Advertisement

டேபிளில் ஓங்கி குத்தியவாறே எழுந்தே விட்டான் குமரன். ஆனால் அவன் தோழிகள் எந்த அசம்பாவிதமும் நடக்கவிடாமல் தங்களது நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கு பின்னாடியே நந்தினியும் பவித்ராவும் சந்தோஷை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்
“துஷ்டனைக் கண்டால் தூரவிலகுன்னு சொல்லியிருக்காங்களா இல்லையா குமரா! அதிலும் இவன் நம்மகிட்ட வம்பு வளக்கணும்னே வர்றான்னு தெரியுது. தெரிஞ்சும் அவன் விரிச்ச வலையில போய் நாம விழலாமா?” சொப்னா சொல்ல மற்றவர்கள் அதை ஆமோதித்தார்கள்.
அதன் பிறகும் கோபம் அடங்காதவனாய் இருந்த குமரனைப்பார்த்து,”ஏதாவது பிரச்சினை ஆகிடிச்சின்னா நம்ம வீட்ல பேபி பிறந்திருக்குற சந்தோசமான மொமண்ட்டே ஸ்பாயில் ஆகிடும் டா…பிளீஸ்…காம்டவுண் குமரா” என்று தோழிகள் சொன்னபிறகே நிதர்சனம் உறைக்க கொஞ்சம் அமைதியானான் குமரன்.
ஆனால் பவித்ராவோ,” என்னாச்சு க்கா? எதுக்கு குமரன் கோபப்படுறாங்க?” என்று மெதுவாக அருணாவிடம் கேட்க
அந்த நவீன் மேல் காட்ட முடியாத தன் அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி பவித்ராவிடம்,”ஹாங்… மண்ணாங்கட்டிக்கு… கோபப்படுறாங்க” என்று எரிந்து விழுந்தவன்,
“இங்க நடந்தது எதையும் அங்க வந்து வீட்டுல உள்ளவங்க கிட்ட உளறிவச்ச…மவளே உன்னை கொன்னேபோடுவேன்” என்று கைகளால் அவள் கழுத்தை நெருக்குவது மாதிரி ஆக்ஷன் காட்ட
“அண்ணா என்ன பண்ணுற நீ? யாருகிட்டயும் சொல்லாதீங்கன்னா சொல்லலை… அதுக்காக பவித்ராவை ஏன் திட்டுற?” என்று தோழிக்கு பரிந்து கொண்டு வந்தாள் நந்தினி.
குமரனின் தோழிகள் மூவரும் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றிருந்தார்கள். 
போகும் போது அவர்களுடனே வெளியே வந்த நந்தினியிடம்,”நாங்க போன பிறகு குமரன் அவங்க கிட்ட போய் பிரச்சினை எதுவும் பண்ணிடாம, கொஞ்சம் பாத்துக்கோ நந்தினி” என்று நண்பனின் கோபம் அறிந்தவர்களாய்ச் சொல்ல
“நாங்களும் இன்னும் கொஞ்சநேரத்தில் கிளம்பிடுவோம் க்கா. நீங்க பயப்படாமல் போய்ட்டு வாங்க” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள் நந்தினி.
 
சாயங்காலம் திவ்யாவும், பரணிதரனும்  பவானியுடன்  மருத்துவமனையில் இருந்து கொள்வதாகச் சொல்ல கோதை நாயகி மனமே  இல்லாமல் பிள்ளைகளுடன் வீட்டுக்கு கிளம்பி சென்றிருந்தார். 
மூன்று நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு பவானியையும் குழந்தையையும்  வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள். 
 வாசலிலேயே தன் தம்பியை குடும்பத்தோடு நிறுத்தி ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் திவ்யா.
பவானி இப்போதும் குழந்தையோடு கீழ் அறையில் தான். ஆனால் உடன் தங்கியது பரணிதரன் அல்ல அவனின் அம்மா. அப்போது தான் குழந்தை அழும் போது உதவிசெய்ய எளிதாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. 
அதில் ஆஃபீஸருக்கு மிகுந்த வருத்தமே. ஆனால் சொல்லுவதில் உள்ள நியாயம் புரிய தன்னுடைய அறையை மறுபடியும் பரணி மாடிக்கு மாற்றிக்கொண்டான். 
கோதை நாயகி மட்டுமல்ல அந்த அறையில் முழுநேரமும் காவல் இருந்தது பவித்ராவும், நந்தினியும் கூடத் தான். அவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்திருந்தபடியால் எந்நேரமும் குழந்தைக்கு அருகிலேயே குடியிருந்தார்கள்.
 குழந்தை பிறந்த முப்பதாவது நாள் சொந்தம் பந்தம், நண்பர்கள், அக்கம்பக்கம், என எல்லாருக்கும் சொல்லி பிள்ளையை தொட்டிலில் போட்டு பெயர் வைக்கும் விழாவை நடத்தலாம் என்று முடிவெடுத்திருந்தார்கள். 
பேத்திக்காக மதியழகன் மரவேலை செய்பவர்களை வீட்டுக்கே அழைத்து நல்ல தேக்கு மரத்தாலே தொட்டில் செய்திருந்தார்.
அந்த முப்பதாவது நாளும் வந்தது. பரணிதரன் வேஷ்டி சட்டையில் கிளம்பி மனைவியை யும் மகளையும் பார்க்கலாம் என்று வந்தால் அறையில் மனைவி மகளோடு அவர்கள் இருவருடைய தங்கைகளும் இருந்தனர்.
அழகான பட்டு உடுத்தி முகமெல்லாம் தாய்மை ஜொலிக்க நின்ற தன்மனைவியை கண்களாலேயே பருகியவன்  வெள்ளையில் பேபிபிங் கலரில் பூக்கள் போட்ட பருத்தியிலான பேபிட்ரெஸ் போட்டுரெடியாக்கி வைத்திருந்த தன் குழந்தையை பவித்ராவின் கையிலிருந்து வாங்கியபடி  மெத்தையிலேயே உட்கார, அவனுக்கு இருபக்கமும் உட்கார்ந்து தங்கள் குட்டி தேவதையை பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள் இருவரும். 
“என்னடி? இது!” என்பதுபோல பரிதாபமாக பரணிதரன் மனைவியைப் பார்க்க அவளோ இதழ்பிரியாமல் மௌனமாக சிரித்தாள் தன் கணவனைப் பார்த்து.கண்களில் கேலி லிட்டர் கணக்கில் வழிந்தது. 
அவனுடைய தவிப்பை போக்கும் ஆபத்பாந்தவனாய் அவனது அக்கா பவித்ராவையும், நந்தினியையும் அழைக்க,”இதோ இப்போ வந்துடுறோம் பாப்பு…” என்று குழந்தையிடம் சொல்லிவிட்டே சென்றனர் இருவரும்.
“இப்பல்லாம் உங்கம்மாவை பாக்கணும்னா ஏழுகடல் ஏழுமலை தாண்டி வந்து பார்த்த மாதிரி தான் பார்க்க வேண்டி இருக்குடா” பரணிதரன் தன் குட்டி மகளின் பிஞ்சு விரல்களுக்குள் தன் விரலை வைத்தபடியே மகளிடம் அங்கலாய்க்க, ஒரு சிரிப்புடனே தன் கணவனின் அருகில் அமர்ந்து அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் பவானி.
அந்த அருகாமை இருவருக்குமே வேண்டும் என்பதுபோல இருவருமே அமைதியாய் இருக்க, அவர்கள் வாழ்வின் உயிர்சாட்சி தகப்பனின் மடியில் தன் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி கிடந்தது. 
குறித்த நேரத்தில் சொந்த பந்தங்களாலும் நட்புகளாலும் வீடே நிறைந்திருக்க, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தொட்டிலில் விரிந்திருந்த பட்டுத் துணியில் பவானி குழந்தையை கிடத்தினாள்.
தனது அக்காவிடம்,”பேபியோட காதுல ‘சிந்து’ ன்னு மூனு தடவை சொல்லுக்கா” என்று பரணிதரன் சொல்ல, திவ்யாவும் அப்படியே செய்து குழந்தையின் கழுத்தில் தங்கச்சங்கிலி ஒன்றையும் அணிவித்தாள்.
 அப்போது தான் பவானி உட்பட எல்லாருக்குமே குழந்தையின் பெயரே தெரிந்தது. 
நேற்று இரவு கூட,”பாப்புக்கு என்ன பெயர் வைக்கப்போறீங்க மாமா” என்று எல்லாரும் இருக்கும் போது பவித்ரா கேட்டதற்கு,”நாளைக்கு காலையில தெரிஞ்சிடப் போகுது. அதுவரைக்கும் எல்லாருக்கும் சஸ்பென்ஸ்” என்று சொல்ல மறுத்திருந்தான் பரணி.
சிந்து என்பது பவானியின் அம்மா ‘சிந்தாமணி’ யின் பெயரை ஒட்டி வந்தது என்று எல்லாருக்கும் தெரிந்தேயிருந்தது. இருந்தும் யாருக்கும் இதில் எந்தவிதமான அபிப்பிராய பேதமும் இருக்கவில்லை. 
பவானியோ குழந்தையின் உருவில் தன் அன்னை தன்னிடமே வந்துவிட்டார் என்று முழுமனதாக நம்பத்தொடங்கிவிட்டாள்.
********
“உனக்கு இன்னும் எவ்வளவு நாள் லீவ் இருக்கு பவானி?” குழந்தையை குளிக்க வைத்து பவானியின் கைகளில் கொடுத்தபடியே கோதை நாயகி கேட்க
 கைகளில் வாங்கிய குழந்தையை தன் மடியில் வைத்துக் கொண்டு ஈரம் போக துடைத்தபடியே,”எப்படியும் இன்னும் ஒரு மூனு மாசமாவது இருக்கும் த்த” என்றாள் பவானி. 
குழந்தையோ அம்மா தன்னிடம் தான் ஏதோ சொல்லுகிறாள் என்று நினைத்து தன் பொக்கைவாய் காட்டி சிரித்தது.
 
குழந்தைக்கு மூன்று மாதங்கள் முடிந்திருந்தபடியால்  தனக்கு நெருக்கமானவர்களை அடையாளம் கண்டு இப்போதெல்லாம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறது.
‘என் பாடலுக்கு இந்த பாண்டியநாடே அடிமை’ என்று திருவிளையாடல் படத்தில் பாலையா அவர்கள் சொல்லுவது போல குழந்தை சிந்துவின் சிரிப்புக்கு இந்த வீடே அடிமை தான்.
கோடை விடுமுறை முடிந்து அந்த வீட்டின் இளையவர்கள் எல்லோரும் அவரவர் படிப்பின் அடுத்த நிலைக்காக வெளியே போனதினாலேயே தான் சிந்து அம்மா கைகளில் இருக்கிறாள். இல்லையென்றால் தன் பசியாற மட்டுமே  பவானியின் கைக்கு வருவாள் குழந்தை .
“சும்மா… சும்மா தூக்காதீங்க…கைசூட்டுக்கு பழகிட்டா அப்புறம் எப்பவும் எடுத்து வைக்கவே சொல்லுவா” என்று கோதை நாயகி சொன்னாலும் யாரும் கேட்பதே இல்லை.
பதிலுக்கு,”அதான் வீட்ல இத்தனை பேர் இருக்குறோம்ல யாராவது ஒரு ஆள் எடுத்து வச்சுக்குறோம்… இதுக்கு போய்  தூக்காதேன்னு சொல்லுறீங்களே” அனைவரிடமிருந்தும் இந்த ஒரே பதில் தான் வரும் .
அன்று மதியம் சாப்பிட்டு விட்டு குழந்தையோடு படுத்து கோதை நாயகி சற்றே ஓய்வெடுக்க, தூக்கம் வராத பவானி சத்தத்தை குறைத்து வைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
 இன்று காலை காஜல் தீர்ந்து போனது திடீரென்று ஞாபகம் வர மாடியில் இருக்கும் தங்களது அறையில் இருப்பதை எடுத்து வரலாம் என்று நினைத்தவள் தலைவாசல் கதவை சாத்திவைத்து விட்டு மாடியேறினாள்.
தங்கள் அறைதான். ஆனால் அதன் உள்ளே வந்து மாதங்கள் பல ஆனதால் அப்படியே நின்று கண்களை விரித்து பார்த்தாள்.  
காலையில் கணவன் அவசரமாக கிளம்பி சென்றிருப்பான் போலும். மெத்தையில் அவனுடைய  துணிகள் கலைந்து அலங்கோலமாக கிடந்தது. 
எல்லாவற்றையும் மடித்து பீரோவில் வைத்தவள், மெத்தை விரிப்பையும் தலையணை உறையையும் சீராக்கி தன் கையால் நீவி விட்டாள்.
பின் டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த ட்ராயரைத் திறந்து காஜலை தேடிக்கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒருகை அவள் இடைவளைத்து தன்னோடு சேர்த்தணைத்துக்  கொண்டது.
“ஐயோ!” என்று அலறியபடியே நிமிர்ந்தவள் கண்ணாடியில் தன் கணவன் முகம் காணவும் அமைதியாக, அவனோ,”சத்தம் போட்டு ஊரை கூப்பிட்டுடாத டி…” என்று அவசர அவசரமாக அவள் வாய் பொத்தினான்.
இன்று அலுவலகத்தில் கூட பணிபுரிபவரின் வீட்டு திருமணத்திற்கு போய்விட்டு அப்படியே வீடு திரும்பி இருந்தான் பரணி.
 கீழ் அறையில் அம்மாவும் தன் மகளும் தூங்குவதைக் கண்டவன் ‘மனைவி எங்கே இருப்பாள்?’ என்று எண்ணிக்கொண்டே அறைக்கு வந்தால் தன் எண்ணத்தின் நாயகி தங்களது அறையிலேயே இருப்பதைக் கண்டவன் சத்தம் போடாமல் கதவடைத்து மனைவியையும் அணைத்துக்கொண்டான்.
“இன்னைக்கு என்ன ரொம்ப சீக்கிரம் வந்துட்டீங்க” பவானி  கேட்டவாறே கணவனின் மார்பிலேயே சாய
“ம்ம்… எல்லாம் அம்மணியைப் பாக்கத்தான்” என்றவனின் உதடுகள் மனைவியின் பின்னங்கழுத்தில் ஊர்வலம் போனது.
“ஐயோடா… பொண்டாட்டியை பார்த்து வருஷக் கணக்காச்சு பாருங்க… அதான் ஐயா ஆஃபீஸ கட் அடிச்சிட்டு ஓடி வந்துட்டாரு” என்று கிண்டலாகச் சொன்னவள்,”அத்தனையும் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு” என்றபடியே  கூச்சம் தாளாமல் அவன் கைகளில் நெளிய
“பாத்தா மட்டும் போதுமா?  இப்படி என் கைக்குள்ள நீ இருந்து கதை பேசி எத்தனை நாளாகுதுன்னு தெரியுமா?”
என்று அலுத்துக்கொண்டவன்,”பாப்புவத் தூக்கிட்டு நம்ம ரூமுக்கே வந்துடு பவானி” என்று சொல்ல
இவ்வளவு நேரமும் பவானியின் மனதில் அடித்த மனைவி என்ற அலை ஓய்ந்து அம்மா என்னும் அலை ஓங்கி அடிக்கவே,”பாப்பு முழிச்சி அழ ஆரம்பிச்சிடுவா விடுங்க பரணி” என்று கணவனின் அணைப்பிலிருந்து விடுபட முயற்சித்தாள்.
அவனோ “வரேன்னு சொல்லு பவானி…” என்று தன்பிடியிலேயே நிற்க,”அத்தைகிட்ட வேணும்னா நீங்களே சொல்லுங்க…நம்மால முடியாது” என்று குழந்தை யிடம் போவதிலேயே குறியாக நின்ற மனைவிக்கு முத்தத்தில் பல வித்தைகள் காட்டியே  விலக அனுமதித்திருந்தான் பரணிதரன்…
குழந்தை சிந்து பிறந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தது. ஹாலில் சிறிய மெத்தை விரித்து அதில் சிந்துவை அமரவைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தனர் அதன் அத்தையும் சித்தியும்.
அனைவரும் குழந்தையின் விளையாட்டை ரசித்து பார்த்திருந்தார்கள். அப்போது,”அப்பா…” என்றழைத்து பரணிதரன் தான் வேலையை விட்டு விடப் போவதாக அவரிடம் சொல்ல, அதைக்கேட்ட மதியழகன் அதிர்ந்து போய் மகனின் அருகில் இருந்த பவானியின் முகத்தைப் பார்த்தார்…

Advertisement