Advertisement

அதன் பிறகு நாளை ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் ஊட்டியின் ஸ்பெஷல் ஹோம் மேட் சாக்லேட்ஸ், டீ , வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்குத் தகுந்தார் போல  பொருட்கள் என வாங்கி முடித்தவர்கள், இரவுணவையும் முடித்துவிட்டே காட்டேஜ் திரும்பியிருந்தார்கள்.
இருவரும் உடல்கழுவி  படுக்கைக்கு வர ஆசையோடு தன்னவள் முகம் பார்த்தவனுக்கு அந்த பால்வண்ண முகத்தில் மூக்குத்தி போட்டிருந்த இடம் மட்டும் சிவந்து லேசாக தடித்திருப்பது தெரிய
“வலிக்குதா?” என்று கேட்டு கொண்டே மூக்கின் மேல் கைவைப்பதற்கு முன்னரே “ஷ்ஷ்ஷ்…” என்று பதறினாள் பவானி.
தன் ஆசைக்காக அவளை காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் மீண்டும் ஒருமுறை “வலிக்குதா?”என்று கேட்டவனின் குரல்  சற்றே கம்மியிருந்தது.
சட்டென்று பரணிதரனின் மனநிலையை புரிந்து கொண்ட பவானி இல்லையென்று தன் வலிமறைத்து பொய் சொல்ல
தனக்காக பொய் சொன்ன அந்த தேனிதழ்களுக்கு கணக்கில்லாமல்  முத்தங்களை வாரி வாரி வழங்கினான்  வள்ளலாக மாறி.
#############
 அதிகாலையிலேயே எழும்பி தோட்டத்தில் தனது அல்டரோடு நடைபயின்று கொண்டிருந்த குமரனுக்கு மூன்று நாட்களுக்கு முன் நடந்ததை நினைக்க நினைக்க அடங்க மறுத்தது மனது.
தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக தன் கோதை அம்மாவிடம் அடிவாங்க வைத்த பெண்ணின் மீது கட்டுக்கடங்காத கோபம் கொப்பளித்தது.
ஆமாம்… அன்று குமரனைக் கைநீட்டி அடித்திருந்தது கோதை நாயகியே.
கிட்சனில் நின்றிருந்தவர்க்கு பவித்ராவின் ‘அத்தம்மா’ என்ற அலறல் கேட்க, என்னவோ? ஏதோ? என்று பதறியபடி ஓடிவந்தவர் கண்டது, 
முகத்தை மூடியபடி தரையில் மடங்கி உட்கார்ந்திருந்த பவித்ராவையும் அவளுக்கு சற்று தள்ளி வெற்றிச்சிரிப்போடு நின்று கொண்டிருந்த குமரனையும் இவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தபடியே பவித்ராவின் அருகில் உட்கார்ந்திருந்த அல்டரையுமே.
கோதைக்கு பார்த்த உடனேயே புரிந்து விட்டது என்ன நடந்நிருக்க வேண்டும் என்று.
கோபம் மேலிட எதுவும் கேட்க்காமல் குமரனுக்கு ஒரு அறை வைத்தவர், பவித்ராவின் கைபற்றி எழுப்பி தன் தோளோடு அணைத்தபடியே வீட்டுக்குள் அழைத்துச் சென்று விட்டார். 
ஆனால் அடித்தவருக்கும் தெரியும் அல்டர் புதிய மனிதர்களைக் கண்டால் பயங்கரமான சத்தத்தில் குரைத்துக்கொண்டு கால்களைத் தூக்கி அவர்களின் தோளில் போடுமேயொழிய  கடிக்காது என்பது.
அந்த தைரியத்தில் தான் குமரனுமே  அவளை சிறிது பயங்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அதை அவிழ்த்து விட்டது.
ஆனால் நடந்தது வேறாகி விட்டது. அடித்ததாவது அவனது கோதை அம்மா. அதனால் அதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை.
ஆனால் அந்த பெண் தனது அன்னையின் தோள்வளைவில் இருந்து கொண்டே தன்னைப் திரும்பிப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துக்கொண்டே பழிப்பு காட்டிக்கொண்டு சென்றதை மட்டும் அவனால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
‘ஏதாவது செய்ய வேண்டும் குமரா…!’ என்று அவன் மனம் ஓயாது கூவிக்கொண்டே இருந்தது.
‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு இப்போது டக்கென்று யோசனை பிடிபட்டு விட்டது.
கழிந்த இரண்டு நாட்களாக பவித்ரா இன்றுதான் பயாலஜி ரெக்கார்ட் நோட் ஒப்படைப்பதற்கான இறுதி நாள் என்று சொல்லி பரபரப்பாக தயார் செய்து கொண்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. 
அதுவும் நேற்று சாயங்காலம் கூட ஹாலில் தரையில் அமர்ந்து தன்னைச் சுற்றி புத்தங்களை பரப்பி வைத்தபடி தனது தங்கை நந்தினியிடம் அந்த பாடத்துக்குரிய ஆசிரியரைப் பற்றி அங்கலாய்த்தபடியே படங்களை வரைந்து கொண்டிருந்தது அவனுக்கு அந்த நேரத்தில் அச்சுப்பிசகாமல் ஞாபகம் வந்தது.
அதாவது ‘அந்த ஆசிரியர் ரொம்பவும் கெடுபிடியானவராம். அவர் சொன்ன நேரத்தில் வேலைகளை முடிக்காவிட்டால் யாரென்றும் பாராமல் தயவுதாட்சண்யமின்றி தண்டித்தே தீருவாராம்.’
‘அது தானே எனக்கு வேண்டும்!’ மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், இன்று எப்படியாவது அந்த பயாலஜி ரெகார்ட் நோட்டை தூக்கியே ஆக வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டான். 
முடிவெடுத்து விட்டானேத் தவிர அதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை அவனுக்கு.
‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது போல அவன் முழு கவனமும் அவளின் ஸ்கூல் பேக் மேலேயே இருந்தது.
ஆனால் அது அழகாக தயார் செய்யப்பட்டு பெண்களின் அறையினுள்ளேயே  இருந்தது.
அந்த அறை தன் தங்கையின் அறையாக மட்டும் இருக்கும் போது தயக்கமில்லாமல் போயிருக்கிறான் தான். ஆனால் இப்போதோ அது தங்கை அறை மட்டும் அல்லவே!
‘யாருமில்லாத நேரத்தில் அறையில் நுழைந்து எடுத்து வந்து விடலாம் தான்.  ஆனால் அப்போது யாராவது வந்துவிட்டால்… ‘இந்த எண்ணமே அவனை அந்த அறைக்குள் நுழைய விடாமல் தடுத்தது.
நேரம் ஆக ஆக ‘தான் நினைத்த காரியம் நடக்குமா?’ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்து விட்டது குமரனுக்கு
தனக்கும் கல்லூரிக்கு நேரமாவதால் ஹாலில் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே புறப்பட்டுக் கொண்டிருந்தான்.
பன்னிரெண்டாம் வகுப்பில் இருப்பதால் காலை நேர வகுப்புகளுக்காக எப்போதுமே நந்தினி சீக்கிரமாகச் சென்றுவிடுவது வழக்கம். இன்றும் அவ்வாறே அவள் சென்றிருக்க
நந்தினி சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் தன் தோள்களில் பள்ளிப்பையை மாட்டிக்கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தாள் பவித்ரா.
 பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது, “அவ்வளவு தானா?”  என்று காற்று இறங்கிய பலூனாய் ஆகிப்போனது.
ஆனால் உனக்கு ஒரு சான்ஸ் இருக்கிறது என்பது போல் வாசல் வரைச் சென்றவள் திரும்பி, “அத்தம்மா…” என்ற அழைப்போடு  உள்ளே வந்தாள்.
வந்தவள் கோதை நாயகியைக் காணவில்லை என்றதும் ஹாலில் இருந்த சோஃபாவில் பேக்கை கழற்றி வைத்து விட்டு வீட்டின் பின்பக்கமாகப் போக
‘பழம் நழுவி பாலில் விழுந்தது போல, இல்லையில்லை வாயிலேயே விழுந்தது போல்’ மகிழ்ந்த குமரன் அங்கும் இங்கும் பார்த்தவாறே படபடவென்று பையைத் திறந்து ரெக்கார்ட் நோட்டை எடுத்து தரையோடு ஒட்டிக் கிடந்த அந்த குஷன் சோஃபாவிற்கும் தரைக்கும் இடையே இருந்த சிறிய இடைவெளியில் தள்ளிவிட்டு, பையையும் மூடி இருந்த இடத்திலேயே வைத்து விட்டு நகர்ந்தான்.
இதை எதையும் அறியாத பவித்ரா புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிவாகனத்திற்காக காத்திருக்க வழக்கத்தைவிட அரைமணி நேர தாமதத்திற்கு பிறகே வந்தது வாகனம்.
பவித்ரா வகுப்பறையில் வந்து அமரவும் பயாலஜி ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
மாணவர்களின் காலைவணக்கத்தை ஏற்றுக்கொண்டவர்,
“ரெக்கார்ட் நோட் கம்ப்ளீட் பண்ணாத பிரகஸ்பதிங்க எல்லாம் எழும்புங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வர 
எழும்பத் தான் செய்தார்கள் சில பிரகஸ்பதிகளும். அவர்களை தன் வார்த்தைகளால் அர்சித்து,” பீரியட் முடியும் வரை இப்படியே நில்லுங்க” என்று வகுப்பறையின் முன்னே நிறுத்திவைத்தார்.
“மத்தவங்க எல்லாம் நோட்டை  கொண்டு வந்து சப்மிட் பண்ணுங்க” என்ற ஆசிரியரின் சொல்லுக்கிணங்கி எல்லோரும் கொண்டு போய் ஆசிரியரின் மேஜை மீது  வைத்து விட்டு வந்தார்கள்.
அப்போது தான் வந்தமர்ந்திருந்த பவித்ராவும் தன் பையைத்திறந்து பார்க்க, நோட்டுப்புத்தகம் அங்கு இல்லை.
உடம்பில் சிறு பதட்டம் தொற்றிக்கொள்ள வேகமாய் தேட ஆரம்பிக்க, அது இருந்தால் தானே கிடைப்பதற்கு!
‘இங்க தானே வச்சேன்! எங்க போச்சு?’ எண்ணியபடியே இன்னும் வேகமாய்த் தேட
அவளையேப் பார்த்துக் கொண்டு நின்ற ஆசிரியை,”கம்ப்ளீட் பண்ணிட்ட, ஆனால் வீட்ல வச்சிட்டு
வந்துட்ட அப்படித்தானே” கேட்ட குரலில் உன்னைப் போல எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன் என்ற நக்கல் தெறித்தது.
“இல்ல நிஜம்மாவே…” 
ஆரம்பித்தவளை முடிக்க விடாமல், முன்னால் நின்றவர்களைப் பார்த்து கைநீட்டி,” இவங்கெல்லாம் முட்டாளுங்க நீங்க மட்டும் ஓவர் ஸ்மார்ட் ன்னு நினைப்பு, ம்ம்ம்…” என்றவர் அவளை
”கிளாஸ்ஸூக்கு வெளியே போய் நில்லு. அப்போ தான் இன்னொரு தடவை டீச்சரை ஏமாத்த வேணும் என்ற எண்ணம் வராது” என்று ஏதோ அவள் அவரை ஏமாற்ற முயன்றது போலச் சொல்ல…
 வகுப்பே தன்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது அவளுக்கு. வேறுவழியில்லாமல் வெளியே வந்து வகுப்பறை வாசலில் ஒற்றை துவாரபாலகனாய் நின்றாள் பெண்.
சாயங்காலம் பள்ளி விட்டு வேகவேகமாக வீட்டினுள் நுழைந்தவளைப்  சோஃபாவின் மேல் இருந்த ரெகார்ட்நோட் பார்த்துச் சிரித்தது. 
அதைப் பார்த்தவள்,”நாமதான் மறந்து வீட்லயே வச்சிட்டு போய்ட்டமோ?’ என்று எண்ணி கொஞ்சம் குழம்பித்தான் போனாள்.
வேறொன்றுமில்லை… காலையில் அதை மறைத்து வைத்தவனே மாலையில் சீக்கிரமாக வந்து அதற்கு விடுதலையும் அளித்திருந்தான்.
நந்தினி  பள்ளியில் இருந்து வந்ததும் அவளிடம், தனக்கு இன்று பள்ளியில் நடந்தவற்றை எல்லாம் அப்படியே ஏற்ற இறக்கத்தோடு  சொல்லி பவித்ரா  பொறுமிக் கொண்டிருந்தாள்.
அதையெல்லாம் தன் ரூமில் நின்று கேட்டுக் கொண்டிருந்த குமரனுக்கு ஏதோ சாதித்து விட்டதைப் போல உள்ளம் துள்ளியது. போதாக்குறைக்கு அவளைக் காணும் போதெல்லாம் கேலி முறுவல் ஒன்று தவழ்ந்தது அவன் உதடுகளில்.
 
மறுநாள் காலை பள்ளி செல்வதற்காக வாசலைத் தாண்டும் போதும் கூட பள்ளிப்பையைத் திறந்து ரெக்கார்ட் நோட் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டே சென்ற பவித்ராவைக் கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை குமரனுக்கு…
########
 பிள்ளைகள் மூவரும் கிளம்பி சென்றபிறகு பண்ணைக்குச் சென்று கணவனுக்கு சிறிது நேரம் ஒத்தாசையாக இருந்த கோதை நாயகி,
 ஒரு பதினோரு மணி வாக்கில் திரும்பி வந்து கையில்  டீயோடு ஹாலில்  அமர்ந்தார். மனம் தன் சின்ன மகன் குமரனைச் சுற்றியே வந்தது. 
அன்று நடந்ததை பற்றி குமரன், பவித்ரா, இருவரிடமுமே தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தவர், இருவரையும் கண்டிக்கவும் செய்திருந்தார்.
என்ன இருந்தாலும் குமரனின் செயல் கொஞ்சம் அதிகப்படி என்று தான் அவருக்கேத் தோன்றியது.
‘இப்படி சின்ன சின்ன விஷயத்துக்குக் கூட உணர்ச்சி வசப்பட்டு விடுகிறானே?’ ஒரு அன்னையாக தன் மகனின் செயல்கள் அவருக்கு கொஞ்சம் பயத்தையேக் கொடுத்தது.
இந்த முன்கோபத்தைத் மட்டும் தவிர்த்துப் பார்த்தால் அவனைப்போல அக்மார்க் நல்லவனைக் காணமுடியாது.
‘கடவுளே! என் பிள்ளைக்கு இந்த கோபத்தை மட்டும் குறைப்பதற்கு ஏதாவது வழியைக்காட்டு’ என்று எப்போதும் போல் இப்போதும் இறைவனிடமே முறையிட்டார் அந்த அன்னை.
 
சிறிது நேரத்துக்கெல்லாம் வீட்டு முற்றத்தில் ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. தன் மன எண்ணத்திலிருந்து விடுபட்ட கோதை நாயகி
‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?’ என்ற யோசனையோடே வெளியே உற்றுப்பார்த்தார்.  
அங்கே ஆட்டோவிலிருந்து பவித்ரா இறங்கிக் கொண்டிருந்தாள்…
 
 

Advertisement