Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 21 (இறுதி அத்தியாயம்)
கணவனை இன்று சாயங்காலம் சந்திக்கலாம் என்ற எண்ணம் தந்த உற்சாகத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பவானியின் மனதில், 
‘இனி நந்தினிக்கு திருமணத்திற்கு வரன் பார்க்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் கோதை நாயகி சொன்னது ஞாபகம் வரவே, இன்று அதைப் பற்றியும்  கணவனிடம் பேச வேண்டும்’ என்ற எண்ணம் ஓடியது.
 
நந்தினியின் திருமணத்திற்கு பிறகு பவித்ராவிற்கும் திருமணம் செய்யவேண்டும். பவித்ராவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே பவானியின் முகத்தில் ஒரு சிரிப்பைத் தான் வரவழைத்தது.
ஒன்றரை வயது குழந்தையாக பவானியின் கைகளில் வந்த பிள்ளை. இன்று படித்து முடித்து ஆசிரியையாகி திருமண வயதில் நிற்கிறாள்.
 ‘வருடங்கள் தான் நிமிடங்களாக எப்படி ஓடிவிட்டது!’ நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது பவானிக்கு
பவானி தன் தங்கைக்கு அக்காவாக இருந்த தருணங்களை விட அன்னையாக இருந்த தருணங்களே அதிகம்.
அந்த அன்னையாகிப் போனவள் தனக்கு வாய்த்திருப்பதைப் போல ஒரு நல்ல குடும்பத்தை தன் தங்கைக்கும் அமைத்து தந்து விடவேண்டும் என்று எண்ணும் போதே மணமகனாக அவள் மனக்கண்ணில் வந்தது குமரன் தான்.
‘கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய் க்காக அலைவானேன்…குமரனை விட ஒரு நல்ல வாழ்க்கைத் துணையை தங்கைக்காக பார்த்து விடமுடியுமா என்ன?’ என்று நினைத்துக் கொண்டவள், 
‘நந்தினியின் திருமணத்திற்குப்  பிறகு கணவன் மூலம் வீட்டில் அத்தை மாமாவிடம் சொல்லி பின் குமரனுக்கும் பவித்ராவிற்கும் விருப்பம் என்றால் திருமணத்தை முடித்து விட வேண்டியது தான்’ என்றும் யோசித்துக் கொண்டாள்.
இப்படி எல்லாம் நினைத்து கொண்டு ஸ்கூட்டியை வீட்டு காம்பௌண்ட்க்குள் திருப்பும் போதே வீட்டு முற்றத்தில் கார் ஒன்று நிற்பதை கண்டவள் ‘நமக்கு முன் கணவன் தான் வந்துவிட்டானோ?’ என்று அந்த வண்டியைப் பார்க்க
இல்லை…அது அவளின் கணவன் எப்போதும் வரும் வாகனம் இல்லை. ‘அப்படியானால் வந்திருப்பது யார்?’ யோசித்தவாறே வீட்டுக்குள் நுழைந்த பவானி ஹாலில் இருந்த நபர்களை இதற்கு முன் பார்த்ததேயில்லை.
ஆனால் அந்த இரு ஆண்களின் முகச்சாயல் மட்டும் ஏனோ பரிச்சயமாய் இருந்தது போலத் தோன்றியது.
அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக 
அங்கிருந்த அத்தை கோதைநாயகியைப் பார்க்க அவரும் பவானியைக் கண்டவுடன் முகத்தில் பரவிய நிம்மதியுடன்,
“பவானி…இவங்க…” என்று சொல்லத் தொடங்கினார். 
அவர் பேச்சை  இடைவெட்டிய அந்த ஆண்கள் இருவரும்,
“அடடே… இதுதான் எங்க பெரிய மருமகளா! வாம்மா…வாம்மா…” என்று ஆரவாரமாக அவளை வரவேற்றனர்.
‘என்ன சொல்கிறார்கள் இவர்கள்? மருமகளா! எப்படி?’ என்ற குழப்பம் மேலோங்க திருதிருவென்று முழித்த பவானி குழப்பத்தோடு கோதைநாயகியைப் பார்க்க, அவரோ குழப்பியவர்களே பதிலையும் சொல்லட்டும் என்னும் விதமாக அமைதியாக இருந்தார்.
தங்கை முகத்திலிருந்தாவது ஏதாவது கண்டுபிடிக்கலாமா என்று கோதை நாயகியின் பக்கத்தில் இருந்த பவித்ராவைப் பார்க்க, அவளோ எந்தவிதமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் சாதாரணமாகவே இருந்தாள்.
அவளும் இப்போது தான் பள்ளியில் இருந்து வந்திருப்பாள் போலும். காலையில் உடுத்தி சென்றிருந்த சாரியிலேயே தான் இருந்தாள்.
அவர்களுக்கு எதிர் பக்கமாக இருந்த நாற்காலியில்  உட்கார்ந்திருந்த குமரனின் கால்களில் இருந்து அவளின் இளையமகள் ஊஞ்சலாடியபடியே தன் அன்னையைப் பார்த்து சிரிக்க, குமரனின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. 
சிந்து நந்தினியோடு வீட்டினுள்  இருப்பாள் போலும், இங்கு காணவில்லை.
தன் வீட்டு மனிதர்கள் யாரிடமிருந்தும் பதிலில்லாது போகவே இப்போது குழப்பத்தோடு வந்திருந்த புதிய நபர்களைப் பார்த்து,”சாரி…நீஙக தப்பா எடுத்துக்கக் கூடாது…உங்களை எல்லாம் இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே! நீங்கெல்லாம் யாரு?” என்று கேட்க
“ஓ… அதைச் சொல்லலை ல்ல உனக்கு” என்று அட்டகாசமாக சிரித்தவர்களில் பெரியவர் போல இருந்த மனிதர் ,”நாங்க இரண்டு பேரும் உன்னோட தாய்மாமா, இவங்க இரண்டு பேரும் உன்னோட அத்தைங்க, அது என்னோட பையன் கௌசிக்” என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டார். 
அதைக்கேட்ட பவானிக்கு ஓரே ஒரு நொடி தடுமாற்றம் ஏற்பட்டது. அவ்வளவு தான், அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவள் கோதை நாயகிக்கு அருகே கிடந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டாள்.
இப்போது அந்த மனிதர்களின் முகங்கள் தனக்கு பரிச்சயமானது போல இருந்ததன் காரணம் பிடிபட்டது அவளுக்கு.
‘ஓ… நீங்க தானா அது?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், இப்போது அவர்களை நன்றாக உற்றுப்பார்த்தாள்.
ஆமாம்…தன் அன்னைக்கு கூடப் பிறந்த அண்ணன்கள் இரண்டு பேர் உண்டு என்ற விஷயம் அவளுக்கு தன் தகப்பனின் தாயாரின் மூலம் தன் அம்மாவின் மறைவிற்குப் பிறகு தெரியவந்திருந்தது. 
ஆனால் என்றுமே அவர்களை பற்றி அறிந்து கொள்ளவோ தங்களை இன்னாரென்று அவர்களிடம் தெரியப்படுத்திக் கொள்ளவோ முயற்சி செய்ததில்லை பவானி.
ஒருவேளை தனது காலத்திற்குப் பிறகு தனது ஒற்றை மகனின் பெண் பிள்ளைகளுக்கு அவர்களின் தாய்மாமன்களின் ஆதரவு தேவைப்படும் என்று நினைத்து அந்த முதிய பெண்மணி சொன்னாரோ என்னவோ தெரியவில்லை?
ஆனால் என்றுமே அவளின் அம்மா சிந்தாமணி தன் உடன்பிறந்தவர்களைப் பற்றி மகளிடம் சொன்னதே இல்லை.
அதுவும் மற்ற வீடுகளுக்கெல்லாம் உறவினர்கள் என்று ஆட்கள் வரும் போது,”ஏன்மா நம்ம வீட்டுக்கு மட்டும் யாருமே வர்றதில்லை?  நமக்கு சொந்தமே கிடையாதா?” 
என்று பவானி கேட்டபொழுதுகளில் கூட ஒரு சின்ன சிரிப்போடு நகர்ந்துவிடுவாறே தவிர இவர்களைப் பற்றி சொன்னதே இல்லை. 
 இன்று அவர்களாகவே தங்களை தேடி வந்து அவர்களை அறிமுகம் செய்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த மனிதர்களை நன்றாக பார்த்தாள் பவானி.
ஆண்கள் இருவரும் வெள்ளையும் சொள்ளையுமாக வேஷ்டி சட்டையில்  இருந்தார்கள். கழுத்தில் நல்ல தடிமனான தங்கச்சங்கிலி புரள, கைகளில் பிரேஸ்லெட் கைவிரல்களில் நல்ல தோசைக்கல் அளவில் மோதிரங்கள் பளபளக்க டாம்பீகமாக இருந்தார்கள்.
பெண்களோ ஏதோ நகைக்கடையில் இருந்து அப்போது தான் இறங்கிவந்தவர்கள் போல மேனியெங்கும் நகையைப்பூட்டி நல்ல அகல ஜரிகையுள்ள பட்டுடுத்தி வயதிற்கு மீறிய மேக்கப்போடு இருந்தார்கள். 
அந்த கௌசிக், இந்த பெண்கள் இருவரில் யார் பெற்ற இரத்தினமோ தெரியவில்லை, ஏதோ ரேமண்ட் சூட் மாடலே தான்தான் என்னும் விதமாக உட்கார்ந்திருந்தான்.
உட்கார்ந்திருந்தவனின் கண்களோ உரிமையாக பவித்ராவை நிதானமாக அளவிட்டுக்கொண்டிருந்ததை பார்த்த பவானியின் இரத்த அழுத்தம் அதிகமாக,
“பவி! எழும்பி உள்ள போ…” என்று சொல்ல,”அப்பாடா…தப்பிச்சேன்டா சாமி” என்ற பாவனையில் எழும்பினாள் பவித்ரா.
பவானி உரிமையாக தங்கையை உள்ளே போ என்று சொல்லி விட்டாள். ஆனால் அதை சொல்ல முடியாமல் இவ்வளவு நேரமும் எரிச்சலின் உச்சத்தில் நின்ற குமரனுக்கு தனது அண்ணியின் வார்த்தைகள் சொல்லொண்ணா இதத்தைக் கொடுத்தது.
“நாங்க அவளைப் பற்றி தான் பேசவே வந்திருக்கோம் பவானி. அதனால அவ இங்க இருக்கிறதுல தப்பில்லை ம்மா” என்ற அத்தைகளில் ஒருத்தி,”நீ இங்க வந்து உட்காரு கண்ணு…” என்றபடியே பவித்ராவின் கையைப் பற்றி தன் அருகே உட்காரவைக்க முயற்சி செய்தது.
அந்த பெண்மணியின் கைகளிலிருந்து லாவகமாக விலகிய பவித்ரா குமரனிடமிருந்து,”சித்தி…” என்று அழைத்து தன்னை நோக்கி தாவிய மதிவதனியை தூக்கிக்கொண்டு வேகவேகமாக தன் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
பெண்ணவள் சென்று மறைந்து கொண்ட அறையையே வெறித்தபடி இருந்த அந்த கௌசிக்கை இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறையும் ஆத்திரம் கிளம்பியது குமரனுக்கு. ஆனாலும் சூழ்நிலை கருதி தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டான் குமரன்.
“ம்ம்…இப்ப சொல்லுங்க…என்ன விஷயமா வந்துருக்கீங்க” என்று அமர்த்தலான குரலில் பவானி கேட்க
உண்மையில் இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்திராத அந்த கூட்டம் கொஞ்சம் முழிபிதுங்கித் தான் போனது.
தாய்மாமன் என்று சொன்னதும் ஏதோ சொர்க்கத்திலிருந்து நேரடியாக இறங்கி வந்த தேவதூதர்களைப் போல பெண்களிருவரும் தங்களை பாவிப்பார்கள் என்று எண்ணி இருக்க, இங்கோ எல்லாம் தலைகீழாக நடந்தது.   
ஆனால் அதற்காகவெல்லாம் ரோஷப்பட்டு விட்டால் கறக்க கறக்க மடிசுரக்கும் காமதேனுவைப் போல அவர்கள் கண்களுக்கு தெரியும் பவித்ராவை தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக ஆக்கமுடியாதே.  
அதனால் தன்னுடைய கூச்சநாச்சம் எல்லாவற்றையும் குத்தகைக்கு விட்டு விட்டு ஆண்களில் ஒருவர் பேச ஆரம்பித்தார். 
“அது… உங்க அம்மா, அதான் எங்க தங்கச்சி எங்களை விட ரொம்ப சின்ன பொண்ணு. அவளுக்கு ஒரு பத்து வயசு இருக்கும் போதே எங்களை பெத்தவங்க ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா போய் சேர்ந்துட்டாங்க. அப்போயிருந்து இதோ உன் தங்கச்சியை நீ எப்படி சொந்த பொண்ணு போல பாத்துக்குறியோ அப்படித் தான் நாங்களும் அவளை பாத்துகிட்டோம்”
‘காலம் போன கடைசியில இந்த கிழடுங்க இரண்டும் இந்த சனியனை நம்ம தலையில் கட்டிட்டு போய்ட்டாங்க…’ என்று தங்கை சிந்தாமணி யின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள  அலுத்துக் கொண்டது எல்லாம் இவர்களுக்கு தெரியாது என்ற தைரியத்தில் கதைவிட்டார் அந்த மனிதர்.
“அதுக்கு பிறகு எங்க வாழ்க்கையில் வந்த இந்த மகராசிகளும் நாங்க எப்படி எங்கதங்கச்சியை பாத்துகிட்டமோ அதுக்கு ஒருபடி மேலாகவே பாத்துகிட்டாங்க”
‘ஆமாம்… கண்டிப்பா நல்லா…கவனித்து இருப்பாங்க…’ என்று நக்கலாக மனதிற்குள் கூறிக்கொண்ட பவானி தன் தங்கையை எழும்பி தான் உள்ளே போகச்சொன்னபோது அந்த பெண்களின் பார்வை வன்மத்தோடு தன்மீது பாய்ந்ததை நினைத்து பார்த்தாள்.
தன் வீட்டில் தன் சொந்தங்களுக்கு முன்னாலேயே தன்னை தீப்பார்வை பார்க்கும் இந்த பெண்கள் தன் அன்னையை என்னபாடு படுத்தினார்களோ என்று எண்ணியது அவள் மனது‌
இப்போது தன் அன்னைக்கு என்ன நடந்திருக்கும் என்று பவானியால் யூகிக்க முடிந்தது.
பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடும் வெள்ளத்தைப்போல தன் அப்பாவின் அன்பால் தன் தாயார் ஈர்க்கப்பட்டிருப்பார்.
இருவரும் யாருடைய சம்மதத்தையும் எதிர்பாராமல் கல்யாணம் முடித்துக்கொள்ளவும் தங்கள் பொறுப்பு முடிந்தது என்று இவர்களும் கைகழுவி விட்டிருப்பார்கள்.
இல்லையென்றால் தன் அன்னை ஏதாவது ஒரு சூழ்நிலையில் இவர்களைப் பற்றி தன்னிடம் சொல்லியிருப்பார் என்று திடமாக நம்பியவள் மேலும் அந்த நபர் கதையை நீட்டத் தொடங்க கேட்க மனதில்லாதவளாய்
 
“இப்போ நீங்க என்ன விஷயமா வந்தீங்களோ அதை மட்டும் சொல்லிட்டு கிளம்புங்க…” என்று பட்டு கத்தரித்தாற்போல் பவானி பேச உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் வந்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால் இதை எல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்த மனிதர் பேச ஆரம்பித்தார்.
“கல்யாணம் பண்ணிட்டு ஊரைவிட்டு வந்த தங்கச்சி இந்த ஊர்ல தான் வாழ்ந்திருக்கா… இப்போ அவ உயிரோடு இல்லை ங்கற விஷயம் கூட ஒரு நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் மா எங்களுக்கு தெரிஞ்சது” என்று கம்மிய குரலில் சொல்லிய அந்த நபர் வராத கண்ணீரை தன் கைகுட்டையால் துடைக்க, அவரோடு வந்த ஜால்ரா கூட்டமும் அதையே பின்பற்றியது.
“விஷயம் தெரிந்து நாங்க இங்க வந்து விசாரிக்கும் போது உனக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆனதும் தங்கச்சியை உங்கூடவே வச்சி பாத்துக்குறதும் தெரிஞ்சது. சரி… எல்லாம் நல்லவிதமா நடக்குது,  இப்பப் போய் நடுவுல நாம ஏன் குட்டையைக் குழப்புதுன்னு நினைச்சு நாங்க போய்ட்டோம்… ஆனால்…” என்று நிறுத்தியவர் பவானியை பார்த்தபடியே
“ஆனால், நேற்று எங்க தங்கச்சி என் கனவுல வந்தா… வந்து, அண்ணா! எம் பெரிய பொண்ணு கல்யாணம் ஆகி நல்லபடியா இருக்கா. ஆனால் என் சின்ன பொண்ணை நினைச்சா தான் எனக்கு கவலையா இருக்கு. அவளை உங்க மகனுக்கு கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கே மருமகளா கூட்டிட்டு வந்துடுங்க ண்ணா…அப்போ தான் எம்மனசு சாந்தியடையும் ன்னு ஒரே அழுகை… அதான் மனசு கேட்க்காமல்  உடனே கிளம்பி வந்துட்டோம் ம்மா”   என்றவர்
“கல்யாணத்தை எப்ப ம்மா வச்சிக்கலாம்?” என்று கேட்க 
மகளாக வளர்த்தேன் என்று சொல்லும் தங்கையின் மறைவுக்குக் கூட வராத இந்த மனிதர் கூறும் கதையை நம்ப பவானி தயாராக இல்லை.
ஏனென்றால் ஒருவர் விஷயம் ஒருவருக்கு தெரியாமல் போக இவர்கள் ஒன்றும் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இல்லை. இவர்கள் இருவருடைய ஊர்களையும் இரண்டே இரண்டு கிராமம் தான் பிரித்திருந்தது.
‘தானாவது அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை. அதனால் அவர்களைப் பற்றி தெரியவில்லை. ஆனால் அவர்களும் தன்னைப் போல் தான் இருந்திருப்பார்களா என்ன? அதுவும் இந்த பெண்கள்?’
தாங்கள் பெற்றவர்களின்றி தங்கள் பாட்டியோடு தன்னந்தனியாக இந்த பூமியில் தவித்திருந்த போது வராத இந்த கூட்டம் இப்போது வந்திருக்கிறது என்றால், 
அதுவும் தன் அன்னையின் பெயரைச் சொல்லிக் கொண்டு பவித்ராவை பெண்கேட்டு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு பிண்ணனியில் இருக்கும் காரணம் என்னவாக இருக்கும்?’
‘வேறு என்னவாக இருக்கும். இப்போது தங்களிடம் இருக்கும் பதவி, பணம், புகழ் இதைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?’ தன் மனதில் தோன்றிய கேள்விக்கு இப்படித் தான் பதில் வந்தது பவானியிடமிருந்து.
“ம்ம்… கல்யாணம் பண்ணனும் தான். ஆனால் நீங்க சொன்னமாதிரி உங்க பையன் கூட இல்லை. அவ மனசுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்க கூட” என்று அந்த மனிதரின் கேள்விக்கு பதில் சொல்லியவள்
“நீங்க சொல்ல வந்த விஷயம் முடிஞ்சுதுன்னா கிளம்பலாம்” என்று சொல்லியபடியே உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பினாள். 
அவள் கூடவே எழும்பிய அத்தைகளில் ஒருத்தி, ‘தாங்கள் எண்ணிவந்த காரியம் நிறைவேறாமல் இந்த பெண்ணிடம்  தோற்பதா?’ என்ற எண்ணத்தில்,
“பவித்ராவை கல்யாணம் பண்ணுற உரிமை தாய்மாமா பையனுக்கு இல்லாமல் வேறயாருக்கு இருக்குன்னு நானும் பாக்குறேன்” என்று வீராவேசமாக வசனம் பேச
கடகடவென்று சிரித்த பவானி,”தாய் மாமாவா? யாருக்கு யார் தாய்மாமா? நீங்களே தாய்மாமான்னு சொன்னா போதுமா?” என்று கேலியாக கேட்டவள்,
“இதுதான் உன் தாய்மாமா ன்னு எங்க அம்மா இவங்க இரண்டு பேரையும் அடையாளம் காட்டியிருக்கணும். ஆனால் எங்க அம்மா வாழ்க்கையில ஒருதடவை கூட இவங்களைப் பற்றி பேசுனது கிடையாது.
ஏன் எனக்கு இரண்டு அண்ணன்க உண்டுன்னு எங்கிட்ட சொன்னது கூட கிடையாது. அப்படி எங்க அம்மாவே ஒதுக்கி வச்ச உறவு தான் நீங்க… அப்படிபட்ட நீங்க எங்களுக்கும் தேவையே கிடையாது. அதனால மரியாதையா வெளியப் போங்க இல்லை போலீஸை நான் கூப்பிடவேண்டியிருக்கும். எப்படி வசதி?” என்று நீளமாக பேசியவள்
“அப்படி போலீஸைக் கூப்பிடக் கூட நான் வெளியே போகவேண்டியது இல்லை. வீட்டுக்குள்ளேயே இருக்காரு” என்று குமரனின் தோள்களில் தட்டியபடியே சொன்னாள்.
விஷயம் விபரீதமாக போவதை உணர்ந்த அந்த கூட்டம் மெதுவாக கிளம்பினார்கள். உண்மையில் அவர்கள் தங்கை மக்களின் மேல் பாசத்தில் வந்தவர்கள் அல்ல. 
அதேபோல தங்கை இறந்தது சமீபத்தில் தான் தெரிந்தது என்று சொன்னது எல்லாமே நாடகம். தங்கையின் இறப்புக்கு வந்தால் எங்கே அவளின் குழந்தைகளுக்கு தாங்கள் பொறுப்பெடுக்க வேண்டியிருக்குமோ, எதற்கு தங்களுக்கு தேவையில்லாத பாரம் என்று ஒதுங்கி நின்றவர்கள் தான் அவர்கள்.
ஆனால் காலம் அவர்கள் கணக்கை எல்லாம் தவிடுபொடியாக்கி பாரம் என்று யாரை நினைத்தார்களோ அவர்களை  இன்று சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் அமரவைத்து அவர்களின் தயவையே நாடி வரவைத்து விட்டது இவர்களை. 
ஆமாம்…ஒப்பந்த அடிப்படையில் அரசுக்கு ரோடு போடுதல் போன்ற வேலைகளை செய்து கொடுக்கும் ஒப்பந்ததாரர்கள் அந்த குடும்பத்தின் மூத்தவர்கள். 
ஒரு உள்ளூர் அரசியல்வாதியைப் பிடித்து அவர் மூலம் எப்படியாவது தங்களுக்கு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வார்கள். அதற்கு பிரதியாக அந்த அரசியல்வாதிக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தும் விடுவார்கள்.
 சமீபத்தில் சிவில் இஞ்ஜினியரான கௌசிக் சிறிய அளவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றை தொடங்கியிருக்கிறான்.
 பவானியின் கணவன் தான் தங்களது மாவட்ட கலெக்டர் என்று தெரிந்ததும் பரணிதரனின் சிபாரிசு இருந்தால் அவனுக்கு அரசு கட்டடங்களை கட்டமைக்கும் ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும் என்று நம்பினார்கள்.
அதே போல பவித்ராவை அந்த கௌசிக் திருமணம் செய்து கொண்டால் கலெக்டரின் சகலை என்று சொல்லியே தொழில் வட்டத்தில் நிறைய சலுகைகளை அவன் பெற்றுக்கொள்ளலாம் என்ற குறுக்கு புத்தியிலே தான் பவித்ராவை திருமணம் செய்ய கேட்டு வந்தது.
நேரடியாக திருமணத்திற்கு கேட்பதை விட தாய்…அவள் ஆசை என்று இந்த பெண்களிடம் சொன்னால் எளிதாக ஒத்துக் கொள்வார்கள் என்று நினைத்து வந்தால் எதுவுமே அவர்கள் நினைத்தது போல நடக்கவில்லை.
வேறுவழியில்லாமல் தலையை தொங்கபோட்டப்படி வாசலை நோக்கி சென்றவர்களை,”ஒரு நிமிஷம்…” என்று நிறுத்திய பவானி,”அப்புறம் இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தூக்கிட்டு இனிமேல் இந்தப்பக்கம் வராதீங்க” என்று கொஞ்சம் கண்டிப்பாக சொன்னவள்
“நாங்களும் எந்த காரணத்துக்காகவும் உங்க வாசலுக்கு வந்து நிக்க மாட்டோம்” என்று சொல்ல,’இவ்வளவு பேசுவாளா என் மருமகள்!’ என்று கோதை நாயகி  பவானியை வியந்து பார்த்தாரானால், குமரனோ தன் அண்ணி க்கு கோயில் கட்டி கும்பாபிஷேகமே செய்து விடும் பக்தனின் மனநிலையில் இருந்தான். 
*************

Advertisement