Advertisement

“இல்லை…” என்னும் விதமாக தலையாடியது பெண்ணுக்கு. 
இப்போது தான் குமரனுக்கும் ஏதோ உறைக்க லேசாக முகத்தை உற்றுப்பார்க்க அது நந்தினி இல்லை நந்தினியின் சுடிதாரைப் போட்டுகொண்டு உட்கார்ந்திருந்த பவித்ரா என்று தெரிய ஏதோ தேள் கொட்டியவன் போல அவசரமாக கையை விலக்க பவித்ராவின் கைகளில் ஸ்கூட்டி நாட்டியமாடத் தொடங்கியது.
சட்டென்று வண்டியின் கட்டுப்பாட்டை தன்கைகளில் எடுத்தவன் அதை ஒடித்து திருப்பி தன் வேகத்தை எல்லாம் வண்டியில் காண்பிக்க கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டி வீட்டு முன் வந்து நின்றது.
சட்டென்று இறங்கி வண்டியின் சாவியை உருவிக் கொண்டு பவித்ராவின் கண்ணை உற்றுப் பார்த்து அவளை முறைத்தபடியே,”நான் நந்தினி இல்லை பவித்ரா ன்னு மொதல்லே சொல்லுறதுக்கு என்ன” என்று பவித்ராவை ஒரு கடி கடித்தபடியே வீட்டுக்குள் சென்ற குமரனை,
“டேய்! நீயெல்லாம் ஐபிஎஸ் ஆகணும் ங்கிற ஆசையில அலையுறன்னு ஊருக்குள்ள சொல்லிப்புடாதடா…சிரிச்சிப்புடுவாய்ங்க…” என்று அவனுடைய மனமே அவனை எள்ளி நகையாடியது…
பின்னே நடந்திருக்கும் விஷயமும் அப்படித்தானே இருக்கிறது.
‘நந்தினியோட ட்ரெஸ்ஸைப் போட்டவங்க எல்லாம் நந்தினியாகிவிட முடியுமா? கொஞ்சமாவது என்னை யூஸ் பண்ணியிருந்தா வண்டியில் உட்கார்ந்து இருந்தது பவித்ரா ன்னு கண்டுபிடித்திருக்கலாமே’ என்று அவனுடைய அறிவு அவனைப் பார்த்து நக்கலடித்தது.
‘ஆமாம்… ஹெல்மெட் போட்டுட்டு உக்கார்ந்திருந்த விதத்திலேயே நான் உஷாராகி இருக்க வேண்டாமா? இந்த குட்டிபிசாசைத் தவிர வேறுயாருக்கு இந்த மாதிரி ஐடியாவெல்லாம் வரும்’ என்று அலுத்துக் கொண்டவனின் முகத்தில் பவித்ராவிடம் காட்டிய கோபத்தின் சுவடு மருந்திற்கும் இல்லை…
உண்மைதான்… இப்போதெல்லாம் பவித்ரா வின் செயல்களோடு, அவளையும் சேர்த்து கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க ஆரம்பித்திருக்கிறான் குமரன்.
அந்த விருப்புக்கும் வெறுப்புக்குமிடையேயான நூலளவு இடைவெளி குமரனைப் பொருத்தவரை என்றோ அறுந்து போயிருந்தது.
ஆனால் தனக்கும் சரி பவித்ராவிற்கும் சரி இது தங்களின் படிப்பின் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் என்று புரிந்திருந்த குமரன் அவளை எந்தவிதத்திலும் சலனப்படுத்தாமல் எப்போதும் போல் கோபம் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு அலைகிறான்.
ஆனால் இன்றோ நடந்தவை அனைத்தும் எதிர்பாராத விதமாய் இருக்க காளையவன் மனமோ கட்டுக்கடங்காமல் திமிறத்தான் செய்தது.
“இப்படியே போனா தாங்காது சாமி. சீக்கிரமே கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணிட்டு கோச்சிங்கிற்காக சென்னையை பார்த்து ஓடிடணும்’ என்று எண்ணியபடியே தன் அறைக்குள் அடைந்து கொண்டான் குமரன்.
 பவித்ராவோ அவன் விட்டு சென்ற இடத்திலேயே நின்று கொண்டு நடந்தது அனைத்தையும் திரும்பவும் ஒருமுறை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். 
நந்தினி அடிக்கடி,”சின்ன அண்ணாவிடம் வண்டி ஓட்டி கத்துக்கப்போறேன்” என்று பவித்ராவிடம் சொல்ல நம் ஆர்வக்கோளாறோ அவளுக்கு முன் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் அறியாமல் ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு வந்திருந்தாள்.
அந்நேரம் பார்த்து குமரன் வரவும்,’அம்மாடியோவ்! காஞ்சான் பைக்கோடு என்னை பார்த்தால் அவ்வளவு தான்’ என்று பதறினாலும் அவளால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொள்ள
“கடவுளே! என்னை குமரன் கண்டுக்காம போயிடணும்’ என்ற வேண்டுதலோடு தம்கட்டியபடி அங்குமிங்கும் திரும்பாமல் அதே இடத்தில் நின்று கொண்டாள்.
ஆனால் அவள் வேண்டுதல் எல்லாம் காற்றில் பறக்க குமரன் வந்து அவள் பின்னே வண்டியில் அமர்ந்து கொள்ளவும் திக்கென்றது ஆனது பவித்ராவிற்கு.
பிறகு தான், தன்னை அவன் நந்தினி என்றெண்ணி உட்கார்ந்து இருக்கிறான் என்று அவன் பேச்சில் உணர, அழகாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நந்தினியின் ட்ரெஸ்ஸை எடுத்து போட்டுக்கொண்ட தன் முட்டாள்தனத்தை சபித்து கொண்டே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்  அவன் ஆட்டுவித்தபடி இவள் ஆடினாள்…
இன்று அவன் அருகாமை ஏனோ ஒரு அவஸ்த்தையை தந்திருந்தது என்றாலும் அதைத் தாண்டி சிந்திக்கும் திறன் அவளுக்கு இன்னும் வந்திருக்கவில்லை.
தன்னை அடையாளம் கண்டவுடன் அப்படியே வண்டியோடு விட்டு விட்டு வராமல் திரும்பவும் வீட்டு முன் கொண்டு வந்து விட்டது தான் அவளைப் பொறுத்தவரை  பெரிய விஷயமாக இருந்தது.
*********
  நேரம் இரவு பத்து மணி. தனது பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தட்டிக்குடுத்தபடியே படுத்திருந்தாள் பவானி. 
கண்களோ பக்கத்தில் இருந்த அலைபேசியை தொட்டுத் தொட்டு மீண்டது. இன்னமும் அவள் எதிர்பார்த்த நபரிடமிருந்து ஃபோன் வந்தபாடில்லை. 
வேறொன்றுமில்லை இன்று  தன்னுடைய பரீட்சைகள் அனைத்தையும் எழுதிமுடித்திருந்த பரணிதரன் சாயங்காலம் ஒரு ஆறு மணிக்கு போல் ஃபோன் செய்து வீட்டிலுள்ள அனைவரிடமும் பேசியிருந்தான்.
“தான் நினைத்ததை விட பரீட்சையை மிக நன்றாக எழுதியிருப்பதாக” அவன் சொன்னபோது குடும்பத்திலுள்ள அனைவருமே சந்தோசத்தின் உச்சியில் நின்றார்கள். 
அந்த சந்தோஷத்தை கணவன் தன்னிடம் இரவில் தனியாக பகிர்ந்து கோள்ளுவான் என்று எதிர்பார்த்திருந்தாள் பவானி. அந்த நம்பிக்கையில் தான் உறங்காது உட்கார்ந்து இருக்கிறாள். 
சிறிது நேரத்தில் அவள் கணவன் அழைப்பதாக கைபேசி சொல்ல எடுத்து காதுக்கு கொடுத்தவள்,” இப்பதானே பேசுனீங்க ஆபீஸர். அதுக்கிடையில் என்ன திடீர்னு திரும்பவும் பேசுறீங்க” என்று கணவனிடம் வேண்டுமென்றே வம்பு வளர்த்தாள் பவானி.
அவள் வம்பு புரிந்து மெலிதாக சிரித்தவன்,”இதென்னப்பா வம்பா போச்சு? பொண்டாட்டி கிட்ட தனியா பேசணும்னு நினைக்கிறது கூட குத்தமாய்யா உங்க ஊர்ல” என்று பதில் கொடுத்தவன் 
 மகள் சிந்துவைப்பற்றி ஆவலாக விசாரிக்க
“பரீட்சை தான் முடிஞ்சிடிச்சே, ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டு போங்களேன் பரணி” என்று ஆவலாக அழைத்தாள் பவானி. 
மெயின் எக்ஸாம்ஸ் முடிந்து அதன் முடிவிற்கு பிறகு வரும் நேர்முகத்தேர்விற்கான பயிற்சியில் மறுநாளிலிருந்தே சேர்ந்துவிடும் நோக்கத்தில் இருந்தான் பரணி.
“வரலாம்… எனக்கும் ஆசையால் தான் இருக்கு… ஆனால்…” என்று இழுத்தான் பரணிதரன்.
“வரணும்னு நினைச்சா உடனே வந்துடணும்… இந்த ஆனா ஆவன்னா ன்னு எல்லாம் இழுக்கக்கூடாது பரணி” என்று உற்சாகமாகச் சொன்னாள் பவானி.
“வரலாம் தான்… ஆனால் நான் அங்க வந்து ஏதும் ஏடாகூடமா ஆகிப்போச்சுன்னா, நீ ஹார்மோன் சேன்ஜ்ஜஸ்னு முதல்ல இருந்து ஆரம்பிப்ப” என்று மெதுவாக சிரித்தவன்
“அப்புறம் நான் உன்னை கவனிப்பனா? என்னோட இன்டர்வியூக்கு ரெடியாகுவனா? நீயேச் சொல்லு…அதனால இப்போதைக்கு உங்கிட்ட இருந்து எவ்வளவு தூரம் நான் தள்ளியிருக்கிறனோ அவ்வளவு தூரம் நான் சேஃப்” என்று சொல்லி வெடிச்சிரிப்பு சிரிக்க
செங்கொழுந்தாகிப்போன பவானி,”ஒரு வருங்கால கலெக்டர் பேசுற பேச்சா பரணி இது?” என்று சிணுங்கினாள்.
“ஏம்மா? வருங்கால கலெக்டர் ன்னா பொண்டாட்டி கிட்ட இப்படி எல்லாம் பேசக்கூடாது ன்னு ஏதும் சட்டம் ஏதும் இருக்கா என்ன?” 
“பேசுங்க…நல்லா பேசுங்க… ஆனால் எனக்கு இப்போ தூக்கம் வருது. குட் நைட்” என்று வராத தூக்கத்திற்காக ஒரு கொட்டாவியை அவசரமாக விட்டபடியே அலைபேசியை அணைக்க பரணிதரனின் அட்டகாசமான சிரிப்பு காற்றலை மூலமாக பவானியை வந்தடைந்து அவளை வெட்கப்படவைத்தது.
தன் கணவன் அவன் முயற்சியில் பாதி கிணறை வெற்றிகரமாக தாண்டிவிட்டான் என்ற எண்ணம் தந்த மகிழ்ச்சியோ அல்லது நேற்றிரவு அவன் பேசிய பேச்சுக்களால் ரகசியமாக பூத்துக் கிடந்த மனதின் மகிழ்ச்சியோ ஏதோ ஒன்றால் பவானியின் முகம் மறுநாள் முழுவதும் பூரித்து கிடந்தது.
அந்த மகிழ்ச்சியோடே வழக்கமான நேரத்தில் அலுவலகம் சென்று திரும்பியவளை கோதை நாயகி யின் மடியில் இருந்த சிந்து ஆர்ப்பாட்டமாக துள்ளியபடியே வரவேற்றது.
சிரித்தபடியே குழந்தையை கைகளில் வாங்கியவளின் கண்கள் தன் அத்தை மாமாவின் முகங்கள் காட்டிய சோர்வை கண்டுகொள்ள
குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டு கோதை நாயகியின் அருகில் அமர்ந்தவள்,”என்னாச்சு அத்த? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று கேட்டாள்
கோதைநாயகியோ பதிலேதும் சொல்லாமல் கணவனைப் பார்த்தார். அதை கவனித்த பவானி,”என்னாச்சு மாமா?” என்று மாமனாரிடமும் கேட்க
தொண்டையை லேசாக செருமிக்கொண்ட மதியழகன்,”ஏதோ குமரன் மேல காலேஜ்ல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போறாங்களாம். அதுக்கு நம்மளை காலேஜ்கு நாளைக்கு வரச் சொல்லுறாங்க ம்மா” என்றார் சோர்வாக
“ஒழுங்கு நடவடிக்கையா? அப்படி என்ன தவறு செய்திருப்பான் குமரன்” என்று எண்ணி பவானி மண்டையை உடைத்துக்கொள்ள
கல்லூரி விட்டு குமரனும் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தான். பவானி குமரனின் முகத்தை உற்றுப்பார்த்தாள். குமரனவன் முகமும் கொஞ்சம் கலங்கினாற் போல்தான் இருந்தது.
வீட்டினுள் வந்த குமரனை”குமரா! ஃப்ரெஸ்ஸாகிட்டு சீக்கிரம் வா. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று பவானி சொல்ல, தலையசைத்தபடியே அறையினுள் சென்று திரும்பியவனிடம்
“கல்லூரியில் என்ன நடந்தது” என்று பவானி கேட்க சொல்ல ஆரம்பித்தான் குமரன்…

Advertisement