Advertisement

“பவி… நாளைக்கு எனக்கு ஒரு எக்ஸாம் க்கு போகவேண்டி
இருக்குது. பிச்சிக்கொடியில கிடக்கிற அரும்பை பறிச்சி  நெருக்கமா கட்டிக்குடுடேன் பிளீஸ்…” நந்தினி தான் பவித்தாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“ஏய்! பறிச்சி கட்டித் தான்னு கேட்டாத் தரப்போறேன். அதுக்கு ஏன் பிளீஸ்னு சொல்லி என்னை பயங்காட்டுற” என்று கிண்டலடித்தபடியே ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பவித்ரா பூ பறிக்க கிளம்ப
ஹாலில் உட்கார்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த குமரன் இவர்களின் பேச்சைக்கேட்டு பிச்சிக்கொடிக்கு பக்கத்தில் மறைவாக வந்து நின்று கொண்டான்.
 பச்சைபசேலென்ற கொடியில் தவம் செய்யும் ஒற்றைக்கால் கொக்குகளாக நன்கு வெளுத்திருந்த பிச்சிமொட்டுகள் லேசாக இதழ் விரித்து மாலைவேளையில் மணம் பரப்ப காதல் கொண்ட குமரவன் மனமோ அந்த சுகந்தத்தில் தள்ளாடியது.
கடந்த ஐந்து வருடங்களில் குமரனுக்கும் பவித்ராவிற்குமிடையே ஒரு மெல்லிய காதல் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கிறது. 
காதல் செய்கிறோம் என்று இருவரும் இதுவரை மணிக்கணக்காக  ஃபோனிலேயே குடியிருந்தவர்களுமில்லை, களவுமொழி பேசிக் கொண்டவர்களுமில்லை. இதோ இப்போது கூட ஒருவருடம் கழித்து தான் வீட்டுக்கே வந்திருக்கிறான் குமரன்.
கும்பலாக சுத்துவோம்…
நாங்க அய்யோ யம்மான்னு கத்துவோம்
கத்துறேன்னு கேட்டா
உன்ன வாயிலேயே குத்துவோம்…
என்று பாடிக்கொண்டே வந்துகொண்டிருந்த பவித்ராவின் குரல் குமரனுக்கு கேட்க ,”பாட்டப் பாரேன், கத்துவேன், குத்துவேன் னுட்டு …லவ் பண்ணத் தான் தெரியலைன்னு பாத்தா ஓரு லவ் சாங்குமாத் தெரியாது இந்த தத்திக்கு… ஆண்டவா! இவளை கட்டிகிட்டு நான் என்ன பாடுபடப்போறனோ?’ என்று  செல்லமாக அலுத்துக் கொண்ட குமரன்
பவித்ரா தன் பக்கத்தில் வரவும் அவள் கையைப் பற்றி இழுக்க,”ஐயோ…யம்மா.,.” என்று கத்தியபடியே அவன் மீது பூமாலையாக சாய்ந்தாள்.
 தன்மீது சாய்ந்தவளை வாகாக தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன்,”ஏய்! எதுக்குடி கத்துற? என்னைத் தவிர வேற எவனுக்கு உங்கையை பிடிச்சு இழுக்குற தைரியம் இருக்கு? ம்ம்…” என்று அதட்டியபடியே கேட்க
“அடப்போங்க குமரன்… நேத்து ஒருத்தன் தைரியமா வீடேறி வந்து பொண்ணே கேட்டுட்டு போய்ட்டான். நீங்க இப்படியே  சொல்லிகிட்டே இருங்க” என்று கூறியபடியே அவன் கைகளுக்குள் இருந்து பவித்ரா வெளியே வரமுயற்சிக்க
“கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?” என்று அவளை அடக்கியபடியே,”அவன் கேட்டா உடனே அள்ளி இந்தா வச்சுக்கோன்னு குடுத்துடுவமா நாங்க? என்ன நினைச்சு கிட்ட என்னப் பத்தி? என்று உறுமியவனிடம்
“சரி…சரி…நீங்க வீராதி வீரன் தான்…சூராதி சூரன் தான். உங்களைத் தாண்டி யாராலயும் பவித்ரா நிழலைக் கூட தொடமுடியாது. போதுமா குமரன்” என்றாள் கிண்டலாக. 
“ஓய்…என்னடி லந்தா?” என்று கேட்டு அவள் கன்னத்தை லேசாக கிள்ளினான்
“ஆமா…நானும் பாத்துட்டே தான் இருக்கேன். ஏதோ நீதான் எனக்கு மொட்டை போட்டு காதுகுத்தி பெயர் வச்சமாதிரி நிமிஷத்துக்கு ஒருதரம் எம்பெயரைச் சொல்லி கூப்பிடுற” 
“ஹை… உங்களுக்கு காது குத்தியிருக்கா என்ன? என்று கேட்டபடியே சட்டென்று திரும்பி அவன் காது மடலை தன் வெண்பிஞ்சு விரல்களால் இழுத்துப் பார்த்தவள்,”அப்படி ஒன்னும் அடையாளம் தெரியலையே” என்று உதட்டைச் சுழித்தாள்.
சுழித்த அந்த கொவ்வை செவ்விதழ்களை பற்றி இழுத்தவன் அதை நோக்கி ஆவலாக குனிய,”இல்ல…நீங்க இப்போ அப்படியெல்லாம் செய்யக்கூடாது” என்று பதறினாள் பவித்ரா. இதழ்கள் அவன் விரல்களுக்குள் மாட்டியிருந்ததால் திக்கித் திணறித் தான் வந்தது அவள் வார்த்தைகள்.
“இங்கப் பார்றா…எம்பவித்ரா வளந்துட்டா போலயே! இப்போ இதைச் செய்யக்கூடாதுங்குற விவரம் வரைக்கும் தெரிஞ்சிடிச்சே அம்மணிக்கு” என்று மெல்லியக்குரலில்
சிரித்தவன்,
“ஆனால் இப்போ பண்ணுறப்போ இருக்கிற கிக்கு வேற எப்போப் பண்ணுனாலும் இருக்காதாம்மே” என்று கிறக்கமாகச் சொல்லியபடியே அந்த பட்டிதழ்களை மெலிதாக தீண்டி விலகினான் அந்த காதல் கள்வனாகிப் போன காவலன். 
****************
கோபிச்செட்டிப்பாளையம் நகரின் மத்தியில் இருந்த அந்த பிரபலமான திருமண மண்டபத்தின் ஒலிபெருக்கி வழியே மங்கல இசை வழிந்து கொண்டிருந்தது.
மண்டபத்தின் நுழைவாயில் வாழைமரத் தோரணங்களாலும், பாக்குமரத் தோகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மணவறைகளுக்கு முன்னால் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நாற்காலிகள் சொந்தங்களாலும் பந்தங்களாலும் நிறைந்திருந்தது.
 ஆமாம்… மணவறைகள் தான். நடைபெறப் போவது இரண்டு திருமணங்கள்.  நந்தினிக்கும், பவித்ராவிற்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெற இருக்கிறது. 
நந்தினியை தன்னுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் மணிவண்ணனுக்கு மணமுடிக்க விரும்பி கேட்க்கிறார்கள் என்று ஜெயராம் தகவல் சொன்னதோடு அந்த பையனை நந்தினிக்கு தாராளமாக திருமணம் செய்யலாம் என்றும் சொல்லிவிடவே அதற்கு மேல் யாருமே யோசிக்க கூட இல்லை. 
 
இதோ அந்த வரன் திருமணம் வரைக்கும் வந்தாயிற்று.
மணிவண்ணனும் அரசின் வருமான வரித்துறையில் நல்ல பதவியில் இருக்கிறான்.
பவித்ராவின் மணமகன் யாரென்று நம் எல்லோருக்கும் தெரியும்… ஆமாம் நம் மனம் கவர்ந்த குமரனும் பவித்ராவும் தான் இன்னொரு மணமக்கள்.
தங்கை நந்தினிக்கு திருமணம் முடிவான உடனே எதற்கும்   கோதை அம்மா காதில் தன் காதலை போட்டு வைப்போம் என்று  குமரன் முடிவெடுத்து ஒருநாள் தங்கள் காதலை அவரிடம் சொல்லிவிட்டான்.
அதற்கு அவர் கொடுத்த எக்ஸ்பிரஷனை குமரனால் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாது. 
 ஆமாம்…இவன் விஷயத்தை சொன்னதும் ஏற்கனவே ‘குமரனுக்கும் பவித்ராவிற்கும் திருமணம் செய்தால் நன்றாக இருக்குமே’  என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் 
அவர்கள் இருவரும் இதற்கு சம்மதிப்பார்களோ என்னவோ என்ற சந்தேகத்தில் இருந்த பெண்மணி க்கு “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம்” என்று குமரன் சொன்னால் அதிர்ச்சியாக இருக்காதா என்ன?
“டேய்! நீ அவமேல அல்டரை எல்லாம் ஏவி விட்டியேடா? பின்ன எப்டிடா இது?” என்று தான் அவரும் கேட்டார்.
“டேய் குமரா! நீ செஞ்சது வாழ்நாள் முழுக்க உன்னை சுத்தி சுத்தி அடிக்கும் போலயே’ என்று நொந்து போன குமரன் தங்கள் விஷயத்தை தன் அன்னையிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல அவரோ நந்தினி திருமணம் முடியட்டும் என்றெல்லாம் காத்திருக்காமல் இதோ அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரே நாளில் திருமணம் என்கின்ற அளவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
குறித்த நேரத்தில் முதலில் நந்தினி மணிவண்ணன் திருமணம் முடிய சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு அடுத்த முகூர்த்தத்தில் குமரன் பவித்ராவின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான்.
நந்தினியின் திருமண சடங்கில் ஒரு அண்ணனாக செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்த பரணிதரன் பவித்ராவின் திருமண சடங்கில் ஒரு தகப்பனுக்குரிய அத்துணை கடமைகளையும் செய்து முடித்திருந்தான்..
இவை அத்தனைக்கும் காரணம் பரணிதரனின் மனதில் இருந்த இளையவர்கள் மீதான அன்பு…அன்பு…அன்பு…மட்டுமே
 
அன்றிரவு தன் எல்லா கடமைகளையும் முடித்து விட்டு  பிள்ளைகள் தங்கள் தாத்தா பாட்டியுடன் தூங்கவே தனியாக தங்களறைக்கு வந்தாள் பவானி.
அறையில் மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. படுக்கையில் கணவன்  கால்நீட்டி சாய்ந்தமர்ந்திருந்தது வரிவடிவமாகத் தெரிந்தது அவளுக்கு.
தான் வந்தது தெரிந்ததும் தன் கையைநீட்டி அழைத்த கணவனின் கரத்தைப் பற்றியபடியே படுக்கையில் அவன் பக்கத்தில் அமர்ந்தாள் பவானி.
தன்னருகே அமர்ந்த மனைவியின் காதுகளில்,”பவானி! கண்ணை கொஞ்சம் மூடு” என்று கிசுகிசுத்தான் கணவன்.
ஏன்? எதற்கு? என்ற எந்த கேள்வியும் இல்லாமல் கணவன் சொன்னதைச் செய்தாள் பெண்.
“ம்ம்…இப்போ கண்ணத் திற” ஏதோ மந்திரக்காரனின் வார்த்தைக்கு கட்டுபட்டவள் போல கண்களைத் திறந்து பார்த்த பவானி
தன் முன்னே நீண்டிருந்த கணவனின் உள்ளங்கையில் ஒளியினை வாரியிறைத்தபடி இருந்த ஏதோ ஒரு பொருளை கண்டவள்,” என்னப்பா இது?” என்று கேட்க
“மூக்குத்தி…மரகத பச்சை மூக்குத்தி…” என்றான் கணவன் கிசுகிசுப்பாக
ஹா… இப்போது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது பவானிக்கு. தன் கணவனை நோக்கி அட்டகாசமாக சிரித்தபடியே,”ஹனிமூனப்போ வாங்கிதரணும்னு நினச்ச மூக்குத்தியை இப்பத்தான் வாங்கித்தர முடிஞ்சதா ஆஃபீஸரால” என்று கேட்டாள்
மனைவியோடு சிரிப்பில் இணைந்தபடியே,
“ஒரு பொருள் எப்போ நம்ம கைக்கு வரணும்னு இருக்கோ அப்பத்தான் வரும் பவானி” என்று சொன்ன கணவனை,
“ஆஃபீஸர் எப்போ குருஜியா அவதாரம் எடுத்தீங்க” என்று கிண்டலடிக்க, 
அதைக் கண்டுகொள்ளாமல்
அவள் கைகளில் மூக்குத்தியை கொடுத்து,”இதப் போட்டுக்கோ” என்றான் பரணி ஆசையாக
“இப்பவேயா?” என்று பவானி கேட்டாலும் கணவனின் ஆசையை  சட்டென்று நிறைவேற்றிவிட
மனைவியின் மூக்கில் அம்சமாக வீற்றிருந்த மரகதபச்சை மூக்குத்தியை தன் ஒற்றை விரலால் தடவி அதற்கு முத்தம் ஒன்றை வைத்தவன்,
“பவானி! நம்ம பாப்பு பிறந்திருக்கும் போது நான் உங்கிட்ட ஒன்னு கேட்டேனே உனக்கு அது ஞாபகம் இருக்கா? என்று மனைவியின் முகத்தோடு முகம் வைத்து கேட்க
“இப்படி கேட்டா எனக்கு எதுவுமே ஞாபகம் வராது ப்பா, அதனால நீங்களே சொல்லிடுங்க”
“இல்லை…பாப்புக்கு அப்புறம் இன்னும் இரண்டு பேபீஸ் வேணும்னு கேட்டதா எனக்கு ஞாபகம்…ஒன்னு பெத்து குடுத்துட்ட இன்னொன்னுக்கு இப்போ…” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பவானி வேகமாக கட்டிலிருந்து இறங்கி பாத்ரூமில் சென்று குடம்குடமாக வாந்தியெடுக்க ஆரம்பித்தாள்.
அதைப்பார்த்து,”ஹேய்…என்னடி பண்ணுது?” என்று பதறியவன்,”நீ இன்னைக்கு கல்யாண வீட்டு சாப்பாடுன்னு அளவுக்கு மீறி சாப்பிடும் போதே இப்படி ஏதாவது நடக்கும் னு நினச்சேன்” என்று அவள்
வாந்திக்கான காரணம் இதுதான் என்று முடிவுசெய்து கூற வும் செய்தான்.
வாந்தி எடுத்து முடித்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டவள் அவனை பார்த்து சிரித்த சிரிப்பிலேயே அது என்ன வாந்தி என்று புரிந்து போனவன்,”நான் இப்பதானே பிளான் பண்ணுனேன், நீ அதுக்கிடையில மிஷன் கம்ப்ளீட்டட்னு சொல்லுற” என்றான் கேலியாக
அவன் கேலியில் மலர்ந்து சிரித்தவள்,”பிரபோ…!” என்க
“என்ன தேவி?” என்றான் பரணிதரன் வாய்கொள்ளா சிரிப்போடு
“இன்று முதல் தாங்கள் என்னை மூன்று மாதத்திற்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்”
“வேறவழி…”என்று முணுமுணுத்துக்கொண்டே,”தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி” என்று அவன் சொன்ன பாவனையில் கலகலத்து சிரித்த மனைவியோடு இணைந்து சிரித்தான் பரணிதரன்…
அந்த தம்பதியினரின் சிரிப்பு வீடெங்கும் நிறைந்திருக்க
‘காலம் தங்களை வஞ்சித்திருந்தாலும் கடவுள் தங்கள் பிள்ளைகளை கைவிட்டு விடவில்லை என்ற நிம்மதியோடு ஹாலில் இருந்த புகைப்படத்தில் எப்போதும் போல இப்போதும் வாடாதபுன்னகையோடு இருந்தார்கள் பவானியின் பெற்றோர்கள்…
கனவு கைசேர்ந்தது இத்தோடு நிறைவுபெற்றது தோழமைகளே…

Advertisement