானாவே நீ அவளை ரசிக்க ஆரம்பிச்சிருவ. முதல்ல உன் மனசுல உள்ளதை அவ கிட்ட பேசு. அவளை லவ் பண்றதை சொல்லு. ஆனா ரொமான்ஸா அவளை நெருங்க உனக்குள்ள இருக்குற தயக்கத்தையும் அவ கிட்ட சொல்லு. அவ புரிஞ்சிப்பா. அதை விட்டுட்டு மோப்பம் பிடிக்கிறது, பொறாமைல பொங்குறதுனு எதாவது செஞ்சு அவ கிட்ட எதாவது வாங்கி கட்டிக்காத. இன்னைக்கு எதாவது வாங்குனியா என்ன?”

 

“ஹ்ம்ம் நான் கோபத்துல ஒரு அறை விட்டேனா? அதே அறையை திருப்பி கொடுத்துட்டா மச்சி”

 

“அதானே அபர்ணாவா கொக்கா? சரி சரி நான் சொன்னது எல்லாம் புரிஞ்சுதா?”

 

“நானே இந்த குழப்பத்தை அவ கிட்ட பேசணும்னு தான் டா நினைச்சேன். அதுக்குள்ள இந்த பிரச்சனை வந்துட்டு”

 

“சரி சரி இனிமேலாவது பீஸ் போன பல்ப் மாதிரி இல்லாம இரு டா. பிரைட்டா எரியுற டியுப் லைட் மாதிரி கூட எரிய வேண்டாம். டிம்மா எரியுற குண்டு பல்ப் அளவு  ரொமான்ஸாவது பண்ணு டா”

 

“ஹ்ம்ம்”

 

“இப்ப என்ன செய்ய போற நரேன்?”

 

“நானும் ஊருக்கு கிளம்புறேன். நீ வீட்டுக்கு போ”, என்று சொல்லி விட்டு கிளம்ப சென்றான்.

 

“அட பாவி, அப்படியே ஆப்பு வச்சிட்டானே. கண்ணு முன்னாடி இருக்குற பிரியாணியையும், பீரையும் அடிக்கணுமே”, என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான் ராகுல்.

 

ராகுலுக்கு வாயில் பிரியாணியை நினைத்து எச்சில் ஊறியது. கிளம்பி வந்த நரேனோ  “சரி டா ராகுல். நீ கிளம்பு நான் கதவை பூட்டனும்”, என்றான்.

 

“சரி டா மச்சான். பாத்து பத்திரமா போயிட்டு வா”, என்று சொல்லி கொண்டே நைசாக அந்த கவரை கையில் எடுத்து கொண்டான் ராகுல்.

 

“அதை எங்க டா எடுக்குற? நானே என் அப்பு கோப பட்டு போய்ட்டாளேன்னு கவலைல இருக்கிறேன். உனக்கு பியரா?”, என்று கேட்டு கொண்டே அந்த கவரை பிடுங்கி கொண்டான் நரேன்.

 

“டேய்  பியரை கொடுத்துட்டு போ டா”, என்று பதறினான் ராகுல்.

 

“நான் இங்க கவலைல போறேன். நீ பியர் குடிக்க போறியா? நண்பனா டா  நீ?”, என்று கேட்டான் நரேன்.

 

“அட பாவி, சரி அந்த பிரியாணியையாவது  கொடு டா”

 

“நான் இங்க கவலைல போறேன். நீ பிரியாணி சாப்பிட போற? நண்பனா டா நீ?”, என்று அதே வார்த்தையை சொன்னான் நரேன்.

 

“வெளங்காதவனே  பியர் ஒண்ணும் செய்யாது. பிரியாணி,இட்லி கெட்டு போய்ரும். அதனால தான் சாப்பிட போறேன். சாப்பிட்டுட்டு உன் கவலைக்காக ஃபீல் பண்றேன் மச்சி. இன்னைக்கு பிரியாணி சாப்பிடலைன்னா என் ஆத்துமாவே என்னை மன்னிக்காது டா நண்பா. சத்தியமா உன் கவலையை நினைச்சு அழுவேன் டா. ஆனா சாப்டுட்டு. டீல் தானே?”, என்று சொல்லி கொண்டே சாப்பாட்டு பார்சலை  கை பற்றி கொண்டான். பியரை அங்கு இருந்த பிரிட்ஜில் வைத்தான் நரேன்.

 

“பத்திரமா போ. போய்ட்டு போன் பண்ணு. வரும் போது பிள்ளை குட்டியோட வந்தா கூட எனக்கு டபுள் சந்தோசம். பஸ் ஸ்டண்ட் வரவா”, என்று கேட்டான் ராகுல். “நீ வர  வேண்டாம். ஆட்டோ புடிச்சு போறேன். நான் கிளம்புறேன். பை டா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் நரேன்.

 

“பயபுள்ள ஒரு நிமிசத்துல கையில கிடைச்ச பிரியாணியை வாய்க்கு எட்ட விடாம  பண்ண பார்த்தானே. அப்பாடி இதாவது கிடைச்சதே. ஆனா பியர் போச்சே”, என்று புலம்பிய ராகுல்  “எப்படி இந்த பிரியாணியை வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிட?”, என்று முழித்தான்.

 

“பயந்து கிட்டு இருந்தா பிரியாணி ஆறிரும் ராகுல்”, என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு வீட்டுக்கு சென்றவன் “அம்மா இந்தா உனக்கு இட்லி. தம்பிக்கு பிரியாணி. இது எனக்கு. அப்பாக்கு சாம்பார் சாதமே கொடுத்துரு. அவர் தான் கடை சாப்பாடு  சாப்பிட மாட்டார”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

 

“நான் எப்ப கடை சாப்பாடு சாப்பிட மாட்டேன்னு  இவன் கிட்ட சொன்னேன்?”, என்று யோசனையில் ஆழ்ந்தார் ராகுல் அப்பா அருணாச்சலம்.

 

காலை உணவுக்கு சமைத்து கொண்டிருந்தாள் நரேனின் அம்மா சிவகாமி.

 

அப்போது அழைப்பு மணி அடித்தது. கதவை திறந்த சிவகாமி திகைத்தாள். அங்கே கலை இழந்த முகத்துடன் நின்றிருந்த அபர்ணாவை  பார்த்த சிவகாமிக்கு வியப்பு ஏற்பட்டது.

 

“அப்பு உள்ள வா”, என்று சொல்லி  அவள் கையில் இருந்த பேகை வாங்கி கொண்டாள் சிவகாமி.

 

“அத்தை”, என்ற படி சிவகாமியின்  தோள்களில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் அபர்ணா. நரேனுக்கும், அவளுக்கும் எதுவோ சண்டை என்று யூகித்தவள்  எதுவும் கேட்காமல் அவள் முதுகை தடவிய படி இருந்தாள்.

 

சிறிது நேரம் அழுது முடித்தவள் சிவகாமியிடம் இருந்து விலகி நின்றாள். அவள் கண்ணீரை துடைத்து விட்ட சிவகாமி அவளை பார்த்து கனிவாய் புன்னகைத்தாள். அந்த புன்னகையில் கொஞ்சம் தெளிந்தாள் அபர்ணா.

 

“என்ன ஆச்சு அப்பு?”

 

“என் புருசன் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டேன்”, என்றாள் அபர்ணா.

 

“சரி உள்ள போய் குளிச்சிட்டு வா. சாப்பிட்ட அப்பறம்  அவனுக்கு பஞ்சாயத்து வைக்கலாம்”, என்று சிரித்தாள் சிவகாமி.

 

“அதெல்லாம் யாரும் என் புருசனை விசாரிக்க கூடாது ஆமா”

 

“விசாரிக்கல மா  விசாரிக்கல? அப்புறம் எதுக்கு இந்த அழுகை?”

 

“அது சும்மா அழுது பாத்தேன். அத்தை, எங்கயாவது போகலாமா? நான் நரேன்  மேல கோபமா இருக்கேன். கொஞ்சம் வேற ஊருக்கு போய்ட்டு வந்தா சரியாகிரும்”

 

“உன் மாமாக்கு  கால் சின்னதா சுளுக்கிருச்சு மா. எங்கயும் அசைய  முடியல. ஆனா ஒரு வழி இருக்கு”

 

“ஐயோ  ரொம்ப சுளுக்கா அத்தை? மாமா எங்க? எப்படி ஆச்சு?”

 

“அது மாடில  இருந்து இறங்கி வரும் போது வழுகிருச்சு. சின்னது தான். சரியாகிரும். ஜாலியா படுத்து கிடக்கார். நீ போய் பாரு. அப்புறம்  உன் பாட்டி நம்ம பூர்வீக ஊருக்கு போறாங்க. நீ போய்ட்டு வறியா? கொஞ்சம் ஆறுதலா இருக்கும்”

 

“சூப்பர் அத்தை. நான் பாட்டி கூட போறேன்”, என்று சிரித்தாள் அபர்ணா.

 

“சரி மா”

 

“சரி நான் மாமாவை பாத்துட்டு பாட்டி கிட்ட கேக்குறேன்”, என்று குதித்து கொண்டு போனாள் அபர்ணா.

 

“இந்த நரேன் பயலுக்கு என்ன ஆச்சோ தெரியலையே? வாழ்க்கையை வாழ முடியாம என் பையன் தவிக்கிறானே. அப்புவை வேற யாருக்கும் கட்டி கொடுத்திருந்தா அவளாவது  சந்தோசமா இருந்திருப்பாளோ?”, என்று கவலையில் ஆழ்ந்தாள் சிவகாமி.

 

சிவ பிரகாசம் அறைக்கு சென்று அவரிடம் உடல் நிலை பற்றி விசாரித்து விட்டு அம்பிகா பாட்டி அறைக்கு சென்றாள் அப்பு.

 

“அப்பு நீ எப்ப வந்த?”, என்று கேட்டு கொண்டிருந்த பாட்டி பேகில் புடவையை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

 

“இப்ப தான் பாட்டி”

 

“எங்க உன் புருஷன்?”

 

“அவனை பத்தி பேசாத பாட்டி. என்னையும் உன் கூட கூட்டிட்டு போறியா?”

 

“என் கூடவா? நான் வர பத்து பதினஞ்சு நாள் ஆகுமே”

 

“பரவால்ல, நானும் வரேன். டேன்ஸ் ஸ்கூல் ரெண்டு நாள் தான் நடக்கும். அதையும் அந்த அக்காவை பாத்துக்க சொல்லி போன் பண்ணிட்டேன். அப்புறம் குழந்தைகளுக்கு பரீட்சை வருது. அதனால லீவ் தான்”

 

“அப்படியா சரி. அப்ப நீயும் வா. ஆனா உன் புருஷன் கூட என்ன சண்டைனு சொல்லிட்டு போ”

 

“அவனை புருஷன் புருஷன்னு சொல்லாத பாட்டி. எனக்கு புடிக்கவே இல்லை”

 

“அப்படியா?”, என்று சிரிப்புடன் கேட்டாள் பாட்டி.

 

“இல்ல இல்ல எனக்கு புடிச்சிருக்கு. அவனுக்கு தான் என்னை பிடிக்கலை”

 

“அப்பு இங்க வா. இப்படி உக்காரு. என்ன பிரச்சனை தெளிவா சொல்லு?”

 

“ப்ச்”, என்று சொல்லி கொண்டே கட்டிலில் அமர்ந்தாள் அபர்ணா.

 

“இப்ப சொல்லு. கோப பட்டு தனியா வந்திருக்குறதை பாத்தா பெரிய சண்டை போல இருக்கே”

 

“ம்ம்”

 

“எதனால சண்டை?”

 

“அவன் என்னை அடிச்சிட்டான்?”

 

“நீ அவனை சும்மாவா விட்ட?”

 

“விடுவேனா? திருப்பி கொடுத்துட்டேன்”

 

“அதானே பாத்தேன். சரி சொல்லு ஏன் அடிச்சான்?”

 

“நீ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கலாம்னு சொன்னேனா? அதான் அடிச்சிட்டான்”

 

“அப்ப அடிச்சது சரிதான் அப்பு. நீ ஏன் அப்படி சொன்ன? உனக்கு என்ன தான் பிரச்சனை?”

 

“அவன் என்னை லவ் பண்ண மாட்டிக்கான் பாட்டி. அவனுக்கு என்னை பிடிக்கலை. அது தான் பிரச்சனை”

 

“நீ தப்பா புரிஞ்சிருக்க கண்ணம்மா”

 

“போ பாட்டி. அவனுக்கே பரிஞ்சு பேசாதே”

 

“சரி பரிஞ்சு பேசல. முழு சண்டையையும் சொல்லு. யார் மேல தப்புனு சொல்றேன்”

 

“அவன் மோப்ப பிரச்சனை தெரியும்ல பாட்டி உனக்கு? அன்னைக்கு ஒருத்தி அவன் மேல வந்து விழுந்துட்டான்னு என்னை வந்து மோப்பம் பிடிக்கிறான்? எனக்கு எப்படியோ இருக்கு தெரியுமா?”

 

“அப்பு, அவனோட பழக்கம் அது. அவன் ஒருத்தியை பிடிக்கலைன்னு உன்னோட வாசனையை உணரணும்னு நினைச்சான்னா அதுவே அவனுக்கு உன்னை பிடிச்சிருக்குனு தானே அர்த்தம் வருது”

 

“பாட்டி”

 

“என்ன முழிக்கிற? உன் வாசனை அவனுக்கு பிடிச்சிருக்க போய் தானே அப்படி செய்றான். இதுல பிடிக்கலை அப்படிங்குற வார்த்தையே அடி பட்டு போகுதே?   எல்லா தேவைக்கும் புருஷன் பொண்டாட்டியை தானே தேடுவான். இந்த விசயத்துல அவன் உன்னை பொண்டாட்டியா நினைக்க போய் தான உன்னை தேடுறான். இத்தனை நாள் நீ அவன் பொண்டாட்டி இல்லை. அதனால அவன் அப்படி எல்லாம் செய்யலை. இப்ப உன்னை அவனோட பொண்டாட்டின்னு நினைக்கிறான். அதனால உரிமையா உன்னை நெருங்குறான்”

 

“ஆனா? அது வந்து..”

 

“என்ன அப்பு?”

 

“ப்ச் ஒன்னும் இல்லை பாட்டி?”

 

“ஏன் கண்ணு சலிச்சிக்குற? நரேன் பத்தி என்னை விட உனக்கு தான் தெரியும். அவன் உன்னை லவ் பண்ணலைன்னு கவலை படுற. அது நியாயம் தான். உனக்கு அவன் மேல இருக்குற லவ் அவனுக்கும் இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை தான? ஆனா அவன் உன்னை விரும்புறதை அவனே தெரியாம இருக்கான்”

 

“என்ன பாட்டி சொல்ற?”

 

“அவன் நல்லவன் அப்பு மா. இதே, கெட்ட குணம் இருந்திருந்தா இத்தனை நாள் ஒண்ணா இருந்த வயசு பொண்ணான உன்னை விட்டு வச்சிருப்பான்னு நினைக்கிற? சாதாரணமா பஸ்ல போனா கூட பாக்குற பொண்ணுங்களை எல்லாம் உரசி பாக்கணும்னு நினைக்கிற ஆம்பளைங்க மத்தியிலே கூடவே நீ இருந்தும் உன் கிட்ட அக்கறையா இருந்தாலும்  கண்ணியமா விலகி தானே இருந்தான். உன்னை தப்பான பார்வை பாக்க கூடாதுன்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அவன் மனசுல எந்த தப்பும் இல்லைனு தெரிஞ்ச அப்புறம் தான உங்களுக்கு நாங்க சுதந்தரம் கொடுத்தோம்”

 

….

 

“இல்லைனா பிரிச்சு வச்சிருக்க மாட்டோமா? உன்னோட மனசு கூட அவன் பக்கம் சாஞ்சிட்டு தானே? உன்னை தப்பு சொல்லலை கண்ணம்மா. நீ அவனை விரும்புனது இயற்கை. ஆண், பெண் ஈர்ப்பு அப்படிங்குறது யாருக்கு யார் மேலயும் எப்பவும் வரும். அதை தப்பு சொல்ல முடியாது. உனக்கு அவன் மேல வந்த காதலை எப்படி தப்பு சொல்ல முடியாதோ, அது மாதிரி  அவன் கல்யாணம் அப்புறமும் உன்னை விட்டு விலகி இருக்கிறதை தப்பு சொல்ல முடியாது. கிட்ட தட்ட பதினெட்டு வருஷம் ஒண்ணா இருந்த பொண்ணை தப்பான பார்வை பாக்க கூடாதுனு இருக்குற பையனை ஒரே மாசத்துல காதலோடவும், காமத்தோடவும் பார்க்க சொன்னா அவனால உடனே மாற முடியுமா?”

 

“அப்ப எதுக்கு?”

 

“அப்ப எதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சோம்னு கேக்குறியா?”

 

“ம்ம்”

 

“ஒரே ஒரு காரணம் தான். என்ன புரியலையா? நீ சொன்ன காதல் தான் காரணம்”

 

 

“உனக்கு அவன் மேல லவ் இருக்குனு எனக்கு முன்னமே தெரிஞ்சு போச்சு. ஒரு நாள் உன் சட்டை மேல அவன் சட்டையை போட்டுட்டு அவன் வாசனையை தேடி மெய் மறந்து போய் கண்ணாடி முன்னாடி நின்னியே. அன்னைக்கே புரிஞ்சிக்கிட்டேன். அவன் சட்டையை நீ போடுறது எனக்கு சாதாரண விஷயம் தான். ஆனா துணில ஒத்த கரை இருக்க கூடாதுன்னு நினைக்கிற நீ அவனோட அழுக்கு சட்டை போட்டுட்டு இருக்க ஒரு காரணம் தான இருக்கு?”

 

“பாட்டி”

 

“ஆமா அப்பு. எனக்கு அப்பவே புரிஞ்சிட்டு. என்னோட ஆசையும் அது தான். ஆனா நரேன் பத்தி தான் குழப்பமா தான் இருந்தது. ஆனாலும் ஒரு நம்பிக்கை., அவன் மனசுலயும் நீ இருக்கன்னு”

 

“நீயா சொல்லாத பாட்டி”

 

“இல்லை அப்பு. உண்மையா தான் சொல்றேன். நீ அவனுக்கு கிடைக்கலன்னா அவன் நிலைமை கண்டிப்பா மோசமாகிருக்கும். அவனுக்கு நீ தான் உலகம். அவனை சுத்தி நீ தான் இருக்க. அவனுக்கு உன்னை பாத்துக்கணும் அப்படிங்குறது மட்டும் தான் எண்ணமா இருக்கும். அப்பு அப்பு ன்னு தான் யோசிப்பான். நீ எதாவது வாங்கி கொடுத்தா பூரிச்சு போயிருவான். அவன் கிட்ட இருந்து உன்னை பிரிச்சிருந்தா கண்டிப்பா என் பேரன் ஒன்னும் இல்லாம தான் போயிருப்பான் தாயி”

 

….

 

“அதனால தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொன்னேன். என் கண்ணு மூடுறதுக்குள்ள உங்களை ஒன்னு சேத்து பாக்கணும்னு நினைச்சேன். ஆனா உன் மாமன் ஒத்துக்கல. அப்ப தான் உனக்கு புடிச்சிருக்குறதை சொன்னேன். நரேனுக்கு பிடிக்க வேண்டாமான்னு கேட்டான். அப்ப தான் சரி அவனுக்கு புடிச்ச பொண்ணை சொல்ல சொல்லுன்னு உன் மாமா கிட்ட சொல்லி விட்டேன். ஆனா நரேன்  கண்டிப்பா எந்த பொண்ணையும் கட்டிக்க நினைக்க மாட்டான்னு எனக்கு தெரியும். அவன் உன்னை விரும்புறேன் அப்பு. அவனுக்கு கொஞ்சம் மாறுறதுக்கு அவ காசம் கொடுக்கலாம்ல கண்ணம்மா?”

 

“அப்படி தான் பாட்டி நானும் அவன் கிட்ட சொன்னேன். அவனும் மாற கொஞ்ச நாள் ஆகும்னு தான் சொன்னான். ஆனா ரெண்டு நாளா படுத்தி எடுக்கிறான் பாட்டி. மேல வந்து விழுறான். முழிச்சு பாக்குறேன். நெஞ்சுல முகம் புதைச்சு தூங்கிட்டு இருக்கான். அதுவும் வாசனைக்காக வந்தேன்னு சொன்னானா? கடுப்புல இருந்தேன். அப்ப வந்து”, என்று ஆரம்பித்து சுதாகர் பற்றிய விவரங்களையும் அதன் பின் வந்த சண்டையையும் கூறினாள்.

 

பொறுமையாக அனைத்தையும் கேட்டாள் பாட்டி. “அந்த சுதாகர்  கெட்டவன்னா நரேன் சாதாரணமா சொன்னா கூட நான் கேட்டுக்குவேன் பாட்டி.  ஆனா சண்டை போடுற மாதிரி சொல்றான். அவனுக்கு எவ்வளவு கோபம் வந்ததுன்னு நினைச்ச? அதான் பெரிய சண்டை வந்துட்டு”, என்று முடித்தாள் அபர்ணா.

 

“நீ சொன்னியே ஒரு பொண்ணு அவன் மேல விழுந்தான்னு. அவ உன் புருஷன் மேல ஆசை வச்சி உன் கண் முன்னாடியே நரேனை ரசிச்சு பாத்துட்டு இருந்தா பொறுமையா இங்க இருந்து போங்கன்னு நரேன் கிட்ட  சொல்லுவியா? இல்லை தர தரன்னு அவனை இழுத்துட்டு வருவியா அப்பு?”

 

“என் நரேனை அவ எப்படி பாக்கலாம் ? அதனால தர தரன்னு இழுத்துட்டு தான் வருவேன்”, என்று முடிக்கும் போதே அவனுடைய கோபத்துக்கும் விளக்கம் அவளுக்கு  புரிந்தது.

 

“என்ன அப்பு புரிஞ்சுதா அவன் கோபத்துக்கான காரணம்? நட்புல பொறாமை இருக்காது. ஆனா பொறாமை இல்லைன்னா காதல் அழகா இருக்காது அப்பு”

 

“ஹ்ம்ம் புரியுது பாட்டி இப்ப. சந்தோஷமாவும் இருக்கு. ஆனா அவன் எப்ப இதை உணருறது?”

 

“நீ தான் உணர்த்தனும்?”

 

“நானா?”

 

“ஆமா நீ தான் அவனுக்கு உணர்த்தனும். அவன் காதலை அவனே உணரும் படி செய். முதலில் ஊருக்கு கிளம்பு. கொஞ்ச நேரத்துல பஸ் னு உன் மாமா  சொன்னான். என்னோட கணிப்பு சரியா இருந்தா நரேனே உன்னை தேடி வருவான். அப்ப நாலு போடு. சண்டை சரியா போயிரும்.”

 

“சரி பாட்டி”, என்று கூறி கொண்டே குளிக்க சென்றாள் அப்பு.

 

குளித்து முடித்து கிளம்பி சிவகாமி சிவ பிரகாசத்திடம் சொல்லி விட்டு இருவரும் ஒரு ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் கிளம்பிய பிறகு ஒரு ஆட்டோவில் வீட்டுக்குள் நுழைந்தான் நரேன்.

 

அவனை பார்த்து தலையில் அடித்து கொண்டாள் சிவகாமி.

 

தொடரும்…..

 

Advertisement