Advertisement

சிவனே போற்றி போற்றி
கண்மணிகார்த்திக்
(ஆரம்பம்)
பெரிய சத்தங்கள் நிறைந்திருந்த பூங்காவில் நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். அமைதியாக இருந்தேனே தவிர கண்கள் பூங்காவை சுற்றி வேடிக்கை பார்த்தன. காதுகள் அதிக சத்தங்களையும் இனிமையாக உள்வாங்கின.
கையில் இருந்த செல்போன் அலற, அதை எடுத்தேன்.
“ம்மா!”
”கண்ணு! நல்லாருக்கியா? சாப்பிட்டியா?” என்று மென்மையாக ஒலித்த என் அம்மாவின் குரல் பின்னர் “இன்னும் ரெண்டே நாள்ல நவீனுக்கு கல்யாணம். என்னதான் பெரியப்பா பையனா இருந்தாலும் தங்கச்சி முறைக்கு நீ வந்து நிக்கணும். இல்லன்னா அசிங்கமா போயிடும். லீவ் கிடைக்கலைனாலும் பரவாயில்லை. வேலையை விட்டுட்டு வா! நீ சம்பாரிச்சிதான் இந்த வீடு நிறையப்போகுதா? மரியாதையா கிளம்பி வா! இல்ல அப்பாகிட்ட பேசி சமாளிச்சி தாலிகட்டுற நேரத்துக்குதான் வருவேன்னு வந்து நின்ன… கால ஓடிச்சி அடுப்புல வைப்பேன். புரியுதா?” என்று அதிகாரம் கலந்த அதட்டலாய் ஒலித்தது.
இத்தனை நேரம் அவள் பேசியதற்கு முன்னர் எனில் “பாப்போம்! பாப்போம்! ஆமா என்ன இவ்வளவு வளந்த பின்னாடியும் கண்ணு, கண்ணுனு கூப்புடுற? மொதல்ல அப்பாகிட்ட போன குடு!” என்று சிடுசிடுவென பேசியிருப்பேன்.
இப்போது அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஒற்றை வார்த்தை “சரி ம்மா!” என்றேன். 
“என்ன! மூச்சுகுடுத்து பேசுறேன். ஒத்தையா சரினு சொல்லுற?” அதற்கும் சிடுசிடுத்தாள்.
என் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
“நீ இருக்குற ஊர்லதான ராஜாக்கிளியண்ணனும் இருக்காங்க!. கல்யாணத்துக்காக காலையிலேயே வந்துட்டாங்க. அதுவும் குடும்பத்தோட. எத்தனை தடவை சொல்லியிருப்பேன் அவங்க வீட்டுக்கு ஒரு நட போயிட்டு வந்துடுனு. ஒரு தடவையாவது போயிருப்பியா?” என்றாள் இன்னும் அதட்டலாய்.
“சீக்கிரம் வந்திடுறேன்மா!” என்று நான் சொல்ல,
“வந்திடுறேன் இல்ல. வர்ற அதுவும் இன்னைக்கே கிளம்புற. அவங்க பையன் கார்த்திக்கூட லீவ் போட்டுட்டு வந்துட்டான்……………….” என்று நீளமாக என்னிடம் அவள் குறைபட்டதில் எதுவுமே என் காதில் விழவில்லை என்பதுதான் நிஜம். 
“கார்த்திக்! கார்த்திக்!” இந்த பெயரைத் தவிர எதையும் என் புலன்களோ, இருதயமோ ஏற்றுக்கொள்ளவில்லை. அது என் தவறா?
எதிரில் இருந்து என்னை நோக்கி சிறுமி ஒருத்தி ஓடிவந்தாள். ’எதற்காக?’ என்று என் மடியை பார்த்ததில் கையிலிருந்த செல்போன் நழுவி கீழே விழுந்து பல பாகங்களாகப் பிரிந்தன. 
இதய வடிவில் இருந்த அவளின் பலூன் ஒன்று, சுற்றி இருந்த காற்றையும் மீறி என் மடியில் அடமாய் அமர்ந்திருந்தது.  

Advertisement