Advertisement

கண்டுகொண்டேன் காதலை

அத்தியாயம் – 4 

பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை. 

சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே மூத்த தங்கை மீனாட்சிக்குத் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அடுத்தத் தங்கை வாணிக்கு, சுந்தரத்திற்குத் திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கழித்துதான் நடந்தது. 

மீனாட்சியின் திருமணத்தின் போது… அவர்கள் பெற்றோர் உயிரோடு இருந்தனர். அதனால் அவருக்கு நிறைய நகை போட்டுக் கல்யாணம் செய்தனர். ஆனால் வாணிக்குத் திருமணம் செய்வது முழுவதும் சுந்தரத்தின் பொறுப்பு ஆனது.
அப்போது அவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். அதனால் அவரால் மீனாட்சிக்கு போட்டது போல் நகை போட்டு வாணியின் திருமணத்தை முடிக்க முடியவில்லை. 

வாணிக்கு அது ஒரு மிகப்பெரிய குறை. அதனால் தன் அண்ணியின் மீதும், அவரின் பிள்ளைகள் மீதும் வெறுப்பை வளர்த்துக் கொண்டார். அண்ணனிடம் மட்டும் பாச மழை பொழிவார். 

ஆரம்பக் காலங்களில் எல்லோருமே சமமாகத்தான் இருந்தனர். பிறகு இரு அத்தைகளின் குடும்பமும் நன்றாகச் செழிப்பாக…. அவர்கள் இருவருக்கும் கர்வம் வந்துவிட்டது. 

ஆரம்பநாட்களில் மீனாட்சி நன்றாத்தான் இருந்தார். வாணி அவருக்கும் சொல்லிக் கொடுத்து, அவரையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.
 
வீட்டிற்கு வரும்போது எதாவது பிரச்சனை செய்வது. ஈஸ்வரி சரியாகக் கவனிக்கவில்லை என அவரைப் பற்றித் தன் அண்ணனிடம் குறை சொல்வது, அதைக் கேட்டுச் சுந்தரம் மனைவியைத் திட்டுவது. அதற்கு அவர் அழுவது என அவர்கள் இருவரும் வந்தாலே வீட்டின் நிம்மதி போய் விடும். 

சுமித்ராவுக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்த போது, அத்தைகளின் சின்னத்தனமான செயலை நினைத்து வருந்துவாள். இருவருமே நன்றாக இருக்க… ஏன் மற்றவர் வீட்டில் பிரச்சனை உருவாக்க நினைக்க வேண்டும்? எனக் கோபமாக வரும். ஆனால் அதை வெளிகாட்டவும் அவளால் முடியாது. 

பெரிய அத்தையின் மகன்தான் பாலா. சிவபாலன் என்பது முழுப்பெயர். லீவ் விட்டுவிட்டால் அவன் இவர்கள் வீட்டில்தான் இருப்பான். அவர்களின் வீடு தாம்பரத்தில் இருக்கிறது. அங்கே பெரிய பாத்திர கடை அவர்களுக்கு இருக்கிறது.
சின்ன அத்தை வாணி ஆவடியில் இருக்கிறார். அவர் கணவர் அரசாங்க வேலையில் இருக்கிறார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். 

சுமித்ராவுக்கும் பாலாவுக்கும் மூன்று வயது வித்யாசம். ஆனால் இருவரும் நண்பர்களாகத்தான் பழகுவார்கள். லீவ் விட்டுவிட்டால் இருவரும் சேர்ந்தே தான் இருப்பார்கள். 

ஒன்றாகச் சைக்கிள் ஓட்டுவது, சீட்டு விளையாடுவது, பாட்டுக் கேட்பது என இருவருக்கும் பொழுது நன்றாகச் செல்லும். 

சுமித்ரா பெரிய அத்தை வீட்டிற்காவது செல்வாள். ஆனால் சின்ன அத்தை வீட்டுக்கு செல்லவே மாட்டாள். அவர் எப்போதும் தான் கஷ்ட்டதில் இருப்பது போலவே பேசுவார். அதோடு“உன் அப்பா என்ன நகை போட்டு எனக்குக் கல்யாணம் செய்தார்?”எனத் தன் தந்தையைப் பற்றிக் குறை சொல்வதால்… அவளுக்கு அங்கே செல்ல பிடிக்காது. 

மூத்தவர் மீனாட்சி அவர் மூட் பொறுத்து நடந்து கொள்வார். அவர் நல்ல மூடில் இருந்தால்… விழுந்து விழுந்து உபசரிப்பார். அதே அவருக்கு மூட் சரியில்லை என்றால்… சாப்பிடு என்று கூடச் சொல்ல மாட்டார். சுமித்ராவும் பசிக்கிறது என வாய் திறந்து கேட்கமாட்டாள். அதனால் பெரிய அத்தை வீட்டிற்கும் செல்வதைக் குறைத்து கொண்டாள். 

ஈஸ்வரி வசதி இல்லையென்றாலும் வயிற்றுக்குக் குறை வைக்க மாட்டார். தன் நாத்தனார் பிள்ளைகள் வந்துவிட்டால் நன்றாக உபசரிப்பார். அதனால் அவர்களும் மாமா வீட்டிற்கு விருப்பபட்டே வருவார்கள். 

சுமித்ரா எட்டாவது படிக்கும் போது, பெரிய பெண் ஆகினாள். அதன்பிறகும் சுமித்ரா பாலாவின் நட்பு அப்படியே தொடர்ந்தது. அடுத்த ஆறு மாதத்தில் மீனாட்சியின் இரண்டாவது பெண் பருவம் அடைய… அவளது விசேஷத்திற்குச் சுமித்ரா தாவணி அணிந்து கொண்டு சென்றாள். 

அவளுக்குத் தாவணி மிகவும் அழகாக இருக்க…. வந்த உறவினர்களுக்குக் குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்தாள். பாலா ஆண்களுக்குக் கொடுக்க… சுமித்ரா பெண்களுக்குக் கொடுத்தாள். 

இருவரும் எப்போதும் போல் ஒருவரையொருவர் கேலி கிண்டல் செய்தபடி வளம் வந்தனர். அவர்கள் கள்ளம் கபடு அறியாமல் பழகியது, வாணியின் கண்ணை உறுத்த…. விழா முடிந்ததும் தன் அக்காவிடம் வத்தி வைத்தாள். 

“உன் பையனை நல்லா மயக்கி வச்சிருக்கா… பாரு இவதான் உனக்கு மருமகளா வரப்போறா… அண்ணன் எனக்கு எவ்வளவு நகை போட்டார் தெரியும் இல்ல….இவ எல்லாம் பாலாவுக்குப் பொருத்தமா… நீ உன் பிள்ளையை இவகிட்ட விட்டுட்டு தெருவுல நிக்கப் போற…” 

வாணி சொன்னதைக் கேட்டு மீனாட்சி ஒரு ஆட்டம் ஆடினார். அவர் சுமித்ராவை வைத்துக்கொண்டே பாலாவை பேசினார். 

“வயசுக்கு வந்த பொண்ணுகிட்ட அப்படி என்ன இளிப்பு. வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளிங்க என்ன நினைப்பாங்க? அவ அம்மாதான் ஒழுங்கா பெண்ணை வளர்க்களைனா… நானும் அப்படி இருக்க முடியுமா?” 

“இல்லைனா அவ அம்மாவே சொல்லிக் கொடுத்தாளோ என்னவோ? வசதியான வீட்டு பையன் வளைச்சு போடுன்னு….” என்றபோது, பாலாவுக்கே அத்தையை அப்படிப் பேசியது பிடிக்கவில்லை. ஈஸ்வரி மிகவும் வெகுளியானவர். 

அதுவரை அமைதியாக இருந்தவன், “ஒழுங்கா வாய மூடிடுங்க. இல்லைனா…”என அவன் கைநீட்டி சொன்னபோது. மீனட்சிக்கே மகன் எங்கே தன்னை அடித்து விடுவானோ என்று பயந்துவிட்டார். 

அவர் திகைத்து போய் நிற்க…. சுமித்ரா அங்கிருந்து சென்றுவிட்டாள். இருவரும் நினைத்து கூடப் பார்த்திராத… ஒன்றை இட்டுகட்டி பேசியதை இருவராலும் தாங்க முடியவில்லை. 

பாலா மொட்டை மாடிக்கு சென்று கண்ணீர் விட்டு அழுதான். சுமித்ரா உள்ளுக்குள் அழுதாள். அதுதான் வித்யாசம். 

வீட்டிற்குச் சென்ற பிறகு ஈஸ்வரி அவளிடம், “பாலா ஏன் அழுதான்?” எனக் கேட்க…. சுமித்ரா எல்லாவற்றையும் சொல்லிவிட…
 
“இந்த வீட்ல பிறந்துட்டு எப்படி இப்படிப் பேச மனசு வந்தது? எல்லாம் உன் சின்ன அத்தை வேலையா இருக்கும். அவதான் எதோ சொல்லிட்டு இருந்தா… கல்யாணம் பண்ணி போறதுக்கு முன்னாடியும் என்னைப் பாடுபடுத்திட்டுத்தான் போனா…. இப்பவும் கொஞ்சம் கூட மாறலை….” எனக் குமுறியவர், 

இனி பாலாவிடம் முன்பு போலப் பழக வேண்டாம் என்றார். 

ஏற்கனவே மிகவும் சுயமரியாதை பார்ப்பவள் சுமித்ரா…. அதுவும் அவளின் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசிய பிறகு கேட்கவே வேண்டாம். அன்றிலிருந்து பாலாவுடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டாள். பாலாவும் பள்ளி முடிந்து கல்லூரிக்கு ஹாஸ்டல் சென்றிவிட… இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாகிவிட்டது. 

குடும்ப விழாக்களில்தான் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். பாலா அப்போது அவளிடம் பேச வந்தால்…சுமித்ரா முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விடுவாள். 

தன் இனிய தோழியை இழந்துவிட்ட பாலா உள்ளுக்குள் அழுவான். ஆனால் மீனாட்சி மிகவும் சந்தோஷமாக இருந்தார். 

சுமித்ரா வேலைக்குச் சென்ற பிறகு, அவள் எந்த விஷேஷதிற்கும் செல்வது இல்லை. வேலையைக் காரணம் காட்டி விலகி நின்று கொண்டாள். பாலாதான் எப்போதோ ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு வருவான். 

ஈஸ்வரிக்கு அவன் மீதும் மிகவும் பாசம். அவன் வந்தால் நன்றாகக் கவனித்து அனுப்புவார். பாலா மிகவும் திறமைசாலி… படித்து முடித்து, அவன் வியாபாரத்திற்கு வந்தபிறகு… அவர்கள் வசதியில் எங்கையோ போய் விட்டனர். ஏற்கனவே மீனாட்சியைக் கையில் பிடிக்க முடியாது. இனி? 

பழைய நினைவுகள் ஆறிப்போயிருந்த ரணத்தை மேலும் கிளறிவிட்டது போல ஆக… சுமித்ரா துடித்துப் போய் அழுதவள், தன் அத்தைகள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்துடன், கண்ணீரை துடைத்துக் கொண்டாள். 

பிரேம் தினமுமே மாலை பள்ளி விடும் நேரம் வந்துவிடுவான். மற்ற ஆசிரியர்கள் சென்ற பிறகு, கலாவதியின் அறையில் சுமித்ரா அவரிடம் பேசும் போது, அவனும் உடன் இருப்பான். அப்போது அவனுமே அவளிடம் எதாவது பேசுவான்.
பாலா சுபத்ராவுக்கு வந்த இடத்தைப் பற்றி விசாரித்து நல்ல விதமாகச் சொல்ல… அவர்களைப் பெண் பார்க்க வர சொல்லி தகவல் அனுப்பினர். 

இரண்டு அத்தைமாரும் காலையிலேயே வந்துவிட்டனர். திலிப்பை அன்று கண்டிப்பாக வரவேண்டும் என ஈஸ்வரி சொல்லி இருந்ததால்… அவனும் வந்திருந்தான். 

“என்ன இருந்தாலும் நீங்க சுமித்ராவை வச்சிக்கிட்டு சுபத்ராவுக்குக் கல்யாணம் பண்றது தப்பு.” என இருவரும் ஒரே மாதிரி பேச…. தன் மேல் கூடத் தன் அத்தைகளுக்குப் பாசம் இருக்கிறதா எனச் சுபத்ரா வியந்தாள். ஆனால் ஈஸ்வரிதான் கலங்கிவிட்டார். 

“அவங்களுக்குச் சுபத்ராவை பிடிச்சிருந்தது. இப்ப விட்டுட்டா இது போல அமையாது. அதுதான் முதல்ல அவளுக்கு முடிக்கலாம்ன்னு நினைச்சோம்.” எனச் சுமித்ரா சொல்ல… 

“ஆமாம் அவ உன்னை விட நல்ல கலரு…. அதுதான் அவளைப் பிடிச்சிருக்கும்.”என்றதை கூடச் சுமித்ரா புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள். 

சுபத்ராவை பெண் பார்த்து அன்றே திருமண உறுதி செய்து கொண்டனர். இரண்டு மாதம் சென்று திருமணத் தேதி குறித்தனர். அதற்கு முதல் நாள் நிச்சயம். அதற்குள் சுபத்ராவின் படிப்பும் முடிந்து விடும். 

சுமித்ரா இங்கும் அங்குமாக அலைந்து வேலை செய்ய…. அவளை அருகில்அழைத்த மேகலா, “என் மேல உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே…” எனக் கேட்க… 

“இல்லை….உங்க வீட்டுக்கு சுபத்ரா மருமகளா போறதை நினைச்சு சந்தோஷம்தான்.” எனச் சுமித்ரா புன்னகைக்க… 

“நீ ரொம்ப நல்ல பொண்ணு சுமி. உனக்கு முன்னாடி உன் தங்கைக்குக் கல்யாணம் ஆகுதுன்னு சின்ன வருத்தம் கூட இல்லை. எங்க பக்கத்தில நானே உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன்.” என்றார் மேகலா. 

சுபத்ராவின் வருங்காலக் கணவன் வருண், திலிப்பிற்குத் தானே வேலை வாங்கிக் கொடுப்பதாகச் சொல்ல… எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லோரும் சென்ற பிறகு, அன்று இரவு வீட்டினர் உட்கார்ந்து கல்யாணத்திற்குத் திட்டமிட ஆரம்பித்தனர். அடமானத்தில் இருந்த ஈஸ்வரியின் நகைகள் முப்பது சவரனை மீட்டு இருந்தனர். 

அதை அப்படியே சுபத்ராவுக்குப் போட்டு விடலாம் எனச் சுமித்ரா சொன்னதற்கு ஈஸ்வரி ஒத்துக்கொள்ளவில்லை. உனக்குப் பாதி அவளுக்குப் பாதி என்றார்.
தனக்கு வெறும் பதினைந்து பவுனா… அதில் என்ன வாங்க முடியும்? எனச் சுபத்ரா முகம் சுளிக்க…. 

“உன் புகுந்த வீட்டு ஆளுங்க ஒன்னும் கேட்கலையே?” என ஈஸ்வரி சொல்ல… 

“நீங்க செய்றதை செய்யுங்கன்னு சொன்னாங்களேமா… அவங்க பெரிய இடம். நாமும் ஓரளவு செஞ்சாத்தான நல்லா இருக்கும். அதனால ஒரு இருபத்தஞ்சாவது போட்டுடலாம்.” என்றாள் சுமித்ரா. 

இன்னும் கல்யாண பத்திரிக்கை, பாத்திரங்கள், சுபத்ராவுக்குத் தேவையான உடைகள் எல்லாம் வாங்க வேண்டும். நல்லவேளை கல்யாண செலவு மாப்பிள்ளை வீட்டினருடையது. 

சுமித்ரா சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துதான் செலவு செய்தனர். மாப்பிள்ளைக்குத் தங்க செயின் போட வேண்டும் என்பதையே மறந்து விட்டனர். பாலா தான் நினைவு படுத்தினான். 

“ஐயோ ! மறந்தே போயிட்டோமே… இவ ஏற்கனவே இருபத்தஞ்சு பவுனுக்கு அவளுக்கே வாங்கிட்டா… சுமித்ராவுக்கு எடுத்து வச்ச அஞ்சு பவுனை தான் எடுக்கணுமா…” என ஈஸ்வரி சொல்ல… 

“இங்க பாருங்க நான் மூன்னு பவுன்ல செயின் வாங்கிட்டு வந்திட்டேன்.” என்றான் பாலா. 

“நீங்க ஏன் வாங்கினீங்க?” சுமித்ரா கோபப்பட…. 

“நான் ஒன்னும் சும்மா வாங்கலை…. நாங்களும் கல்யாணத்துக்கு மொய் செய்யணும் இல்ல…” 

“நீங்க இவ்வளவு செஞ்சா… நான் திருப்பிச் செய்ய வேண்டாமா?” 

“உன் அப்பா செஞ்சதைதான், நாங்க திருப்பிச் செய்றோம். அவர் ஒவ்வொரு விசேஷத்துக்கும் செஞ்சிருக்கார். அதோட அம்மாவும் சொன்னாங்க. அதனால நீ இவ்வளவு யோசிக்காத…” என்ற பாலா செயினை ஈஸ்வரியிடம் கொடுத்தான். 

“சுமித்ரா புண்ணியத்துல எதோ கடன் இல்லாம கல்யாணத்தைப் பண்றோம்.” 

“கல்யாணத்துக்கு வர்ற மொய்ப்பணம் எல்லாம் பத்திரமா எடுத்து வைங்க. அதுல சுமித்ராவுக்கு நகை வாங்கிடனும்.” 

“ஆமாம் பாலா… சுமித்ராவுக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிடனும். மூத்தவளை வச்சிக்கிட்டு இளையவளுக்குக் கல்யாணம் பண்றது, மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு. இந்தத் திலிப்க்கும் வேலை கிடைச்சிட்டா… ஒரு வருஷத்துல கூடச் சுமிக்கும் வச்சிடலாம்.”
“அதெல்லாம் கவலைப்படாதீங்க அத்தை. இந்த வாலுக்கே நல்ல இடம் வந்திருக்கும் போது… நம்ம சுமிக்கு இன்னும் நல்ல இடமே வரும் பாருங்க.” என்றான் பாலா. 

“உங்களுக்கு எப்பவுமே அக்காவைத்தான் பிடிக்கும். அப்ப நீங்களே அவளைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான…” எனச் சுபத்ரா துடுக்காகக் கேட்க…. ஒரு நொடி எல்லோருமே திகைத்து விட்டனர். 

“இது மாதிரி இன்னொரு தடவை பேசினே, நான் உன்னோட பேசவே மாட்டேன்.” எனச் சுமித்ரா கோபமாகச் சொல்லிவிட்டு உள்ளே செல்ல… 

“நீ எதுவும் நினைச்சுக்காத பாலா…” என்றார் ஈஷ்வரி.
சுபத்ரா சொன்னதற்குப் பாலா மறுக்கவும் இல்லை… அமோதிக்கவும் இல்லை. மெளனமாக அங்கிருந்து சென்றான்.

Advertisement