Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 19.
அன்று வீடே ஒளிவெள்ளத்தில் ஜெகஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது.
குழந்தை சிந்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹால் முழுவதும் வண்ணவண்ண கலர் பேப்பர்களாலும் பலூன்களாலும் அலங்கரித்திருந்தனர் பவித்ராவும் நந்தினியும்.
சுவரெங்கும் டோரா புஜ்ஜி, மிக்கி மௌஸ், டாம் அண்ட் ஜெர்ரி, சோட்டா பீம், சுட்கி என்று குழந்தைகள் ரசிக்கும் கார்ட்டூன்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
ஹாலின் நடுவே கேக் கட் பண்ணுவதற்கு ஏதுவாக அலங்கரிக்கப்பட்டு போடப்பட்டிருந்த டேபிள் நடக்கப்போகும் நிகழ்விற்காக காத்திருக்க வீட்டில் உள்ள அனைவருமே பரணிதரனின் வருகையை எதிர்பார்த்து சிட்அவுட் டிலும் முற்றத்திலுமாக நடைபயின்று கொண்டிருந்தார்கள்.
 எல்லாருடைய கண்களும் வீட்டின் காம்பௌண்ட் வாசலையேப் பார்த்தவண்ணம் இருந்தது.
இன்று காலையில் டெல்லியில் தன்னுடைய நேர்முகத் தேர்வை  முடித்துவிட்டு நேரடியாக அங்கிருந்து விமானத்தில் வருகிறான் பரணிதரன்.
அவனை கோயம்புத்தூர் விமானநிலையத்தில் சென்று அழைத்துக்கொண்டு வர குமரனும் திவ்யாவின் கணவர் ஜெயராமும் சென்றிருக்கிறார்கள்.
சரியாக இரவு எட்டு மணியளவில் அவர்கள் வீட்டு ஸ்கார்பியோ  முற்றத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கினான் பரணிதரன். அவனைக் கண்டதும் எல்லாரிடமும் ஒரு பரபரப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
 காரிலிருந்து இறங்கியவன் தன்னை எதிர்பார்த்தபடியே முற்றத்தில் உலாத்திக் கொண்டிருந்த தன் தந்தையை,”எப்டிப்பா இருக்கீங்க?” என்று கேட்டவாறே லேசாக அணைத்து விடுவிக்க, அதற்கிடையில் வீட்டிலுள்ள அனைவரும் அவனை சுற்றிக்கொண்டு நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்‌.
அனைவருக்கும்  பதிலளித்தபடியே அவர்களின் நலனையும் விசாரித்தவன் தன் அக்கா கையிலிருந்த தன் மகளிடம் சிரித்தபடியே,”அப்பா கிட்ட வாங்க செல்லம்மா…” என்று கைநீட்ட, தன் அத்தையின் முகத்தை திரும்பிப் பார்த்தது குழந்தை.
“அப்பா செல்லக்குட்டி…போங்க” என்று திவ்யா சொல்ல ஏதோ புரிந்தது போல தன் தகப்பனின் நீட்டிய கைகளுக்குள் அடைக்கலமானாள் பரணிதரனின் குட்டி தேவதை.
ஒரு ஆறுமாத காலப்பிரிவு தான். ஆனால் ஏதோ வருடக்கணக்கான பிரிவு போல உணர்ச்சி வசப்பட்டவன் தன் மகளை உச்சிமுகர்ந்து முகத்தோடு முகம் வைத்து முத்தமிட்டவன் கண்களால் மனைவியின் முகம் அளக்க
அங்கும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பு கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.
தம்பியின் நிலைமை புரிந்த திவ்யா,”இப்பவே நேரமாகிப்போச்சு…இன்னும் இப்படியே நின்னுட்டு இருந்தா பாப்புவோட பிறந்த நாளை எப்ப கொண்டாடுறது…வீட்டுக்குள்ள போய் சீக்கிரம் ஃப்ரெஸ் ஆகிட்டு வா பரணி, கேக் கட் பண்ணலாம்” என்று சொல்ல குழந்தையோடு வீட்டினுள் நுழைந்தான் பரணி.
தங்கள் மகள் பிறந்தாளுக்கு முன்னால் கணவனின் நேர்முகத்தேர்வு நடந்துவிட வேண்டும் என்று பவானி வேண்டாத கடவுளில்லை.
மகளின் பிறந்தநாளில் தான் அவனுக்கான நேர்முகத்தேர்வு என்றாலும் அதையும் நல்லபடியாக முடித்துவிட்டு முயன்று வீடுவந்து சேர்ந்து விட்டான் பரணி.
வீட்டினுள் வந்தவன்,”அத்தைக்கிட்ட இருங்க பாப்பு…அப்பா குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றவாறே தமக்கையிடம் தன் மகளைக் குடுத்தவன்,”எல்லாரும் இருங்க இதோ ஐந்து நிமிஷத்துல வந்துடுறேன்” என்று சொல்லிக்கொண்டு மாடிப்படியை நோக்கி தன்வேக நடையில் சென்றவன்
“பவானி! கொஞ்சம் வந்து டவல் எடுத்துக்குடேன்” என்று மாடிப்படி ஏறிக்கொண்டே மனைவியை அழைக்க
“ஆத்தாடி! எல்லாரும் இருக்கும் போது இப்படி கூப்பிட்டு மானத்தவாங்குறாங்களே?” என்று மனதிற்குள் அலறிய பவானி அவன் அழைத்தது கேட்காதமாதிரி வேறு வேலை செய்வது போன்றதொரு பாவனையில் நின்றாள்.
“பவானி! பரணிக்கு சோப், டவலெல்லாம் எடுத்து குடுத்துட்டு வந்து இந்த வேலையை பார்க்கலாம்.  போம்மா…” என்று கோதை நாயகி சொல்ல வேறுவழியில்லாமல் மேலே சென்றாள் பவானி.
மேலே வந்த மனைவியை வளைத்துப்பிடித்த பரணிதரன்,
“அம்மணி நாங்க கூப்பிட்டால்லாம் வரமாட்டீங்களோ? எங்கம்மா ரெக்கமெண்ட் பண்ணுனா தான் வருவீங்களோ?” என்று கிண்டலடித்தவாரே அவளை முத்தத்தில் குளிப்பாட்ட
“ப்ப்ச்…என்ன பரணி இது?”கீழ எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…இப்ப போய்ட்டு இப்படி?” என்று சிணுங்கிய மனைவியிடம்
“நீதான நேர்ல பாக்கும் போது தர்றதுக்கு முத்தத்தை ஸ்டாக் வச்சுக்க சொன்ன? அதான் வச்சிருந்த ஸ்டாக்ல கொஞ்சமேக் கொஞ்சம் சாம்பிள் காட்டுனேன்” என்று மனைவியின் கன்னம் தட்டியபடியே கூறியவன்  அதற்கு மேலும் தாமதிக்காமல் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
பரணிதரன் குளித்து முடித்து கீழே வரும் போது     அண்ணன் மகளுக்காகவே ஸ்பெஷலாக தயார் செய்து வாங்கியிருந்த ஐஸ்கிரீம் கேக்கை டேபிளில் தயாராக வைத்திருந்தான் குமரன்.
அதன் பிறகு சிந்துவின் கைப்பிடித்து கேக்கை வெட்டி அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, குமரனின் நண்பனின் ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்கிவைத்திருந்த உணவை உண்டு என எல்லாவற்றையும் நிறைவாய் செய்து முடித்து அனைவரும் ஹாலில் குழுமியிருந்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பமே இவ்வாறு குழுமியிருந்து அரட்டையடித்தபடி இருக்க சிந்து கூட தன் வழக்கமான நேரத்துக்கு தூங்காமல் உற்சாகமாக தளிர்நடை போட்டுக்கொண்டிருந்தாள்.
இப்போதுதான் ஞாபகம் வந்தவன் போல் எழுந்த பரணி, ஹாலில் குமரன் கொண்டு வைத்திருந்த தனது டிராவல் பேக் அருகே உட்கார்ந்து பையிலிருந்து இரண்டு பார்சலை எடுத்து ஒன்றை சந்தோஷிடமும் மற்றொன்றை தன் மகளிடமும் கொடுக்க 
அதை வாங்கிக்கொண்ட சந்தோஷ் ஆனந்தமாக தன் மாமனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தான். 
தன் அத்தை மகனின் செயலைக் கண்ட சிந்துவும் தன்கையிலிருந்த பார்சலை கீழே வைத்து விட்டு தன் பிஞ்சுக் கரங்களால் தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தது பார்ப்பதற்கே கவிதையாய் இருந்தது.
இரண்டு குழந்தைகளையும் இருகைகளாலும் அணைத்தவன் அவர்களை தன்அணைப்பிலேயே வைத்துக் கொண்டு அமைதியாக இருக்க
“எங்களுக்கெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வரலையா மாமா!” என்று அவன் அமைதியை கலைத்தபடியே பவித்ரா பரணிதரன் பக்கத்தில் வந்து உட்கார அவளுடனே நந்தினியும் வந்து அண்ணன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“அதானே இவ வாயத்திறக்காமல் இருந்தா பூமி இரண்டா வெடிச்சிடாதா?” வேறு யார்? குமரனின் மனசாட்சி தான் புலம்பியது. 
“உங்களுக்கில்லாமலா?” என்றபடியே குழந்தைகளை முத்தமிட்டு விடுவித்தவன், இப்போதும் இரண்டு பார்சல்களை எடுத்து பவித்ராவிடமும் நந்தினியிடமும் கொடுக்க ஆர்வத்தோடு பிரித்தவர்களின் பார்சலில் மெரூன் கலரும் கோல்டன் கலரும் இணைந்த ஒரேமாதிரியான ‘காக்ராசோளி’ இருக்கவும் தன்னையறியாமலேயே பவித்ராவின் கண்கள் குமரனைப் பார்த்தது.
அவர்கள் இருவரும் பார்சலை பிரிக்க அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த குமரனின் விழிகள் பவித்ரா வின் பார்வையை ஆழமாக சந்திக்க அதன் வீச்சு தாங்கமுடியாமல் சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் அவள். 
வீட்டிலுள்ள அனைவருக்கும் தான் வாங்கி வந்திருந்த உடைகளை பரணி எடுத்து கொடுக்க,”ஏன் மாப்பிள்ளை? இன்டர்வியூ க்கு போனியா? இல்லை ஷாப்பிங் பண்ண டெல்லி போனியா? என்று ஜெயராம் கிண்டலடிக்க
“நான் நேற்றே டெல்லிக்கு போய்ட்டேன் னு உங்களுக்கு தெரியும் தானே மாமா. கொஞ்சம் ஷாப்பிங் போய்ட்டு வந்தால் மைண்ட் ரிலாக்ஸா இருக்கும் போல தோணிச்சு, அதான் எல்லாருக்கும் வாங்கிட்டேன்” என்று சிரித்தபடியே சொன்ன பரணிதரனிடம்
இந்த ஆறுமாதகால அனுபவங்களை பற்றி குமரனும் ஜெயராமும் ஒவ்வொன்றாக கேட்க அலுக்காமல் பதில்சொல்லிக் கொண்டிருந்தான் பரணி.
அதிலும் குமரன் இரண்டொரு நாட்களுக்கு முன் தன்னுடைய இறுதி தேர்வுகளை முடித்திருக்க அடுத்ததாக யூபிஎஸ்சி எக்ஸாம் கோச்சிங்கிற்காக அண்ணன் பயின்ற சென்டருக்கே செல்லவேண்டும் என்று முடிவு எடுத்திருந்த படியால் அண்ணனிடம் அவனுக்கு கேட்பதற்கான கேள்விகள் அதிகமாகவே இருந்தது.  
இப்படியாக இவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போக குமரனைப் பார்த்து கோதை நாயகி,”உன் சந்தேகத்தை எல்லாம் அண்ணன் கிட்ட நாளைக்கு கேட்டுக்கலாம் குமரா…இப்போ நேரமாகுது பாரு எல்லோரும் போய் தூங்குங்க” என்றவர் திவ்யாவிடம்
“நீங்க இதுக்கு மேல வீட்டுக்கு போகவேண்டாம் திவ்யா. இங்கயே தூங்கிட்டு நாளைக்கு மெதுவா போகலாம்” என்று சொல்ல ஒத்துக்கொண்டவர்கள், ஒருவருக்கொருவர்  “குட்நைட்” சொல்லியபடியே கலைந்து சென்றனர்.
 தன் மனைவியின் மடியினில் தூங்கிய தன் பெண்ணரசியை தன்கைகளில் அள்ளிய பரணிதரனும் தங்கள் அறைக்குச் செல்ல கணவன் சென்று சிறிதுநேரம் கழித்தே பவானி அறைக்கு வந்தாள். 
கதவை தாளிட்டவளின் பார்வை கட்டிலுக்குச் செல்ல தன் குட்டி தேவதையை மார்பில் போட்டு தட்டிக்கொடுத்தபடியே கண்மூடி படுத்திருந்தான் பரணிதரன்.
கதவு தாளிடும் சத்தத்தில் விழித்தவன் அங்கிருந்தே தங்களை பார்த்துக் கொண்டிருந்த தன் மனையாளை தலையசைத்து அருகே அழைக்க
அருகே வந்தவளுக்கோ எப்போதும் போல தன் கணவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்க முடியாமல் மகள் தன்னுடைய இடத்தை ஆக்ரமித்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வர,”என்ன சிரிப்பு?”என்று கேட்ட கணவனுக்கு கண்களாலேயே மகளைச் சுட்டிக் காட்டியவள்,”என் இடம் பறிபோச்சே” என்று மறுபடியும் சிரித்தாள்.
கூட சேர்ந்து சிரித்தவன் தன் வலிய தோள்களைத் தட்டிக் காட்டி,”இங்க படுத்துக்கோ” என்று சொல்ல,”உங்களுக்கு வலிக்கும் பரணி” என்று சொன்னாலும் அவன் சொன்னபடியேச் செய்தாள் பவானி.
மகளை மார்பிலும் மனைவியைத் தோளிலும் சுமந்தபடி படுத்திருந்த பரணியின் முகம் உலகத்து சந்தோஷம் எல்லாம் அவன் கைகளில் வசப்பட்டு விட்டது போல மின்னியது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தபடியே அந்த தருணத்தை தனக்குள் உள்வாங்கி கொண்டவன்,”ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெறமுடியும் எங்கிறது எவ்வளவு சரியா இருக்கு பாத்தியா பவானி. நம்ம குழந்தையோட ஆறுமாத கால வளர்ச்சியை கிட்ட இருந்து பார்க்கும் பாக்கியத்தை இழந்து தான், நான் இந்த ஐஏஎஸ் கனவு கிட்ட போயிருக்கேன் பாத்தியா” என்றவனின் குரலில் கொஞ்சம் ஆதங்கம் தொனிக்க
“அப்படி இல்லை பரணி… நீங்க எதை இழந்தீங்களோ அதுக்கு பதிலா அதே அளவு வேல்யூ உள்ள உங்க வாழ்நாள் கனவு தான் உங்க கையில வரப்போகுது. சோ கணக்கு இங்க டேலியாகிப்போகுது” என்று சிரித்தவள்
“நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்க ன்னு நினைச்சு தான் உங்க பொண்ணோட ஒவ்வொரு ஸ்டேஜ்ஜையும் நான் வீடியோ பண்ணிவச்சிருக்கேன் ப்பா” என்றவள் 
 மகள் உட்காரும் போது, தவழும் போது, புதிதாக நிற்க முயற்சி செய்தபோது, நடைபயின்ற போது என ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளையும் தான் வீடியோக்களாக பதிந்து வைத்திருந்ததை டேப்பில்(tab) ஓடவிட மனங்கொள்ளா ஆனந்தத்தோடு பார்க்க ஆரம்பித்தான் பரணிதரன்.
***********************************************************
கடற்கரையை பார்த்தால் போல் அமைந்திருந்த அந்த தரமான தங்கும் விடுதி யின் முன் அந்த டெம்போ டிராவலர் வந்து நிற்க அதிலிருந்து பரணிதரனின் குடும்பத்தாரும் ஜெயராம் குடும்பத்தாரும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
விடுதிக்கு அடுத்தாற்போல் இருந்த பூஜைபொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து
‘திருச்செந்தூரின் கடலோரத்தில் 
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோற்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்…’ 
என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வரிகளுக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் டி.எம் சௌந்தரராஜன் அவர்களும் இணைந்து உயிர் கொடுத்திருக்க காலம் கடந்து இன்றும் கேட்போரின் உள்ளத்தை மயக்கியது அந்த பாடல்.
 வானளாவி உயர்ந்து நின்ற திருச்செந்திலாண்டவரின் கோவில் கோபுரம் வண்டியிலிருந்து இறங்கி தன்னை அண்ணார்ந்து பார்த்தவர்களுக்கு, சொல்லொண்ணா ஒரு தெய்வீக உணர்வை கொடுத்து  பரவசப்படுத்தியது.

Advertisement