Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 05
அன்றோடு பெண்கள் இருவரும் இரவிபுரத்துக்கு வந்து சேர்ந்து இருபது நாட்கள் ஆகியிருந்தது. மாப்பிள்ளையின் அவசரத்திற்கு ஏற்றாற்போல் மணநாள் அமையாததால் நாளை தான் திருமணம்.
பரணிதரனின் குடும்ப கோயிலில் வைத்து திருமணம் அதன் பிறகு வீட்டில் வைத்து விருந்துபசாரம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. 
வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தங்களுக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்தாள் பவானி. முகம் முன்பு எப்போதையும் விட இப்போது அதிக பொலிவைக் காட்டியது. அதை கல்யாணக்களை என்று சொன்னார் ஜெயராமின் அம்மா சீதாலட்சுமி. 
இதழ்களில் இளநகைத் தவழ பவானியின் கண்கள்  வீட்டை சுற்றிப் பார்த்தது. திருமணத்திற்காகப் பெண் வீடாகவே மாறி தோரணங்கள் கட்டி தன்னை அலங்கரித்துக்  கொண்டு நின்றது ஜெயராமின் வீடு. மனது நெகிழ்ந்து போனது பவானிக்கு.
அன்று ‘ கல்யாணம் வரைக்கும் இங்கேயே இருக்கிறோம்’ என்ற பவானியின் வார்த்தைக்கு பின்னே, திருமணத்திற்கு முன் பரணிதரனின் வீட்டுக்கு செல்ல அவளுக்கு இருந்த தயக்கத்தை சட்டென்று இனம் கண்டு கொண்ட ஜெயராம்
“தங்கைகள் இருவரும் திருமணம் வரை எங்கள் வீட்டில் இருக்கட்டும்” என்று சொல்ல, மகிழ்வோடு ஒத்துக்கொண்டு  அப்பாவும் பிள்ளையும் ஜெயராம் வீடு வந்து அவர் பெற்றோரிடம் முறையாக விஷயம் சொல்லி இருவரையும் விட்டுச் சென்றனர்.
சும்மா சொல்லக்கூடாது, அடைக்கலமாக வந்த பெண்களிடம் உண்மையான அன்பையேக் காட்டினர் ஜெயராமின் பெற்றோர்.
அதிலும் சீதாலட்சுமி அம்மா சொல்லவே வேண்டாம். பாசத்தின் திருவுருவாகவே இருந்தார். முதலில் கொஞ்சம் தயக்கத்தோடு இருந்த பவானி கூட அவர்களின் உண்மையான அன்பில் இயல்பாக அந்த வீட்டில் தன்னை பொருத்திக் கொண்டாள். 
‘எவ்வளவு அருமையான பெண்மணி இவர்! யாரென்றே தெரியாத தங்களை தன் மருமகளுக்கு உறவாகப் போகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சொந்தப் பெண்களாகவேத் தாங்குகிறாரே! இதற்கு எவ்வளவு பெரிய மனது வேண்டும்’ என்று அடிக்கடி நினைத்திருக்கிறாள் பவானி.
அதிலும் திவ்யாவிற்கும், சீதாலட்சுமி அம்மாவிற்கும் இடையே இருக்கும் உறவைக் கண்டு அசந்து தான் போயிருந்தாள் பவானி.
சொந்தம், பந்தம் எதுவுமில்லாமல் தனித்தீவாக வளர்ந்திருந்த பெண்ணிற்கு, மாமியார் மருமகள் உறவைப் பற்றி செய்தித்தாள்களில் படித்ததையும், கேட்டதையும் வைத்து ஒருவிதமான அனுமானம் இருக்க, அதற்கு நேர்மாறாக இருந்தது இங்கு மாமியார் மருமகள் கூட்டணி. 
அவர்களுக்கிடையே இருந்த அன்பு, அன்யோன்யம், புரிதல், விட்டுக்கொடுத்தல் எல்லாவற்றையும் பார்க்கும் போது
‘தன்னால் பரணிதரனின் அம்மாவுடன் திவ்யாவைப்போல பொருந்தி போக முடியுமா?’ என்ற கேள்வி அடிக்கடி பவானியின் உள்ளத்தில் எழுந்தது.
அதற்கேற்றாற் போல் தான் இருந்தது கோதை நாயகியின் செயலும். 
பெண்கள் இருவரும் இரவிபுரத்துக்கு வந்த அன்று சாயங்காலம் தன்மகள் வீட்டிற்கு தன் வருங்கால மருமகளைக் காண வந்த கோதை நாயகியின் கண்களில் ஏதோ ஒரு பதட்டம் இருந்ததாகவேத் தோன்றியது பெண்ணிற்கு. 
பெரிதாக ஏதும் பவானியிடம் பேச முயற்சிக்கவில்லை கோதை. தன்னிடம் அவர் பேச்சை தவிர்ப்பதாகவே தோன்றியது பவானிக்கு.
அதேசமயம் அவர் பவித்ராவிடம் காட்டிய வாஞ்சையில் உண்மையான பாசம் வழிந்ததைக் கண்டுகொள்ள முடிந்தது பெண்ணால்.
அதன்பிறகு இன்று வரை பவானியின் கண்களில் படவில்லை அவளின் வருங்கால மாமியார். ஆனால்
அவர் செய்து குடுத்து விட்ட பதார்த்தங்கள் மட்டும் அடிக்கடி  வீட்டில் நடமாடியது நந்தினியின் மூலம்…
அந்த நாட்களில் எல்லாம் திவ்யா நந்தினியோடு சேர்ந்து பண்ணும் கிண்டல் சொல்லி மாளாது.
“மாமியாருக்கு மருமகள் மீது அதீத பாசமாம். அதனால் தான் இப்படி பண்ட பதார்த்தங்கள் ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டே இருக்கிறதாம்” இப்படி ஆரம்பித்து,”நானும்  இதே வீட்டுல தான் இத்தனை வருஷம் இருந்திருக்கிறேன், ஒருநாள், ஒருபொழுது இப்படி வந்ததுருக்கா?” என்று போலியாக கண்ணீர் வடிப்பாள். 
‘ஆமாம்… உங்கள் அம்மாவிற்கு என் மீது இருக்கும் பாசத்தின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளவே வேண்டாம் அண்ணி’ என்று மௌனமாக எண்ணிக்கொள்ளும் பவானியின் மனது.
ஆனாலும் மெல்லிய சிரிப்போடு கடந்து செல்வாள் அந்த கேலிகளையும் கிண்டல்களையும். 
 அங்கிருந்தே பவானி வேலைக்கும்,  பவித்ரா பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
குமரன் மூலம் அவளின் ஸ்கூட்டி அன்றே வந்து சேர்ந்திருந்ததால் அவள் தன்னுடைய வாகனத்தில் வேலைக்கு செல்ல முயல…
சீதாலட்சுமி அம்மா “கல்யாணம் வரைக்கும் பொண்ணு தனியாக எங்கும் செல்லக்கூடாது” என்று சொல்ல, ஜெயராம் வீட்டின் இன்னொரு கார், பவானி, பவித்ரா, சந்தோஷ் மூவரையும் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் சேர்ந்தார் போல் சுமந்து சென்றது. 
தனது டிரைவர் வேலு மூலம் ரொம்பவும் நம்பிக்கையான ஒரு டிரைவரை  அவர்களை கொண்டு விட்டு, அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தான் பரணி. 
இந்த இருபது நாளில் தன் வாழ்வின் ஓட்டமே வேறாகிப் போனதை நினைத்து சிரிப்பு தான் வந்தது பவானிக்கு. ஆனால் இந்த மாற்றமும் பெண்ணிற்கு பிடித்துதானிருந்தது. 
புன்னகை முகத்தோடு கிட்சன் வந்தவளை அங்கு நின்ற திவ்யா,”வாங்க கல்யாணப் பொண்ணு, தூக்கமே வரலையோ?” என்று கிண்டலடித்தவாறே  
“டீ மட்டும் வச்சிடுறியா பவானி?” என்றவள், “ம்ஹும்… இனி  உங்கையால டீ குடிக்கணும்னா எங்க வீட்டுக்கு தான் வரணும்”  என்று போலியாக பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
நாணத்தோடு மெலிதாக சிரித்த பவானி, “ஏன் அண்ணி இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க? நான் இன்னைக்கு லீவ் தானே நீங்க மெதுவாகவே எழுந்து இருக்கலாம்ல” என்று சொல்லியவாறே அடுப்பில் பாலை ஏற்றினாள்.
” ஆமா… விடிஞ்சா கல்யாணம், தலைக்கு மேல வேலையை வச்சிட்டு என்னையும் இதோ பக்கத்து ரூமில் கமந்தடிச்சு தூங்குதுங்களே அதுகளைப் போல தூங்க சொல்லுறியா நீ…” 
திவ்யா சொன்ன பக்கத்து ரூமில் பவித்ரா, நந்தினி, கூடவே சந்தோஷ் மூவரும் ஒரே கட்டிலில் நல்ல நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள்.
தன் தோழி இங்கு வந்த பிறகு அவ்வப்போது தன்னுடைய ஜாகையை அக்கா வீட்டில் போட்டுக் கொள்கிறாள் நந்தினி. அவர்களுக்கு வால் பிடித்துக்கொண்டே அலைகிறான் சந்தோஷ்.
“ஏன் பவானி! கல்யாணப் பொண்ணு நீயே இன்னைக்கு தான் லீவ் எடுத்திருக்க, இந்த பொடிசுங்க நாளைக்கு லீவ் போட்டா போதாது?”
“சொல்லிப் பாருங்க அண்ணி, அவ்வளவு தான். மூனு பேரும் சேர்ந்து நம்ம காதிலே இரத்தம் வரவச்சிடுவாங்க” வாய் பேச கை அதன் போக்கில் டீயை தயாரிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தது பவானிக்கு. 
இப்போதெல்லாம் பவானி தன் கூட்டை விட்டு கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்து இருக்கிறாள்.
தங்களுக்கு தானே பார்த்து பார்த்து செய்து கொண்டது போய், தங்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்யும் இந்த உறவுகளின் அன்பு பெண்ணவளை மௌனக் கூட்டை உடைத்து வெளியேவரச் செய்திருந்தது. 
கூடவே இந்த அன்பிற்காக எத்தனை சிலுவையும் தான் சுமக்கலாம் என்ற எண்ணத்தையும் கொண்டு வந்திருந்தது.
புத்தருக்கு ஒரு போதிமரத்தடி போல பவானிக்கு திவ்யாவின் புகுந்த வீடு மனதிற்குள் பல மாறுதல்களை கொண்டு வந்திருந்தது.
நேரம் ஆக ஆக கல்யாண பரபரப்பு அழகாகவே தொற்றிக் கொண்டது வீட்டில்.
 ஜெயராமும் அவன் தந்தையும் முக்கிய வேலையாக வெளியே சென்றிருந்தார்கள்
நாளைக்கான மேக்கப் முன்னேற்பாடு எதுவுமின்றி கல்யாணப் பெண்ணே சும்மா இருக்க, இளைய பெண்பிள்ளைகள்  இருவரின்  முன்னேற்பாட்டிலும் களைகட்டியது வீடு.
அதைச் சொல்லி கிண்டலடித்த திவ்யாவிடம்,” மொத்த பியூட்டியையும் இந்த ஒத்த பியூட்டியே அள்ளிட்டு வந்தால் நாங்கெல்லாம் மேக்கப் போட்டால்தான் உண்டு” என்று பவானியின் இருபக்கத்திலும் நின்று அவளை அணைத்தபடி சிரித்தன அந்த சிட்டுக்கள். 
பவானியை மதிய உணவு விரைவாகவே உண்ண வைத்து அரைத்த மருதாணி விழுதை இருகைளிலும்,  கால்களிலும் அழகாக வைத்துவிட்டாள் திவ்யா.
வாயோ தன் தம்பிக்கு “இப்படி மருதாணியை அரைத்து வைத்தால் ரொம்ப பிடிக்கும்” என்று ஓயாது சொல்லிக்கொண்டது. 
 திவ்யாவின் கைங்கரியத்தால் பவானியின் பத்து விரல்களும் மருதாணி கிரீடம் சுமந்திருக்க, உள்ளங்கைகளிலோ குட்டி குட்டி நிலவுகள் பூத்துக்கிடந்தன.
ஏதேதோ இனிமையான எண்ணங்கள் வட்டமிட லேசாக செயரில் சாய்ந்து கண்களை மூடினாள் பவானி. மூடிய கண்களுக்குள் அழகாக வந்து கண்சிமிட்டினான் பரணிதரன்.
ஒரு நாலு மணி வாக்கில் எழும்பி காய்ந்து போன மருதாணியை உதிர்த்து கைகளையும் கால்களையும் நன்றாக கழுவி எண்ணெயிட்டபடியே நின்றவளின் காதில்
“அக்கா… அக்கா…” என்னும் பரணிதரனின் அழுத்தமான  குரல் கேட்க பரபரப்பானது மனது. கண்கள் தன்னிச்சையாக பக்கத்தில் இருந்த கண்ணாடியில் முகம் பார்க்க கைகள் அவசரமாகத் தன்னை திருத்திக்கொண்டது.
திவ்யாவின் பதில் குரலுக்காக காத்திருந்தவள் அது வரவில்லை என்ற உடன் வேறுவழியில்லாமல் ரூமை விட்டு வெளியே வந்தாள்.
தயங்கித் தயங்கி ஹாலை நோக்கி வந்தவளைக் கண்டவன்,”ஹால்ல யாருமில்லாமல் இப்படித் தான் தலைவாசலைத் திறந்து போட்டுட்டு ரூமுக்குள்ள இருப்பீங்களா?” என்று கடுமையான குரலில் எடுத்த எடுப்பிலேயே கேட்க…
என்ன சொல்வாள் பெண்? அதிலும் அவனின் பெரிய குரலிலேயே கதிகலங்கி போனவளிடமிருந்து என்ன பதில் வந்துவிடும்?
நல்ல காலம் இக்கட்டிலிருந்து காப்பாற்றுபவள் போல வந்த திவ்யா,” டேய்! டேய்! நான் இவ்வளவு நேரமும் இங்க தான் டா இருந்தேன். இப்பதான் ஒரு சின்ன வேலையா பின்னாடி போனேன். அதுக்கிடையில் நீ வந்துட்ட” என்று சொல்லிக்கொண்டே தம்பியை தள்ளிக்கொண்டு போய் சோஃபாவில் அமர்த்தி
பவானி யிடம் திரும்பியவள்,”பரணிக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர்றியா பவானி” என்று சொல்லி முடிக்கும் முன்னே “டீ” என்றான் நாளைய மணமகன். 
“ஓஹ்… நீயும் எங்க திவ்யா வின் டீ க்கு ரசிகனா?” சிரித்தவள்,”அப்புறம் நீ என்னடா இந்நேரத்தில இங்க?” என்ற தமக்கையிடம் 
மறுநாள் காலையில் கோயிலுக்கு எத்தனை மணிக்கு எப்படி கிளம்பவேண்டும் என்ற விபரங்களை பற்றி  தெளிவாக கூறிவிட்டு,”அப்போ நான் கிளம்புறேன் க்கா” என்றவனிடம் 
“டீ சொல்லிட்டு குடிக்காம கிளம்புற. இருந்து குடிச்சிட்டே போ. இதோ நான் கொஞ்சம் மாமா கிட்ட பேசிட்டு வரேன்” என்று கையிலிருந்த ஃபோனைக்காட்டிக் கொண்டு  எழுந்தவள்
 எதிரே வந்த பவானியிடம் “டீயை குடுத்துட்டு உடனே ஓடிவந்துடாத” என்று மெல்லிய சிரிப்போடு சொல்லியேச் சென்றாள்.
ஹாலில் திவ்யா இருக்கிறாள் என்ற தைரியத்தில் வந்த பெண்ணுக்கு இப்போது அவள் இல்லை என்றதும் கால்கள் பின்ன ஒரு தயக்கத்துடனே நடந்து சென்று டீக்கப்பை அவன் முன் நீட்ட, அந்த செங்காந்தள் விரல்களில் ஏறியிருந்த மருதாணி சிவப்பு அவன் சிந்தையை கொள்ளையடித்தது.
நீட்டிய வளைகரத்தை தன் வலக்கரத்தால் பிடித்து அதில் இருந்த டீ க்கோப்பையை தன் இடக்கரத்துக்கு மாற்றியவன் பெண்ணவளின் கையை தன் முகத்தின் மீது வைத்து மருதாணி யின் பச்சைவாசனையை தன் கண்களை மூடியவாரே ஆழ்ந்து உள்ளிழுக்க
அப்போது உள்ளங்கையில் உரசிய அவன் உதடுகள் லேசாக குவிந்து உரிமையுடன் முத்தமும் இட்டன.
அவனுள் இப்படி ஒரு காதல்மன்னனை எதிர்பார்க்காத பவானி திகைத்து,”ஹையோ…பரணி! எ… என்ன பண்ணுறீங்க! யாராவது வந்துடப் போறாங்க, விடுங்க என்று தன் கையை பின்னிழுத்தவாரே முரண்டினாள்.
நடந்த காரியம் பொய்யோ என்னும் விதத்தில் டக்கென்று அவள் கரத்தை விடுத்தவன்  கடகடவென்று கையிலிருந்த டீயைக் குடித்து முடித்தான். 
காலி கப்பை பவானியின் கையில் கொடுத்தவாரே,”நாளைக்கு கோயில்ல நம்பி காந்திருக்கலாம்ல” என்று  கேட்டு அவள் முகம் பார்க்க
அந்த மதிமுகம் கலங்கியதைக் காணசகியாமல்,”சாரி…”என்று குரலடைக்கச் சொன்னவன் அவள் விரல் பற்றி அழுத்தி விட்டு விடுவிடுவென்று வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் பெற்றோருடன் வந்த தோழி மாலதியின் வரவு பரணியின் வார்த்தைகளால் பெண்ணவள் தொலைத்திருந்த உற்சாகத்தை மீட்டெடுக்க அதன்பிறகு அங்கு கலகலப்பிற்கு பஞ்சமில்லை.
#################
 கண்களில் கருணை பொங்க வீற்றிருக்கும்  ஆதிசக்தி சன்னிதானத்தில் கூப்பிய கரங்களோடு தோள்களில் மணமாலை வழிய, அருகருகே நின்றிருந்தார்கள் மணமக்கள் இருவரும். 
கிளிப் பச்சை கலரில் அடர் பிங்க் பார்டர் சாமுத்ரிகா பட்டு உடுத்தி, தலைநிறைய பூச்சூடி, கண்ணை உறுத்தாத எளிய அலங்காரத்தில் எழிலுருவாக நின்றாள் பவானி.
ஆண்மையின் இலக்கணமாய் பட்டு வேஷ்டி, ஆஃப் வயிட் கலரில் பட்டு சட்டை அணிந்து தோள்களில் பட்டு அங்கவஸ்திரத்தோடு  பவானிக்கு ஏற்ற ஜோடி நான் தான் என்று தோள் நிமிர்த்தி நின்றான் பரணிதரன்.
பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை மணமக்களின் ஜோடிப் பொருத்தம்.
இருள் பிரியாத அதிகாலை நேர முகூர்த்தத்தில் திருமணமாதலால் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் பளிச்சிட்டது.
திருமணத்திற்காக கர்பகிரகத்திலிருந்த அம்பாள் விசேஷ அலங்காரத்தில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்தாள்

Advertisement