Advertisement

“ஒரு மூனு பேர் பதிவா இங்கயே வேலை பாக்குறாங்க. அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் பசங்க எல்லாரும் அவங்க அப்பாவுக்கு உதவி செய்வாங்க” இதைச் சொல்லும்போது பெருமை பொங்கிவழிந்தது கோதையின் குரலில்.
“பரணியும் ஹெல்ப் பண்ணுவாங்களா?”  அறிந்து கொள்ளும் ஆவல் அவள் குரலில்…
“ம்ம்ம்… அவனும் எங்கபிள்ளை தானே” மெலிதான சிரிப்பு அவர் குரலில்.
“என்னம்மா எம் பேர்லாம் அடிபடுது உங்க பேச்சுல?   கேட்டபடியே வந்தான் பரணிதரன். குளித்து முடித்து வெள்ளை  வேஷ்டி லைட்பர்பிள் கலர்  சட்டையோடு வந்திருந்தான். 
கேள்வி அன்னையிடம் இருக்க பார்வையோ பாந்தமாய் தன் வீட்டில் பொருந்தி நிற்கும் மனைவியை பார்வையிட்டது.
“ஒன்னுமில்லடா…  நம்ம பண்ணையைப் பற்றி சொல்லிட்டு இருந்தேன் என்றவர், அப்பா ஏன் இன்னும் வரலை? எப்பவும் இதுக்கு முன்னாடியே வந்துடுவாறே!” என்றவரின் கேள்விக்கு
“நம்ம பெரிய பசு கன்னு போட்டுடிச்சி கோத. அதான் கொஞ்சம் லேட்” என்றவாறே உள்ளே வந்த மதியழகன் தன் கையிலிருந்த பால் பாத்திரத்தை முதன்முதலாக சமையலறையில் வந்து நின்ற தன் மருமகளின் கைகளில் அப்படியே கொடுத்தார்.
புன்னகையோடு வாங்கிக்கொண்டாள் பவானி.
“டீ போடுங்க, இதோ நான் பசுவை பாத்துட்டு வந்துடுறேன்” என்று வெளியே சென்ற மகனுடன் சேர்ந்து கொண்டார் மதியழகனும்.
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடைபெற்றன.
மாமியாரும், மருமகளும் சேர்ந்து காலை உணவை தயாரிக்க பவித்ராவையும் நந்தினியையும் தவிர அனைவரும் உண்டு முடிந்திருந்தனர்.
  நந்தினியின் அறையிலேயே பவித்ரா தங்கிக்கொள்வதாகச் சொல்ல அவளுடைய பொருட்களை அங்கே அடுக்கி முடித்து வந்து சாப்பிடுவதாக சொல்லிவிட்டார்கள் பெண்கள் இருவரும்.
வேலையை முடிந்து வெளியே வந்த பெண்கள்  ஹாலில் பேசிக்கொண்டிருந்த பரணி, பவானி, திவ்யாவைக் கண்டு அங்கு  செல்ல, தமக்கையை பார்த்ததும் தங்கை  கேட்ட கேள்வி,”ஏன்கா கண்ணுக்கு மை வச்சுக்கலை?” என்பது தான்.
எப்போதுமே அஞ்சனம் தீட்டிய தன் அக்காவின் விழிகளை  அவ்வளவு பிடிக்கும் பவித்ராவுக்கு. 
சின்னவளின் கேள்வியில் மனைவியைத் திரும்பிப் பார்த்தான் பரணிதரன்,  ஆமாம்… அந்த மீன் விழிகளில் இன்று மை இல்லை தான்.
“காஜல் எங்கேயோ மிஸ்ஸாகிடிச்சி பவி! உங்கிட்ட இருந்தா கொஞ்சம் குடேன்”
அக்காவின் பதிலில் கிண்டலாகச் சிரித்த பவித்ரா,
“ஆனாலும் நீ இவ்வளவு அப்பாவியா இருக்கக்கூடாது க்கா. உனக்கே உனக்குன்னு ஒரு கண் மை ஃபாக்டரியே சொந்தமா இருக்கும் போது, அப்படி தொட்டு இப்படி இட்டுக்காம, ஒத்த காஜல் இல்லைன்னு புலம்புரியேக்கா…வாட் அ ஷேம்…வாட் அ ஷேம்” என்றவளின் விரல்கள் மையிடுவது போல  அபிநயம் பிடித்தது.
தங்கை சொல்ல வரும் விஷயம் அக்காவிற்கு புரிந்து விட மெல்லிய சிரிப்பு அவள் இதழ்கடையோரம் மின்னியது.
விஷயம் கொஞ்சம் லேட்டாகப்புரிந்த திவ்யா,” அடியேய்! என் தம்பி என்ன அவ்வளவு கறுப்பா! உன்னை…” என்று சிரித்தபடியே அவள் காதை முறுக்க வர
அவள் கைகளில் மாட்டாமல் சட்டென பறந்தது அந்த சிட்டு.
அதைக் கண்டு ஹாலே கலகலக்க பவித்ராவின் பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்த குமரனுக்கு ஏனோ அது ரசிக்கவில்லை.
இப்போது என்றில்லை, சிறிது வயதிலிருந்தே அவனுக்கு அவளின் பேச்சு கொஞ்சம் எரிச்சலைத்தான் தரும்.    
தன் தங்கை வயதுள்ள பெண் தன்னை மரியாதையாக அண்ணா என்று அழைக்க வேண்டும் என்று அவன் எதிர்பார்க்க அவளோ அவன் பெயர் சொல்லி அழைத்தாள்.
 அதைச் சரியாகவாவது சொல்லித் தொலைத்தாளா என்றால் அதுவும் இல்லை. ‘குமரு…குமரு…’ என்று சொல்லி அவன் எரிச்சலை மூட்டினாள். 
 நேற்றும் அல்டரைக் கண்டதும் “என்னடி உங்க நாய் க்கு வாலக் காணோம்?” என்று கிண்டலடித்தவளிடம், “சின்ன அண்ணனுக்கு அல்டரை நாய் னு சொன்னா பிடிக்காது என்ற உண்மையைச்  நந்தினி சொல்ல
“நாய்க்கார் க்கு பிடிக்காட்டா என்ன, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே” என்ற பதில் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த குமரனின் காதில் தெளிவாகவே விழுந்தது.  
தன்னை ‘நாய்க்கார்’ என்றும் தன் அல்டரை நாயென்றும் சொன்ன அந்தப் பெண்ணை  மீண்டும் சுத்தமாக பிடிக்காமல் போயிற்று அவனுக்கு. 
இங்கொருவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்ற உண்மை தெரியாமல் தன் வாழ்வில் புதியதாக அமைந்திருந்த இந்த குடும்ப சூழ்நிலையில் கட்டுக்கள் அவிழ்ந்த கன்றாய் துள்ளித்திரிந்தாள் பவித்ரா. 
சற்று நேரத்தில் கோதை நாயகியின் பெரியம்மா முறைக்கார எழுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்
“நேற்று மகள் வீட்டுக்கு சென்றிருந்தபடியால் திருமணத்திற்கு வரமுடியவில்லை” என்று சொன்னபடி வர 
அவரை வரவேற்று பாதம் பணிந்து எழும்பினான் பரணிதரன். கணவனையே பின்பற்றினாள் மனைவியும்.
மனங்குளிந்து ஆசீர்வாதங்களை அள்ளிவழங்கிய அந்த பெரியமனுஷி “பொண்ணு மகாலட்சுமியாட்டம் அத்தனை அழகாக இருக்கா” என்று பவானியின் கன்னம் வருடி சொன்னபடியே கோதைநாயகியைத் தேட
பரபரப்போடு வந்து அவரை வீட்டினுள் அழைத்துச் சென்றார் கோதை.
“கோத! பொண்ணு நல்ல அம்சமாத்தேன் இருக்கா… ஆனால் நம்ம பயலுக்குத் தான் ஒரு நல்லநாள் பொழுதுக்கு சீராட மாமியார் வீடு இல்லாமப் போச்சு” ஒரு அங்கலாய்ப்பு தெரிந்தது அவரின் குரலில்
“அதோட அந்த சின்னப் பொண்ணோட பொறுப்பும் உங்க தலையிலத் தானே” சொன்னவரின் குரலில் நிச்சயமாக வம்பு பேசும் தொனியில்லை. தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும்பாங்கே இருந்தது. 
” மனசு இருந்தா மார்க்கம் உண்டு பெரியம்மா” என்ற கோதையின் பதிலுக்கு,”ஆமா…இதேப் போலத் தான் பத்து பன்னன்டு வருஷத்துக்கு முன்னாடியும் சொன்ன” என்ற அந்த மூதாட்டியின் குரல்
” ஆனாலும் உம்மனசுக்கு உனக்கு ஒரு குறையும் வராதடியம்மா” என்று இப்போது தன் ஆசீர்வாதத்தையும் வழங்கியது கோதை நாயகிக்கு.
அவர்கள் பேசியது அனைத்தும் ஹாலில் இருந்தவர்களுக்கு மெல்லியதாக என்றாலும் தெளிவாக கேட்கத்தான் செய்தது.
அவர் பேச்சு பவானிக்கு உள்ளுக்குள் வருத்தத்தையளித்தாலும்,’பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடியா? அது என்னவாக இருக்கும்?’ என்ற எண்ணம் மேலோங்க, தன் கணவனிடம் மெல்லிய குரலில் கேட்க்கவும் செய்தாள்.  
“அதைப் பற்றி அப்புறமாச் சொல்லுறேன்” என்றவன், சிறிதுநேரம் கழித்து,”பவானி!” என்று மெதுவாக அழைத்தான்.
ஏதோ யோசனையில் இருந்தவள் “ம்ம்ம்…” என்க
“பவித்ராவை நாங்க சுமையா நினைப்போம்னு நீ நினைக்கிறியா?”
இல்லை என்னும் விதமாக தலையை உறுதியாக அசைத்தவள்,” ஆனால்… ஆனால்…” என்று தடுமாறினாள்.
“ஆனால்…என்ன?”
“உங்களுக்கு ஒரு மாமியார் வீடு இருந்துருக்கலாம்ல” குரல் தழுதழுத்தது.
சட்டென்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டவன் மெதுவாக,”இருந்திருக்கலாம் தான். ஆனால் ஒரு விஷயம் நமக்கு இல்லை ன்னு நிச்சயமாத் தெரிந்த பிறகும் அதைப் பற்றியே ஏங்கி இருக்கிற சந்தோஷத்தை நாம இழந்திடக் கூடாது. நான் சொல்லவர்றது புரியுதா!” அமைதியாகக் கேட்டான்.
“புரிந்தது” என்னும் விதமாக  கண்களை மூடித்திறந்து தலையசைத்தாள் பவானி.
########
நான்கைந்து நாட்களாக கல்யாண பரபரப்பில் ஆரவாரமாக இருந்த வீடு இன்று அமைதியாக இருந்தது.
பிள்ளைகள் மூவரும் காலையில் பள்ளிக்கும், கல்லூரிக்குமாகச் சென்றிருந்தார்கள்.
திவ்யா தங்கள் திருமண பரிசாக, தன் சகோதரனுக்கு  ஊட்டியில் பிரச்திபெற்ற  ரிசார்டில் ஐந்து நாட்களுக்கான ஹனிமூன் சூட் முன்பதிவு செய்து கொடுத்திருக்க இன்று காலையிலேயே புறப்பட்டு சென்றிருந்தார்கள் புதுமணத் தம்பதியினர்.
பிள்ளைகள் இல்லா தனிமை என்னவோ செய்ய திருமண நிகழ்வுகளினால் கலைந்திருந்த வீட்டை தன்னால் முடிந்தவரை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தார் கோதைநாயகி.
மதியம் கணவனோடு அமர்ந்து உணவுண்டு, நடந்து முடிந்த தங்கள் மகனின் திருமணத்தைப் பற்றி பேசி பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து என்று கோதை நாயகியின் நாள் அன்று கழிந்தது.
இன்று ஸ்பெஷல் கிளாஸ் இருப்பதால், தான் சாயங்காலம் நேரம் சென்று தான் வருவேன் என்று நந்தினி காலையிலேயே சொல்லி விட்டுச்சென்றிருந்தாள்.
அதனால் மற்ற இருவரும் திரும்பி வரும் நேரத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தார் கோதை.
முதலில் பவித்ரா தான் வந்தாள். வந்தவள்,”அத்த! மாமா பண்ணைல நிக்காங்களா?” என்று கேட்டவாரே தனது ஸ்கூல் பேக்கை ஹாலில் இருந்த சோஃபாவில் வைத்தவள்
“ஆமாம்…” என்னும் கோதையின் பதிலைத் கேட்கும் முன்னே பின்வாசலை தாண்டியிருந்தாள். அவளுக்கு நேற்று பிறந்த கன்றுக்குட்டியைப் பார்க்கும் அவசரம்.
பண்ணைக்குச் சென்றவள் மதியழகனிடம் பேசியவாறே குட்டியை ஆசை தீர தடவிப் பார்த்து அதனுடன் விளையாட ஆரம்பித்து விட்டாள்.
சிறுவயது முதலே இந்த குடும்பத்தோடு இவளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தபடியால் பவித்ராவுக்கு இங்கு எதுவும், யாரும் புதியதாகத் தெரியவில்லை. அதனாலேயே எல்லாருடனும் இயல்பாகப் பழகமுடிந்தது அவளால்.
சிறிது நேரம் கழித்து மதியழகனிடம் சொல்லி விட்டு  அவிழ்ந்து கிடந்த தன் ஒற்றை ஜடைத் துள்ள ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி பவித்ரா வர, கல்லூரி விட்டு வந்து அல்டரிடம் நின்று கொண்டிருந்த குமரன்,
‘ ஹப்பா! இவ நடந்து வந்தாலே உருண்டு வர்றமாதிரி தான் இருக்கும், இதுல இவளுக்கு ஓட்டம் வேற’ என்று சற்று பூசினாற்போல் இருக்கும் பவித்ராவை மனதிற்குள் கிண்டலடித்துக்  கொண்டிருந்தான்.
போகும் போது கண்ணில் படாத அல்டர் அவள் திரும்பி வரும்போது குமரனின் பக்கத்தில் படுஜோராக அவனை உரசியபடியே தன்னை பார்த்து கொண்டு நிற்பதைப்  பார்த்தவளுக்கு வழக்கம்போல  குறும்பு தலைதூக்கியது.
 குனிந்து ஒரு சிறியக்கல்லை எடுத்தவள், பக்கத்தில் நிற்கும் குமரனையும் பொருட்படுத்தாமல்,”ஹாய் மிஸ்டர் டாக்!  ஒய் மொறச்சிஃபை மீ?”என்றவாறே அதை அந்த ஐந்தறிவு ஜீவன் மீது விட்டெறிந்தாள்.
அவ்வளவு தான் இருபதுகளில் இருந்த குமரனின் இளரத்தம் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் கைப்பிடியில் இருந்த அல்டரை விட்டதும் இல்லாமல் “கேட்ச் ஹர்” என்று கட்டளையும் இட்டது.
அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை நொடியில் கணித்து விட்ட பவித்ரா ‘அடப்பாவி நாயை அவுத்து விட்டுட்டானே!’ என்று பதறினாலும் நாயை முந்தி கிட்சன் வாசலை அடைந்து விடவேண்டும் என்ற குறிக்கோளோடு நான்கு கால் பாய்ச்சலில் ஓட
“ஐயோ பாவம்!  அந்த நான்கு கால் பிராணி அவளை முந்தவிடவில்லை.
அவள் அருகில் சென்று தன் முன்னங்கால்களைத் தூக்கி அவள் தோளில் போட தன்னையறியாமல் “அத்தம்மா” என்ற சத்தத்தோடு  பயத்தில் முகத்தை கைகளால் மூடியவாறே நின்ற இடத்திலேயே கால் மடக்கி அமர்ந்தாள் பவித்ரா.
எப்போதும் மனதுக்குள் தன்னை அலற விட்டுக் கொண்டிருக்கும் பெண் தனது செல்லப்பிராணியைக் கண்டு பயந்து அலறியபடி ஓடியது குமரனுக்கு ஒரு வித உற்சாகத்தை தர சிரித்தபடியே நின்றவனின் கன்னத்தில் பளாரென்ற அறை விழுந்தது.

Advertisement