Advertisement

கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 1 
“சுபா…. ஹே சுபா, காலேஜ்க்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிட வா டி ….” 
“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.” எனப் பாடலை பாடியபடி வந்து சாப்பிட அமர்ந்த சுபத்ரா, “இன்னைக்கு என்னமா லஞ்ச் பாக்ஸ்ல?” எனக் கேட்டாள்.
“எல்லாம் உனக்குப் பிடிச்சதுதான். சப்பாத்தியும், தொட்டுக்க உருளைக்கிளங்கு போட்டுத் தக்காளி தொக்கு பண்ணி இருக்கேன்.” 
“ஓகே…” என்றபடி சாப்பிட்டவள், சாப்பிட்டு அதே தட்டில் கைகழுவி விட்டு, “அப்புறம் இன்னைக்கு என்னோட பேட்டா…” எனக் கைநீட்ட…. 
“ட்ரைன்னுக்குப் பாஸ் இருக்கு…. மதியம் சாப்பிட டிபன் கட்டி தரேன். அப்புறமும் ஒருநாளைக்கு முழுசா முப்பது ருபாய் வாங்கிட்டு போற….தினமும் அப்படி என்னதான் டி செலவு பண்ணுவ?” என்ற ஈஸ்வரியை நின்று முறைத்த சுபத்ரா… 
“என்னோட ப்ரண்ட்ஸ் எல்லாம் ஒருநாளைக்கு எவ்வளவு செலவு பண்றாங்க தெரியுமா? ஒரு முப்பது ரூபாய் கொடுக்க மூக்கால அழுவுறீங்க.”
“அழுகலை…. அப்படி என்ன செலவுன்னு தான் கேட்கிறேன்.”
“அவங்க எல்லாம் கேண்டீன்ல சாப்பிடும் போது… நான் என்ன வேடிக்கை பார்க்கிறதா? அப்படியே நான் வரலைன்னு சொன்னாலும், என் ப்ரண்ட்ஸ் என்னை விட்டுட்டு போக மாட்டாங்க. அவங்ககிட்ட நான் வாங்கிகிட்டா அதுவும் உங்க செல்ல பொண்ணுக்கு பிடிக்காது.” எனச் சுபத்ரா கோபத்தில் தொண்டை அடைக்கக் கத்த…. 
“அம்மா, ஏன் மா அவளைக் காலையிலேயே டென்ஷன் பண்றீங்க? செங்கல்பட்டுல இருந்து குரோம்பேட் வரை அவ போயிட்டு வரணும். கொண்டு போற டிபன் அவளுக்குச் சாயங்காலம் வீடு வர்ற வரை பத்துமா…” என்றபடி வந்த சுமித்ரா தன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து தன் தங்கையிடம் கொடுக்க…
“எனக்கு ஒன்னும் வேணாம் போ…. முப்பது ருபாய் கொடுக்கிறதே எதோ முன்னூறு ருபாய் கொடுக்கிற மாதிரி பில்டப்.”
“அவ… அவ… பிசாவும் பர்கரும் சாப்பிடும் போது… எனக்கு ஒரு சமோசா டீக்கு நான் இந்தப் பாடு படறேன்.” என்றபடி அவன் கல்லூரி பையோடு வெளியே செல்ல…
அவள் பின்னாடியே ஓடிய சுமித்ரா, “நீ இந்தப் பணத்தை வாங்காம போனா என் மனசு கஷ்ட்டப்படும் சுபா. அம்மா எதோ தெரியாம பேசிட்டாங்க. நீ மனசுல வச்சுக்காத…” என்றபடி தங்கையின் கையில் பணத்தைக் கொடுத்தாள்.
“உனக்காகத்தான் வாங்கிக்கிறேன். அம்மாகிட்ட சொல்லி வை…” என்றபடி பணத்தைப் பர்சில் வைக்கச் சென்றவள், கண்களை ஆச்சர்யத்தில் பெரிதாக விரித்தாள்.
“ஹே… நூறு ரூபாய். சில்லறை இல்லையா…” சுபா கேட்க… 
“நீயும் இன்னைக்குப் பர்கர் சாப்பிடு. ஒருநாள் சாப்பிடுறதுனால ஒன்னும் குறைஞ்சு போயிடாது.” எனச் சுமி புன்னகைக்க…. 
“தேங்க்ஸ் கா…” என்றபடி சுபா அங்கிருந்து துள்ளலாகச் சென்றாள்.
அவள் சென்றதும் உள்ளே வந்த சுமித்ரா, “அம்மா எனக்கும் டிபன் தாங்க. டைம் ஆகிடுச்சு….” என்றபடி சாப்பிட அமர, அவளுக்குச் சப்பாத்தியும் தக்காளி தொக்கும் கொண்டு வந்து ஈஸ்வரி கொடுத்தார்.
“வர வர சின்னது ரொம்பச் செலவு வைக்குது. நீயும் தான் இருக்கியே… வேலை செய்யிற இடத்தில ஒரு டீ கூட வாங்கிக் குடிக்க மாட்ட…”
“அங்க ரொம்ப விலை அதிகம். சின்னக் கப்பு டீ அஞ்சு ரூபாய். அதை வாங்கிக் குடிச்சாலும் குடிச்ச மாதிரியே இருக்காது. அதுக்காக நான் குடிக்காம இல்லையே மா…நீங்கதான் வீட்ல இருந்து போட்டு கொடுத்து விடுவீங்களே?”
“நீயும் உன் தங்கச்சியும் அப்படியே எதிரெதிர் துருவங்கள். உன் தங்கச்சி மத்தவங்ககிட்ட இருந்து பிடிங்கி கூடச் சாப்பிட்டு விடுவா…. ஆனா நீ மத்தவங்ககிட்ட பச்சை தண்ணி வாங்கிக் குடிக்கக் கூடப் பத்துதரம் யோசிப்ப….”
ஈஸ்வரி சொன்னதற்குச் சுமித்ரா புன்னகைத்தாளே தவிர… வேறு ஒன்றும் சொல்லவில்லை.
“அவ உன்கிட்ட மட்டுமா பணம் வாங்கிட்டு போறா… என்கிட்டே, அப்புறம் உங்க அப்பாகிட்டன்னு தனித்தனியா பணம் அடிச்சிடுறா….”
“அப்பாவும் பணம் கொடுக்கிறாரா?” 
“இப்ப நேரா உன் தங்கச்சி எங்க போவான்னு நினைக்கிற? உங்க அப்பா கடைக்குப் போய் அவர்கிட்ட இருந்து எதாவது வாங்கிட்டுத்தான் போவா….”
“ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் செலவு பண்றா? அதைக் கேட்டா அவ்வளவு கோபமா வருது. இவளை வச்சிக்கிட்டு என்ன பண்றது?”
“சரி விடுங்கம்மா…காலேஜ்ல மத்த பசங்க செலவு பண்ணும் போது, அவ மட்டும் என்ன செய்வா? இந்த வருஷம் தான் படிப்பு முடிஞ்சிடுமே…” என்ற சுமித்ரா சாப்பிட்டு முடித்து எழுந்து கைகழுவ சென்றாள். 
“இந்த வருஷம் படிச்சு முடிச்சதும், உன் தங்கை வேலைக்குப் போய்ப் பொறுப்பா மாறிடுவான்னு எல்லாம் நீ கனவு காணாத… அவ மேல படிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருக்கா….”
அது சுமித்ராவுக்கும் தெரியும், அறைக்குள் சென்றவள், நீல நிறத்தில் காட்டன் புடவை அணிந்து தன் கைப்பையோடு வெளியே வந்தாள். 
அவளின் வெளிர் நிறத்திற்கும், மெலிவான உடலுக்கும் அந்தக் காட்டன் புடவை மிகவும் எடுப்பாக இருந்தது. சுபத்ரா வைத்திருந்ததில் இருந்து புடவையின் நிறத்திற்குக் காதணியும் கழுத்தணியும் எடுத்து அணிந்து இருந்தாள்.
“அம்மா நான் ஸ்கூல் போயிட்டு வரேன்.” என்றபடி அவள் செல்ல… அவளின் நடைக்கு ஏற்ப… அசைந்தாடும் நீள கூந்தலை ரசித்தபடி, அவள் பின்னே வந்த ஈஸ்வரி, “சரிமா பார்த்து போ…” என்றார். 
பத்து நிமிட நடையில் அவள் வேலை பார்க்கும் பள்ளிக்கு வந்தவள், திறந்திருந்த அலுவலக அறைக்குச் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள். 
பள்ளி நேரம் எட்டு நார்ப்பதுக்குத்தான் என்றாலும், அவளின் வேலை நேரம் காலை எட்டு பதினைந்துக்கே தொடங்கிவிடும். 
அவள் வேலை செய்வது ஒரு தனியார் பள்ளியில். அவள்தான் அங்கே எல்லாமே. அவளின்றி ஒரு துரும்பும் அசையாது என்பதுதான் உண்மை. 
அவள் தந்தை அந்தப் பகுதியில் சிறிய மளிகை கடை வைத்து நடத்துகிறார். வரும் வருமானம் நான்கு பேரின் சாப்பாட்டிற்கே சரியாக இருந்தது. 
பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து, அவள் கல்லூரியில் சேர இருந்த நேரம், அவள் தந்தை சுந்தரத்துக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட….இருந்த கொஞ்ச சேமிப்பும் அதில் கரைந்தது.
கல்லூரியில் சேர கூடப் பணம் இல்லை… அப்போதுதான் இந்தப் பள்ளியில் வந்து வேலை கேட்டாள். இந்தப் பள்ளியை நடத்துவது அவளின் தூரத்து உறவினர் கலாவதி.
கலாவதிதான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும். அவர் கணவர் சதீஷ் தன் மனைவிக்காக நிறுவிய பள்ளி. 
ஆரம்பிக்கும் போது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. இப்பொழுது பத்தாம் வகுப்பு வரை வளர்ந்திருக்கிறது. 
அந்தப் பகுதியில் கல்வியின் தரத்திற்குப் பேர் பெற்ற பள்ளி என்பதால்… நிறையப் பேர் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க… இடப்பற்றாக்குறையால் இப்போது உயர்நிலைப் பள்ளியை தனியாக வேறு இடத்திற்கு மற்றும் எண்ணத்தில்….சிறிது தூரத்தில் வேறு ஒரு இடத்தை வாங்கிக் கட்டடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆறு வருடங்களுக்கு முன்பு வேலை கேட்டு வந்த சுமித்ராவிடம், “நான் உன் படிப்புக்குப் பணம் தருகிறேன். நீ படிப்பை முடித்துவிட்டு வா.” என்றுதான் கலாவதி சொன்னார்.
“இல்லை… நான் வேலைக்குப் போயிட்டே கரெஸ்ல படிச்சிக்கிறேன்.” எனச் சுமித்ரா மறுத்துவிட்டாள்.
பன்னிரெண்டாம் வகுப்பு மட்டுமே முடித்திருந்தவளுக்கு, அவரும் என்ன வேலை கொடுப்பார். ஆனால் அவள் குடும்ப நிலவரம் தெரியுமென்பதால்…பள்ளி அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக்கொண்டார். 
மூவாயிரம் சம்பளம் என்று சொல்லிவிட்டார். ஆனால் அந்த அளவுக்கு அவளுக்கு என்ன வேலை கொடுப்பது என்றுதான் தெரியவில்லை… ஏற்கனவே அலுவலக வேலைப் பார்க்க இரண்டு பேர் இருந்தனர். சரி வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.
மறுநாள் சொன்னபடி அவளின் அம்மாவின் புடவையைக் கட்டிக்கொண்டு வந்தவளை பார்க்க சிரிப்பு வந்தாலும், தன் காலில் அவள் நிற்க விரும்புவதை நினைத்துப் பெருமை கொண்டார். 
அவர்கள் பள்ளியில் தினமும் புடவைதான் கட்ட வேண்டும். சனிக்கிழமைகளில் சுடிதார் அணிந்து கொள்ளலாம்.
அலுவலகத்தில் பள்ளி கட்டணம் வசூலிப்பது, கணக்கு எழுதுவது என்றுதான் முதலில் வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கலாவதி அவளுக்கான வேலையை நிர்ணயக்கும் முன்னர், அவளுக்கான வேலைகளை அவளே தேர்ந்தெடுத்துக் கொண்டாள் என்பதுதான் உண்மை.
காலை பத்துமணி வரைதான் அலுவலகத்தில் வேலை அதிகம் இருக்கும். அதே போல் திரும்பப் பள்ளி விடும் சமயம். மற்ற நேரங்களில் அலுவலகத்தில் அவளுக்கு அவ்வளவு வேலை இல்லை….
ஒருநாள் நண்பகல் வேளையில் கலாவதியிடம் அனுமதி கேட்டுக்கொண்டு அவர் அறைக்கு வந்தவள், பாலார் வகுப்புகளில் ஒரே நேரத்தில் நாற்பது பிள்ளைகளைச் சமாளிப்பது, அந்த வகுப்பு ஆசிரியர்களுக்குச் சிரமமாக இருப்பதால்… தானும் அவர்களுக்குச் சிறிது நேரம் உதவட்டுமா எனக் கேட்டாள்.
அதைப் பற்றிக் கலாவதியே யோசித்துக் கொண்டு தான் இருந்தார். உதவி ஆசிரியர்கள் சிலரை நியமிக்க வேண்டும் என்று… சுமித்ரா கேட்டதும்,
“சரி… காலையில இங்க ஆபீஸ் வேலை முடிஞ்சதும், அவங்களுக்கு ஹெல் பண்ணு.” என்றார்.
சுமித்ரா பயந்து கொண்டே தான் கலாவதியிடம் பேச சென்றாள். ஏனென்றால் கலாவதிக்கு மிகவும் கோபம் வரும். உனக்கு எதுக்கு இந்த அதிகப்பிரசங்கித்தனம் எனக் கேட்டுவிடுவாரோ எனப் பயமாகத்தான் இருந்தது.
கலாவதி சம்மதித்ததும், சுமித்ரா மகிழ்ச்சியுடன் சென்று அந்த வகுப்புப் பிள்ளைகள் எழுதவும், சாப்பிட வைக்கவும் உதவினாள். அடுத்த மாதத்தில் மேலும் இரு உதவி ஆசிரியர்களைக் கலாவதி நியமித்தார்.
அவர்கள் பள்ளியில் பிள்ளைகள் பள்ளி முடிந்து கிளம்பும் போது, மாணவர்களை வரிசையாக அனுப்பும் பொறுப்பு ஆசிரியர்களுடையது. எல்லா மாணவர்களும் சென்ற பிறகு மேலும் அரை மணி நேரம் சென்றுதான் ஆசிரியர்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும். 
மதியமே பாலார் பள்ளி முடிந்துவிடும். அன்று அதுபோல் பள்ளி வாகனத்தில் செல்ல வேண்டிய பிள்ளைகள் சென்றதும், பெற்றோரே வந்து அழைத்துச் செல்லும் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டு இருந்த சுமித்ரா, பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்வதைக் கலாவதி முதல் தளத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தார். 
முகத்தில் புன்னகையுடன் அவர்களுக்குத் திருப்தியாகும் வகையில் அவள் பதில் சொல்வதைப் பார்த்தவர், மறுநாளே அவளைப் பாளர் வகுப்புகளுக்கு மேற்ப்பார்வையாளர் ஆக்கினார். 
தினமும் அந்தப் பிள்ளைகளுக்கு என்ன பாடம் எடுப்பது, அந்த வகுப்பு ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு ஒழுங்காகச் சொல்லித்தருகிறார்களா…. அதேபோல் நோட்டுப் புத்தகம் எல்லாம் ஒழுங்காகத் திருத்துகிறார்களா… என்று பார்ப்பதும், அதோடு பெற்றோர் சொல்லும் புகார்களைக் கவனிப்பது எல்லாம் சுமித்ராவின் வேலை.
அலுவலக வேலையில் இருந்த இருவரில் ஒருவர் வயதான பெண்மணி. “மேடம் என் பையன் என்னை அவனோட வந்து இருக்கச் சொல்றான். நானும் உங்ககிட்ட நிறையத் தடவை சொல்லிட்டேன். நீங்க விடவே இல்லை. அவன் கூப்பிடும் போதே போயிட்டா எனக்கு நல்லது.”
“இப்பத்தான் சுமித்ரா இருக்காளே… அதனால என்னை அனுப்பிடுங்க ப்ளீஸ்…” என்றதும், அவர் வேலையைக் கலாவதி சுமித்ராவை பார்க்க சொன்னார்.
அந்த வேலை மட்டும் இல்லை… எந்த வகுப்பு ஆசிரியர் வரவில்லை என்றாலும், சுமித்ரா அந்த வகுப்பை பார்த்துக் கொள்வாள். அப்படி மற்ற ஆசிரியர்கள் வேறு வகுப்புகளுக்குச் செல்லும் போது, பிள்ளைகள் சத்தம் போடாமல் பார்த்துக் கொள்வார்களே தவிர… வேறு எதுவும் செய்யமாட்டார்கள்.
சுமித்ரா அப்படி இல்லை… எதாவது நோட்ஸ் பிள்ளைகள் எழுத வேண்டியது இருந்தால்… பக்கத்து வகுப்பு ஆசிரியரிடம் இருந்து வாங்கி எழுதி போட்டு விடுவாள். அது அந்த வகுப்பு ஆசிரியருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மற்றவர்கள் எப்போது ஓய்வு நேரம் வரும், ஓய்வு அறையில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம் எனக் காத்திருக்கும் வேளையில்… சுமித்ரா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். 
மூன்றாம் ஆண்டு இறுதியில் காலாவதியே… அவரிடம் வரும் ஆசிரியர்களிடம், சுமித்ரா இதைப் பார்த்துவிட்டாளா எனக் கேட்டு விட்டுத்தான் கையெழுத்து போடும் அளவுக்கு , அங்கே அவள் முக்கியத்துவம் வாய்ந்தவளாக முன்னேறி இருந்தாள். 
சுமித்ரா பார்த்திருந்தால்… தவறுகள் எதுவும் இருக்காது என அவருக்குத் தெரியும். 
பள்ளியில் வகுப்புகள் பெருகிக்கொண்டே வந்ததால்… அலுவலகத்திலும் வேலை அதிமாக இருக்க… மேலும் ஒருவரை அலுவலக வேலைக்கு நியமித்து இருந்தார்.
சுமித்ராவின் சம்பளமும் வருடா வருடம் ஏற்றிக்கொண்டே சென்றார். அவர் அவளுக்குக் கொடுக்கும் சம்பளம் குறைவு என்பது போலத்தான் எப்போதும் அவருக்குத் தோன்றும். அந்த அளவுக்குச் சுமித்ரா அங்கே வேலை செய்வாள்.
அவள் பட்டபடிப்பு முடித்ததும், அவளை முதலில் டீச்சர் ட்ரைனிங் முடிக்க வைத்தார். ஐந்தாம் வகுப்பு கணித வகுப்பு ஆசிரியர் ஆக்கினார். அதோடு அவளுக்கு ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் வகுப்புகளுக்கு மேற்ப்பார்வையாளர் என்ற கூடுதல் பொறுப்பையும் கொடுத்தார்.
இந்த ஆறு ஆண்டுகளில் அவரின் பள்ளி எவ்வளவு வளர்ச்சி அடைந்ததோ… அதே அளவு சுமித்ராவும் வளர்ந்து இருக்கிறார்கள். அது அவளின் சொந்த முயற்சிதான்.
எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ளும் சுமித்ராவை பல ஆசிரியர்களுக்குப் பிடித்தாலும், சிலருக்கு அவள் மீது பொறாமையும் உண்டு.
சீனியர் ஆசிரியர்கள் இருக்கும் போது, சுமித்ராவிற்கு மேற்பார்வையாளர் பொறுப்பைக் கொடுத்தது, சிலருக்கு பிடிக்கவில்லை….. இவள் என்ன நம்மைக் கேள்வி கேட்பது என்ற ஆத்திரம்.
ஆசிரியர்கள் எப்படி நினைத்தாலும் மாணவர்களின் ஓட்டு சுமித்ராவிற்குத்தான். வகுப்பில் எதாவது பிரச்சனையா… ஆண்டுவிழாவில் நாடகம் போடுவதா அல்லது நடனம் ஆடுவதா… என்ன செய்வது என்றாலும் அவர்களுக்குச் சுமித்ராவின் ஆலோசனை வேண்டும். 
உயர்நிலை வகுப்புகளுக்குத் தனி மேற்பார்வையாளர் இருந்தாலும், மாணவர்கள் தேடி வருவது அவளைத்தான்.
எதற்கும் சுமி மேம்தான். மாணவர்களுக்கு மட்டும் அல்ல கலாவதிக்கும் அப்படித்தான்.
மிகவும் கோபக்காரர் அவர். அவர் மனதில் சுமித்ராவுக்கு எவ்வளவு பெரிய இடம் கொடுத்திருக்கிறார் என அவருக்கே இதுவரை தெரியாது. அது தெரிய வரும்போது, எல்லோரும் அதை ஏற்றுக்கொள்வார்களா… முதலில் சுமித்ராவே ஏற்றுக்கொள்வாளா?

Advertisement