Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 07.
“மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்…” மெல்லிய குரலில் பாடலை ஹம் செய்தபடியே புன்னகை முகமாக மனைவியின் கைகளோடு தன் கைகளைக் கோர்த்தபடி ஊட்டி  ரோஸ் கார்டனில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பரணிதரன்.
“ஹையோ! பெரிய மன்மதன்னு நினைப்புத்தான்” அவன் பாடியதைக் கேட்டு அழகாக நொடித்துக்கொண்டாள் பவானி.
“இல்லையா பின்ன…” கண்ணடித்தபடிக் கேட்டவனின் தொனியில் அந்த ரோஜா முகம் இன்னும் சிவந்தது. 
ஆனால் அந்த சிவப்பையும் தாண்டி மன்மதன் சாம்ராஜ்யத்தில் தம்பதிசமேதராய் நேரம் காலம் பாராமல் உலாப்போன களைப்பு அந்த பூமுகத்தில் பரவிக் கிடந்தது.
இன்றோடு அவர்கள் ஊட்டிக்கு வந்து நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நான்கு நாட்களும் நான்கு மணிநேரமாகப் பறந்து தான் போய்விட்டது புதுமணத் தம்பதியருக்கு.
“நீ தான் அருமையா ட்ரைவ் பண்ணுவியே மாப்பிள்ளை. நம்ம காரையே எடுத்துட்டுப் போ” என்று சொன்ன ஜெயராமின் வார்த்தைகளை மென்மையாக மறுத்து பேருந்திலேயே கிளம்பிருந்தனர் இருவரும்.
கோயம்புத்தூர் வரை வாடகை காரில் வந்து அங்கிருந்து ஏசி கோச்சில் செல்வது என்று தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டான் பரணிதரன்.
 கோயம்புத்தூர் வந்து பஸ்ஸில் ஏறிய உடனே சிறுபிள்ளை போல்,”எனக்கு ஜன்னல் சீட் “என்று அமர்ந்த  பவானி சிறிது நேரத்திலேயே “குளிருது” என்று பரணிதரனை நெருங்கி அமர்ந்தாள்.
லேசாக உடலைக் குறுக்கி தன்னை நெருங்கி அமர்ந்தவளுக்கு தன் கையிலிருந்த  பேக்கில் முன்னேற்பாடாக வைத்திருந்த ஷாலை எடுத்து போர்த்திவிட்டு தன் கைகளை அவள் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டவன் 
“இந்த ஏசி குளுருக்கே இந்த பாடு. அங்க ஊரே ஏசி ல வச்சமாதிரி இருக்குமே! என்ன பண்ணுவ?” என்று கிண்டலடிக்க
“அதான் ஸ்வெட்டர், ஷால் எல்லாம் வச்சிருக்கோம்ல”  கெத்தாக சொன்னாள்.
“ஓஹ்…முன்னேற்பாடெல்லாம் பயங்கரமா இருக்கே…” என்றவன்,”பாக்கத்தானே போறேன்” என்று முணுமுணுத்தான்
“பாக்கலாம்… பாக்கலாம்” என்று சொன்னவள் இன்னும் வாகாக அவனோடு நெருங்கி அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு வர…
அந்த காலை நேர பயணத்தை அணுஅணுவாக ரசித்தான் பரணிதரன்.
இருவரும் மெல்லிய குரலில் ஏதேதோ பேசிக்கொண்டு சிரித்தபடியே  வந்தார்கள்.
பேச்சுவாக்கில் பவானி ‘தீம் பார்க்’ போனதே இல்லை என்று தெரியவர அவர்களின் கோயம்புத்தூர் டூ ஊட்டி பயணம், கோயம்புத்தூர் டூ மேட்டுப்பாளையமாக தற்காலிக மாற்றம் கொண்டது.
மேட்டுப்பாளையத்தில் இறங்கி ‘ப்ளாக் தண்டருக்கு’ மனைவியை கூட்டி வந்தவனுக்கு அங்கே மனைவியினுள் இருந்த குழந்தைதனத்தை ரசிக்கும் வாய்ப்பு கிட்டியது.
அங்கிருந்த வாட்டர் கேம்ஸ், ரைட்ஸ் எல்லாவற்றையும் சிறு குழந்தையின் குதூகலத்துடன் அனுபவித்தாலும் அதில் சிறுபயமும் அவளிடம் கலந்திருக்கத்தான் செய்தது.
அந்த பயத்தை தன் தலைவனின் அருகாமையில் தொலைத்தவளின் வாய் அடிக்கடி,”நம்ம வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்…நல்லா என்ஜாய் பண்ணியிருப்பாங்க” என்றே அடிக்கடிச் சொன்னது.
தங்களின் வயது, பதவி எல்லாம் மறந்து   குதூகலித்திருந்தவர்கள் பிற்பகல் மூன்று மணிக்கு  வாடகை கார் மூலம்  ஊட்டியை நோக்கி கிளம்பினார்கள்.  
ஒரு இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஊசி கோபுரங்கள் போல நெடுக வளர்ந்து நின்ற யூகலிப்டஸ் மரங்களுக்குப் பின்னால், நாற்புறமும் பச்சைப்பசேலென்று மரங்கள் அடர்ந்திருந்த மலைகள் சூழ, மலைகளின் ராணி வரவேற்றாள் அந்த இளம் தம்பதியினரை.
ட்ரைவரிடம் தங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட ரிசார்ட்டைச் சொல்ல எந்த சுணக்கமும் இன்றி கார் அந்த இடத்தை வந்தடைந்தது.
பூலோக சொர்க்கம் என்று சொல்லலாமோ! என்னும் அளவிற்கு இருந்தது அந்த ரிசாட்டும் அதை சுற்றி இருந்த இயற்கை காட்சிகளும்.
 ஒரு சிறு குன்றின் ஒருபக்கம் முழுவதும் அடிவாரத்திலிருந்தே  ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார் போல் வரிசையாக மாடிப்படி அமைப்பில்  தனித்தனி காட்டேஜ்கள்  அமைந்திருந்தன.
 காட்டேஜ்களுக்கு இடையே அதன் இருமருங்கிலும் இருந்த கார் செல்லும் பாதை  குன்றின் உச்சியில் இருந்த பிரம்மாண்டமான மெயின் பில்டிங்கோடு தன்னை இணைத்துக் கொண்டிருந்தது. 
மேலே மெயின் பில்டிங்கில் நின்று பால்வெள்ளை நிறத்தில் பெயிண்ட் பண்ணப்பட்ட காட்டேஜ் களை பார்க்கும் போது அந்த குன்று முழுவதும் படர்ந்திருக்கும் பனியோ என்று எண்ணும் அளவிற்கு இருந்தது அதன் தோற்றம்.
மெயின் பில்டிங் முன்னால் வந்து  நின்ற காரிலிருந்து இறங்கியவர்கள்,காரோட்டிக்கு பேசிய தொகை கொடுத்து நன்றி சொல்லி  ரிஷப்சனை அடைந்தார்கள்.
  ஊட்டியின் இயற்கை மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொக்கே கொடுத்து அவர்களை வரவேற்றது ஹோட்டல் நிர்வாகம்.
முகமலர்ச்சியோடு வரவேற்பை ஏற்றுக்கொண்டவர்கள் தங்களின் முன்பதிவு விபரங்கள் கூறி தங்களுக்கான காட்டேஜ் விபரங்களைப் பெற்றுக்கொண்டு, ரிசார்ட் ஊழியர் வழிகாட்ட தங்களுக்கான பகுதிக்கு வந்து
சேர்ந்தார்கள்.
ப்ளாக் தண்டரில் நாள் முழுவதும் கொட்டம் அடித்த சோர்வோடு  பயணக்களைப்பும் சேர்ந்து கொள்ள ரூமிற்குள் நுழைந்து  மெத்தையைக் கண்ட உடனே ஏதோ தெய்வத்தைக் கண்ட பக்தையைப் போல பரவசத்தோடு பவானி தூங்க பரபரக்க 
“கொஞ்சம் பொறு பவானி, குளிச்சுட்டு தூங்கலாம்” என்று சொல்லி பாத்ரூம் சென்று எல்லா இடங்களையும் பரிசோதித்த பரணி ,’தூக்க கலக்கத்தில் சுடு வெந்நீரை மனைவி தன் மேலே ஊற்றிக்கொள்ளக் கூடாது’ என்ற அக்கறையில் வெந்நீரை சரியான பதத்தில் ரெடி செய்துவிட்டே அவளை உள்ளே அனுப்பினான்.
பின் அங்கிருந்த சின்ன ஹால், பெட்ரூம் எல்லாவற்றையும் தன் எக்ஸ்ரே கண்கொண்டு பரிசோதித்து திருப்தியடைந்தவன் மனைவியின் வருகைக்காக காத்திருந்தான்.
பவானி வந்ததும் தானும் போய் வெந்நீரில் அலுப்பு தீர குளித்து வந்தவன், கண்டது அதற்குள் அசந்து தூங்கிய மனைவியையே. 
சிரித்தபடியே அவளருகில் நெருங்கிப் படுத்து  இருவருக்குமாய் சேர்த்து மெத்தை மீது இருந்த சுத்தமான பெரிய கம்பளியை எடுத்து போர்த்திக்கொண்டு அவனும் தூங்க ஆரம்பித்தான்.
தூக்கம்… தூக்கம்…அப்படி ஒரு தூக்கம் இருவருக்கும்.
அசந்து தூங்கியவர்களில் முதலில் எழும்பியது பரணிதரன் தான். கையைத் திருப்பி வாட்ச்சைப் பார்க்க, அது மணி இரவு ஒன்பது முப்பது என்றது.
 ‘வயிறு என்னையும் கொஞ்சம் கவனியேன்’ என்று பரிதாபமாக சப்தமிட தன் வலது தோளில் மஞ்சம் கொண்டிருந்த மனைவியை,”பவானி! சாப்பிட்டுட்டு வந்திடலாம் வா” என்று எழுப்பினான் மெதுவாக. அவளோ,
“ரொம்ப குளிருது. என்னால முடியாது பரணி” என்று பூனைக்குட்டியாய் அவனுடன் இன்னும் சுருண்டாள்.
தன் இடது கைக்கொண்டு அவள் கூந்தல் வருடியவன்,”ஹஹஹ…அம்மணி ஸ்வெட்டர் எல்லாம் கொண்டு வந்தீங்களே, அதை போட்டுட்டு போகலாம் வாங்க…” கிண்டல் வழிந்தது அவன் குரலில்…
‘ஆத்தாடி! ஸ்வெட்டரைப் போடவச்சு கூட்டிட்டு போய்டுவானோ? இந்த குளிருக்குள்ள வெளியே போக நம்மால முடியாது சாமி…”உள்ளுக்குள் அலறியவள்
“அதெல்லாம் இப்போ பேக்ல இருந்து எடுக்குறது கஷ்டம்” என்றாள் அவசரமாக. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதாய் இருந்தது அவளின் பேச்சு.   
மனைவி மனநிலை புரிந்தவன் ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து ரூமுக்கே உணவை கொண்டு வரச்சொல்லி தானும் உண்டு தன்னவளையும் உண்ண வைத்திருந்தான்.
அதன் பிறகு அந்த இரவு புதுமணத் தம்பதிகளுக்கேயான இனிய இரவாக மாறிப்போனது அவர்களுக்கு.
எந்த கட்டுப்பாடுகளும் அற்ற தங்களுக்கே தங்களுக்கான அந்த தனிமையை ரசித்தார்கள் அந்த இளம் தம்பதியினர்.
நினைத்த நேரம் தூங்கி, நினைத்த நேரம் விழித்து, பசித்த நேரம் புசித்து, தங்களால் முடிந்தால் சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க ஹோட்டல் மேனேஜ்மென்ட் அரேன்ஜ் செய்யும் ஏற்பாட்டில் கலந்து என்று அவர்கள் நேரத்தை கழித்தார்கள்.
பல நேரங்களில் வாடகை கார்களையே நாடினார்கள் இடங்களை சுற்றிப்பார்க்க…
அங்கிருந்த புல்வெளி மைதானங்களில்  வாடகை  சைக்கிள்களில் ஏறி இறக்கை இல்லாத பறவைகளாப் பறந்தார்கள். யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த மலைச் சரிவுகளில் கைகோர்த்து காதல் கிளிகளாய் கொஞ்சிக் கொண்டு  நடந்தார்கள்.
மொத்தத்தில் தங்கள் வாழ்க்கை என்னும் புத்தகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பக்கங்களாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள் அந்த நாட்களை.
இங்கு வந்த நாள் தவிர இதோ இன்றோடு சேர்த்து மூன்று நாட்களாக அவர்கள் தினமும் வந்த இடம் ஒன்று உண்டென்றால் அது இந்த ரோஸ் கார்டன் தான்.
அது அவர்கள் தங்கி இருந்த ரிசார்ட் க்கு அருகே இருந்தபடியால் நடந்தே வருவது தான் பழக்கம்.
அங்கிருக்கும் பலவகையான ரோஜாக்களை பார்வையிட்டுக் கொண்டே மரத்தடியில் அமர்ந்து சாவகாசமாக கதைகள் பேசிக்கொண்டிருப்பர்.
அப்படி பேசும் தருணங்களில் பரணி தன்னைப் பற்றி, தன் குடும்பத்தைப் பற்றி தங்கள் சிறுவயது வாழ்க்கைப் பற்றி,  தன் கனவைப் பற்றி, அதற்காக அவனது முயற்சிகளைப் பற்றி, அவள் மீதான தன் காதலைப் பற்றி  எல்லாம் சொல்லியிருக்கிறான்.
அதேபோல பவானியையும் அவர்களைப் பற்றி பேசவைத்திருக்கிறான்.
இன்னொரு சமயம், குமரன், நந்தினியைப் பற்றி அவன் சொல்ல, ஆடித்தான் போனாள் பெண்.
“உண்மையாகவா! உண்மையாகவா!” என்று திருப்பித் திருப்பி கேட்டதிலேயே அவளுக்கு இந்த விஷயம் எத்தனை அதிர்ச்சியை அளித்திருக்கிறது என்று பரணியால் புரிந்து கொள்ள முடிந்தது.
  குமரனும், நந்தினியும் பரணிதரனின் வீட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகே பவானி இவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்தது.
 தானுண்டு தன்வேலையுண்டு என்று அநாவசியமாக யாரிடமும் பேச்சுக்கொடுக்காத பவானிக்கு இவ்விஷயம் தெரியாமலேயே தான் போயிருந்தது.
இப்போது பவானியின் மனதில் கோதைநாயகி மீதும் மதியழகன் மீதுமான மரியாதை இன்னும் சிலபடிகள் உயர்ந்திருந்தது.
என்றும் போல இன்றும் கார்டனை ஒரு முறை சுற்றி வந்தவர்கள் தங்கள் ஆஸ்தான மரத்தின் கீழ் வந்து அமர்ந்தார்கள். 
இன்று பிற்பகல் மூன்று மணிக்கே  காற்றில் பனியின் குளுமை  அதிகமாகவே இருந்தது. ஒரு ஊதல் காற்று வீச உடல் சிலிர்த்த பெண்ணவள், “பாவம்ல…” என்றாள்.
‘யார் பாவம்? எதற்கு பாவம்?’ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்தான் பரணிதரன்.
அவனின் புரியாத பாவனையைப் பார்த்து சிரித்தவள்,”இல்ல… இந்தக் குளிரையே என்னால தாங்க முடியலை. ஆனால் சினிமால ஹில் ஸ்டேஷன்ஸ்ல, கொட்டுற பனியில நடிகைங்க எல்லாம் எப்படி தான் சின்னதா டிரஸ் போட்டுட்டு டான்ஸ் பண்ணுறாங்களோ தெரியலை!” நிஜமான சோகம் அப்பிக்கிடந்தது குரலில்
தன் மனைவியின் சோகத்தை போக்கும் வேகத்தில்,”அதுக்குத் தான் காசு வாங்குறாங்க மா” என்று பரணிதரன் வாய்விட
“அப்போ காசு வாங்கினா பாவமில்லையா?” உடனடி சண்டை ஒன்றுக்கு தயாரானது பெண்.
“ஹையோ! நான் இந்த விளையாட்டுக்கு வரலம்மா” என்று வெற்றிகரமாக பின்வாங்கியவன், தன் மனைவியை நெருங்கி அமர்ந்து
“பவானி” என்று மெதுவாக அழைத்தான்.
“என்ன?” என்னும் விதமாக அவன் முகம் பார்த்தவளிடம்
அவள் மூக்கை மெதுவாக தொட்டுக்காட்டி “மூக்குத்தி போட்டுக்கறியா? எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மெல்லக் கேட்டவன், “உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்” என்றும் சொன்னான் வேகமாக.
பொதுவாகவே பெண்களுக்கு மூக்குத்தி முகத்தின் வசீகரத்தை கூட்டும் என்ற எண்ணம் கொண்டவன் பரணி.
அதனாலேயே தன் மனைவிக்கும் அதை அணிவித்துப் பார்க்கும்  ஆசை அவனுக்கு. 
‘மூக்குத்தியா! ஹையோ வலிக்குமே?’  இந்த எண்ணம் மனதிற்குள் ஓடினாலும் கணவனின் கண்களில் வழிந்த ஆவல் சரி என்று சொல்ல வைத்தது பெண்ணை.
உடனேயே கூகுளில் தேடி அங்குள்ள பிரபலமான நகைக்கடையை கண்டுபிடித்தவன், அடுத்த ஒருமணி நேரத்திற்குள் தன் மனைவியோடு அங்கு இருந்தான்.
“மரகதப் பச்சையில் மூக்குத்தி கிடைக்குமா?” என்று அந்த விற்பனையாளரிடம் கேட்ட விதமே இது அவனின் நீண்ட நாள் ஆசை என்று புரிந்தது பவானிக்கு.
“கிடைக்கும் சார். ஆனால் முன்கூட்டியே ஆர்டர் கொடுக்கணும்”  என்ற அந்த மனிதர்,”வைரத்தில் இருக்கு சார், பாருங்க” என்று  
வெள்ளை, நீலம், லைட் பிங்க் கலரில் இருந்தவற்றை காண்பிக்க, அந்த சின்ன கற்கள் கூட நான் வைரமாக்கும் என்னும் கர்வத்தில் கலர்கலராக கண்ணைப் பறிக்கும் விதத்தில் ஒளியைச் சிதறவிட்டன.
லைட் பிங்க் கலர் மூக்குத்தி பரணிக்கு ரொம்பவே பிடித்திருக்க, மனைவியின் தேர்வும் அதுவே எனவும், சிறிது நேரத்திலேயே பவானியின் இடதுபக்க மூக்கில், மூக்குத்தி என்ற பெயரில் குடியேறியது அந்த துளிவைரம்.
மூக்குத்தி அணிந்த மனைவியின் முகம் கண்களை நிறைத்தாலும், நவீன முறையில் என்றாலும் மூக்குத்தி போடும் போது வலியில் முகம் சுருக்கிய மனைவியின் தோற்றமே அந்த காதல் கணவனின் கண்களில் நின்றது

Advertisement