Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 02
‘காக்க காக்க கனகவேல் காக்க…
நோக்க நோக்க நொடியினில் நோக்க…
தாக்க தாக்க தடையற தாக்க…’
அந்த ‘சாம்சங்’ கைபேசியின் வழியே தங்களின் தெய்வீகக்குரலில் ‘எம்பெருமானே! உன்னை நம்பும் எல்லா உயிர்களையும் எல்லா இடர்களிலிருந்தும் காத்தருள வேண்டும்’ என்று சஷ்டி கவசம் மூலம் உருகி கொண்டிருந்தார்கள் சூலமங்கலம் சகோதரிகள்.
“பவி! பவிம்மா…எழுந்திருடா…” இந்த குரலுக்கு சொந்தக்காரி ‘பவானி.’ அழகுக்கு மறுபெயர் பவானி என்றும் சொல்லலாம். தன் படைப்பின்  ஒட்டு மொத்த அழகையும் பிரம்மன் இந்த ஒற்றை பெண்ணில் அடக்கிவிட்டானோ! என்று எண்ணும் அளவிற்கு பேரழகி.
காலையிலேயே எழும்பி குளித்து, என்றும் தங்களுக்கு துணை நிற்கும் இறையை வணங்கி, நெற்றியில் துலங்கும் திருநீறோடு கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டே தங்கையை எழுப்பிக் கொண்டிருந்தாள்.
“ம்ம்…அக்கா! இப்பவே எழும்பி என்ன பண்ணப்போறேன் க்கா” என்று சிணுங்கலோடு  வந்தது பதில், பவி என்ற பவித்ராவிடமிருந்து.
கூடவே “க்கா! பத்து மணிக்கு ஆஃபீஸுக்கு போக நீயும் எதுக்கு இப்பவே எழுந்து வேலை பாக்குற. வாக்கா…வா… வந்து நீயும் இன்னும் கொஞ்ச நேரம் எங்கூட தூங்கிட்டு போ ” என்று எழமறுத்ததோடு தன் செயலுக்கு துணைவேறுத்தேடியது.
“நல்லா இருக்குடி நீ சொல்லுறது. இப்ப நீ எழும்புனாலே நான் வேலை  எல்லாம் முடிச்சிட்டு வெளியே கிளம்ப சரியா இருக்கு டைம். இதுல நான் வேற வந்து செகண்ட் ரவுண்ட் தூங்குனா, விளங்கிடும்” சிரிப்போடு வந்தது பதில்.
“பவி!”திரும்பவும் அழைத்த அக்காவின் அழுத்தமான குரலுக்கு பணிந்து, படுக்கையறையிலிருந்து கிளம்பி தமக்கையின் தோள்களில் வந்து மையம் கொண்டது அந்த பதினாறே வயதான இளஞ்சிட்டு.
“வீட்டுல தனியே இருக்க ரொம்ப போரடிக்குது க்கா” என்று எப்போதும் போல தன் குறையை வாசிக்க, “
இன்னும் இரெண்டு நாள் தான் டா. திங்கள்கிழமைல இருந்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிடலாம். மற்ற கிளாஸஸ் க்கு எல்லாம் ஸ்கூல் ரீஓப்பன் ஆகியாச்சு. நீ லெவன்த் இல்லியா, அதான் ஒருவாரம் லேட்” என்றாள் தமக்கை.
“சரி…சரி… இப்படியே நேரத்தை போக்காமல் சீச்கிரமா பிரஸ் பண்ணி காஃபியை குடிச்சிட்டு, குளிக்கிற வழியைப் பாரு, என் செல்லம்ல”  என்று தங்கையைச் கெஞ்சி கொஞ்சி குளியலறைக்கு அனுப்பி வைத்து விட்டு தனது வேலைகளை தொடர்ந்தாள் பவானி.
காலை டிபனோடு மதிய சமையலையும் முடித்து தங்கைக்கு மதிய உணவை ஹாட் பாக்ஸில் வைத்து பத்திரப்படுத்தி, தனக்கும் லன்ஞ் பாக்ஸ்சில் எடுத்து வைத்தவள் வேலை பார்ப்பது கோபிச்செட்டிப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டாக. 
குளித்து முடித்து வந்த பவித்ராவிடம் இட்லிகள் வைத்த தட்டை நீட்டிக்கொண்டே,” அம்மு!  மத்தியானமும் கரெக்டா சாப்பிட்டுறணும். அப்புறம் தெரியாதவங்க யார் வந்து கூப்பிட்டாலும் கதவை திறந்துட்டு வெளியே வரக்கூடாது. ஏதாவது அவசரம் ன்னா உடனே அக்காவுக்கு ஃபோன் பண்ணிடணும்.  நமக்கு யாரும் கிடையாது, நம்மை நாமே தான் பாத்துக்கணும் என்று எப்போதும் போல சொல்ல ஆரம்பிக்க,
” நமக்கு அம்மாவும் அப்பாவும் இருந்துருக்கலாம் இல்லக்கா. இருந்துருந்தா நீ இப்படி கஷ்டப் படவேண்டாம்.  நானும் இப்படி நீ வர்ற வரைக்கும் தனியே வீட்டுல இருக்கவேண்டாம்” என்றாள் பவித்ரா சோகமாக.
தங்கையின் பேச்சில் தாய், தகப்பனின் ஞாபகம் எப்போதும் போல் தலைதூக்க, மனம் கசிந்துருகி நின்றவளிடம்,
“வேணும்னா நாம முன்ன மாதிரி பரணி மாமா வீட்டு பக்கத்துல போய்டுவோமா க்கா. நீ அங்க இருந்து இங்க  ஆஃபீஸுக்கு உன்னோட ஸ்கூட்டில வந்துடு. நான் முன்ன மாதிரி ஸ்கூல் விட்டு வந்து  நம்ம நந்து வீட்டுல இருந்துக்குவேன்.  உனக்கும் கவலையில்லை பாரு” என்று  எளிதாக தீர்வு கூறினாள் தங்கை அவர்களின் பிரச்சனைக்கு.
ஆனால் பெண்ணவளோ ‘பரணி மாமா’ என்ற ஒற்றை வார்த்தைக்கே அதிர்ந்து “மாமாவா!” என்று கேட்க,
“ஆமாக்கா! அதான் நம்ம நந்து இருக்குல்ல நந்து அவளோட அண்ணா. நம்ம திவ்யா அக்கா, குமரு, கோதை அத்தை, மதி மாமா.. என்று அந்த குடும்பத்திலுள்ள அத்தனை பேரையும் வரிசையாய் அடுக்கினாள், தன் அக்கா அவர்களையெல்லாம் மறந்து விட்டாளோ என்று குற்றம் சாட்டும் பார்வையோடு.
“அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு பவி. ஆனால் நீ…நீ…  பரணிதரனை அண்ணான்னு தான டி கூப்பிடுவ? இப்ப என்ன புதுசா மாமா ன்னு கூப்பிடுற?”
“அது பரணி மாமாவே தான் என்னை அப்படி கூப்பிட சொன்னாங்க க்கா”
கேட்ட பதிலில் விதிர்விதிர்த்துப் போன பவானி,” இது எப்போ நடந்துச்சு?” என்றாள் ஆயாசத்தோடு.
“அது நாம ஊரை விட்டு கிளம்புறதுக்கு முந்தின நாள் காலையில, நான் நந்துவைப் பார்க்க போகும் போது வீட்டுல பரணி மாமா  இருந்தாங்க. நான்  நந்து எங்கண்ணா கேட்டேனா, அப்பதான் அவங்க என்னை இனி அண்ணா சொல்லாதே ‘மாமா’ சொல்லுன்னு சொன்னாங்க” என்றாள் உற்சாகமாக.
ஊரைவிட்டு கிளம்புவதற்கு முதல் நாள் காலை என்றவுடன் உடைந்தே போனாள் பவானி. ‘தன்னிடம் பேசுவதற்கு முன்னமே தன் தங்கையிடம் பேசியிருக்கிறான்’ மனம் ரகசியமாக ஓலமிட்டது.
அந்த ஒரு விஷயம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?  ‘ஒருவேளை தங்களுக்கும்  குடும்பமாக வாழும் பாத்தியதைக் கூட கிடைத்திருக்கலாம். யார் கண்டது.”
ஒன்றன் பின் ஒன்றாக எழுந்த நினைவுகளை  அடக்க முடியவில்லை அவளால். மனம் அவள் சொல்லச்சொல்ல கேட்க்காமலேயே  இரவிபுரத்தை நோக்கி பறந்து சென்றது…
பவானியின் பெற்றோர் வாசுதேவனும், சிந்தாமணியும் கலப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். வாசுதேவன் ரொம்பவும் சாதாரண பொருளாதார பிண்ணணியைக் கொண்ட பையன். சிந்தாமணியோ ஓரளவு வசதிவாய்ப்புடைய குடும்பத்து பெண்.
இவர்களின் திருமணத்திற்கு பின் ஊரில் எதிர்ப்பு கிளம்ப,  வாசுதேவன் தன் இளம் மனைவியோடும் வயதான தாயோடும் தங்களின் புதிய வாழ்க்கையை நோக்கி ஆயிரம் கற்பனைகளோடு வந்திறங்கிய இடம் தான் இரவிபுரம்..
அவர்களிடம் பணங்காசுக்கு பஞ்சம் இருந்ததேயொழிய பாசத்திற்கு இல்லை. திருமணம் முடிந்த மறுவருடமே அவர்களின் அன்பிற்கு சாட்சியாக பவானி வந்து பிறந்தாள். கொண்டாடித்தீர்த்தார்கள் அத்தம்பதியினர் தங்களின் காதலின் சின்னத்தை.  வாசுதேவனின் அம்மா தன் மருமகளுக்கு பிள்ளை வளர்ப்பில் உறுதுணையாக இருந்தார்.
பொதுவாகவே வாசுதேவன் பழகுவதற்கு இனிமையான நபர். கூடவே பேச்சுத்திறமையும் உண்டு. நேர்மையின் திருவுரு வேறு. எல்லாவற்றுடன் அவரது இளங்கலை பட்டமும் கூடுதல் தகுதியாக இருக்க அங்கேயே கிராமபஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது.
தான் சிறிய அளவில் பார்த்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலையும் அவர் விட்டுவிடவில்லை. “நாமதான் வாடகை வீட்டில் இருக்கிறோம் மணி. நம்ம பிள்ளைகளாவது சொந்த வீட்டுல வாழவேண்டும்” என்று சொல்லிச் சொல்லியே தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை வீடுகட்டுவதற்காக சேமித்து வந்தார்.
சிந்தாமணியும் சிறுபெண்ணாக இருந்தாலும் கணவனின் வரவுக்குள்ளே கட்டுசெட்டாக குடும்பம் நடத்தி அவனின் சேமிக்கும் குணத்திற்கு துணைநின்றாள் என்று தான் சொல்லவேண்டும்.
கணக்கா போடுகிறாய் மானிடா கணக்கு! என்று விதி இவர்களைப் பார்த்து வில்லங்கமாகச் சிரிக்க, ஓருநாள் இரவு மணற்கொள்ளையைத் தடுக்க ஆற்றுப்படுகைக்கு கிராமநிர்வாக அலுவலருடன் சென்ற வாசுதேவன் உயிருடன் திரும்பி வரவில்லை.
அந்த மனித உருவத்தில் இருந்த அரக்கர்களின் அட்டூழியத்தால் இரண்டு குடும்பங்கள் தங்களின் தலைவனை இழந்து தவித்தன.
அந்த நேரத்தில் சிந்தாமணி  ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாய்மையடைந்திருந்தார். ஏழுமாத கர்பத்தை மட்டும் அவர் சுமந்திருக்கவில்லையெனில்  கணவனுடனே தனது ஆவியையும் கலந்திருப்பாரோ என்னவோ?
அதன் பிறகு எல்லாம் சுமையாகிற்று அவருக்கு…தாயைப்போல தாங்கிய மாமியார் மட்டும் இல்லையென்றால் என்ன கதியடைந்திருப்பாளோ அந்த பேதை.
தனது வயிற்றுச்சுமையை இறக்கி பூக்குவியலைப் போன்ற பெண்குழந்தையை மாமியாரின் கைகளில் ஒப்படைத்து தம்பதியர் ஏற்கனவே முடிவு செய்திருந்தது போல பவித்ரா என்று பெயரிட்டு மகிழ்ந்தவளின் உயிர் பறவை  குழந்தை க்கு ஒன்றரை வயதிருக்கும் போது தனது தலைவனைத் தேடி பறந்தேவிட்டது.
ஆரம்ப நாட்களில் இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு திணறினாலும் போகப்போக சமாளித்துக்கொண்டார் பெரியவர். அதற்கு சிறுமியான பவானியின் ஒத்துழைப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.
நாட்கள் அதன் போக்கில் செல்ல… வீட்டு உரிமையாளர் வீட்டை புதிப்பிக்க போவதாய் சொல்லி வீட்டை காலிப்பண்ணச் சொல்ல அப்போது தான் பரணிதரனின் வீட்டுக்கு எதிரில்  இரண்டு வீடு தள்ளி இருந்த வீட்டுக்கு குடிவந்தது பவானியின் குடும்பம்.
“அக்கா! அக்கா…” என்று தன் தோள்தட்டி அழைத்த தங்கையின் குரலுக்கு நினைவிற்கு வந்த பவானி, “ஹாங்… என்ன செல்லம்” என்று கேட்க, தமக்கையின் தட்டைக் காண்பித்து ,” சாப்பிடுக்கா நேரமாகிடிச்சி பாரு” என்று நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தாள்,
அதன்பின் சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி, ஆஃபீஸுக்கு கிளம்பி வந்தவளிடம் ,” இரவிபுரம் கோபியிலிருந்து பக்கந்தானே க்கா. ஒருநாள் நாம ரெண்டு பேரும் நந்து வீட்டுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்டு அதிர்ச்சியையே வரவைத்தாள் பவித்ரா. 
பொதுவாக எப்போதுமே இப்படி கேட்ப்பவளல்ல பவித்ரா. இரவிபுரத்திலிருந்து சென்ற புதிதில் தன் நட்பை தேடியிருக்கிறாள் தான். அதற்கு அக்கா தன் வேலையைக் காரணம் காட்டி போகமுடியாததற்கு காரணங்களை சொல்லும் போது அப்படித்தான் போல என்று நம்பிக்கொண்டது அந்த சின்ன இதயம்.
‘ஆனால் இப்போதோ, ஊருக்கு அருகிலேயே வந்ததும் ரொம்பவே தேடுகிறது போல.’
‘ம்ஹும்… எவ்வளவு ஈசியா கூட்டிட்டு போன்னு கேக்குறா. அங்கே போய் நின்றால் அதை  பரணிதரனின் அம்மா விரும்புவாங்களா? நடக்குற காரியமா இது?’
நெஞ்சுக்குள் ஓடும் எண்ணங்களை வாய்விட்டு சொல்ல முடியாதவளாய் மௌனமாக கிளம்பும் அக்காவை பார்த்து “கண்ணுக்கு மை வைக்கலை. வச்சிட்டு போக்கா” என்று அக்கறையோடு சொன்னதோடில்லாமல் காஜலை எடுத்து வந்து அக்காவின் கண்களுக்கு மையிட்டாள் தங்கை நல்லாள்…
“கதவை பூட்டிக்கோ” என்றவளிடம் ” நீ போன உடனே நான் பஸ் பிடித்து இரவிபுரத்துக்கு போய்ட மாட்டேன். பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருப்பேன். நீ கவலைப்படாமல் போய்ட்டு வா க்கா” என்று உச்சகட்ட அதிர்சியை தமைக்கைக்கு அளித்துவிட்டே உள்ளே சென்றாள் இளையவள்…
தனக்கு கிடைத்த பணிஇடமாறுதலை சபித்துக்கொண்டே, ‘இன்னும் எத்தனை நாளைக்கு  இவளை  சமாளிக்கமுடியுமோ தெரியலையே கடவுளே!’ என்று கலங்கியவள்,
‘தன்மானத்தை விட்டு தன்னால் அங்கு போய் நிற்கமுடியுமா?’ ஏதேதோ எண்ணத்தோடே தன் ஸ்கூட்டியை கிளப்பியவளின் நினைவுகள்  திரும்பவும் இரவிபுரத்திலேயே சென்று நின்றது.
பவானி பத்தாம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில் தான் பரணிதரன் வீட்டுக்கு எதிர் புறம் குடிவந்தது அந்த சின்ன குடும்பம்.
கூடவே அப்பாவின் தாயார் இருந்ததால் பாதுகாப்பு க்கு குறையில்லை. அதே போல் வீடுகட்ட என்று பெற்றோர் சேமித்த பணம் அவர்களின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு தற்சமயம் உதவியாய் இருந்தது.
ஆனால் அது எத்தனை நாட்களுக்கு? ‘குந்தித் தின்றால் குன்றும் தேயுமாம்’ அப்படி இருக்கையில் இந்த சிறு சேமிப்பு எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்ற எண்ணம் அந்த சின்ன வயதிலேயே பவானியின் தலையைக் குடையும்.
தன் குடும்ப சூழல் படித்து முடித்த உடன் தான் வேலைக்கு போக வேண்டும் என்று இருக்க, கண்டிப்பாக அதற்கு கூடுதல் தகுதி வேண்டும் என்று அந்த வயதிலேயே ‘தட்டச்சு வகுப்புக்கு’  போக ஆரம்பித்தாள் பெண்.
பள்ளி படிப்பு, கூடுதல் பயிற்சி, வீட்டு வேலை என்று நிற்க நேரமில்லாமல்  சக்கரம் போலச் சுழலுவாள் பவானி  . இந்த சூழ்நிலையில் அவளுக்கு அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் அதிகம் பழகக் கூட நேரம் கிடைக்காது.
ஆனால் அவளின் தங்கையோ தன் வயதையொத்த பரணிதரனின் தங்கை நந்தினியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.
ஒட்டிப்பிறந்த இரட்டையரோ என்று எண்ணும் அளவிற்கு  இருவரின் நட்பும் நாளுக்கு நாள் வளர்ந்தது.
வருடங்களும் வாழ்க்கையும் யாரையும் எதிர்பார்க்காமல் முன்நோக்கி செல்ல திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அந்த இளஞ்சிட்டுகள் தங்களின் ஒரே இரத்த சொந்தமான பாட்டியையும் இழந்தனர்.
அப்போது பவானி கல்லூரியில்  பி.எஸ்சி கணிதப் பிரிவில் இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.
அக்கம்பக்கத்து நல்ல உள்ளங்களின் உதவியோடு பாட்டியை நல்லமாதிரி வழியனுப்பி வைத்த பவானிக்கு, இப்போது பரணிதரனின் குடும்பத்தாரே கைகொடுத்தனர்.
தான் கல்லூரி விட்டு வரும் முன் பள்ளி விட்டு வீடு வரும் தங்கை, நந்தினி கூடவே அவர்கள் வீட்டில் இருந்து கொள்வாள். சமயத்துக்கு இருவரும் சேர்ந்து படிக்க விளையாட என்று பவித்ராவிற்கு ஒரு பாதுகாப்பான கூடு கிடைக்க சற்றே மனம் நிம்மதி ஆனது பவானிக்கு.
தங்கை சரளமாக அங்கு பழக பெண்ணவளோ அனாவசியமாக அங்கு சென்று நிற்கமாட்டாள். எதிர்பாராமல் கண்டுவிட்டால் ஒரு சின்ன சிரிப்பு, ஏதாவது கேட்டால் பேசுவது என்று தான் இருக்கும் அவளது நடவடிக்கை. அவர்கள் வீட்டுக்கு அவளின் விஜயம் விரல் விட்டு எண்ணக் கூடிய தடவைகளே  இருந்திருக்கும்.
இதற்கு  அவள் பரபரப்பான வாழ்க்கை மட்டுமல்லாமல் வாலிப வயதில் அந்த வீட்டில் இருந்த பரணிதரனும் கூட ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.
சமீபகாலங்களாக அவனின் பார்வைகள் இவளிடம் ஏதோ சொல்லத் துடிக்கிறதோ என்ற சந்தேகம் அவளுக்கு   தோன்றத் தொடங்கியது. அதுவும் அவனின் அக்காவின் திருமணத்திற்கு பிறகு அந்த பார்வையை கொஞ்சம் அதிகமாகவே உணர்ந்தாள் பெண்ணவள்.
பரணிதரன் சென்னையில் தங்கியிருந்து வேலைபார்த்த  காலம் அது.   இரண்டு வாரத்திற்கு ஒருதடவையாவது கண்டிப்பாக வீடு வந்து விடுவான்.
  அன்று ஞாயிற்றுக்கிழமை, பரணி ஊருக்கு வந்திருந்த தினம்.
காலையில் சாப்பாட்டுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு நந்தினி வீட்டுக்கு சென்ற பவித்ரா மதிய உணவு நேரம் கழிந்தும் வீடு வராததால் வேறு வழியில்லாமல் அவளை அழைத்து வர பரணிதரன் வீட்டு வளாகத்திற்குள் மெதுவாக தயங்கித் தயங்கியே நுழைந்தாள் பவானி.
அதுவும் நாயகனின் இரும்புக்குதிரை நிற்கும் இடத்தை உற்றுப்பார்த்து அது இல்லை என்றவுடன் அவனும் இல்லை என்ற தைரியத்தில் கொஞ்சம் நிம்மதியுடனே உள்ளே நுழைந்தாள்.
அந்த இரும்புக்குதிரை அந்த வீட்டின் இளவல் குமரனுடன் குளிப்பதற்கு (‌water wash ) சென்றிருந்தது பாவம் அவளுக்கு தெரியவில்லை.
அதுமட்டுமா அவளுக்கு தெரியவில்லை! அன்று காலை அந்த வீட்டின் தலைமகனின் திருமணத்தைப் பற்றி பெற்றோர் பேச்செடுக்கும் போது “நம்ம பவானியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா” என்று மணமகளாய் தன்னை அவன் முன்னிலைபடுத்தியிருந்ததும்,
அதற்கு அவன் தந்தை சம்மதம் சொன்னதோடல்லாமல் “நாளை மறுநாள்  நிறைந்த பௌர்ணமி. அதனால் நம்ம திவ்யாவை வைத்து அன்றைக்கே  பிள்ளைகிட்ட பேசிடலாம்” என்று சொன்ன விஷயமும் தான் அவளுக்கு தெரியவில்லை.
தயங்கித் தயங்கி உள்ளே வந்த பவானியை கண்ட மதியழகன், மகனின் ஆசையால் புதிதாக உண்டான சொந்தத்துடன் அவள் வந்த நோக்கம் புரிந்து “பிள்ளைங்க ரெண்டும் ஓடைக்குள் நீந்த தான் செய்யுறாங்க ம்மா. போய் கூட்டி கொண்டு வா” என்று சொல்ல உற்சாகமாகவே தோட்டத்தை நோக்கி நகர்ந்தாள்.  
விடுமுறை விட்டு விட்டாலே பெரும்பான்மையான நேரங்களில் இரண்டு வீட்டு சின்னவர்களின் இருப்பிடம் தோட்டம் தான். அங்கு மாமரத்தில் கட்டியிருக்கும் ஊஞ்சலில் ஆடி அடுத்து ஓடைத் தண்ணீரில் ஆட்டம் போட்டு என்று இருவரின் நாளும் வண்ணமயம் தான்.  
அதைப்பற்றி எல்லாம் தங்கை தன்னிடம் வந்து கதைக்கதையாகச் சொல்லும் போது தமக்கைக்கும் ஓருநாளாவது அங்கு போகவேண்டும் என்ற ஆசை பீறிடத்தான் செய்யும்.
அதுவும் வீட்டுக்குப் பின்னால் நிற்கும் அந்த மஞ்சள் சரக்கொன்றையை, அது பூத்திருக்கும் காலத்தில் அருகில்  சென்று பார்க்க வேண்டும் என்ற பேராவலும் அவளுக்கு உண்டு.
தன் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறப்போகும் எண்ணத்தில் பெண்ணவளின் நடையில் ஒரு சின்ன துள்ளல் இருக்கத்தான் செய்தது.
வசந்த காலத்தை வரவேற்கும் வண்ணம் தன் மேனியெங்கும் ஒரு இடம் பாக்கி இல்லாமல்  சரம்சரமாக மஞ்சள் பூக்களை கோர்த்துக் கொண்டு நின்ற அந்த சரக்கொன்றை காற்றில் அசைந்தாடியது,  தலையாட்டியபடியே  தன்னை வரவேற்றது போல இருந்தது நம் நாயகிக்கு.
உற்சாக  மிகுதியில் மரத்தின் தண்டை தடவிக் கொடுத்து பூக்கள் நிறைந்திருந்த ஒற்றை கொம்பை சற்றே துள்ளி வளைத்து கைகளுக்குள் கொண்டு வந்து  “உன்னை இப்படி தொட்டுப் பார்க்கணும் என்பது என் எத்தனை நாள் கனவு தெரியுமா?” என்று பூக்களோடு பூக்களாக நின்று மெல்லிய குரலில் மிழற்றியவள் யதேச்சையாக நிமிர்ந்து பார்க்க,
முகத்தில் புன்னகை விரிய கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு பக்கத்து மரத்தில் சாய்ந்து கொண்டு இவளையே ரசனையோடு பார்த்துக்கொண்டு நின்றான் பரணிதரன்.
‘ஐயோ! வசம்மா மாட்டிக்கொண்டோமே!’ என்று பெண்ணவள் இருதயம் பதறி துடிக்க…
அவனோ அவள் மிழற்றிய எதையுமே கேளாதவன் போல  “அப்புறம் டிகிரி கூடவே டைப்பிங் ஷார்ட் ஹேண்ட் எல்லாம் முடிச்சாச்சு போல . அடுத்ததா அம்மணி என்னப் பண்ணுறதா உத்தேசம்?” என்று கேட்டான் ஏதோ நெடுநாள் பேசிப்பழகியவனைப் போல.
பதில் சொல்லாமல் தன்னையே  விழிவிரித்து பார்த்துக்கொண்டு நின்றவளை நோக்கி, “எது பண்ணுவதாக இருந்தாலும் நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா பண்ணு என்ன!” என்றவனின் பேச்சில் அதிர்ந்து விழித்தவளைப்பார்த்து,”கல்யாணத்துக்கு அம்மா அப்பா கிட்டேயும் சொல்லி சம்மதமும் வாங்கிட்டேன்” என்றான் கூடுதல் தகவலாக.
‘என்னடா இது? காதல் சொல்லிவிடுவானோ என்று நான் பயந்து இவனிடம் கண்ணாமூச்சி ஆடினால், இவனோ நேரடியா கல்யாணம் பண்ணிக்குவோமா ன்னு கேட்க்கிறானே!’
அவனின் இந்த தீடீர் அவதாரத்தில் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தவள் பிடித்திருந்த மரக்கொம்பை விட்டு விட்டு  திரும்பிபோக எத்தனிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விட மனம் இல்லாத பரணீதரன் ‘போகாதே’ என்னும் விதமாக  அவசரமாக கையைநீட்டி பவானியின் கைப்பற்றி மெதுவே இழுக்க, இது எதையும் எதிர்பார்க்காத பாவனி அவனின் வலியமார்பிலேயே பூப்பந்தாய் வந்து விழுந்தாள்.
மார்பில் விழுந்த பூச்செண்டை மென்மையாய் அள்ளி மன்னவனோ உச்சிமுகர்ந்து விட, பெண்ணவளோ தன் பிஞ்சுக் கையால் காதல் பித்தனவன் நெஞ்சைத் தள்ளிவிட்டு சிட்டெனப் பறந்தாள் தன் கூட்டை நோக்கி…
பதட்டத்தில் வந்த வழி மறந்து  பின் வாசல்வழியே வீட்டினுள் நுழைந்து வெளியேற நினைக்க, “இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்ட கதையால்ல இருக்கு. ஐயோ பாவம் அப்பன் ஆயி இல்லாத புள்ளைங்கன்னு பரிதாபப்பட்டால், அதுக நம்ம தலையில் மிளகாய்ல அரைச்சிடிச்சி”  என்று வார்த்தையில் விஷம் தோய்த்து எறிந்தார் கிச்சனில் நின்ற கோதை நாயகி.
சொன்னவர் எதை நினைத்து சொன்னாரோ?
ஆனால் கேட்டவளுக்கோ நிற்க வைத்து சுடுநீரை முகத்தில் வாரி இறைத்தது போல உடம்பெல்லாம் தகித்தது.
ஆனால் மறுநொடியே நிமிர்ந்து அவரின் கண்களை நேர்கொண்டு பார்த்தாள். அந்த பார்வை ‘என்ன நினைத்துக்கொண்டு நீ என்னை இப்படி பேசுகிறாய்? அப்படி என் நடத்தையில் இதுவரையில் என்ன பிழை கண்டாய் நீ?  இதோ இப்போது நடந்ததை நீ பார்த்திருந்தாயானால் அதில் என் பிழை என்ன?’ என்று சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனவோ!
அந்த வேல்விழியாளின் விழிகளில் தெறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நிலம் பார்த்தன கோதை நாயகியின் கண்கள்.

Advertisement