Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 17.
பரணிதரன் வேலையை விட்டு விடுவதாகச் சொல்ல மதியழகனோடு சேர்ந்து எல்லாருமே அதிர்ச்சியாகத் தான் பார்த்தார்கள் பரணிதரனை.
மதியழகனோ மருமகளைப் பார்க்க, அவளின் முகபாவம் கணவனின் முடிவு ஏற்கனவே அவளுக்குத் தெரியும் என்று சொன்னது.
“என்னப்பா திடீருன்னு இப்படி ஒரு முடிவு?” மதியழகன் தான் கேட்டிருந்தார். 
“திடீர்னு இல்லப்பா…கொஞ்சநாளாவே எம்மனசுல இந்த எண்ணம் ஓடிட்டு தான் இருக்கு” என்று சற்றே நிறுத்தியவன்,”இந்த தடவை நான் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதலாம்னு முடிவெடுத்துருக்கேன் ப்பா” என்றான்.
மகனின் கலெக்டர் கனவைப் பற்றி தெரிந்தவர் தானே மதியழகன். அதனால்,”ரொம்ப சந்தோஷம் பா…தாராளமா நீ எழுது… ஆனால் அதுக்கு ஏன் வேலையை விடணும்…” என்று கேட்க
“என்னோட வயசுக்கு இதுதான் எனக்கு கடைசி சான்ஸ். அதனால கொஞ்சம் ஹார்ட் வர்க் போட்டு கண்டிப்பா வந்துடணும்னு நினைக்கிறேன் ப்பா… வேலைக்கு போய்ட்டே டெஸ்ட்க்கு தயாராகுறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். அதான் வேலையை விட்டுட்டு கோச்சிங் சென்டர்ல சேர்ந்து படிக்கலாம்னு…” என்று சொல்லிக்கொண்டே வந்தவனுக்கு தன் தந்தையின் கலக்கம் எதனால் என்று புரிய
“வேலையை விடப்போறேன்னா நான் ரிசைன் பண்ணப்போறதா நினைச்சிட்டீங்களாப்பா?” என்று கேட்டவன்,”நான் வேலை பார்க்கிற டிபார்ட்மெண்ட்ல இன்பாஃர்ம் பண்ணிட்டு அவங்க பெர்மிஷனோடே டெஸ்ட் எழுத போகலாம் ப்பா” எனவும் மதியழகன் “அப்படியா?” என்பது போல் பார்க்க
“ஆமாம் ப்பா… தேவைப்பட்டால் அப்புறம் வந்து வேலையில சேர்ந்துக்கலாம்” என்றவன்,”இப்படி ஒரு வாய்ப்பு இருந்ததால நான் உபயோகபடுத்திகிட்டேன். இல்லைன்னா கண்டிப்பா வேலையை ரிசைன் பண்ணிட்டு தான் போயிருப்பேன்” என்றவனின் குரலில் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன் என்ற உறுதி தெறித்தது.
“நீ பரிட்சை எழுதப்போறது எனக்கு சந்தோஷம் தான் ப்பா. அதோட உம்மேல எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கையும் இருக்கு. ஆனாலும்‌… ஒரு சின்ன சந்தேகம், அதான் தெளிவு படுத்திகிட்டேன் தம்பி” என்றார் மதியழகன்.
” அப்படியே ஒருவேளை, அதுவும் இல்லை இதுவும் இல்லை ங்குற மாதிரி நிலைமை ஏதும் வந்திச்சின்னா, இன்னும் ஒரு பத்து பசுமாடு கூடுதலா வாங்கிவிட்டு நம்ம பண்ணையை பெரிசு பண்ணிடவேண்டியது தான்” என்று சிரித்தபடியே கூறியவன் 
“என்னையும் உங்க தொழில்ல பார்ட்னரா சேத்துக்குவீங்க தானே ப்பா…” என்று விளையாட்டாக சந்தேகம் கேட்க
 தன் தகப்பன் ஏதோ பெரிதாக காமெடி பேசிவிட்டான் என்னும் கணக்கில் சரியாக அந்த நேரத்தில் குட்டிபெண் கைதட்டி சிரித்தது. 
இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அந்த ஹால் சின்னவளிள் செயலில் கலகலப்பாகியது. குழந்தையிடம் வந்த குமரன், அவளைத் தூக்கி தன் கைகளில் வைத்துக் கொண்டு,”நான் இந்த முடிவை உங்ககிட்ட இருந்து எப்பவோ எதிர்பார்த்தேன் ண்ணா” என்றவன்
தன் கைகளில் இருந்த அண்ணன் மகளிடம்,”அப்பாவுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க பாப்பு” என்று அதன் பட்டுத் தலையில் தன் தலையால் லேசாக மோத, தன் வசீகரச் சிரிப்பை சிதற விட்டது குழந்தை. குழந்தையோடு சேர்ந்து தானும் சிரித்தவன்
“நீங்க ஏற்கனவே பிரிலிமினரி எக்ஸாம் பாஸ் பண்ணிட்டீங்க தானே ண்ணா… இனி அடுத்து மெயின் எக்ஸாம்ஸ் தானே?” என்று கேட்க
” ம்ம்… மெயின்ஸ்க்கு ஒரு மூனுமாச கோச்சிங் அப்புறம் டெஸ்ட்,  இன்டர்வ்யூ ன்னு எப்படியும் ஒரு ஆறு மாசம் இழுத்திடும் குமரா…”என்றவன் தந்தையைப் பார்த்து,  “அதுவரைக்கும் சமாளிச்சிடுவீங்கல்ல ப்பா…” என்று கேட்க
“நீ தைரியமா போய்ட்டு வாடா…நாங்க இங்க எல்லாம் பாத்துகுவோம்” என்று சொல்லி மகனுக்கு தைரியமூட்டினார் தந்தை. 
பிரிலிமினரி தேர்விற்கான வயது வரம்பை தான் கடந்து விடக் கூடாது என்பதற்காகவே திரும்பவும் அதை எழுதி தேர்ச்சியும் பெற்றிருந்தான் பரணி…
அதன்பிறகு பவானியோடான சந்திப்பு, அவர்கள் திருமணம், குழந்தை பிறப்பு என்று அவனால், அவனின் கனவை நோக்கிய அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமலேயே இருந்தது.
ஆனால் இன்னும் தாமதித்தால் அவனின் கனவு என்றுமே அவன் கைசேராது என்ற உண்மை புரிய தங்கள் ரூமிற்கு குழந்தையோடு வந்து விட்ட தன் மனைவியோடு இதைப்பற்றி பேசியிருந்தான்.
ஆமாம்… அன்று மகளோடு தங்கள் அறைக்கே வந்துவிடு என்று மனைவியிடம் சொன்ன இரண்டு மூன்று நாட்களிலேயே தாயும் மகளும் மேல் அறைக்கு வந்திருந்தார்கள். 
“அம்மாகிட்ட மேல ரூமுக்கு போறேன்னு சொன்னியா பவானி!” மனைவி எப்படி மேலே தங்கள் ரூமிற்கு வந்தாள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பரணி கேட்க
“எம்பொண்டாட்டியையும் பிள்ளையையும்  என்ரூமுக்கு அனுப்புங்க ம்மா ன்னு நீங்க முகத்திலேயே எழுதி ஒட்டிக்கிட்டு அலையும் போது, நான் வேற தனியா கேக்கணுமா ப்பா? என்று கேட்டு பரணிதரனை வெட்கப் படவைத்திருந்தாள் பவானி…
தங்களது அறைக்கு வந்திருந்த மகளிடமும் மனைவியிடமும் முன்பை விட அதிக நேரம் செலவழிக்க முடிந்தது பரணிதரனால். 
‘அறையில் இடம்பிடித்த தொட்டிலும் அங்கு கேட்கும் குழந்தையின் மழலைச் சத்தமும் ஒரு சிறிய இடத்தை சொர்க்கலோகமாகவே மாற்றமுடியுமா?’ வியந்து தான் போயிருந்தான் பரணிதரன். 
அவனின் குட்டி தேவதை அவனுடைய மாலைப் பொழுதுகளை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தாள். அப்படி ஒரு வண்ணமயமான பொழுதில் மனைவியிடம் தன்முடிவைப் பற்றி பரணிதரன் சொன்னான். 
மகிழ்ந்து போன பவானி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடல்லாமல் கணவனை கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்ச்சி எடுத்துக் கொள்ளவும் ஊக்குவித்தாள்.
உண்மையில் பரணிதரனுக்கு வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டே பரீட்சைக்கு தயாராகும் எண்ணம் தான் இருந்தது.
ஆனால் பவானியோ “வீட்டில் இருந்து தயாராகும் போது கவனம் சிதற வாய்ப்பிருக்கிறது” என்றாள்.
அந்த காண்டீபனின் பார்வை எப்படி தன் இலக்கொன்றினையே குறியாகக் கொண்டிருந்ததோ, அதேபோல இதுவும் தன் வாழ்வில் அப்படியான ஒரு தருணம் தான் என்பது பரணிதரனுக்கு புரிந்து இருந்தபடியால் மனைவி சொல்லியபடியே கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை மேற்கொள்வது என முடிவெடுத்து கொண்டான்.
எடுத்த முடிவை தாமதிக்காமல் வீட்டினரோடு பகிரவும் செய்து விட்டான் பரணிதரன்.
சென்னையில் ஏற்கனவே தான் பயிற்சி எடுத்த நிறுவனத்தையே இப்போதும் தனக்கான பயிற்சி நிலையமாக தேர்ந்தெடுத்துக் கொண்டவன் கிளம்பும் நாளும் வந்தது.
அன்று மகளை தன்னிடமிருந்து இருந்து யாருடைய கைகளிலும் கொடுக்க மனமில்லாமல் கொண்டு திரிந்தவன் தனியறையில் மனைவியிடம்,”என்னோட கனவு, கொள்கைன்னு உன்னை தனியா விட்டுட்டு போறதே என்னோட வேலையாப் போச்சு இல்லையா பவானி” என்று கேட்க
தன் கணவனின் தற்காலிகப் பிரிவு மனதில் ஒரு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதை அவனிடம் மறைத்து,
“தனியா விட்டுட்டு போறீங்கன்னு யார் சொன்னது? எங்களுக்காக எவ்வளவு பெரிய குடும்பத்தை
குடுத்திருக்கீங்க பரணி” என்று கணவனை தைரியப்படுத்தியவள்
“கண்டதையும் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்கிறதை விட்டுட்டு உங்க முயற்சியில் முழு கவனத்தையும் வைங்க ப்பா…  கண்டிப்பா உங்க கனவு உங்க கை சேரும்” என்று சொன்ன மனைவியை குழந்தையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் பரணிதரன். 
 
அதன்பிறகு வீட்டில் உள்ள அனைவரின் வாழ்த்துக்களோடு விடைபெற்று சென்றிருந்தான் பரணி. 
பரணிதரன் பயிற்சிக்காக சென்னை வந்து இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது. தன்னுடைய பயிற்சியில் முழுமூச்சாக தன்னை கரைத்துக் கொண்டான் பரணி. 
கிடைக்கும் இடைவெளிகளில் தன் வீட்டினரோடும் பேசத் தவறுவதில்லை. 
 யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அவன் நண்பர்கள் தேர்வை எதிர்கொள்ள தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை பரணிதரனுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அவையெல்லாம் இன்னும் உதவியாக இருந்தது அவனுக்கு.
மொத்தத்தில் கடிவாளமிட்ட குதிரையாய் தன் இலக்கை நோக்கி ஓட தயாராகிக் கொண்டிருந்தான் பரணிதரன்.
இங்கோ பவானி தன் மெட்டர்னிட்டி லீவ் முடிந்து மறுபடியும் வேலைக்கு போக ஆரம்பித்து இருந்தாள். ஆரம்பத்தில் தாயை  விட்டு பிரிந்திருப்பது குழந்தைக்கு சிரமமாக இருந்தாலும் சீக்கிரமே அந்த சூழ்நிலைக்கும் தன்னை பழக்கிக் கொண்டது குழந்தை.
வீட்டில் உள்ள அனைவருமே தம்தம் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வாழ்க்கை அழகாகவே நகர்ந்தது அவர்களுக்கு.
*******************
அன்று விடுமுறை தினமாதலால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன் நண்பர்களை  பார்த்து விட்டு வரலாம் என்று அண்ணனின் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றிருந்தான் குமரன்.
 திரும்பி வந்த குமரன் கேட்டில் நுழையும் போதே தோட்டத்து நடைபாதையில்  அண்ணியின் ஸ்கூட்டியில், தலையில் ஹெல்மெட்டோடு இவனுக்கு முதுகு காட்டி உட்கார்ந்திருந்தவளைப் பார்த்த போது தான், நந்தினி கொஞ்ச நாட்களாகவே வண்டி ஓட்ட சொல்லித்தருமாறு தன்னை நச்சரித்துக் கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது‌.
‘நான் சொல்லிக் குடுக்கலைன்ன உடனே தானே ட்ரை பண்ண ஆரம்பித்து விட்டாளோ! ஆனாலும் இவ்வளவு அவசரம் ஆகாது இந்த நந்தினிக்கு’ என்று நினைத்துக் கொண்டவன் தான் வந்த வண்டியை நிறுத்தி அதிலிருந்து இறங்கி ஸ்கூட்டியை நோக்கி நகர்ந்தான்.
‘அதெப்படி நந்தினி இங்க இருக்குறப்போ அவளோட ஒட்டுப்புல்லு இங்க இல்லாமப் போச்சு’ என்று பவித்ராவை தன் கண்களால் தேடினான் குமரன். ஆனால் அவளை காணவில்லை.
ஸ்கூட்டி க்கு பக்கத்தில் வந்தவன் ஹெல்மெட்டில் தன் கையால் ஒரு தட்டு தட்டியபடியே,”எப்படியும் கீழ விழுவோம் ங்கிற நம்பிக்கைல முன்னேற்பாடெல்லாம் பலமா இருக்கு போலயே!” என்று கிண்டலடித்தபடியே, “தள்ளி உக்காரு” என்று சொல்லியவன், அவளின் இரண்டு தோள்களையும் பற்றியபடி வெகு இலாவகமாக வலது காலை ஒரு சுழற்று சுழற்றி வண்டியில் மறுபக்கம் போட்டு உட்கார்ந்தான்.
உட்கார்ந்தவன் வலது கையால் வண்டியின் கீயை திருகி ஆன் பண்ணியபடியே,”இப்போ ஸ்டார்ட் பண்ணு”  என்று சொல்ல பதில் இல்லாமல் போகவே கையைப்பிடித்து அவளின் பெருவிரலால் செல்ஃப் ஸ்டார்ட் பட்டனில் வைத்து அழுத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து,” ம்ம்…இப்ப மெதுவா இப்படி ஆக்ஸிலேட்டரை ரெய்ஸ் பண்ணு” என்று சொல்லியபடியே அவள் கைமீது தன் கையை வைத்து சொல்லிக் கொடுத்தவன் வண்டியை பேலன்ஸ் செய்வதற்காக கையை அப்படியே வைத்திருந்தான்.
வண்டி மெதுவாக நகர வண்டி ஓட்டுபவளிடம் இப்போது ஒரு சின்ன பதட்டத்தையும் நடுக்கத்தையும் பின்னால் இருந்த குமரனால் உணரமுடிந்தது.”ஏன் நந்து! உனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியும் தானே? அப்புறம் ஏன் பேலன்ஸ் பண்ணமுடியாமல் கை இவ்வளவு நடுங்குது? என்று கேட்கும் போதே

Advertisement