Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 04

‘பூ மாலையேத் தோள்சேரவா…
பூ மாலையேத் தோள்சேரவா…’
என்று அந்த அழைப்பு மணி அழகாகப் பாடி வீட்டினுள் இருந்த நபரை அழைத்தது….

‘முதல்ல இந்த காலிங் பெல்லை மாத்தணும். நேரத்துக்கு ஒரு சினிமாப் பாட்டைப் பாடி மானத்தை வாங்குது’ என்று மனதிற்குள் சலித்தவாரே வந்து கதவைத் திறந்தாள் பவானி.

கதவைத் திறந்தவள் சத்தியமாக அவள் முன்னால் நின்றவனை எதிர்பார்க்கவில்லை என்பதை அதிர்ந்து போன அவள் முகமேச் சொல்லியது.

“கொஞ்சம்  வழிவிடுறியா?” என்று சொல்லிக்கொண்டே  வழியை மறைத்தால் போல் நின்றிருந்தவளின்  தோளை சாவகாசமாக பற்றி நகர்த்தி கொண்டு உள்ளே வந்தான் பரணிதரன்.

உள்ளே வந்தவன் ஹாலில் நின்று கொண்டே தன் கண்களைச் சுழற்றி வீட்டை ஒருமுறை பார்வையிட்டான்.  ஹால், கிச்சன் மற்றும் ஒற்றை படுக்கையறை கொண்ட  சிறிய புறாக்கூடு சைஸ் வீடுதான் அது.

ஹாலில் சுவாமி மாடத்தில் இராஜ அலங்காரத்தில் இருந்த முருகப் பெருமானின் ஃபோட்டோவிற்கு முன்னால் இருந்த சிறிய குத்துவிளக்கில் ஏற்பட்டிருந்த தீபம் அந்த வீட்டிற்கே தெய்வீகக் களையைக் கொடுத்தது

ஹாலின் பக்கவாட்டில் இருந்த படுக்கை அறையிலிருந்து வந்த மின்விசிறி சுழலும் சத்தம் உள்ளே பவித்ரா இன்னும் தூங்கிக் கொண்டுதானிருக்கிறாள் என்று சொன்னது.

பார்வையாலே வீட்டை அளந்து முடித்தவன் ஹாலில் கிடந்த  ‘நீல்கமல்’ பிளாஸ்டிக் நாற்காலியில் ஒன்றை இழுத்துப் போட்டுச் சட்டமாக உட்கார்ந்து கொண்டு 

“வெல்…என்னோட வில்லனைக் கொஞ்சம் கூப்பிட்டா நான் பார்த்துட்டு போயிடுவேன்” என்றான் கொஞ்சம் நக்கலாக.

நேற்று சாயங்காலம் பவானியின் வார்த்தைகளைக் கேட்டு பரணிதரன் திகைத்து நின்றதென்னவோ சிறிது நேரம் தான்.

அவள் சொன்ன வார்த்தைகளேத்  திரும்பத் திரும்பக் காதில் ஒலிக்க மனதோ அவளின்   உடல்மொழி  சரியில்லை என்று அடித்துச் சொல்லியது.

கைகள் தன்னிச்சையாக ஃபோனை எடுத்து சற்று முன் சேமித்து வைத்திருந்த தோழி கவிதாவின் நம்பரை அழுத்தியது.

“கவி! நான் இங்க தான் ஆஃபிஸ் முன்னாடி நிக்குறேன். பிளீஸ் கொஞ்சம் வரமுடியுமா?” என்று கேட்டான்.

“என்ன பரணி?” என்று அவசர அவசரமாக வந்து நின்ற கவிதாவிடம் ,” ரொம்ப தெரிந்தவங்க கவி. இப்ப கொஞ்ச நாளா தொடர்பு விட்டுப் போச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் இங்க பார்த்தேன்.

ஆனால் நான் கூப்பிடுறதுக்கு முன்னாடி ஸ்கூல் காம்பௌண்ட் விட்டு  வெளியே போய்ட்டாங்க. கொஞ்சம் அவங்க  அட்ரஸ் எதுவும் இங்க இருந்ததுன்னா எடுத்துக் குடுக்கலாமா? பிளீஸ்…” என்று பொய் பாதி மெய் மீதியாகக் கேட்டான்.
.
” யாருன்னு தெரியாமல் எப்படி பரணி?” என்றவளிடம்

“இப்ப  ஸ்டடி மெட்டீரியல்ஸ் தான் வாங்கிட்டுப் போறாங்கன்னு நினைக்கிறேன்.  அவங்க பெயர்  கூட பவானி” என்றான் அவசரமாக.

“ம்ம்…சரி வா பாக்கலாம்” என்று யோசனையோடே பாடப்புத்தகங்கள் வழங்கும் பிரிவிற்கு  அழைத்துச் சென்று லெட்ஜரைப் புரட்டி சற்று முன் பதிவிடப்பட்டிருந்த   பவானி என்ற பெயருக்குரிய  விலாசத்தை  ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்க, பெயருக்கு முன்னால் ‘மிஸ்’ என்ற அடைமொழி இருந்தது.

அந்த ‘மிஸ்’ என்னும் அடைமொழி தன்னவள் தன்னை விட்டு இன்னும் ‘மிஸ்ஸாகவில்லை’ என்பதைச் சொல்லியது அவனுக்கு.

“மிஸ். பவானியா? ஏன் கேட்க்கிறேன்னா சமீபத்தில் அவங்களுக்கு கல்யாணம் ஆகிடிச்சின்னு கேள்விப்பட்டேன்”  என்றான்.

“அட்ரஸ் தப்பா என்டர் ஆகிடக்கூடாதுன்னு இந்த லெட்ஜர்ல அவங்கவங்க அட்ரஸை அவங்கவங்களையேத் தான் எழுதச்சொல்லி கேட்ப்போம் பரணி” என்றவள் அந்த லெட்ஜரை விரித்து அவன் முன் காட்ட

“மிஸ். பவானி” என்று  அவள் கையாலேயே எழுதியிருந்த பெயர் இவனைப் பார்த்து கண் சிமிட்டியது.

அவனையறியாமலே பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன்,  தோழிக்கு நன்றி சொல்லி, விலாசத்தை பத்திரப் படுத்தியபடியே  பள்ளியை விட்டு வெளியே வந்தான்.

நடக்கும் எதுவுமே புரியாமல் தன்னைப் பார்த்து திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்த தன் சகோதரியின் புதல்வனை வண்டியில் தன் முன்னே அமர்த்தி ஆதுரமாய் அணைத்தபடி ஒற்றைக்கையால் வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தவன் அடுத்து  சென்ற  இடம் ‘ஐபேக்கோ’

வண்டி நின்ற இடத்தை கண்டதுமே ஆர்பரித்த சிறுவன் “மாமா! நான் கேக்குற ஃபிளேவர் தான் வாங்கிக் குடுக்கணும் ஓகே…” என்று அவசரமாக விண்ணப்பம் வைக்க

“சரி டா பெரிய மனுஷா!” என்றவன், அவன் கேட்ட ஸ்ட்ராபெரி ஃபிளேவர் ஐஸ்கிரீமை வாங்கி அங்கேயே உட்கார்ந்து உண்ணவைத்தான்.

பிறகு வீட்டில் உள்ளவர்களும் வாங்கிக்கொண்டு பறந்தது அந்த பல்ஸர்.

வீட்டுக்கு வந்து இறங்கவும் பள்ளியிலிருந்து திரும்பியிருந்த  நந்தினியிடம் ஓடிச்சென்று மடியில் அமர்ந்த சிறுவன்” சித்தி! சந்தோஷ் ஐஸ்கிரீம் சாப்டானே” என்று தம்பட்டம் அடிக்க

“எனக்கு இல்லையா ண்ணா? என்று உதடு பிதுக்கிய தங்கையிடம் வாங்கி வந்ததைக் குடுத்து “எல்லாரும் ஷேர் பண்ணிக்கோங்க செல்லம்” என்றான்

“சித்தி! மாமா எல்லாரும் ஷேர் பண்ணிக்கோங்க தான சொன்னாங்க. அதனால எம்பங்கைக் குடு” என்று விவரமாக டீல்   பேசிய சின்னவனின் பேச்சில், முகத்தில் புன்னகைப் பூ பூக்க

“கேடி டா நீ!” என்று சிரித்தபடியே உடைமாற்ற தனது அறைக்குச் சென்றவனின் முகத்தில் அதன் பிறகு சிந்தனை… சிந்தனை… சிந்தனை மட்டுமே.

இன்று அதிகாலையிலேயே எழும்பி குளித்து முடித்து வெளியே செல்ல புறப்பட்டு தந்தையிடம்  சென்றவன்

“நான் போற விஷயம் சரியா முடிஞ்சிடிச்சி என்றால்  ஃபோன் பண்ணுவேன், நீங்க வரவேண்டியது இருக்கும் ப்பா” என்று மொட்டையாக சொல்லி விட்டுத் தான் வந்திருந்தான்.

அவனுக்கும் தந்தையிடம் பவானியை பார்த்த விஷயத்தைக் கூற ஆசை தான். ஆனால் அதற்கு முன்னால் அவளிடம் அவனுக்கு பேச வேண்டி இருந்தது. அதனாலேயே ஒருவரிடமும் சொல்லாமல் தனித்து வந்திருந்தான்.

‘வில்லனா? யாரது?’ என்று, புரியாத பாவனையில் என்றுமே அவனைக் கவர்ந்திழுக்கும் அந்த மை தீட்டிய பெரிய கண்கள் குழப்பத்தில் இன்னும் விரிந்தது.

“அதான் மா,  நேற்று எங்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிட்டேன் னு சொன்னியே, அந்த உன் காதல் கணவர்… தான் என் வில்லன்” என்று அந்த ‘ர்’ ஐ அழுத்திக் கிண்டலாகச் சொன்னான்.

‘தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தெரிந்தால் வேறு கேள்விகள் ஏதும் தன்னை கேட்க மாட்டான். நூற்றில் ஒரு சதவீதம்  திருமணம் பண்ணாமல் இருந்தானானால் இதை கேட்ட பிறகு அவனும் திருமணம் செய்து கொள்வான்’ என்று நினைத்தே நேற்று பவானி அவ்வாறு சொன்னது.

‘ஆனால் இவன் வந்திருக்கும் வேகத்தைப் பார்த்தால்  இவனுக்கும் திருமணம் ஆனது போல் தெரியவில்லையே? இன்னுமா அவங்க வீட்ல அவனுக்கு  திருமணம் செய்து வைக்காமல் இருக்கிறார்கள்!’ ஆச்சர்யப்பட்டாள்.

‘ பொண்ணுங்களுக்கு தாலி, மெட்டி, இந்த மாதிரி போட்டு  கல்யாணம் ஆனவள்னு அடையாளப்படுத்துற மாதிரி இந்த பசங்களுக்கும் ஏதாவது ஆர்னமன்ட்ஸ் போட்டு இவன் திருமணம் ஆனவன்னு அடையாளப்படுத்தினால் தான் என்ன?’ மனதுக்குள் அங்கலாய்த்து கொண்டிருந்தவளை

“ம்ம்… சீக்கிரம் வரச்சொல்லு ம்மா… எனக்கு நேரமாகுதுல்ல” என்ற அவனின் நக்கல் குரல் அவளை நடப்புக்கு அழைத்து வந்தது.

அந்த  குறலேச் சொன்னது அவள் குட்டு உடைந்து போயிற்று என்று. ‘ஆனால் எப்படி?’

‘இனிமேல் பொய் சொல்லி ஆவது என்ன? என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே!’ என்று நினைத்தவள்,
அப்படி யாரும் இல்லை என்ற விதத்தில் உதடைச் சுளித்து  இடவலமாக தலையை ஆட்டினாள்.

“அப்போ எதுக்கு எங்கிட்ட பொய் சொன்ன? உனக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரிஞ்ச உடனே ரோக் மாதிரி உன் பின்னாடியே வந்து உம்மேல பாஞ்சிடுவேன்னா?” கோபத்தின் உச்சியில் வார்த்தைகள் தடித்து வந்து விழுந்தன.

விழுந்த வார்த்தையின் வீரியம் தாங்காமல் பெண்ணவள் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் வழிய, காளையவனோ கோபத்தின் உச்சியில் நின்று கத்தினான்.

” சொல்லுடி…வாயைத் திறந்து சொல்லு. உன் வாயைத் திறந்த உடனே கொட்டுற முத்தை அள்ளி கோட்டை கட்டி நான் குபேரன் ஆகிடமாட்டேன். பயப்படாமல் வாயைத் திறந்து சொல்லு” கோபத்தினூடே நக்கலும் துள்ளி விளையாடியது வார்த்தைகளில்.

“இப்படி எல்லாம் கூட இவனுக்கு பேசத் தெரியுமா?” பரணிதரனின் இந்த புதிய பரிணாமத்தில் முழிபிதுங்கித் தான்  போனது பவானிக்கு.

‘அதற்காக, உன் அன்னையின் வார்த்தைகள் தான் என்னை ஊரைவிட்டே விரட்டியது என்று அவனிடம் சொல்ல அவள்  தயாரில்லை.’

‘தான் சொல்லப்போகும் வார்த்தைகள் மகனின் மனதில் அந்த தாயின் மீதுள்ள நன்மதிப்பை  இறக்கி விட்டுவிட்டால், அது அந்த குடும்பத்தின் அமைதியைக் கேள்விக்குறியாக்கி விடுமே?”

‘இல்லை… தேவையில்லை… அந்த வார்த்தைகள் என்னோடே போகட்டும்.’ இப்படித்தான் நினைத்தது  இருபத்தைந்து வயதில் வாழ்க்கையை ஓரளவுக்கு புரிந்து கொண்ட பவானியின் உள்ளம்.

மௌனத்தையே பதிலாக்கிக் கொண்டு நின்றாள்.

“மூனு வருஷமா இதோ இன்னைக்கு உன்னை பாத்துடுவேன், நாளைக்கு உன்னை பார்த்துடுவேன்னு கல்யாணமேப் பண்ணாம உனக்காக இங்க ஒருத்தன் பைத்தியக்காரனா காத்துட்டு இருந்தா…நீ  எங்கிட்டயேக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தைரியமா  பொய் சொல்ற, ஹும்…” அவன் மனக்குமுறலை வார்த்தையாக்கி வீச

Advertisement