Advertisement

உள்ளே அடியெடுத்து வைத்த மலரிதழ், கண்முன்னே தன் உயிரினில் கலந்த தன்னவன் அசைவற்ற நிலையில் செங்குருதி ஒழுக, மஞ்சத்தில் மயக்கமாகி இருந்த கவிந்தமிழனை கண்டு இதயம் துடிக்க மறந்த நிலையில் கண்ணீர் வழிய தான் காண்பது கனவா? நினைவா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
பின் சுயநினைவு கொண்டு வேகமாக அவனிடம் ஓடினாள்.
“என்னாயிற்று இவருக்கு? ஏன் பிழிந்த நாராய் கிடக்கிறார்?” என்றாள் பெருங்குரலில்.
அவளை பார்த்த கருவன், “அம்மா! தங்களின் வருகைக்காக தான் காத்திருந்தேன் தாயே! நீர் தான் காப்பாற்றப்போகிறீர்” என்றான்.
ஒன்றும் புரியாமல் முழித்த மலர், “தாங்கள் யார்? என்ன சொல்கிறீர்? ஒன்றும் விளங்கவில்லை. சொல்வதை விரைவாக சொல்லி என் நாதனின் உயிர் காக்க உதவிடும்” என்றாள் தவிப்பான குரலில் மலர்.
“தாயே! நான் கருவன். உங்கள் கணவரின் பால்ய மற்றும் ரகசிய நம்பிக்கைக்கு உரிய தோழன்.” என்றான் கருவன்.
“என்ன?? ரகசிய தோழனா? என்ன சொல்கிறீர்?” என்றாள் ஒன்றும் விளங்காமல் விரல்கள் விரித்து.
“ஆமாம் தாயே! நாங்கள் இருவரும் பால்ய காலத்திலிருந்து சிநேகிதர்கள். இந்நாட்டின் நன்மைக்காக எங்களின் உறவை வெளியே தெரியாது ரகசியமாக வைத்திருந்தோம். வெளியில் இருந்தும் உள்ள நாட்டில் நடக்கும் அனைத்து செயல்களையும் மன்னருக்கு பத்து நாளைக்கு ஒரு முறை நேரில் பார்த்து செய்தி கூறி அவர் கூறியபடி அனைத்தையும் செய்துமுடிப்பேன். இதோ இப்பொழுது கூட , அவரின் அணைத்து திறமைகளையும் எனக்கு சொல்லிக்கொடுத்தவர். ஒருவேளை தேவைப்பட்டால் உற்ற நேரத்தில் உங்களுக்கு சொல்லலாம் அதுவே தெரியக்கூடாது என்று கூறியிருந்தார். இப்பொழுது அதற்கான நேரம் வந்துவிட்டதம்மா. தங்களின் உயிருக்கு எதிரிகளிடம் இருந்து காக்க ஐயம் கொண்டே இவ்வாறு செய்தாரம்மா.” என்றான் கருவன்.
எதுவும் பேசாமலே அனைத்தையும் கேட்டுக்கொண்டு நின்றாள் மலரிதழ்.
“தாயே! நான் கூறுவதை கேளுங்கள். இப்பொழுது மன்னர் கண்திறக்கும் வரை தாங்கள் இந்த ஏற்றிய தீபம் அணையாது பாதுகாக்க வேண்டும். அதோடு அவரின் வலக்கரத்தை விடாது பற்றியிருக்க வேண்டும். இப்பொழுது நான் கூடுவிட்டு கூடு பாயப்போகிறேன். அதற்கு அவரின் சரி பாதியாக தங்களின் உதவி வேண்டுமம்மா” என்று கூறியவன் அடுத்த நிமிடம் செயலில் இறங்கினான்.
கடைசியாக “கூடுவிட்டு கூடு பாய்ந்த பின் என் உடம்பில் இருப்பார்… சிறிய வேளைக்கு தான்” என்றான் கருவன்.
விழிகள் மூடி விரல்கள் மூடி தியானத்தில் சிறிதுநேரம் பின் கருவனின் உடல் மண்ணில் மெல்ல சாய்ந்தது.
பின்னர் சிறிது நேரத்திற்கு பின் கருவனின் உடலின் மூலமாக கவிந்தமிழன் எழுந்தான்.
எழுந்தவன் தான் இருக்கும் உடலை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் அருகில் தன்னவள் இருப்பதை கண்டவன் காதல் ததும்பும் விழிகளோடு அருகில் சென்றான்.
கருவனின் உடலில் கவிந்தமிழன் வந்துவிட்டதை உணர்ந்த மலரிதழின் இதழ்கள் மெல்ல புன்னகை அரும்ப தன் கரத்தினால் அவன் தன்னை தொடாமலும் நெருங்கவதையம் நிறுத்தினாள்.
“அன்பே என் முன்னே இருப்பது தாங்கள் தான் என்பதை நானறிவேன். இருப்பினும் வேறு ஒரு ஆடவனின் உடலில் இருக்கும் தாங்கள் என்னை தீண்டுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. வந்த பணியை விரைவாக முடித்துவிட்டு தங்களின் மேனியோடு வாருங்கள் மகிழ்ச்சியோடு ஏற்கிறேன். நான் கூறுவதில் தவறிருந்தால் என்னை மன்னிக்கவும்” என்று விழிநீர் கசிய கரம் கூப்பினாள்.
அவளை அள்ளி தழுவ துடிக்கும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு அவளின் நிலையை உணர்ந்ததால் விழிகளால் அவளை பருகி விருட்டென்று வெளியேறினான்.
மலருக்கு நேரங்கள் யுகங்களாய் கடக்க தன்னவன் எதுவும் பேசாமல் வெளிய சென்றதை நினைத்து வருந்தினாள்.
உள்ளே வந்த கருவனின் (கவிந்தமிழனின்) கரங்கள் நிறைய மூலிகைகள் இருந்தன.
அவற்றை கவனித்து கொண்டிருந்த மலரின் விழிகள் ஆச்சர்யத்தில் மின்னின.
“என்ன அப்படி பார்க்கிறாய் மலர்? கருவனுக்கு என் சிகிச்சைக்கான மூலிகைகளுக்கான மூலிகைகளை முழுவதுமாக அறிந்து கொள்ளமுடியவில்லை. அதனால் தான் இப்படி செய்துள்ளான்.” என்று புன்னகைத்தபடி தேவையான மருந்துகளை துரித வேகத்தில் தயாரித்தவன் அதை அவளிடம் கொடுத்து, “நான் சென்று மீண்டும் உன்னவனாக வருகிறேன். உன் மயில் கரங்களால் இம்மருந்தினை எனக்கு புகட்டிடு.” என்று தியானத்தில் உடல் சரிந்தான்.
மீண்டும் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த கருவன், ” தாயே!” என்று வண்ங்கினான்.
“மிக்க நன்றி கருவா” என்று மருந்தினை கவிந்தமிழனுக்கு புகட்டினாள்.
“இது என் பாக்கியம் தாயே” என்று மீண்டும் வணங்கினான் கருவன்.
இரண்டு நாட்கள் செல்ல கவிந்தமிழனுக்கு சுயநினைவு திரும்பியது.
துயிலில் இருந்து எழுபவன் போல் எழுந்த கவிந்தமிழன் கருவனை கண்டதும் ஆரத்தழுவிக்கொண்டான்.
“நண்பா” என்று கருவனும் கண்கலங்கினான். இவர்களின் நட்பை கண்ட மலர் மெய்சிலிர்த்தாள்.
“நான் தான் சிறுவயது முதலே கூறுகிறேன் அல்லவா கறுவா? நம் நாட்டிற்கும் எனக்கும் நீயும் ஒர் முக்கிய பாதுகாவலன் என்று. பார்த்தாயா இன்று? என் உயிரை காத்திருக்கிறாய் நன்றி தோழா” என்றான் கவிந்தமிழன்.
“இது என் கடமை தோழா. உனக்காக என் உயிர் தர காத்திருக்கிறேன். நான் இதோ வருகிறேன்” என்றவன் கவிந்தமிழனிடம் மலரை கண் ஜாடை காட்டி புன்னகைத்து நகர்ந்தான்.
அவன் செயலை கண்டு புன்னகைத்த கவிந்தமிழனின் விழிகள் தன்னவளிடம் சென்று நிலைத்து நிற்க, தன் கணவன் மீண்டு வந்த ஆனந்தத்தில் நின்றிருந்தாள் மலர்.
“மலர்!” என்றான் மென்மையாய் கவிந்தமிழன்.
“தாங்கள் இல்லாமல் இவ்வுயிரும் இம்மேனியையும் சுமந்தென்ன பயன் என்று என்னை அழித்திருப்பேன் ஆனால்…” என்று நிறுத்தினாள் மலர்.
“ஆனால்… என்ன தேவி? என் ரூபத்தில் வந்த பின்னும் இன்னும் விலகி நின்று என்னை சோதிப்பது ஏனோ?” என்று கள்ளச்சிரிப்பு சிரித்தான்.
அவளின் மனம் கவர்ந்த புன்னகையை கண்டதும் துன்பம் பனிபோல் வெயிலாக ஓடி சென்று அணைத்துக்கொண்டாள் மலர்.
அவளின் மேனி குலுங்க கண்ணீர் துளிகள் அவனின் நெஞ்சை நனைத்திருந்தன.
“ஆனால் என்ன தேவி?” என்று மீண்டும் கேட்டான்.
“அது… அது… நான் தங்களுக்கு தூது அனுப்பினேனே வரவில்லையா?’ என்றாள் அவனை காணாமல்.
“நானே சிறைப்பட்டிருந்தேன்… எனக்கு எப்படி உன் தூது கிடைக்கும் தேவி” என்றான் ஒன்றும் அறியாதவன் போல்.
“அது … என் உயிர் மட்டுமென்றால் மாய்த்து கொண்டிருப்பேன் ஆனால்.. என்னோடு சேர்த்து தங்களின் உயிரும் ஒரு சிறு உயிராய் நம் ராஜ்யத்தின் கனவாய் வளர்கிறது. அப்படி இருக்கும் பொழுது எப்படி என்னால் அவ்வாறு சுயநலமாக யோசிக்கமுடியும்?” என்றாள் மலர் நிலத்தை நோக்கியபடி.
“நானும் அறிவேன் மலர். உன் இதழின் வழி அறியவே உன்னை சீண்டினேன் ” என்றான் கவிந்தமிழன்.
“சொல்லன்னா இன்பத்தில் என்னை திளைக்க வைத்துவிட்டாய் அன்பே! உனக்கு என் நன்றிகள்” என்றான்.
“ஏன் இவ்வாறெல்லாம் பேசுகிறீர்கள்?” என்று பதறிப்போனாள் மலர்.
“காலம் தாமதிக்காமல் விரைந்து அரண்மனை செல்ல வேண்டும்” என்று எழுந்தவனை தடுத்தது ஓர் குரல்.
“ஒன்றும் தேவையில்லை… உன் உடல்நலம் தான் முதலில் … பின்பு தான் நாடு. நானிருக்கிறேன்” என்றான் செந்தமிழன்.
“அண்ணா…” என்று மகிழ்ச்சியோடு அவனை அணைத்துக்கொண்டான்.
“அண்ணா தாங்கள் மட்டும் அங்கு என்ன செய்யமுடியும்? நானும் உங்களுடன் வருகிறேன் ” என்றான் கவின்தமிழன்.
“கவி நான் சொல்வதை கேள். உன் உதவி எங்களுக்கு வேண்டும். ஆனால் இரண்டு நாள் மட்டும் ஓய்வு எடுத்து வா” என்று சிரித்தான் செந்தமிழன்.
“சரி” என்றான் கவி.
**************************
சிறையில் இருந்த கனியழகன் சதி திட்டம் தீட்டிக்கொண்டிருந்தான்.
அவனின் மிகுந்த நம்பிக்கைக்குரிய ஒரு பணியாளரிடம், “நான் கூறியதை கச்சிதமாக முடிக்கவேண்டும் எந்த ஒரு குளறுபடியும் வந்துவிடக்கூடாது.” என்றான் எச்சரிக்கும் வகையில்.
“தாங்கள் கூறியபடியே செய்துவிடுகிறேன்” என்றவன் சிறிது யோசித்து “கண்டிப்பாக மருதனுக்கும் சேர்த்து தான் இதை செய்யவேண்டுமா?” என்றான் சேவகன்.
“ஆமாம்!” என்றான் கனியழகன்.
************************
இரவு உணவு முடிந்து அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சேவகன் அனைவருக்கும் அருந்த பசும்பால் கொண்டுவந்தான்.
அனைவருக்கும் கொடுத்துவிட்டு செல்ல, எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்த செந்தமிழன்.
மலர் அருந்தபோன நேரத்தில் தட்டிவிட்டான்.
“என்னாயிற்று மாமா?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் மலர்.
எல்லோரும் செந்தமிழனை பார்க்க.
செந்தமிழன் “கொண்டு வாருங்கள் அந்த துரோகியை” என்றான் கோபமாக.
இழுத்து வரப்பட்டான் கனியழகனின் கையாள்.
“இவன் நாம் அருந்தி இருந்த இந்த அனைத்து பாலிலும் நஞ்சை கலந்துவிட்டான்” என்றான் செந்தமிழன்.
“என்ன?” என்றான் கவிந்தமிழன்.
“ஆம்?” என்றான் செந்தமிழன்.
தன் இடையில் இருந்த வாளை உருவிய கவிந்தமிழன்.
அவன் கழுத்தில் வைத்து, “யாரடா உன்னை அனுப்பியது?” என்று கர்ஜித்தான்.
“நான் கூறுகிறேன். அவனை அனுப்பியது கனியழகன்” என்று ஒரு குரல் வர அனைவரும் அத்திசையில் திரும்பினர்.
அங்கே,…

Advertisement