Advertisement

“இந்த முன்கோபம் என்னைக்காவது ஒருநாள் உன் வாழ்க்கையில தடைகல்லா வந்து நிக்கும். அன்னைக்கு நீ ஐயோன்னாலும் சரி அம்மான்னாலும் சரி யாராலும் ஒன்னுமே செய்யமுடியாது குமரா” என்று ஆதங்கபட்ட பவானி 
“இன்னைக்கு உன் நல்ல நேரம் அந்த பையனுக்கு ஒன்னும் ஆகலை. ஆனால் எல்லா நாளும் இப்படியே இருக்கும் னு சொல்ல முடியாது. ஏதாவது விபரீதமா ஆகிப்போச்சுன்னா உன் வாழ்க்கையே ஒன்னுமில்லாமல் போகும். எது செய்தாலும் கொஞ்சம் யோசித்து செய் குமரா… கோபத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன்னு எதையும் செய்யாத” என்ற அண்ணியின் பேச்சிலிருந்து
குமரனுக்கும் தான் செய்த தவறு புரிந்தது. மற்ற நாள்கள்  போலில்லாமல் இன்று அவன் கண்டிப்பாக அந்த நவீனை பற்றி கல்லூரி முதல்வரிடம் முதலிலேயே புகார் குடுத்திருந்தால் விஷயம் இந்தளவு விபரீதமாக போய் இருக்காது என்று இப்போது அவன் உணர்ந்திருந்தான்.
இதைத்தான் ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று சொல்லுகிறார்கள் போலும் என்று எண்ணிய குமரன் தன் வாழ்நாளில் இனி உணர்ச்சிவசப்பட்டு எந்த காரியத்தையும் அதிரடியாக செய்ய முயற்சிக்கவே கூடாது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்திருந்தான். 
மறுநாள் பத்துமணியளவில் பவானி, மதியழகன், ஜெயராம் மூவரும்  குமரனோடு அவன் கல்லூரியில் நின்றிருந்தார்கள்.
விஷயம் கேள்விப்பட்ட ஜெயராம் தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய இன்னோவாவிலேயே எல்லோரையும் அழைத்து வந்திருந்தார். 
விஷயம் பரணிக்கு தெரியவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தபடியால் யாரும் அவனுக்கு சொல்லவில்லை.
முதல்வரின் அறைக்கு முன்னால் இவர்கள் வர அங்கே இவர்களுக்கு முன்பே நவீன் அவனது பெற்றோரோடு இருந்தான். 
கல்லூரி முதல்வரே நேரடியாக அவனின் பெற்றோருக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருக்க அவர்களை கல்லூரி க்கு வரவிடாமல் அவன் செய்த எந்த சால்ஜாப்பும் அவர்களிடம் எடுபடவில்லை. தன் வண்டவாளம் எல்லாம் இன்று தண்டவாளம் ஏறிவிடுமே என்று பதைபதைப்போடு உட்கார்ந்திருந்தான் அவன்.
அவன் நெற்றிப்பொட்டில் பெருக்கற்குறி அடையாளத்தில் பேண்ட்டேஜூம், முகத்தில் ஆங்காங்கே குமரனின் கைவண்ணத்தால் இரத்தம் கட்டிக்கிடந்தது கறுப்பாகவும் தெரிந்தது. 
அவனது அம்மா குமரனை ஏதோ விரோதியை முறைப்பது போல முறைத்து வைக்க அந்த நவீனோ பொறியில் சிக்கிய எலியாய் முழித்துக் கொண்டிருந்தான்.
அவன் முழியேச்சொன்னது இந்த விஷயம் பிரின்சிபல் மூலம் வீட்டுக்கு போனதால் தான் அவன் பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. இல்லையென்றால் அந்த காயத்திற்கான காரணம் அவன் பெற்றோருக்கு நிச்சயமாக வேறொன்றாகத் தான் தெரியவந்திருக்குமென்று.
இவர்கள் அனைவரும் வெளியே நிற்க பிரின்சிபல் அறையைத் திறந்து கொண்டு குமரனின் வகுப்பில் பயிலும் ஒருசில மாணவ மாணவிகள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
இன்று காலையில் கல்லூரி க்கு வந்த குமரனின் தோழிகள் மூன்று பேருக்கும் விஷயம் தெரிய வர இதற்கு மேலும் தாமதிக்கக் கூடாது என்று நடந்தவை அனைத்தையும் கல்லூரி முதல்வரிடம் சொன்னதோடு நவீன் அனுப்பிய மீம்ஸ்ஸையும் அவரிடம் காட்டியிருந்தார்கள். 
அவனும் வஞ்சனையின்றி நிறைய பேருக்கு அனுப்பியிருக்க அவர்களில் ஒருபகுதியினரையும் சாட்சியாக முதல்வரிடமே கூட்டி வந்திருந்தாள் சொப்னா.
அனைத்தையும் கவனத்தோடு கேட்டுக்கொண்டவர் பெண்கள் மூவரையும் தவிர மற்ற மாணவர்களை அனுப்பி விட்டு வெளியே நின்ற நவீன் குடும்பத்தையும் குமரன் குடும்பத்தையும் உள்ளே அழைத்தார்.
உள்ளே வந்தவர்களின் வணக்கத்தை பெற்றுக்கொண்டு தானும் பதில் மரியாதை செய்த மனிதர் குமரன் கொடுத்த நவீனின் ஃபோனை வாங்கிக்கொண்டு  அவனை காச்சு காச்சென காச்சிவிட்டார்.
“சார் பெரிய ஆளு… அதான் எங்ககிட்ட எல்லாம் வராமல்   அவரோட ப்ராப்ளத்தை அவரே சால்வ் பண்ணிக்கலாம்னு நேரடியா களத்தில் குதிச்சிட்டாரு” என்று குமரனைச் சாடியவர், பெண்கள் மூவரையும் பார்த்து
இவங்கெல்லாம் அதுக்கு மேல,”இந்த விஷயத்துக்கு போய் கம்ப்ளைண்ட் பண்ணணுமான்னு நீங்களெல்லாம் நினைக்குறதாலத் தான் இந்த மாதிரி முள்செடிங்க தட்டுவாரும் இல்லாமல் கொட்டுவாரும் இல்லாமல் வளர்ந்து நிக்குது” என்று நவீனை கைகாட்டி பேசியவர் 
“சாருக்கு எப்படி எக்ஸாம் எழுதணும் னு எண்ணம் இருக்கா? இல்லையா?” என்று நவீனை பார்த்து நக்கலாக கேட்க
ஒன்றும் புரியாமல் விழித்த அவனின் பெற்றோருக்கு அவர்களுடைய மகனின் செயல் சொல்லப்பட்டது. 
இவ்வளவு நேரமும் ஏதோ குமரனை வில்லனாக பார்த்த நவீனின் அம்மா பளாரென்று தன் மகனை அறைந்ததோடு நால்வரிடமும் மன்னிப்பும் கேட்க சொன்னார்.
உண்மையிலேயே தன்பிள்ளை செய்த காரியத்தால் அந்த பெற்றவர்களுக்கு அதன் பின் அங்கிருந்த யாரையுமே ஏறிட்டு பார்க்கவே இயலவில்லை.
தன் பெற்றவர்களுக்கு தான் செய்த தவறு தெரிந்துவிடவும் கூனிக்குறுகிப் போன நவீன் தன் அம்மா சொன்னபடி மன்னிப்பும் கேட்க, 
அவனிடம்,”இந்த இடத்தில் கூட நீ உன்னை திருத்திக்கலாம் நவீன்… முயற்சி பண்ணு…” என்று ஒரு நல்லாசிரியராய் தன் மாணவனுக்கு அறிவுரை சொன்ன முதல்வர்
“இல்ல, நான் இப்படி இவங்களுக்கு தொந்தரவு குடுத்துட்டே தான் இருப்பேன்னு சொன்னா உன்னால ஃபைனல் எக்ஸாம்ஸ் எழுத முடியாது… அதையும் ஞாபகம் வச்சுக்கோ” என்றவர் குமரன் உள்ளீட்டோரை வகுப்புக்குப் போக சொன்னார்.
பின் குமரனின் குடும்பத்தாரிடம்,”சாரி…நேற்று அந்த பையனை இரத்தத்தோடு பார்த்ததும் கொஞ்சம் டென்ஷன் ஆகிடிச்சி. அதான் ஒழுங்கு நடவடிக்கை அது இதுன்னு சொல்லிட்டேன்” என்றவர், நவீனின் அம்மாவிடம்
“பையனை கொஞ்சம் கண்டிச்சு வளங்கம்மா இல்லைன்னா இப்படி தான் வேற யாராவது கண்டிக்கவேண்டிய நிலமை வந்துடும்” என்று சொல்லி தான் அழைத்ததுக்கு மரியாதை கொடுத்து வந்தமைக்கு அனைவருக்கும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தார். 
நினைத்ததை விட பிரச்சினை சுலபமாகவே முடிந்து விட குமரனோடு வந்தவர்கள் மனநிம்மதியோடு வீடு திரும்பினார்கள்.
*********
 காலையிலேயே எழும்பி குளித்து முடித்து புறப்பட்ட பரணிதரனுக்கு அன்று பயிற்சியில் மனது ஒன்றும்போல் தோன்றவில்லை.
 வேறொன்றுமில்லை, இன்று அவன் எழுதியிருந்த மெயின் எக்ஸாம் க்கு ரிசல்ட் வருகிறது என்று தெரிந்த நேரத்திலிருந்தே ஒருவிதமான உணர்வு ஒன்று அவனை சூழ்ந்து கொண்டது.
கண்டிப்பாக பாஸாகிவிடுவான் தான். அதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் மதிப்பெண்கள் தான் நினைத்தபடி வந்துவிட வேண்டும் என்ற பரபரப்பு அவனை சூழ்ந்து கொண்டது.
வீட்டுக்கு அழைத்து இன்று ரிசல்ட் என்ற தகவல் சொன்னவன் மனைவியிடம் சிறிது நேரம் தனியாகப் பேசினான்.
அதன்பிறகு  நண்பனின் பைக்கை எடுத்துக்கொண்டு கடற்கரைச் சாலையில் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டவன் ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி முடிவுகள் வந்து விட்டதா என்று பார்க்க முடிவு வந்திருக்கவில்லை.
பீச் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கடலலையில் கால்நனைய நடந்தவனின் மனம் சிறிதே சமன்பட கடற்கரை மணலில் கால்நீட்டி அமர்ந்து கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி கரையை நோக்கி ஓடிவரும் அலைகளையே அமைதியாக பார்த்தபடி  இருந்தான்.
கரையைத் தொட்டுவிடும் ஆர்வத்தில் ஒன்றன் பின் ஒன்றாக விடாமுயற்ச்சியோடு ஓடி வரும் அலைகளை பார்த்துக்கொண்டிருப்பதே அலாதியாக இருந்தது.
பின்னர்  ரூமிற்கு திரும்பி வந்தவன் கட்டிலில் படுத்துக்கொள்ள நீண்ட பயணத்தினாலோ இல்லை கடற்கரை உப்புக்காற்று செய்த மாயமோ தெரியவில்லை அசந்து தூங்கி விட்டான் பரணி.
நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டிருந்த அலைபேசியின் சத்தத்தில் விழித்தவன் அதை எடுத்து காதுக்கு கொடுக்க அந்த பக்கம் இருந்து அவன் மனைவி ஆர்ப்பரித்தாள்.
“என்ன விஷயம்?” என்று கேட்டவனிடம்,”ரிசல்ட் பப்ளிஷ் பண்ணிட்டாங்க, நீங்க இன்னும் பாக்கலையா? அப்படின்னா பாத்துட்டே கூப்பிடுங்க” என்று ஃபோனை கட் செய்து விட
மனைவியின் ஆர்ப்பரிப்பிற்கான காரணம் ரிசல்ட்டை பார்த்தவனுக்கு புரிந்தது.
ஆம்…தான் நினைத்ததை விட அதிகப்படியான மதிப்பெண்களைப் பெற்று மெயின் எக்ஸ்ஸாமை க்ளீயர் செய்திருந்தான் பரணி.
உடனே மனைவிக்கு ஃபோனை போட்டவன் இன்னது செய்கிறோம் என்று இல்லாமல் ஃபோனிலேயே  முத்தங்களை அள்ளி வழங்க,”நேர்ல பாக்கும் போது குடுக்குறதுக்கு ஸ்டாக் வச்சுக்குங்க ஆபீஸர்” என்று கிண்டலடித்தாள் பவானி.
“அதெல்லாம் முத்தத்தை மொத்தமா ஸ்டாக் வச்சிருக்கேன்
நீ கவலைப்படாத அம்மணி” என்று சொன்னவனிடம்
“இதே மாதிரி இன்டர்வியூ வையும் சக்ஸஸ்புஃல்லா முடிக்க என்னுடைய வாழ்த்துகள் பரணி” என்றவள் நேர்முகத் தேர்வுக்கு கணவன் எப்படி எல்லாம் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று கேட்டு  தெரிந்துகொண்டாள்.
பின்னர் “இன்டர்வியூக்கு கால் ஃபார் எப்போ பண்ணுவாங்க” என்று விபரம் கேட்டவள்
“நம்ம பாப்பு பிறந்த நாளுக்கு முன்னாடி உங்க இன்டர்வியூ முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்ல? என்று சொல்லியபடியே
“இன்டர்வியூ இன்னும் எவ்வளவு நாளைக்குள் இருக்கும் ன்னு சொல்லிக்கிறாங்கப்பா?” என்று கேட்க
“எப்ப்படியும் முப்பது நாற்பது  நாளுக்குள்ள அனவுன்ஸ் பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன்”
“அப்படி இருந்தால் நீங்களும் சின்னவ பிறந்தநாளுக்கு வந்துடுவீங்க தானேப்பா” என்றவளின் குரலில் தங்கள் 
மகளிள் முதல் பிறந்த நாளில் கணவன் உடனிருக்க வேண்டும் என்ற ஆவல் தெரிந்தது.
“அதெல்லாம் வந்துடுவேன் நீ வொர்ரி பண்ணிக்காத…”
என்று மனைவிக்கு தைரியமூட்டினான் பரணி…
அவர்கள் பேசிக்கொண்டபடி குறித்த நாளில் குழந்தை சிந்து வின் பிறந்த நாளும் வந்தது.
ஆனால் பரணிதரனின் நேர்காணல்??

Advertisement