Advertisement

கண்டுகொண்டேன் காதலை
 

அத்தியாயம் – 3

“கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிடலாமா…” சுமித்ரா சொல்ல….கேட்ட சுபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“நான் பாலாகிட்ட கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.” என்றார் ஈஸ்வரி. சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள். 
அன்று இரவு உணவு முடிந்ததும், ஈஸ்வரி செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்று பேசிவிட்டு வந்தார். 
மறுநாள் பள்ளி ஆண்டு விழா என்பதால்…. பள்ளியே விழாக் கோலம் கொண்டிருந்தது. காலை பத்து மணி போல் பள்ளி வாசலில் கார் வந்து நிற்க…. கலாவதியின் தம்பி பிரேம்குமார் அதிலிருந்து இறங்க…. அவனை வரவேற்க கலாவதி வெளிவாயிலுக்குச் சென்றார். 
புன்னகை முகமாகத் தன் தம்பியுடன் உள்ளே வந்த கலாவதியிடம் சுமித்ரா பூங்கொத்தை நீட்ட…..
“நீயே கொடு….” என்றார் அவர். 
பூங்கொத்தை பிரேம்குமாரிடம் கொடுத்தபடி “வெல்கம் சார்.” என அவள் புன்னகைக்க…. 
“சுமித்ரா ரைட்… என் அக்காவோட வலது கை.” என்று பிரேம்குமார் புன்னகைக்க… பதிலுக்குச் சுமித்ராவும் புன்னகைத்தாள். 
“உனக்கு நான் ஏற்கனே சுமியை பத்தி சொல்லிட்டேன். இனி மத்தவங்களைப் பார்க்கலாம்.” எனக் கலாவதி மற்ற ஆசிரியர்களைப் பிரேம்குமாருக்கு அறிமுகம் செய்து வைக்க….அவன் எல்லோரையும் புன்னகையுடன் எதிர்கொண்டான். 
கலாவதி தன் தம்பிக்குப் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் பள்ளியை சுற்றி காட்ட செல்ல… சுமித்ரா மாணவர்களை அழைத்துக்கொண்டு, மாலை நடக்கவிருந்த விழாவுக்கு ஒத்திகை பார்க்க சென்றாள். 
பக்கத்தில் இருந்த பெரிய கல்யாண மண்டபத்தைத்தான் வாடகைக்கு எடுத்து இருந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் ஒத்திகையில் ஈடுபட்டிருக்க…. அப்போது நடனம் ஆடி முடித்திருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குச் சுமித்ரா நடனத்தில் திருத்தம் சொல்லிக் கொடுத்தாள்.
அந்த மாணவர்கள் புரியாமல் பார்க்க….. சுமித்ரா பாடலை போட சொல்லி ஆடிக்காட்டினாள். அதே நேரம் கலாவதியோடு பிரேம்குமாரும் அரங்கத்திற்குள் நுழைய…. சுமித்ராவுக்கு அவனைப் பார்த்ததும் வெட்கமாகப் போய்விட்டது.
அவள் நாக்கை கடித்தபடி மேடையின் பின்புறம் செல்ல…. பிரேம்குமார் சிரிப்பை அடக்கியபடி சென்றான். 
ஒத்திகை முடிந்து மாணவர்கள் அனைவரையும் மாலை நான்கு மணிக்கு விழா உடையுடன் தயாராக வரும்படி சொல்லி அனுப்பிய பின்னர், அன்று தன்னிடம் வேலை பார்க்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும், அதே மண்டபத்தில் மதிய விருந்தை கலாவதி ஏற்பாடு செய்திருந்தார்.
கலாவதியின் குடும்பத்தாரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர். கலாவதிக்கு ஆண்ணொன்று பெண்ணொன்று என இரு பிள்ளைகள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தனர். கணவர் சொந்த தொழில் செய்து கொண்டிருந்தார். 
சுமித்ரா தான் சாப்பிடாமல் மற்றவர்கள் எல்லோரும் சாப்பிடுகிறார்களா எனக் கவனித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளருகில் வந்த பிரேம்குமார், “அதெல்லாம் எல்லோரும் சாப்பிடுறாங்க. நீங்களும் சாப்பிடுங்க.” என்றவன், சுமித்ரா உணவு எடுத்துக் கொண்டு வரும்வரை காத்திருந்து, அவள் வந்ததும் அவளோடு பேசியபடி சாப்பிட்டான். 
“விழா ஏற்பாடு எல்லாம் பக்கவா இருக்கு. அக்கா சொன்னாங்க எல்லாம் சுமி பார்த்துப்பான்னு. முன்னாடி எல்லாம் பார்த்து இருக்கேன். அக்கா ரொம்ப டென்ஷன் ஆவாங்க. ஆனா இப்ப எல்லாம் ரொம்பக் கூல்லா இருக்காங்க. உங்களுக்குத் தான் ரொம்ப வேலை இல்லையா?”
“அப்படியெல்லாம் இல்லை சார். எனக்கு ஒரு கஷ்ட்டமும் இல்லை. நான் ரொம்பச் சந்தோஷமாதான் செய்றேன்.”
“ஓகே, நீங்க சாப்பிடுங்க.” என்ற பிரேம்குமார் தனது சகோதரியிடம் செல்ல… அவன் சென்றதும் ராதா சுமியுடன் வந்து நின்று கொண்டாள். 
“நம்ம மேடமோட தம்பி செம ஸ்மார்ட் இல்ல….”
ராதா கேட்டதற்கு உடனே பதில் சொல்லாமல் , இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு சுமி பொறுமையாகப் பதில் சொன்னாள்.
“அப்படியா?” என அவள் சொன்னதும், ராதா கடுப்பாகி விட்டாள்.
“உன்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்கிட முடியும்.” என்றவள் முறைத்தபடி சாப்பிட… சுமித்ரா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
மதிய உணவு முடிந்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் பள்ளியை திறந்ததும், அங்கே உயர்நிலை வகுப்புகள் மாற்றப்படும் என அறிவித்த கலாவதி. 
பழைய கட்டிடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் என்றும், அதை நிர்வகிக்கும் பொறுப்பைச் சுமித்ராவிற்குத் தருவதாக அறிவித்தார். 
சுமித்ரா இதை நிச்சயமாக எதிர்ப்பார்க்கவில்லை… அவளை விடச் சீனியர்கள் நிறையப் பேர் இருக்க…. அவளுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தாலும், இன்னும் அவளால் அதை நம்ப முடியவில்லை.
அவளுடைய திகைப்பை கவனித்த கலாவதி, “உன்னால முடியும் சுமி. உன்னால முடியலைனா வேற யாரால முடியும்?” எனப் புன்னகையுடன் கேட்க…. மற்ற ஆசிரியர்கள் கைதட்டினர்.
நிஜமாகவே இது சுமித்ராவுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் தான். கலாவதி இந்த அளவுக்குத் தன் மேல் நம்பிக்கை வைப்பார் என்பது அவள் எதிர்ப்பார்க்காதது.
மீட்டிங் முடிந்து மற்ற ஆசிரியர்கள் களைந்து சென்றதும், தனியாகக் கலாவதியை சந்தித்த சுமித்ரா, “மேடம் எனக்குப் போய் இவ்வளவு பெரிய பொறுப்பைத் தர்றீங்களே…. என்னால முடியுமா?” எனக் கலக்கமாகக் கேட்க…
“நானும் தினமும் கொஞ்ச நேரம் வந்து பார்த்துகிறேன். அதோட இவ்வளவு நாள் நீதான் எல்லாத்தையும் பார்த்திட்டு இருந்த. இப்ப எல்லோருக்கும் ஆபீசியலா சொல்லி இருக்கோம் அவ்வளவுதான்.”
“நீ இப்ப வீட்டுக்கு போய் ப்ரெஷ் ஆகிட்டு வா…. முதல்ல சாயங்காலம் நடக்கப் போற விழாவை பார்ப்போம். மத்தது அப்புறம் பேசலாம்.” எனக் கலாவதி அவளை அனுப்பி வைத்தார். 
மாலை விழா வெகு சிறப்பாக நடந்தது. தன்னிடம் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எதாவது நினைவு பரிசை கலாவதி வழங்குவார். 
சுமித்ரா வீட்டிற்கு வந்ததும், அவளிடம் இருந்து வண்ணக்காகிதம் சுற்றிய பரிப்பொருளை வாங்கி ஆவலாகப் பிரித்த சுபா…. உள்ளே இருந்த பாத்திரங்களைப் பார்த்து விட்டு, “வருஷா வருஷம்  பாத்திரம் தான் கொடுக்கிறாங்க. வேற எதாவது கொடுத்தா என்னவாம்.” எனக் குறை பட….
“உங்க அக்கா கல்யாணத்திற்கு உதவுமேன்னு தான் பாத்திரமா தர்றாங்க.” என்றார் ஈஸ்வரி. 
உண்மையில் அந்த எண்ணத்தில் தான் கலாவதி விதவிதமான பாத்திரங்களை வாங்கித்தருவார். அதுவும் மற்றவர்களுக்கு எதாவது ஒரு பொருள் தான் இருக்கும். சுமித்ராவுக்கு மட்டுமே செட்டாக வாங்கிக் கொடுப்பார். அதனால் அவளை அங்கே எல்லோர் முன்பும் வைத்துப் பிரிக்கக் கூடாது எனச் சொல்லி விடுவார். 
எல்லோருக்கும் கொடுப்பதையே…. தனக்கும் கொடுத்தால் போதும் எனச் சுமித்ரா சொல்லி இருக்கிறாள்.
“அவங்க எல்லோரையும் விட நீதான் அதிகம் உழைக்கிற. அதனால உனக்கு வாங்கிக் கொடுக்கிறது தப்பு இல்லை.” எனக் கலாவதி முடித்துக் கொள்வார்.
இந்த ஆறு வருஷமாகக் கலாவதி கொடுத்த பாத்திரங்களே நிறையப் பரண் மேல் இருந்தது. 
“அம்மா, அந்தப் பாத்திரமெல்லாம் சுபா கல்யாணத்துக்குச் சீரா கொடுத்திடலாம்.” எனச் சுமித்ரா சொன்னதற்கு ஈஸ்வரி ஒத்துக்கொள்ளவில்லை. 
“உன்னோட மேடம் உனக்காக எல்லாம் நல்லதா பார்த்து வாங்கிக் கொடுத்தது. அதை எல்லாம் நீ கல்யாணம் ஆகும் போது கொண்டு போ… உன் தங்கைக்கு வேற வாங்கிக்கலாம்.” என்றார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால்… நிதானமாக எழுந்து குளித்துவிட்டு, அந்த வாரத்திற்குத் தேவையான உடைகளுக்கு. சுமித்ரா இஸ்த்ரி போட்டுக்கொண்டிருந்தாள்.
“அக்கா ப்ளீஸ் என்னோட ட்ரெஸ்ஸுக்கும் பண்ணிடு.” எனச் சுபா ஒரு மூட்டை துணிகளைக் கொண்டு வந்து போட…. 
“அவளே ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் வீட்ல இருக்கா… அவளை ரெஸ்ட் எடுக்க விடாம எல்லா வேலையும் அவ தலையில கட்டு.” என ஈஸ்வரி கத்த…. 
“எனக்குப் பரீட்சை வருது நான் படிக்கணும்.” என்றாள் சுபா பதிலுக்கு. 
“நீ பண்ணாத அவளே பண்ணட்டும்.” என்ற அன்னையைப் பார்த்து புன்னகைத்தவள், சுபா கொண்டு வந்து போட்டதில் இருந்து இரண்டு உடைகளை மட்டும் எடுத்து தேய்த்து வைத்தாள். 
தேய்த்து தரவில்லைஎன்றால் சுபா குறைபடுவாள். தேய்த்துக் கொடுத்தால் ஈஸ்வரி திட்டுவார். அதனால் இருவரும் குறை சொல்ல முடியாதவாறு நடந்து கொண்டாள். 
அப்போது வீட்டின் வெளியே புல்லட் சத்தம் கேட்க….. எழுந்து சுவிட்சை அணைத்துவிட்டு விரைந்து சமையல் அறைக்குள் சென்று மறைந்தாள். 
வீட்டின் நிலை வாசல் தலையில் இடிக்காமல் குனிந்து உள்ளே வந்தவனுக்கு வயது முப்பதிற்குள் இருக்கும். நெடுநெடுவென்று உயரமாகவும், நல்ல நிறமாகவும், கத்தை மீசையோடு பார்க்க கம்பீரமாகவும் இருந்தான். 
“வா பாலா…. உன்னைத்தான் எதிர்பார்த்திட்டே இருந்தேன்.” என ஈஸ்வரி அவனை வரவேற்க… 
வீட்டை பார்வையால் அளந்தபடி….“அத்தை சவுக்கியமா?” எனக் கேட்டான். 
அவன் சத்தம் கேட்டு வெளியே வந்த சுபா, “ஹாய் அத்தான். இப்படித்தான் ஆடிக்கு ஒருவாட்டி அம்மாவசைக்கு ஒருவாட்டி வர்றதா? எங்களை எல்லாம் மறந்திட்டீங்க….” என உரிமையாகக் கோபிக்க… 
“அதையே நானும் சொல்லலாமே… ஏன் நீ என்னைப் பார்க்க வரவேண்டியது தான…..” என்றான்.
“அவ கிடக்கிறா.. நீ சாப்பிடு பாலா…” என்றவர், அவன் தரையில் அமர விரிப்பு ஒன்றை விரித்தார்.
“கைகழுவிட்டு வரேன்.” என்றவன், சமையல் அறைக்குள் செல்ல…. அவன் திடிரென்று உள்ளே வருவானென்று எதிர்பாராத சுமித்ரா திகைத்து விழித்தாள்.
அவளைப் பார்த்தபடி பாலா கைகழுவ…. சுமித்ரா அடுப்பை பற்ற வைத்துத் தோசை கல்லை காய வைத்தாள். அவன் அவள் முதுகை வெறித்தபடி வெளியேறினான். 
சுமித்ரா தோசை சுட்டுக்கொடுக்க… அதைச் சுபா எடுத்து வந்து ஈஸ்வரியிடம் கொடுக்க… அவர் பாலாவின் அருகே உட்கார்ந்து பரிமாறினார். 
முறுகலான தோசையும் கறிக்குழம்பும் அமிர்தமாக இருக்க…. மெதுவாக ரசித்துச் சாப்பிட்டான். 
அவன் சாப்பிடும் போதே, ஈஸ்வரி சுபாவுக்கு வந்த வரனை பற்றிச் சொல்லிவிட்டார். பாலா சாப்பிட்டு முடித்துக் கைகழுவி விட்டு வர… சுபா அவனிடம் காபி டம்ளரை கொடுத்தாள். 
அதைக் கையில் வாங்கியபடி அங்கிருந்த சேரில் அமர்ந்தவன், “பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு கேட்கத்தான் செய்வாங்க. அதுக்காகச் சுமித்ராவை வச்சிக்கிட்டு சுபாவுக்கு முதல்ல முடிக்க முடியுமா?”
“நல்லா சொல்லு பாலா… நானும் அதைத்தான் சொல்றேன். ஆனா சுமிதான் கேட்க மாட்டேங்கிறா.” 
“மனசுல பெரிய அன்னை தெரசான்னு நினைப்பு. அதெல்லாம் முதல்ல சுமிக்கு முடிச்சிட்டு அப்புறம் சுபாவுக்குப் பார்க்கலாம்.”
சமையல் அறையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த சுமிக்குக் கோபம் வர…. அவள் வேகமாக ஹாலுக்கு வந்தாள். 
“அவங்க சுபாவை தான் கேட்டாங்க. முதல்ல அவளுக்குப் பண்ணலாம். எனக்கு நல்ல சம்பளம். அதோடு இனிமே இன்னும் அதிகம் ஆகும். நான் ரெண்டு வருஷம் கழிச்சுப் பண்ணிக்கிறேன். அதுக்குள்ள திலிப்புக்கும் நல்ல வேலை கிடைச்சிடும்.”
அவள் குரலில் இருந்த உறுதியே …இனி அவள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் எனப் பாலாவுக்குப் புரிந்தது. 
“சரி, இப்ப நான் என்ன செய்ய?”
பாலா பொதுவாகக் கேட்பது போலக் கேட்க…. “மாப்பிள்ளை வீட்டை பத்தி நல்லா விசாரிச்சுச் சொன்னா போதும்.” என்றாள் சுமித்ரா.
பாலா தோளை குளிக்கிவிட்டு அமைதியாக இருக்க…. சுமித்ரா உள்ளே சென்று விட்டாள்.
“வீட்ல அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் சவுக்கியமா பாலா?”
“நல்லா இருக்காங்க அத்தை.” 
“உன்கிட்ட பேசிட்டு முடிவு தெரிஞ்ச பிறகு அம்மாகிட்ட சொல்வோம்ன்னு நினைச்சேன். மூத்தவளை வச்சிக்கிட்டு இளையவளுக்குப் பண்றது அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்பப் பேசுவாங்க.” 
“அவ்வளவு அக்கறை இருக்கிறவங்க அண்ணன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான….”
“அவங்களைக் குறை சொல்ல முடியாது பாலா… அவங்க சுமித்ராவுக்குச் சில வரன்கள் சொல்லத்தான் செஞ்சாங்க. சுமிதான் இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டா….”
அவரின் அக்கறை எதனால் எனப் புரியாதவனா பாலா… அதையே நினைத்து சுமித்ராவும் விரக்தியாகச் சிரித்துக் கொண்டாள். 
“சரி அத்தை மாப்பிள்ளை வீட்டை பத்தி நல்லா விசரிச்சிட்டு சொல்றேன். அப்புறம் பேச ஆரம்பிங்க. அம்மாகிட்ட மெதுவா சொல்லிக்கலாம். நான் போகும் போது கடையில மாமாவை பார்த்திட்டு போறேன்.”
“சரி பாலா… நானும் உன்னோட கடைக்கு வரேன்.” என்றவர் , அவனோடு கிளம்ப…. தனது வண்டி வரை வந்தவன், “இருங்க வந்திடுறேன்.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். 
சுபா அறைக்குச் சென்று இருக்க… சுமித்ரா மீண்டும் துணியை இஸ்த்ரி போட ஆரம்பித்திருந்தாள். 
ஹாலுக்கு வந்த பாலா, சுமியின் எதிரில் சென்று நிற்க… அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“இப்ப ஸ்கூல்ல கூட இன்னும் அதிகப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறதா கேள்விபட்டேன்.” 
“ஆமாம்.” 
“வீட்ல, வேலை செய்யிற இடத்தில என உன்னை நல்லா உபயோகப்படுத்திகிறாங்க. ஆனா நீ எப்ப அதைப் புரிஞ்சிக்கப் போறேன்னு எனக்குத் தெரியலை….”
“என்னை யாரும் எதுக்கும் கட்டாயபடுத்தலை… நான் விரும்பிதான் செய்யிறேன். இதுல நீங்க மத்தவங்களைக் குறை சொல்ல வேண்டாம்.” என அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல…
“பரவாயில்லை நீ என்னையே பார்த்துப் பேசலாம். உன்னோட கற்பு ஒன்னும் குறைஞ்சிடாது. “ என்றதும், சட்டென்று அவனைப் பார்த்த சுமித்ரா முறைத்தாள். 
“எனக்கு ஒன்னும் அந்தப் பயமில்லை…. உங்களை நான் மயக்க பார்க்கிறேன்னு உங்க அம்மா தான் சொல்வாங்க.”
“அதை நீ மறக்கவே மாட்டியா சுமி.”
“எனக்கு உங்களோட பேச இஷ்டம் இல்லை…”
“பத்து வருஷம் ஆச்சு சுமி நீ என்னோட பேசி… நீயும் நானும் சின்ன வயசுல இருந்து எவ்வளவு ப்ரண்ட்ஸா இருந்தோம். அத்தை மகன், மாமன் மகள் மாதிரியா பழகினோம்.”
“இப்ப நடக்கிறதுக்கு நான் காரணம் இல்லை… அது உங்களுக்கே தெரியும். சீக்கிரம் யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நாம திரும்ப ப்ரண்ட்ஸ் ஆகிடலாம்.”
“என் தங்கச்சியை விட நீ பெரியவ… ஆனா அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இப்ப உன்னோட தங்கைக்கும் கல்யாணம் ஆகப்போகுது. நீ மட்டும் கல்யாணம் பண்ணாம இருப்ப…. உன்னை விட்டுட்டு நான் பண்ணிப்பேனா….”
“நீ கல்யாணம் பண்ணதும் தான் நான் பண்ணிப்பேன்.” பாலா உறுதியாகச் சொல்ல… கேட்ட சுமித்ராவுக்கு நெகிழ்ச்சியில் கண்கலங்கி விட்டது. 
“என்னை அழ வைக்காதீங்க. தயவு செய்து இங்க இருந்து போங்க.” அவள் சொன்னதும், அவளையே பார்த்தபடி பாலா வெளியே சென்றவன், வாசலில் தலையை இடித்துக் கொண்டான்.
அவன் இடித்த சத்தம் கேட்டு நிமிர்ந்த சுமித்ரா, “அத்தான்.” என அருகில் ஓடிவர…
பாலா தலையைத் தடவியபடி,“ஒன்னும் இல்லை நான் கிளம்புறேன்.” என்றான் . 
“ஒரு நிமிஷம் இதுல உட்காருங்க.” என நாற்காலியை கொண்டு வந்து போட்டவள், உள்ளே சென்று அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். 
அவன் குடித்து முடித்து அவளிடம் விடைபெற்றுக் கிளம்ப….செல்லும் அவனையே சுமித்ரா பார்த்து இருந்தாள். கடந்த காலத்தை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

Advertisement