Advertisement

கண்டுகொண்டேன் காதலை


அத்தியாயம் – 5 

கல்யாண பத்திரிகை அடித்து வந்ததும், முதலில் குல தெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு, கலாவதியின் வீட்டிற்குத் தான் முதல் பத்திரிகை வைக்கச் சென்றனர். 

தனது பெற்றோரோடு சுமித்ராவும் சென்று இருந்தாள். கலாவதி அவர்களை வரவேற்று உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். வேலைக்காரி வந்து காபி கொடுத்துவிட்டு சென்றாள். 

சுமித்ராவின் பெற்றோரிடம் அவளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார் கலாவதி. 

“சுமி இல்லாம என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது. அதனால நீங்க அவளுக்கு நம்ம ஊர்ல இருக்கிற மாப்பிள்ளையைத் தான் பார்க்கணும்.” 

“எங்களுக்கும் அப்படி அமைஞ்சா நல்லாத்தான் இருக்கும். சுமி எங்க பக்கத்தில இருப்பா…. அவளுமே அப்படித்தான் சொல்லி இருக்கா… என்னால ஸ்கூலுக்கு மட்டும் போகாம இருக்க முடியாதுன்னு.” 
“நாம நினைச்சபடி அமைஞ்சா நல்லத்தான் இருக்கும். பார்ப்போம்.” என்றார் ஈஷ்வரி. 

கிளம்புவதற்கு முன்பு பிரேமின் வீட்டில் சென்று பத்திரிக்கை வைக்க… அவனின் வீட்டு விலாசத்தைச் சுமித்ரா கலாவதியிடம் வாங்கிக்கொண்டாள். 

ஒருநாள் அவளும் சுந்தரமும் மட்டும் பிரேமின் வீட்டிற்குச் சென்றனர். அவன் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இவர்கள் வந்திருப்பதை வேலைக்காரி சென்று உள்ளே சொல்ல… பிரேமின் அம்மாதான் வந்தார். 

வந்தவர் இவர்களின் எளிய தோற்றத்தை வைத்து ஏற இறங்க பார்க்க… சுமித்ரா தன்னை அறிமுகம் செய்துகொள்ள…. அப்போது கூட அவர் இவர்கள் ஏன் வந்தார்கள் என்பது போலத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார். 

பத்திரிகை கொடுக்க வந்தோம் என்றதும், ப்ரேம் வீட்டில் இருக்கிறானா இல்லையா என்று கூடச் சொல்லவில்லை…. பத்திரிக்கையை மட்டும் வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார். 

இங்க போய் ஏன் வந்தோம் எனச் சுமித்ரா நொந்தே போனாள். அதுவும் அப்பாவை வேறு அழைத்துக்கொண்டு வந்தது. பேசாமல் பள்ளியிலேயே பத்திரிக்கையைக் கொடுத்து இருக்கலாம். கலாவதியின் தம்பி என்பதால் தான் நேரில் வந்தாள். 
மகளின் மனதை புரிந்து கொண்ட தந்தையாகச் சுந்தரம் பேசினார்.
“இப்ப எல்லாம் பணத்துக்குத்தான் மா முதல்ல மரியாதை. அப்புறம் தான் மனுஷங்களுக்கு. இதெல்லாம் ஒரு அனுபவம்தான். யாரு எப்படின்னு தெரிஞ்சிக்க முடியுது இல்லையா….”
 
பள்ளியில் வைத்தே மற்ற ஆசியர்களுக்குப் பத்திரிகை கொடுத்த சுமித்ராவிடம், “எனக்கு இல்லையா…” என அவள் தனியே இருக்கும் போது பிரேம் கேட்க… 

“உங்களுக்கு எப்படி ஸ்கூல்ல வச்சு கொடுக்கிறதுன்னு…” எனச் சுமித்ரா சொல்லி முடிப்பதற்குள், 

“அப்ப வீட்டுக்கு வந்து கொடு.” என்றான். 

மேஜையில் இருந்தவற்றை ஒதுங்க வைத்தபடி.”நேத்தே உங்க வீட்ல பத்திரிகை வச்சாச்சு.” என்றாள் சுமித்ரா. 

“அப்படியா எப்ப வந்த? எனக்குத் தெரியாதே….” 

“நானும் அப்பாவும் நேத்துச் சாயங்காலம் வந்தோம். உங்க அம்மாகிட்ட தான் பத்திரிகை கொடுத்தோம்.” 

“நான் அப்ப வீட்ல இல்லை… அம்மா சொல்ல மறந்துட்டாங்க போல…” 
“இருக்கும்… மொத்தமே நாங்க ஒரு ரெண்டு நிமிஷம் தான் அங்க இருந்திருப்போம்.” 

“ஓகே… இப்ப என்னைக் கல்யாணத்துக்குக் கூப்பிடலாமே…” 

தன் வேலையிலேயே கவனமாக இருந்த சுமித்ரா பிரேம் சொன்னதைக் கேட்டு, அவனைச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். 

ப்ரேம் அவளைப் பார்த்து புன்னகையுடன் புருவத்தை உயர்த்த, சுமித்ராவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. 

“என் தங்கைக்குக் கல்யாணம். ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்திடுங்க.” என்றாள் சிரித்தபடி. 

அப்போது காலாவதி அவர் அறையில் இருந்து வெளியே வந்தவர் இருவரும் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துப் புரியாமல், “என்ன?” எனக் கேட்டார். 

“ஒன்னும் இல்லை சும்மா பேசிட்டு இருந்தோம்.” என்றான் பிரேம். 

சுபத்ராவின் திருமணத்தன்று, வெந்தய நிறத்தில் இரு பக்கமும் சின்னதாக அரக்கு கரை வைத்த பட்டு புடவையில் சுமித்ரா இங்கும் அங்கும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டு இருந்தாள். காது கழுத்தில் கவரிங் நகைதான். இருந்தாலும் அதிலேயே மிகவும் அழகாக இருந்தாள். தலையில் அதிகமாகப் பூ வைத்து, முகத்திற்கு வழக்கத்தை விடச் சற்று அதிகமாகக் கவனம் எடுத்து ஒப்பனை செய்து இருந்தாள். 

முதலில் அவள் தங்கைக்குத் திருமணம் செய்வதைப் பற்றி வந்திருந்த உறவினர்களில் சிலர் பெருமையாகவும், சிலர் எதோ சுமித்ராவுக்கு வரன் வராதது போல் பாவமாகவும், ஏன் சிலர் ஏளனமாகவும் கூட நினைத்தனர்.
அவரவர் நினைப்பதை தங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளும் வரை பிரச்சனை இல்லை…. அடுத்தவர் மனதை காயப்படுத்தாமல் இருந்தால் சரி. 

பெண் வீட்டின் சார்பில் எல்லாப் பொறுப்புகளையும் பாலா எடுத்துச் செய்தான். அதனால் சுமித்ராவும் சில விஷயங்களை அவனிடம் கலந்து ஆலோசித்து விட்டே செய்தாள். அது வாணியின் கண்களை உறுத்த, அவள் மீனாட்சியிடம் வத்தி வைத்தாள். 

“பாரு அவ எதுனாலும் பாலாகிட்ட தான் போய் நிற்கிறா…. எப்படியும் பாலா அவளைக் கல்யாணம் பண்ணிப்பான்னு தைரியத்துலதான், எல்லா நகையும் தங்கச்சிக்கு போட்டு முதல்ல கல்யாணம் பண்றா…” 

“அப்படியெல்லாம் இருக்காது. அவ ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் பாலாகிட்ட பேசுறா….” என மீனாட்சி மறுத்து சொல்ல… 
“நீ இப்படியே நல்லா நம்பி இருந்து, மோசம் போகப்போற பார்த்துட்டே இரு.” என்றாள் வாணி திமிராக. 

வாணி சொன்னதைக் கேட்டதும், மீனாட்சி அப்படியும் இருக்குமோ என யோசிக்க ஆரம்பித்தார். அதையே நினைத்து மனதை குழப்பிக் கொண்டவர், தனது எரிச்சலை வெளிப்படையாகவும் காட்டினார். 

சரியாகத் தாலி கட்டும் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் கலாவதி தன் கணவருடன் வந்தார். அவர்களுடன் ப்ரேமும் வந்திருந்தான். வரவேற்ப்பில் நின்றிருந்த சுமித்ரா அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தாள். 

தாலி கட்டி முடித்ததும், அவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று சுபத்ராவின் கணவனுக்கு அவர்களை அறிமுகம் செய்தாள். எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்ததும், மற்ற ஆசிரியர்களும் மேடைக்கு வர…. அவர்களோடும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அனைவரையும் சாப்பிட அழைத்துச் சென்றாள். 

அன்று வார நாள் என்பதால்… பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் சாப்பிட்டதும் கிளம்பி விட்டனர். ராதாவும் அவர்களோடு சென்று விட்டாள். 

“நாங்களும் கிளம்புறோம் சுமித்ரா…. நாங்க இங்க இருந்தா… நீ எங்களையே கவனிச்சிட்டு இருப்ப…” என விடைபெற்ற கலாவதி, சுமித்ராவிடம் ஒரு கவரை கொடுக்க…. அவரைத் தொடர்ந்து பிரேமும் கொடுத்தான்.
 
அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த சுமித்ரா பாலா எதோ கேட்கவும், அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு சட்டென்று திரும்பியவள், பின்னே வந்தவனின் மீது நன்றாக மோதி விட்டாள். 

மன்னிப்புக் கேட்க திரும்பிய சுமித்ரா, தான் இடித்தது ஒரு ஆண்ணின் மீது என்று தெரிந்ததும் இன்னும் பதட்டமாகி விட்டாள். 

முதலில் கோபமாகப் பார்த்த அந்த இளைஞனும், சுமித்ராவை பார்த்ததும், அவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. 

“சாரி…” எனச் சுமித்ரா மன்னிப்பு கேட்க… 

“பரவயில்லைங்க… தெரியாம தான இடிச்சீங்க.” என எதிரே நின்றவனும் புன்னகைக்க… சுமித்ராவும் மரியாதைக்குப் புன்னகைத்து விட்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும், அந்த இளைஞனும் அவள் பின்னே உள்ளே சென்றான். அவன் பெயர் தீனதயாளன். மாப்பிள்ளை வீட்டினருக்கு தூரத்துச் சொந்தம். அவன் பெற்றோர் வேறு ஒரு திருமணதிற்குச் சென்றதால்…. இவன் இங்கு வேறு வழியில்லாமல் வந்திருந்தான். 
மண்டபத்தில் அவனுக்கு யாரையும் தெரியவில்லை… முன்னே பின்னே எதுவும் உறவினர்கள் திருமணதிற்குச் சென்றிருந்தால் தானே தெரியும்.
 
அவனுக்கு அந்த மண்டபத்தில் தெரிந்தது எல்லாம், சற்று முன் பார்த்த சுமித்ராவை மட்டும்தான். அதனால அவன் பார்வை அவளையே சுற்றி வந்தது. 

சிறிது நேரத்தில் அந்தப் பக்கம் வந்த சுமித்ராவை பார்த்ததும் எழுந்து நின்றவன், “உங்களைப் பார்த்தா இந்தக் கல்யாண வீட்டுக்காரங்க போலிருக்கு. இந்த மொய்யை மாப்பிள்ளை வீட்ல கொடுத்திடுறீங்களா…. நான் கிளம்பனும்.” எனக் கேட்க…
 
“நீங்க மாப்பிள்ளை வீடா…” என்ற சுமித்ரா, அந்தப் பக்கம் வந்த மேகலாவை அழைத்து, “அத்தை இவங்க உங்க சொந்தகாரங்கத்தான்.” என்றதும், 

அவர் தீனாவை யார் என்று புரியாமல் பார்க்க… “நான் வீரபத்திரன் பையன் தீனா…” என அவன் அறிமுகம் செய்து கொள்ள… 

“ஓ… அவரோட பையனா… சாரி பா உன்னைப் பார்த்தது இல்லை… அப்பா அம்மா வரலையா….” 

“அவங்க இன்னொரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க.” 
“பரவாயில்லை… நீ வந்திருக்கியே ரொம்பச் சந்தோசம்.”
மேகலாவிடம் தீனா மொய் கவரை கொடுக்க… அதை வாங்கிக் கொண்டவர், “சுமி கொஞ்சம் இவரைச் சாப்பிட அழைச்சிட்டு போ மா…” என்றார்.
 
சுமித்ரா சரியென்று முன்னால் நடக்க.. தீனா அவள் பின்னே சென்றான். 

காலியாக இருந்த ஒரு இருக்கையில் அவனை உட்கார சொன்னவள், “நீங்க சாப்பிடுங்க. நான் வரேன்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள். 

தீனாவின் அருகில் இருந்தவர், அவனை ஒரு மாதிரி பார்த்து “நீங்க பொண்ணு வீடா?” எனக் கேட்க… 

இலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டே, இல்லை எனத் தீனா தலையசைத்தான். 

“நீங்க சுமித்ராவோட வந்ததும், பொண்ணு வீடோன்னு நினைச்சேன்.” 

“அவங்க பேரு சுமித்ரான்னே இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும். நான் மாப்பிள்ளை வீடு. அவங்கத்தான் இவங்களோட அனுப்பிச்சாங்க.” 

“ஓ… அப்படியா… இந்தப் பொண்ணு கல்யாண பெண்ணோட அக்கா…. ஆனாப் பாருங்க இதுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.” 

“ஏன்?” எதோ ஒரு ஆர்வத்தில் தீனா வாய்விட… பக்கத்தில் இருந்தவர் பேச யார் கிடைப்பார் எனக் காத்திருந்தார் போல… சுமித்ரா வீட்டை பற்றி எல்லாவற்றையும் அவனிடம் சொல்லிவிட்டார்.
 
அவர் சொன்ன கதையைக் கேட்டபடி தீனா சாப்பிட்டே முடித்து விட்டான். அவரிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவன், கை கழுவிவிட்டுத் திரும்பச் சென்று மண்டபத்தில் அமர்ந்தான். 

கல்யாணத்தில் பேருக்கு தலையைக் காட்டிவிட்டு, மொய்யை கொடுத்ததும் பறந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவன், சுமித்ரா அழைத்து வந்ததால் தான் சாப்பிடவே அமர்ந்தான். 

மீண்டும் திருமண ஹாலிற்குள் வந்தவன், சுமித்ராவை தேட… அவள் மேடையில் நின்று குடும்பப் படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவளுக்காகக் காத்திருந்து, அவள் மேடையில் இருந்து இறங்கியதும், அவளிடம் சொல்லிகொண்டே சென்றான். 

அதோடு அவனும் அவளை மறந்து விட்டான். அவளும் அவனை மறந்து விட்டாள். ஆனால் விதி இருவரையும் அப்படியே விட்டதா? 
திருமணம் முடிந்து நெருங்கிய உறவினர்கள் சிலரைத் தவிர மற்றவர்கள் கிளம்பி இருக்க… மண்டபமே காலி ஆகி இருந்தது. பெண் வீட்டை சேர்ந்தவர்கள் எல்லோரும் வட்டமாகச் சேரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 

“கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே… இனி இங்க நாங்க பார்த்துக்கிறோம். நீ கிளம்பு.” என மீனாட்சி பாலாவை நச்சரித்துக் கொண்டு இருந்தார். 

“இப்ப எனக்கு ஒன்னும் வேலை இல்லை…” என அவன் சொல்லியும் அவர் கேட்கவில்லை. 
வேறு வழியில்லாமல் பாலா அங்கிருந்து கோபமாகக் கிளம்பி சென்றான். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருந்த சுமித்ராவுக்குக் கண்கள் கலங்கியது. 

மண்டபத்தில் இருந்து புதுமணத் தம்பதிகள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றனர். மறுநாள் பெண் வீட்டில் விருந்து. அதற்கு மாப்பிள்ளையின் உறவினர்கள் அனைவரும் வந்திருக்க… வீட்டிலேயே மாடியில் பந்தல் போட்டு அசைவ விருந்து பரிமாறினர். 

விருந்து முடிந்து மணமக்களைத் தவிர மற்றவர்கள் கிளம்ப.. மீனாட்ச்சியும் வீடு திரும்பினார். 

பாலா அவரோடு முகம் கொடுத்துப் பேசாமல்…. முறைத்துக் கொண்டே இருக்க…மீனாட்சிக்குக் கோபம் வந்துவிட்டது. 

“உனக்கு இப்ப ஏன் இவ்வளவு கோபம் வருது? உன் திட்டம் எல்லாம் எனக்குத் தெரிஞ்சிடுச்சின்னு தானே….”
 
“என்ன திட்டம்? அதையும் கொஞ்சம் சொல்லுங்க.” 

“அந்தச் சுமித்ராவை இந்த வீட்டுக்குக் கொண்டு வர திட்டம் போட்டிருக்கியே… அதைச் சொன்னேன். ஆனா அது உன் கனவுலேயும் நடக்காது.” 

“நீங்க என்ன அதைச் சொல்றது? முதல்ல சுமி இந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைப்பாளான்னு பாருங்க.” 

மகன் சொன்னதைக் கேட்டு மீனாட்சியின் முகம் கருக்க…. 
“இந்த உலகத்திலேயே நான் மட்டும் தான் ஆம்பிளைனா கூட… அவ என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டா….” 

“உங்களுக்கு இருந்தாலும் ரொம்பப் பேராசை மா…. அவ பிறந்த வீட்லத்தான் கஷ்ட்டபட்டுடா… போற இடத்திலேயாவது சந்தோஷமா இருக்கணும். அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா.. நீங்க அவளைப் பேசியே கொல்ல மாட்டீங்க.”பாலா நக்கலாகச் சொல்ல… மீனாட்சி முறைத்துக் கொண்டு இருந்தார். 
பாலா அவரை அலட்ச்சியபடுத்தி விட்டு உள்ளே சென்றான் 

Advertisement