Advertisement

அத்தியாயம் 12

என்னவனின் கை

கோர்த்து நான் கடக்கும்

ஒவ்வொரு அடியும்

என் வாழ்வில்

வெற்றி படியே!!!

அடுத்த நொடி அவர் “மது”, என்று அலறிய சத்தத்தில் மல்லிகாவும், பாட்டியும் அங்கு ஓடி வந்தார்கள்.

வாசுதேவனின் சத்தத்தில் முதலில் கண் விழித்தது செழியன் தான். முதலில் எங்கே இருக்கிறோம் என்று யோசித்தவன் வாசுதேவனை கண்டு திகைத்து எழுந்து நின்றான்.

“டேய், நீ செழியன் தான? என் பொண்ணை என்ன டா செஞ்ச?”, என்று கேட்டு கொண்டே அவன் சட்டையை பிடித்தவர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

மது இருந்த அரை குறை உடை கோலமே நடந்ததை அனைவருக்கும் விளக்கி உயிரையே உறைய வைத்தது. மது அருகில் ஓடி வந்த மல்லிகா “ஏய் எந்திரி டி”, என்று அவளை எழுப்பினாள்.

மது கண் விழித்ததும் அவள் கண்ட காட்சி வாசுதேவன், செழியனை அடித்து கொண்டிருப்பதை தான்.

“அப்பா”, என்று கத்தி கொண்டே அவர் அருகில் ஓட பார்த்தவளை இழுத்து வைத்து விளாசி தள்ளி விட்டாள் மல்லிகா.

“அடிச்சு கொல்லு மா அவளை. எவ்வளவு ஈன தனமான காரியம் செஞ்சி வச்சிருக்கா சே. படிச்சு படிச்சு சொன்னேனே? பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு ஆங்காரம் ஆக கூடாதுன்னு. இவ திமிரா அலைஞ்சதுக்கு எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிட்டா”, என்று கத்தினாள் பாட்டி.

மல்லிகாவும், வாசுதேவனும் தங்கள் ஆத்திரம் தீரும் வரை இருவரையும் அறைந்து தீர்த்து விட்டார்கள்.

“ஏண்டி இப்படி செஞ்ச? என்ன டி இது?”, என்று கதறிய படியே கேட்டாள் மல்லிகா.

“அம்மா என்னை மன்னிச்சிரு மா. செழியன் மேல எந்த தப்பும் இல்லை மா. டேடி கிட்ட அவரை அடிக்க வேண்டாம்னு சொல்லு மா. டேடி ப்ளீஸ். அவரை அடிக்காதீங்க. நாங்க ரெண்டு பேரும் நாலு மாசமா லவ் பன்றோம்”

“லவ் பண்ற வயசாடி இது? உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி ஒரு ஆம்பளை பையன் கூட தூங்குவ? நைட் முழுக்க இவன் கூட தான் இருந்தியா?”

“ஆமா மா”, என்று அழுது கொண்டே சொன்னாள் மது. செழியன் கூனி குறுகி நின்றான். செய்த தவறு இமைய மலையை விட உயரமானது என்று புரிந்தது.

யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே வாசுதேவன் கொடுத்த அடிகளை வாங்கி கொண்டான். அவன் கண்கள் மட்டும் கண்ணீரை பொழிந்த படி இருந்தது.

“ஐயோ, இப்படி குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டாளே? அம்மா அப்பா மாதிரி தான பொண்ணு இருப்பா. வாசு நீ இவளை இழுத்துட்டு போய் கல்யாணம் செஞ்ச. இப்ப உன் பொண்ணு கல்யாணம் ஆகாமலே எவன் கூடயோ குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கா”, என்று பாட்டி சொன்னதும் “அம்மா”, என்று கத்திய வாசுதேவன் “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, நான் மனுசனா இருக்க மாட்டேன். என் பொண்ணு அப்படி எல்லாம் கிடையாது”, என்றார்.

அவர் அப்படி சொன்னதும் அவருடைய காலில் வந்து விழுந்த மது “என்னை மன்னிச்சிருங்க டேடி. நான் தப்பு பண்ணிட்டேன். நீங்க என் மேல வச்ச நம்பிக்கையை நான் காப்பாத்தலை”, என்றாள்.

செழியனின் சட்டையை விட்டுவிட்டு தளர்ந்து போய் அமர்ந்தார் வாசுதேவன்.

“நீ எதுக்கு டி, என் வயித்துல பிறந்த? கடவுளே, இந்த அசிங்கத்தை  நாங்க எப்படி தாங்க போறோம்? உங்க அப்பாவை பாரு. எப்படி இருந்தவர் இடிஞ்சு போய் உக்காந்துருக்கார். அதுக்குள்ளே அரிப்பெடுத்து ஆம்பளை சுகத்துக்கு அலைஞ்சிருக்கியே”, என்று மல்லிகா சொன்னதும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் வாசுதேவன்.

“அவ சின்ன பொண்ணு. அவளை போய் அசிங்கமா பேசுற?”

“பாத்தியா, இப்ப கூட உனக்கு சப்போர்ட் பண்றாரு. ஆனா நீ அசிங்கம் பிடிச்ச காரியத்தை செஞ்சிருக்க. ஆமா அது என்ன டி கழுத்துல? ஓ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திருக்கியோ?”

“அம்மா என்னை மன்னிச்சிருமா”

“ச்சி உன் வாயால என்னை அம்மானு சொல்லாத. படிச்சு படிச்சு சொன்னேன் பொம்பளை பிள்ளைக்கு இவ்வளவு செல்லம் கொடுக்காதீங்கன்னு. பேசாம செத்து போய்ரு டி”

“அவ ஏன் சாகணும்? எல்லாத்துக்கும் காரணம் நான் தான். நான் தான் என் பொண்ணை சரியாவே வளர்க்கலை”, என்று குமுறி அழுதார் வாசுதேவன்.

“ஊருக்கு மத்தியில பெரிய வீட்டம்மான்னு கம்பீரமா வாழ்ந்தேன். நாளைக்கு ஊரே காரி துப்பும். அதுக்குள்ள எல்லாரும் நாண்டு கிட்டு சாகலாம்”, என்றாள் பாட்டி.

“அதுவும் சரி தான். செத்துரலாம்”, என்று சொல்லி கொண்டே எழுந்தார் வாசுதேவன்.

“நீங்க யாரும் சாக வேண்டாம். என்னை மன்னிச்சிருங்க டேடி. என்னை வேணா கொன்னுருங்க”, என்றாள் மது.

“உன் மேல ஒரு காயம் பட்டாலே என்னால தாங்க முடியாது மது குட்டி. உன்னை போய் கொல்வேனா? நீ சந்தோசமா இருக்கணும் டா. ஆனா அவமானதோட எங்களால வாழ முடியாது”

“டேடி  ப்ளீஸ். இப்படி பேசாதீங்க.  கஷ்டமா இருக்கு”

“சரி நாங்க சாக கூடாதுன்னா நீ ஒரு விசயம் செய்யணும். அந்த கயிறை கழட்டி அவன் முகத்துல எறி. நாம இந்த ஊரை விட்டே போயிரலாம். அப்படி இல்லைன்னா என்னை சாக விடு மா”

ஒரு நிமிடம் அமைதியாக  யோசித்தவள் அடுத்த நிமிடம் அந்த கயிறை கழட்டி தூக்கி எறிந்தாள். அது கட்டிலுக்கு அடியில் சென்று விழுந்தது. அதிர்ச்சியில் சிலையாக நின்றான் செழியன்.

அவன் இறந்ததுக்கு பின்னர் நடக்க வேண்டிய காரியம் இப்போது நடந்தது மட்டும் தான் நினைவில் இருந்தது. அவளிடம் தன் மீது இருந்த காதல் அற்பமானது என்று உணர்ந்த நொடி யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் வெளியே நடந்தான்.

முகமெல்லாம் வீங்கி இருக்க, சட்டை கிழிந்திருக்க கிழிந்த நாராய் அங்கிருந்து சென்ற செழியனை பார்த்த மது அதே இடத்தில் அமர்ந்து கதறி அழுதாள்.

“நாம இப்பவே சென்னைக்கு கிளம்புறோம். அம்மா நீ எங்க கூட வரியா இல்லையா?”, என்று கேட்டார் வாசுதேவன்.

“இங்க என்னால நிம்மதியா இருக்க முடியாது பா. நானும் வரேன்”

“சரி எல்லாரும் கிளம்புங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பணும்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.

அழுது கொண்டே இருந்த மது யாருக்கும் தெரியாமல் அந்த தாலியை எடுத்து பத்திர படுத்தினாள்.

சென்னைக்கு சென்றதும் நேராக மதுவை ஒரு டாக்டரிடம் தான் கூட்டி சென்றார்கள். அது மித்திரனின் அம்மா. அனைத்தையும் விசாரித்தவள் மதுவை சோதித்து வைத்தியம் பார்த்து அந்த உண்மை வெளியே தெரியாமல் பார்த்து கொண்டாள். அது மட்டுமல்லாமல் மித்திரன் படிக்கும் பள்ளியிலே இடமும் வாங்கி கொடுத்தாள்.

வாசுதேவன் மட்டும் இடையில் மது படித்த பள்ளிக்கு வந்து டி.ஸீ வாங்கி கொண்டு சென்றார். அதன் பின் மல்லிகாவும் பாட்டியும் குத்தி குத்தி காய படுத்தியதால் உருக்குலைந்து போனாள் மது.

மனது மொத்தமும் ரணமாக வலிக்க அதை தாங்க முடியாமல் தூக்கு மாட்டி கொள்ள முயன்றாள்.

கடைசி நிமிடம் காப்பாற்றிய வாசுதேவன் “இனி யாரும் என் பொண்ணை கஷ்ட படுத்துனா அது நான் செத்ததுக்கு சமம்”, என்று சொல்லி அவர்கள் வாயை அடைத்தார்.

மதுவிடமும் “இனி இப்படி செய்ய கூடாது”, என்று சத்தியம் வாங்கினார். அவளுக்கு அரனாக இருந்தார்,

அதில் மேலும் கூனி குறுகி போனாள் மது. அதன் பின்னர் பாட்டியும் மல்லிகாவும் அவளிடம் பேசுவதே இல்லை.

கொஞ்சம் நிம்மதியான மதுவுக்கு செழியனின் நினைவு இதயத்தை கூறு போட்டது. இரண்டு வருடத்தில் பாட்டியும் இறந்து போய் விட்டாள்.

அதன் பின்னர் மகளை பற்றி யோசித்த மல்லிகாவும் மனசளவில் மது நொந்து போய் இருக்கிறாள் என்று உணர்ந்து பழசை மறந்து அவளுக்கு ஆதரவாக இருந்தாள்.

தனக்குள்ளே அவள் மறுகி போவதை தாயாக அவளும் உணர்ந்து கொண்டாள். மித்ரன் நண்பனாக கிடைத்த பின்னர் மது மாறுவாள் என்று எதிர்பார்க்க அவள் அவனை தவிர மற்ற யாரிடமும் பேசுவது கூட இல்லை.

நாள் ஆக ஆக மதுவை பற்றிய கவலை பெற்றவர்களை அரித்தது. அதை அவளுக்கு காட்டாமல் மறைத்தார்கள்.

மது “டாக்டர்க்கு படிப்பேன்”, என்று பிடிவாதமாக சொன்னது சிறிது கோபத்தை மல்லிகாவுக்கு வரவழைத்தாலும் அது பெஸ்ட் சாய்ஸ் என்று புரிந்ததால் சரி என்று விட்டாள்.

ஆனால் டாக்டர் படிப்பை முடித்து விட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்னர் ஒரு நாள் கல்யாணம் பற்றி  பேசியதுக்கு “டேடி தற்கொலை பண்ண கூடாத்துன்னு நீங்க சத்தியம் வாங்கினதுனால தான் நான் செய்யாம இருக்கேன். மறுபடி கல்யாணம் பத்தி பேசினா நான் சத்தியத்தை மீற வேண்டி இருக்கும்”, என்று சொல்லி விட்டு அவள் சென்றதும் அவள் எதிர்காலத்தை நினைத்து ஊமையாக அழுதார்கள் இருவரும்.

“அந்த பையனை தான் இன்னும் நினைச்சிட்டு இருக்காளோ? அவன் என்ன செய்றானோ? அவனையே கட்டி வைக்கிற மாதிரி அமையுமா?”, என்று செழியனை பற்றி தான் மல்லிகாவும் யோசிக்க  ஆரம்பித்தாள்.

அதன் பின்னர் தான் வேலை கிடைத்த போது இந்த ஊரை அவள் தேர்ந்தெடுத்தது. அது அவனை காண மட்டுமே.

அனைத்தையும் யோசித்து கொண்டு படுத்திருந்த செழியனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. மனம் வலித்தது.

இப்போதும் பல பள்ளி பிள்ளைகள் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைப்பதை கேள்வி படும் போது செழியனுக்கு தன் வாழ்க்கையை பற்றி தான் என்ன தோன்றும்.

அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறு, பல முறை அவன் மனதை கொன்று கூறு போட்டு விட்டது. நினைத்து பார்த்தாலும் வலி மட்டுமே மிச்சம். தனக்கே இப்படி என்றால் மதுவை நினைத்து பார்க்கையிலே அவன் உயிரே போனது போல இருந்தது.

பெற்றவர்கள் முன்னால் அசிங்க பட்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் முன்னால் குற்ற உணர்வுடன் இப்போது வரை துடித்து கொண்டிருப்பாள்.

Advertisement