Advertisement

“ஏம்மா பவி!  அவன் புத்தகம் உனக்கு எதுக்கு? அப்படியே தேவைன்னாலும் அவன்கிட்ட கேட்டுகிட்டு எடுத்துருக்கலாம்ல?” என்று பவித்ராவிடம் கோதை ஏதும் புரியாதவராய் விசாரிக்க
“இல்ல அத்தம்மா… குமரன் அன்னைக்கு  அல்டரை எம்மேல ஏவி விட்டு என்னைத் துரத்த வச்சாங்கல்ல…நான் கூட அத்தம்மான்னு கத்துனேன்… நீங்க கூட ஓடிவந்து குமரனுக்கு பளார்னு ஒரு அறைவச்சீங்களே…”
 இதோ இரண்டு மாதத்திற்கு முன்னால் நடந்த விஷயத்தை, ஏதோ இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்ததைப் போல கோதைக்கு அவள் நியாபகப்படுத்த, குமரனோ இப்போது அறைவாங்கியது போல பல்லை நறநறவென்று கடித்தான்.
“அதுக்கப்புறம் குமரன் என்னோட ரெக்கார்ட் நோட்டை எடுத்து ஒளிச்சுவச்சிடாங்க தெரியுமா? இது தெரியாமல் நான் ஸ்கூல்லுக்கு போய்… அந்த டீச்சர் கிட்ட திட்டுவாங்கி… அவங்க என்னை கிளாஸுக்கு வெளியே விட்டுட்டாங்க தெரியுமா?” 
அந்த விஷயம் இன்றைக்கு நடந்தது போல் தோன்ற, பவி க்கு குரல் கம்மியது. பின்னே, அன்று வகுப்பறைக்கு வெளியே நின்ற அவளைப் பார்த்து நண்டு, சிண்டு எல்லாம் சிரித்துக் கொண்டே போனது அவளுக்குத் தானே தெரியும்.
இப்போது தான் இன்றைய பிரச்சினையின் நுனி பிடிபட்டது கோதை நாயகிக்கு. ‘ஓ…அப்போ… அவன் நோட்டை எடுத்து ஒளிச்சு வச்சதுக்கு இப்ப இவ புத்தகத்தை எடுத்து வச்சிப் பழிவாங்கப் போறாளாம்மா? ஹையோ…என் அறிவுக்கொழுந்தே’ மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டவர்
“ஏன் குமரா! நான் அன்னைக்கே உங்கிட்ட பவித்ரா கிட்ட வம்பு வச்சிக்க கூடாதுன்னு சொன்னனா இல்லையா? அப்புறம் ஏன் நீ அவ நோட்டை எடுத்து ஒளிச்சு வச்ச? இப்பப்பாரு நீ செய்ய, பதிலுக்கு அவ செய்யன்னு விஷயம் நீண்டுகிட்டே போகுதா இல்லையா?” என்று குமரனை கண்டிக்க
தனக்குப் பரிந்து தான் கோதை நாயகி பேசுகிறார் என்று தெரிந்ததும் லேசாக அவரை பூனைக்குட்டி உரசினார் போல் உரசிக்கொண்டு நின்றாள் பவித்ரா.
இதைக்கண்ட குமரனுக்கு கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தொடங்கியது.”ஏய்… அதுக்கு பதிலுக்குப் பதில் நீ செய்யலையா என்ன? என்னோட நல்ல நல்ல ஷர்ட்ஸ் பட்டன்ஸ் எல்லாம் அத்து வைச்சது, ஷுவை எடுத்து ஒளிச்சு வச்சது எல்லாம் நீ இல்லாமல் வேற யாரு? ஹாங்…” என்று அவன் நேரடியாகவே அவளிடம் சண்டைக்கு வர
நொந்தே போனார் கோதை நாயகி.  கொஞ்ச நாட்களாக அடிக்கடி ஊசி நூலுக்காக குமரன் அலைந்ததன் காரணம் இப்போது விளங்க,
“அப்போ நீயும் சும்மாயிருக்கலை, ம்ம்ம்…உங்கிட்டயும் தான் இனி அவன் கிட்ட வம்புவளக்கக் கூடாதுன்னு நான் சொல்லியிருக்கிறேன்” என்று தன் பக்கத்தில் நின்றவளின் காதைப் பிடித்து லேசாக திருகியவாறே குமரனிடம்
“சரி…விடுடா…, இனி அவ உன் வம்புக்கே வரமாட்டா”  என்று சொல்லியவர்,”என்ன போகமாட்ட தானே?” என்று பவித்ரா விடம் கேட்க, “ஆமாம்” என்னும் விதமாக தலையை உருட்டியவளின் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி அவனிடம் நீட்டினார்.
இது ஒவ்வொரு வீடுகளிலும் தன் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் சண்டையை மத்தியஸ்தம் செய்யும் தாய்மார்கள் கையாளும் சமாதான நடைமுறை தான். 
அதைத்தான் இங்கே கோதை நாயகியும் செய்தார். ஆனால் நம் கோபக்கார குமரனுக்கு கோதை நாயகி தனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்தது போல் தோன்ற
“ஏன் கோதை ம்மா! அவ என்னோட ரூமுக்கு வந்தது மாதிரி நானும் அவ ரூமுக்கு போயிருந்தா இப்போ அவளை ஒன்னுமே சொல்லாம விட்டது மாதிரி, என்னையும் சும்மா விட்டுருப்பீங்களா?” என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அவசரத்தில் அவன் வாயைவிட
அவன் பேச்சில் அதிர்ந்து போனது கோதை நாயகி மட்டுமல்ல. தன் தங்கையை ஒரு சுழற்று சுழற்றி கோதை நாயகி முன் குமரன் விடும் போதே பின்வாசலுக்கு வந்து விட்ட பவானியும் தான்.
தோட்டத்தில் கணவனுடன் நடந்து கொண்டிருந்த பவானிக்கு  இன்று ஏனோ கொஞ்சம் சோர்வாக இருப்பது போல் தோன்ற, அதைக் கணவனிடமும் சொல்ல இருவருமே கிளம்பிய வேகத்திற்கு திரும்பியிருந்தனர்.
வரும் வழியில் பண்ணையில் வேலை செய்யும் சுப்பையா பரணியைக் கண்டதும் ஏதோ பேசத்தொடங்க, பரணி பின்தங்கி பவானியை மட்டும் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.
உள்ளே நுழையும் போதே பவானிக்கு குமரனின் சத்தம் கேட்டது.
 என்னவென்று பார்த்தால், அவனோ தன் தங்கையை பிடித்திழுத்து கோதைநாயகி முன் நிறுத்துவதைக் கண்டதும் பதறிப்போய் உள்ளே நுழைந்தவளை தன் தங்கை சொன்ன தகவல்கள் அப்படியே அந்த இடத்திலேயே நிறுத்தி வைத்தது.
‘இந்த வீட்டில் என் தங்கைக்கு இவ்வளவு நடந்திருக்கிறது. ஆனால் அது எனக்கு தெரியாமலேயே போயிருக்கிறதே?’ என்று நினைக்கும் போதே அவளுக்கு பெற்றோர் இல்லாத தங்கள் சூழ்நிலையை நினைத்து தங்கள் மீதே கழிவிரக்கம் உண்டாயிற்று.  
அதுவும்  குமரன்  தன் தங்கை மீது நாயை ஏவி விட்டிருக்கிறான்  எனத் தெரிந்த போது ‘அவள் மீது எவ்வளவு வெறுப்பிருந்தால் இப்படி செய்திருப்பான்!’ என்றே அவளுக்கு எண்ணத் தோன்றியது.  
ஆகமொத்தம் அங்கே விளையாட்டாய் செய்யப்பட்ட ஒவ்வொன்றும் வினையாக மாறி நின்றது.
கடைசியில் அவன் சொன்ன வார்த்தைகளில் கோபம் கொண்டவள், அந்த கோபத்தையும் தன் தங்கை மீதே  திருப்பி “பவி…” என்று சத்தமிட்டபடியே வர
ஏதோ தாங்கள் மட்டுமே அந்த வீட்டில் இருப்பது போல் எண்ணி  ஹாலில் நின்று சாவகாசமாக வழக்காடிக் கொண்டிருந்த மூவரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
பவானியின் அந்த கோபமே அவர்களுக்குச் சொன்னது, தாங்கள் பேசியது அத்தனையையும்  கேட்டுவிட்டாள் என்று.
அக்காவின் இந்த கோபத்தை எதிர்பாராத பவித்ரா கோதைநாயகியோடு ஒன்ற, அவரிடமிருந்து தங்கையை பிரித்தவள், அவளை அடிப்பதற்காக கையை ஓங்க
அவளின் ஓங்கிய கைகளை பிடித்து தடுத்த கோதை நாயகி,”இப்ப என்ன நடந்து போச்சுன்னு பவித்ராவை அடிக்கப்போற பவானி?” என்று உரிமையாக அதட்டினார்.
“என்ன நடக்கலைன்னு சொல்லுறீங்க அத்த” என்றாள் பவானி, பவித்ராவை முறைத்தபடியே.
“இதெல்லாம்  வீட்ல பிள்ளைங்களுக்கிடையே நடக்குற சாதாரண விஷயம் பவானி. இதைப்போய் பெரிசு படுத்தாத” என்று அனுபவஸ்தராய் கோதை நாயகி சொல்ல
“எது?  இப்படி நாயை ஏவி விடுறது தான் சாதாரண விஷயமா?” கசப்பாக கேட்ட பவானி 
குமரன் பக்கம் நகர்ந்து,”எங்களுக்கு பெத்தவங்க இல்லை குமரா…” இதைச் சொல்லும்போது அவள் குரல் கம்மி தழுதழுத்தது
“என் தங்கச்சி க்கு என்னைவிட்டா யாருமே கிடையாது இந்த உலகத்துல. அதான்… அதான்…எங்கூடவே இங்க உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்” சிறிது நிறுத்தி கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக்கொண்டே
“அவளோட செயலால உனக்கு மனக்கஷ்டம் ஏதும் உண்டாகி இருந்தால் அவளை மன்னிச்சிடு” என்று தன் கைகளிரண்டையும் கூப்பி மன்னிப்பு கேட்க முயல, நொறுங்கிப்போனான் இளையவன்.
சட்டென்று அவள் கூப்பிய கைகளை ஒன்றாகப் பற்றி அதன் மேல் தன் முகத்தை வைத்து,”அப்படி எல்லாம் சொல்லாதீங்க அண்ணி… பிளீஸ்…” என்று  சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு தன் அண்ணி தொய்ந்து விழுவது போல் இருக்க
“அண்ணி…” என்று பதட்டத்தோடு கத்தியவாறே அவள் கைகளை இழுத்துப் பிடிக்க அப்போது தான் உள்ளே வந்து கொண்டிருந்த பரணிதரன் பாய்ந்து வந்து மனைவியைத் தாங்கிக் கொண்டான்.
“அக்கா…அண்ணி…பவானி…”என்ற கலவையான அழைப்புகள் பதட்டத்தோடு அழைக்க, இது எதுவுமே கேட்க்காமல் கணவனின் கைகளில் மயங்கிச் சரிந்தாள் பவானி. 
மனைவியை அப்படியே தன் கைகளில் அள்ளியவன்,
ஹாலில் இருந்த அந்த பெரிய குஷன் சோஃபாவில்  படுக்க வைத்து,”பவானி… பவானி…” என்று  பதட்டத்தோடு அவள் கன்னம் தட்ட
அக்காவின் கண்ணீரைக் கண்டு ஆடிப்போயிருந்த பவித்ராவும்,”அக்கா…அக்கா…என்னக்கா பண்ணுது? எழுந்துருக்கா… நான் இனிமேல் குமரன் வம்புக்கே போகமாட்டேன்…  பிளீஸ்…எழுந்திருக்கா… எனக்கு பயமாயிருக்கு…” என்று கதற ஆரம்பித்தாள்.
அதற்குள் சுதாரித்திருந்த கோதை நாயகி ஒரு  டவலை தண்ணீரில் நனைத்து கொண்டு வந்து அப்படியே மருமகளின் முகம் துடைத்தார்.
தண்ணீரின் குளுமை முகத்தில் பட்டதும் கண்விழித்த பவானிக்கு தன்னருகே கணவனைக் காணவும்  கண்கள் உடைப்பெடுத்தது. 
நடந்த விஷயங்கள் எதையும் பரணிதரன் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. ஆனால்  வீட்டில் எதுவோ சரியில்லை என்று மட்டும் தோன்றியது.
அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பின்னுக்குத் தள்ளியவன் மனைவியின் தலையைத் தடவி,”என்னடா செய்யுது?” என்று பரிதவிப்போடு கேட்க்க
“கொஞ்சம் தலை சுத்துது பரணி, வாய் வேற கசக்குது” என்றாள் மனைவி சோர்வாக.
 வீட்டில் நடந்த களேபரத்தில் இவ்வளவு நேரமும் வேலைநிறுத்தம் செய்திருந்த கோதை நாயகியின் மூளை மருமகளின் பதிலில் படு சுறுசுறுப்பாக ஒன்றும் ஒன்றும் மூன்று என்று சரியாகக் கணக்குப் போட்டது.
ஆனால் தான் போட்டகணக்கு சரிதானா என்று இளையவர்களுக்கு மத்தியில் சட்டென்று பவானியிடம் கேட்டுவிடத் தான் முடியவில்லை அவரால். 
அழுது கொண்டிருந்த பவித்ராவிடம்,”அதான் அக்கா கண்ணு முழிச்சிட்டால்ல… அப்புறமும் என்ன அழுகை, கண்ணத் தொடச்சிக்கோ” என்று பெரியவராய் அதட்டியவர்
 
 கலங்கி நிற்கும் மகனிடம்,”ஒன்னுமில்லை தம்பி. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், எல்லாம் சரியாப் போயிடும். ஒரு பத்து மணிக்கு போல பவானியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” என்று சொல்லிக்கொண்டே
“இதோ ஒருஜுஸ் போட்டு கொண்டு வரேன். அதை குடிக்க வச்சு மேல ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று சொல்லி விட்டு
கடகடவென்று சமையலறை சென்று மகன் நேற்று   வாங்கிக் கொண்டு வந்திருந்த சாத்துக்குடியை பிழிந்து சாறை எடுத்தவர் மருமகளிடம் கொண்டு வந்து கொடுக்க
அதன் புளிப்பு சுவை பிடித்து ஆவலாக குடித்து முடித்தவள் அடுத்த வினாடியே மொத்தத்தையும் அருகில் நின்ற கோதை நாயகி மேலேயே வாந்தி எடுத்து வைத்தாள்.
பவானியின் வாந்தியைக் கண்ட உடன் மகன் ஏதோ புரிந்தது போல அன்னையின் முகம் பார்க்க,”ஆமாம்… அப்படித்தான்” என்பது போல் கண்களை மூடித்திறந்தார் கோதை.
அவ்வளவு தான் மனைவியைத் தூக்கி அப்படியே கொஞ்ச வேண்டும் என்ற ஆவலில் கணவன் இருக்க மனைவியோ மாமியாரின் மேலேயே வாந்தி எடுத்து விட்டோமே என்ற தன்னிரக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தாள்.
வாயோ மூச்சு விடாமல் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது.
“உன் மன்னிப்பு எல்லாம் எனக்கு வேண்டாம் பவானி. உன் வயித்துல இருக்கிற எம்பேரனையோ, பேத்தியையோ நல்லபடியா பெத்துக்குடு. அது எனக்கு போதும்” என்று பவானியின் நிலமையை அவள் உட்பட எல்லோருக்கும் சூசகமாய் தெரிவித்தார் கோதை நாயகி.
கோதையின் கூற்றில் தன் நாள்கணக்கு பவானிக்கு ஞாபகம் வர ‘அப்படித்தானோ!’ என்று கேள்வி கேட்டது அவள் உள்மனது.
“அப்படியேத் தான்” என்று சொன்னார் அவளை பரிசோதனை செய்த மருத்துவரும்.
இந்த சந்தோஷ விஷயத்தில் நடந்த பிரச்சினையின் வீரியம் குறைந்து விட்டது என்று கோதை நாயகி நினைக்க, அப்படியில்லை என்றது முன்மாலைப் பொழுதில் பேசிய  பாவானியின் பேச்சு…
 
 

Advertisement