Advertisement

‘மூன்று வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன்’ என்ற அவனின் வார்த்தையில்  சரணடைந்தது அந்த பெண்மை.

கண்டிப்பாக தான் ஒருபதிலைச் சொல்லாவிட்டால் அவன்‌ மனம் சமாதானம் அடையாது எனப் புரிந்து கொண்டவள்,
தயங்கியபடியே,”எனக்கு… எனக்கு… நான் கல்யாணம்  பண்ணிக்கிட்டா பவித்ராவோட நிலை என்னன்னு ஒரே குழப்பமா இருந்தது. அதனாலத் தான் நான் கல்யாணமே வேணாம்னு ஃபிரெண்ட் ஊருக்கு போய்ட்டேன்.”  தவறை தன் மீதே போட்டுக்கொண்டாள்.

‘நல்லதுக்காக சொல்லுற பொய்கூட ஒருவகையில் உண்மைதான்னு நம்ம வள்ளுவரேச் சொல்லுறாரு’ தன்னைத்தானே சமாதானப்படுத்தியும் கொண்டாள்.

‘இதோ இப்போது வரையில் தன்னால் தான் பவானி ஊரைவிட்டே சென்று விட்டாள்’ என்றே  நினைத்துக்கொண்டிருக்கிறான் பரணீதரன். 

‘வேலை கிடைத்ததால்  போகிறேன்’ என்று அவள்  குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களிடம் சொல்லிச் சென்ற காரணத்தை அவன் என்றுமே நம்பியது இல்லை.

ஆனால் ‘தன் திருமணத்திற்குப் பின் தங்கையின் நிலை என்ன என்ற குழப்பத்தில் சென்றேன்’ என்ற அவளின் வார்த்தைகள்,’அத்தனை வருட பழக்கத்தில் தங்கள் குடும்பத்தின் மீது அவளுக்கு எப்படி நம்பிக்கை இல்லாமல்  போகலாம்’ என்ற கோபத்தையே அவனுக்கு உண்டாக்கியது.

அந்த கோபம்  வார்த்தைகளாக வெடித்து சிதற தயாராக இருக்கும் போது படுக்கையறைக் கதவு திறக்கும் சப்தம் கேட்டது.

இவ்வளவு நேரமும் படுக்கையறைச்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்த பவானி சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

வழக்கமான நேரம் தாண்டியும் அக்கா எழுப்பவில்லை என்றதும் தானே எழுந்து கதவை திறந்து கொண்டு  “அக்கா!” என்ற அழைப்போடு வெளியே வந்த பவித்ரா முதலில் கண்டது ஹாலில் நடுநாயகமாக உட்கார்ந்து இருந்த பரணீதரனைத் தான்.

தான் கண்டது  உண்மைதானா என்று  கண்களை மூடி திறந்து பார்த்தவள் “பரணிமாமா!” என்று சற்றும் யோசிக்காமல் அழைத்திருந்தாள்.

சற்றும் யோசிக்காமல் அழைத்த அதுவும் ஒருநேரம் ஒருபொழுதே தான் சொல்லிக்கொடுத்திருந்த ‘மாமா’ என்ற வார்த்தையும் சேர்த்து  அழைத்த அந்த சிறுபெண்ணின் செயல் புண்பட்டுக்கிடந்த அவன் மனதிற்கு மருந்திட்டது போல் இருந்தது.

“பார், உன்னால் ஏற்பட்ட காயத்திற்கு உன் தங்கை வார்த்தையால் மருந்து பூசுகிறாள் பார்” என்று பவானியை நோக்கி உயர்ந்த அவன் பார்வை சொல்லாமல் சொல்லியது.

முகம் முழுவதும் புன்னகையைப்  பூசிக் கொண்டு  இயல்பாக அவன் அருகில் வந்து நலம் விசாரித்த பவித்ரா,”நேற்று தான் உங்க எல்லாரையும் பற்றி அக்கா கிட்ட பேசிட்டு இருந்தேன். இன்னைக்கு நீங்களே வந்திட்டீங்க. வாட் அ கோஇன்சிடன்ட் இல்ல” என்றவள் கூடவே,

“நந்துவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல மாமா” என்று கேட்க

இவ்வளவு நேரமும் சிறுமுறுவலுடன் அவளின் பரபரப்பை ரசித்து கொண்டிருந்தவன் வாஞ்சையாக அவள் கைபற்றி அருகிலிருந்த இன்னொரு செயரில் உட்காரவைத்து,”நந்துவைக் கிளம்பி வரச்சொல்லுவோம் டா” என்றான்.

“இப்பவா மாமா!”

“ம்ம்…”

“ஹை சூப்பர்!” என்று மலர்ந்து சிரித்தவளிடம்

“பவி! நீ நந்து கூடவே இரவிபுரத்துல நம்ம வீட்டுலயே இருக்குறியா?” என்று மெதுவாகக் கேட்டான்.

“உங்க வீட்டிலேயே பெர்மனென்டாவா?” அவன் கேள்வியை தெளிவு படுத்திக்கொள்ள விழைந்தாள் சின்னவள்.

“ம்ம்ம்… ஆனால்  அது நம்ம வீடு” திருத்தினான் வார்த்தையை

ஒருநிமிடம் யோசித்தவள்,”அக்கா வந்தா நானும் வர்றேன்” என்றாள்.

“அதெல்லாம் உங்க அக்கா வருவா” 

‘அப்படியா!’ என்பது போல் அக்காவை நிமிர்ந்து பார்த்தவள்,”போவோமா க்கா” என்று கேட்க

பரணிதரனின் ஒரு ஜோடி கண்கள்  ‘என்ன பதில் சொல்லப்போகிறாள்’ என்று எதிர்பார்ப்போடு
உற்று நோக்கியது அவளை. அந்த கண்களுக்கு ஏமாற்றத்தை தரவிரும்பாமல்

“ம்ம்…” என்று கொஞ்சம் தயக்கத்தோடே சம்மதமாகத் தலையை  அசைத்தாள் மங்கை நல்லாள்.

நாயகன், நாயகி இருவரிடமும் பூடகமான பேச்சுகள், பூடகமான பதில்கள்.

அதன் பிறகு பரணி ஒருநொடியைக்  கூட வீணாக்கவில்லை. “நந்து வர்றதுக்கு முன்னாடி ஃபிரஷ் ஆகிட்டு வா செல்லம்” என்று பவித்ராவை அனுப்பி வைத்தவன் கைபேசியில் தந்தையை அழைத்து அவரோடு பேசியவாறே வெளியில் சென்றான்.

அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. இனி இவன் தான் தன் வாழ்க்கை என்று முடிவெடுத்திருந்ததாலோ என்னவோ நெஞ்சில் சொல்லிலடங்கா ஏதோ ஒரு அமைதி வந்து உட்கார்ந்தது போல் உணர்ந்தாள் பவானி.

கைபேசியை எடுத்து நேரத்தைப் பார்க்க அது ஏழு மணி இருபது நிமிடங்கள் என்றது. ‘இன்னைக்கு ஆஃபீஸுக்கு போகமுடியுமா? முடியவில்லையென்றால் ஃபோன் பண்ணி லீவ் சொல்லவேண்டும்.யோசித்தவாறே,

கடகடவென்று டீயைப் போட்டு  எடுத்தவள், ‘ஹையோ! இந்த பவி இன்னும் உள்ள என்ன பண்ணுறா? இப்போ நான் தான் இவனுக்கு டீ யைக் குடுக்கணுமா?’

பதட்டத்தோடு ஹாலில் நின்று வெளியே எட்டிப் பார்க்க பேசிமுடித்து உள்ளே வந்தவன் அவள்  கையிலிருந்த டீ கப்பை “எனக்குத்தானே” என்று எடுத்துக் கொண்டு  நின்றவாறே துளித்துளியாக ரசித்து குடிக்கலானான்.

தன் மனதிற்கினியாளின் கையால் முதன்முதலாக கிடைக்கும் பானம்.  வானத்தில் சிறகில்லாமலேயே பறந்தான் பரணிதரன்.

டீயை குடித்து முடித்தவன்  வெளியே வந்து, நிறுத்தி இருந்த தன் வண்டியில் சாய்ந்து நின்று கொண்டே, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபயின்று கொண்டிருந்த பவித்ராவிடம் கடந்து போன அவர்களது மூன்று வருட கால வாழ்க்கையைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டான்.

ஒரு பெண்ணாக தன்னந்தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் தன்னவள் தன் வாழ்க்கையில் ஜெயித்து நிற்பது குறித்து அவ்வளவு பெருமையாக இருந்தது அவனுக்கு.

தான் அவர்களை எங்கெல்லாமோ சல்லடை போட்டுத் தேட அவர்கள் குமரியில் தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரிய வந்தபோது எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை.

தன் உயிரானவளின் நெருங்கிய நட்பைப் பற்றிக்கூட தெரியாத நானெல்லாம் அவளை இத்தனை வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு தகுதியே இல்லாதவன். தன்னைத்தானே பழித்துக்கொண்டான்.

யோசனையில் மூழ்கியிருந்தவனைக் கலைத்தது அங்கு வந்து நின்ற  மெரூன் கலர் இன்னோவா கிறிஸ்டாவின் சப்தம்.

“திவ்யா க்கா வீட்டு கார் போல இருக்கே?” எண்ணமிட்டபடியே காரை நோக்கி நகர டிரைவர் சீட்டில் இருந்து  இறங்கினார் ஜெயராம்.  ஆனந்தமாக அதிர்ந்தவன் “வாங்க மாமா” என்று அவர் கையைப் பற்றிக்கொண்டான்.

“ஏன் பரணி! உங்க மாமா மட்டும் தான் கண்ணுக்குத் தெரிவாரா? நாங்கல்லாம் உங்கண்ணுக்கு தெரியமாட்டோமா?”  என்று கிண்டலடித்தபடியே மறுபுறம் இருந்து இறங்கினாள் திவ்யா தன் மைந்தனோடு.

“அதெல்லாம் நல்லா தெரியும் க்கா… ஆனால் மாமா எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷலாத் தான் தெரிவார் எங்களுக்கு” என்றவன் மருமகனின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தான்.  

அப்பா,  அம்மாவை அழைத்து வருவார் என்று இவன் நினைத்திருக்க, அவன் சகோதரி வந்து நின்றாள் தன் துணையோடு.

தன் கருவறைத்தோழி மீது எப்போதும் போல் கனிவு பொங்கிற்று அவனுக்கு. 

பின் சீட்டிலிருந்து நந்தினியும், மதியழகனும் இறங்க,
வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த பவித்ரா “நண்டு” என்று உற்சாக மிகுதியில் கூவிக்கொண்டே தன் தோழியை இறுக அணைத்திருந்தாள்.

ஒருவருக்கு குறையாத வேகம் இருவரிடமும். அந்த இளங்கன்றுகள் தங்கள் நட்பில் கரைந்து கொண்டிருந்தார்கள்.

பவித்ராவை தொடர்ந்து வெளியே  வந்த பவானியின் கண்களில் முதலில் விழுந்தது  கட்டியணைத்தபடி நின்றிருந்த தங்கள் இளவல்கள் தான்.

‘நான்  என் தங்கைக்கு நியாயம் செய்யவில்லையோ!’  கலங்கியபடியே இருவரையும் ஒரு சேர அணைத்து விடுத்தவள்,  தன் கலக்கம் மறைத்து வந்தவர்களை இருகரம் கூப்பி “வாங்க” என்று   முகமன் கூறி வீட்டுக்குள்அழைத்துச் சென்றாள்.

அதற்குள் அந்த இளவல்  கூட்டணி இருவரில் இருந்து மூவராய் மாறியிருந்தது சந்தோஷோடு.

வீட்டினுள் சென்றவர்கள் அழகாக அந்த ‌ஹாலை நிறைத்தார்கள்.

யாருமே அநாவசியமான கேள்விகளால் பவானியை சங்கடப்படுத்தவில்லை. பொதுவான நலவிசாரிப்புகளே அவர்களிடம்.

தேனீர் உபசரிப்புக்குப் பின் காலி கப்புகளோடு
கிச்சனுக்குள் சென்ற பவானியை தொடர்ந்த திவ்யா மெதுவாக,”பவானி! என் தம்பி இன்னும் பத்து நாளையில் கல்யாணத்தை வைக்கணும் சொல்லுறான். வச்சுறலாமா டா? உனக்கு சம்மதம் தானே”

கேட்டுக்கொண்டிருந்தவரின் கைகள் தான் கொண்டு வந்திருந்த பையிலிருந்து மல்லிகைப்பூவை எடுத்து பவானியின் கூந்தலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியும் தான். ஆனாலும் அதை நேரடியாக தன்னிடம் கேட்கும் போது கொஞ்சம் திணறித் தான் போனாள் பவானி.

‘கல்யாணம் இன்னும் பத்து நாளைக்குள்ளேயா? ஏன் இந்த அவசரமாம் ஐயாவுக்கு?’ வெட்கம் கேளாமலேயே முகத்தில் வந்து வர்ணஜாலம் காட்ட, தான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து “பெரியவங்க எல்லோரும் என்ன முடிவெடுக்காங்களோ அப்படியே செய்ங்க க்கா” என்றவளை

“அக்காவா? இனிமேல் அண்ணின்னு தான் கூப்பிடணும்”  திருத்தியவள், தன் தம்பி ஏற்கனவே சொல்லியிருந்தபடி தங்களோடு அவர்களை இரவிபுரத்துக்கு  கிளம்பச் சொல்ல

“இல்லக்கா. கல்யாணம் வரைக்கும் இங்கேயே இருக்கிறோமே!” மென்மையாக மறுத்தாள் பெண்

தன் அக்கா கிச்சனுக்குள் சென்ற நொடியிலிருந்து அங்கேயே கண்களையும் காதுகளையும் வைத்திருந்தான் பரணிதரன்.

ஒவ்வொரு நொடியும்  தன்னவளின் முகம் காட்டிய வர்ணஜாலங்களைக் கண்டு ரசித்தவன், “திருமணம் வரைக்கும் இங்கேயே இருக்கிறோம்” என்ற வார்த்தையில் ருத்ரமூர்த்தியானான்.

“எதுக்கு? புதுசு புதுசா ஏதாவது யோசிச்சிகிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டே போறதுக்கா?” தன் மரியாதைக்குரிய மனிதர்களும் அங்கு தான் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து வந்து விழுந்தது வார்த்தைகள்.

“பரணீ…! என்ன பேச்சு பேசுற?” அதட்டலாக வந்தது மதியழகனின் குரல்.

படுக்கையறையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த சிறியவர்கள் கூட சத்தம் கேட்டு வந்து உற்றுப்பார்த்தார்கள்.

ஆனால் பாவையவளுக்கோ அந்த கோபத்திலும் அவன் தன் மீது கொண்ட காதலேத் தெரிய மெல்லியக்கீற்றாய் புன்னகை தவழ்ந்தது இதழ்களில்.

“என் தங்கச்சியோட அஞ்ஞான வாசத்தில் உனக்கும் பெரும்பங்கு இருக்கும் போலயே மாப்பிள்ளை” நடக்கும் நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஜெயராம்  அவன் காதோடு சாய்ந்து  கிசுகிசுக்க

“அப்படித்தான் சொல்லிக்கிறாங்க மாமா” அதே பாணியில் சிரித்தபடியே சளைக்காமல் பதிலடி கொடுத்தான்  பவானியின்  நாயகன்.

அதன் பிறகு ‘திருமணம் வரைக்கும் பெண்கள் இருவரும் தங்கள் வீட்டில்  இருக்கட்டும்’ என்ற ஜெயராமின் முடிவு எல்லோராலும் ஏகமனதாக ஏற்கப்பட்டது.

“சீக்கிரமே வந்து வீட்டைக் காலிபண்ணிக் கொடுக்கிறோம்” என்று வீட்டு உரிமையாளரைப் பார்த்து சொல்லிவிட்டு

சகோதரிகள் இருவரும்  தங்கள் அத்தியாவசப்   பொருட்களோடு பரணிதரனின் குடும்பத்தோடு பயணப்பட்டார்கள்  இரவிபுரத்தை நோக்கி…

Advertisement