Advertisement

கண்டுகொண்டேன் காதலை


அத்தியாயம் – 6 

சுபத்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்று விட்டது. ஈஸ்வரி நினைத்தது போல் சுமித்ரா கல்யாணத்திற்குப் பணம் சேர்க்கத்தான் முடியவில்லை. 
முதல் காரணம் இன்னும் திலிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து சுபத்ராவுக்கு ஆடி, தீபாவளி எனச் சீர் செய்யவே சரியாக இருந்தது. 
சுமித்ராவின் சம்பளத்தை மட்டும் எடுக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டு வந்தனர். இன்னும் புதுப் பள்ளி கட்டி முடிக்கப்படவில்லை. 
ஒருநாள் திலிப் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றான். அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றான். வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 
“டேய் ! சம்பள பணத்தைப் பத்திரமா சேர்த்து வைக்கணும். சீக்கிரம் அக்காவுக்குக் கல்யாணம் பண்ணனும்.” என ஏகப்பட்ட புத்திமதி சொல்லி ஈஸ்வரி அவனை வழியனுப்பி வைத்தார். 
புதிய பள்ளி கட்டிடத்தின் திறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாடினர். மந்திரி வந்து பள்ளியை திறந்து வைத்தார். 
விழா பொறுப்பு அனைத்தையும் சுமித்ரா கவனித்துக் கொண்டாள். சுபத்ரா கல்யாணத்திற்கு எடுத்த பட்டு புடவையை நேர்த்தியாக அணிந்து கொண்டிருந்தாள். விழாவுக்குக் கலாவதியின் உறவினர்களும் வந்து கலந்து கொண்டனர். 
ப்ரேமும் விழா வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வெளிநாட்டுக்கு செல்லவில்லை… இங்கேயே அவனது தந்தையின் தொழில்லை பார்த்துக்கொண்டு இருந்து விட்டான். 
பழைய பள்ளிக்கு சுமித்ரா ஒரு வேலையாகச் செல்ல… அவள் பின்னே பிரேமும் வந்தான். அங்கே அலுவலகத்தில் அப்போது வேறு யாரும் இல்லை.
சுமித்ரா எதோ தேடிக்கொண்டிருக்க… அங்கிருந்த மேஜையில் தாவி ஏறி அமர்ந்தான். 
“விழா ரொம்பக் கிராண்டா இருந்தது இல்ல….” 
“ஆமாம்.” 
“இந்த மாதிரி விழாவுல எல்லோரையும் பார்க்கிறது ரொம்பச் சந்தோஷமா இருக்கு… வெரி கலர்புல்.” பிரேம் ரசித்துச் சொல்ல…. 
அவனைத் திரும்பி பார்த்து புன்னகைத்த சுமித்ரா, “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க கல்யாணம் இதை விடக் கிராண்டா இருக்கும்.” என்றாள். 
சுமித்ரா சொன்னதற்குப் பதில் சொல்லாமல் ப்ரேம் புன்னகையுடன் அமர்ந்து இருக்க…. 
“மேடம் கூட வருத்தப்பட்டாங்க, நீங்க எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் வேண்டாம்ன்னு சொல்றீங்கன்னு.” 
“மனசுக்கு பிடிக்கிற மாதிரி காட்ட மாட்டறாங்க. என்ன பண்றது?” 
“உங்களுக்கு எப்படி வேணும்ன்னு நீங்க சொல்லாம அவங்களுக்கு எப்படித் தெரியும்?” 
“நீ சொல்றது கரெக்ட். ம்ம்… உன்னை மாதிரின்னு வச்சுகோயேன்.” பிரேம் சொன்னதைக் கேட்டு சுமித்ரா முகம் மாற… 
“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? உன்னை மாதிரின்னு தான் சொன்னேன்…. உன்னைன்னு சொல்லலை…” 
“இப்படி விளையாட்டுக்கு கூடப் பேசாதீங்க. என் மேல மேடம் ரொம்ப நம்பிக்கை வச்சு இருக்காங்க. நான் அவங்க நம்பிக்கை குறையிற மாதிரி என்னைக்கும் நடந்துக்க மாட்டேன்.” என்றவள், தான் எடுக்க வந்ததை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடிவிடுவென்று சென்றாள். 
அவள் கோபமாகச் செல்வதைப் பார்த்து ப்ரேம் சிரித்துக் கொண்டான். மறுநாளில் இருந்து சுமித்ரா அவனைத் தவிர்க்க ஆரம்பித்தாள். 
மாதம் ஒருமுறை வீட்டுக்கு வரும் திலிப் தன் அம்மாவின் கையில் ஐந்தாயிரம் கொடுத்துவிட்டு செல்வான். அதை ஈஷ்வரி சேர்த்து வைத்துக் கொண்டே வந்தார். 
அன்று சுமித்ராவின் பிறந்தநாள். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்பதால்… நீதானமாகத் தலைக்குக் குளித்து ஈஸ்வரி கொடுத்த புதுப் புடவையை அணிந்து கொண்டாள். 
“அம்மா எங்கையாவது வெளிய போகலாமா?” சுமித்ரா கேட்க… 
அவள் இப்படிக் கேட்பது அதிசியம் எனபதால்… அவளை ஆச்சர்யமாகப் பார்த்த ஈஸ்வரி, “எங்க போறது?” எனப் பதிலுக்குக் கேட்க… 
“பீச்க்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு. அங்க போகலாமா…” என்றாள் ஆசையாக.
“சரி, அப்படியே உன் தம்பியை போய்ப் பார்த்திட்டு. பீச்க்கு போயிட்டு வரலாம். அவன்கிட்ட வரோம்ன்னு சொல்லாத….” என்ற ஈஸ்வரி, தன் கணவரை அழைத்துக் கடையை மூடிவிட்டு வர சொன்னார். 
பதினோரு மணிக்கெல்லாம் மூவரும் ரயிலில் தாம்பரம் சென்று, அங்கிருந்து வேறு ரயில் மாறி சைதாபேட்டையில் சென்று இறங்கி, அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துத் திலிப் தங்கி இருந்த வீட்டிற்குச் சென்றனர். 
அவன் பத்து வீடுகள் கொண்ட சிறிய அப்பார்ட்மெண்ட்டில் இருந்தான். இவர்கள் சென்ற போது… அவனின் நண்பர்கள்தான் வீட்டில் இருந்தனர். திலிப் இல்லை… 
அவனின் நண்பர்கள் அவர்களை வரவேற்று உட்கார வைத்துவிட்டு, திலிப்பை அழைத்து அவனைப் பார்க்க பெற்றோர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். 
சுந்தரம் திலீப்பின் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க… சுமித்ரா எழுந்து வெளியே செல்ல… அவள் பின்னே ஈஸ்வரியும் வெளியேறினார். இருவரும் பால்கனியில் நின்று திலிப் வருகிறானா எனப் பார்த்துக் கொண்டு இருந்தனர். 
அப்போது திலிப் பைக்கில் வந்து இறங்கினான். அவன் வந்த வண்டி புதிதாக இருந்தது. விலை அதிகமான வண்டிதான். 
ஈஸ்வரியும், சுமித்ராவும் அவன் அருகில் வந்ததும், அவனைப் பார்த்து புன்னகைக்க…. பதிலுக்கு மெலிதாகப் புன்னகைத்தவன், “என்ன திடிர்ன்னு வந்திருக்கீங்க?” எனக் கேட்டான். 
“இன்னைக்கு உங்க அக்காவுக்குப் பிறந்தநாள். அதுதான் நாங்க பீச்க்கு வந்தோம். சரி நீயும் இங்கத்தான இருக்க… அப்படியே உன்னையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தோம்.” என ஈஸ்வரி சொல்ல… அனைவரும் உள்ளே சென்றனர். 
ஈஸ்வரி வீட்டை சுற்றி பார்த்தார். திலிப்பின் அறையில் அவனது உடைகள், காலணிகள் என நிறையவே வாங்கி வைத்து இருந்தான். வீடும் நல்ல வசதியாக இருந்தது. 
சிறிது நேரம் அங்கு இருந்துவிட்டு, அவனையும் அழைத்துக்கொண்டு மதிய உணவை ஹோட்டலில் சாப்பிட்டனர். 
பிறகு அங்கிருந்து கடற்கரைக்குச் சென்றனர். இவர்கள் சென்ற அன்று வெயில் அதிகம் இல்லை….கடலின் அருகே சென்று மணலில் உட்கார்ந்து கொண்டனர். 
சிறிது நேரத்தில் சுமித்ரா எழுந்து சென்று அலையில் கால் நனைக்க… சுந்தரமும் எழுந்து நடந்தபடி கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
ஈஸ்வரியும், திலிப்பும் மட்டும் இருந்தனர். “அந்த வண்டி உன்னோடதா…” ஈஸ்வரி மெல்ல பேச்சை ஆரம்பித்தார். 
“ஆமாம் இப்பத்தான் ரெண்டு மாசம் முன்னாடி வாங்கினேன்.” 
“ஓ… விலை அதிகமா இருக்கும் போலையே…”
“லோன் போட்டு வாங்கினேன்.” 
“ரொம்பப் பெரிய வீடு. வீட்டு வாடகையும் அதிகம் இருக்குமே…” 
“என்னோடதான் இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க இல்ல… ஷேர் பண்ணிக்கிறோம்.” 
“அக்காவுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும். அதுவரை கொஞ்சம் சிக்கனமா இருக்கக் கூடாதா?” 
“நான்தான் மாசம் மாசம் பணம் தரேனே…” 
“நீ கொடுக்கிற பணத்தைச் சேர்த்து வச்சு எப்ப அவளுக்குக் கல்யாணம் பண்றது?” 
“அது உங்க பாடு. நான் என்னால முடிஞ்சதுதான் கொடுக்க முடியும். எல்லாத்தையும் உங்ககிட்ட கொடுத்திட்டு நான் தெருவுல நிற்கிறதா?”
மகனின் பேச்சை கேட்டு ஈஸ்வரிக்குக் கொதித்துக் கொண்டு வந்தது. “கூடப் பிறந்தவளுக்குச் செய்றதுக்கு இவ்வளவு கணக்கு பார்க்கிறியே உனக்கு வெட்கமா இல்லையா?” எனக் கேட்டே விட்டார். 
திலிப் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான். 
“உன்னை வளர்த்து விட்டவளுக்கே செய்றதுக்குக் கணக்கு பார்க்கிறியே….”
“என்னை யாரும் வளர்த்து விடலை… நானேதான் மெரிட்ல படிச்சேன்.” 
“ஹாஸ்டல் பீஸ், மெஸ் பீஸ் எல்லாம் யாரு கட்டினது?” எனக் காட்டமாகக் கேட்ட ஈஸ்வரி, 
“உன்னைப் பத்தி தெரிஞ்சுதான். உன் அக்கா அவ கல்யாணத்தைப் பத்தி யோசிக்காம சுபத்ராவுக்குப் பண்ணா போலிருக்கு. எப்படி டா இவ்வளவு சுயநலவாதியா ஆன?” 
“நானும் சின்ன வயசுல இருந்து கஷ்ட்டம் தான் பட்டிருக்கேன். என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் காலேஜ்க்கு விதவிதமா டிரஸ் பண்ணிட்டு வரும்போது…. நான் பரதேசி மாதிரி போட்ட சட்டையவேதான் போட்டுட்டு போனேன்.” 
“இனிமேலாவது வீடு, காருன்னு வாங்கிச் செட்டில் ஆகணும்ன்னு ஆசை இருக்காதா… சம்பாதிக்கிற எல்லாத்தையும் உங்ககிட்ட கொடுத்திட்டு, என்னால கஷ்ட்டப்பட முடியாது.” 
“உன்னோட பணம் வேண்டாம் போடா…. என் பொண்ணுக்கு செய்றதுக்கு நாங்க இருக்கோம். இருக்கிற வீட்டை வித்தாவது நாங்க அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைப்போம்.” என ரோஷமாகச் சொன்ன ஈஸ்வரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 
அதன்பிறகு அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை…. ஈஸ்வரி எதோ யோசனையிலேயே இருந்தார். 
ஆசை தீரும் வரை அலையில் நின்ற சுமித்ரா, தன் தந்தையோடு கடைகளை சென்று பார்த்தவள், அவளுக்கும் சுபத்ராவுக்கும் கொஞ்சம் வளையல்கள், பொட்டு, தலையில் மாட்டும் கிளிப் என சிலது வாங்கிக்கொண்டு வந்தாள். அவள் வந்ததும், உடனே ஈஸ்வரி கிளம்பலாம் என்றார். 
“எதாவது சாப்டிட்டு போகலாம்.” திலிப் அழைக்க…. 
“வேண்டாம் பா… உனக்கு எதுக்கு வீண் செலவு, நாங்க வீட்ல போய்ச் சாப்ட்டுகிறோம்.” என்றார் ஈஸ்வரி. 
திலிப்பின் முகம் தொங்கி விட… அங்கேயே ஒரு ஆட்டோ பிடித்து மூவரும் ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து ரயிலில் செங்கல்பட்டு சென்றனர். 
செல்லும் வழியாவும், ஈஸ்வரி கண் கலங்குவதும், பிறகு அதை அவர் துடைப்பதுமாக இருந்தார். சுமித்ராவும் அதைக் கவனித்தாள். ‘அப்படி என்ன பேசினாங்க. இந்தத் திலிப் என்ன சொன்னான்னு தெரியலையே…’ என யோசித்தபடியே வந்தாள். 
வீட்டிற்கு வர இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. களைப்பாக இருந்ததால்… சுமித்ரா எல்லோருக்கும் இட்லி செய்தாள். காலையில் வைத்த குழம்பே மீதம் இருந்தது.
சுமித்ரா வேலையை முடித்து விட்டு தன் பெற்றோரை சாப்பிட அழைக்க வந்தாள். சுந்தரம் ஹாலில் ஓரமாகப் படுத்திருக்க.. ஈஸ்வரியை காணவில்லை… 
அவரைத் தேடிக்கொண்டு பின்கட்டுக்கு வந்த சுமித்ரா, அவர் அங்கே நின்று போன் பேசுவதைப் பார்த்தாள். 
அவர் பாலாவிடம் தான் பேசுகிறார் என அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அம்மா தன்னிடம் எதையோ மறைக்கிறார் என நினைத்தவள், அங்கேயே நின்று அவர் பேசுவதைக் கவனித்தாள். 
மகனை பற்றித்தான் பாலாவிடம் சொல்லி அழுது கொண்டிருந்தார். 
“ஆம்பிளை பையன் இருக்கான், அவன் அவ அக்கா கல்யாணத்தை எடுத்து செய்வான்னு நினைச்சேனே… இப்படி என்னை ஏமாத்திட்டானே….” 
“இவனை நம்பி இருந்த நகை எல்லாம் சுபத்ராவுக்குப் போட்டாச்சு…. நான் எப்படி அடுத்த வருஷம் சுமித்ராவுக்குக் கல்யாணம் செய்வேன்? அவளுக்கு இருப்பத்தஞ்சு வயசு ஆகிடுச்சு.” என அவர் புலம்ப…அதை கேட்டபடி சுமித்ரா உள்ளே சென்றாள். 
அவளுக்குத் திலிப் மீது கோபமோ… ஏமாற்றமோ இல்லை. அவள் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை… அதனால் அவளுக்கு வருத்தமும் இல்லை. 
ஈஸ்வரியை சமாளிக்க்கத்தான் திலிப் இருக்கான் எனச் சொல்லி இருந்தாளே தவிர… அவன் தனக்குச் செய்யவேண்டும் என அவள் ஒருநாளும் எதிர்பார்க்கவில்லை. 
தான் திருமணம் செய்வதற்கு முன்பு, தன் தம்பி தங்கையின் வாழ்க்கையில் நல்ல நிலை பெற வேண்டும் என்பதுதான் அவளது ஆசை. அது நிறைவேறிவிட்டது. காலம் தாழ்ந்தாலும் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் என அவள் நம்பினாள். 
சுந்தரத்தை எழுப்பியவள் அவருக்குத் தட்டு வைத்து உணவை பரிமாறினாள். சிறிது நேரம் சென்று உள்ளே வந்த ஈஸ்வரி சற்று தெளிவாக இருந்தார். பாலா எதவது சொல்லி அவரைத் தேற்றி இருப்பான். அவள் எதுவும் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளவில்லை. 
இரண்டு நாட்கள் சென்று பாலா இரவு ஒன்பது மணி போல் வீட்டிற்கு வந்தான். ஈஸ்வரி அவனைச் சாப்பிட அழைக்க…. அவன் அவரிடம் கண் ஜடை காட்டிவிட்டு, பின்கட்டுக்குச் சென்றான். 
சுமித்ரா சமையல் அறையில் தோசை ஊற்ற எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு ஈஸ்வரி பின்பக்கம் சென்றார். 
“அத்தை, திலிப் சொன்னதை எல்லாம் சுமித்ராகிட்ட சொல்லலையே?” 
“இல்லை பாலா…. சுமித்ரா மனசு ரொம்பக் கஷ்ட்டப்படும்.” 
“உங்க பொண்ணு ஒரு சுயமரியாதை சுந்தரி. உடனே எனக்கு அவன் பணம் வேண்டாம்ன்னு சொல்லுவா… நான் திலிப்கிட்ட பேசிக்கிறேன்.” என்றவன், கைகழுவிட்டு உள்ளே சென்றான். 
பாலா சாப்பிட்டு முடித்ததும், எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். 
“சுமித்ரா கல்யாணம் முடிஞ்சிட்டா, எங்க ரெண்டு பேருக்கு இது ரொம்பப் பெரிய வீடு. இந்த வீட்டை வித்துட்டு, எதாவது சின்ன வீட்டுக்கு வாடகைக்குப் போயிடலாமா…” ஈஸ்வரி கேட்க…. 
அவர் எதற்குச் சொல்கிறார் எனப் புரிந்து கொண்ட  சுமித்ரா… “நமக்குன்னு இருக்கிற ஒரே சொத்து இந்த விடுத்தான். இதையும் வித்து எனக்குக் கல்யாணம் பண்ணிட்டு, நீங்களும் அப்பாவும் எங்க இருப்பீங்க? நமக்கு வாடகை எல்லாம் கொடுத்து கட்டுப்படி ஆகாது.” என்றாள். 
பாலாவுக்கும் அதே எண்ணம் தான். அவர்கள் காலத்திற்கு இருக்க வீடு வேண்டாமா… திலிப் இப்பவே இவ்வளவு கணக்குப் பார்க்கிறான். அவன் பெற்றோரை உடன் வைத்துக் கொள்வான் என எதிர்பார்ப்பது எல்லாம் நடக்காத ஒன்று. 
“எதாவது யோசிக்கலாம் அத்தை.” என்ற பாலா விடை பெற…. அவனோடு வாசல் வரை வந்த சுமித்ரா, “அத்தான் திலிப்கிட்ட எதுவும் கேட்காதீங்க.” என்றாள். 
“உனக்குத் தெரியுமா…” பாலா அதிர்ச்சியாக…
“அம்மா உங்ககிட்ட பேசுறதை கேட்டேன்.” என்றாள். 
“இதுல எல்லாம் நீ தலையிடாத சுமித்ரா… உனக்கு எப்படி அவங்களுக்குச் செய்யிற உரிமை இருக்கோ… அப்படி அவனுக்கும் சில கடமைகள் இருக்கு…” 
“நான் என்னோட முழுமனசோட செஞ்சேன். எனக்கு அவன் விருப்பம் இல்லாம கொடுக்கிறதை வாங்கிக்க இஷ்ட்டம் இல்லை…அதை நான் ரொம்பக் கேவலமா நினைக்கிறேன். ப்ளீஸ் இதோட விட்டுடுங்க.” 
“அப்ப உன் கல்யாணம்.” 
“எல்லோரும் நகை பணம் எல்லாம் கேட்கிறது இல்லை… அந்த மாதிரி எனக்கும் யாரவது வரலாம்.” 
“அப்படி வரலைனாலும் நான் வருத்தப்பட மாட்டேன். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமா என்ன? நான் இப்ப ரொம்பச் சந்தோஷமாத்தான் இருக்கேன். எனக்கு என்ன குறை?” 
“என்னை நம்பி ஸ்கூல் பொறுப்பை மேடம் கொடுத்திருக்காங்க. இந்த வேலையே எனக்குப் போதும், அதைப் பார்த்திட்டுக் காலம் எல்லாம் அம்மா அப்பாவோடவே இருந்திட சொன்னாக் கூட எனக்குச் சந்தோஷம்தான்.” 
“இப்படி அத்தைகிட்ட போய்ப் பேசிவைக்காத…. அவங்க ரொம்ப உடைஞ்சு போய்டுவாங்க. அவங்க உன் கல்யாணத்தைச் சீக்கிரம் முடிக்கணும்ன்னு நினைக்கிறாங்க. நீ சொன்ன மாதிரி எல்லோரும் பணத்தைப் பெரிசா நினைக்கிறது இல்லை… உன்னோட குணத்தைப் பார்த்து கூட வரலாம். கண்டிப்பா வரும்.” என்றான் பாலா. 
அப்படி ஒரு வரன் வரத்தான் செய்தது. எதுவும் வேண்டாம் உங்கள் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்று… ஆனால் அதை எல்லோரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்களா… முக்கியமாகச் சுமித்ரா மனதார ஏற்றுக்கொள்வாளா?

 

Advertisement