Advertisement

நெருங்கிய சொந்தங்களும், உயிர் நட்புகளும் புடைசூழ, குறித்த மங்கல நேரத்தில் தன் உயிரானவளை அம்மன் சன்னிதானத்தில் வைத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மங்கல நாண் அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் பரணிதரன். 
பின் சன்னிதானத்தை வலம்வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அந்த தாமரைப்பாதங்களில் மெட்டியும் அணிவித்தான் பரணி.
மெட்டி அணிவிக்கும் சம்பிரதாயத்தின் போது அவன் நண்பர்களிடையே இருந்து பறந்து வந்த விமர்சனங்கள் அந்த இடத்தையே கலகலப்பாக்கியது. 
 சென்னையில் பரணியின் ஐஏஎஸ் தேர்விற்கான பயிற்சி காலத்தில் உடன் பயின்று இப்போது வெவ்வேறு கேட்டகிரியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நான்கு நெருங்கிய நண்பர்கள் அதிகாலை முகூர்த்தத்தில் பங்கு கொண்டே ஆக வேண்டும் என்று  வந்திருந்தார்கள்.
எல்லோருக்கும் ஹோட்டலில் ரூம் ஏற்பாடு பண்ணுவதாக இவன் சொல்ல, அவர்களோ “வீட்டில் உன்னோடு தங்கவே விருப்பம்” என்று சொல்லி நேற்று சாயங்காலத்திலிருந்து பரணியோடு கலகலத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிச்சமீதி சம்பிரதாயங்களையும் கோயிலில் முடித்து விட்டு மணமக்களை  அழைத்துக் கொண்டு கிளம்பினர் அனைவரும்.
கோயிலுக்கு வரும் போது தனித்தனி வாகனத்தில் வந்த மணமக்கள் இப்போது ஒரே வாகனத்தில் அருகருகே தோளுரச அமர்ந்து தங்கள் வாழ்க்கை பயணத்தை இனிதே தொடங்கினர்.
சரியாக பரணிதரனின் வீட்டு வாசலில் மணமக்கள் வந்து இறங்கும் போது ஆதவன் தன் துயில் கலைத்து மெதுவே எட்டிப்பார்த்தான் இந்த இளம் ஜோடிகளை. 
வீட்டு வாசலில் வாழைமரத் தோரணம் கட்டி, வீட்டின் முன்னால் கிடந்த இடத்தில் அடைக்க பந்தல் போட்டு சீரியல் பல்ப் கொண்டு அலங்கரித்து என்று கல்யாணக்களை நிரம்பி வழிந்தது வீட்டில். 
மணமக்களை முன்வாசலில் நிறுத்தி திவ்யாவும், நந்தினியும் ஆரத்தி எடுத்து தங்கள் சகோதரனின் மனையாளை கைபிடித்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல, பெண்ணவளின் கைகளோ தன் தங்கையின் கையை இருக்கப் பற்றியபடி தன்னுடன் உள்ளே அழைத்துச் சென்றது. அப்போது அந்த மதிமுகம் கொஞ்சம் கலக்கத்தை தத்தெடுத்தாற் போன்று இருந்ததோ?
வீட்டினுள் சென்ற இருவரும் தம்பதி சகிதமாக பரணிதரனின் பெற்றோர் பாதம் பணிந்து எழும்பினர்.
“அப்படியே பவானியோட பெத்தவங்க கிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கிக்கோங்கப்பா” கோதை நாயகியின் குரலில் திகைத்தவள் அவரின்  நீட்டிய கையை பின்பற்றி பார்க்க, ஹாலில் ஒருபக்கச் சுவரில் அழகான சட்டத்திற்குள் புகைப்படமாகச் சிரித்தார்கள் பவானியின் பெற்றோர்கள்.
அது பெண்கள் இருவரும் தங்களுடனே வைத்திருக்கும் பெற்றோரின் புகைப்படம். என்ன, அவர்களிடம் இருப்பது அளவில் சிறியது.
 ‘ஆனால் அது எப்படி இங்கே?’ அருகில் நின்ற தங்கையைத் திருப்பிப் பார்க்க, அவளோ பரணிதரனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.
சின்னவளின் செயலேச் சொன்னது இது தன் பக்கத்தில் நிற்பவன் செய்த காரியம் தான் என்று. 
‘ஆனால் அவனின் பெற்றோரின் முழுசம்மதம் இல்லாமல் இந்தச் செயல் சாத்தியமில்லையே?’ 
“ம்ம்…போங்க பவானி” என்று கோதை நாயகி மீண்டும் சொல்ல, தன் தயக்கம் அத்தனையும் உதறித்தள்ளியவள்,
“அத்த…” என்று வேகமாக அவரை நெருங்கி கட்டிக் கொண்டு விம்மினாள்.
“ஷ்ஷ்ஷ்… சும்மா கண்ண கசக்கி கிட்டு நிக்காமல் போய் ஆசிர்வாதம் வாங்குற வழியப் பாரு” என்று வாய் அதட்டினாலும் கை அவள் முதுகு தடவி அவளை ஆசுவாசப்படுத்தியது.
பார்வையாளர்களாக நின்ற சொந்தங்கள் கூட நடக்கும் நிகழ்வின் கனம் தாளாமல் நெக்குரிகிப் போய் நின்றார்கள். 
இதழில் சிறு முறுவலோடு தன் அன்னையிடமிருந்து தன்னவளை மெதுவாக பிரித்த பரணிதரன்,”வா…” என்று பவானியைக் கைபிடித்து அழைத்து சென்றான் அவளின் பெற்றோரின் புகைப்படம் அருகே. அழகான ரோஜாப்பூ மாலைக்குப் பின்னே வாடாத சிரிப்போடு இருந்தார்கள் வாசுதேவனும் சிந்தாமணியும்.
அருகில் வந்து தன் பெற்றோரின் புகைப்படத்துக்கு முன்னால் கணவனுடன் விழுந்து வணங்கியவளின் நெஞ்செல்லாம் நிறைந்து போயிற்று. 
அந்த நிமிடம் கோதை நாயகியைப் பற்றிய தவறான பிம்பம் அவள் மனதில் மறைந்து போய் சட்சட் என்று அவள் மனதின் உச்சாணிக் கொம்பில்  ஏறி உட்கார்ந்து கொண்டார் கோதை நாயகி.
பின் திவ்யாவின் வழிகாட்டுதலில் பூஜை அறைக்குச் சென்று தீபமேற்றி வழிபட்டபோதாகட்டும், தம்பதியர் அருகருகே அமர்ந்து பாலும் பழமும் உண்ணும் போதாகட்டும், தன் கணவனுக்கு அருகே நின்று திருமணத்திற்கு வந்தவர்களிடம் அன்பொழுக பேசிய பொழுதாகட்டும், இடைப்பட்ட நேரத்தில் கணவனின் ஆவலான பேச்சுக்குப் பதில் கொடுத்தபோதாகட்டும்…
இப்படி எல்லா நேரத்திலும் பூரணசந்திரனின் தன்னொளி வீசிற்று அந்த முகத்தில்.
மதிய விருந்து முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, பவானியின் தோழியும் குடும்பத்தோடு அனைவரும் தங்கள் வீட்டுக்கு வரவேண்டும் என்ற விண்ணப்பத்தோடு விடைபெற்று சென்றிருந்தாள்.
அதன் பிறகு கிடைத்த இடைவெளியில் திவ்யா ஒரு அறையில் பவானியை சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்க சொல்லி விட்டு விட்டு வந்தாள்.
‘தூக்கமா? வருமா?’ என்று சந்தேகத்தோடு மெத்தையில் சாய்ந்தவள்  திவ்யா வந்து எழுப்பிய பின் தான் எழும்பவே செய்தாள்.
நேரம் ஆக ஆக விருந்தினர் வருகை குறைந்து வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்தனர்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இரவு உணவை உண்டு கலைய, பதட்டம் தொற்றிக்கொண்டது பவானியிடம்.  
அவள் பதட்டம் புரிந்து மிக இயல்பாக பெண்ணவளை அலங்கரித்து மாடியில் தம்பியின் அறைமுன் கொண்டு விட்டு வந்தாள் திவ்யா.
லேசாக சாத்திவைக்கப்பட்டிருந்த கதவை திறந்து கொண்டு ரூமிற்குள் நுழைந்த பவானி திரும்பி நின்று கதவின் மேல்பக்க தாழ்பாள் போட்டு, கையை இறக்காமலே அதே நிலையில் கதவின் மீது சாய்ந்து ரவிவர்மனின் ஓவியமாய்  நிற்க, 
பெண்ணவளின்  வருகைக்காக ஏற்கனவே அறையில் காத்து கொண்டிருந்த பரணிதரன் மெதுவாக நடந்து வந்து பின்னிருந்து அவள்  இடை அணைத்தபடி,”என்ன அப்படியே லாக்கை ஓப்பன் பண்ணிட்டு வெளியே ஓடிடலாமான்னு ஐடியா பண்ணுறியா” என்றான் சரசமாக
“அப்படி ஒரு ஆப்ஷன் இருந்தா நல்லா தான் இருக்கும்” முணுமுணுத்தாள் பெண்.
“ஆஹாங்… அதுக்கு தான் கட்டம் கட்டி பொண்ண தூக்குனமா நாங்க?”
அவன் கைகளினூடே டக்கென்று திரும்பியவள்”என்னது…
கட்டம் கட்டி தூக்குனீங்ளா? ஹையோ! உங்களைப் போய் ஹீரோன்னு நம்பிட்டேனே ஆஃபீஸர்”
அவன் வார்த்தைக்கு பதிலடி குடுக்கும் வேகத்தில் அவன் முகம் பார்த்து திரும்பிய பெண்ணின் நிலை இப்போது தர்மசங்கடத்தில்…
“நான் ஹீரோவா, வில்லனான்னு நீங்களே பிறகு சொல்லுங்க அம்மணி, இப்போது முதன்முதல்லில் நம் சாம்ராஜ்யத்தில் நுழைந்திருக்கும் என் மகாராணியாருக்கு வந்தனங்கள்” என்றபடி ஒருமுறை  தன்னோடு சேர்த்தணைத்து விடுவித்தவன், அவளின் கரம்பற்றி அந்த அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றான்.
நடை துவள கண்களில் காதல் மயக்கத்தோடு மன்னவன் அடியொற்றி நடந்தவளை பால்கனியில் நிறுத்தி அவள் தோள் வளையில் முகம் புதைத்தவன், நிலம் பார்த்திருந்த அவள் முகத்தை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தி,”அங்க பாரு நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங் ஸ்பார்ட்டை” என கைநீட்ட
சட்டென்று பெண்ணவளின் விழிகள் அந்த மஞ்சள் சரக்கொன்றை நின்ற திக்கை நிமிர்ந்து பார்த்தது.
திருமணத்திற்காக வீட்டை சுற்றி போடப்பட்டிருந்த அதிகப்படியான மின்னொளியின் காரணமாகவும்  அலங்காரத்திற்காக மரத்தின் மீது போடப்பட்டிருந்த சீரியல் பல்ப் ன் உபயத்தாலும் அவளின் மனம் கவர்ந்த மஞ்சள் சரக்கொன்றை, மரம்கொள்ளா பூவோடு இந்த பூவையின் மனம் கொய்தபடி காற்றின் தாலாட்டுக்கேற்ப தலையசைத்தபடி நின்றிருந்தது, அந்த இருட்டிலும் பளிச்சென்று தெரிந்தது.
“எப்படி இருக்கு?” என்று அவள் காதுகளில் தன் இதழுரச கேட்டவனுக்கு பதிலாக, கண்ட காட்சியில் வசமிழந்து போய் நின்றிருந்தவள், பக்கவாட்டில் லேசாக சாய்ந்து அவன் கன்னத்தில் தன் இதழை பட்டும் படாமலும் ஒற்றியெடுத்து, “ரொம்ம்ம்ப…. நல்லாருக்கு” என்று ரசித்து சொல்ல
அந்த ஒற்றை முத்தத்தில் காதல் தீ பற்றியெரிய தன் காதல் மனையாட்டியை அலேக்காக தன் இருகைகளிலும் தூக்கிக்கொண்டு ரூமிற்குள் நுழைந்து பால்கனி கதவை சாத்தியவன்,”பகல்ல இதைவிட தெளிவா பாக்கலாம். இப்போ…” என்று அவள் காதுகளில் மெல்லிய குரலில் முணுமுணுத்தவனின் வார்த்தைகளில் மொத்த இரத்தமும் முகத்திற்கு வந்தது பெண்ணிற்கு.
“இல்ல்ல… கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமே…” தத்தளித்தது வார்த்தைகள் அந்த தத்தைக்கு.
“இருக்கலாமே… ஆனால் இப்ப இல்ல” 
தன் நெஞ்சணையில் பெண்ணவளைத் தாங்கி பஞ்சணையில் அவன் சாய, மொத்த பதட்டத்தையும் குத்தகை எடுத்துக்கொண்டது பெண்.
“இல்ல…” என்று மறுபடியும் ஏதோ தொடங்க, அந்த நடுங்கிய உதடுகளை சிறைசெய்து தன் காதல் பாடத்தில் அவன் வெற்றிகரமாக முதலடி எடுத்து வைக்க அதன்பிறகு அங்கே காதல் காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடத்தொடங்கியது.
 

Advertisement