Advertisement

அத்தியாயம் 11
நரேனோ  ராகுல் அருகில் வந்தது கூட தெரியாமல் பிரம்மை பிடித்து நின்றிருந்தான். “அபர்ணா மனதில் இவ்வளவு உள்ளதா? என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது.
நரேன் மனநிலை அறியமால் “டேய் மச்சான்”, என்று அழைத்தான் ராகுல்.
ஆனால் நரேனோ அவனை கவனிக்கவே இல்லை.
“டேய் நரேன் உன்னை தான் கூப்பிடுறேன்.  காது கேக்குதா? இல்லையா??”
….
“பரதேசி”, என்று சொல்லி கொண்டே நரேன் முதுகில் ஒரு அடி வைத்தான் ராகுல்.
அதிர்ச்சியில் வெளி வந்தவன்  போல ராகுலை பார்த்த நரேன் “டேய் மச்சான் நீ எப்ப வந்த?”, என்று கேட்டான்.
பல்லை கடித்த ராகுல் “இவ்வளவு நேரம் கரடியா கத்துறேன். நீ எப்ப வந்தனு கேக்குற? என்ன டா ஆச்சு?”, என்று கேட்டான்.
“நீ மனுசனா கத்தி இருந்தா  காது கேட்டிருக்கும் டா. நீ கரடியா கத்துனா எப்படி கேக்கும்?”, என்று கேட்டான் நரேன்.
“ஜோக்கு? உனக்கு எல்லாம் அப்பு தான் டா சரி வருவா. சரி சொல்லு. என்ன விஷயம்?
“அப்பு என் கூட சண்டை போட்டுட்டா”, என்று சோகமாக சொன்னான் நரேன்.
“உங்களுக்கு வேற வேலை கழுதையே இல்லையா டா? கல்யாணத்தை பண்ணுனோமா, சந்தோசமா இருந்தோமா, பிள்ளையை பெத்து  அதுகளை படிக்க வச்சோமான்னு இல்லாம எப்ப பாத்தாலும் செல்ல சண்டை போட்டுக்கிட்டு சே”
“இது செல்ல சண்டை இல்லை டா. பெரிய சண்டை. சரி விடு. நான் அதை சரி பண்ணிக்கிறேன். ஆமா நீ என்ன இந்த நேரத்துல?”
“பிரியாணி கடன் வாங்க வந்தேன் டா”
“பிரியானியா?”
“ஆமா டா எங்கயோ வாசம் வந்தது”
“நாயா டா நீ? மோப்பம் பிடிச்சிட்டு அலையுற?  பழய சொத்துக்கு கூட இன்னைக்கு வழி இல்லை”
“அது தான் தெரியுமே. அப்பு ரசம் தான் இருக்குனு சொல்லிட்டா. நான் இன்னைக்கு எங்க அம்மா வச்ச  சாம்பாரையே சாப்பிட்டுக்குறேன். ஆனா பிரியாணி யார் வீட்டிலனு தான் தெரியலை. சரி கேக்கணும்னு நினைச்சேன். ஆமா நீ எதை மோப்பம் பிடிச்ச?”, என்று கேட்டான் ராகுல்.
அதிர்ச்சியாக அவனை பார்த்த நரேன்  “என்ன டா உளறுற?”, என்று கேட்டான். “நான் அப்புவை  மோப்பம் புடிச்சது இவனுக்கு தெரிஞ்சிட்டா?”, என்று யோசித்தான் நரேன்.
“இல்லை அப்பு கோபமா போகும் போது நாம ரெண்டு பேரும் எதுல ஒத்துமையா இருக்கோமோ இல்லையோ மோப்பம் பிடிக்கிறததுல ஒத்துமையா இருக்கோம்னு  சொன்னா. அதான் கேட்டேன்”
“ஓ அதுவா? அதை அப்புறம்  சொல்றேன். இப்ப வெளிய போய் சரக்கு அடிக்கலாமா ?”
“டேய்  லூசு நரேன். அவ சண்டை  போட்டுட்டு ஊருக்கு போறேன்னு சொல்றா. நீ சரக்கு அடிக்க கூப்பிடுற?”
“அவ கிடக்கா. அவளை பத்தி யோசிக்க தான் மச்சி  சரக்கு அடிக்கணும். போகலாமா?”
“அவளுக்கு டிக்கட்  போட சொன்னா நரேன். அதுவும் ஏ. சி பஸ்ல”
“திமிரை  பாத்தியா அவளுக்கு? இந்த ரணகளத்துலயும் ஏ. சி பஸ் வேணுமாம். அதெல்லாம் அவ ஊருக்கு போக மாட்டா. கொஞ்ச நேரத்தில் கோபம் அவளுக்கு போய்ரும். அவ கிட்ட மனசு விட்டு பேசணும் டா. அதுக்கு தான் சரக்கு அடிக்க கூப்பிடுறேன். இனி அவ கிட்ட சண்டையே  போட மாட்டேன். இன்னைக்கு தான் லாஸ்ட்”
“சரி வா போலாம். எப்படியோ எங்க அம்மா சாம்பார்ல  இருந்து தப்பிச்சா சரி. அவ கிட்ட சொல்லிட்டு வா. நான் பைக் எடுக்குறேன்”
“அதெல்லாம் அவ கிட்ட வந்து சொல்லிக்கலாம்”
“கோப பட போறா நரேன். நான் போய் சொல்லிட்டு வரவா?”
“போ, ஆனா அங்க பாரு”, என்று அங்கு சில்லு சில்லாக சிதறி கிடந்த பிளவர்வாசை காட்டினான் நரேன்.
“என்ன டா?”, என்று புரியமால் கேட்டான் ராகுல்.
“இப்ப நீ அவ கிட்ட பேச போனா உன் மண்டை உடஞ்சாலும் உடையும் மச்சான். அவ்வளவு கோபத்துல இருக்கா. அதான் சொல்றேன்”
“எதுக்கு வம்பு வா போகலாம்?”, என்று ராகுல் சொன்னதும் இருவரும் வெளியே சென்று விட்டார்கள்.
உள்ளே சென்ற அபர்ணாவுக்கோ கோபம் கொந்தளித்தது.
“இதுவரை அப்படி இருந்தது கூட பரவால்ல. ஆனா இன்னைக்கு அவ்வளவு பேசுறேன். மரம் மாதிரி நிக்குறான். ஒரு பேச்சுக்கு கூட சாரி சொல்றானா?”, என்று நினைத்து வாய் விட்டே திட்டியவளுக்கு  சிறிது கோபம் மட்டு பட்டது.
“ராகுல் போன அப்புறம் உள்ள  வருவான். வந்து சாரி சொல்லுவான். பேசுவான். அவன் கிட்ட எவ்வளவு நேரம் பேசாம இருக்குறதது?”, என்று யோசித்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
அரை மணி நேரம் ஆகியும் எந்த அரவமும் இல்லாததால் “சரி பீலிங்ஸ்ல இருக்கான் போல?”, என்று நினைத்து கொண்டு மெதுவாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
வெளியே அவன் இல்லை. அவனுடைய அறையும் திறந்தே கிடந்தது. அவன் செருப்பும் இல்லை என்றவுடன் போன கோபம் மறுபடியும் வந்து விட்டது. எரிச்சலோடு அறைக்கு சென்றவள் தன்னுடைய பேகை எடுத்து தேவையானவற்றை உள்ளே வைத்தாள்.
“என்னை மதிக்காம போய்ட்டான்ல? எனக்கும் அவன் ஒண்ணும் வேண்டாம்”, என்று கண்ணீருடன் புலம்பி கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்தவள் பணத்தையும் எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள்.
கதவை பூட்டும் போதும் அவன் இன்னொரு சாவி கொண்டு போயிருக்கான் என்று உறுதி படுத்தி கொண்டு தான் கதவை பூட்டி விட்டு சென்றாள்.
அவள் போன நேரம் ஏ. சி  பஸ் கிடைக்காமல் சாதாரண பேருந்தே  கிடைத்தது. “சே இன்னைக்கு நேரமே சரி இல்லை”, என்று  மனத்தில் திட்டி கொண்டு டிக்கட் எடுத்து கொண்டு அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சரக்கு அடிக்க போன நரேனும், ராகுலும்  அங்கு இருந்த கூட்டத்தை பார்த்து விட்டு “வாங்கிட்டு வீட்டுக்கு போய்ரலாம்”, என்று நினைத்து இரண்டு பீரும், பிரியானியும், அப்புவுக்கு இட்லியும் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். அப்போது அப்பு அமர்ந்திருந்த பஸ்  அந்த பஸ் ஸ்டாண்டை விட்டு கிளம்பி கொண்டிருந்தது.
வீட்டுக்கு வந்த நரேன் பூட்டி இருந்த கதவை பார்த்து திகைத்தான்.
“எங்க டா அப்புவை  காணும்?”, என்று கேட்டான் ராகுல்.
“தெரியலையே மச்சான். ஐயோ கோப பட்டு  அவளே ஊருக்கு போய்ட்டா போல டா ராகுல்?”, என்று சொல்லி கொண்டே கதவை திறந்து உள்ளே சென்றான்.
“எருமை. சொன்னேன்ல அப்பவே? அவ கிட்ட சொல்லிட்டு வான்னு. எங்க இருக்கானு போன் பண்ணி கேளு டா”
“ஹ்ம் சரி”, என்று போனை போட்டவனுக்கு பயம் தொற்றி கொண்டது. அவள் அந்த பக்கம் போனை எடுக்கவே இல்லை.
“அவ எடுக்க மாட்டிக்கா ராகுல். எங்க போனான்னு தெரியலையே”, என்று புலம்பும் போதே அவன் கையில் டேபிள் மீதிருந்த பேப்பர் தெரிந்தது. அவசரமாக அதை எடுத்தான் நரேன்.
“என்னை நீ புரிஞ்சிக்கவே இல்லைல? நீ எனக்கு வேண்டவே வேண்டாம் போடா. எனக்கு அத்தை, மாமா பாக்கணும் போல இருக்கு. நான் போறேன் போ”, என்று எழுதி இருந்தாள் அபர்ணா.
அதை படித்து அவள் ஊருக்கு தான் போகிறாள் என்று நினைத்து நிம்மதி வந்தது நரேனுக்கு. “ஊருக்கு தான் போறா ராகுல். நான் தான் என் அப்புவை விரட்டிட்டேன்”, என்று புலம்பி கொண்டே அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தான்.
“என்ன தான் டா சண்டை ரெண்டு பேருக்கும்?”, என்று கேட்டு கொண்டே நரேன் எதிரில் அமர்ந்தான் ராகுல்.
“அது… அது… அதுவந்து…?”, என்று இழுத்தான் நரேன்.
“மாயா விசயத்துல தான் மறுபடி எதாவது சண்டையா?”
“அதெல்லாம் இல்லை டா. அந்த மாயா எல்லாம் கணக்கே இல்லை. இது வேற?”
“வேறன்னா? என்னனு சொன்னா தான தெரியும்?”
“எப்படி சொல்லனு தான் தெரியலை டா”
“சரி சொல்ல முடியலைன்னா, தனியா உக்காந்து எது சரி எது தப்புனு யோசி. அப்புறம் உனக்கே விடை கிடைக்கும்”
“இப்பவே விடை தெரியும். தப்பு எல்லாம் என் மேல தான்”
“அப்புறம் என்ன அவ கிட்ட மன்னிப்பு கேளு. அவ காலுல விழுந்தாலும் தப்பு இல்லை மச்சான். பிரச்சனையை சரி பண்ணு”
“ஹ்ம்ம் மன்னிப்பு கேக்கணும். ஆனா எப்படினு தான் தெரியலை”
“கொன்னுருவேன் டா உன்னை. என்ன பிரச்சனைன்னு கேட்டாலும் எப்படி சொல்ல தெரியல சொல்ற. மன்னிப்பு கேளுன்னு சொன்னாலும் அதையே சொல்ற? என்ன தான் டா உன் பிரச்சனை?”
“நான் தான் பிரச்சனை”
“நீயா? உனக்கு என்ன?”
“அன்னைக்கு கேட்ட மாதிரி எனக்கு தான் சரியா ஹார்மோன் வேலை செய்யலை போல டா?”, மனதில் இருப்பதை வெளிப்படையாக ராகுலிடம் கொட்ட ஆரம்பித்தான் நரேன்.
“லூசு அது நான் விளையாட்டுக்கு சொன்னது. அப்படியே சொன்னாலும் நீ தான் அப்பவே அப்பு மேல அந்த பீல் வரலைன்னு சொன்னா தான? நீ சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்ததுனால அப்படி இருக்கு டா. கொஞ்ச நாள் போச்சுன்னா சரி ஆகிரும். அவ கூட நிறைய நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு டா. உனக்கே வித்தியாசம் தெரியும். சரி இப்ப அதனால என்ன சண்டை? நீ அவளை லவ் பண்ண மாட்டிக்கன்னு அவ கோப படுறாளா? “
“கிட்ட தட்ட அப்படி தான்”
“கிட்ட தட்டன்னா? மாயா விசயத்துல நீ அவளை விரும்புறேன்னு அப்பு எதாவது சந்தேக படுறாளா?”
“ப்ச் அது இல்லை டா”
“என்ன விஷயம்னு சொல்லி தான் தொலையேன் டா எருமை மாடு”
“சொன்னா நீ சிரிப்ப”
“என்னது சிரிப்பனா? என் உயிர் நண்பன் நீ. அப்பு என் தங்கச்சி. நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு பீல் பண்ணிட்டு இருக்கீங்க? அப்ப எப்படி டா சிரிப்பேன்? பிரச்சனையை சரி பண்ண தான் நினைப்பேன்”
“அதை நான் என்ன விஷயம்னு சொன்ன அப்புறம் முடிவு பண்ணு”
“ம்ம் சொல்லு”
“எனக்கு ஒரு வித்தியாசமான வியாதி இருக்கு”
“என்னது வியாதியா? என்ன டா உளறுற? எய்ட்ஸ் மாதிரி ஏதாவதா?”
“அட ச்சீ வாயை கழுவு டா பரதேசி. கட்டுன பொண்டாட்டியை தொட கூட முடியாம உக்காந்துருக்கேன். நீ வேற?”
“அந்த அர்த்தத்துல கேக்கல. சரி அதை விடு. என்ன வியாதி? ஒரு வேலை உனக்கு கேன்சரோ? அதனால அப்புவை விட்டு பிரிஞ்சி இருக்கியோ?”
“விளங்காதவனே, உனக்கு நல்ல வார்த்தையே வராதா? ரொம்ப படம் பாத்து கெட்டு  போய்ட்டே மச்சான்”
“ஏண்டா இப்படி என்னை கடுப்பேத்துற? நீயாவே என்னனு சொல்லு டா. என்னோட சின்ன இதயம் எவ்வளவு நேரம் தான் நீ பண்ற கொடுமையை தாங்கும் சொல்லு?”
“அது அது வந்து எனக்கு ஒரு மோப்ப வியாதி இருக்கு டா”
“என்னது மோப்ப வியாதியா? என்ன டா உளறுற? ஒரு படத்துல விவேக் எல்லாரோட மனசுல நினைக்கிறதையும் சொல்லுவாரே? அதே மாதிரி வியாதியா? தெரியா தனமா கண்ணு முன்னாடி இருக்குற பிரியாணியை சாப்பிட விடாம நீ மொக்கை போடுறேன்னு சொல்லி எருமை, குரங்கு, கரடின்னு மனசுக்குள்ள உன்னை திட்டிட்டேன் டா. அதுவும் உனக்கு கேட்டுருச்சா? என்னை மன்னிச்சிரு மச்சான்?”, என்று உண்மையை உளறினான் ராகுல்.
அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்த  நரேன் “அது இல்லை டா பரதேசி”, என்றான்.
“ஓ அப்ப நானா தான் வாய் கொடுத்துட்டேனா? இது தான் சனியனை தூக்கி பனியன்ல போடுறது? சரி சரி நீ தயவு செஞ்சு விசயத்தை சொல்லிரு மச்சான். என்னால முடியலை”
“எனக்கு எதாவது புடிக்காத ஸ்மெல்லை மோந்து பாத்துட்டேன்னா, அந்த ஸ்மெல் இருந்துட்டே  இருக்கும். எனக்கு புடிச்ச ஸ்மெல்லை மோந்து பாக்குற வரைக்கும் அது போகவே போகாது”, என்று தயக்கத்துடன் கூறினான் நரேன்.
“ஹா ஹா. என்னால முடியலை டா. இப்படி ஒரு வியாதியா? ஹா ஹா”, என்று விழுந்து விழுந்து சிரித்தான் ராகுல்.
“நான் சொன்னேன்ல நீ சிரிப்பேன்னு”
“இரு டா. கொஞ்ச நேரம் சிரிச்சிக்கிறேன். நீ என்னை விட மோசம் டா. ஹா ஹா. சரி சிரிக்கல. நீ விசயத்தை சொல்லு மச்சான்”
“ஹ்ம்ம், அன்னைக்கு அப்புக்கு வயிறு வலிச்சதுன்னு சொன்னேன்ல?”
“ஆமா, அடுத்த நாள் கூட லீவு போட்டு பாத்துக்கிட்டியே டா”
“ஹ்ம்ம், அன்னைக்கு அவ நெஞ்சுல சாஞ்சு தூங்குனேன் டா”
“டேய் சென்சார் போட்டு கதையை சொல்லு டா”
“ப்ச் நீ வேற? பிரச்சனையே அது தான்”
“சரி சரி சொல்லு”
“அப்ப அவ வாசனை எனக்கு புடிச்ச வாசமா மாறிட்டு”
“ஓ உன் மோப்ப சக்தியை தூண்டி விட்டுட்டா போல? மேல சொல்லு”
“ஹ்ம்ம் அப்புறம் அன்னைக்கு மாயா என்கிட்ட நடந்து கிட்டதை சொன்னேன்ல?”
“ஆமா, என்ன தான்  டா சொல்ல வர? அப்பு மேல நீ சஞ்சதை சொல்ற. உன் மேல மாயா சாஞ்சதை  சொல்ற? முடிவா என்ன சொல்ல வர?”
“பொறுமையா கேளு டா எருமை மாடு”
“சரி சரி சொல்லு சொல்லு”
“அந்த மாயா சனியன் மேல விழும் போது அது வாடை என் மேல ஒட்டி கிச்சு”
“ஓ புரிஞ்சது புரிஞ்சது. புடிக்காத வாசனையை மறக்க புடிச்ச வாசனையை தேடிருக்க சரியா?”
“ம்ம். அதுக்கு தான் அப்பு கோப பட்டுட்டா”
ராகுலுக்கு அனைத்தும் விளங்கியது. நண்பனின் மனநிலை அவனுக்கு ஏற்கனவே தெரியும். இப்போது அப்புவின் மனநிலையும் விளங்கியது. மேலும் நரேனை சொல்ல சொன்னான்.
“இனி அப்படி செய்ய மாட்டேன்னு சாரி சொன்னேன் மச்சான். ஆனா கோபமா தான் இருந்தா. அப்புறம் ஆபிஸ்ல இருந்து வந்து அவளை சமாதானம் செய்யணும்னு அவ டேன்ஸ் கிளாசுக்கு போறேன். அங்க ஒரு பொறுக்கி உக்காந்து இவ ஆடுறதை ரசிச்சு பாத்துட்டு இருக்கான்?”, என்றான் நரேன்.
“இது யாரு புது ஆள்? எவன் டா அது?”
“அந்த நாய்க்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு டேன்ஸ் கத்து கொடுக்க தான் வந்திருக்கு. அது தப்பு இல்ல மச்சான். அவன் அப்புவை பார்த்த பார்வையை பாக்கணுமே. எனக்கு இப்ப நினைச்சாலும் பத்திகிட்டு வருது. ஒரு பொண்ணை எப்படி பாக்குறானு நமக்கு தெரியாதா சொல்லு?”
“ம்ம், மேல சொல்லு நரேன்”
“அவன் பொண்டாட்டி செத்து போய்ட்டாளாம். அவன் பிள்ளைக்கு டேன்ஸ் சொல்லி கொடுக்க அப்பு அவன் வீட்டுக்கு போகணுமாம். இவளும் வரேன்னு அவன் கிட்ட சொல்லிருக்கா. நான் அதெல்லாம் வர மாட்டான்னு சொல்லிட்டேன். அவளும் அவன் கிட்ட வேற ஸ்கூல் பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டா மச்சான்”
“அப்புறம் என்ன டா?”
“அப்புறம் ஒன்னும் இல்ல. ஆனா நான் அந்த நாய் கிட்ட இண்டீசண்டா நடந்துக்குறேன், டேன்ஸ் சொல்லி கொடுக்க விட மாட்டிக்கேன்னு சண்டை போட்டா. அதை தான் வீட்டுக்கு வந்து அவளுக்கு புரிய வச்சேன். ஆனா அவ நீ யாருனு கேக்குற மாதிரி கேட்டுட்டா மச்சான்”
“ஓ”
“என்ன ஓ?”
“ஒன்னும் இல்ல நீ சொல்லு”
“என்னை தான் நீ லவ் பண்ணலை? நமக்குள்ள கல்யாணம் நடந்திருக்க கூடாது. நீ அந்த மாயாவை கட்டிருக்கணும். ஆச்சு போச்சுன்னு திட்டிட்டா?”
“அவ கேட்டதுல என்ன தப்பு நரேன்?”
“ராகுல்?”
“அவ மேல உனக்கு லவ் இல்லை. லவ் இல்லாம பொண்டாட்டியா மட்டும் அவளை பாக்க முடியாம தள்ளி இருக்குற? சரி அப்ப பிரென்ட் மாதிரி நினைச்சு  ஒழுங்கா இருந்துருக்கணும். மோப்பம் பிடிக்கிறேன்னு பேர்ல அவளோட உணர்ச்சியோட விளையாடிருக்க. நான் தெரியாம தான் கேக்குறேன். உன்னோட பிரென்ட் தான அபர்ணா, அவ எவன் கிட்டயோ பேசுனா உனக்கு ஏன் கோபம் வருது? பேசாம அவனுக்கே நீ உன் பொண்டாட்டியை கட்டி வச்சிரேன். அவனும் ரெண்டாந்தாரம். அப்புவும் ரெண்டாந்தாரம்”, என்று ராகுல் சொல்லி வாயை மூடும் முன் அவன் கன்னத்தில் அறைந்திருந்தான் நரேன்.
“என்னை எதுக்கு டா அடிக்கிற?”
“சாரி ராகுல் ஆனா நீயும் அப்படி பேசியிருக்க கூடாது”
“ஹ்ம்ம் தெரியும். நான் பேசுனது தப்புனு. ஆனா நீ இப்ப பண்ணிட்டு இருக்குறது தப்புனு எப்ப டா புரிஞ்சிக்க போற? நான் என்னோட லவ்வரை காமமா ஒரு பார்வை பாத்தாலே அதை தாங்க முடியாம தலை குனிவா. அப்புவோட நிலைமைல இருந்து யோசி டா”
“எனக்கும் அது புரிஞ்சது. இப்ப அதை தான் யோசிச்சேன். ஆனா…?”
“என்ன ஆனா? காதல் வரலைன்னு சொல்ல போறியா? அப்பு அப்புனு பின்னாடி சுத்திகிட்டு அவளை உள்ளங்கையில்  வச்சு தாங்குறியே? அது லவ்னு உனக்கு ஏன் புரியலை? எவனோ ஒருத்தன் அவளை ஆசையா பாத்தா பொறாமை பட்டு பொங்குறியே? அது காதல் தான்னு உனக்கு எப்ப புரிய போகுது?”
“ராகுல்”, என்று அதிர்ச்சியாக அழைத்தான் நரேன்.
தொடரும்…..

Advertisement