Advertisement

  கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 03
தன் பூங்கரங்களால் தன்னவள் தன்னை தள்ளிவிட்டுச் சென்ற பின்னும் குறையாத மந்தகாசப் புன்னகையோடே நின்றிருந்தான் பரணிதரன்.
அவன் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த போது தான் பவானியின் குடும்பம் இங்கு குடிவந்தது. அவளை முதன்முதலாக பார்க்கும் போதே ‘ மெழுகு பொம்மை மாதிரி என்ன ஒரு அழகு!’ என்று நினைத்திருக்கிறான் தான்.
‘வெள்ளாவியில் வச்சித்தான் வெளுத்தாங்களா!
இல்லை வெயிலுக்கு காட்டாமல் வளத்தாங்களா!’
என்று அந்த வயதுக்கே உரிய வகையில் கிண்டலாக நினைத்தும் இருக்கிறான்.
ஆனால் அவள் வாழ்க்கை அப்படி ஒன்றும் எளிது இல்லை என்று காலப்போக்கில் தெரிய வர அந்த பெண்ணின் மேல் இனம் தெரியாத ஒரு பாசம் உண்டாயிற்று. அந்த பாசம் என்று உயிர் நேசமாக மாறிற்று என்று கேட்டால் சத்தியமாக பரணிக்கேத் தெரியாது.
தன் நேசம், தான் நேசிப்பவளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு தராத வண்ணம் பார்த்துக்கொண்டான்.
  அக்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அதோடு தன்னவள் உயிராய் நினைக்கும் படிப்பையும் முடிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக தனக்குள் இருந்த காதலனை அவன் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை.
ஆனாலும் அவனையும் மீறி ‘அவன் அந்த காதலன்’ சில சமயங்களில்  கண்சிமிட்டி விடத்தான் செய்கிறான் தன் காரிகையிடம். அதுவும் அக்காவின் திருமணத்திற்குப் பிறகு அவனின் குதூகலத்தை அடக்குவது அவனுக்கே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.
இன்று காலையில் வீட்டில் எழுந்த திருமணப் பேச்சில் எந்த தயக்கமும் இன்றி தனக்கு பவானியை பிடித்திருக்கிறது என்று தன் காதல் பாரத்தை தந்தையிடம் இறக்கி வைத்தவனின் மனமோ இறகை விட லேசாகி காற்றில் மிதக்க, தோட்டத்தில் உலாவிக்கொண்டு இருக்கும் போது தான் பவானி தயங்கித் தயங்கி உள்ளே வருவதைக் கண்டான். 
அதுவும் தன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை  உற்றுப்பார்த்து விட்டு அது இல்லை என்ற உடனே உற்சாகமாக மாறிய அவளின் நடையை ஒரு சுவாரஸ்யத்துடனே கவனிக்க ஆரம்பித்தான்.
பிறகு தந்தையுடன் பேசிவிட்டு இந்த பக்கமாக வர மெதுவாக தான் நின்றிருந்த மரத்தின் பின்னே சற்றே தன்னை மறைத்து கொண்டான்.
வந்தவள் கொன்றை மரத்தைத் தடவிக் கொடுத்து பூக்களைக் கொஞ்சத்தொடங்க ‘அந்த மரத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம் தனக்கு கிடைக்கவில்லையே’ என்று மனதிற்குள்ளே புலம்பிக் கொண்டவன் மெதுவாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள, அவனை திடீரென்று கண்டவளின் நயனங்கள் பேசிய மொழியில்
‘நாளை மறுநாள் இதைப்பற்றி பெண்ணிடம் பேசிக் கொள்ளலாம்’ என்ற தந்தையின் வார்த்தைகளை மறந்தே போனான் மைந்தன். அதன் பிறகு நடந்தவை எதுவுமே திட்டமிட்டவையல்ல…
பூப்பந்தாய் தன்னவள் மோதிய மார்பை நீவியபடியே மோகனப் புன்னகை ஒன்றை சிந்தியபடி  அவள் வந்த காரியத்தை இவன் முடிக்கச்செல்ல, வீட்டினுள் தன் அன்னை வார்த்தையாலே தன்னவள் மீது தணலை வாரி
வீசியது தெரியாமலேயே போனது தலைவனுக்கு.
#########
இங்கோ வீட்டுக்கு வந்த பவானியின் உள்ளம் உலைகலனாக கொதித்து கொண்டிருந்தது.   கோதை நாயகியின் முன் அழுது விடக்கூடாது என்று அடக்கிய கண்ணீர் இப்போது வஞ்சனையில்லாமல் இரு கன்னங்களிலும் வழிந்தது.
‘என்ன மாதிரி வார்த்தைகளைச் சொல்லி விட்டார் அந்த அம்மா!. அப்போ இவ்வளவு நாளும் தங்களிடம் பரிவைக் காட்டியது எல்லாம் வெறும் வேஷமா?’
‘இவங்க சொல்லுவதைப் பார்த்தால் ஏதோ தானல்லவா வலைபோட்டு இவர்கள் மகனை பிடித்தமாதிரி ஆகிறது!’
தன் மரியாதைக்குரிய நபரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளின் வீரியம் வெட்டி கூறு போட்டது அவளை.
அவளுக்கும் பரணிதரனைப் பிடிக்கும் தான். ஒழுக்கத்தின் திருவுருவாய்,  குடும்பத்தின் மீது பாசமும் அக்கறையும் கொண்ட ஒரு முழு ஆண்மகனின் காதல் பார்வை தன்மீது விழுகிறது என்று தெரியும் போது சிலிர்த்துப் போகாமல் இருக்க இவளென்ன ஜடமா? இல்லை தபஸ்வினியா?
ஆனாலும் அதையும் தாண்டி நிசர்சனத்தை உணர்ந்த பெண்ணாதலால், தங்களுக்கு அரணாக இருக்கும் குடும்பத்திற்குள் தன்னால்  பிரச்சினை வந்திவிடக்கூடாது என்பதற்காகவே பரணிதரனிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.
இன்றோ, எதிர்பாராத அவனின் பேச்சில் திகைத்துப் போனாலும் நேரடியாக கல்யாணப் பேச்சை எடுத்த பரணிதரனின் வேகம்  வஞ்சியவள் நெஞ்சையும் வசமிழக்கத்தான் செய்திருந்தது.
‘அவன் என்னவோ பெத்தவங்ககிட்ட சம்மதம் வாங்கியாச்சுன்னு சொல்லுறான். ஆனால் அவன் அம்மாவோ இருக்க இடம், படுக்க பாய்ன்னு என்னென்னவோ சொல்லுறாங்க’ அங்கலாய்த்தது மனது.
‘அப்படின்னா அவங்களுக்கு தன்னை மருமகளாக ஏற்றுக் கொள்ள மனமில்லை. மகனுக்காக சும்மா சம்மதம் என்று நடிக்கிறாங்க போல’ என்று எண்ணியவளின் உதடுகள் ஏளனச்  சிரிப்பில் வளைந்தது.
‘முதலில் தனக்கு கல்யாணம் என்ற  ஒன்றை எடுத்து நடத்த பெரியவர்கள் யாரும் இருக்கிறார்களா?’ தன் மனம் என்ன உணர்கிறது என்றே பிரித்தறிய முடியாதவள்
சொந்த பந்தம் இல்லா தங்களின் அனாதரவான நிலையை எண்ணி மனம் நொந்தாள்.
‘தான் இங்கேயே இருந்தால் கண்டிப்பாக தன் திருமணம் பரணிதரனோடு நடந்து விடும். எப்படியாவது அவன் நடத்திக்கொள்வான். இந்த வெட்கம் கெட்ட மனதும் கிடைத்தது  சான்ஸ் என்று கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ளக்கூடும்.’
‘இம்மாதிரி தன்னைப் பற்றி ஒரு எண்ணம் கோதை நாயகியின் மனதில் இருக்கும் போது திருமணத்திற்குப் பிறகு அந்த வீட்டில்  தான் தலைநிமிர்ந்து தன்மானத்தோடு வாழமுடியுமா?’
‘இப்படி ஒரு அவமானச் சொல்லோடுதான் தனக்கு ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றால் அது தனக்குத்  தேவையில்லை.’
மனதிற்குள் ஒரு தீர்மானத்திற்கு வந்தவள், மறுநாள் தங்கையின் பள்ளிக்கும், தனது கல்லூரிக்கும் சென்று தங்களது  மாற்றுச் சான்றிதழ்களையும் இன்னபிற சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டாள்.
ஏற்கனவே அது கோடை விடுமுறை காலமென்பதால் அந்த நடைமுறைகளில் அவளுக்கு எந்த சிக்கலுமில்லை.
பிறகு” இங்க யாரு இருக்கா உனக்கு? எங்க ஊருக்கு வந்தால் நாம இரண்டுபேரும் சேர்த்திருக்கலாம்ல” என்று அடிக்கடி சொல்லும் தனது கல்லூரித் தோழி மாலதிக்கு தொலைபேசி மூலம் தகவல் சொல்லி விட்டு,  அன்றிரவே யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி தன் தங்கையோடு வந்திறங்கிய இடம் இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாக்குமரி.
இரவிபுரத்திலிருந்து கோபிவரையில் ஆட்டோ. பின்னர் அங்கிருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறி ஈரோடு வந்து அங்கிருந்து நாஞ்சில் நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தாள் பெண். ஒருவேளை தங்களை யாரும் தேடினால் அவர்கள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காகவே இப்படி ஒரு பயணம்.
தனது தந்தையின் பணி நிமித்தம் கோபியில் இருந்த மாலதியின் குடும்பமும், குடும்பத் தலைவரின் பணிநிறைவு காரணமாக  இப்போது தான் தங்கள் சொந்த ஊரான குமரியில்  வந்து செட்டில் ஆகியிருந்தது.
பெண்களிருவரையும் தங்களுடனே இருக்குமாறு மாலதியின் பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் அதை மறுத்து அவர்களது வீட்டுக்கு அருகிலேயே அவர்களுக்கு சொந்தமான தொகுப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கிக்கொண்டனர் சகோதரிகள். 
தோழியின் தகப்பனாரின் செல்வாக்கால் அங்குள்ள பிரபலமான  தனியார் வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தாள் பவானி. தங்கையையும் அங்கேயே பள்ளியில் 8 ம் வகுப்பில் சேர்த்து விட்டிருந்தாள்.
“நாம ஏன் இங்கே வந்தோம்? நான் நந்து கிட்ட சொல்லக்கூட இல்லையே க்கா?” என்று கேட்கும் தங்கையிடம்  “அக்காவை வேலையில் திடீன்னு வந்து சேரச்சொன்னதால யாருகிட்டயும் சொல்லமுடியலைடா” என்று ஏதேதோ சொல்லி சமாளித்து வைத்தாள். 
தங்கை “நந்துவிற்கு ஃபோன் பண்ணவேண்டும்” என்று கேட்கும் போது அக்காவின் ஃபோன் தொலைந்து போயிற்று, கூடவே அவர்கள் வீட்டு தொலைபேசி எண் அக்காவுக்கு மறந்தும் போயிற்று.
மாலதியோடு சேர்ந்து குமரியின் காண்பதற்கரிய இயற்கை காட்சிகளையும், விவேகானந்தர் மண்டம், திருவள்ளுவர் சிலை, குமரி அம்மன் கோயில், கடற்கரை என்று பவித்ராவை அழைத்துக்கொண்டு சென்று அவளின் ஞாபங்களை மடைதிருப்பினாள்.
தன் தோழியின் பெற்றோர் கொடுத்த பாதுகாப்பு நிழலில் புதிய ஊரில் புதிய சூழலில் மெல்லமெல்ல வேறூன்றத் தொடங்கினர் சகோதரிகள் இருவரும்.   
மிகவிரைவிலேயே வங்கிப்பணியில் இருந்து கொண்டே  எழுதிய ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்’ நடத்திய தேர்வில் வெற்றி பெற்று நாகர்கோவில் கோர்ட்டில் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டாக பணியில் சேர்ந்தாள் பவானி.
கண்மூடித்திறப்பதற்குள் மூன்று ஆண்டுகள் கழிந்திருக்க, இதோ புறப்பட்ட இடத்திற்கே காலம் அவளை திரும்பவும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது  ‘பணி இடமாற்றம்’ என்ற பெயரில்.
அந்த சிவப்பு நிற ஸ்கூட்டி வழி பழகிய குதிரை போல அவள் அலுவகத்தில் வந்து சரியாக நிற்க, ஒரு  பெருமூச்சோடு வண்டியில் இருந்து இறங்கி அதனை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு  தன் பணியிடம் வந்து அமர்ந்து  தினசரி கடமையாற்றத் தொடங்கியவளின் சிந்தையை அதன்பிறகு எந்த எண்ணங்களாலும் சிதறடிக்க முடியவில்லை. கருமமே கண்ணாகினாள்.
#######
புகழ்பெற்ற அந்த பள்ளிவளாகத்திற்குள் தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங் ஏரியாவில் பார்க் செய்த பரணிதரன் வண்டியின் தலையைத்  திருக்கி சாவியை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு நகர்ந்தான். நேரம் பிற்பகல் 3.40
கிண்டர் கார்டன் முதல் ஹையர் செகண்டரி வரையிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கும் பள்ளி அது.
இங்கு தான் அவனின் சகோதரி யின்  மகன் சந்தோஷை முதல் வகுப்பில் சேர்த்து இருக்கிறார் அவனின் அக்கா கணவர் ‘ஜெயராம்.
இன்று  தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் தாங்கள் அனுமதி பெற்றிருக்கும் வழித்தடங்களில் தான், தங்கள் சேவைகளை செய்கிறார்களா என்று நேரடியாக ஆய்வு செய்ய   குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு பரணிதரனின் தலைமையில் சென்ற குழு வேலையை சீக்கிரம் முடித்திருந்தபடியால் வழக்கத்தை விட சற்றே முன்னதாக வீடு திரும்பியிருந்தான் அவன்.
இவன் வீட்டின் உள்ளே நுழையும் போது “பள்ளியில் சென்று சின்னவனை அழைத்து வரப்போகிறேன்” என்று கிளம்பிக்கொண்டிருந்த சகோதரியை அங்கேயே இருக்கும் படி கூறிவிட்டு தானே கிளம்பி வந்திருந்தான்.
பள்ளிப் பருவத்தின் ஆரம்ப காலத்தில் இருந்த சிறுவனை அவ்வப்போது இப்படி திடீரென்று சென்று பெற்றோரில் யாராவது ஒருவர் அழைத்துக்கொண்டு வருவது வழக்கம் தான். மற்ற நாள்களில் அவன் வருவதெல்லாம் பள்ளி வாகனத்தில் தான்.
திவ்யாவின் புகுந்த வீடு உள்ளூரிலேயே இருப்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிறந்த வீட்டுக்கு அவளின் விஜயம் இருக்கும்.
அதுவும் தான் தூக்கி வளர்த்த தங்கை நந்தினியைப் பார்க்காமல் அவளால் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்க முடியாது  என்பது அவளது புகுந்த வீடும்  அறிந்த ரகசியம்.
அவளின் இந்த பண்பு தான், அதாவது குடும்பத்தை தாங்கும் குணம் தான் தங்கள் மகன் அந்த சாமானியப் பெண்ணின் மீது விருப்பம் என்று வந்து நிற்கையில் மறுக்காது பெண்வீடு சென்று மணம் பேசத்தூண்டியது ஜெயராமின் பெற்றோரை.
இந்த திருமணத்தின் மூலம் தங்கள் ஒற்றை மகனுக்கு ஒரு அன்பான பெரிய குடும்பம் கிடைத்திருக்கிறது என்று மகிழும் அளவிற்கு பணத்தைத் தாண்டி மனிதர்களின் மனங்களை விரும்பும் மனிதர்கள் தான் ஜெயராமின் பெற்றோர்கள்.
‘ஜெயராம் தன் தந்தை கோசல்ராம்  வழியில் பட்டய கணக்காளராகி  தந்தையோடு இணைந்து அந்த துறையில் கொடிகட்டிப் பறக்கிறான்.
ஆனால் அவனின் புகழையோ அந்தஸ்தையோ பெண் எடுத்த வீட்டில் காண்பிக்காது உண்மையிலேயே ‘மரு’மகனாகிப் போனவன்’
இதோ இந்த பள்ளியின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதும் கூட ஜெயராம் தான்.
பள்ளியின் அலுவலகத்தை நோக்கி நடைபோட்டவனை
“பரணீ…” என்ற அழைப்பு  தடைசெய்ய,  யோசனையுடனே திரும்பினான். 
அந்த பள்ளியின் ஆசிரியை போன்ற தோற்றமுடைய ஒரு பெண் புன்னகை முகத்தோடு நெருங்கி வர சட்டென்று “ஹேய்! கவிதா! நீ இங்க எங்க?”
“இங்க தான் நான்…” என்று  அந்த பெண் தொடங்க “மேத்ஸ் டீச்சரா வேலை பார்க்கிற. அம் ஐ கரெக்ட்?” என்று முடித்தான் பரணிதரன்.
“டேய்! எப்படிடா?”
“ஹாங்… கழுதைகெட்டா குட்டிச்சுவரு”  சிரித்தபடி சொன்ன தோழனை போலியாக முறைத்தவள், “என்ன இந்த பக்கம்?” என்று கேட்க
” அக்கா பையனை பிக் அப் செய்ய வந்தேன்.  நியூ அட்மிஷன். ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்” என்று கூடுதல் தகவல் சொன்னான்.
“ஓ… நான் உன் பசங்களுக்காக வந்திருப்பியோன்னு நினைத்தேன்” என்றவளிடம்
” நான் இன்னும் பக்கா பேச்சிலர் தான் மா ” என்று சிரித்தவனின் மனக்கண்ணில் தன்னை இன்னும் அந்த கேட்டகிரியிலேயே வைத்திருப்பவளின் முகம் மின்னி மறைந்தது.
“ஓ…!” என்று அதிசயித்து,”ஃபர்ஸ்ட், ஆஃபிஸில் விசிட்டர்ஸ் கார்ட் குடுத்து கேட் பாஸ் வாங்கிக்கோ” என்று பள்ளி யின் நடைமுறையைச்  சொல்லிக்கொடுத்தவள், “கொஞ்சம் அர்ஜண்ட் வர்க் இருக்கு. இன்னொரு நாள் பார்க்கலாம். பை பரணி”  என்று சொல்லி கிளம்பினாள்.
கிளம்பும் முன் இருவரும் தங்களின் அலைபேசி எண்களை   பகிர்ந்து கொண்டனர்.
தோழி சொன்னது போலவே ஆஃபிஸில் சென்று சிறுவனை தன்னோடு அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகளை முடித்தவன், பள்ளி முடிவடைவதைக் குறிக்கும் மணி அடிப்பதற்காக காத்திருந்தான்.  
சரியாக நான்கு மணிக்கு   நீண்ட மணியோசை  கேட்க சிறகில்லா பட்டாம்பூச்சிகளாய் தங்கள் கூடுநோக்கிச் செல்ல பரபரத்து திரிந்த சிறார்களைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
‘ நல்லவேளை சந்தோஷை என்கிட்ட கூட்டிக்கொண்டு விடுறேன்னு சொன்னாங்க! இல்லைன்னா கண்டுபிடிக்கிறது கஷ்டம்.’ எல்லா மாணவர்களும் பள்ளிச் சீருடையில் ஒரே மாதிரித் தெரிய பரணிதரனின் எண்ணம் இப்படித் தான் இருந்தது.
சொன்ன மாதிரியே ஒரு அட்டண்டர் சிறுவனை பரணிதரனிடம்  கொண்டு ஒப்படைக்க, அவனை அங்கு எதிர்பாராத சிறுவனோ உற்சாக மிகுதியில் மாமனை இடையோடு சேர்த்தணைத்துக் கொண்டு, “பல்ஸர்ல தானே வந்தீங்க மாமா!” என்று கேட்டும் வைத்தான்.
“ம்ம்…”என்றபடியே மருமகனின் கரம் பற்றி குனிந்து தூக்க முயல, அச்சோ…மாமா! நான் பிக் பாய் ஆகிட்டேன் தூக்காதீங்க” என்று கூச்சத்தோடு நெளிந்து மறுத்தவனை பார்த்து,
“இது் எப்ப இருந்துடா? சொல்லவேயில்லை!?” என்று சிரித்தபடியே நிமிர்தவனின் கண்கள் தனக்கு எதிரே வந்துகொண்டிருந்த உருவத்தின் மீது  நிலைகுத்தி நின்றது.
விழியின் வழியே கண்ட உருவம் மூளையைச் சென்று அடையும் முன்னே அவன் உதடுகள் “பவானி” என்று உச்சரித்திருந்தன.
ஆம் பவானி தான். அவளும் இங்கு தான் பவித்ராவை   பதினொன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தாள்.
“இன்று ஸ்டடி மெட்டீரியல்ஸ் வந்திருக்கிறது. வந்து கலெக்ட் பண்ணிக்கொள்ளுங்கள்” என்று பள்ளியில் இருந்து மெசேஜ் வந்திருக்கவே பர்மிஷன் போட்டுவிட்டு வந்திருந்தாள்.
கையில் பள்ளியின் பெயர்பதித்த பையில் புத்தகங்களோடு வந்து கொண்டிருந்தவள் குனிந்து நின்ற பரணிதரனைக் முதலில் கவனிக்கவில்லை.
‘பிக் பாய் ஆகிட்டேன் என்னை தூக்காதீங்க’ என்ற குரலில் வசீகரிக்கப்பட்டு குரல் வந்த திசையில் பார்க்க, அங்கு அவளின் ‘வசீகரனைக்’  கண்டுகொண்ட   நங்கையவள் நயனங்களில் ஒருநொடி மின்னலொளி தெறிக்கத்தான் செய்தது.
ஆனால் மறுநொடியே அவன் சாயலிலேயே அவன் கைபிடித்து நின்ற சிறுவனைக் கண்டவளின் நெஞ்சம் ஒரு நொடியில் ஓராயிரம் கணக்குகளைப் போட அவனின் “பவானி” என்ற அழைப்பை கேளாதவளைப் போலவே நகர்ந்து விடத் தலைப்பட்டாள்.
ஆனால் அவனோ “பவானி…” என்று உரத்தக்குரலில் மறுபடியும்  அழைக்க ‘இனிமேல் கேட்காதது போல் போவது சாத்தியமில்லை’ என்று தோன்றவே, யார் தன்னை கூப்பிட்டது என்று தேடுவது போல் கண்களைச் சுழல விட்டு இறுதியில் பரணிதரனின் மேல் பார்வையைப் பதித்தாள்.
எதிர்பாராத இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போன அவன்  “இவ்வளவு நாளும் எங்க இருந்தீங்க பவானி? ஏன்  எங்ககிட்ட சொல்லாமல் போய்ட்ட? பவித்ரா நல்லா இருக்காதானே?”
மூன்று வருடங்களாக தன் மனதில் அலையடித்துக் கொண்டிருந்த கேள்விகளை அவளிடம் அவசர அவசரமாகக் கேட்க முனைய
அவளோ கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல்,” நீங்க…” என்று இழுத்தவாறே நெற்றியைச் சுருக்கி ஞாபகப்படுத்துவது போல  யோசித்து  விட்டு
“ம்ம்… ஒஹ்!  மிஸ்டர் பரணிதரன்…  வீட்டுல எல்லாரும் சுகம் தான?” என்றவளின் கண்கள் சிறுவன் மீது பதிய
‘மிஸ்டர் பரணிதரனா! இது சரியில்லையே’ என்று எண்ணமிட்டபடியே,”திவ்யா அக்கா பையன். இங்க தான் படிக்கிறான்” என்று அவளின் பார்வைக்கு பதில் சொன்னவன்
“பவி இப்போ லெவன்ந்த் ல்ல.. இங்க தான் சேர்த்திருக்கியா?” ” இரண்டு பேரும் எங்க இருக்கீங்க? முதல்ல அதைச் சொல்லு” என்று அழுத்திக்கேட்க
“இரண்டு பேர் இல்ல. மூணு பேர். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்று இயல்பு போல் தன் கழுத்துச்  செயினை வலதுகையால் தடவிக்கொண்டே,  தன் மனதறிய பொய் சொன்னாள் பவானி.
அந்த நேரம் பார்த்து தன் அலைபேசி க்கு வந்த பதிவுசெய்யப்பட்ட விளம்பர அழைப்பை ஏற்று,” இதோ வந்துட்டேங்க… ஹாங்…புக்ஸ் வாங்கிட்டேன்… அவ்வளவு தான் வேலைமுடிஞ்சுது. இதோ வந்துட்டே இருக்கேன்…” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவாரே பேசிக்கொண்டு தன் வண்டி இருக்கும் இடம் சென்று அதை உயிர்பித்து சென்றே விட்டாள்.
ஆனால் இவனோ அவள் வீசிச்சென்ற வார்த்தை வெடிகுண்டின்  வீரியம் தாங்கமுடியாதவனாய் கையறு நிலையில்  அவள் சென்ற திசையையே பார்த்தபடி நின்றிருந்தான்.

Advertisement