Advertisement

இருப்பதில் நிறையாமல், இன்னும் இன்னும் என பல சந்ததியினருக்கும் சேர்த்து உழைக்கும் பணக்காரர்களும், அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று மருளும் அடித்தட்டு மக்களும் அசந்து உறங்கும் அர்த்தசாமம் தாண்டிய வேளை அது.
பௌணர்மி முடிந்து சில நாட்கள் தான் ஆகி இருக்க வேண்டும் என கட்டியம் கூறும் வகையில்,
சற்று கரைந்து இருந்தாலும், ஒரு சோபையுடன்
ஒளிர்ந்து கொண்டிருந்தது பால்நிலா.
நிலவிற்கு போட்டியாக அங்கொன்றும், இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் கண்சிமிட்டி சிரித்து கொண்டிருந்த ரம்யமான இரவு.
நகரத்தின் பரபரப்பு, மாசு தன் மீது படியாதவாறு, படாதவாறு சற்று ஒதுங்கி, அலாதியான அமைதியில் மூழ்கி இருந்தது, அளவில் அரண்மனையை ஒத்திருந்த அந்த பெரிய வீடு.
அந்த பெரிய வீட்டின் உரிமையாளன் மட்டும் உறக்கம் கொள்ளாமல், கொள்ள முடியாமல், யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பவன் போல, அந்த  வீட்டின் விஸ்தாரமான, மொட்டை மாடியில் இருந்தான்.
நிலவொளி அவனின் முகத்தை, அந்த இருளிலும் நாம் காண வழி வகைசெய்ய, அவனின் முகத்தில் வளர்ந்திருந்த, ஒரு வார தாடியோ, முழு முகத்தையும், நாம் கண்டு ரசிக்க முடியா வண்ணம் சதி செய்து வைத்தது.
ஒளிப் பொருந்திய தீர்க்கமான அவனின் கண்கள், பிறைநிலவில் இருந்தாலும், கவனம் அங்கு இல்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது, அவனின் பரந்த நெற்றியில் இருந்த சிந்தனை ரேகைகள்.
தான் இருக்கும் சூழலின் ஏகாந்ததையோ, இரவின் இனிமையையோ உணராமல், தன் சிந்தனைகளில் மூழ்கிய வண்ணம், நடைபயின்று கொண்டிருந்தான் அவன்.
அவன் தான் தொழில் துறையில் அனைவராலும் “பி.எஸ்” என்று அழைக்கப்படும் மகானுபவன். பணத்திலே பிறந்து, பணத்திலே வளர்ந்து, அயல்நாட்டில் அதை பெருக்கும், பல தொழிலதிபர்களில் அவனும் ஒருவன்.
“பி.எஸ்” என்ற அவனின் பெயர் பிரசித்தி பெற்ற அளவுக்கு, அவனின் முகம் மற்றவர்களுக்கு பரிச்சயமானது இல்லை.
ஏனோ எப்போதுமே காமிராவின் கண்களில் விழுவதற்கோ, பிரபலம் என்ற பெயரில் அவனின் அன்றாட செயல்கள், மக்களின் மத்தியில் கடைபரப்பப்படுவதிலோ, அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை.
அவன் நேரில் சென்றே ஆகவேண்டும், தவிர்க்க முடியாது என்ற பொதுகூட்டங்களை தவிர, மற்றவை எல்லாம் அவனின் பிரநிதிகளின் பொறுப்பு தான்.
“பி.எஸ்” தன் தந்தையின் திடீர் உடல்நல குறைவு காரணமாக, அரக்கப்பறக்க அயல்நாட்டை விட்டு தன் கூட்டிற்கு திரும்ப, அவன் வந்த சில நாட்களிலே, அவனின் தந்தை இறைவனடி சேர்ந்து விட்டார்.
பதின்மன் வயதில் தாயை இழந்தவன், இப்போது தந்தையும் இழக்க, இப்பொழுது இந்த நிமிடம், இந்த பரந்த உலகத்தில், அந்த பெரிய வீட்டில், உறவென அவனுக்கு யாரும் இல்லை என்பதே நிதர்சனம்.
வேலை, வேலை என உற்றவர்களை விட்டு பிரிந்து அயல்தேசத்தில் இருந்தாலும், நம் வீட்டில், நம் நினைப்போடு இருக்கும், நமக்கான உறவுகள் தானே, நமக்கு உயிர் சக்தியாகவும், உழைக்க உத்தேவகமாகவும் இருக்கும் .
அந்த உயிர்சக்தியை தொலைத்த “பி.எஸ்”, தன்னை தானே தேற்றிக்கொண்டு, தன் சோகத்தில் இருந்து, தானே தன்னை மீட்டும் கொண்டான்.
அடுத்து தான் செய்ய வேண்டியவைகளில் கவனத்தை செலுத்த, எதிர்பாரா இடத்திலிருந்து, புரியாத பூதம் ஒன்று கிளப்பும் அபயாகரமான சூழல் இப்போது.
பல பல எண்ணங்களில் தன்னுள் மூழ்கி இருந்த “பி.எஸ்” இன் செவிகளை ஒரு பாடலின் ஒலி மெலிதாக தீண்ட, அந்த பாடலை தொடர்ந்து, ஒருவர் பேசும் குரலும் கேட்டது.
அந்த குரலை இனம் கண்டு கொண்டவனின் மனம் மகிழ, அடுத்த கணம் மூளையின் கட்டளை இடும் அவசியம் இன்றி, அனிச்சை செயலாக அவனின் அதரங்கள் புன்னகையை பூசி கொண்டன.
வந்த நபர் இவனை நெருங்கவும், இவன் திரும்பவும் சரியாக இருக்க, வந்தவனை பார்த்த “பி.எஸ்” உள்ளார்ந்த பாசத்துடன்,
“ஹே விஜய்”
என அவனின் பெயரை சொல்லி விளிக்க, வந்தவனோ,
“எப்படிடா இருக்க”
என்ற வண்ணம், இவனை நெருங்கி இறுக்கமாக அணைத்து, அந்த அணைப்பின் மூலமே தன் அன்பையும், ஆறுதலையும் மற்றவனுக்கு உணர்த்திவிட்டு, அதற்கு நேர்மாறாக, சலிப்பு விரவிய குரலில்,
“உனக்கு பேச வர சொல்ல நேரம், காலமே கிடையாதாடா” என்று கேட்டு வைத்தான்.
நீண்ட நெடிய வருடங்கள் கழித்து சந்திக்கும் போதும், கடந்து சென்ற வருடங்களின் தாக்கமோ, தயக்கமோ இல்லாமல், இயல்பாக உரையாட வல்ல நட்புகள் எல்லாம் அரிய வகை.
அந்த அரிய வகையிலான இவர்களின் நட்பில், கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து, அர்தசாமத்தில் சந்திக்க நேரம் குறித்த, தன் நண்பனை விஜய் போலி சலிப்புடன் கேள்வி கேட்க, அவனோ,
“ஏன்டா இந்த நேரத்துக்கு என்ன குறைச்சல்”
என்று கேட்டு வைத்தான். அவனின் கேள்வியில், கொஞ்சமே, கொஞ்சம் கோவம் துளிர்விட்ட குரலில்,
“நீ ஏன்டா பேசமாட்ட, பேய் கூட பிஸியா டேட்டிங் போற டைம்ல, உன் கூட என்னை மீட்டிங்கு வர வச்சிட்டு என்ன குறைச்சலாம், கேட்குறான் பாரு கேள்வி”
என இன்னும் அதிகமாக சலித்து கொள்ள, “பி.எஸ்” ஆகப்பட்டவனோ, அவனின் ஆதங்கத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல், அவனின் ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக்கொண்டு,
“ஏன்டா, உனக்கு இன்னும் பேய் பயம் போகலையா”
என அதரங்களில் அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க, அவனின் கேள்வியை எதிர்கொண்ட விஜய்க்குமே கொஞ்சம் புன்னகை எட்டிப்பார்க்க தான் செய்தது. உபயம் அவர்களின் மலரும் நினைவுகள்.
இருவரும் ஒன்றாக விடுதியில் படித்த காலத்தில், விஜயின் பேய் பயத்தை வைத்து, அவனை பி.எஸ் படுத்தியபாட்டை, இப்போது நினைத்து பார்த்த நண்பர்கள் இருவரின் முகத்திலும் ஒரு மந்தகாச புன்னகை.
அந்த புன்னகையுடனே “பி.எஸ்”ன் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக விஜய்,
“இப்பவும் பேய்க்கு பயந்துகிட்டு இருக்க நான் என்ன சின்ன பையனா????”
என பந்தாவாக பதில் கேள்வி கேட்டு நிறுத்த, “பி.எஸ்” அவனை நம்பாத பார்வை பார்த்து வைக்க, தொடர்ந்த விஜயோ,
“இப்போ பெரியவன் ஆகிட்டேன் இல்ல, அதனால் பிசாசுக்கு மட்டும் தான் பயம்”
என முகத்தை பாவமாக வைத்து கொண்டு முடிக்க, அவனின் பாவத்தில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிய இன்னொறுவனோ,
“டேய் , பேய், பிசாசு எல்லாம் இருக்குனு இன்னுமா நம்பிக்கிட்டு இருக்க, அது எல்லாம் வெறும் கட்டுக்கதைடா”
என விஜயின் விளையாட்டு பேச்சை அறிந்து இருந்தாலும், நூற்றில் ஒரு வாய்ப்பாக, அவனின் பயம் உண்மையாக இருப்பின், அதை போக்கிடும் நோக்கத்தில் சொல்ல, விஜயோ வெகு தீவிரமான முக பாவத்துடன்,
“அடேய் பக்கி “பி.எஸ்”, அது கட்டுக்கதை இல்லடா, நான் கட்டி வாழ்ந்து கிட்டு இருக்க கதை”
என, மற்றொருவனோ புரியாத பாவத்தில் பார்க்க, விஜயோ அவனுக்கு தெளிவாக விலக்கிவிடும் நோக்கத்தில்,
“நான் தாலி கட்டி, வாக்கப்பட்டு இருக்குறதே ஒரு பிசாசுக்கு தான்டா”
என சிரியாமல் சொல்ல, அவனின் கூற்றில் இம்முறை வாய்விட்டு சிரித்த “பி.எஸ்”, விஜயை பற்றி தெரிந்தும் அவனின் பயம் உண்மையாக இருக்குமோ என்று நினைத்த தன் மடத்தனத்தை நினைத்து சிரித்தவாறே,
“ஆமா இந்த விஷயம் அந்த பிசாசுக்கு தெரியுமா, இரு இப்போவே போன் பண்ணி மகதி கிட்ட சொல்றேன்”
என கையோடு வைத்து இருந்த கைபேசியை எடுத்து, அழைக்க போவது போல பாவனை செய்ய, உண்மை போலவே பதறிய விஜயோ,
“இல்ல, எதுக்கு உனக்கு இப்படி ஒரு கொலை வெறினு கேட்குறேன், அவ என்னை “அபிமன்யு” மாதிரி தூக்கி போட்டு பந்தாடனும், அதை நீ பார்த்து ரசிக்கணும், அதானே வேணும் உனக்கு, நல்லா வருவ ராசா நீ”
என்று ஏகத்துக்கும் அங்கலாய்க்க, “பி.எஸ்” ஆகப்பட்டவனோ, குழப்பமான முகத்துடன்,
“அபிமன்யுனா மகாபாரத்துல வர அர்ஜுனன் மகன், கிருஷ்ணரோட மருமகன், அவரையா சொல்ற நீ”
என்று இப்போது இங்கு ஏன் அவரை பற்றி பேசுகிறான் என்று யோசனையுடன் கேட்க, இப்போது குழப்பத்துடன் அவனை பார்ப்பது விஜயின் முறையானது,
“எது மகாபாரதமா!!!!! நான் சொன்ன அபிமன்யு கர்நாடகல இருக்குற, கும்கி யானைடா”
என பாவம் போல முகம் வைத்து கொண்டு விஜய் சொல்ல, “பி.எஸ்” பொங்கி வரும் புன்னகையை தடுத்தவாறே, முயன்று கொணர்ந்த தீவிரமான குரலில்,
” உன்னோட கரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது ராசா, பஸ்ட் பிசாசு, இப்போ கும்கி, இது ஆகறது இல்ல, நான் மகதி கிட்ட சொன்ன தான் நீ சரி பட்டு வருவ”
என்று மீண்டும் கை பேசியை எடுக்க, இம்முறை விஜயோ,
“வேண்டாம்டா சொன்னா கேளு, அப்புறம் உன்னோட அப்பாவி நண்பனோட உயிருக்கு உத்திரவாதம் இல்ல சொல்லிட்டேன்”
என இன்னும் தன் மனைவிக்கு பயந்த மாதிரியே பேசிக்கொண்டு இருந்த விஜயின் உருவமோ, அவன் பேசிய பேச்சுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது.
நல்ல அசாத்தியமான உயரம், அதற்கேற்ப கட்டுக்கோப்பான உடல் என காக்கி பேண்ட், வெள்ளை சட்டையில், அழகனாலும், கண்டதும் காவல்துறையை சேர்ந்தவன் எனும் அறியும் வகையில், கரடு முரடனான தோற்றத்துடன் இருந்தான்.
விஜய்யை ஒரு முறை மேலும் கீழும் நன்றாக பார்த்த “பி.எஸ்”,
“எருமை மாடு, மனிஷனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்க உன்னை, மகதி தூக்கி போட்டு பந்தாடுவா, இதை….. நான்……நம்பனும்…….”
என ஏகத்துக்கும் நம்பாத பாவனையை குரலில் காட்ட, தன் உருவத்துக்கு சற்றும் பொருந்தாத, குழந்தை தனமான பாவத்தை கொண்டு வந்த விஜய்,
“நான் எருமை மாடுனா, அவ என்னை அடிக்கும் போது எல்லாம், எமதர்ம ராணியா மாறிடுவாடா”
என அப்பாவியாய் சொல்ல, “பி.எஸ்” ஆகப்பட்டவனோ, அவனின் உவமையில் நினைத்து சிரித்தவாறே,
“அது என்ன எமதர்ம ராணி”
என கேட்க, அவனை இது கூட தெரியாத எனும் விதமாக, “அற்பமானிட பதரே” எனும் இளக்கார பார்வை பார்த்து வைத்த விஜய்,
“எம தர்ம ராஜாவோடா பெண்பால்டா”
என அகராதியில் இல்லாத வார்தைகளை எல்லாம், அர்த்தராத்திரியில் உருவாக்கி, தமிழ் மொழியை வளர்ந்து கொண்டு இருந்தான்.
விஜய் சொன்ன காட்சியை கற்பனையில் கண்ட பி.எஸ், இப்போது என்ன முயன்றும் அடக்க மாட்டாமல் சிரிக்க ஆரம்பித்தான்.
கண்களில் நீர் வரும் வரை சிரிக்கும், தன் நண்பனை தான் பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.
இவன் பார்த்து கொண்டே இருக்க, “பி.எஸ்”சோ மீண்டும் எதையோ நினைத்தவனாக பொங்கும் சிரிப்புடன், விஜயைய் பார்த்து,
“நீ “ராஜா நான் ராஜா”னு விஜய்சேதுபதி பாட்டு ரிங்டோன் அஹ வைக்கும் போதே தெரியும்டா, அதே மாதிரி வீட்டுல தினமும் பொண்டாட்டி கால்ல விழுவேணு “
என இன்னும் சிரிக்க, விஜயோ அவன் கலாய்ப்பதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பட்டினும் மென்மையான குரலில்,
“கால்ல விழுந்தாலும், அதில் என்ன தப்பு இருக்கு, அவ பேமிலி, பிசினஸ்னு எல்லாத்தையும் பார்த்துக்குறதால தான், என்னால டூயூட்டியை எந்த விதமான டென்ஷனும் இல்லாம பார்க்க முடியுது, அவ பிசாசு தான், ஆனா என்னோட செல்ல கியூட் பிசாசுடா”
என்று உணர்ந்து சொல்ல, விஜய்யின் கண்களில் இருந்த காதலும், அதை தாண்டி அவனின் முகத்தில் இருந்த அமைதியும், நிறைவும், அவனின் மகிழ்ச்சியான கல்யாண வாழ்க்கையை தெளிவாக கண்ணாடி போல எடுத்து காட்டியது அவனின் நண்பனுக்கு.
நம்மவர்களின் மகிழ்ச்சி, நமக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது இயல்பு தானே. “பி.எஸ்” அந்த நிறைவை தான் உணர்ந்து கொண்டு இருந்தான்.
“பி.எஸ்”உம், விஜயும் ஒன்றாக ஊட்டியில் ஒரே பள்ளி விடுதியில் தான் தங்கி படித்தார்கள். கல்லூரி இளநிலையும்,பொறியியலே எடுத்து ஒரே கல்லூரியில் ஒன்றாகவே படித்தனர்.
இளநிலை முடித்த கையோடு, விஜய் குடும்ப தொழிலை விடுத்து தன் கனவை நோக்கி ஓட தொடங்க, “பி.எஸ்” வெளிநாட்டில் தொழில் கல்வி மேலாண்மை பயில பறந்து சென்றான்.
“பி.எஸ்” படித்து முடித்து அங்கேயே தங்களின் தொழிலை விரிவுபடுத்த, இங்கு விஜயோ தன் கனவான “ஐ.பி.எஸ்” தேர்வில் வென்று காவல்துறையில் சேர்ந்தான்.
தன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்த பெற்றோருக்காக அவர்களின் விருப்பப்படியே, தங்களின் தொழில்களில் பங்குதாரர் மகளும், தன் சிறு வயது தோழியுமான மகதியையே, ஒரு வருடத்திற்கு முன்பு, தன் மனைவியாக வரித்து கொண்டான் விஜய்.
நண்பர்கள் இருவரும் சற்று நேரம் தங்களின் நினவுகளிலும், கடந்து சென்ற காலங்களிலும் மூழ்கி இருந்தனர்.
முதலில் அதில் இருந்து வெளிவந்த விஜய், தன் நண்பனை பார்த்து, உள்ளார்ந்த அன்புடன்,
“எப்படிடா இருக்க”
என்று தான் வந்த உடன் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்க, இதுவரை இருந்த புன்னகை கொஞ்சம் கொஞ்சமாக விடைப்பெற,
“ம்ம்ம்ம்ம்ம்ம்”
என்று மெதுவாக இன்னதென்று பிரித்தறிய முடியா வகையில் பதில் அளித்தான் “பி.எஸ்”.
தன் நண்பனின் முகத்தில் படிந்திருந்த, கவலையின் நிழலை சகிக்காமல் தான், ஏதோ, ஏதோ பேசி அவனை கொஞ்சம் சிரிக்க வைத்தான் விஜய்.
இப்போது மீண்டும் “பி.எஸ்”ன் முகம், தான் வரும் போது இருந்த பாவத்தை தத்தெடுக்க, சூழலில் கணம் ஏற தொடங்குவது அப்பட்டமாய் புரிய, ஒரு பெருமூச்சுடன் விஜய்,
“சரி சொல்லு என்ன விஷயம், இந்த நேரத்துக்கு, போலீஸ் ஜீப் எடுக்கமா, யாருக்கும் தெரியாம என்னை வர சொல்லி இருக்க, நீ கொடுக்குற பில்டப் எல்லாம் பார்க்கும் போது, விஷயம் பெருசுனு மட்டும் தெரியுது”
என்று பேச்சை அவனே ஆரம்பிக்க, முழுமையாக தீவிர பாவத்தை பூசி கொண்ட மற்றொருவனோ, எந்த வித முகாந்திரமும் இல்லாமல்,
“ஒரு நல்ல எண்ணத்துல அம்மா பேருல
ஆரம்பிக்கபட்ட பார்மா கம்பனியை, இன்னொருத்தர் தன்னோட சுயலாபத்துக்காக தவறா யூஸ் பண்றத, என்னால எப்போவுமே அலோ பண்ணவே முடியாது விஜய்”
என்று உணர்வுபூர்வமாக பேச, சற்று முன்பு வரை இலகுவாக இருந்த சூழல், இப்போது “பி.எஸ்” இன் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக முற்றிலும் இறுக்கமாக உருமாறியது.
காந்தன் வருவான்…….

Advertisement