Advertisement

“இல்ல கவி.. நீ அப்படி  செய்யக்கூடாது. நீ முதல்ல எப்படி வந்த?” அதிர்ச்சியாய்.
“அதுவா? நீ என் பொண்டாட்டியை தடுத்திட்டா என்னை யாரும் காப்பாத்த மாட்டாங்கன்னு தப்புக்கணக்கு போட்டுட்ட? ஆனா, அவ விட்ட வேலைய இன்னொருத்தர் செஞ்சு முடிச்சிட்டாங்க. அவங்களால தான் இன்னைக்கு இங்க உன் முன்னாடி நிக்கிறேன்.” என்றான் ஷ்ரவன்.
 “மதி இல்லாம இன்னொருத்தரா? இங்க எனக்கு தெரியாம இன்னொருத்தரா யார் அது? என் கண்ணுக்கு  தெரியலையே?” என்று பரபரப்பாக தேடினான்.     
“ஹா ஹா ஹா நீ எவ்ளோ தேடினாலும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்க கனி. நான் காட்டவா யார் அதுன்னு?” என்றான் சிரித்துக்கொண்டு ஷ்ரவன்.
“யாரு?” என்றான் சரத் விழிகளில் பயம் நிரப்பி.  
“இதோ?” என்றான் பக்கத்தில் இருக்கும் கருவனின் எலி உருவத்தை காட்டி.
எலியின் உருவத்தில் மிகவும் சிறியதாக இருந்த  கருவனை  பார்த்து அதிர்ச்சியானான்.
“என்னது எலியா?” என்றான் ஒன்றும் புரியாமல்.
“ஹ்ம்ம் எலியே தான்” என்று சிரித்து தன் உருவத்தில் இருந்து சுய உருவத்திற்கு வநதான் கருவன்.
“கருவா?” என்றான் கேள்வியாய் வியந்து.
“ஆமாம். நானே தான் என் நண்பனுக்கு உதவுவதற்கு தானே என் பிறப்பு.” என்று அமைதியாய் நின்றான் கருவன்.
“இது எப்படி நடந்திருக்க கூடும்? என் விழிகளை மீறி இவன் எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்” தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டிருந்தான் சரத்.
“டேய்! ரொம்ப யோசிக்காத. இல்லாத மூளையம் கரைஞ்சு ஓடிட போகுது ” என்று சிரித்தான் ஷ்ரவன்.
“போதும் பேசினது எல்லாம். நீ எனக்கு பண்ண கொடுமைக்கு இல்ல எங்களுக்கு பண்ண கொடுமைக்கு. உனக்கான தண்டனை” என்று தன்  கையில் இருப்பதை எதுத்து அவன் முன் நீட்ட  கனி.
“இல்ல கவி. இது மாதிரி செய்யாதே. என்ன இருந்தாலும் நான் உனக்கு சகோதரன் அல்லவா?” என்றான் கனி.
“ஆமா. எனக்கு சகோதரன் தான். அது போன ஜென்மத்துல. இப்போ மதிக்கு சகோதரன் தானே? அப்படி இருக்கும் பொழுது உறவுக்கு என்று ஒரு மரியாதை தரமாட்டாயா? அதற்கான தண்டனை தான் இது” என்று அவன் கையில் இருந்த அந்த மாலையில் இருந்து ஒரு சில முத்துக்களை கனியின் மேல் வீச, அதிலிருந்து தப்புவதற்குள் கனியின் மேல் விழுந்தது மணிகள்.
 அடுத்த நொடி உஷ்னம் உடல் முழுவதும் பரவ, தீ மேனியெங்கும் பற்றி வலி தாளாமல் கனி கதறினான்.
இருந்தும் அவனின் முடிவு அவனின் தீய எண்ணங்களினால் உண்டானது. அடுத்தவர்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே நல்லது.
உறவுகளுக்கு மரியாதையும் உயிருக்கு அன்பும் தந்து வாழ்ந்தாலே குற்றங்கள் குறைந்துவிடும்.
கனியின் உயிரோடு சேர்ந்து நுதலும் காற்றில் கரைந்திட, அதனை பார்த்துக்கொண்டிருந்த மதியின் இடையில் கரம் பதித்து தன் பக்கம் இழுத்தான் ஷ்ரவன்.
ஒரு நொடி ஆடி போனவள் ஷ்ரவனை முழுவதுமாய் கண்டவுடன் புது வாழ்வு தனக்காக காத்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டாள்.               
“மதிகுட்டி ” என்று காதில் கிசுகிசுக்க.
இத்தனை நாள் கேட்ட இந்த குரல் இனி நிழல் அல்ல நிஜமாகி போனது என்பதை ஏற்று கொள்ளவே நேரம் ஆகிப்போனது அவளுக்கு.
“நீ இல்லன்னா இந்நேரம் நான் இல்ல மதி.” என்று அவளை ஆரத்தழுவி கொண்டான்.
“ஹுஹும்” என்று செருமி, “நான் இங்கு தானிருக்கிறேன் நண்பா” என்றான் கருவன்.
 உடனே பிரிந்த இருவரும் மெல்ல சிரித்தனர்.
“ரொம்ப நன்றி. சரியான நேரத்துல வந்து எனக்கு உதவுனிங்க. இல்லன்னா என் ஷ்ரவன் எனக்கு கிடைச்சிருக்கு மாட்டார்.” என்று கரம் கூப்பினாள் மதி.
“இருக்கட்டும் அம்மா. இது என் தலையாய கடமை. மேலும் என் சாபம் நீங்கவே இது தான் காரணம்” என்றான் கருவன்.
“என்னது சாபமா?” என்றான் ஷ்ரவன்.
“ஆமாம் நண்பா! தெரியாமல் செய்த தவறுக்கு முன் ஜென்மத்தில் துறவி ஒருவரின் சாபத்தினால் பகலில் மனிதன் இரவில் எலியானேன். என் நண்பனுக்கு இப்பிறவியில்  உதவுதின் மூலம் சாபம் நீங்கும் என்பது என் சாபத்திற்கான பிராயச்சித்தம் அம்மா. அது தான் நிறைவேறியிருக்கிறது.” என்று வணங்கினான் கருவன்.
“ஷ்ரவன் நாம இங்க இருந்து முதல்ல வெளிய போவோம்” என்று மதி கூறினாள்.
“ஹ்ம்ம்.. போலாம் மதி. வெளிய அவன் வேற நின்னுட்டு இருக்கான். புலம்பிட்டே இருப்பான்.” என்று நந்துவை நினைத்து சிரித்தான்.
“சரி” என்று இருவரும் நகர்ந்தனர்.
“வா கருவா” என்று அழைத்தான் ஷ்ரவன்.
“இல்லை நண்பா. எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது நான் அவர்களை காண செல்ல வேண்டும்” என்றான் சிரித்துக்கொண்டு.
“என்ன?” இருவரும் ஆச்சர்யமாய்.
“நான் அவர்களை காண  செல்ல வேண்டும்.” என்றான் கருவன் சிறிது.
சற்று அதிர்ந்தாலும் சாபத்தினால் வந்த வினை என்று புரிந்து கொண்டு அவனுக்கு விடைகொடுத்து பின்னர் தாங்களும் வெளியே வந்தனர்.
அவர்களுக்காக அங்கே காத்துக்கொண்டிருந்த நந்து ஷ்ராவனை முழு உருவமாய் பார்த்தவுடன் ஓடி வந்து தழுவி கொண்டான்.
“மதி உன் புருசனை திரும்பி கொண்டு வந்துட்ட. ரொம்ப சந்தோசம்மா. இனி, நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்மா ” என்று கண் கலங்கினான்.
“டேய் விடுடா. அது தான் ஒரு பெரிய கண்டத்திலேர்ந்து வந்துட்டேன்ல? சரி, நாம முதல்ல ஊருக்கு போன உடனே. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. பழைய மாதிரி தான் நாம இனி இருக்கனும்” என்றான் ஷ்ரவன்.
“சரி டா” என்று சிரித்தான் நந்து.
“அகல்யா ரொம்ப சந்தோச படுவா. அவ மட்டுமா எல்லோரும் தான்” என்றான் நந்து.
“ஹ்ம்ம் யார் கிட்டயும் இங்கே நடந்ததை சொல்ல கூடாது. என்னை கடத்தி வச்சிருந்தாங்க வேற ஒரு பாடிய என் இடத்துல வச்சிருந்தாங்கன்னு மட்டும் சொல்லி. அவங்க கிட்ட இருந்து மீட்டுட்டு வந்தோம்னு சொல்லுங்க” என்றான் ஷ்ரவன்.
அவனையே மதி பார்த்து கொண்டிருக்க,
“என்னடி இப்படி பார்த்துகிட்டு இருக்க?” என்றான் ஷ்ரவன்.
“இல்ல உனக்கு இவ்ளோ அறிவா?” என்றாள் அவனை சீண்ட.
“எனக்கு  அவ்ளோ அறிவெல்லாம் இல்லடி. இருந்திருந்தா ரெண்டு ஜென்மமா உன்னையே சுத்தி வருவேனா” என்றான் ஷ்ரவன்.
“உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா இப்படி சொல்லுவ ? உன்னை” என்று துரத்த அவளுக்கு போக்கு காட்டி ஓடி கொண்டிருந்தான் ஷ்ரவன்.
இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி நடந்து கொண்டிருந்தான் நந்து.

Advertisement