Advertisement

இவர்களை பார்த்துக்கொண்டே வந்த நந்துவின் விழிகளுக்கு ஷிரவனும் ஷன்மதியும் மாயமாகினர்.
‘எங்கடா போனாங்க? இப்போ தான எனக்கு முன்னாடி போய்கிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள காணோம். என்னை தனியா விட்டுட்டு இதுங்க எங்க போச்சுங்கன்னு தெரியலையே?’ என்று தனக்குள் புலம்பிக்கொண்டு தேடியபடி முன்னேறினான்.
“ஷிரவா.. மதி.. எங்க இருக்கீங்க?” என்று குரல் கொடுத்துக்கொண்டு வந்தான். “டேய் இன்னும் ஒரு கிலோமீட்டர் இருக்குடா கார்கிட்ட போகுறத்துக்கு” என்று புலம்பினான்.
“ஷிரவா…ஷிரவா…” என்று குரல் கொடுத்தான்.
முன்னே ஓடி கொண்டிருந்த ஷிரவனை காணாமல் ஒரு நிமிடம் பதறி போனாள் மதி.
“ஷிரவ்.. எங்க இருக்க? விளையாடாத… எனக்கு பயமா இருக்கு” என்று குரல் கொடுத்தபடி சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்து கொடுத்து கொண்டிருந்தாள் ஷண்மதி.
அவனை காணாமல் மனம் பதற, மீண்டும் அவனுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ என்று பயந்தாள்.
திடீரென்று இரு கரம் தன் இடையினை வளைக்க பயந்து போனாள்.
கன்னத்தில் பளாரென அறைய திரும்பியவள் ஷ்ரவன் தான் என்பதை கண்டு,
“என்ன ஷிரவ் இப்படி பயமுறுத்திட்ட?” என்று கோபமாக கேட்டாள்.
“எதுக்கு பயம்? அதான் மீண்டு வந்துட்டேனே?” என்று அவளின் செங்கழுத்தினில் இதழ் பதிக்க, அவனின் எண்ணம் உணர்ந்தவள் அவனின் தலையில் ஒரு குட்டு குட்டினாள்.
“உனக்கு ரொம்ப விளையாட்டு தனம் அதிகமாகிடுச்சு. நான் உன்னை துரத்தலை. நீ தான் பிளான் பண்ணி இங்க கூட்டிட்டு வந்துருக்க. அங்க அண்ணன் நம்மளை காணாம்னு தேடிட்டு இருப்பாரு. வா போலாம்.” என்று போக திரும்பினாள்.
அவளின் கரத்தை பற்றி நிறுத்தியவன், அவளை திருப்பி அணைத்து கொள்ள ஷ்ரவனின் திடீர் செய்கையில் மேனி நடுங்கினாள்.
“எத்தனை வருஷமா காதலிச்சு ரொம்ப ஆசை ஆசையா உன்னை கல்யாணம் பண்ணி அப்புறம் என்னென்னவோ நடந்துபோய் இப்போ மறுபடியும் இன்னொரு பிறவி எடுத்து வந்துருக்கேன் உனக்காக. உன் முகத்தை ஒரே ஒரு முறை தொட்டு பார்க்கணும். என் ஆத்மா மட்டும் இருக்கும் போது உ ன் முகத்தை தொட்டு பார்க்க எவ்ளோ ஏங்கிருக்கேன்னு தெரியுமா?” என்றான் விழிகளில் ஏக்கத்தோடு.
“எனக்கு புரியாமலில்லை ஷ்ரவ். ஆனா, நாம முதல்ல வீட்டுக்கு போவோம் அண்ணன் தேடிட்டு இருக்கார்.” என்றாள் மதி.
“அந்த பய தேடிட்டு இந்த வழியா தான் வருவான் அதுவரைக்கும்.” என்று அவளின் முகத்தை தொட்டு பார்க்க தொடங்கினான்.
இதயத்தில் எழும் பதற்றத்தோடு விழி மூடி அவன் விரல்களின் தீண்டலில் எழும் இன்பத்தை ரசித்து கொண்டிருந்தாள்.
எதிரிலிருப்பவளின் முகத்தை தொட ஜென்ம ஜென்மமாய் ஏங்கியிருந்தவன் போல், விழிகள் திறக்காமல் மனக்கண்ணில் அவளின் உருவம் நிறுத்தி ஒவ்வொரு அணுவும் கரையும்படி மென்மையாய் ஒரு ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டிருந்தான். அனைத்து உணர்ச்சிகளையும் கடந்திருந்தது அந்த தொடுதலில்..

“டேய்! நான் இங்கே தான்டா இருக்கேன்” என்ற குரலில் இருவரும் திடுக்கிட்டு விழி திறந்து பார்க்க, திருவிழாவில் தொலைத்த குழந்தையை கண்டுபிடித்து முறைக்கும் அப்பாவை போல் இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டிருந்தான் நந்து.

“நீ இங்க தான்டா இருக்க எருமை. என்னை தான் என் பொண்டாட்டி கிட்ட நெருங்க விடமாட்றியே” என்று முணுமுணுத்தான்.
“என்னது?” என்றான் நந்து.
“ஒன்னுமில்லை” என்று உரக்க கூறியவன் பின், மெதுவாய் “இவனை அங்கேயே எங்களை தேடி அலைய விட்ருகனும்” என்றான்.
“ஏன்டா சொல்லமாட்ட? என் பொண்டாட்டிய அங்க வி ட்டுட்டு உனக்காக வந்தேன்ல சொல்லுவ” என்று முறைத்தான்.
“அயோ ரெண்டு பேரும் சண்டையை நிறுத்துங்க. இன்னும் கொஞ்சம் தூரம் போகணும் அதுவரைக்கும் அமைதியா வாங்க” என்றாள் மதி.
“அது எப்படி முடியும் மதி? ” என்று உரக்க கூறியவன் பின், “நான் எவ்ளோ பெரிய கண்டதில்ல இருந்து தப்பிச்சு உயிரோட வந்துருக்கேன் உன்னை கொஞ்ச கூட விடமாட்றான்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிணுங்கலாய் கூறினான்.
அதை கேட்ட மதி சிரிப்பை அடக்க முடியாமல் இதழ்களின் மேல் கரம் வைத்து மெதுவாய் சிரிக்க.
தன் வாழக்கை மீண்டுவிட்டது என்று அவளிறியாமல் ஜொலிக்கும் முகபொலிவும், அவளின் சிரிப்பினில் சொக்க வைக்கும் அந்த பெண்மையின் நளினமும் ஷ்ரவனை கவர்ந்திழுக்க இந்நொடி மதியை அணைத்திட உள்ளுக்குள் ஆசை பொங்கினாலும் திரும்பி நந்துவை பார்த்தவன்.
‘இவனுக்கு நந்து ன்னு பேரு வச்சத்துக்கு பதில் நந்தி ன்னு வச்சிருக்கலாம்.’ என்று திட்டிக்கொண்டே நடந்தான்.
இவ்வளவு நேரம் சிக்னல் கிடைக்காத நந்துவின் மொபைலுக்கு இப்பொழுது சிகனல் கிடைக்க, போன் அடித்தது.
‘ஹப்பா! கடவுளுக்கு இப்போ தான் என் மேல கருணை வந்துருக்கு போல? இப்போ தான் சிக்னல் வருது.’ என்று நினைத்து கொண்டவன்.
“ஹலோ! அகல் எப்படி டா இருக்க?” என்று கொஞ்சும் குரலில் தன் ஆசை மனைவியிடம் பேச ஆரம்பித்தான்.
“ஹ்ம்ம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது. உன் அண்ணா திரும்பி வந்துட்டான். நாங்களும் நல்லா இருக்கோம்” நந்து.
“ஹ்ம்ம் எங்களுக்கு ஒன்னும் இல்ல… நாங்க நல்லா இருக்கோம். நீ பயப்படாத நாளைக்கு அங்க இருப்போம்” என்று தன்னையும் மறந்து பேசிக்கொண்டிருந்தான்.
“அகல்… நான் தான் சொல்றேன்ல. எனக்கு ஒண்ணுமில்லை. நான் நல்லா இருக்கேன். நீ எதுக்கும் பயப்படாதே. நாளைக்கு இந்நேரத்துக்கு உன் முன்னாடி இருப்பேன். சரியாடா?’ என்றான் அகல்யாவிடம்.
“ஐ லவ் யு அகல்” என்று பேசிக்கொண்டிருக்க, எதிரில் கரங்களை கட்டிக்கொண்டு முறைத்தபடி நின்றிருந்தான் ஷ்ரவன்.
“ஹீ ஹீ ஹீ.. அது ஒண்ணுமில்ல… ஷ்ரவ்…” என்று ஆரம்பிக்கும் முன் ஷ்ரவன் நந்துவை துரத்த ஆரம்பித்திருந்தான்.
“டேய் சொன்னா கேளுடா! உன் தங்கச்சிகூட தானே பேசினேன்.” என்று கேட்டபடியே ஓடிக்கொண்டிருந்தான் நந்து.
“எப்படி எப்படி? உன் பொண்டாட்டியை விட்டு வந்துட்ட. அதனால என் பொண்டாட்டிய நான் கொஞ்ச கூடாது. ஆனா, போன் வந்தவுடனே ஈ..ன்னு போய்ட்ட போன் பேச. உனக்குன்னா தேனு எனக்குன்னா வேப்பிலையா? உன்னை இன்னைக்கு இருடா. என் கைல மாட்டினா அவ்ளோ தான்” என்று திட்டியபடி ஷ்ரவன் நந்துவை துரத்தி கொண்டிருந்தான்.
இவர்களின் இந்த சிறுபிள்ளை தனத்தை ரசித்து சிரித்தபடி வந்துகொண்டிருந்தாள் மதி.
நீண்ட பயணம் தொடர, “ஷ்ரவன்! எல்லாரும் உன்னை பார்த்தவுடனே எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலை. என்ன பதில் சொல்றது? எப்படி புரிய வைக்கிறது? எதுவும் தெரியலை.” என்றாள் மதி ஷ்ரவனின் தோளில் சாய்ந்தபடி.
“எவ்ளோ நிறைய தடைகள் எல்லாத்தையும் பார்த்து இதோ இன்னைக்கு நிஜமா உன் முன்னாடி உயிரோட வந்து நிக்கிறேன். இதுக்கப்புறம் எல்லாத்தையும் ரெண்டு பேரும் ஒண்ணா இருந்து சமாளிக்கலாம். எனக்கு நம்பிக்கை இருக்கு மதி குட்டி. கவலை படாத” என்று அவளின் தலையை கோதிவிட்டான்.
அந்த கோதலில் அவனின் நம்பிக்கையும் காதலும் சேர்ந்து தெரிந்தது.

Advertisement