Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 09.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால் எந்த பரபரப்புமின்றி மெதுவாக கண்விழித்தாள் பவானி. இரண்டு மாதகால திருமண வாழ்வில் முகம் பூரித்துப் போய்க் கிடந்தது.
தலையைத் திருப்பி பக்கத்தில் பார்க்க,  அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் கணவன்.
நேற்று  ஈரோடு எஸ்பி யாக இடமாறுதலாகி வந்திருக்கும் தன் நண்பன் சந்தீப் ஐ சந்தித்து விட்டு பரணிதரன்  வரும்போதே இரவு வெகுநேரமாகி விட்டது. அதன் பிறகு சாப்பிட்டு படுக்கும் போது வழக்கமாக தூங்கும் நேரம் அவனுக்கு கடந்திருந்தது.
பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில்  இருள் பிரியாத அந்த காலை வேளையில் கணவனும் மனைவியும் காலாற தோட்டத்தில் நடப்பது தான் வழக்கம்.
ஆனால் இன்று கணவன் அசந்து தூங்கவே அவனை தொந்தரவு செய்யாமல் எழுந்து காலைக்கடன்களை முடித்து கீழே வந்தாள்.
  தங்களுடைய வழக்கமான நேரம் தவிர்த்து கொஞ்சம் இருள் விலகி வெளிச்சம் பரவும் நேரத்தில் தோட்டத்தில் இறங்கினாள் பவானி. 
அவள் மனம் கவர்ந்த அந்த மஞ்சள் சரக்கொன்றையை சூரியன் தன் பொற்கிரணங்களால் தகதகவென்று மின்னச்செய்து கொண்டிருந்தான்.
சிலுசிலுவென்று வீசிய அந்த காலைநேரக் காற்றை அனுபவித்தபடியே மெதுவாக நடந்து சென்று கொன்றை மரத்தடியில்  உட்கார்ந்து மரத்தில் சாய்ந்து  அமர்ந்தவளின் மனதில் கலவையான உணர்வுகளின் குவியல்.
உண்மையைச் சொல்லப்போனால் இப்படி ஒரு திருமண வாழ்வு தனக்கு அமையும் என்று பவானி மறந்தும் கனவு கூட கண்டவளில்லை.
அதுவும்  யார் வார்த்தைகளுக்காக இந்த ஊரைவிட்டே மறைந்து போனாளோ, அந்த கோதை நாயகியே தங்களுக்கு அன்னையாய் மாறிப்போவார் என்று சத்தியமாக அவள் எண்ணவில்லை.
ஆனால் அத்தனையும் நடந்தது. திருமண வாழ்வு…! அதுவும் காதலாய் கசிந்துருகி நிற்கும் கணவன், பாசத்தோடு அரவணைக்கும் ஒரு குடும்பம். வேறென்ன வேண்டும் ஒரு பெண்ணுக்கு.
அதையும் தாண்டி இப்போதெல்லாம் மனதிலே ஒரு சின்ன பயம் எட்டிப்பார்ப்பதையும் அவளால் தவிர்க்க இயலவில்லை.
சரியாகச் சொல்லப்போனால் அந்த பேருந்து உரிமையாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கணவன் பிடித்துக் கொடுத்த நாளிலிருந்து ஆரம்பித்த பயம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
அன்று தொலைக்காட்சியில் பார்த்த செய்தியில் உறைந்து போய் நின்ற மனைவியிடம் தங்களது அறைக்குச் சென்றதும் எல்லா விஷயமும் சொன்னான் பரணி.
“அந்த வண்டியில போறதெல்லாம் சின்னச் சின்ன ஸ்கூல் பசங்க பவானி. ஓடுற பஸ்ல இருந்து அந்த ஓட்டை வழியா பிள்ளைங்க ரோட்ல விழுந்தா முழுசா கெடைப்பாங்களா?” அப்படி ஒரு நிகழ்வை கற்பனையில் நினைத்துப் பார்க்கும் போதே நெஞ்செல்லாம் பதறியது பரணிதரனுக்கு
“ஆனால் அதைப்பற்றி எந்தவித உறுத்தலும் இல்லாமல் எனக்கு லஞ்சத்தை தந்து அந்த தவறை மறச்சிடலாம்னு பாத்தான் பாரு…” இன்னமும் அந்த மனிதனின் மீது கோபம் அடங்காதவனாய் கை முஷ்டியை மடக்கி காற்றில் ஒரு குத்துவிட்டவன் தொடர்ந்தான்
 
“அதான் இந்த மாதிரி ஒருசில ஆட்களையாவது  பிடிச்சி உள்ளப் போட்டாத் தான் இதே மாதிரி இருக்கிற மத்தவங்க கொஞ்சமாவது பயப்படுவாங்க. அதனாலத் தான் அப்படி செய்தேன்” என்று தன் செயலுக்கான விளக்கத்தையும் மனைவியிடம் கூறினான்.
தன் கணவனது சமுதாய அக்கறையை நினைத்து ஒரு மனைவியாக பெருமை ஒரு பக்கம் இருந்தாலும், அந்த கைது செய்யப்பட்ட உரிமையாளரால் தன் கணவனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயமே விஞ்சி நின்றது அவளிடம்.
சூடு கண்ட பூனையின் நிலையில் இருந்த அவளது மனது எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மறுத்தது.
தன் மனைவியின் மனநிலை உள்ளங்கை நெல்லிக்கனியாய் கணவனுக்கு புரிந்தாலும் இந்த பயத்தை இப்படியே வளரவிடுவது எதிர்காலத்தில் தான் செய்யப்போகும் காரியத்துக்கு  சரிவராதே என்று, அவ்வப்போது அவளின் பயத்தை தெளியவைக்க தன்னாலான முயற்சிகளை எடுக்கத் தான் செய்தான் பரணி.
ஆனால் அந்த முயற்சி வழுக்கு மரத்தில் ஏறுவது போல ஜாண் ஏற முழம் வழுக்கியது அவனுக்கு.
ஒருகட்டத்தில்,”உன் அன்பைக் காட்டி என்னை கோழையாக்கி விடாதே பவானி… பிளீஸ்…” என்று கண்டிப்பாக சொல்லியே விட்டான் பரணிதரன்.
அதன் பிறகு அடிக்கடி அதை பற்றி அவனிடம் பேச முயற்சிக்கவில்லை என்றாலும் மனதின் ஓரத்தில் அந்த பயம் தங்கியே போனது பவானிக்கு.
பக்கத்தில் காலடி ஓசைக்கேட்க திரும்பிப் பார்த்தாள் பவானி. வந்து கொண்டிருந்தது அவளது நாயகனே தான்.
“எந்தக் கோட்டையைப் பிடிப்பதற்காக இந்த அதிகாலை நேரத்திலே ஆழ்ந்த யோசனை தேவி!” என்று ராஜாக்கள் பாணியில் பரணிதரன் சிரித்தபடியே கேட்க
“எல்லாம் தங்கள் மனக்கோட்டையன்றி வேறேது பிரபு!” தயக்கமின்றி  அவன் பாணியிலேயே பதில் வந்தது பவானியிடமிருந்து.
“ஆஹா! பிடிப்பதற்கு அங்கே இன்னும் மிச்சம் மீதி ஏதும் இருக்கிறதா தேவி!” என்று தன் இடப்பக்க மார்பை தடவியபடியே கேட்டவனின் பாவனையில் புன்னகை விரிந்தது பவானியின் இதழ்களில்.
“வாங்க… வாங்க…இதே சிரிப்போட ஒரு வாக் போய்ட்டு வந்துடலாம்” அவள் கைபற்றி எழுப்பியவனோடு இணைந்து நடைபோட்டாள் பவானி
#############
 வழக்கத்திற்கு மாறாக இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே விழித்திருந்தாள் பவித்ரா.
பக்கத்து படுக்கையில் நல்ல தூக்கத்தில் இருந்தாள் நந்தினி. 
படுக்கையில் உட்கார்ந்து திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தவளின் காதுகளோ பக்கத்து அறைக் கதவு திறந்து மூடும் சத்தத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தன.
பக்கத்து அறை வேறு யாருடையதும் அல்ல. குமரனுடையது தான்.
தான் பருவமெய்தி ஒருவாரம் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த சமயம் வெட்டியாக இருந்த தன்னுடைய மூளையைத் தட்டித்தட்டி ஒருவழியாக தன் ரெகார்ட் நோட் காணாமல் போனதற்கான காரணம் குமரன் தான் என்று கண்டுபிடித்தே விட்டாள் பவித்ரா.
ஆமாம்… யோசித்து யோசித்து பார்க்கும் போது அன்று அவள் பள்ளியிலிருந்து திரும்பியிருந்த போதும் சரி மறுநாள் காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் சரி  தன்னைத் தொடர்ந்த குமரனின் நையாண்டி சிரிப்பே அவன் தான் இந்த காரியத்தைச் செய்திருக்க வேண்டும் என்று அவளை ஆணித்தரமாக நம்பவைத்தது.
அதுவுமில்லாமல் அன்று ரூமிலிருந்து வெளியே வரும் போது கூட பள்ளிப்பையைத் திறந்து நோட்டுப்புத்தகம் உள்ளே இருக்கிறதா என்று பார்த்து விட்டு தானே வந்திருந்தாள்.
அப்படியிருந்தும் காணாமல் போயிருக்கிறது என்றால், தான் சோஃபாவில் பையை வைத்துவிட்டு பின் பக்கமாகச் சென்ற நேரம் தான் காணாமல் போயிருக்க வேண்டும் என்பது வரை துல்லியமாக கணக்கெடுத்தும் விட்டது அவளது சூட்டிகையான அறிவு.
ஆனால் அதன் பிறகு குமரன் தனக்கு செய்ததற்காக பதிலுக்கு பதில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் செய்தவை எல்லாம் சிறுபிள்ளைத்தனமான செயல்கள்.
முதலில் அவனின்  வளர்ப்பு பிராணியான அல்டரிடம் குமரன் இல்லாத நேரங்களில் தன் பயத்தை விட்டு மெதுமெதுவாக ஒரு நட்பை உருவாக்க முயல, 
அந்த புத்திசாலியான பிராணியும் அடிக்கடி வீட்டில் இவளை கண்டபடியாலோ என்னவோ, அவளையும் தன் நட்பு வட்டத்திற்குள் சேர்த்துக் கொண்டது.
அதுவும் குமரனோடு அது நிற்கும் போதே “அல்டர்” என்று இவள் கூப்பிட்டால் தன் உடம்பைக் குழைத்து வாலை ஆட்டும் அளவிற்கு நட்பாகிவிட்டது பவித்ராவோடு.
அதைக்கண்டு முகம் கறுக்கும் குமரனைக் கண்டு திருப்தி ஏற்படும் இவளுக்கு.
அது போதாதென்று வீட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவாக டைனிங் ஹாலில் கிடக்கும் துணி அயர்ன் செய்யும் டேபிளில் குமரன் கல்லூரிக்கு செல்வதற்காக அயர்ன் செய்து வைத்திருக்கும் சட்டையில் ஒன்றிரண்டு பட்டன்களை பிய்த்து வைத்து விடுவாள்.
இன்னொரு நாளோ அவனின் ஒற்றை ஷு காணாமல் போயிருக்கும். இல்லையோ  அந்த ஷுக்களின் ஷுலேஸ்கள் காணாமல் போயிருக்கும்.
நன்றாகயிருந்த சட்டையின் பட்டன் அறுந்து போயிருந்த போதே இது பவித்ராவின் கைவண்ணம் தான் என்று குமரனுக்கு தெரிந்து விட்டது.
ஆனால் இதை யாரிடம் சொல்ல முடியும்? சொன்னால் அவன் ரெக்கார்ட் நோட்டை எடுத்து ஒளித்து வைத்த விஷயமும் அம்பலத்திற்கு வந்துவிடுமே!
திருடனுக்கு தேள்கொட்டினாற் போல் ஏதும் செய்யமுடியாத நிலையில் இருந்தான் குமரன்.
இப்போது நான்கைந்து நாட்களாக ஏதோ க்விஸ் புரோகிராமிற்கு தயார் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு புத்தகமும் கையுமாகவே அலைகிறான் குமரன்.
‘அந்த புத்தகத்தைத் தூக்கி ஒளித்து வைத்து விட்டால் என்ன?’ என்ற எண்ணத்தில் தான் அம்மணி காலையிலேயே எழுந்து உட்கார்ந்திருக்கிறாள்.
ஏனெனில் குமரனின் புத்தகங்கள் எப்போதுமே அவன் அறை தாண்டி வெளியே வருவதில்லை. அதனால் அதை எடுக்க வேண்டும் என்றால் அவன் அறைக்குள் தான் அவள் நுழைய வேண்டும்.
‘தான் அவன் அறைக்குள் நுழையலாமா? கூடாதா?’ இப்படி எதைப்பற்றியும் சிந்திக்காமல் குமரன் அறைக்கதவைத் திறக்கும் சத்தத்திற்காக காத்திருந்தாள் பவித்ரா.
அவள் நேரம் அன்று பார்த்து அவன் வழக்கமான நேரத்தை விட தாமதமாகவே வெளியே வந்தான்.
குமரன் அறைக் கதவைத் திறந்து வெளியே சென்ற சிறிது நேரத்தில் தங்களது அறையை விட்டு வெளியே வந்த பவித்ரா சுற்றும் முற்றும் பார்த்தவாறே சட்டென்று குமரனின் அறைக்குள் நுழைந்து அந்த குறிப்பிட்ட புத்தகத்தைத் தேட, அது அவளிடம் மாட்டுவேனா என்று கண்ணாமூச்சி ஆடியது.
ஒருவழியாக அதை கண்டுபிடித்து கையில் எடுத்துக்கொண்டு திரும்ப, அறைக்குச் சொந்தக்காரன் அங்கு நின்று கொண்டிருந்தான்.
அவனைக் கண்டவுடன் ஒருவித பயத்தில் புத்தகம் இருந்த கையை தன் முதுகுப் பின்னால் மறைந்தவள், ஓட எத்தனிக்க
தன் அறைக்குள் அவளை எதிர்பார்க்காத குமரன், சட்டென்று அவள் கைகளைப் பற்றி ஓடவிடாது தடுத்தபடியே,”ஏய்… என் ரூம்ல உனக்கென்ன வேலை? ம்ம்ம்…” என்று விசாரணையில் இறங்கியவனின் கண்கள் அவள் கையிலிருந்த தனது புத்தகத்தைக் காண, நிமிடத்தில் அவள் இங்கு வந்த நோக்கம் அவனுக்கு புரிந்து விட்டது.
 அவளை கையும் மெய்யுமாய் பிடித்த  சந்தோஷத்தில் ரூமை விட்டு வெளியே இழுத்தபடி,”கோதை ம்மா…கோதை ம்மா…” என்று தன் அன்னையை சத்தமாக அழைத்தான்.
அன்று அவளுக்காக தன்னை அடித்த கோதை அம்மாவிடம் தன்னை நிரூபித்து விடும் வேகம் அவனிடம்.
அப்போது தான் ரூமை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த கோதை ஹாலில் நின்று தன்னை அழைத்துக் கொண்டிருந்த குமரனைப் பார்க்க
அவன் பவித்ராவைப் கைப்பிடியாகப் பற்றிக்கொண்டு நின்ற கோலம் கண்டு பதறிப்போனார். ‘ஐயையோ! இன்னைக்கு  இரண்டு பேரும் சேர்ந்து என்ன ஏழரையைக்  இழுத்து வச்சிருக்காங்களோ தெரியலையே?’ என்று மனதிற்குள் அலறினாலும்
“டேய்! எதுவா இருந்தாலும் மொதல்ல புள்ளக் கையை விடுடா…” என்று அழுத்தமானக் குரலில் சொல்ல
தான் இழுத்த இழுப்புக்கு வரமறுத்து தன் பின்னாலே முரண்டியபடி வந்தவளை அப்படியே ஒரு இழுஇழுத்து முன்னால் கொண்டு வர சுழன்றபடியே கோதையின் முன்னால் வந்து நின்றாள் பவித்ரா.
ஆனால் இப்போதும் அவள் கைகள் அவனுடைய புத்தகத்தை இறுக்கி பிடித்தபடி இருந்ததை பார்த்தவன், அவளை முறைத்தபடியே
“கோதை ம்மா! இவ நான் இல்லாத நேரம் பார்த்து என் ரூமுக்குள்ள நுழைஞ்சு எம்புக்க திருட்டுத்தனமா எடுத்துட்டு நிக்குறா, என்னன்னு கேளுங்க” என்று பிராது கொடுக்க

Advertisement