Advertisement

சிந்து பிறந்த நாள் முடிந்து ஐந்து நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருஆலயத்தில் வைத்து அவளுக்கு பிறந்த முடி இறக்குவதற்காக எல்லோரும் வந்திருக்கிறார்கள்.
பொதுவாக குழந்தைகளுக்கு ஒன்பது அல்லது பதினோராவது மாதத்தில் இதை செய்வது வழக்கமென்றாலும் பரணிதரன் வீட்டில் இல்லாத காரணத்தால் யாரும் இதைப்பற்றி பேசவே இல்லை.
இப்போது அவன் வந்திருக்கவே அதற்கு மேலும் தாமதிக்காமல் குடும்பத்தோடு வந்துவிட்டார்கள்.
விடுதிக்கு சற்று தூரத்தில் ஆர்ப்பரித்தபடி கிடந்த கடலைக் கண்டு இளையவர்கள் இங்கு ஆர்ப்பரித்தபடி நிற்க, ஜெயராமும், பரணிதரனும் விடுதியின் வரவேற்பறை பகுதிக்குச் சென்று ஆன்லைனில் தாங்கள் பதிவு செய்திருந்த அறைகளின் விபரங்கள் கூறி அறைகளின் சாவிகளை வாங்கிக்கொண்டு வந்தார்கள்.
சற்று முன் பெய்திருந்த கோடைமழை சாதாரணமாக அங்கு கோடைகாலத்தில் நிலவும் வெப்பத்தை தணித்திருக்க மழைக்குளிர்ச்சியும் கடல்காற்றும் சேர்ந்து பிற்பகல் மூன்று மணிக்கே  சுற்றுப்புறத்தை குளுமையாக்கி இருந்தது.
அடுத்தடுத்தாற்போல் இரண்டு பெரிய அறைகளை தங்களுக்கா புக் செய்திருக்க  ஆண்கள் ஒரு அறையிலும் பெண்கள் ஒரு அறையிலுமாக தங்க முடிவுசெய்து கொண்டார்கள்.
நாளைக்காலை சிந்துவிற்கு மொட்டை போட்டு  காதுகுத்தி அதன் பிறகு சாமி தரிசனம் முடித்து வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டமாயிருந்தது.
அறைக்குள் வந்து தங்கள் பயணப்பைகளை வைத்த உடனேயே நந்தினியும் பவித்ரா வும் “அப்படியே பீச்ல ஒரு வாக் போய்ட்டு வரலாமா?” என்று ஆவலோடு கேட்க
பெரியவர்கள் கொஞ்சம் பயணத்தால் களைப்படைந்திருந்தது போல தோன்றவே,”எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு நாலரைக்கு போகலாம்” என்றான் பரணி.
வேறு வழியில்லாமல் இருவரும் அறையில் கிடந்த நாற்காலியை எடுத்து அறைக்கு வெளியே போட்டு உட்கார்ந்தவர்கள் அங்கிருந்தே கடலை வேடிக்கை பார்கத் தொடங்கினார்கள். 
சரியாக ஐந்து மணி வாக்கில் அனைவரும் கடற்கரை மணலில் உட்கார்ந்து இருந்தார்கள்.
தூரத்திலிருந்து கடலைப் பார்க்கும் போது ஆர்ப்பரித்த சந்தோஷும், சிந்துவும் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை அருகில் காணும் போது கொஞ்சம் பயந்து தான் போனார்கள்.
பவித்ராவும் நந்தினியும் கடலில் கால்நனைத்து அலைகளுக்கு போக்குகாட்டி விளையாடியவர்கள் ஒரு கட்டத்தில் மணலில் உட்கார்ந்து மணல் வீடு கட்டி விளையாட,”ஏழு கழுத வயசாகுது இன்னும் மணல்ல வீடுகட்டி விளையாடுறீங்களே” என்று பவானி கிண்டலடிக்க
“அக்கா! நீ எங்களை கழுதைன்னு சொன்னா அப்புறம் நானும் ஒரு கழுதை பழமொழியை எடுத்து விடவேண்டி இருக்கும்” 
“அப்படி என்னடி பொல்லாத கழுதை பழமொழி”
“ம்ம்…கழுதைக்கு…தெரியுமா கற்பூரவாசனை…” என்று பவித்ரா ஒவ்வொரு வார்த்தைகளையும் மெதுவாக இழுத்து உச்சரிக்க
“அடிக்கழுதை…” என்றவாறே எழுந்த பவானி தன் தங்கையை விரட்ட இந்த இருவரின் விளையாட்டைப் பார்த்து இவ்வளவு நேரமும் பயந்தாற்போல இருந்த சிந்து கூட கைதட்டி சிரித்தாள்.
சிறிது நேரத்தில் பீச்சில் வித்த சுண்டல், பனங்கிழங்கு முதலானவற்றை மதியழகன் வாங்கி கொண்டு கொடுக்க கடற்கரை மணலில் உட்கார்ந்து அவற்றை உண்ணவே ஏகாந்தமாக இருந்தது.
அதுவும் பனங்கிழங்கு… அந்த மண்ணிற்கே அப்படி விளையும் போலும். ஒரு தும்பு கூட இல்லாமல் சாப்பிடவே அருமையாக இருந்தது.
இருட்டும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டு, பின் தரமான ஒரு ஹோட்டலில் இரவு உணவை முடித்து  அறைக்குத் திரும்பியவர்கள் மறுநாள் காலையிலேயே எழும்ப வேண்டுமென்பதால் படுத்து தூங்க ஆரம்பித்தார்கள்.
கடற்கரையில் நேரத்தை செலவழித்த போதாகட்டும், சாப்பிட ஹோட்டலில் உட்கார்ந்த போதாகட்டும் ஏனோ இன்று முழுவதும் குமரனின் பார்வை தன்னை ஏதோ செய்ததை உணர்ந்தே இருந்தாள் பவித்ரா.
‘ஏன் இந்த குமரு நம்மளையே குறுகுறுன்னு பாக்குது!’ என்று ஒரு படபடப்போடு நினைத்தவள்,’டோன்ட் வொர்ரி செல்லம்… இனிமேல் அப்படி பார்த்தால், பாக்குற அந்த கண்ணு ரெண்டையும் பிடுங்கி அந்த குமருகிட்டயே இந்தா வச்சுக்கோன்னு குடுத்துடலாம்’ என்று படபடத்த தன் இதயத்திற்கு தைரியம் கூறியபடியே தூங்கிப்போனாள் பவித்ரா.
மறுநாள் காலையிலேயே கோயிலின் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் இருந்தார்கள் அனைவரும்.
ஜெயராம் தாய்மாமன் ஸ்தானத்தில் குழந்தையை மடிதாங்கியபடி உட்கார்ந்திருக்க சிந்துவின் அழுகை ஆர்ப்பாட்டத்திற்கு நடுவே மொட்டை போட்டு முடித்திருந்தது.  
மொட்டை போட்டு முடிக்கவும் சிந்துவை தூக்குவதற்காக இளையவர்கள் ஆளாளுக்கு கைநீட்ட, தன் சித்தப்பனின் கைகளில் தொற்றிக்கொண்ட சிந்துவைப் பார்த்து பவித்ரா உதடு சுழிக்க வெற்றி வீரனாக ஜம்பம் காட்டினான் குமரன். 
இளையவர்களோ இப்படி குதூகலித்திருக்க, ஜெயராம் எழுந்திருந்த இடத்தில் அடுத்ததாக அமைதியாக உட்கார்ந்த பரணிதரனைக் கண்டு திகைத்துப் போனார்கள் உடனிருந்தவர்கள்.
“பரணி என்னப்பா?” என்று எல்லாரையும் முந்திக்கொண்டு மதியழகன் கேட்க,” வேண்டுதல் பா’ என்றான் மகன்.
ஆமாம்… பவானி மன அழுத்தத்தின் பிடியில் இருக்கிறாள் என்று மருத்துவர் சொன்னதும் மனைவிக்காக அவன் இறைவனிடம் வைத்த வேண்டுதல் தான் இது.
வேண்டுதல் என்ற ஒற்றை வார்த்தையில் மதியழகன் புன்னகையோடு நின்று கொள்ள,”ஏங்க போஸ்டிங் சீக்கிரம் வரும்…அப்ப போய் இப்படி எப்படிங்க…” என்று பவானி மெதுவாக இழுக்க
“ஏன் தலையில முடியில்லைன்னா என்னை பரணிதரன் னு ஒத்துக்க மாட்டாங்களா என்ன?” என்று விளையாட்டாக கேட்டபடியே மொட்டை போடுவதற்கு ஏதுவாக தலையை குனிந்து கொடுத்தவனிடம்
“ஏன் மாப்பிள்ளை! இப்படின்னு முதல்லயே சொல்லுறதில்லையா? நீ மொட்டை போடும் போது நான் புது ட்ரெஸ் எடுத்து குடுக்கணும்யா” என்று ஆதங்கபட்ட ஜெயராமிடம்
“யாரு வேண்டாம்னு சொன்னா மாமா? ஊர்ல போய் எடுத்து குடுங்க”என்று சிரித்தான் பரணி.
ஒருவழியாக முடிகாணிக்கை செலுத்தி முடித்து கடலில் குளிப்பதற்காக அனைவரும் கடலுக்கருகே வந்தார்கள்‌.
ஆண்கள் எல்லோரும் கடலில் இறங்கி குளிக்கத்தொடங்க பெண்களோ கொஞ்சம் தயக்கத்தோடு கரையில் அமர்ந்திருந்தார்கள்.
பவித்ராவோ கொஞ்சம் தயங்கிய நந்தினியை,”எனக்கு கடல்ல எப்படி குளிக்கணும் னு தெரியும் டி. நான் உனக்கு சொல்லித்தரேன் பயப்படாம வா…” என்று அவள் கையை பிடித்தவாரே தண்ணீருக்குள் இறங்கினாள்.
 கன்னியாகுமரி யில் இருந்த நாட்களில் பவானியின் தோழி மாலதியோடு அருகே இருக்கும் கடற்கரை கிராமத்தில் அடிக்கடி கடலில் குளித்த பழக்கம் உண்டு சகோதரிகள் இருவருக்கும்.
அந்த தைரியத்தில் தான் பவித்ரா நந்தினி யை தண்ணீருக்குள் அழைத்துச் சென்றாள்.
அலைவரும் போது அதை எதிர்த்து நிற்காமல் சாய்வாக நின்றுகொண்டு தண்ணீருக்குள் லேசாக மூழ்கிகொள்வதும் அந்த அலை ஓயவும் சமமாக கிடக்கும் நீர் பரப்பில் குளிப்பதுமாக கடல் குளியலை அனுபவித்தார்கள் இருவரும்.
சிறிதுநேரம் அவர்களை கவனித்த பரணி தனக்கருகிலேயே அவர்களை வைத்து கொண்டு பவானியை அழைக்க, மகளை கோதை நாயகியிடம் கொடுத்தவள் எந்த தயக்கமும் இன்றி கணவனின் நீட்டிய கைகளை பற்றியபடி கடலுக்குள் இறங்கிவிட்டாள் பவானி. 
“நீ குடுத்துவச்சவன் மாப்ள. நீ கூப்பிட உடனே உன்னை நம்பி என் தங்கச்சி கடலுக்குள்ள இறங்கிடிச்சி. ஆனால் உன் அக்காவைப் பாரு எம்மேல நம்பிக்கையே இல்லாமல் வெளிய நிக்குறா” ஜெயராம் பரணிதரனிடம் கிண்டலடிக்க
“நம்பிக்கை இல்லாமல் இல்ல மாமா…பயம்”
“பயமா? எதுக்கு கடலோட விட்டுருவேன்னா?” 
மாமனின் கிண்டலில் சிரித்தவன் இங்கிருந்தே”வாக்கா…” என்று  குரல் கொடுக்க, தம்பியின் ஒற்றை அழைப்பிற்கே மகனை தன் அத்தையிடம் விட்டுவிட்டு கடலுக்குள் இறங்கிய திவ்யா வேண்டுமென்றே தன் தம்பியின் கைகளை பற்றியபடி பவானி சொல்லிக்கொடுத்த முறைப்படி குளிக்க ஆரம்பித்தாள்.
கிண்டலும் கேலியுமாக குளித்து முடித்து ஒவ்வொருவராக கரையேறியவர்கள் கோதைநாயகியும் சீதாலட்சுமி யும் குளிக்க உதவி செய்தார்கள்.
கடைசியாக சிந்துவையும் சந்தோஷையும் குளிக்க வைத்து கரைக்கு வந்த பின்னும் நந்தினியும் பவித்ராவும் மட்டும் கரைக்கு வராமல்,”இதோ வந்துட்டுறோம்…” என்றவாரே நேரத்தை கடத்த
“அடுத்து நாழிக்கிணத்துல போய் குளிக்கணும் மா… சீக்கிரம் வெளியே வாங்க” என்று கரையில் நின்று கத்தினார் மதியழகன்.
‘சூரபதுமனை வதம் செய்ய வந்த முருகப்பெருமான் தன் படைவீரர்களின் தாகம் தணிக்க தன் கையிலிருந்த சக்தி வேல் கொண்டு உண்டாக்கிய கிணறு தான் நாழிக்கிணறு என்று புராணம் கூறுகிறது. கடலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த கிணற்றின் தண்ணீர் ‘நன்னீராய்’ இருப்பது  இதன் சிறப்பு.’
கடலில் நீராடி அந்த புனிதநீரிலும் நீராடவேண்டும் என்பது ஐதீகம். அதைத்தான் மதியழகன் கூறினார்.
எல்லோரும் கரைக்கு போனபிறகும் இவர்கள் இருவரின் பாதுகாப்பிற்காக அவர்களை விட்டு சற்று தள்ளி தண்ணீரிலேயே நின்ற குமரன் இப்போது நந்தினியைப் பார்த்து முறைத்தபடியே,”நந்து…” என்று அழுத்தமாக அழைக்க
மறுபேச்சு ஏதும் பேசாமல் இருவருமே கரையை நோக்கி நகரத்தொடங்கினர். போகும் முன் பவித்ரா குமரனைப் பார்த்து முறைக்க,’பார்டா… சில்வண்டெல்லாம் என்னை பார்த்து முறைக்குது’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்ட குமரன் முகத்தில் எதுவும் காட்டிக்கொள்ளாமல்  அவர்களை பின்தொடர
அப்போது வேகமாக வந்த ஒரு பெரிய அலை ஒன்றில் தடுமாறி பெண்கள் இருவரும் தண்ணீரில் விழுந்தார்கள்.
கரையில் நின்றவர்கள் பதறிப்போய்,”பார்த்து வாங்க…” என்று கத்தியபடியே ஒரு அடி முன்னால் வந்து தண்ணீரையே உற்றுப்பார்க்க…
அடித்த அலை ஓய்ந்திருக்க தண்ணீரிலிருந்து நந்தினி மட்டும் எழுந்திருந்தாள்…பவித்ராவைக் காணவில்லை…
அவர்களையே கழுகாக கண்காணித்து வந்த குமரனுக்கு நடந்தது நொடியில் புரிந்து போக ஒரு இடத்தை குறிவைத்து அந்த கடல் தண்ணீருக்குள் பாய்ந்திருந்தான் குமரன்…

Advertisement