Advertisement

அத்தியாயம் 10
அடுத்து அவனும் கிளம்பி ராகுலுடன் ஆஃபீஸ் சென்றான். அவனிடம் ஓடி வந்து பேச வந்தாள் மாயா.
“வந்துட்டா, இப்ப இவனை கூட்டிட்டு போனுமே”, என்று நினைத்து கொண்டு “எங்க கூப்பிடலாம்?”, என்று ராகுல்  யோசிக்கும் போதே “வா மச்சான் கேன்டீன் போகலாம்”, என்று அழைத்தான் நரேன்.
ஆச்சரியமாக நரேனை பார்த்தான் ராகுல். முகம் சுண்டி போய் நரேனை பார்த்தாள் மாயா.
“நரேன்”, என்று பக்கத்தில் வந்து அழைத்தாள் மாயா. “இனி ஒரு தடவை என்கிட்ட பேச முயற்சி செஞ்ச, மரியாதை கெட்டு போயிரும் பாத்துக்கோ. வா ராகுல் போகலாம்”, என்று சொல்லி நடந்து விட்டான் நரேன்.
ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டு கொண்டு அவன் பின்னே சென்றான் ராகுல்.
பின் இருவரும்  அவர்களுடையே சீட்டில் அமர்ந்து வேலையை தொடர்ந்தார்கள். மதியம் சாப்பாடு வேளையில் “நான் சாப்பாடு எடுத்துட்டு வரலை டா. கேன்டீன்ல  தான் சாப்பிடணும்”, என்றான் நரேன்.
“சரி அப்ப அங்க போய் வாங்கி என்னோடதையும் சேத்து சேர் பண்ணி சாப்பிடலாம் வா”, என்று ராகுல் சொன்னவுடன் இருவரும் சாப்பிட சென்றார்கள்.
“ஆமா நீ இன்னைக்கு எதுக்கு சாப்பாடு கொண்டு வரலை? அப்பு சூப்பரா செஞ்சு கொடுப்பாளே? இன்னைக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான் ராகுல்.
“அவ என் மேல கோபமா கிளம்பி போய்ட்டா டா”
“அட பாவிகளா, எப்ப தான் டா சண்டை போடுறதை விடுவீங்க?”
“அதெல்லாம் ஜாலியான சண்டை டா. ஆனா இன்னைக்கு ரொம்ப கோபமா போய்ட்டா”
“அப்படி நீ என்ன செஞ்ச? மாயா விசயத்துல சண்டையா? எதுக்கு கேக்குறேன்னா, இன்னைக்கு  மாயாவையும் ரைட் விட்டியே அதான்”
“கிட்ட தட்ட  அவ தான் காரணம்”
“தெளிவா சொல்லு நரேன் “
லிப்ட்டில்  மாயா தன்னிடம்  நடந்து கொண்டதை சொன்னான் நரேன்.
“சே அவ இப்படி செய்வானு நான் நினைக்கவே இல்லை டா. இதுக்கு தான் முன்னாடியே அவ கிட்ட கவனமா இருன்னு சொல்வேன். அப்பு கோப பட்டது தப்பே இல்லை டா”, என்றான் ராகுல்.
“அவ கோப பட்டது அதுக்கு இல்லை டா  ராகுல்”
“பின்ன?”
“அது….அது வந்து…”
“என்ன ஆச்சு நரேன்? என்ன சண்டை?”
“அது அது வந்து, நீ பேசாம அந்த மாயாவையே  கல்யாணம் பண்ணிருக்கலாம்ன்னு சொன்னாளா? அதான் கோபத்துல அடிச்சிட்டேன்”, என்று பொய் சொல்லி சமாளித்தான் நரேன். ஏனோ ராகுலிடம், அபர்ணா நெஞ்சில் சாய்ந்து தூங்கியதை சொல்ல மனதில்லை நரேனுக்கு.
மனைவியுடனான அந்தரங்கமான விசயத்தை நண்பனிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் அது காதல் தான் என்று இந்த மக்கு நரேனுக்கு யார் புரிய வைப்பது?
“ஓ, அப்ப அவளை அடிக்க வேண்டியது தான். ஆனா எனக்கு ஒரு சந்தேகம் டா. நீ கொடுத்த அடியை அவ வாங்கி கிட்டாளா? பதிலுக்கு பல அடிகளை கொடுத்திருப்பாளே?”, என்று சிரித்தான் ராகுல்.
“இதுக்கு என்ன பதில் சொல்ல?”, என்று தெரியாமல் முழித்தான் நரேன்.
“சரி விடு. அவ கிட்ட மன்னிப்பு கேட்டு சமாதான படுத்து”
“ஹ்ம் ஆமா டா, சாயங்காலம் போய் பேசணும்”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அன்று ஏழு மணிக்கே அவளை சமாதான படுத்த  அவளுடைய டேன்ஸ் ஸ்கூலுக்கு சென்றான். காரை வெளியவே நிறுத்தி  விட்டு, உள்ளே சென்றான்.
“அப்புவோட  டேன்ஸ் பாக்கணும். பாத்து ரொம்ப நாள் ஆச்சு”, என்று நினைத்து கொண்டே சென்றவனுக்கு அங்கே பார்த்த காட்சியில் உடம்பெல்லாம் எறிந்தது.
அவன் நினைத்த படியே அபர்ணா   பிள்ளைகளுக்கு டேன்ஸ் தான் சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள். ஆனால் அவள் ஆட்டத்தை எதிரே ஒருவன் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தான். அதை பார்த்து நரேனுக்கு எறிந்தது.
அங்கே இருந்த சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து, அவள் அவனுக்காகவே ஆடுவதை போல ரசித்து கொண்டிருந்தான் ஒருவன்.
“எதோ ஒரு நாயி உக்காந்துருக்கு. இவ அவன் முன்னாடி ஆடலாமா?”, என்று எரிச்சலாக வந்தது நரேனுக்கு. தூரத்தில் நின்றே அவனை பார்த்தான் நரேன். அந்த புதியவன் பணக்கார தனமாக இருந்தான். ஏதோ அந்த காலத்தில் அவையில் பெண்களை ஆட விட்டு சிங்காசனத்தில் ராஜா அமர்ந்து வேடிக்கை பார்ப்பது போல இருந்தது அந்த புதியவனின் செயல்.
அபர்ணா அரங்கேற்றம் செய்யும் போது பல ஆண்கள் பார்த்திருக்கிறார்கள் தான். அவள் ஆட்டத்தை தன்னை தவிர வேறு யாருமே பார்க்க கூடாது என்று நினைக்கும் ரகம் அல்ல நரேன்.
அந்த டேன்ஸ் ஸ்கூல் ஐடியா சொன்னதே நரேன் தான். அப்படி பட்டவனுக்கு தான் அந்த புதியவனை பார்த்து கடுப்பாக இருந்தது. அது எதனால் என்று யோசிக்கும் போது தான், அந்த பணக்காரன் முகத்தில் ஒளிந்திருந்த வஞ்சகம் கண்ணில் தெரிந்தது. அவன் பார்வை அவளை பார்க்கும் போது அது அவளுடைய நடனத்தை ரசிப்பது போல இல்லை. அவளையே ரசிப்பது போல தான் இருந்தது.
அந்த பார்வையை எளிதாக இனம் கண்டு விட்டான் நரேன். ஒரு அழகான பெண்ணை ரசித்து பார்ப்பதற்கும், காம பார்வைக்கும் ஒரு ஆண்மகனாக அவனுக்கு வித்தியாசம் தெரியாதா என்ன?
பார்த்த ஒரு நிமிடத்தில் அந்த புதியவனின் குணத்தை எளிதாக அடையாளம் கண்டு கொண்டான்.
அதுக்கு மேல் அதை தாங்க முடியாமல் அவர்களை நோக்கி சென்றான். அப்போது தான் ஆட்டத்தை முடித்து விட்டு குழந்தைகளிடம் சிரித்த முகமாக பேசி வழி அனுப்பி கொண்டிருந்தாள் அபர்ணா.
குழந்தைகள் சென்றவுடன் அந்த புதியவன் அருகில் அபர்ணா செல்லும் போது நரேனும் அங்கே சென்று விட்டான்.
“உங்க டேன்ஸ் பார்த்து நான் மெய் மறந்துட்டேன் மிஸ் அபர்ணா”, என்றான் அபர்ணா.
அவள் பதில் சொல்வதுக்குள் “அவள் மிஸ் அபர்ணா இல்ல. மிஸ்ஸஸ் அபர்ணா நரேந்திரன்”, என்று இறுக்கமான குரலில் சொன்னான் நரேன்.
“என்னது அபர்ணாவுக்கு கல்யாணம் ஆகிட்டா? என்னால நம்பவே முடியலையே”, என்று கேட்டான் அந்த புதியவன். அதுக்கு அவனை பார்த்து சிரித்த அபர்ணா “ஆமா சுதாகர். எனக்கு கல்யாணம் ஆகிட்டு. இவர் தான் என் வீட்டுக்காரர்”, என்று அவனிடம் சொல்லி விட்டு “நரேன், இது சுதாகர். இவரோட பொண்ணு இங்க தான் டேன்ஸ் கத்துக்க போறா. அதை பத்தி விசாரிக்க தான் வந்திருக்கார்”, என்றாள்.
அந்த சுதாகரை பார்த்து பேருக்கு கூட நரேன் சிரிக்க வில்லை. அதை பார்த்து அவனை வித்தியாசமாக பார்த்தாள் அபர்ணா.
ஆனால் காரணம் தான் புரிய வில்லை. “ஒரு வேளை இன்னைக்கும் எவளாவது கட்டி புடிச்சு வாசனையை கொடுத்துட்டாளா? அதுக்கு தான் கட்டி பிடிக்க வந்து இப்படி சுதாகர் கிட்ட சிடு சிடுன்னு விழுறானோ? இன்னைக்கு அப்படி வரட்டும். அவனுக்கு இருக்கு. என்னை பத்தி இவன் என்ன நினைச்சான்?”, என்று நினைத்து காலையில் இருந்த எரிச்சல் மறுபடியும் அவளுக்குள் வந்தது.
“என்கிட்ட சொன்ன தான? ஏற்கனவே இருக்குற பிள்ளைங்களை பாத்துக்க கஷ்டமா இருக்கு. வேற யாரையும் சேக்க போறது இல்லைன்னு”, என்று கேட்டான் நரேன்.
“இவன் கிட்ட நான் இதை எப்ப சொன்னேன்?”, என்று யோசித்த அபர்ணா, அவனை சுதாகர் முன்பு அவமான படுத்த மனதில்லாமல் “அம்மா இல்லாத குழந்தை நரேன். அதான்”, என்று பாவமாக சொன்னாள்.
“அட பாவி இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் என் பொண்டாட்டியை ரசிச்சிட்டு இருக்கானா?”, என்று பல்லை கடித்து கொண்ட நரேனின் கோபம் இப்போது அபர்ணாவிடம் திரும்பியது.
“அதான் சபல புத்தி வந்துட்டு போல”, என்று நினைத்து கொண்டு “ஓ அப்படியா? அப்படின்னா சேத்துக்கோ அபர்ணா”, என்று தாராள மனதுடன் சொல்வது போல சொன்னான்.
ஏதோ பிச்சை போடுவது போல சொன்ன அவன் குரலில் சுதாகர் முகம் கறுத்தது. நரேன் குரலில் இருந்த குத்தலில் அபர்ணாவும் விழித்தாள். அவன் அப்பு என்று சொல்லாமல் அபர்ணா என்று சொன்னதில் நரேன் கோபமாக இருக்கிறான் என்றும் அவளுக்கு புரிந்தது.
“சரி அபர்ணா வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டான் நரேன். “சாரி மிஸ்டர் நரேந்திரன். அபர்ணா எங்க வீட்டுக்கு இப்ப வாரங்க”, என்று சொல்லி அவனை மேலும் வெறி ஏற்றினான் சுதாகர்.
அவன் அப்படி சொன்னதும் அபர்ணாவை பார்த்த நரேன் பார்வையில் தீப்பொறி பறந்தது. அதை உணர்ந்தவள்,  “இந்த சுதாகர் சொல்றதை தெளிவா சொல்லிருக்கலாம்”, என்று நினைத்து கொண்டு “இவரோட பொண்ணுக்கு டேன்ஸ் கத்து கொடுக்க தான் நரேன் அவங்க வீட்டுக்கு போறேன். அவர் பொண்ணை கூட்டிட்டு போய் விட ஆள் இல்லையாம். அதான் இங்க கிளாஸ் ஏழு மணிக்கு, முடிஞ்ச அப்புறம் இவர் வீட்டுக்கு போய் எட்டு மணி வரைக்கும் சொல்லி கொடுக்கலாம்னு நினைச்சிருந்தேன்”, என்று இழுத்தாள்.
நரேனுக்கு பற்றி கொண்டு வந்தது. “சரி போ”, என்று சொன்னால் அவன் எப்படி நரேனாவான்? “சாரி மிஸ்டர் சுதாகர், என் பொண்டாட்டி யார் வீட்டுக்கும்  வந்து சொல்லி தரமாட்டாங்க”, என்று சொல்லும் போது என் பொண்டாட்டி என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்.
அதை எல்லாம் அந்த சுதாகர் கண்டு கொள்ளாமல் “இல்லையே அபர்ணா எங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டாங்களே”, என்று எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான்.
“அது உங்க குழந்தைக்கு அம்மா இல்லையேன்னு அனுதாப பட்டு சொல்லிருப்பாங்க”, என்று இகழ்ச்சி குரலில் சொன்னவன் அபர்ணாவை பார்த்து கொண்டே எனக்கு விருப்பம் இல்லாத காரியத்தை என் பொண்டாட்டி செய்ய மாட்டா”, என்றான்.
அதை உணர்ந்து கொண்டவளுக்கு உள்ளுக்குள்ளே எரிந்தது. அவளுக்கு நரேனுடைய பேச்சும், செய்கையும் சுத்தமாக பிடிக்க வில்லை. அதை உள்ளுக்குள்ளே மறைத்தவள் “சாரி மிஸ்டர் சுதாகர். நரேன்க்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன். நீங்களா எதாவது ஏற்பாடு செஞ்சு, இங்க விடுறதா இருந்தா இங்க சேருங்க. இல்லைனா வேற ஸ்கூல் பாத்துக்கோங்க”, என்றாள்.
அவள் பதிலில் சுதாகர் முகம் அவனமானத்தில் சுருங்கி போனது. நரேன் முகமோ ஒளிர்ந்தது.  
“வா அப்பு வீட்டுக்கு கிளம்பலாம்”, என்று அவள் கையை பற்றிய நரேன் “மனோ தாத்தா, எல்லாரும் இங்க  இருந்து போன பிறகு கதவை பூட்டிட்டு சாவி கொண்டு போயிருங்க”, என்று சொல்லி விட்டு அவளை இழுத்து கொண்டு சென்றே விட்டான்.
உம்மென்று முகத்தை வைத்து கொண்டு அவனுடன் சென்றாள் அபர்ணா. சிறிது தூரம் சென்றவுடன் அவன் கையில் இருந்து கையை உதறி கொண்டாள். தோளை குலுக்கி விட்டு காருக்கு  சென்றான் நரேன். அவள் காரில் முன்னே அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்தவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது. அந்த மௌனத்தை தாங்க முடியாமல் “வெளியே எங்கயாவது சாப்பிட போகலாமா?”, என்று கேட்டான் நரேன்.
“எனக்கு சாப்பிட மூட் இல்லை. வீட்டுக்கு போ”, என்று முகத்தில் அடித்த மாதிரி பதில் சொன்னாள் அபர்ணா.
அவள் பதிலில் போன எரிச்சல் மீண்டும் வந்து விட்டது நரேனுக்கு. “இப்ப எதுக்கு அப்பு இப்படி பேசுற?”, என்று கேட்டான்.
“பின்ன நீ செஞ்ச காரியத்துக்கு பல்லை காட்டி பேசணுமா? எதுக்கு இப்படி அந்த சுதாகரை இன்சல்ட் பண்ற மாதிரி நடந்துக்குற?”
“அவனை நான் இன்சல்ட் பண்ணா உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? அவன் கிட்ட மட்டும் தான் உனக்கு சிரிச்சு பேச வருமோ?”, என்று வார்த்தையை விட்டான்.
அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் அபர்ணா. அவன் மேலும் தொடர்ந்தான். “அவன் மிஸ்ன்னு சொல்றான் நீ பல்லை காட்டிகிட்டு நிக்குற? கல்யாணம் ஆகிட்டுனு சொல்ல வேண்டியது தான?”
“நான் சொல்றதுக்குள்ளே நீ தான டா முந்திகிட்டு பதில் சொன்ன?”
“அப்படி நான் முந்திகிட்டு சொல்லலைனா, நீ பல்லை கட்டிட்டு நின்னுருப்ப? அவன் இன்னும் வழிஞ்சிட்டு நின்னுருப்பான்”
“லூசா டா நீ? நீ பேசுறது சரியே இல்லை நரேன்”
“நான் சரியா தான் பேசுறேன். நீ நடந்துக்குறது தான் சரி இல்லை. அவன் பார்வையை வச்சே அவன் கெட்டவன்னு தெரியுது. நீ அவன் கிட்ட பேசிட்டு இருக்க?”
“நீ எல்லாரையும் சந்தேக பட்டா நான் என்ன செய்ய? உனக்கு தான் இன்னைக்கு கிறுக்கு புடிச்சிட்டு. தாய் இல்லாத குழந்தைக்கு டேன்ஸ் சொல்லி கொடுக்க கூட விடாம நான் புதுசா ஆள் சேக்க மாட்டேன்னு சொன்னேன்னு பொய் பொய்யா சொல்ற?”
“அந்த குழந்தைக்கு சொல்லி கொடுக்க வேண்டாம்னு நான் சொல்லலையே. எல்லாருக்கும் மாதிரி சொல்லி கொடுக்க வேண்டியது தான?”
“அதான் சொன்னேன்ல? கூட்டிட்டு போய் விட ஆள் இல்லைனு”
“அப்பு நீ படிச்சவ தான? உனக்கு அவன் பார்வை புரியலையா? அவன் தப்பானவன் டி. நீ ஆடிட்டு இருக்கும் போது அவன் எப்படி பாத்துட்டு இருந்தான் தெரியுமா? அதனால தான் அவன் உன்னை வீட்டுக்கு கூப்பிடுறான்”, என்று சொல்லும் போது வீடு வந்திருந்தது.
எதையோ சொல்ல வந்தவளை தடுத்தவன் “உள்ள போய் பேசிக்கலாம்”, என்று சொன்னான்.
அடுத்த நொடி விறுவிறுவென்று இறங்கி சென்று விட்டாள் அபர்ணா. காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றான் நரேன்.
அங்கே அவள் செருப்பு அங்கே இங்கே கிடந்தது. “நான் தான் இவ மேல கோப படணும். ஆனா இவ கோப படுறா? அந்த நாய் பத்தி பேசி எங்களுக்குள்ள சண்டை வருது. சே”, என்று நினைத்து கொண்டு கதவை பூட்டி விட்டு உள்ளே சென்றான்.
சோபாவில் அமர்ந்து அவனையே முறைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் அபர்ணா. அவளுடைய  முகபாவமே அவள் சண்டைக்கு தயாராக இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு. அவள் அருகில் போய் அமர்ந்த நரேன் “தேவ இல்லாம பேசி நாம சண்டை போட வேண்டாம் அப்பு. அவன் வீட்டுக்கு எல்லாம் போய் நீ கிளாஸ் எடுக்க வேண்டாம். அவன் பொண்ணு ஸ்கூல் வந்தா சொல்லி கொடு. அதுவும் வராம இருந்தா இன்னும் நல்லது”, என்றான்.
அதில் வெகுண்டவள் “நீ எப்ப இப்படி சுயநலவாதியா மாறின நரேன்? ஒரு சின்ன பொண்ணுக்கு டேன்ஸ் சொல்லி கொடுக்குறதுக்கு இப்படி பிரச்சனை பண்ற? நீ சொல்றது எனக்கு பிடிக்கலை”, என்றாள்.
“இப்ப முடிவா என்ன தான் டி  செய்ய போற? அவன் வீட்டுக்கு போக போறியா? லூசாடி நீ? இது வரைக்கும் உன்னை யார் கூடாவது பேச கூடாது, அங்க போக கூடாது, இங்க போக கூடாதுனு சொல்லிருக்கேனா? இல்லை தானே? இப்ப சொல்றேன்னா, அதுல காரணம் இருக்கும்னு புரியாதா?”
“புரியுது. புரியாம என்ன? இத்தனை நாளும் நான் உன் கூட வளர்ந்த பொண்ணு மட்டும் தான். ஆனா இப்ப உன் பொண்டாட்டியாச்சே. அதான் அடக்க பாக்குற?”
“லூசா டி நீ? சரி பொண்டாட்டின்னு உரிமையா சொன்னா தான் என்ன? என் பேச்சை கேக்க மாட்டியா?”
“உன் பேச்சை நான் ஏன் கேக்கணும்? தாலி கட்டிட்டா நான் உன் பேச்சை கேட்கணுமா? இல்லை தாலி கட்டினதுனால தான் நான் உன் பொண்டாட்டி ஆகிருவேனா? எந்த விசயத்துலயும் நான் உன் பொண்டாட்டி அப்படிங்குற நினைப்பு உனக்கே இல்லை. இப்ப இந்த விசயத்துல மட்டும் எதுக்கு உன் உரிமையை நிலை நாட்டுற?”
“என்ன டி உளறுற?”
“என்னது நான் உளறுறேனா?”
“நீ வேணும்னே சண்டையை ஆரம்பிக்கிற அப்பு?”
“சண்டையை ஆரம்பிக்கிறது நான் இல்லை. நீ தான். சுதாகர் கிட்ட பல்லை காட்டி பேசுறேன்னு சொல்ற? அவன் கிட்ட பேச கூடாது சொல்ற? அவன் வீட்டுக்கு போக கூடாதுனு சொல்ற? அவன் குழந்தைக்கு டேன்ஸ் சொல்லி கொடுக்க கூடாதுனு சொல்ற? எல்லாத்தையும் சொல்லி சண்டையை ஆரம்பிச்சது நீ தான். பொண்டாட்டின்னு பேச வந்துட்டான். உன் மனசுல பொண்டாட்டின்னு என்னை எப்ப நினைச்ச? இப்ப கண்டிக்கிறதுக்கு. உன்னை பொறுத்தவரைக்கும் எப்பவுமே நான் உனக்கு பிரண்ட் தான். அப்படி தான நினைக்கிற? இதுல மேல வந்து மோப்பம் பிடிக்கிறது. அசிங்கமா இல்லை உனக்கு?”
“ஏய், எங்க இருந்து எங்க தாவுற? என்னோட வீக்னஸ்  உனக்கு தெரியும் தான? அதான் அப்படி செஞ்சேன்”
“பெரிய வீக்னஸ். சின்ன வயசுல இருந்து நீ அப்படி தான் இருக்க? ஆனா இத்தனை வருசமும் இப்படி தான் என்னை வந்து மோந்து பாத்தியா? இல்லை தான? தாலி கட்டினா உனக்கு நான் என்ன அடிமையா? உன் இஷ்டத்துக்கு என்னை பந்தாடுற? நேத்தும், காலைலயும் தான் அப்படி செய்றேன்னு பாத்தா இப்ப வந்து என்னை கண்டிச்சிட்டு இருக்க?”
“ஏய் நான் அதுக்கு சாரி கேட்டுட்டேன்ல அப்பு?”
“சாரி கேட்டா, எல்லாம் சரியா போகுமா? அவஸ்தையை அனுபவிச்சது நான் தான? எனக்கு தான தெரியும்?”
இருந்த ஆத்திரம் அனைத்தையும் கொட்டினாள் அப்பு.  “என்னோட அந்த பிரச்சனைக்கு உன் மேல சாஞ்சது உனக்கு தப்பா போச்சா? சே நீ என் அப்புவே இல்லை. அவ இப்படி எல்லாம் சுயநலமா யோசிக்க மாட்டா”, என்று கோபத்தில் புரிந்தான் நரேன்.
“என்னது மேல சாஞ்சதுக்கு நான் கோப போடுறது தப்பா? உனக்கு எங்க டா என்னோட பீலிங்ஸ் புரியும்? நீயே ஒரு மரம். ரோபோ படத்துல வர மாதிரி ரோபோக்கு கூட லவ் பீல் வந்துரும். ஆனா உனக்கு வராது. அப்படி இருக்கும் போது என்னை எதுக்கு கல்யாணம் பண்ண? அதான் மாமா வேற பொண்ணு இருந்தா கூட ஓகே தான்னு சொன்னாங்க தானே? உன் மேல வந்து விழுந்தாளே? அந்த மாயா? அவளை கட்டிருக்க வேண்டியது தான?”
அடுத்த நொடி அவன் கன்னத்தில் இடியென இறங்கியது அவன் கை. அவன் அடித்ததில் உறைந்து போய் நின்றாள் அபர்ணா.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க? நானும் சண்டை வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ ஓவரா பேசிட்டே போற? ஏன் நான் அவளை கட்டிக்கிட்டா நீ என்னை விட்டுட்டு வேற எவனையாவது கல்யாணம் பண்ணிருக்கலாம்னு தோணுதா?”, என்று அவன் கேட்டதும் அதே அடி அவனுக்கும் விழுந்திருந்தது.
“அட பாவி திருப்பி கொடுத்துட்டாளே”, என்று நினைத்தவனுக்கு அன்று மதியம் ராகுல் சொன்ன “நீ அடிச்சா அவ பதிலுக்கு அடிச்சிருப்பாளே”, என்ற வார்த்தைகள் நினைவில் வந்தது.
“இந்த ராட்சசியை எல்லாரும் புரிஞ்சு தான் வச்சிருக்காங்க”, என்று நினைத்தவனுக்கு உள்ளே சிரிப்பு தான் வந்தது.
“ச்சீ, நீயெல்லாம் மனுசனா? உன்னையா நான் லவ் பண்ணேன்?”, என்று கேட்டு கொண்டே அங்கு இருந்த பூச்சாடியை தூக்கி வீசி இருந்தாள். அது வாசல் கதவில் பட்டு உடைந்து சிதறியது.
மீண்டும் அவனை நெருங்கியவள், அவன் சட்டையை கொத்தாக பிடித்து கொண்டு “ஆமா டா, இப்ப நினைகிறேன். நீ எவளையாவது கட்டிருந்தா நான் உன்னை கல்யாணம் பண்ணிருக்க வேண்டிய நிலை வந்திருக்காதுனு. ஆனா அதுக்கு முன்னாடியே லவ் பண்ணி தொலைச்சிட்டேனே? அதுவும் பண்ணாம இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்? கல்யாணத்துக்கு முந்துன நாள் வந்து என்கிட்ட பேசினப்ப, உனக்கு என் மேல லவ் இல்லைனு நீ சொன்னப்ப அப்படியா நரேன்? அப்ப கல்யாணத்தை நிறுத்திருன்னு நான்  சொல்லிருக்கணும். தப்பு செஞ்சிட்டேன். அந்த நிமிசத்துல கூட என் காதலை சொன்னேன் பாரு? அது என் தப்பு தான்”
“மேல சாஞ்சது குத்தமான்னு கேக்குற?  முத்தத்தை கூட எந்த உணர்ச்சியும் இல்லாம மரம் மாதிரி கொடுத்தவன் தான நீ? அப்ப கூட வெக்கத்தை விட்டு முத்தம் ரொம்ப நேரம் கொடுக்கணும்னு தோணுச்சுனு சொன்னேன்ல டா? அதனால தான் உனக்கு நான் பொண்ணா  தோணலையோ? காமம்னா என்னனு தெரியாத பச்சை குழந்தையா நீ? அப்படி வந்து நெஞ்சுல முகத்தை புதைச்சா நான் என்ன நிலைக்கு ஆளாவேன்னு உனக்கு தெரியாதா? அதை கூட யோசிக்க தெரியாத சைக்கோ டா நீ. ஒரு பொண்ணை தொட்டுட்டு இருக்கும் போது அந்த சூழ்நிலைல, அடுத்து என்ன செய்யணும்னு கூட தெரியாத இடியட் நீ. ஒரு பிரண்ட் கிட்ட எப்படி நடந்துக்கணும், ஒரு பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியாத மூளையே இல்லாதவன் நீ”
….
“உனக்கு என் மேல லவ்வும்  வராது. ரொமான்சும் வராது. இப்ப எனக்கு புடிச்ச டேன்ஸ் விசயத்துலயும் தலை இடுற. எனக்கு உன்னை பிடிக்கவே இல்ல. நான் போறேன் ஊருக்கு”, என்று சொல்லி கொண்டே அவன் சட்டையை விட்டவள் “எனக்கு டிக்கட் போடு “, என்று அதிகாரமாய் சொன்னாள்.
அதிர்ச்சியில் அப்படியே நின்றான் நரேன். அப்போது வீட்டு அழைப்பு மணி அடித்தது. இருந்த எரிச்சலோடு கதவை திறக்க சென்ற அபர்ணா, அங்கே கிடந்த உடைந்த பிளவர் வாசை கையில் எடுத்து கொண்டே கதவை திறந்தாள்.
வெளியே ராகுல்  நின்றிருந்தான். கலைந்த தலையும், கலங்கிய கண்களுமாக இருந்தவளையும் கையில் அவனை ஏறிய போவதை போல் வைத்திருந்த பிளவர் வாசையும் பார்த்து விட்டு “தப்பான நேரத்துல உள்ள வந்துட்டேன் போலயே”, என்று நினைத்து கொண்டு அவளை பார்த்து சிரித்து கொண்டே உள்ளே நுழைந்தான்.
அவனையும் முறைத்து பார்த்தாள் அபர்ணா. அவள் முறைப்பை பார்த்து பயந்த ராகுலும் “நண்பா இந்த ராட்சசி கிட்ட இருந்து காப்பாத்து டா”, என்ற பார்வையை நரேனை பார்த்து வீசினான்.
அவனோ இந்த உலகையே மறந்து எங்கோ பார்த்து கொண்டு நின்றிருந்தான். அவன் உதவ வரமாட்டான் என்று புரிந்த ராகுல் “ஹி ஹி  அப்பு, எங்க அம்மா உங்க வீட்டுல குழம்பு வாங்கிட்டு வர சொல்லுச்சு”, என்று சொன்னான்.
ஏற்கனவே அவனை முறைத்த  படி நின்றிருந்தவள் அவனை மேலும் முறைத்தாள். பொய் சொன்னதை கண்டு பிடிச்சிட்டா. சமாளி ராகுல்”, என்று நினைத்து கொண்டு “ஹி ஹி  அம்மா கேக்கல அப்பு. நான் தான் கேக்க வந்தேன். எங்க வீட்டில சாம்பார். உங்க வீட்டில இருந்து பிரியாணி வாசம் வந்துச்சா? அதான் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”, என்று அசடு வழிந்தான்.
“நீயும் உன் பிரண்டும் எதுல ஒத்துமையா  இருக்கீங்களோ இல்லையோ மோப்பம் பிடிக்கிறதுல ஒத்துமையா இருக்கீங்க டா? நேத்து வச்ச ரசம் தான் பிரிட்ஜ்ல இருக்கு. வேணும்னா எடுத்துட்டு போ. அப்புறம் உன் பிரண்ட் கிட்ட சொல்லி நைட் ஊருக்கு போக எனக்கு டிக்கட்  போட சொல்லு. அதுவும் ஏ. சி பஸ்ல. என்ன புரிஞ்சதா?”, என்று கேட்டாள் அபர்ணா.
“சரிங்க மகாராணி “, என்று பவ்வியமாக  சொன்னான் ராகுல். அவனை முறைத்த படி அறைக்கு சென்று விட்டாள் அபர்ணா.
“இப்ப என்ன சண்டை ரெண்டு பேருக்கும்? எதை ஒழுங்கா செய்றாங்களோ இல்லையோ? சண்டையை சரியா போடுறாங்கயா? இவ எதுக்கு ஊருக்கு போறா? இவன் எதுக்கு  இப்படி நிக்குறான். நான் தான் பிரியாணி வாசத்தை மோப்பம் பிடிச்சேன். இவன் எதை மோப்பம் பிடிச்சான்னு தெரியலையே. அப்புறம் நேத்து வச்ச ரசத்துக்கு, இன்னைக்கு வச்ச சாம்பரே பரவால்ல. வந்த வழியே போய்ருவோமா?”, என்று நினைத்து வெளியே போக காலை எடுத்து வைத்தவன், பித்து பிடித்தது போல நின்ற நரேனை பார்த்து அப்படியே அவனை விட மனதில்லாமல் அவன் அருகில் சென்றான் ராகுல்.
தொடரும்…..

Advertisement