Advertisement

கண்டுகொண்டேன் காதலை


அத்தியாயம் – 2

பள்ளியில் சுமித்ரா எல்லோரோடும் நன்றாகப் பழகினாலும், ராதா தான் அவளுக்கு நெருங்கிய தோழி. அவளிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள். 
மாலை பள்ளி முடிந்ததும், சுமித்ரா வேலை முடித்து வரும்வரை ராதா அவளுக்காகக் காத்திருப்பாள். இருவரும் பள்ளியில் இருந்தே சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு அவரவர் திசையில் பிரிந்து செல்வார்கள். 
அன்று மாலை மாணவர்கள் சென்றதும், கையெழுத்து போடுவதற்காகப் பள்ளி அலுவலகத்திற்கு வந்த ராதாவை கலாவதி தனது அறைக்கு அழைத்தார். 
அங்கே அவள் வகுப்பில் படிக்கும் மாணவனும், அவன் அம்மாவும் உடன் இருந்தனர். அவர்கள் முன்பே கலாவதி ராதாவை திட்ட ஆரம்பித்து விட்டார். 
“பையனோட நோட் ஏன் எழுதி முடிக்காம இருக்குன்னு கேட்டா… உங்க பையன் மெதுவா எழுதினா நான் என்ன பண்றதுன்னு சொன்னீங்களா?” 
“அதைச் சொல்லத்தான் நாங்க உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோமா…. இப்படிப் பெற்றோர் கிட்ட பொறுப்பு இல்லாம பதில் சொல்றது எனக்குப் பிடிக்காது. உங்களால ஒழுங்கா வேலை பார்க்க முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லைனா வீட்ல இருங்க.” எனக் கலாவதி ரொம்பவும் திட்டிவிட ராதா அழுகையைக் கட்டுபடுத்திக்கொண்டு இருந்தாள். 
வெளியே இருந்த அனைவருக்குமே அவர் பேசியது கேட்டது. அந்த நேரத்தில் ஆசிரியர்கள் அனைவரும் அலுவலகத்தில் தான் இருப்பார்கள். கலாவதி அறையில் இருந்து வந்த ராதா கண் கலங்கி இருக்க….சுமித்ரா அவளைப் பார்வையாலையே அமைதிபடுத்தினாள். 
மற்ற ஆசிரியர்கள் சென்றதும், கலாவதியும் கிளம்பி விட… ராதாவை தேடிக்கொண்டு சுமித்ரா சென்றாள்.
ராதா அங்கிருந்த மாடி செல்லும் படிக்கட்டில் அமர்ந்து இருந்தாள். சுமித்ராவை பார்த்ததும் அழுது விட்டாள். 
“அழாத ராதா உனக்கு மேடம் பத்தி தெரியும் இல்லையா… இன்னைக்கு உன்கிட்ட கத்திட்டு நாளைக்கு உன்னைப் பத்தியே பெருமையா பேசுவாங்க.” 
“அதுக்காக எப்பவும் பொருத்து போக முடியாது. இன்னைக்கு அந்தப் பையனை வச்சிட்டே என்னைக் கத்துறாங்க. அவன் எப்படி என்னை மதிப்பான்?” 
“ரொம்ப மெதுவா எழுதுறான். எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறான். இனி நான்தான் உட்கார்ந்து அவன் நோட்ல எழுதி தரனும், எழுதி தரட்டுமா?” 
“அவங்க பையன் மேல குறை வச்சிக்கிட்டு என்னைப் பத்தி குறை சொல்ல வந்துட்டாங்க. இந்த மாதிரி சின்ன ஸ்கூல்ல வேலை பார்த்தாலே இது ஒரு தொல்லை….” ராதா கோபத்தில் பொரிய…. 
“அழாத ராதா, நாளைக்கு நான் சொல்ற மாதிரி பண்ணு. அப்புறம் பாரு என்ன நடக்குதுன்னு?” என்றாள் சுமித்ரா. 
மறுநாள் சுமித்ரா சொன்னது போல்… மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் சென்ற பிறகும், ராதா விஷாலை மட்டும் அனுப்பாமல்…. அவன் எழுதி முடிக்காமல் இருந்த நோட்டை வேறு ஒரு மாணவனின் நோட்டை பார்த்து எழுத வைத்தாள். 
விஷாலின் அம்மா மகன் எங்கே எனக் கேட்க…. ராதா “அவன் இன்னமும் எழுதி கொண்டிருக்கிறான்.” என்று சொல்ல… கேட்ட அந்த அம்மாவின் முகம் மாறியது. 
“ஓ… இவங்க போய்ப் புகார் சொன்னா… நானே உட்கார்ந்து எழுதி தருவேன்னு நினைச்சாங்க போலிருக்கு….நல்ல ஆளுதான்.” என ராதா மனதிற்குள் நொடித்தபடி, அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். 
அவள் கிளம்பும் நேரந்தான் விஷாலை வீட்டிற்கு அனுப்பினாள். வெளியில் நின்ற அவனின் அம்மாவிடம், “இனிமே தினமும் லேட்டாதான் வருவான். நீங்களும் லேட்டாவே கூப்பிட வாங்க.” எனச் சொல்லிவிட்டு சென்றாள். 
இரண்டு நாட்கள் இப்படியே செல்ல…. விஷாலின் அம்மா மகனை கண்டித்தார். தன் மகனிடம் குறையை வைத்துக்கொண்டு ஆசிரியர் பற்றிக் குறை கூறியது தவறு என்பதை உணர்ந்தார். 
விஷாலுக்குமே பள்ளி முடிந்து எல்லோரும் சென்ற பிறகு, தான் மட்டும் உட்கார்ந்து எழுத கஷ்ட்டமாக இருக்க…. அதற்கு அடுத்த நாளில் இருந்து வகுப்பில் வேகமாக எழுத ஆரம்பித்தான். அதன்பிறகு அவனும் பள்ளி விடும் நேரத்திலேயே வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தான். 
அன்று மாலை ராதாவின் முகத்தில் இருந்த தெளிவை பார்த்து, சுமித்ரா மகிழ்ச்சி அடைந்தாள். 
“நான் முதல்லையே உன்கிட்ட என்ன பண்றதுன்னு கேட்டிருக்கலாம். தேவை இல்லாம பேசி, நல்லா வாங்கிக் கட்டிகிட்டேன்.” ராதா புலம்ப…. சுமித்ரா அவளைச் சமாதானம் செய்யும் விதமாக அவள் கையைப் பிடித்து அழுத்தினாள். 
“வீட்லதான் நிம்மதி இல்லைன்னு வேலைக்கு வந்தா… இங்கயும் நிம்மதி இல்லை…” 
“இங்க நாள் முழுக்க நின்னுட்டு, வீட்லயும் போய் வேலை பார்க்கணும். இங்க இருக்கிற டென்ஷன்ல என் வீட்டுக்காரர் கிட்ட கோபத்தைக் காட்டினா…. அந்த மனுஷன் அதுக்கு மேல என்னைப் போட்டு காயச்சுறார். நானும் என்னதான் பண்றது.”
“என் மாமியார் ஒரு வேலையும் பண்ண மாட்டாங்க.” 
“உன் பையனை பார்த்துகிறாங்களே?” சுமி சொல்ல…
“அதைச் சொல்லு… அதாவது செய்றாங்களே….இல்லைனா என்பாடு திண்டாட்டம் தான்.” என்றாள் ராதா. 
“சரிவிடு அதைப் பத்தியே பேசாத, இன்னும் டென்ஷன் தான் அதிகம் ஆகும். வேற எதாவது பேசு.” சுமித்ரா சொல்ல…. 
“இந்தப் புடவையில அழகா இருக்கச் சுமி.” என்றாள் ராதா. 
“அப்ப மத்த நாள் நான் அழகா இல்லையா…” சுமித்ரா புன்னகைக்க… 
“அப்படி இல்லை… இதே நான் காட்டன் புடவை கட்டினேன்னு வை… என்னை இன்னும் ரொம்பக் குண்டா காட்டுது… ஆனா உன் உடம்பு வாகுக்கு எடுப்பா இருக்கு… அதுதான் சொன்னேன்.” என்ற ராதாவுக்குச் சற்று குண்டான உடல்வாகு தான். 
“குழந்தை பிறந்த பிறகு எல்லாப் பெண்களுக்கும் வெயிட் போட்டுடுது. அதுக்கு என்ன பண்றது?” என்றாள் சிமி அவளைச் சமாதானம் செய்யும் விதமாக. 
“அப்ப நீயும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு வெயிட் போட்டுடுவியா சிமி… உன்னை எப்ப அப்படிப் பார்ப்பேன்?” ராதா குறும்பாகக் கேட்க…. 
சுமித்ராவுமே ஒரு நிமிடம் தானும் கல்யாணத்திற்குப் பிறகு எப்படி இருப்போம் என்று கற்பனை செய்து பார்த்தவள், உடனே நிதர்சனம் உணர்ந்து தலையைக் குலுக்கிக் கொண்டாள். 
“என்ன சுமி?” 
“நான் இப்ப அதைப் பத்தி எல்லாம் நினைக்கிற நிலைமையில கூட இல்லை….” 
“ஏன்?” 
“உனக்குத் தெரியாததா? சுபா மேல படிக்கனும்ன்னு சொல்லிட்டு இருக்கா… இன்னும் திலிப்க்கு நிரந்தரமா வேலை கிடைக்கலை…. சும்மா கிடைச்ச வேலையைச் செஞ்சிட்டு இருக்கான். இதுல நான் எப்படிக் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிறது?” 
“திலிப் வந்திருந்தானா?” 
“அவன் பிரண்ட்ஸ் கூடச் சென்னையில் தான் இருக்கான். போன் கூட அவன் பண்ண மாட்டான். நாங்கதான் பண்ணனும். எதோ அவன் செலவுக்கு வீட்ல பணம் கேட்கிறது இல்லை….அதுவரை பரவாயில்லை.” 
“எப்போவோ ஒருமுறை வீட்டுப் பக்கம் வருவான். அப்ப அம்மா அவனுக்குப் பிடிச்சதா சமைச்சு போட்டு… கையில கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவாங்க.”
“உன் தம்பிக்கு வேலை கிடைச்சிட்டா… நீ உன்னைப் பத்தி கொஞ்சம் யோசிப்ப.” 
“இப்ப என்ன என் கல்யாணத்துக்கு அவசரம்? சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி என்னத்தைச் சாதிக்கப் போறோம் சொல்லு?” சுமி கிண்டலாகச் சொல்ல… 
“அதைச் சொல்லு…. இப்ப நான் கல்யாணத்தைப் பண்ணி என்ன சாதிச்சேன்?”
“ஒரு குழந்தை பெத்து இருக்கியே அது சாதனை இல்லையா…” எனச் சுமித்ரா கண்சிமிட்ட… ராதா சிரித்து விட்டாள். 
அவள் வீட்டிற்குக் கிளம்பியதும், சுமித்ரா கலாவதியின் அறைக்குச் சென்றாள். அவர் இன்னும் கிளம்பவில்லை. அவள் சென்ற போது, அவர் யாருடனோ போன்னில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார். 
“இந்தத் தடவை வரும்போது நீ கல்யாணம் பண்ணிக்கிற அவ்வளவுதான்.”
“எனக்கு நம்பிக்கை இருக்கு… நல்லதே நடக்கும். சரி அப்புறம் பேசுறேன். சுமி வந்திருக்கா…”
“ஆமாம் டா….. நீ சொன்னாலும் சொல்லலைனாலும், அவள் என் வலது கைதான்.” என்றவர், சிரித்தபடி செல்லை வைத்தார். 
“உங்க தம்பியா மேடம்.” 
“ஆமாம் சுமி.” 
“அவர் வெளிநாட்டில இல்ல இருக்கிறதா சொன்னீங்க. இங்க வரப்போறாரா?” 
“ஆமாம் சுமி. மூன்னு வருஷம் ஆச்சு அவன் இங்க வந்து. ஒவ்வொரு தடவை போன் பண்ணும் போதும் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேன். கேட்டா தான…”
“இந்தத் தடவை அவன் வந்திட்டு போகும் போது, கல்யாணம் முடிச்சுத்தான் அனுப்பனும். அதுதான் எங்க சித்தி அவனுக்குத் தீவிரமா பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க.” 
“ஓ…” 
“அவன் என்னோட சித்தி பையனா இருந்தாலும், எனக்குச் சொந்த தம்பி போலத்தான். என மேல ரொம்பப் பாசம். இந்த ஸ்கூல் கட்ட ரொம்ப ஹெல் பண்ணி இருக்கான்.” எனத் தன் தம்பியின் பெருமையை அவர் சொல்ல… அதைப் புன்னகையுடன் கேட்டிருந்த சுமி, தான் வந்த வேலையை முடித்துக்கொண்டு அறையில் இருந்து சென்றாள். 
கலாவதி நல்ல மனநிலையில் இருந்தால்… அவளிடம் மட்டும் என்று இல்லை… மற்ற ஆசிரியர்களிடமும் தனது குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். அதே அவருக்குக் கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். அது சுமித்ராவகவே இருந்தாலும், சிறிய தவறு செய்தாலும் வைத்து வாங்கி விடுவார்.
சுமித்ரா வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளும் ராதாவை போலத்தான். திட்டு வாங்கிவிட்டு யாருக்கும் தெரியாமல் அழுவாள். பிறகு நாட்கள் செல்ல செல்ல அவளுக்கே எல்லாவற்றையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து விட…. இப்போது கவனமாக நடந்து கொள்கிறாள். 
அடுத்தச் சில மாதங்களில் வந்த தெரிந்தவரின் மகள் திருமணதிற்கு ஈஸ்வரி செல்ல…. “இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடுறேன்.” என்றபடி அவருடன் சுபாவும் கிளம்பினாள். 
“உனக்கு நல்லா வக்கனையா தான் வடிச்சு கொட்டுறேன். அப்பவும் உனக்குப் பத்தாதே.” என்றார் ஈஸ்வரி. 
சுபா சுமித்ராவின் பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு தயாராக.
“இப்ப நீயேன் புடவை கட்டின…. ஒழுங்கா சின்னப் பொண்ணா சுடிதார்லையே வரலாமே….” என்ற தன் தாயை சுபா முறைத்தாள்.
புடவை கட்டியதும் சுபா பார்க்க பெரிய பெண்ணாகத் தெரிந்தாள். அதோடு தன்னிடம் இருந்த அணி மணிகளையும் அழகாக அணிந்து கொண்டு சென்றாள். 
மண்டபத்தில் இருந்த பெண்களில் அவள் அழகாக இருக்க… அவளையே அடிக்கடி வீடியோ எடுத்தவர், அதை அங்கிருந்த பெரிய திரையில் வேறு போட்டு ப்ரீஸ் செய்ய….
தன் மகனுக்கு வெகுநாட்களாகப் பெண் தேடும் ஒரு பெண்மணி பார்த்துவிட்டு ஆர்வமாக அவளைத் தேடினார். 
பின்னால் இருந்த இருக்கை ஒன்றில் சுபா தன் அம்மாவின் அருகே அமர்ந்து இருந்தாள். அவர்களை நோக்கி எழுந்து சென்ற அந்தப் பெண்மணி, தன்னை ஈஸ்வரியிடம் அறிமுகம் செய்து கொண்டார். 
“நான் மேகலா, பொண்ணு வீட்டுக்குச் சொந்தம், நீங்க…” எனக் கேட்க… 
“நான் ஈஸ்வரி, நாங்களும் பொண்ணு வீட்டுக்குத் தெரிஞ்சவங்கதான். ஆனா நெருங்கின சொந்தம் இல்லை.” 
“ஓ… இது யாரு?” என அவர் சுபாவை காட்டிக் கேட்க…. 
“என்னோட மகள் சுபா…” என ஈஸ்வரி சொல்ல… மேகலா சுபாவை பற்றி மேலும் விவரம் கேட்டார். இவர் ஏன் அவளைப் பற்றியே கேட்டார் என அப்போது ஈஸ்வரிக்கு புரியவில்லை… பிறகு சிறிது நாட்களில் சொந்தக்காரர் ஒருவர் மூலம் தெரியவந்தது. 
அவர்களுக்குச் சுபாவை மிகவும் பிடித்ததால்…. அவர்கள் மகனுக்கு அவளைப் பெண் கேட்டு அனுப்பி இருந்தனர்.
“அவளுக்கு மூத்தவ இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கும் போது…. எப்படி இவளுக்குப் பண்ண முடியும்.” என ஈஸ்வரி வந்தவரிடம் தங்கள் குடும்ப விவரம் சொல்லி அனுப்பினார்.
ஒருநாள் ஞாயிறு அன்று மேகலாவே தன் கணவருடன் இவர்கள் வீட்டிற்கு நேரிலேயே வந்துவிட்டார். 
“நாங்க வேணா ஆறு மாசம் காத்திருக்கோம். அதுக்குள்ளே உங்க பெரிய பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட முடியுமா… அப்புறம் வேணா இவங்க கல்யாணம் வச்சுக்கலாம்.” என மேகலா யோசனை சொல்ல… 
ஒரு கல்யாணத்திற்குத் தேவையான பணமே முழுமையாக இவர்களிடம் இல்லை… இதில் ஒரே வருடத்தில் இரு பெண்களுக்கு எப்படித் திருமணம் செய்ய முடியும்? இது நடக்கும் காரியம் இல்லை என்பதால்… 
“அவ மேல படிச்சிட்டு வேலைக்குப் போகணும்ன்னு ஆசைப்படுறா….அதனால அவளுக்கு நாங்க இப்ப கல்யாணம் செய்யுற மாதிரி இல்லை.” என ஈஸ்வரி எதோ சாக்கு சொல்லி சமாளித்தார்.
மேகலா மனமே இல்லாமல் கிளம்பி சென்றார். அவர் கொண்டு வந்திருந்த புகைப்படத்தில் மாப்பிள்ளையைப் பார்த்திருந்த சுபாவுக்கு, அந்த மாப்பிள்ளையை மிகவும் பிடித்து விட்டது. 
“எவ்வளவு ஹன்ட்சம்? அதோட நல்ல வேலை. சொந்த வீடு, காரு எல்லாம் இருக்கு.” இப்படி எல்லாம் சொன்னவள், 
“எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். நான் முதல்ல பொறந்திருக்கக் கூடாது.” என நொந்து போய்ப் பேச…. 
அதைக் கேட்டிருந்த சுமித்ரா, அந்த நொடியே முடிவெடுத்தாள். தன் தங்கைக்கு இந்த இடத்திலேயே திருமணம் செய்வது என்று. 
அவள் அதை வீட்டில் சொன்னபோது, யாருமே ஒத்துக்கொள்ளவில்லை.. ஏன் சுபாவே “நான் எதோ விளையாட்டுக்கு பேசினேன். நீ அதை மனசுல வச்சிட்டு இப்படிப் பண்ணாத.” எனச் சொல்ல…
“இல்லை சுபா ரொம்ப நல்ல இடம். நாம தேடும் போது இப்படி அமையாது.” என்றாள் சுமித்ரா. 
“நீ இருக்கும் போது…. அவளுக்கு முதல்ல கல்யாணம் பண்ணா ஊர் உலகத்துல என்ன பேசுவாங்க? அதெல்லாம் வேண்டாம் முதல்ல உனக்கே பார்க்கலாம்.” என்றார் சுந்தரம். 
“அப்பா, நான் எப்படியும் இப்ப கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இப்ப இருக்கிறதை வச்சுச் சுபா கல்யாணத்தை முடிச்சிடலாம். திலிப் வேலைக்குப் போகட்டும், அப்புறம் நான் பண்ணிக்கிறேன்.” என்றாள் சுமித்ரா. 
“என்ன சொல்ற சுமி? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.” ஈஷ்வரி சொல்ல… 
“ப்ளீஸ் மா, புரிஞ்சிக்கோங்க. ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணாம இருக்கிறதுக்கு, சுபாவுக்காவது முதல்ல ஆகட்டும். நான் என்ன கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனா…”
“இப்பவே உனக்கு இருபத்திநாலு வயசு சுமி.” 
“இப்ப எல்லாம் பொண்ணுங்க முப்பது வயசுல கூடக் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நான் என்ன அவ்வளவு நாளா இருக்கேன்னு சொல்றேன். ஒரு ரெண்டு வருஷம் போகட்டும்மா… கண்டிப்பா பண்ணிக்கிறேன்.”
இந்தத் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் சுமித்ரா வெகு தீவிரமாக இருந்தாள். 
சுபா படித்து முடித்து, வேலை தேடி சம்பாதித்து, தன் திருமணதிற்குத் தானே பணம் சேர்ப்பாள் என்ற நம்பிக்கை சுமித்ராவுக்கு இல்லை…. கையில் பணம் இருந்தால் அதைச் செலவு செய்யத்தான் சுபா நினைப்பாள். அதோடு இன்னும் திலிப்புக்கும் வேலை கிடைக்கவில்லை… 
இந்த நேரத்தில் தான் முதலில் திருமணம் செய்து கொண்டு சென்றால்… தன் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்ற எண்ணத்தில், முதலில் சுபா திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் எனச் சுமித்ரா நினைத்தாள்.

Advertisement