Advertisement

கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 7
சுமித்ரா விலக விலகத்தான் ப்ரேம் இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குச் சுமித்ராவிடம் எந்தக் குறையும் இல்லை… அதனால் தினமுமே வந்து சுமித்ராவிடம் தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாகத் தெரியபடுத்தினான்.

அதே நேரம் சுமித்ராவும் மிகவும் தெளிவாக இருந்தாள். தான் பிரேமின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தால்… அது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது போல் ஆகும். அதை ஒருநாளும் அவளால் செய்ய முடியாது.

கலாவதி இல்லையென்றால் சுமித்ரா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது. அப்படியிருக்க… அவர் வீட்டுக்கே தான் மருமகளாகச் சென்றால்… இந்தப் பெண்ணை நாம்தான் வளர்த்து விட்டோம். ஆனால் இவள் நமக்கே துரோகம் செய்தாள் என்று தானே அவர் நினைப்பார்.

இனி ஒருவருக்கு உதவி செய்வது என்றால் கூடக் கலாவதி மிகவும் யோசிப்பார். அப்படியொரு நிலையைத் தான் அவருக்கு உருவாக்க கூடாது என நினைத்தாள்.
அதோடு இரண்டே நிமிடங்கள் என்றாலும், ப்ரேமின் அம்மாவின் குணம் அவள் அறிந்தது தானே… பணமும், சரிசமமான அந்தஸ்த்தும் இல்லாமல், தான் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால், தன் நிலை என்ன என்று சுமித்ராவுக்கு நன்றாகவே புரிந்து இருந்தது.
ஆனால் புரிந்து கொள்ள வேண்டிய ப்ரேம், புரிந்து கொள்ளாதது மட்டும் இல்லாமல்…. சுமித்ரா தான் தேவையில்லாமல் மிகவும் அலட்டி கொள்வதாக நினைத்தான்.

ஒருநாள் பிரேமின் அம்மா கலாவதியின் வீட்டிற்கு வந்து, அவரைப் பிடிபிடியென்று பிடித்து விட்டார்.

உன் ஸ்கூல் டீச்சரை என் மகனின் தலையில் கட்ட பார்க்கிறியா?” என நேரடியாகவே கேட்டு விட்டார்.

என்ன சித்தி இப்படியெல்லாம் பேசுறீங்க? எனக்கும் ஒன்னும் புரியலையே….

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பிரேம் பிடிக்கலைன்னு தான் சொல்றான். அதோட வசதியா இல்லைனாலும் பரவாயில்லை நல்ல பெண்ணா இருந்தா மட்டும் போதும்ன்னு சொல்றான். இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?”

அவன் அதைச் சாதாரணமா கூடச் சொல்லி இருக்கலாம் சித்தி.

அவன் இப்ப எல்லாம் உன் ஸ்கூல்லே கதின்னு இருக்கான். உன் ஸ்கூல்ல வேலை பார்க்கிற டீச்சருக்கு என் வீட்ல என்ன வேலை?”
ஐயோ சித்தி ! சுமித்ரா அந்த மாதிரி பொண்ணு இல்லை… அவ ஒரு மரியாதைக்காகத்தான் உங்க வீட்ல பத்திரிகை வைக்க வந்தா….

எனக்கு அதெல்லாம் தெரியாது கலா…. என் மகனின் கல்யாணத்தைப் பற்றி நான் அவ்வளவு கனவு கண்டு இருக்கேன். அதெல்லாம் நடக்காம போனா… என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது.

உனக்குத்தான் யாரை எங்க வைக்கிறதுன்னு தெரியலை….. என் மகனையும் சேர்த்து இழுத்து விடாதே…

சரி சித்தி நான் பார்த்துகிறேன்.என்ற கலாவதியின் குரலில் சுரத்தே இல்லை.
இரண்டு தினங்கள் கலாவதி கவனித்ததில் பிரேம் சுமித்ராவோடு பேச மட்டுமே பள்ளிக்கு வருவது அவருக்குப் புரிந்தது. அவருக்குப் பிரேமின் மீது கோபம் வந்ததை விட…. சுமித்ராவின் மீதே கோபம் வந்தது.
சுமித்ராவை அலுவலக வேலையில் இருந்து மீண்டும் ஆசிரியர் வேலைக்கே மாற்றினார். ஏற்கனவே சரியாக வேலை செய்யாத ஆசிரியர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கி விட்டு… சுமித்ராவுக்கு அந்த வேலைகளைக் கொடுத்தார்.
அவள் வகுப்பில் இருந்ததால்… ப்ரேமால் சுமித்ராவை சந்திக்க முடியவில்லை. ஆசிரியர் வேலையைத் தவிர மற்ற பொறுப்புகள் ஒவ்வொன்றாக அவளிடம் இருந்து பறிக்கப்பட்டது.

புதிய பள்ளி கட்டிடம் துவங்கியவுடன், சுமித்ராவுக்குத் தருவதாகச் சொன்ன பதவி உயர்வையும் அவர் கொடுக்கவில்லை… வேறு ஒருவருக்கு நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார்.

மற்ற ஆசிரியர்களில் சிலர், ‘மேடம், ஏன் இப்படிப் பண்றாங்க?” என வருத்தப்பட… சிலருக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
யார் என்ன பேசின போதும், சுமித்ரா கலாவதிக்கு எதிராக வாய்திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவள் எப்போதும் போலவே, அவளுக்குக் கொடுத்த வேலைகளைச் சிறப்பாகச் செய்து கொண்டு இருந்தாள்.
கலாவதி அவள் பொறுப்புகளைக் குறைத்தாலும், அவள் சம்பளத்தை மட்டும் குறைக்கவில்லை… அதற்கு அவருக்கு மனம் வரவில்லை… அதே போல் தன் உழைப்புக்கு மேல் வரும் ஊதியத்தை வாங்க சுமித்ராவுக்கும் விருப்பம் இல்லை. எப்படிக் கலாவதியிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டில் ஈஸ்வரிதான் மிகவும் சோர்ந்து போய் இருந்தார். கடைசி வரை திருமணம் செய்யாமலே சுமித்ரா இருந்து விடுவாளோ என அவருக்குப் பயம் வந்துவிட்டது.
தினமும் ஒரு கோவில், விரதம் எனத் தன்னையே வருத்திக்கொண்டார். வீட்டில் தன் அம்மாவையும், பள்ளியில் கலாவதியையும் பார்த்து, தனக்குச் சீக்கிரம் திருமணம் ஆகினால் நிறையப் பிரச்சனைகள் தீரும் எனச் சுமித்ராவுக்குத் தோன்றிவிட்டது.

அந்த நேரம் சுபத்ராவின் மாமியார் சுமித்ராவுக்கு ஒரு வரன் கொண்டு வந்தார். பையன் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை பார்க்கிறான். பெற்றோருக்கு ஒரே பிள்ளை… சொந்த வீடு இருக்கிறது. அவர்களுக்குப் பெண் மட்டும் நல்லா இருந்தா போதும், அவர்கள் வேறு எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை என்றார்.
ஈஸ்வரிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் மாப்பிள்ளை வீட்டினர் பற்றி விவரம் சேகரித்தார். அவர் சொன்ன விவரங்கள் திருப்தியாகவே இருந்தது.

மேகலாவிடம் மாப்பிள்ளையின் ஜாதகம் இருந்ததால்…. அவரும் ஈஸ்வரியும் சேர்ந்து சென்று அப்போதே பொருத்தம் பார்த்து விட்டு வந்தனர். இருவரின் ஜாதகமும் நன்றாகப் பொருந்தி இருந்தது.

மாலை பள்ளியில் இருந்து வந்த சுமித்ராவிடம், ஈஸ்வரி விவரம் சொல்ல… அப்போது மேகலாவும் அங்கேதான் இருந்தார்.
சுமித்ரா, உனக்குக் கூட அந்தப் பையனை தெரியும். நீ சுபத்ரா கல்யாணத்துல அந்தப் பையனை பார்த்திருக்க….

மேகலா சொன்னதும், யாரு என்பதைப் போல் சுமித்ரா யோசிக்க…அவன் பேரு தீனா… நீதான் அவனை என்கிட்டே கூடிட்டு வந்த. நான் கூட உன்னோட சாப்பிட அனுப்பி வச்சேனே…என்று அவர் சொன்னதும், சுமித்ராவுக்கு நியாபகம் வந்துவிட்டது.

ஓ… அவரா…என்றாள்.

அவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த சுபத்ரா… தன் அக்காவை அங்கருந்து தள்ளிக் கொண்டு சென்றாள்.

ஹே… ஆளு எப்படி? பார்க்க நல்லா இருந்தாரா?” அவள் ஆர்வமாகக் கேட்க….
சுமித்ரா பதில் சொல்லாமல் தன் தங்கையைப் பார்த்து சிரித்தாள்.

சொல்லு கா… ப்ளீஸ்…தெரிந்து கொள்ளவில்லையென்றால் சுபத்ராவுக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருந்தது.
எனக்கு அவ்வளவா அவர் முகம் நியாபகம் இல்லை…

சுமித்ரா பொய் சொல்கிறாள் என்று அவள் முகத்தில் இருந்தே தெரிந்தது. அவளுக்கு அவனை நன்றாக நினைவு இருந்தது. வேண்டுமென்றே தெரியாதது போல் நடித்தாள்.
சுபத்ரா, “அம்மா, முதல்ல மாப்பிளையோட போட்டோ கேட்டு வாங்குங்க மா….எனக் கத்தியபடி அங்கிருந்து சென்றாள்.
சுபத்ரா முன்பு மாதிரி சுயநலமாக இப்போது இல்லை…. திருமணதிற்குப் பிறகு நிறையவே மாறி இருக்கிறாள்.
அதோடு சமீபமாகத் திலிப்பின் நடவடிக்கையை வேறு கேள்விபட்டவள், தன் அக்கா இல்லையென்றால் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கையே கிடைத்து இருக்காது என்பதைப் புரிந்து கொண்டாள்.

தனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கச் செய்த அக்காவுக்கு, சீக்கிரமே நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதார விரும்பினாள்.
மாலை மேகலாவும், சுபத்ராவும் கிளம்பி சென்றதும், ஈஸ்வரி சுமித்ராவிடம் அவளது விருப்பத்தைக் கேட்க…. அவள் முழுமனதாகச் சம்மதம் என்றாள்.

அன்று இரவே ஈஸ்வரி தனது சம்பந்தியிடம் சுமித்ராவின் விருப்பத்தைத் தெரிவிக்க… அதன்பிறகு மேகலா தீயாக வேலை பார்த்தார்.
இரண்டு நாட்களிலேயே சுமித்ராவை பெண் பார்க்க வந்தனர். முதலில் மற்றவர்களுக்காகச் சம்மதம் சொன்ன சுமித்ராவுக்கு, தீனாவை மாப்பிள்ளையாகப் பார்த்த போது மிகவும் பிடித்து விட்டது.
ஆள் நல்ல நிறமாக, சரியான உயரம் அதற்கேற்ற உடல்வாகுடன் இருந்தவனைப் பார்க்கும் போது… தான் அவனுக்குப் பொருத்தமாக இல்லையோ என அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

அவள் அதைச் சுபத்ராவிடம் சொன்ன போது, “நீயா எதாவது பேசி கெடுக்காத அக்கா… நீயும் ஒன்னும் கருப்பு இல்லை…. நீ மாநிறமா இருக்க… அவரு உன்னை விடக் கொஞ்சம்தான் கலரா இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடி தான்.என்றாள்.

அன்றே பூ வைத்து நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டில் சீக்கிரமே திருமணத்தை நடத்திவிட வேண்டும் என எதிர்பார்த்தனர். மாப்பிள்ளையின் அப்பாத்தான் எல்லாம் பேசினார்.

தீனாவின் அம்மா உடம்பு முடியாதவர், அவரது கனத்த சரிரத்தை தூக்கிக்கொண்டு நடக்கவே சிரமபட்டார். ஆனால் அவரது சம்மதத்தைப் பெற்றுத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அவரது கணவர் பேசினார்.

இனிமே பொண்ணு வேலைக்குப் போக வேண்டாம்.எனத் தீனாவின் அப்பா சிதம்பரம் சொல்ல…. சட்டென்று திரும்பி தீனாவை சுமித்ரா பார்க்க… அவன் மறுத்து எதுவும் சொல்லவில்லை. அவனுக்கும் அவள் வேலைக்குச் செல்வதில் விருப்பம் இல்லை போல…

நான் அங்க ஏழு வருஷமா வேலை பார்க்கிறேன். திடிர்ன்னு எல்லாம் வேலையை விட முடியாது. எனக்குப் பதில் அவங்க வேற டீச்சர் போடணும். ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி விட்டுடுறேன்.எனச் சுமித்ரா நேரடியாகச் சொல்லி விட…

ஒரு நொடி கனத்த நிசப்தம். மீண்டும் மேகலா தான் பேச்சை ஆரம்பித்தார்.
உங்க மருமகள் வேலைக்குப் போற அவசியம் இல்லை. ஆனா இத்தனை நாள் பார்த்த வேலையையும் உடனே விட முடியாது இல்லையா…நாளைக்கே ஸ்கூல்ல சொல்லிட்டு, எவ்வாளவு சீக்கிரம் வேலையை விட முடியுமோ…அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவா…
ஆமாம் சரிதான்.எனத் தலையசைத்தாலும் சிதம்பரத்துக்கு இன்னும் முழுச் சம்மதம் இல்லை என நன்றாகவே தெரிந்தது.

தீனா எதிலும் கலந்து கொள்ளவில்லை… அமைதியாக இருந்தான். ஆனால் அடிக்கடி சுமித்ராவை மட்டும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வான்.
கிளம்பும் போது சுமித்ராவை பார்த்து புன்னகைத்தபடி தலையசைத்தான்…. பதிலுக்கு அவளும் தலையசைத்தாள். அவர்கள் சென்றதும், எல்லோரும் வீட்டிற்குள் சென்றனர்.
சுமித்ரா வேலையை விட மாட்டேன்னு சொன்னதும், அவங்க முகம் ஒருமாதிரி மாறிடுச்சு… நீயும் அப்படிச் சபையில வச்சு சொல்லி இருக்கக் கூடாது. அப்புறமா வேற யாரையாவது விட்டு சொல்லி இருக்கலாம்.என வாணி சொல்ல.. மீனாட்சி அதற்கு ஒத்து ஊதினார்.

எனக்கு எதையும் நேரா பேசித்தான் பழக்கம்.எனப் பட்டென்று சொல்லிவிட்டு சுமித்ரா உள்ளே சென்றாள்.

இவ அடங்க மாட்டா போலிருக்கு… அவங்க வசதி குறைவான இடத்தில பொண்ணு எடுக்கிறதே… வீட்டுக்கு அடங்கின பொண்ணா இருக்கனும்ன்னு தான். சொல்லி வைங்க அண்ணி.என்ற நாத்தனார்கள் இருவரும் கிளம்பினார்கள்.

காரில் செல்லும் போது அதையே தீனாவின் பெற்றோரும் பேசிக்கொண்டு சென்றனர்.
தீனா காரை ஓட்ட… அவன் பக்கத்தில் சிதம்பரமும், பின் இருக்கையில் திலகாவும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் மூவர் மட்டும் தான் வந்திருந்தனர். நெருங்கிய உறவினர்களைக் கூட அழைத்து வரவில்லை.
அந்தப் பொண்ணு பட்டு பட்டுன்னு பேசுற மாதிரி தெரியுது. முதல்லியே நீ அடக்கி வைக்கணும் தீனா… இல்லைனா, நீ சொல்றதுக்கு உன்னை அவ தலையாட்ட வச்சிடுவா….சிதம்பரம் சொல்ல…
அதெல்லாம் என்கிட்டே நடக்காது. நீங்க என்கிட்டே சொல்ல வேண்டியது தான… உங்களை யாரு நேரடியா அவகிட்ட கேட்க சொன்னா?”

எதை எப்ப செய்றதுன்னு தெரியாது… இதுல மத்தவங்களுக்கு அட்வைஸ் வேற….தீனா கடுப்பாகச் சொல்ல… சிதம்பரம் தலை குனிந்தார்.

உங்க அப்பாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருந்தா… நாம இன்னும் எங்கையோ போயிருப்போமே….என்று திலகாவும் சலித்துக் கொண்டார்.

அன்று இரவு வந்த பாலா, சுபத்ராவோடு சேர்ந்து சுமித்ராவை கேலி செய்தான்.

ஒருத்தவங்க கல்யாணம் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு…. இப்ப இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் செஞ்சுக்கப் போறாங்க.

ஆமாம் பாலா… ஒரு பழமொழியே இருக்கு தெரியுமா? ரொம்ப நாள் இருந்த பொண்ணுக்கு நிறைஞ்ச மாப்பிள்ளை அமையும்ன்னு… சுமித்ராவுக்கும் நல்ல இடம் அமைஞ்சிடுச்சு.
சரிதான் அத்தை. ஆனா ஏன் நீங்க அதுக்குள்ள அவசரமா அவங்களைப் பூ வைக்க விட்டீங்க. நாம மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்க வேண்டாமா…

சுபத்ரா மாமியாருக்கு நல்லா தெரிஞ்ச இடம்தான். அவங்களே நல்ல இடம்ன்னு சொல்லும் போது… நாம இன்னும் வேற யாருகிட்ட போய் விசாரிக்கப் போறோம். அதுவும் நமக்கு இவங்க சொந்தகாரங்களும் இல்லை….

அவங்க சொன்னா நல்ல இடமாகத்தான் இருக்கும்.என்றபடி பாலா உள்ளே செல்ல… அவனோடு மற்றவர்களும் செல்ல… சுமித்ரா அங்கேயே தோட்டத்தில் நிலவை பார்த்தபடி அமர்ந்து விட்டாள்.

அவளைத் திரும்பி பார்த்த பாலா, “மேடம் கனவுலோகத்தில இருக்காங்க.எனக் கிசுகிசுக்க…அதை கேட்டு மற்ற இருவரும் சிரித்தனர்.

இன்னும் தனக்குத் திருமணம் உறுதி ஆனதை நம்ப முடியாமல் தான் சுமித்ரா இருந்தாள். முதல்ல போய் மேடம்கிட்ட கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொல்லணும். பிறகு என்னைப் பத்தி மேடம் புரிஞ்சிப்பாங்க.

அப்போதும் அந்தப் பேதை மனம் தான் கலாவதிக்கு நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என நிரூபிக்கத்தான் ஆசைப்பட்டது.

அவளுடைய நல்ல மனதுக்கு அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா? சில நேரம் நல்லவர்களாக இருப்பதோடு வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

Advertisement