Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 06.
வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க
அவள் மீது உரிமையாகக் கிடந்த கணவனின் கரங்கள் மனைவி யின் உடலில் லேசாக அழுத்தம் கொடுத்து எழும்ப விடாமல் செய்தது.
கணவனின் செயலில் நேற்றிரவு நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வர வெட்கம் அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டது பவானியின் முகத்தில்.
“ப்ச்ச்…பரணி… நேரமாகுது விடுங்க போகணும்…” சிணுங்கியது குரல்.
“போகலாமே…” என்றான் ராகமிழுத்தபடி
நேற்று இதே தொனியில் ‘பேசலாமே…’ என்று சொன்னவன் தன்னை எத்தனை மணிக்கு பேச அனுமதித்தான் என்பது ஞாபகத்திற்கு வர,
” பரணி! நேத்து நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல” என்று சிறுபிள்ளையாய் மிரட்டினாள்.
“திவ்யமா…” என்று கிண்டலாகச் சொன்னவன், கைகளால் அந்த மிரட்டிய இதழ் கிள்ளி,”கிளம்புங்க அம்மணி” என்று அனுமதி கொடுக்க
“சமத்து” என்று அவன் தலைகலைத்து, எழுந்து அறையோடு இணைந்திருந்த குளியலறை நோக்கிச் சென்றாள் பெண்.
போகும் பெண்ணையே பார்த்திருந்தவனுக்கு நேற்று இரவு தாங்கள் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்ததெல்லாம்
ஞாபகத்திற்கு வந்தது.
அதிலும் பவானி சொன்ன சில விஷயங்கள் உண்மையிலேயே சபாஷ் தான் போடவைத்தது பரணிதரனை.
வேறொன்றுமில்லை. ‘இது ஒன்றுக்கு மூன்றாக வயசு பிள்ளைகள் இருக்கும் வீடாம். அதனால் அவர்களுக்கு மத்தியில்   இருக்கும் போது அனாவசியமான காதல் பார்வைகளோ, ஜாடைப் பேச்சுகளோ இருக்கக்கூடாதாம்.’
‘நம்முடைய செயல்கள் அவங்களுக்கு நேர்மறை எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டுமேயன்றி எந்த விதமான சலனத்தையும் உண்டு பண்ணிவிடக்கூடாது’ என்று அவள் சொன்னதெல்லாம் ஒத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தபடியினால் அழகாகவே தலையசைத்திருந்தான் மனைவியின் வார்த்தைகளுக்கு.
 குளித்து முடித்தவள் பாத்ரூமிற்கு அடுத்தாற்போல் வேலைப்பாடமைந்த மரத்தடுப்பு கொண்டு அமைத்திருந்த டிரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து உடைமாற்றிக் கொண்டாள்.
மரத்திலிருந்து வந்த பெயிண்ட் வாசனை இது சமீபத்தில் ஏற்படுத்திய ஏற்பாடு தான் என்று சொல்லாமல் சொல்லியது.
தனக்காகத் தான் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறான். இந்த எண்ணமே இனித்தது.  இன்னும் காதல் பொங்கிற்று அந்த பெண்ணிற்கு தன் கணவன் மீது.
மாம்பழக்கலரில் மெரூன் கலர் மெல்லிய பார்டர் உள்ள சில்க் காட்டன் புடவை, அதற்கேற்றாற் போல் மெரூன் கலரில் கோல்டன் கலர் வட்ட வட்ட டிஸ்யூ போட்ட பிரிண்டட் ப்ளவுஸ் அணிந்து, நெற்றி வகிட்டில் கும்குமம் தீற்றி, கழுத்தில் நேற்று அவன் அணிவித்த மாங்கல்யத்தோடு எழிலோவியமாக வந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் பரணிதரன்.
மன்னவனின் பார்வை மங்கையவளை நாணத்தில் தள்ள அதை கணவனுக்கு காட்டிக்கொள்ளாமல்,” சீக்கிரம் கீழே வந்துடுங்க பரணி…அப்போ தான் டீ யேக் கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டு சென்றாள்.
நிதானமாக படியிறங்கி வந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க வீடே நிசப்தமாக இருந்தது. ஹாலில் எரிந்த மங்கிய வெளிச்சத்தின் துணை கொண்டு கிட்சன் வந்தவள் முதலில் அந்த இடத்தை வெளிச்சமாக்கினாள்.
பிரிட்ஜ்ஜைத் திறந்து பார்க்க, அங்கு பாக்கெட் பால் எதுவும் இல்லை. ‘ஓஹ்…அப்போ பசும் பால் தான் போல’ தனக்குள்ளே எண்ணிக்கொண்டாள்.
‘பால் எத்தனை மணிக்கு வருமோ தெரியலையே?’ யோசனையோடு தலைவாசல் திறந்தவள், முற்றம் பெருக்கி அருகில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து தெளித்துவிட்டாள்.
‘நேற்று நல்லா பெரிசா கோலம் போட்டுருந்ததே’ என்ற நினைவில் சுற்றிப்பார்க்க சுவரோரமாக இருந்த கோலப்பொடி டப்பா கண்ணில் பட்டது. எடுத்து  கோலம் போட்டு  நிமிர்ந்தாள்.
 மறுபடியும் உள்ளே வந்து பூஜையறையில் சாமி படங்களில் இருந்த காய்ந்த பூக்களை விலக்கி தீபமேற்றி ஒளிவடிவான அந்த இறையை வணங்கி நெற்றியில் அடையாளமிட்டுக் கொண்டு சாமி படங்களுக்கு பூ பறித்து வரலாம் என்ற எண்ணத்தில் தோட்டத்திற்கு செல்வதற்காக பின் வாசல் வர
இப்போது பின்வாசல் கதவு திறந்திருந்தது. ‘யாராயிருக்கும்?’ என்ற எண்ணத்தோடு தோட்டத்தில் இறங்கி நடக்க” வவ்…வவ்… என்ற நாயின் குரைப்பொலி குலை நடுங்கச் செய்தது பெண்ணை.
“ப்ச்ச்…அல்டர்! சும்மாயிரு. எல்லாம் நம்ம அண்ணிதான்” கேட்ட குரல் குமரனுடையது.
‘ஆனால் பேசிக்கொண்டிருப்பது யாரிடம்? நாயிடமா! அப்படியென்றால் அந்த நாய்க்கு நான் அண்ணியா! என்னங்கடா இது?’ எண்ணமிட்டபடியே 
குமரன் நின்ற பக்கம் பார்வையை ஓட்ட ஷார்ட்ஸ், டீ சர்ட், காலில் கேன்வாஸ் சகிதம் நின்றிருந்தான் பையன்.
கை நாயின் கழுத்து பட்டியை இறுகப்பற்றியிருந்தது.
ஆனால் அதுவோ புதிதாக காணும் பவானியை நோக்கி இழுத்தபடி பின்னங்கால்களில் நின்று முன்னங்காலை ஆளுயரத்திற்கு உயர்த்தி உறுமியபடியே ஈஈஈ… என்று தன் பற்களைக் காட்டி பயங்காட்டியது பவானியை.
“காம்டவுண் அல்டர்! அது நம்ம அண்ணின்னு சொல்லுறேன்ல” என்று மறுபடியும் குமரன், அவளை நாய்க்கு அண்ணியாக்க
“இந்த நாய்க்கும் நான் அண்ணியா குமரா?” என்று லேசாக கிண்டல் தொனியில் கேட்டாள் பவானி.
“அண்ணி! முதல்ல இது நாய் இல்லை ‘அல்டர்’. அப்புறம் அல்டர் என் தம்பி மாதிரி. நீங்க எனக்கு அண்ணின்னா என் தம்பிக்கும் அண்ணிதான” என்று உறவுமுறையை பற்றி பாடம் எடுத்தவனின் குரலில் இனி ஒரு முறை அல்டரை நாயென்று சொல்லி விடாதே என்ற மறைமுக செய்தியும் இருந்தது.
‘ஹையோ! புள்ளையாண்டானுக்கு நாயை நாய்னு சொன்னா புடிக்காதாமே. சமாளி பவானி, என்று அவள் மனது அவளை உஷார் படுத்த
“ஓஹ்…அல்டர் உனக்கு தம்பி மாதிரி ன்னு அண்ணிக்கு தெரியாதுல்ல குமரா, அதான் அண்ணி அப்டி சொல்லிட்டேன். இனிமேல் சொல்லமாட்டேன்.ஓகே” என்று நட்பு கரம் நீட்டினாள் அந்த வளர்ந்த சிறுவனிடம்.
நெடுநெடுவென்று வளர்ந்து நின்றாலும் ஏனோ அவளுக்கு அவனைக் காணும் போது ஒரு பிடிவாதக்கார சிறுவனைப் பார்த்தது போலவே இருந்தது.
“டன்” என்று கட்டை விரலை உயர்த்தி காட்டியவனிடம், “சாமிக்கு பூப்பறிக்க வேண்டும்” என்று தான் வந்த காரியத்தைச் சொல்ல
“இதோ இந்த பக்கம் செம்பருத்தி, செண்பகப்பூ, பவளமல்லி நிக்குது பாருங்க அண்ணி. கோதை ம்மா இதுல இருந்து தான் பறிப்பாங்க” என்று கை காட்டியவன் 
“நான் இன்னும் குளிக்கலை அண்ணி. அப்படியே தோட்டத்தை சுத்தி ஒரு ரவுண்ட் ஓடிட்டு வந்து தான் குளிப்பேன். இல்லைன்னா நானே பறிச்சு தருவேன்.” 
 
பூப்பறிக்கும் அண்ணிக்கு துணையாக நின்றவாறே சொன்னவனை நிச்சயமாக எம் ஏ பொலிடிகல் சயின்ஸ் முதல் வருடம் படிக்கிறான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.
அவளுக்கு தெரிந்த வரை குமரன் கொஞ்சம் முரடன், முன்கோபி. பள்ளி காலங்களிலேயே கூடப் பயிலும் பசங்களோடு அடிதடி என்று வம்பு வளர்த்துக் கொண்டு வருபவன். 
இப்படித் தான்  குமரன் பவானிக்கு  அறிமுகம். அதுவும் தங்கை பவித்ராவின் வாய்மொழி மூலமே. ஆனால் இதோ இந்த பாசக்கார குமரன் அவளுக்கு புதியவனே.
கைநிறைய பூக்களை பறித்து முடிக்க, பொழுதும் பலபலவென்று விடிந்திருந்தது. தோட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த பலவகையான பூக்களின் நறுமணம் பவானியின் மனதை மயக்கியிருந்தது.
அதுவும் தேன்சிட்டுகள் அப்போதுதான் விரிந்து கொண்டிருந்த மலர்களில் அவசர அவசரமாக பறந்தபடி தேனை தன் அலகால் உறிந்து கொண்டிருந்த காட்சியைக் காணக்காண தெவிட்டவில்லை அவளுக்கு.
பக்கத்து மரத்திலிருந்து கேட்ட குயிலின் குக்கூ…குக்கூ என்ற சத்தத்திற்கு பதில் குரல் கொடுக்க மனம் துள்ளினாலும், பக்கத்தில் நிற்கும் தம்பிப் பையனால் மனதிற்குள்ளேயே பதில் குரல் கொடுத்துக்கொண்டு  மெல்லிய சிரிப்போடு குமரனை நோக்கி தலையசைத்தபடியே வீட்டை நோக்கி நடந்தாள் பவானி.
மனதிற்குள் ‘குமரனுக்கு அவன் வளர்ப்பு பிராணியை பெயர் சொல்லி அழைத்தால் தான் பிடிக்கும் என்ற விஷயத்தை தங்கையிடம் சொல்லிவிட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டாள்.
ஆனால் அதைச் சொல்வதற்கான சந்தர்ப்பம் அமையவேயில்லை அவளுக்கு. அப்படியே சொல்லியிருந்தாலும் பவித்ரா அதை கேட்டு நடந்திருப்பாளா என்பதுவும் கேள்விக்குறியே?
############
நேற்றைய திருமண வேலையால் என்றுமில்லாத திருநாளாய் சற்றே அசந்து தூங்கி விட்ட கோதை நாயகி தங்கள் அறையை விட்டு பரபரப்புடன் வெளியே வர
அவர் கண்கள் கண்டது ‘துலக்கி வைத்த குத்துவிளக்கு’ போன்ற தெய்வீக அழகோடு பூஜை அறையை விட்டு வெளியே வந்த தன் மருமகளைத் தான்.
நெஞ்சம் நிறைந்து போனது அந்த பெண்மணிக்கு.
“கண்டிப்பாக இவள் எனக்கு பிறகு இந்த குடும்பத்தை தாங்குவாள்’ என்ற நம்பிக்கை விதை வேரிட்டு முளைக்க ஆரம்பித்தது மனதில்.
பூஜையறையை எட்டிப்பார்த்தபடியே,”நல்ல வேலை செய்த பவானி. நானே உன்னை காலையில் விளக்கேற்ற சொல்லவேணும் னு தான் நினைச்சிருந்தேன்” என்றபடி ஃபிரிட்ஜைத் திறந்து,”இந்த பூவை எடுத்து தலையில் வச்சிருக்கலாம்ல” என்றபடியே மல்லிகை சரத்தை எடுத்து நீட்ட
தன்னிடம் பேசுவதற்கு நேற்று மறைந்திருந்த தயக்கம் இன்று அவரிடம் தலைதூக்கியது போலத் தெரிந்தது பவானிக்கு.
யோசித்தபடியே பூவை வாங்க கைநீட்டியவளின் கையைப் பற்றிக் கொண்ட கோதை தயக்கத்தோடே,” பவானி… அன்னைக்கு நான்…” என்று தொடங்க, எதைப்பற்றி பேசப்போகிறார் என்று தெரிந்தபடியால்
“விட்டுருங்க அத்தை அதை பற்றியே பேச வேண்டாம். எல்லாத்தையும் மறந்துடலாம்” என்றாள் அவர் கையை பற்றி தடவிக்கொடுத்தபடி
” இல்லம்மா… இப்படி சொல்லறது உன் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் நான் உங்கிட்ட  மன்னிப்பு கேட்கலைன்னா என் மனசாட்சியே என்னை குத்தி குதறிடும்” கண்கலங்கியது கோதை நாயகிக்கு
உண்மையிலேயே கோதை நாயகி அந்த அளவிற்கெல்லாம்  மோசமான பெண் இல்லை.
அன்று, தன் மகனின் திருமணத்தைப் பற்றி ஒரு அன்னையாக மனதில் பெரியப்பெரிய கனவுகளைத் தான் வைத்திருக்க, மகனோ தங்கள் யாரிடமும் கலந்து கொள்ளாமல்  இதுதான் பெண் என்று சொன்ன உடன் மனதில் எழுந்த ஒருவகையான ஏமாற்ற உணர்வினாலா? 
 இல்லை மகன்களுக்கு திருமணம் என்றதும் அன்னையருக்கு மகன்கள் மீது வரும் ஒருவகையான உரிமை உணர்வாலா? 
இல்லை பவானியை தன்மகனின் அருகில் கண்டதும் அவளுக்கும் தெரிந்து தான் எல்லாம் நடக்கிறது என்று தவறாக எண்ணியதாலா, ஏதோ ஒன்று அவரை வார்த்தைகளைத் தன்னை மீறித் தவறாக விட  வைத்தது.
ஆனால் மறுநாளே பெண்கள் இருவரையும் காணவில்லை என்றதும் கோதை நாயகியின் மனதை குற்ற உணர்வு நெருஞ்சி முள்ளாய் அழுத்தியது.
 தன் வார்த்தைகள் தான் அவர்களை இந்த ஊரைவிட்டே துரத்திவிட்டு விட்டது என்று அவரால்  சொல்லவா முடியும்?
‘அப்படிச் சொல்லி ஒருவேளை தன் கணவரும் மகனும் தன்னை வெறுத்து விட்டால்?’
‘அவர்களை தேடி அலையும் என் வீட்டினர் கண்ணில் அவர்களை சீக்கிரம் காட்டி விடு’ என்று இறைவனிடம் வேண்டுவதைத் தவிர அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.
 ‘பவானியை பார்த்துட்டேன் வாங்க ப்பா’ என்று மகன் சொன்ன அன்று எல்லோருடனும் புறப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், ‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு அந்த பெண்ணை எதிர்கொள்ளுவது’ என்ற தயக்கமே அவரை ஒதுங்கி நிற்க வைத்தது. 
நேற்று தன் மகனின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரின் தயக்கத்திற்கு எல்லாம் கடிவாளம் இட்டிருந்தது.
ஆனால் இன்றோ பவானியைத் தனியாகக் காணவும் மீண்டும் சுய பட்சாதாபத்தில் தவிக்கிறார் கோதை நாயகி.
“ஷ்ஷ்ஷ்…அத்த! என்ன இது? இதுவரைக்கும்  இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. இனிமேலும் யாருக்கும் தெரியவேண்டாம். நீங்களே அழுது காமிச்சு குடுத்துடாதீங்க பிளீஸ்…” என்றாள் தெளிவாக.
“எனக்கும்  உங்க மேல கோபம் இருந்தது தான்.  ஆனால் இப்போ இல்லை. இதை நீங்க நம்பணும்” என்றவள் உறுதியான குரலில்
“என்னைக்கோ நடந்ததை இன்னும் நாம தூக்கி வச்சு சுமந்துட்டு இருந்தால் வருத்தம் தான் மிஞ்சும் அத்த. அதனால பிளீஸ்…  அதை மறந்திடுங்க” என்றவள், இன்னும் அவர் முகத்தில் தெளிவு வராததைக் கண்டு
” டீ போடலாம்னு நினைத்து  ஃபிரிட்ஜில்ல பாத்தா பால் எதுவும் இல்லை. யாரும் கொண்டு வந்து குடுப்பாங்களா? இல்லை நாம தான் போய் வாங்கிட்டு வரணுமா?” என்று அழகாக பேச்சை மாற்றினாள், அது நன்றாகவே வேலையும் செய்தது.
“தெரியாதா உனக்கு? மாமா, பின்னாடி தோட்டத்தில சின்னதா ஒரு நாட்டு பசுமாடு  பண்ணை வச்சிருக்கார். அங்க இருந்து தான் நமக்கு வீட்டுக்கும் பால் வரும். மாமா இல்லைன்னா குமரன் கொண்டு வருவான்.இதோ இப்போ வந்திரும்” சொன்னவரின் கண்களில் கணவனின் உழைப்பைக் குறித்த பெருமை இருந்தது.
” நாட்டு பசு பண்ணையா! எப்போ ஆரம்பிச்சீங்க? ஆச்சர்யம் இருந்தது பவானியின் குரலில்
” ம்ம்…அது ஆச்சு மூனு வருஷம். இப்போ பத்து பசு நிக்குது பண்ணையில” சாதாரணமாகச் சொன்னவர்
“கூடவே கொஞ்சம் நாட்டுக்கோழியும் வளக்குறோம். பொய் புரட்டு கிடையாது தொழில்ல. அதனால நம்பி வந்து வீடுதேடி வாங்கிட்டு போறாங்க மக்கள்.”
“ஓஹ்…பால் எல்லாம் நீங்களே வித்துடுறீங்களா?”
” ஆமா…முன்னாடி காய்கறி வித்தமாதிரி தான். பால் மிச்சம் வந்ததுன்னா பால்கோவா செய்து வித்துடுறாங்க. அதிலும் இந்த மனுஷரின் கை பக்குவத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்குன்னா பாத்துக்கோயேன்” லேசான வெக்கச்சிரிப்பை பூத்தது கோதையின் இதழ்கள்.

Advertisement