Advertisement

கரையும் காதலன் 34
அவனிடம் இருந்து விலகிய ஷன்மதி, உள்ளத்தால் நடுங்கியபடி அடியெடுத்து வைக்க, அவளின் மேனியை ஏதோ ஒரு தீய சுவாசம் தீண்டியது போல் உணர்ந்தவள். பையில் இருந்த குங்குமத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டாள்.
ஷ்ரவனால் தான் உள்ளே செல்லமுடியாத மந்திரக்கட்டை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.
‘என்ன இது என் மதிக்கு வந்த சோதனை? என்னால் அவளுக்கு உதவி செய்ய முடியவில்லையே’ என்று வருந்தினான்.
 ஷ்ரவனின் உடலருகே சென்ற மதிக்கு அவனை அந்த நொடியே அணைத்துக்கொள்ள உள்ளம் துடித்தது.
‘என்னவனின் உடல் இங்கிருந்தும் என்னால் தொட முடியவில்லையே.’ என்று வருந்தினாள்.
அடிமேல் அடிவைத்து விழிகளை அங்கும் இங்கும் சுழட்டிக்கொண்டு ஷ்ரவனின் அருகில் சென்றவள் ஒருநொடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின் மெல்ல நகர்ந்து அந்த நீல குப்பியை எடுக்க முன்னேறினாள்.
இரண்டடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.
அவளின் அருகாமையில் ஓர் குரல் கேட்டது.
“மலர்!” மிக மெதுவாக கேட்டது.
அக்குரலில் அவளின் உயிரினில் ஒரு துளி சில்லிட்டது.
‘இந்த குரலை நான் எங்கயோ கேட்ருக்கேன்’ என்றது அவளின் மனம்.
“மலர்! என் அன்பே!” என்றது இம்முறை.
“இது… இது… அந்த கனியழகனின் குரல் தானே?’ மதியின் எண்ண அலைகள் தாறுமாறாக ஓட தொடங்கியது.
“இரண்டு பிறவிகள் என்ன? இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்… செதுக்கி வைத்த சிற்பம் போலவே ஜொலிப்புடன் திகழ்கிறதே!! எப்பிறவியில் நான் செய்த புண்ணியமோ? இப்பிறவியில் உன் விரல் தீண்ட காத்திருக்கிறேன் கண்ணே! இதோ பார் அந்த கவியின் உடலை இங்கே உனக்காக தான் வைத்திருக்கிறேன். உன் மேனியை தீண்டும் முன் அவன் உயிரை குடித்த காலன் நானே!” என்று அவளின் அருகிலேயே குரல் மட்டும் வந்துகொண்டிருந்தது.
“இங்க பாரு… நான் மலர் இல்ல… நான் ஷன்மதி… சாதாரணமான பொண்ணு. என் புருஷனோட உடலை இங்க எதுக்கு வச்சிருக்க? நீ யாரா இருந்தா எனக்கென்ன? நான் இங்கிருந்து போனா என் புருஷனோட தான் போவேன். நீ போயிடு..” என்றாள் உதறும் உள்ளத்தை வெளிக்காட்டாமல்.
“நீ இந்த பிறவியில் மலர் அல்ல என்பதை நானறிவேன் கண்ணே! அதோடு அந்த கவியின் ஆத்மா உன்னை இங்கு அழைத்துவரும் என்பதும் எனக்கு தெரியும். உன்னை நான் நெருங்க முடியாதபடி அந்த கவிந்தமிழன் அவனறிந்த வித்தைகளை கொண்டு கட்டுகளை போட்டு வைத்தான்.” என்று உரக்க சிரித்தான்.
“ஆனால் நானோ அவன் கட்டுகளை உடைக்காமல் என்னை தேடி உன்னை வரவழைத்தேன். இந்த நொடி முதல் நீ எனக்கு உரிமையானவள்” என்ற குரல் இன்னும் அருகில் நெருங்க தீயினில் நிற்பது போல் உணர்ந்தாள் ஷன்மதி.
‘ஷ்ரவன்! எனக்கு பயமா இருக்கு.. எங்க இருக்க? நான் என்ன பண்ணனும்? ஷ்ரவன்’ என்று மனதிற்குள்ளே பிதற்ற ஆரம்பித்தவளிற்கு ஷ்ரவனின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.
‘மதிக்குட்டி பயப்படாத… இந்த வாய்ப்பை விட்டுட்டா அவ்ளோ தான் இனி என்னை எப்போதுமே உன்னால மீட்க முடியாது’ விருட்டென்று எழுந்தவள் கையில் வைத்திருந்த குங்குமத்தில் சிறு துளி தூவ.
“ஹா ..” என்ற அலறல் மட்டும் கேட்டது.
“மலர்! என்ன அது? தூரத்தில் தூக்கி ஏறி” என்று அக்குரல் கூவ, இது தான் சமயம் என வேகமாக அந்த பெட்டியில் இருந்த நீல குப்பியை எடுத்து பிரித்தாள்.
அந்நீரை தெளிக்கும் முன் யாரோ அவளின் கரங்களை பற்றி தடுப்பதை போல் உணர்ந்தவள்.
“யாரு விடுங்க… என் கைய விடுங்க.. ” என்று திமிறினாள்.
“எனக்கே உன் வேலையை காட்டுகின்றாயா? மயக்க மருந்து கலந்த பாலை எனக்கு கொடுத்து உறங்க வைத்தவள் தானே நீ” என்று சீறியது அக்குரல்.
எதிர்பாரா நேரம் தன் பலம் கொண்டு திமிறி தன்னை விடுவித்தவள் ஒரு நொடி கூட தாமதியாமல் அந்நீரை தெளித்தாள்.
புயலென ஓடி சென்று அம்மாலையை எடுத்தவள் வேகமாக ஷ்ரவனின் உடலிடம் ஓடி வர, “இம்முறை உன்னால் தப்பிக்க முடியாது மலர்” என்று அம்மாலையை தீண்டாமல் மலரை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டது கனியழகன்.
இவற்றையெல்லாம் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஷ்ரவனின் ஆன்மா அழத்தொடங்கியது.
‘அயோ நான் கூறியது போல் நடக்க போகிறது. நீரை தெளித்தவுடன் அக்கட்டுகளை அவிழ்க்க சொன்னேன். மதி மறந்துட்டியே இன்னும் ஒரு நாழிகைக்குள்ள கழுட்டலைன்னா அவ்ளோ தான் என் வாழ்க்கையே முடிஞ்சுது அதோட உன் வாழ்க்கையும்’ என்று தனக்குள் புலம்பினான்.
“என்னை எதுக்கு கட்டி போட்ட? என்னை விட்டுடு. நான் ஷ்ரவன் கூட சந்தோஷமா வாழணும். உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன்” என்று தன் வாழ்வை எண்ணி அழத்தொடங்கினாள்.
“ஷ்ரவன் எங்க இருக்க நீ? வா வந்து என்கூட இரு” என்று கதறினாள்.
“அச்சச்சோ மலர்… ஹ்ம்ம்… மதி… இனி நீ என் பொண்டாட்டி. நான் இந்த பிறவியில் யாருன்னு பார்க்கணுமா?” என்றது அந்த குரல்.
 “நீ யாரா இருந்தாலும் உன் எண்ணம் நடக்காது. என்னைக்கும் நான் ஷ்ரவனோட மதி. வேற யாரும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது.” என்று கத்தினாள் மதி.
“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… மதி பே..பி…” என்ற அந்த குரலின் மெல்லிய அழைப்பில் உயிர்நாடி சிலிர்க்க நிமிர்ந்தாள்.
“நீ … நீ… இந்த குரல்… இந்த குரலை.. நான் கேட்ருக்கேன்… எனக்கு ரொம்ப தெரிஞ்ச குரல்…” என்று தனக்குள் யோசித்தாள் மதி.
“நல்லா யோசி மதி பேபி,.. உனக்கு என்னை நல்லாவே தெரியும்… அதோட இந்த பிறவியில் உன் ஷ்ரவனுக்கும் என்னை தெரியும்… உனக்கு ரொம்ப தெரிஞ்சவன்… ஹா..ஹா. ஹா. இப்போ உனக்கு சொந்தமானவன் ஆக போறேன்.” இங்கே அக்குரல் மதியை பார்த்து பேசிக்கொண்டிருந்த நேரம்.
அவ்வுருவமில்லா உயிருக்கு பின்னால் ஷ்ரவனின் உடலில் சிறியதொரு மாற்றம்.
ஷ்ரவனின் குரல் கடவுளின் செவியில் விழுந்தது போல் ஓர் அதிசயம் நடந்தது. 
அது ஷ்ரவனையும் மதியையும் இணைத்ததா?      

Advertisement