Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 18.
குமரனின் எம் ஏ பொலிடிக்கல் சயின்ஸ் படிப்பு முடிவடையப்போகும் காலகட்டத்தில் இது என்ன வேண்டாத பிரச்சினை என்று வீட்டின் பெரியவர்கள் கலங்கிப்போய் இருக்க குமரன் கல்லூரியில் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்.
இப்போது படிக்கும் கல்லூரியிலேயேத் தான் குமரன் தன் பிஏ பொலிடிக்கல் சயின்ஸ்ஸையும் முடித்திருந்தான்.
ஒழுக்கமும் பணிவும் நிறைந்த புத்திசாலியான குமரனை பேராசிரியர்கள் அனைவருக்குமே பிடிக்கும். அவர்கள் துறையைப் பொறுத்தவரை அவன் ஆசிரியர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகத் தான் இருந்தான்.
இளங்கலை பயிலும் காலத்திலிருந்தே சொப்னா குமரனின் தோழி. இவர்களுடன் இருந்த நண்பர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கு பிரிந்து சென்றிருக்க இவர்கள் இருவர் மட்டும் இளங்கலை பயின்ற அதே கல்லூரியில் முதுகலை பட்டத்தையும் தொடரவே அவர்களின் நட்பு இன்னமும் இறுகியது.
நாளடைவில் நிவேதாவும் அருணாவும் சொப்னாவோடு நட்பு பாராட்ட, அந்த நட்பு குமரனோடும் அவர்களுக்கு தொடங்கியது.
எந்த விதமான விகல்பமும் இல்லாமல் பழகும் குமரனை அவர்களுக்குமே பிடித்து விட இவர்கள் நால்வரும் ஒரு கூட்டணியாகவே ஆகிவிட்டனர்.
அவர்கள் படிப்புக்கு தேவையான ஏதாவது தலைப்பில் விவாதங்கள் நாட்டுநடப்பு குறித்த பேச்சுகள் என்று எப்போதுமே ஒரு ஆரோக்கியமான விவாதம் அவர்களுக்கிடையே ஓடிக்கொண்டிருக்கும்.
ஆசிரியர்களிடமும் பெரும்பான்மையான மாணவர்களிடமும் ஏகோபித்த நன்மதிப்பைப் பெற்றிருந்த குமரனைக் கண்டு அவனுடன் பயிலும் சகமாணவனான நவீனுக்கு குமரன் மீது சொல்லொன்னா  பொறாமை ஏற்பட்டது.
 தானே எல்லா இடங்களிலும் முதன்மை படுத்தப்படவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருக்க ஆசிரியர்களோ எதற்கெடுத்தாலும் குமரன் புராணம் பாடினார்கள்.
சரி அவர்களை விடுவோம்,  குமரனோடே சுற்றுகிறார்களே இந்த பெண்களையாவது தன்பக்கம் இழுத்து விடலாம் என்று எண்ணி அவர்கள் பக்கம் தன் நட்பு கரத்தை நவீன் நீட்ட  அதை அவர்கள்  பற்றிக்கொள்ள தயாராகவே இல்லை.
எப்போதுமே ஆண்-பெண் நட்பில் பெண்களுக்கு தங்கள் ஆண்நட்பின் மீது ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் இயல்பாக வரவேண்டும். அப்போது தான் அங்கு ஆண்-பெண் நட்பு  சாத்தியம் என்ற உண்மை புரியவே இல்லை அவனுக்கு.
இந்த உண்மை புரியாத காரணத்தால் அவனுக்கு குமரன் மீது ஒரு பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
அந்த நெருப்பை அணையவிடாமல் அவ்வப்போது தூண்டிவிட்டனர் நண்பர்கள் என்னும் பெயரில் அவன் உடனிருந்த ஒட்டுண்ணிகள்.
ஹைடெக் ஸ்டைலில் பந்தாவாக வரும் தன்னைவிட சாதாரணமாக வரும் குமரனிடம் அப்படி என்ன இருக்கிறது இந்த பெண்கள் மயங்கிக் கிடக்க என்று நட்பையும் தவறுதலாகவே எண்ணினான் நவீன்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருநாள் சொப்னாவிடம் அவன் தன் காதலைச் சொல்ல அவளோ,”உன்மீது எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இப்போதும் கிடையாது, இனி எப்போதும் வரவும் செய்யாது” என்று தன்னுடைய முடிவைத் தெளிவாக சொல்லிவிட, அதை தன்னுடைய பர்ஸ்னாலிடிக்கு விழுந்த பெருத்த அடியாகவே எண்ணிக்கொண்டான் நவீன்.
அதன்பிறகு சொப்னாவை எங்கு கண்டாலும் கேலி கிண்டல் பண்ணுவதையும், குமரனோடு இணைத்து அந்த பெண்களை பேசுவதையுமே தன்னுடைய முழுநேர வேலையாக்கிக் கொண்டான் அந்த நவீன்
எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ் போன்ற குணம் கொண்ட குமரனுக்கோ அந்த நவீனின் செயல்கள் உச்சபட்ச எரிச்சலைத் தர அடிக்கடி இருவருக்கிடையே பிரச்சினைகள் வெடித்தது.
எப்போதுமே கொடுக்குறவனைக் கண்டால் பேய் கொணட்டி கொணட்டி ஆடுமாம். அப்படித்தான் நவீனின் செயல்களுக்கு குமரன் எதிர்வினை செய்யச்செய்ய அந்த நவீனும் புதிது புதிதாக பிரச்சனைகளை கொடுத்து கொண்டிருந்தான் குமரனுக்கு.
“நம்மைப் பற்றி நமக்கு மட்டும் தெரிந்தால் போதும் குமரா! வேறு யாருக்கும் நம்மை நிரூபிக்கத் வேண்டியத் தேவையில்லை” என்று அவன் தோழிகள் சொன்னாலும்
சிலநேரங்களில் அமைதியாக இருக்கும் குமரன் பலநேரங்களில் அந்த நவீனோடு மல்லுக்குத்தான் நின்றான்.
தான் எவ்வளவு தான் பிரச்சினைகள் கொடுத்தாலும் அந்த நண்பர்கள் குழு மட்டும் தங்களின் நட்பை இன்னும் பலப்படுத்திக் கொண்டு ஒன்றாகவே அலைவதைக் கண்ட நவீனுக்கு அவர்களை காயப்படுத்தி விடும் வெறி அதிகமாகியது.
இவர்களை என்ன செய்து காயப்படுத்தலாம் என்பதையே சதாசர்வகாலமும் யோசித்தவன் கையிலெடுத்தது சமீபகாலமாக  இளைஞர்களுக்கிடையே படுவேகமாக பரவிவரும் மீம்ஸ் கிரியேட் செய்யும் கலாச்சாரத்தை.
தானே மீம் கிரியேட் செய்து அதில் உள்ள கேரக்டர்ஸ்ஸுக்கு குமரன் மற்றும் அவன் தோழிகளின் பெயரை வைத்து காணாத குறைக்கு அவர்களை மட்டம்தட்டுவது போல டயலாக்ஸையும் காமெடி என்னும் பெயரில் எழுதி கல்லூரி முழுவதும் உலவவிட்டவன் அதை  குமரனின் நட்பு வட்டத்திற்கும் அனுப்ப தவறவில்லை.
அதைப் பார்த்து கோபத்தோடு அவனிடம் சண்டைக்கு வந்த குமரனிடம் “இதெல்லாம் ஜஸ்ட் ஃபார் ஃபன் ப்ரோ… இதுக்கெல்லாமா கோபப்படுவாங்க?” என்று கூலாகச் சொன்னவன்
“யூத் லைஃப்ல இதெல்லாம் சகஜமப்பா…” என்று இழுத்து, “ஒருவேளை நீ யூத்தே இல்லையோ?” என்று கேட்டு அப்போதும் வம்பு வளர்த்தான் குமரனிடம்.
குமரனுக்கு இதெல்லாம் பார்க்கும் போது எரிச்சல் ஒருபக்கம் கோபம் ஒருபக்கம் பொங்கியது. தான் சும்மா இருந்தாலும் இவன் இருக்க விடுகிறானில்லையே என்று ஆயாசமாக இருந்தது அவனுக்கு.
நாளுக்கு நாள் அவன் தொல்லை அதிகமாகிக்கொண்டே போக சொப்னா கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து விடுவோம் என்று சொன்னாள்.
ஆனால் அருணாவும் நிவேதாவும்,”மிஞ்சி மிஞ்சி போனா இன்னும் ஒரு மாசம்…நாம நம்ம எக்ஸ்ஸாம்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு இந்த காலேஜை விட்டு போய்டே இருப்போம்…  அதுவரைக்கும் இந்த நாய் குறைக்குமா? குறைச்சிட்டு போகட்டும்…இதுக்கு போய் கம்ப்ளைண்ட் அது இதுன்னு வேண்டாம் ப்பா…” என்று சொல்லிவிட, குமரனும் புகார் செய்யும் எண்ணத்தை விட்டு விட்டான்.
ஆனால் நீ முதலிலேயே புகார் செய்திருக்க வேண்டும் என்று எண்ணும் விதமாக இருந்தது இன்று அவன் கிரியேட் செய்து அனுப்பி இருந்த மீம்.
சமீபத்தில் நண்பர்கள் நால்வரும் கல்லூரி காண்டீனில் உட்கார்ந்து  குளிர்பானம் குடித்தபடியே சிரித்து பேசிக்கொண்டிருந்த நிகழ்வை எப்படியோ ஃபோட்டோ எடுத்திருந்தவன் அந்த ஃபோட்டோவையே பயன்படுத்தி மீம் கிரியேட் செய்து அதில் வாசிக்கவே முடியாத மோசமான முகம்சுளிக்க வைக்கும் உரையாடல்களை இவர்கள் பேசுவதுபோல இணைத்திருந்தான்.
அதை வழக்கம் போல அனைவருக்கும் அனுப்பவும் செய்திருந்தான். அதை பார்த்த போது மொத்த இரத்தமும் சூடேறி குமரன் அந்த நவீனைத் தேட, அவனோ அன்று முழுவதும் அவன் கண்களில் படவே இல்லை.
இந்த நிகழ்ச்சியால் கொஞ்சம் நிலைகுலைந்து போயிருந்த அவன் தோழியர் அன்றைய கடைசி வகுப்பு ஃப்ரீயாக இருக்கவே வீட்டுக்கு கிளம்பி சென்றிருந்தனர்.
வெறிகொண்ட வேங்கையாய் அவனை அன்று முழுவதும் தேடிச் சலித்த குமரனும் தனது நோட்ஸை எடுத்து கொண்டு வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணத்தில் வகுப்பறைக்குள் நுழைய அங்கே தன் நண்பர்கள் பட்டாளத்திடம் ஃபோனைக் காட்டி வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான் நவீன்.
அவ்வளவு தான்… காலையிலிருந்தே தான் சுமந்து கொண்டு திரிந்த மொத்த கோபத்தையும் ஒன்றாய் திரட்டி அவன் கன்னத்தில் தன்கைகளை இடியென இறக்கிய குமரன்,  நவீன்  கைகளில் வைத்திருந்த ஃபோனை பிடுங்க முயற்சி செய்தான்.
குமரனை அப்போது அங்கே எதிர்பாராத அந்த நவீன் சுதாரித்துக்கொண்டு  குமரனுக்கு சரிக்குச் சரியாக இப்போது மல்லுக்கு நிக்க இருவருக்கிடையே தள்ளுமுள்ளு அடிபிடி என்று கைகலப்பு அதிகமாகிக்கொண்டே போனது.
அப்போது திடீரென்று குமரன் தள்ளியதில் அந்த நவீனின் முன்நெற்றி டெஸ்க் ன் நுனியில் பட்டு கீறி இரத்தம் பீறிட்டு வந்ததோடல்லாமல் அவனுக்கு லேசான மயக்கமும் வர, குமரனின் கெட்ட நேரம் கல்லூரியின் முதல்வரும் அந்நேரம் சரியாக அந்த பக்கமாக வந்து சேர்ந்தார்.
மாணவர்கள் கூட்டத்தையும் அங்கே கேட்ட சலசலப்பையும் கண்ட மனிதர் விரைந்து இங்குவர கண்டதோ குமரனிடம் அடிவாங்கி இரத்தம் வழிய மெதுவாக மயக்க நிலைக்கு சென்றுகொண்டிருந்த நவீனைத்தான்.
அவசர அவசரமாக நவீனுக்கு தண்ணீரால் முகம்கழுவப்பட்டு குடிக்க சிறிது நீரும் கொடுக்கப்பட இப்போது அவன் மயக்கம் தெளிந்தது.
இந்த சண்டை ஏன் நடந்தது? எதனால் நடந்தது? என்ற விசாரணை எதுவும் இல்லாமல் இரத்தம் சிந்தி நின்ற ஒரே காரணத்திற்காக நவீன் நிரபராதியாக குமரன் குற்றாவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டான்.
“நாம பாக்கும் போது ஒன்னும் தெரியாத அப்பாவியா நடிக்குறது. ஆனால் உள்ளுக்குள்ள இருக்குறது முழுசும் பக்கா ரவுடித்தனம்” என்று குமரனைப் பார்த்து முறைத்தபடியே சொன்ன முதல்வர்,
 அந்த இடத்தில் நின்றே இருவரின் வீட்டு ஃபோன் நம்பரையும் வாங்கி நாளை கல்லூரி க்கு வந்து சேருங்கள் என்று அவர்களின் பெற்றோருக்கு சொல்லி முடித்த போது அவர் முகத்தில் கோபம்…கோபம்…கோபம் மட்டுமே.
அதன்பிறகு நவீனை கல்லூரி வளாகத்திலேயே இருக்கும் சிறிய கிளினிக்கு அனைவரும் அழைத்து செல்ல ஏதும் செய்யமுடியாத கையறு நிலையில் நின்றிருந்தான் குமரன்.
கல்லூரியில் நடந்ததை சொல்லி முடித்த குமரன் நீண்ட பெருமூச்சு ஒன்றை விட, அதை கேட்டவர்களுக்கோ ஆயாசமாக இருந்தது.
பெற்றவர்கள்  பிள்ளைகளை படிப்பதற்காக அனுப்பினால் அவர்களோ வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையோ பயமோ ஏதுமின்றி என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே இளைய சமுதாயத்தைப் பற்றிய கவலை மனதில் அப்பிக் கொண்டது பவானிக்கு.
“குமரா! நடந்ததை எல்லாம் கூட்டியோ குறைச்சோ சொல்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லிட்ட இல்லியா?” என்று பவானி கேட்க
“ஆமாம் அண்ணி” என்று சொன்னவனிடம்,” இல்லை அங்க வந்து பேசும்போது நீ சொன்ன தகவல்கள் உண்மையா இருந்தா தான் என்னால உறுதியா பேசமுடியும்… அதான் கேட்டேன்” என்றவள் “அந்த பையனோட ஃபோன்…” என்று யோசிக்க
“இதோ கொண்டு வந்துட்டேன்” என்று தன் ட்ராக்சூட் பாக்கெட்டிலிருந்து எடுத்து காண்பித்தான் குமரன்…
“ஆமாம்… இதுல ஒன்னும் குறைச்சலில்ல… ஆனால் யோசிக்க வேண்டிய விஷயத்தை யோசிக்காமல் கோட்டைவிட்டுறு” என்று சலித்துக்கொண்டவள் குமரனின் ஃபோனை வாங்கி அந்த மீம்ஸ் ஸைப் பார்க்க அந்த நவீனின் வக்கிர எண்ணம் வழிந்தது அதில்.
“இவ்வளவு பெரிய எவிடென்ஸ் கையிலே இருந்தும்
நீ இன்னைக்கு உங்க பிரின்சிபல் முன்னாடி குற்றவாளியா நின்னதுக்கு  காரணம் உன்னோட முன்கோபம் தான்னு உனக்கு புரியுதா குமரா” என்று கேட்ட பவானி

Advertisement