Advertisement

“நீ நாளைக்கு வர்றதா தானே ஃபோன் பண்ணும் போது சொன்ன ண்ணா?” 
“உங்களுக்கெல்லாம் சின்னதா ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான் முன்னாடியே வந்துட்டேன் டா” தன் தங்கையின் கேள்விக்கு ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தபடியே பதில் கூறியவன்  அண்ணன் மகளுக்காக கையை நீட்டினான், 
பின் ஞாபகம் வந்தவன் போல்,”இல்லடா… சித்தப்பா அல்டரை தொட்டுட்டேன். சோ குளிச்சிட்டே உன்னை தூங்குறேன் ஓகே” என்று கூறியபடியே வீட்டை நோக்கி நடக்க, ஒருவருடம் கழித்து நேரில் பார்க்கும் மகனை நலம் விசாரிக்கும் படலம் நடந்தது வீட்டில்.
அனைவரின் அன்புக்கும் பதில் சொல்லியவன் திரும்பிப் பார்க்க அதற்குள் தங்களின் ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டாள் பவித்ரா.
“ம்ஹும்… மறுபடியும் ஆரம்பிச்சுட்டா டா குமரா! இது சரிவராது’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன்,
‘இனி ரிசல்ட் வர்றவரைக்கும் குமரன் இங்க தான்…அதனால எப்படியாவது ஒருநாள் உன்னை தனியே தட்டிதூக்குறேன்” என்று மனதிற்குள் அவன் வயதுக்கே உரியமுறையில் சொல்லிக்கொண்டவனுக்கு அவளை தனியே சந்திப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை.
தங்கையும் பவித்ரா வும் சேர்ந்தே ஸ்கூட்டியில் கல்லூரிக்கு சென்று சேர்ந்தே திரும்பிவர  என்று இருந்ததால் அவனால் அவளை நெருங்கவே முடியவில்லை.
வீட்டிலோ பெரும்பாலான நேரங்களில் அறையில் இருந்து கொள்வது இல்லையோ நந்தினியின் பின்னே ஒளிந்து கொண்டு உலாவருவது என்றிருந்தாள் பவித்ரா. 
குமரன் வீடு வந்து ஒருவாரம் ஆகியிருக்க அன்று தனியே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பவித்ரா.
அவளை அனுப்பி விட்டு உள்ளே வந்த நந்தினியிடம்,”நீ காலேஜ் க்கு போகலையா நந்து” என்று குமரன் கேட்க
“இன்னையில இருந்து செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பிச்சிடிச்சி ண்ணா… எனக்கு இன்னைக்கு எக்ஸாம் இல்லை…பவிக்கு மட்டும் தான். அவளும் மத்தியானமே வந்திடுவா” 
நந்துவின் பதிலைக் கேட்டுக்கொண்டவன் மத்தியானம் போல பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பினான்.
அவன் கைகளில் வண்டி பவித்ராவின் கல்லூரியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. 
ஏன் போகிறோம்? எதற்காக போகிறோம்? அங்கு போனால் மட்டும் அவளோடு தனியாக பேசிவிட முடியுமா? இப்படி எந்த கேள்விகளுக்கும் விடை தெரியாமலேயே கல்லூரியை நோக்கி போய்க்கொண்டிருந்தான்.
 ஒரு திருப்பத்தில் ஸ்கூட்டியில் உட்கார்ந்திருந்தவாறே அங்கேயே நின்றிருந்த பவித்ராவை கண்டவனுக்கு பசித்தவனுக்கு பால்சோறே கிடைத்தது போல மனம் துள்ளியது., 
‘ஆனால் இந்த நேரம் இங்கு ஏன் நிற்கிறாள்?’ என்ற கேள்வி மனதில் எழ யோசனையோடு அவள் அருகில் போய் வண்டியை நிறுத்தியவன்
“இங்க என்ன பண்ணுற?” என்று கேட்க
அவனை நிமிர்ந்து பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் திரும்ப திரும்ப வண்டியை ஸ்டார்ட் செய்ய முயல அதுவோ நான் நகர்வேனா பார் என்பது போல் நின்றது.
அவள் செய்கையிலேயே வண்டியின் நிலை இன்னது தான் என்று இப்போது குமரனுக்கு புரிந்திருந்தாலும் பவித்ரா பதில் சொல்லாத விதத்தில் கோபம் கொண்டவன்”இங்க என்ன பண்ணுறன்னு கேட்டேன்” என்றான் மறுபடியும் அழுத்தமாக
“ம்ம்…வண்டி ஸ்டார்ட் ஆகமாட்டேங்குது” போனால் போகட்டும் என்று முணுமுணுப்பாக வந்தது பதில் பவித்ராவிடமிருந்து.
“அப்போ இது வரைக்கும் எப்படி வந்த?”
இந்த கேள்வியில் லேசாக அவனை நிமிர்ந்து பார்த்தவள் லேசாக பின்பக்கம் திரும்பி கையை நீட்டியவாறே,”இந்த டர்னிங் வரை நல்லா தான் வந்தது. அதுல திரும்புறதுக்கு லேசா வண்டியை ஸ்லோ பண்ணுனேன் இஞ்சின் ஆஃப் ஆகிடிச்சி” என்றாள் 
“ஓஹ்…” என்றவாறே வண்டியிலிருந்து இறங்கியவன்,”வண்டி வாங்குன பிறகு மொத்தம் எத்தனை சர்வீஸுக்கு போயிருக்கு” என்று கேட்டவாறே ஸ்கூட்டிக்கு பக்கத்தில் வர
“ம்ம்… இரண்டு… இல்லையில்லை மூனு…” என்று சரியாகச் சொல்லத் தெரியாமல் தடுமாறியவள் உதடு கடிக்க, அவன் பார்த்த பார்வையில்,”இல்லை…நந்துவுக்கு தான் அதெல்லாம் தெரியும்” என்றபடி வேகமாக வண்டியிலிருந்து இறங்கினாள்.
 அவனோ வேண்டுமென்றே அவளை நெருங்கி வந்து  லேசாக உரசியபடியே வண்டியை அவள் கைகளிலிருந்து  வாங்கி, “அப்ப உனக்கு என்ன தான் தெரியும்? ம்ம்…” என்று இருபுருவங்களையும் ஏற்றி இறக்கியபடியே கேட்க, அவனின் இந்த செயலில் லேசாக விதிர்விதித்துப் போனாள் பவித்ரா.
 சட்டென்று வண்டியிலிருந்த தன் கல்லூரி பையை கைநீட்டி எடுத்தவள் சாலையை விட்டிறங்கி அங்கிருந்த மரத்திற்கு கீழே பையை தன்நெஞ்சோடு அணைத்தவாறு நின்று கொண்டாள்.
அவள் அவ்வாறு நின்றது வேகமாக அடித்துக் கொள்ளும் அவளின் இதயத்தின் ஓசை குமரனவனுக்கு கேட்டு விடக்கூடாது என்று முயற்சி செய்து தடுத்தது போலிருந்தது.
 குமரனின் மனசாட்சியோ,’டேய்…நட்டநடு ரோட்ல சின்னப்புள்ள கிட்ட என்னடா பண்ணுற நீயி?’ என்று அவனை அதட்ட
‘ம்ம்..இது ரோடு தான், அவளும் சின்னபுள்ள தான்,  இல்லை ன்னு யாரு சொன்னா? ஆனால் எனக்கு இதைவிட்டா என்னோட எண்ணத்தை அவகிட்ட சொல்லச் சரியான நேரம் கிடைக்குமான்னு தெரியலையே. அதனால நான் இப்போ எம்மனச அவகிட்ட சொல்லத்தான் போறேன்,நீ வாய மூடிக்கிட்டு உன் வேலையை பாத்துட்டு போய்ட்டே இரு’ என்று அதை அதட்டியவன்
வண்டியை கிக் செய்து ஸ்டார் செய்து பார்க்க அதற்கும் அது அசையாமல் நிற்கவே லேசாக வண்டியை சாய்த்துப் பார்த்தான்.
 அங்கு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்த இரு வயர்கள் இணைப்பு விடுபட்டுகிடப்பதை கண்டவன் அதை நன்றாக பிணைக்க இப்போது கண்டிப்பாக வண்டி ஸ்டார்ட் ஆகும் என்று தெரிந்தவன், வண்டிச் சாவியை கையிலெடுத்துக் கொண்டு பவித்ராவின் அருகில் சென்று
“உனக்கு வேற என்ன தெரியும் ன்னு நான் கேட்டதா எனக்கு ஞாபகம்” என்றவாறே வலதுகையால் தன் தலைமுடியைக் கோதிக்கொண்டு, பதில் ஏதும் சொல்லாத பவித்ராவின் முகத்தை உற்றுப் பார்த்தபடியே
“எனக்கு உன்னை பிடிக்கும் ங்குறதாவது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டவன்,”எந்த அளவுக்கு பிடிக்கும்னா… ம்ம்…இந்த அளவுக்கு” என்று அவன் தன்னிரு கைகளாலும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிப்பது போல செய்கையால் காண்பிக்க
 தன்னைநோக்கி நீண்ட அவன் கைகளில் அனிச்சைசெயலாக ஒரு அடிபோட்டவள், அரண்டே போய்விட்டாள் அவன் செயலில்.   
இப்போது சிறிதுநாட்களாக தான் குமரனின் பார்வைக்கான அர்த்தம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற எண்ணமே பவித்ராவிற்கு வந்திருக்கிறது. 
அவளுக்குமே அவன் மீது ஒரு ஈர்ப்பு சமீபகாலமாக தலைதூக்கத்தான் செய்திருந்தது. ஆனால் அதை இன்னதென்று வரையறுக்க முடியாமல் அலை மீது விழுந்த சிறு துரும்பாய் அல்லாடிக் கொண்டிருக்கிறது அவள் இளமனது.
 ஆனால் இவனோ இன்று நேரடியாகவே விஷயத்தை சொல்லிவிட அதற்கு எப்படி எதிர்வினையாற்ற என்று தெரியாமல்,”என்னை உங்களுக்கு ரொம்ப புடிச்சதுனாலத் தான் அன்னைக்கு அல்டரை எம்மேல ஏவி விட்டீங்களா?” என்று கேட்க, இப்போது அரண்டு போவது குமரன் முறையானது. ‘
அம்மாடியோவ்! இவ இன்னுமா அதையெல்லாம் ஞாபகம் வச்சிருக்கா!’ என்று மலைத்துப் போனவனது மனமோ
‘சரி..இதை ஞாபகம் வச்சிருக்கிறவ அன்னைக்கி கடல்ல இருந்து அவளை நான் அள்ளிக்கிட்டு வந்ததை மட்டும் வசதியா மறந்துட்டாளே!’ என்று அங்கலாய்த்து கொண்டது.
ஹஹஹ…மனதிற்குள் மட்டும் தான் அந்த அங்கலாய்ப்பு. பின்னே வாய்விட்டு சொன்னால் ‘எனக்கு செய்ததை  சொல்லி காட்டியவன் தானே நீ என்று ஏதாவது ஒரு மாமாங்கத்தில் இப்போது கேட்பது போல கேட்டுவிட்டால்? குமரனின் நிலை என்னவாவது?’ 
தன்னை இவ்வளவு நேரமும் திணறடித்தவன் இப்போது
அசந்து போய் நிற்பதை பார்த்தவளின் மனதில் சந்தோசம் குமிழ்விட  அவன் எதிர்பாராத நேரத்தில்  அவன் கையிலிருந்த தன் வண்டிச் சாவியை பிடுங்கிக்கொண்டவள் சாலைக்கு வந்து வண்டியைத் தள்ளியபடியே நடக்க ஆரம்பித்தாள்.
அவளின் தில்லாலங்கடி தனத்தை ரசித்து சிரித்தவன்
“ஏய் அறிவாளி…நல்லா ஓடுற வண்டியை ஏன் தள்ளிகிட்டே போற? ஏதாவது வேண்டுதலா என்ன?” என்று சத்தமாக கேட்டபடியே சிரிக்க
அவன் சொல்லியதன் அர்த்தம் புரிந்து பவித்ரா வண்டியை ஸ்டார்ட் செய்து பார்க்க, இப்போது அவள் பேச்சை கேட்டது வண்டி.”கள்ளன்… சரி செய்துட்டு தான் எங்கிட்ட இவ்வளவு நேரமும் பாவ்லா காமிச்சிருக்கானா?” 
லேசான சிரிப்போடு வண்டியை நகர்த்தியவள் சட்டென்று நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருந்த குமரனைப் திரும்பிப் பார்த்து நாக்கை துருத்தி, கண்களை உருட்டி அழகுகாட்டி விட்டு வண்டியில் ஏறி பறக்க
உல்லாசச் சிரிப்போடு தன் வண்டியில்  அவளை பின்தொடர்ந்து சென்றான் குமரன்.
************************
மேலும் ஐந்து வருடங்கள் கழிந்திருந்தது. வழக்கம் போல அந்த வீட்டில் காலைநேர பரபரப்பு தொற்றிக் கொண்டது.
“ஏய் பவி! டைனிங் டேபிளில் இருக்கிற லஞ்சை அப்படியே இரண்டுபேருக்கும் கொஞ்சம் பேக் பண்ணிருடி” அவசர அவசரமாக தலையை பின்னிக் கொண்டிருந்த பவானி டைனிங்டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த பவித்ராவிடம் சொன்னாள்.
பொதுவாக எப்போதுமே அந்த வீட்டில் வெளியே செல்பவர்களுக்கு மதிய சாப்பாடு  கட்டுவது கோதை நாயகி தான். 
ஆனால் இன்று பரணிதரன் பவானி தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ‘மதிவதனி’ வழக்கத்திற்கு மாறாக தன் பாட்டியின் இடுப்பை விட்டு இறங்க மறுக்க அவளை தூக்கிக்கொண்டு அலைகிறார் கோதை நாயகி.
“நானே ஸ்கூல் பஸ் இப்போ வந்துடும்னு அவசர அவசரமா சாப்பிடுறேன்… இதுல என்னையைப் போய் பேக் பண்ணச்சொல்லுறியே க்கா?” சிணுங்கியவளின் அருகில் வந்த நந்தினி
“நான் பேக் பண்ணுறேன், நீங்க மெதுவா புறப்படுங்க அண்ணி” என்றவள், அங்கிருந்த மதியசாப்பாட்டை அதற்குரிய டப்பாக்களில் அடைத்தபடியே
“ஏன் பவி? உங்கிட்ட படிங்கிற பிள்ளைங்க எப்படி தேறிடுவாங்களா டி?” என்று கிண்டலாக கேட்க
அவளைப் பார்த்து முறைத்தபடியே,”வருங்காலத்துல நீ மேனேஜரா போகப்போற பேங்க் திவாலாகலைன்னா எங்கிட்ட படிக்கிற பிள்ளைங்களும் தேறிடுவாங்க” என்று கெத்தாக சொல்லியபடியே எழுந்து சென்றாள் பவித்ரா.
 பவித்ரா தன் இளங்கலை பட்டத்தை முடித்த கையோடு பிஎட்  முடித்திருக்க பக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் இந்த வருடத்திலிருந்து ஆசிரியராக பணிபுரிகிறாள். 
அவள் பள்ளிக்கு செல்லும் காலத்தில் வீட்டு வாசலில் இருந்து எப்படி பள்ளி வாகனத்தில் பள்ளிக்குச் சென்றாளோ அப்படியே  இப்போதும் செல்கிறாள்.
நந்தினியோ கணிதத்தில் எம் எஸ்சி முடித்து பேங்க் எக்ஸாம் எழுதுவதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கூட அவளுக்கு ஒரு தேர்வு இருக்கிறது.
அலுவலகத்திற்கு செல்வதற்காக ரெடியாகி வந்த பவானி யிடம் வெளியே இருந்து ஓடிவந்த சிந்து,”அம்மா! நாளைக்கு நாம சர்க்கஸ் போறோம் தானே?” என்று கேட்க
“இன்னைக்கு சாயங்காலம் அப்பாவும், சித்தப்பாவும் வர்றாங்க பாப்பு… அதனால கண்டிப்பா நாளைக்கு போறோம்” என்று உறுதி சொன்னவள்,
“பெட்ல உன் யூனிஃபார்ம் எடுத்து வச்சிருக்கேன் பாப்பு… தாத்தா  இப்போ வந்துடுவாங்க. நீ போய் சீக்கிரம் கிளம்பு டா” என்று சொல்ல அழகாக தயாராகிவந்த சிந்து உள்ளூரில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் தான் படிக்கிறாள்.
மதியழகன் தான் காலையும் மாலையும் பேத்தியை பள்ளியில் கொண்டு விட்டு அழைத்து வருவது.
விதை வீரியமாக இருந்தால் எந்த நிலத்தில் போட்டாலும் முளைக்கும்.  அதுபோல படிக்கிற பிள்ளைகள் எந்த பள்ளியில் படித்தாலும் படிக்கும் என்ற எண்ணம் கணவன் மனைவி இருவருக்குமே இருந்ததால் ஒருமனதாக தங்கள் மகளை அரசு பள்ளியிலேயே சேர்த்திருந்தார்கள்.
பரணிதரன் இந்த ஐந்து வருடங்களில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பதவிவகித்தவன் இப்போது சமீபத்தில் தான் ஈரோடு மாவட்ட கலெக்டராக பதவியேற்று இருக்கிறான்.
அரசாங்கம் அவனுக்கு கொடுத்திருக்கும் வீட்டில் தங்கியிருப்பவன் பெரும்பாலும் வார இறுதியில் வீட்டிற்கு வந்து விடுவான்.
குமரன் இப்போது பெங்களூருவில் எஸ்பி யாக இருக்கிறான். அவன் இரவிபுரத்துக்கு வந்து கிட்டத்தட்ட ஒருவருடமாகப் போகிறது.
அலுவலகப் பையை எடுத்து கொண்டு வெளியே வந்த பவானி அங்கிருந்த கோதைநாயகியிடம்  தான்  செய்து வைத்திருக்கும் வேலைகளையும் அடுத்து வரும் பூவம்மாவிடம் என்னென்ன வேலைகள் செய்யச் சொல்ல வேண்டும் என்பதையும் பட்டியலிட்டவள்
“நேரத்துக்கு எல்லாரும் சாப்பிடுங்க அத்த” என்று சொல்லி அவர் கையிலிருந்த தன் மகளை முத்தமிட்டு வண்டியில் ஏறி தன் வேலையிடம் நோக்கி பறந்தாள்.
 இன்று மாலை கணவன் வருவான் என்ற எண்ணம் தந்த உற்சாகம் அதிகப்படியான அலுவலக வேலைகளிலும் பவானியை களைப்படையாமல் வைத்திருந்தது
ஆவலோடு மாலை வீடு வந்த பவானி வீட்டிற்கு முன் விலையுயர்ந்த கார் ஒன்று நிற்பதை பார்த்தாள். 
‘இது வழக்கமாக கணவன் வரும் வாகனமல்ல. அதனால் வந்திருப்பது கணவனல்ல என்று கணக்கிட்டவள், வந்திருப்பது யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தோடே வீட்டுக்குள் நுழைந்தாள்.
அங்கே ஹாலில் அறுபது வயது மதிக்கத்தக்க இரு ஆண்களும் அவர்களின் மனைவிமார்கள் போன்ற தோற்றத்தில் இரு பெண்களும் இருந்தனர்.
கூடவே ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனும் அமர்ந்திருந்தான்.
‘யார் இவர்கள்? இதற்கு முன் இவர்களை நாம் பார்த்ததே இல்லையே?’ என்று நினைத்த பவானிக்கு, அங்கு புதிதாக இருந்த அந்த இரண்டு ஆண்களின் முகங்கள் மட்டும் கொஞ்சம் பரிச்சயமாய் இருந்தது போல் தோன்றியது.
‘யாராக இருக்கும்?’
யோசிக்கத் தொடங்கினாள் பவானி…

Advertisement