Advertisement

“ஹ்ம்ம் இன்னொருத்தர் வந்தா முடியும்” என்று சிரித்தான் ஷ்ரவன்.
‘யார்?’ என்பது போல் புருவம் உயர்த்தி பார்த்த ஷன்மதி, பின் “கருவன் ” என்றாள் முகம் பிரகாசமாய்.
‘ஆமா’ என்பது போல் தலையசைத்து, “எப்படி சொன்ன?” என்றான் ஆச்சரியமாய்.
“நீ உன்னோட கலைகளை சொல்லிக்கொடுத்த ஒரே ஒருத்தர் அவர் தான?” என்றாள் சாதாரணமாக.
“உண்மை தான். ஆனா, அவன் இப்போ இருக்கானான்னு தெரியலையே?” என்றான் ஷ்ரவன் சிறிது சோகமாய்.
“நான் இருக்கேன் ஷ்ரவன். நீ இல்லாம நான் இங்கே இருந்து போகமாட்டேன்.” என்றாள் மதி தீர்மானமாக.
“அது அவ்ளோ சுலபம் இல்ல மதி.” என்றான் எச்சரிக்கையாய்.
“நிச்சயமா கனியழகன் மட்டும் தான் இருப்பான். என் அண்ணன் இருக்க மாட்டான்” என்றாள் மதி.
“இருக்கலாம் மதி. அவன் அப்பவே நம்மகூட சேர்ந்து இருக்க ஆரம்பிச்சுட்டான்.” என்றான் ஷ்ரவன்.
“சரி. நான் உள்ள போகட்டா?” என்றாள் மதி.
“இன்னொரு வேலையும் இருக்கு உனக்கு” என்றான் ஷ்ரவன்.
“என்ன?” என்றாள் ஆர்வமாக.
“என் மேல அந்த கெமிக்கல் தெளிச்சப்புறம் என் கை கால் சேர்த்து கட்டு போட்ருக்காங்க பாரு. அதை எடுத்திடனும். அப்டி நீ எடுக்கிறதுக்குள்ள ஏதாவது நடந்துட்டா அவ்ளோ தான். இவ்ளோ நாள் நீ பட்ட கஷ்டம் எல்லாம் வீண். நல்லா கேட்டுக்கோ, ஒரேமுறை தான் இதை செய்ய முடியும்.” என்றான்.
“புரியுது ஷ்ரவன். எனக்கு நீ வேணும். அதுக்காக எவ்ளோ ரிஸ்க் வேணா எடுப்பேன்” என்றாள் மதி.
“மதி நீ மட்டும் நான் சொன்னதை செய்துட்டா? அப்புறம் அந்த திறமைகள் எனக்கு கிடைக்கும். அதோட, என்னை என் உடலில் இருந்து அதுக்கப்புறம் பிரிகிறது முடியாத காரியம். ஆனா..” என்று இழுத்தான் ஷ்ரவன்.
“என்ன ஷ்ரவன்?” என்றாள் மதி.
“அது அந்த பெட்டிய அங்க இருந்து உன்னால மட்டும் தான் எடுக்க முடியும். ஆனா, அது எடுத்தப்புறம் உன்கிட்ட இருந்து பறிக்க முடியும். அது இல்லன்னா என் உயிர் இல்ல.” என்றான் ஷ்ரவன்.
அவனின் வார்த்தைகள் பயத்தை தந்தாலும் வெளிக்காட்டாமல், “சொல்லிட்டியா? இல்ல இன்னும் இருக்கா?” என்றாள் மதி.
அவளின் விழிகளை ஆழமாக நோக்கியவன். மேனியின் ஸ்பரிசம் இல்லாத அன்பின் ஸ்பரிசத்தில் அணைத்துக்கொண்டான்.
“மதிம்மா! பயமா இருக்காடா?” என்று மிகவும் மென்மையான குரலில் அவளின் உயிரை வருடும்படி கேட்க.
விழிகளில் வழியும் கண்ணீரை துடைத்தபடி, “உன்னோட இந்த அணைப்பு உண்மையாகணும்னு ஏங்கிட்டு இருக்கேன் ஷ்ரவன்.” என்று தொடமுடியாத அவனின் முகத்தை வருடி, “இந்த முகத்தை நான் என் கையால ஆசையா தொட்டு பார்க்க போற நேரம் இன்னும் கொஞ்சம் தான் இருக்கு ஷ்ரவன்..” என்று அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்.
“உன்னோட அன்பான வார்த்தைகளோட உன் அணைப்பு, தொடுதல், முத்தம், அன்பு எல்லாமே எனக்கு வேணும் ஷ்ரவன். கண்டிப்பா உன்னை மீட்பேன்” என்றவள் அவன் எதிர்பாராநேரம் மின்னல் வேகத்தில் அவனின் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தாள்.
“மதி!” என்றான் மின்னல் தாக்கிய இன்பத்தில் ஷ்ரவன்.
மூடிய விழிகளில் ஒரு துளி கண்ணீர் வழிவது போல் தெரிய, “ஹ்ம்ம் என் ஷ்ரவன் ரொம்ப தைரியமானவன். இல்லன்னா இவ்ளோ நடந்தும் நீ உயிரோட வரணும்னு போராடுவியா?” என்று சிரித்தாள் மதி.
“நான் உள்ள போறேன் ஷ்ரவன்” என்று திரும்பினாள் மதி.
அவளின் கரம் பற்றி ஒரு நொடி நிறுத்தியவன். “மதி! நான் அங்கே பூஜையரைல இருந்த மதுரை மீனாட்சி அம்மனோட குங்குமத்தை எடுத்துட்டு வரசொன்னேனே எடுத்துட்டு வந்தியா?” என்றான் ஷ்ரவன்.
“எடுத்துட்டு வந்துருக்கேன். இதோ” என்று தன் பையில் இருந்து எடுத்து கொடுத்தாள்.
அதிலிருந்து ஒரு துளியை எடுத்து அவளின் நெற்றி வகிட்டில் வைத்தான்.
“இன்னொன்னும் எடுத்து வரசொன்னேனே?” என்று கேட்டான்.
“ஹ்..இருக்கு ஷ்ரவன்” என்று சிரித்தவள் எடுத்து அவன் முன் கொடுக்க.
“இதையெல்லாம் நாம முற்பிறவியில் வாழ்ந்த, இந்த இடத்துல தான் என்னால செய்ய முடியும் மதி.” என்று அவளின் கைகளில் இருந்த மங்கல்யத்தை வாங்கி அவளின் கழுத்தினில் கட்டினான்.
“இது நிழல் தான் பொண்டாட்டி. நிஜமாகுறது உன்கிட்ட தான் இருக்கு. இந்த குங்குமம் மங்கல்யமும் இல்லாம அங்க போகமுடியாது மதி உன்னால..” என்றான் அவளின் நெற்றியோடு நெற்றி மோதி விழிகள்மூடி.
“இது ரெண்டாவது தடவை என் கழுத்துல தாலி கட்டிருக்கடா புருஷா! கண்டிப்பா இந்த தடவை உன்னை என்கிட்ட இருந்து தப்பிக்க விடமாட்டேன் ” என்று சிரித்தாள்.
மதியின் பேச்சில் கரைந்து அவனும் சிரித்தான்.
“சரி. நான் போறேன்” என்று கூற இம்முறை தொடுதல் இல்லாமல் அவளின் இதழில் முத்தமொன்றை பதித்து, “பத்திரம் மதி. இங்க என்னால எந்த உதவியும் பண்ண முடியாது. ஹ்ம்ம் இந்த குங்குமம் உன்கிட்டயே இருக்கட்டும் ஒருவேளை உன்னை யாராவது நெருங்கினா இதை கொஞ்சம் தூவு. உன்னை காக்கும்” என்று அவளை விடுத்தான் ஷ்ரவன்.

Advertisement