Advertisement

“எத்தனை முறை வார்த்தைகளால் குத்தி கீறினார்களோ? இனியும் அவளை கஷ்ட படுத்த கூடாது. ஆனாலும் எப்படி அவள் தாலியை கழட்டலாம்? அப்படின்னா அந்த நொடி அவ மனசுல நான் இல்லை தான? ஒரு நிமிசம் நான் தான் முக்கியம்னு நினச்சிருந்தா அப்படி செஞ்சிருப்பாளா? சே சே நம்மளாலே முடிவெடுக்க முடியாத வயசு. அவ எப்படி தெளிவா இருந்துருப்பா?  ஆனாலும்…”

இப்படி பலவாறாக அவனுக்குள் யோசித்து யோசித்து முடிவெடுக்க முடியாமல் தவித்த செழியன், ஒரு வழியாக மனதை சமாதான படுத்தி அடுத்து என்ன செய்ய என்று யோசித்தான்.

“அவள் மேல் இருக்கும் கோபத்தை காட்டணும்னா கூட, அவ இப்ப என் கிட்ட இருக்கணும். இதுக்கு மேல பிரிஞ்சு இருந்து ரெண்டு பேருமே கஷ்ட பட முடியாது. அவங்க வீட்டில எப்படி கேவல படுத்தினாலும் தாங்கிக்க வேண்டியது தான். அவ தான் வாழ்க்கைன்னு முடிவான பிறகு வீணா எதுக்கு வீம்பு செஞ்சிட்டு ரெண்டு பேரும் கஷ்ட படணும்.  மிஞ்சி மிஞ்சி போனா அன்னைக்கு மாதிரி அடிப்பாங்க. அவ்வளவு தான? என்  மதுவுக்காக தாங்கிப்பேன்”, என்று நினைத்தவன் குளிக்க சென்றான்.

குளிக்கும் போதும் அடுத்து சட்டையை மாட்டி கொண்டு கிளம்பும் போதும் மனதுக்குள்ளே போராட தான் செய்தான். அவர்கள் வீட்டில் என்ன அசம்பாவிதம் நடக்குமோ என்று பயம் அவன் மனதை கவ்வி கொண்டது.

ஒரு வழியாக கிளம்பியவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். அவன் கையில் காலை உணவை கொடுத்தாள் பூங்காவனம்.

“எனக்கு இப்ப வேண்டாம் மா. வயிறு சரி இல்லை. நான் அப்பறம் சாப்பிட்டுக்குறேன்”, என்று புன்னகையுடன் மறுத்தான் செழியன்.

“வயிறுக்கு என்ன பா? கருப்பு கலரு வாங்கியாரவா?”, என்று கேட்டாள் பூங்காவனம்.

“வேண்டாம் மா, நான் வெளிய தான் போறேன். அப்ப குடிச்சிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பும் போது “அண்ணே, உடம்பு சரி இல்லையாண்ணே?”, என்று கேட்ட படி வந்தாள் வளர்.

அவளை பார்த்து புன்னகைத்வன் “இல்லை பாப்பா”, என்றான்.

“அப்ப உனக்கு மனசு தான் சரி இல்லை. அண்ணியை போய் பாருண்ணே. உன் மனசுல உள்ள எல்லா கஷ்டமும் போய்ரும்”

“அங்க தான் பாப்பா போறேன்”’

“அண்ணே, என்ன சொல்ற நீ?”

“ஆமா பாப்பா, மது வீட்டுக்கு தான் போறேன்”

“வாவ் சூப்பர், நிஜமாவாண்ணே? இப்பவாது உனக்கு தோணுச்சே? அண்ணி மேல என்ன கோபம் இருந்தாலும் மறந்துரு சரியா? நான் தப்பு பண்ணா என்னை கண்டிப்ப. ஆனா வெறுக்க மாட்ட தான? அதே மாதிரி அண்ணி ஏதாவது செஞ்சிருந்தா மன்னிச்சிருண்ணே. எனக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கணும்னு ரொம்ப ஆசை தெரியுமா?”

“சரிங்க பெரிய மனுஷி. ஆனா அவங்க அம்மா அப்பாவை நினைச்சா தான் பயமா இருக்கு”

“எங்க அண்ணன் சிங்கம். இதுக்கெல்லாமா பயப்படுவாங்க. நீ எப்பவுமே கம்பீரமா தான் இருக்கணும். உன்னை அவங்க ஏதாவது சொல்லிட்டா அண்ணி கிட்ட கேளுண்ணே. உனக்கு நான் வேணுமா, உன் அம்மா அப்பா வேணுமானு கேளு. அப்ப அண்ணி நீ தான் வேணும்னு சொல்லி உன் கூட வந்துருவாங்க. அப்படி நடக்காம அம்மா அப்பா வேணும்னு சொன்னா இனி அவங்க நமக்கு வேண்டாம்”

“இந்த கோபத்துல தான் இத்தனை வருசம் இருக்கேன் மா”, என்று நினைத்த செழியன் “எல்லாம் நல்ல படியா நடக்கும். நான் போய்ட்டு வரேன் பாப்பா”, என்று சொல்லி விட்டு தெருவில் இறங்கி நடந்தான்.

“என்ன இந்த பையன் வண்டி கூட இல்லாம எங்க போறான்”, என்று புலம்பி கொண்டிருந்த பூங்காவனத்தை சமாதான படுத்தி கொண்டிருந்தாள் வளர்.

அவன் அந்த பக்கம் போனதும் வாசலில் எதுவோ நிழல் தெரிய நிமிர்ந்து பார்த்த வளர் திகைத்தாள். அங்கே வாசுதேவனும் மித்ரனும் நின்றார்கள்.

“இவங்க என்ன இங்க வந்துருக்காங்க?”, என்று நினைத்து அவள் பேய் முழி முழிக்கும் போது “யாருடி வந்துருக்கா?”, என்று கேட்டு கொண்டே வெளியே வந்த பூங்காவனம் “டாக்டர் அப்பா தான நீங்க?  உள்ள வாங்க. நீங்களும் உள்ள வாங்க தம்பி”, என்று வரவேற்றாள்.

திக் பிரம்மை பிடித்து நின்று கொண்டிருந்த வளரை பார்த்த மித்ரன் “க்யூட் பாப்பா”, என்று நினைத்து கொண்டே உள்ளே வந்தான்.

கூடத்தில் இரண்டு நாட்காலியை போட்டு இருவரையும் அமர வைத்து அவர்கள் கையில் காபியை பூங்காவனம் கொடுத்த போது தான் உள்ளே வந்தார் தங்கராசு.

“வாங்க ஐயா, என்ன காலைலே இங்க வந்துருக்கீங்க?”, என்று கேட்டவர் அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்.

வளரோ அசைய மறந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். மித்ரனோ அவ்வப்போது வளரையே பார்த்து கொண்டிருந்தான்.

தங்கராசு “எதுக்கு வந்திருப்பாங்க?”, என்று யோசனையில் இருந்தார் என்றால் வாசுதேவனோ “எப்படி ஆரம்பிக்க?”, என்று தயக்கத்துடன் இருந்தார்.

பூங்காவனம் ஒரு ஓரமாக நின்று “என்ன விசயமா இருக்கும்?”, என்று யோசித்து கொண்டிருந்தாள்.

வாசுதேவன் எப்படியும் ஆரம்பிக்க போவதில்லை என்று உணர்ந்த மித்ரன் தயக்கத்தை விரட்டி “உங்க பையன் இல்லையா?”, என்று கேட்டான்.

“ஓ நீங்க செழியனை பாக்க வந்தீங்களா?”, என்று கேட்டார் தங்கராசு.

“ஹ்ம்ம் ஆமா”, என்றான் மித்ரன்.

“பூவு செழியன் எங்க? ஏதாவது நில விசயமா இருக்கும். உள்ளார இருக்கானா?”

“இல்லைங்க. அவன் இப்ப தான் வெளிய போனான்”, என்றாள் பூங்காவனம்.

“அதுக்குள்ளே எங்க போனான்.  வளர் அண்ணன் எதுவும் சொன்னானா மா?”

“அது.. அது வந்து பா.. ஒண்ணும் சொல்லலை பா”, என்ற வளர் மது வீட்டுக்கு தான் சென்றிருக்கிறான் என்ற உண்மையை சொல்லாமல் மறைத்தாள்.

“முக்கியமான விசயமா ஐயா? நான் வேணும்னா செழியனை வர சொல்லவா?”, என்று கேட்டார் தங்கராசு.

“இல்லை வேண்டாம். நான் உங்க கிட்டயே சொல்றேன்”, என்ற வாசுதேவன் மித்ரனை  திரும்பி பார்த்தார். அவனும் “சொல்லுங்க”, என்னும் விதமாய் சைகை செய்தான்.

“என்ன விசயம் தயங்காம சொல்லுங்க”, என்றார்  தங்கராசு.

“இல்லை என் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பாக்குறேன். பொண்ணு வீட்டில இருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போக கூடாது தான். ஆனா நானா விருப்பத்தை சொல்லாம உங்களுக்கு எப்படி புரியும்? அதனால தான் நானே வந்தேன்”, என்று உளறி கொட்டினார் வாசுதேவன். மானசீகமாக தலையில் அடித்தான் மித்ரன்.

“டாக்டர் பொண்ணுக்கு கல்யாணமா? ரொம்ப நல்ல விசயம்? ஆனா நீங்க இங்க வந்ததும், சொல்றதும் புரியலையே”, என்றார் தங்கராசு.

வளருக்கு எதுவோ புரிவது போல இருந்தது. அவள் முகம் பிரகாசமானது.

“உங்க பையன் செழியனை மதுவுக்கு கல்யாணம் பண்ண மாமா விருப்ப படுறாங்க. அதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தயங்குறாங்க”, என்று நேரடியாக விசயத்துக்கு வந்தான் மித்ரன். அவனை நன்றியோடு பார்த்தாள் வளர். அவள் பார்வையை மனதுக்குள் சேமித்து வைத்தான் மித்ரன்.

“ஐயா நீங்க என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியான தங்கராசு பூங்காவனத்தை பார்த்தார். அவள் முகம் சந்தோசத்தில் மலர்ந்தது.

“ஏன் எங்க வீட்டில பொண்ணு எடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லையா?”, என்று கேட்டார் வாசுதேவன்.

“ஐயோ அப்படி இல்லைங்க ஐயா. நீங்க பெரிய இடம். பொண்ணு வேற டாக்டர் உத்தியோகம் பாக்குது. அதான்”

“பெரிய இடம் அப்படிங்குறது பணத்துல இல்ல, மனசுல இருக்கு. உங்க பையனும் குறைஞ்சவர் இல்லை. அரசாங்க உத்தியோகம் தான பாக்குறார். இந்த ஊருல அவரை விட்டா வேற நல்ல பொருத்தமான மாப்பிள்ளை எனக்கு தெரியலை”

“நீங்க சொல்றது எல்லாம் எனக்கு கனவா நினைவானு தெரியலைங்க. ஆனா நான் மட்டும் முடிவு சொல்ல முடியாது. என் அக்கா பொண்ணை ஒரு தடவை பேசுனப்ப என் பையன் மறுத்துட்டான். இந்த சின்ன குட்டியும் என் இஸ்ட படி தான் அண்ணன் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிருச்சு”, என்று தங்கராசு சொன்னதும் “ஐயோ இந்த அப்பா இப்ப போல குட்டையை  கிளப்புறாரே”, என்று நினைத்து கொண்டு அவசரமாக “அப்பா, நான் அண்ணனுக்கு பொருத்தமான பொண்ணை தான் கட்டி வைக்கணும்னு நினைச்சேன். இப்ப டாக்டர் தான் பொண்ணுன்னு தெரிஞ்சிருச்சே. அவங்க அண்ணனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க பா. நீங்க சரினு சொல்லுங்க. அண்ணன் நான் சொன்னா சரின்னு சொல்லுவான்”, என்றாள்.

தங்கராசு பூங்காவனத்தை பார்த்தார். அவள் “சரி”, என்று சொல்லவே “எங்களுக்கு பரிபூரண சம்மதம்”, என்று சொன்னார் தங்கராசு.

மித்ரனும் வளரும் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினார்கள்.

மேலும் கல்யாணத்தை எங்கே எப்போது வைப்பது, மதுவை எப்போது பெண் பார்க்க செல்வது, பேசி முடிப்பது என்ற பேச்சுக்கள் அங்கே ஆரம்பமானது.

முதலில் தயக்கத்துடன் இருந்த வாசுதேவனும் தங்கராசுவின் வெகுளி தனத்தால் ஈர்க்க பட்டு சகஜமானார்.

மித்ரன் அவர்களுடன் பேசுவதும், வளரை சைட் அடிப்பதுமாக இருந்தான். முதல் முறையாக அவனுடைய பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த வளர் அறைக்குள் சென்று மறைந்தாள். ஆனால் மனம் என்னும் குளத்தில்  கல் எறிந்தது போல சிறு சலனம் அவளுக்குள்.

இங்கே இப்படி என்றால் மதுவின் வீட்டை நோக்கி சென்ற செழியனுக்கு இதயமே வெளியே குதித்து விடும் போல இருந்தது. நூறு சதவீதம் தயக்கம் இருந்தாலும் அதை உதறி விட்டு மதுவின் வீட்டு வாசல் கதவை தட்டினான்.

அப்போது தான் கிளம்பி கீழே வந்த மது “யாரா இருக்கும்?”,என்று எண்ணி கொண்டே வாசல் பக்கம் வந்தாள்.

அங்கே நின்ற செழியனை கண்டதும் அவள் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

“இந்த நேரத்துல இவன் எங்க வந்தான்? அதுவும் என் வீட்டுக்கு? யாருக்கும் உடம்பு சரி இல்லையோ? ஆமா அப்படி தான் இருக்கும். இல்லைனா இவனாவது என்னை தேடி என் வீட்டுக்கு வரதாவது?”, என்று நினைத்து கொண்டிருந்தாள் மது.

தாகம் தணியும்……

Advertisement