Advertisement

32
அங்கே நின்றிருந்தது மருதன்.
அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன்.
“உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு?  உயிரோடு விடக்கூடாது” என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல்.
“அவன் இல்லை என்றால் இந்நேரம் நாம் அனைவரும் இந்த நஞ்சு கலந்த பாலை அருந்தி மாண்டிருப்போம்” என்றான் செந்தமிழன்.
“என்ன சொல்கின்றீர் அண்ணா?” என்றான் கவிந்தமிழன்.
“ஆமாம் கவி. கனி இவனையும் சேர்த்து தான் கொல்ல திட்டமிட்டிருக்கிறான். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த இவன் அந்த துரோகிக்கு உதவி செய்ததை நினைத்து வருந்தி நம்மை காக்க சற்று முன் தான் வந்தான். என்னிடம் கூறியபொழுது நான் நம்ப மறுத்தேன். அந்த ஒற்றன் மூலம் உண்மை என்று அறிந்து இங்கு வந்தேன். சரியான நேரத்திற்கு வந்து தட்டிவிட்டேன் இல்லை என்றால் மலர் அருந்தியிருப்பாள்.” என்றான் செந்தமிழன்.
“அண்ணா!” என்று ஓடிவந்து மருதனை அணைத்துக்கொண்டாள்.
அவளின் தலை வருடிவிட்ட “மலர்! என்னை மன்னித்துவிடம்மா. பெரும் தவறிழைத்துவிட்டேன் உனக்கு” என்று கண்கலங்கினான் மருதன்
“அந்த கனியழகனை விடமாட்டேன். அவனின் பாவங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அண்ணனின் தாரத்தை அன்னையாக நினைக்க மறந்து நீச எண்ணம் கொண்ட அந்த கயவனை இன்றே இந்த உலகை விட்டு அனுப்புகிறேன்” என்று கோபத்தில் கொக்கரித்து செல்ல திரும்பிய கவிந்தமிழனை நிறுத்தினான் மருதன்.
“தங்களின் கரங்களால் அந்த பாவ செயலை செய்ய வேண்டாம். உடன்பிறந்தவனை கொன்றான் கவின்தமிழன் என்ற அவப்பெயர் வேண்டாம். அந்த காரியத்தை நான் செய்து முடித்துவிட்டேன் ” என்றான் மருதன்.
“என்ன சொல்கிறாய் மருதா?” என்றான் கவி.
“ஆம்! நமக்கு தர சொன்ன அதே நஞ்சை அவனின் உணவில் கலந்து சிறையிலேயே கொடுக்க வைத்துவிட்டேன். இந்நேரத்திற்கு அந்த பாவியை மரணம் தழுவி இருக்கும்” என்றான் மருதன்.
“அயோ அண்ணா! என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்றாள் மலர்.
“உனக்கு அவ்வளவு தீங்கு இழைத்தவனுக்காக நீ ஏன் வருத்தப்படுகிறாய் மலர்?” என்றான் மருதன்.
“ஆயிரம் இருந்தாலும் அவர் இவரின் சகோதரன் அல்லவா?” என்றாள் மலர்.
“தேவையில்லை. அப்படி ஒரு தம்பி இருந்தான் என்பதை மறந்துவிடவேண்டும்” என்றான் கவி.
எல்லோரும் சிறைக்கு செல்ல அங்கே உயிருக்கு போராடி கொண்டிருந்தான் கனி.
“என் … வழி..லே..யே.. என்..னை .. இப்படி செய்துவி…ட்டிர்கள் அல்…லவா?”   என்றான் கனி.
“நீ இருந்தென்ன பயன் கனி? உறவுகளின் அருமை தெரியவில்லை உனக்கு” என்றான் கவி.
“இதோடு இது முடியப்போவதில்லை கவி. நீங்க இருவரும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்  இவளை நான் அடையாமல் விடமாட்டேன். அடுத்த பிறவியில் உன் திறமைகளை பெற்று இவளை  உரிமையாக்கி உன்னை தனித்து கொல்லவில்லை என்றால் நான் என் குருவிடம் கற்ற அணைத்து கலைகளும் உண்மையில்லை என்றாகும்” என்றபடியே கண்கள் சொருகி உயிர் நீத்தான்.
இதோ இந்தப்பிறவியில் இவர்கள் படும் துன்பத்திற்கு இதுவும் ஒரு காரணமாக…
**********************
 அந்த புகைப்படத்தில் முற்பிறவியை கண்ட மதி, “ஷ்ரவன்!” என்று அவனின் கைகளை பிடித்து கொண்டாள்.
“பயபடக்கூடாது” என்று உள்ளே முன்னேறினான்.
மதியும் அவனை தொடர்ந்து முன்னேற.
“மதி அங்க பாரு.. அதோ ..” என்று கை  நீட்ட, அங்கே பதப்படுத்த பட்ட நிலையில் அவனின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
“ஷ்ரவன்.. இப்போ நான் என்ன பண்ணனும்?” என்றாள் ஒரு முடிவோடு மதி.
“இங்க தான் அவங்க ரெண்டு பேரும்  இருக்காங்க. அவங்க கண்ல படாம அங்க பாரு என் உடல் வைக்க பட்டிருக்க இடத்துக்கு பக்கத்துல ஒரு சிறிய மரப்பெட்டி இருக்கு” என்றான் ஷ்ரவன்.
அவன் கூறிய இடத்தை ஆராய்ந்தவள், “ஆமாம் அங்க இருக்கு.” என்று அவனை பார்த்தாள்.
“அந்த பெட்டியில்  ஒரு சின்ன நீல குப்பியில் இருக்க கெமிக்கலை என் உடம்பு மேல முழுவதும் தெளிக்கணும்” என்றான் ஷ்ரவன்.
“தெளிச்சா? உடனே நீ வந்துடுவியா?’ என்றாள் ஆர்வம் மின்ன மதி.
“அவசரப்படக்கூடாது மதி. இல்ல உடனே நான் வரமாட்டேன். அந்த திரவியத்தை என் மேல தெளிச்சா அது தான் முதல் படி. பின்னர் அதோ பாரு அங்க ஒரு மணி மாலை இருக்கு.” என்றான் ஷ்ரவன்.
அந்த மணிமாலையை பார்த்த பின், “ஆமா இருக்கு ” என்றாள் மதி.
“அந்த மாலையை  எடுத்து என் கழுத்துல போடணும். அந்த மணிமாலை என் குருநாதர் எனக்கு பயிற்சி முடிச்சப்புறம் கொடுத்த பரிசு. அதுக்கு மிக்க ஷக்தி இருக்கு ” என்றான் ஷ்ரவன்.
“ஓஹ் ” என்றாள்  மதி.
“அப்படி அந்த மணிமாலைல என்ன ஷக்தி இருக்கு?” என்றாள்  மதி.
“ஆமா மதி . என்னோட சிறப்பு  சக்திகளை யாருக்கும் கொடுக்காம பாதுகாக்கும். வேற யாராலயும் அதை எடுக்க முடியாது ” என்றான் ஷ்ரவன்.
“அப்படியா?” என்றாள் விழிகள் விரித்து மதி.
“ஆமாம். என்னடி இவ்வளவு சாதாரணமா கேக்குற?” என்றான் ஷ்ரவன்.
“பின்ன வேற எப்படி  கேக்கணும்?’ என்றாள் குறும்பாய் மதி.
“மதி ஒருவேளை இதுல என் உயிர் திரும்ப வராமா போயிடுச்சுனா என்ன பண்ணுவ?” என்றான் ஷ்ரவன்.
அவன் விழிகளையே சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்த  மதி, நீ இல்லாம இங்க எனக்கு என்ன வேலை உன் கூடயே வந்துடுவேன்.” என்றாள் மதி.
“மதி” என்று ஷ்ரவன் பதறினான்.
“என்ன?” என்றாள் மதி.
“ஏண்டி இப்படி பேசுற?” என்றான் கோபமாய் ஷ்ரவன்                       
“நீ மட்டும் ஏன் தேவையில்லாத கேள்வியெல்லாம் கேக்குற? அப்படியே நீ இல்லன்னு உன் ஞாபகத்துலையே இருக்கேன்னு வை. நம்ம உறவை பத்தி யாருக்கு என்ன தெரிஞ்சிருக்கும்? சாதாரணமா சின்ன வயசா இருக்கு வேற  ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கமான்னு  சொல்லுவாங்க. மனசுல உன் கூட வாழ்ந்துகிட்டு வேற ஒருத்தன் கூட என்னாலலாம் குடும்பம் நடத்த முடியாது” என்றாள்  தீர்மானமாய் மதி.    
“மதி! ஐ ஆம் சாரி” என்றான் ஷ்ரவன்.
“சே நீ எதுக்கு ஷ்ரவன் சாரி சொல்ற? நீ என்ன பண்ணுவ?” என்றாள்  மதி.
“மதி என்னை எப்படியாவது காப்பாத்திடுடி. எனக்கு உன்கூட ரொம்ப நாள் வாழனும்” என்றான் ஏக்கமாய் ஷ்ரவன்.
“அப்புறம் உன்னைத்தவிர வேற யாராலயும் இப்போ நான் சொன்னதை செய்யமுடியாது. தொடவும் முடியாது ” என்றான் ஷ்ரவன்.
“ஏன்? தொடக்கூட முடியாது?” என்றாள் மதி.
“ஆமாம் மதி. என் உயிரில்  கலந்தவ நீ மட்டும் தான்” என்று சிரித்தான் ஷ்ரவன்.

Advertisement