Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 16.
சூரியன் கீழ்வானில் உதயமாகும் அந்த அதிகாலை நேரத்தில் தன் தாய்க்கு அதிகப்படியான சிரமம் எதையும் கொடுக்காமல் நலமாகவே பிறந்தது பரணிதரன் பவானி தம்பதியினரின் பெண்குழந்தை.
வீட்டில் இருந்து கிளம்பும் போதே மருத்துவருக்கு ஃபோன் செய்து பரணிதரன் விசயத்தை சொல்லிவிடவே மருத்துவமனையில் தயாராக இருந்தார் டாக்டர் ஜானகி. 
ஹாஸ்பிடல் வந்து சேரவும் மருத்துவர் இது பிரசவ வலி தான் என்று சொல்லி நேரடியாகவே லேபர்வார்டிற்கே அழைத்து சென்றார்கள் பவானியை. 
சென்று சிறிதுநேரத்திலேயே நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது, அம்மாவும் பிள்ளையும் நன்றாக இருக்கிறார்கள் என்று டாக்டர் வந்து சொன்ன பிறகு தான் வெளியே காத்திருந்தவர்களின் முகம் நிம்மதி ஆனது.
எல்லாவற்றிற்கும் மேலாக அதன் பிறகு தான் பரணிதரன் அங்கிருந்த நாற்காலியிலேயே அமர்ந்தான். அதுவரை ஏதோ கற்சிலையாக ஒரே இடத்தில் சமைந்து தான் போயிருந்தான் அந்த அன்புக்கணவன்.
சிறிது நேரத்தில் டவலில் சுற்றிய ரோஜாக்குவியலாக அவன் மகளைக் கொண்டு வந்து அவனுடைய கைகளில் டாக்டர் கொடுக்க  அந்த ஈடில்லா பொக்கிஷத்தை தயங்காது தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.
 
அதன் பிஞ்சுக் கால்களில் முத்தம் ஒன்றை பதித்து தன் அன்னையின் கைகளில் கொடுத்தவன் “”மனைவியை பார்க்க வேண்டும்” என்று சொல்ல,”ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க பரணிதரன்…கூப்புடுறேன்” என்று புன்னகை முகமாக உள்ளே சென்றார் மருத்துவர். 
சொன்னபடியே பத்து நிமிடங்களில் மருத்துவர் அழைக்க உள்ளே சென்றவனுக்கு வாடிய வெற்றிலைக் கொடியாக படுக்கையில் கிடந்த மனைவியைக் கண்டபோது கண்கள் கலங்கத் தான் செய்தது.
மெதுவாக அவள் கூந்தல் ஒதுக்கி முன்னுச்சியில் முத்தம் ஒன்றை வைத்தவன்,”பேபியைப் நீ பாத்தியா டா?” என்று கேட்க, குரலோ அவனோடு ஒத்துழைக்காமல் கரகரத்தது.
சோர்ந்து கிடந்த அந்த முகத்தில் கணவனைக் கண்டதும் ஒரு சந்தோச மின்னலடிக்க, “ஆமாம்” என்று தலையசைத்தவள், கணவனின் கலங்கிய முகம் காணப்பிடிக்காமல்,”ஆஃபீஸர் அப்பாவாகிட்டீங்க போல…ட்ரீட் லாம் கிடையாதா எங்களுக்கு?” என்று மெதுவாக கேட்க…
அவளின் எண்ணம் புரிந்தவனாக தன் உதடுகளில் சிரிப்பை தவழவிட்டவன்,”நான் அப்பா ன்னா அம்மணி அம்மா ஆகியாச்சு. நீங்க எப்போ ட்ரீட் தரப்போறீங்க. எனக்கு முதல்ல அதச்சொல்லுங்க” என்று அவள் கைகளைப் பற்றியபடிக் கேட்டான்.  பெற்றோர் ஆகிவிட்ட சந்தோசத்தில் இருவருடைய முகமும் மலர்ந்து விகசித்திருந்தது.
இவர்களைப் போல எத்தனையோ தம்பதியரை தன்னுடைய பணிக்காலத்தில் பார்த்த அங்கிருந்த மருத்துவ ஊழியர் சிரித்தபடியே,
“சார் உங்களுக்கு ரூம் குடுத்துருக்காங்க. அங்க போய் கொஞ்சம் வெயிட் பண்ணுனீங்கன்னா, ஒருமணி நேரத்தில உங்க மனைவியை அங்க கொண்டு வந்துடுறோம்” என்று ரூம் விபரம் பற்றி அவனிடம் சொல்ல ஒரு சின்ன தலையசைப்போடு மனைவியிடம் விடைபெற்று வெளியே வந்தான்.
குமரனும் கோதை நாயகி யும் ஏற்கனவே குழந்தையோடு தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்றிருந்தார்கள். இவனும் அங்கு சென்ற நேரம் குடும்பத்திலுள்ள அனைவருமே அங்கு தான் இருந்தார்கள்.  
சொன்னபடியே  ஒருமணி நேரத்தில் பவானியை ரூமிற்கு மாற்றிவிட்டனர். ரூமிற்குள் நுழையும் போதே தன் குழந்தையை சுற்றி தாத்தா, பாட்டி, அத்தை,மாமா,சித்தி, சித்தப்பா என்று உறவுகள் சூழ்ந்திருந்த சூழ்நிலையைக் கண்ட பவானிக்கு மனது நிறைந்து போயிற்று.
தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் இது. பள்ளி விடுமுறை நாட்களில் கூட படிக்கும் பிள்ளைகள் எல்லாம் உறவினர்கள் வீட்டுக்கு போகிறோம் என்று சொல்லும் போது தங்களுக்கு அப்படி செல்லுவதற்கு உறவினர்கள் யாருமில்லாத நிலையை எண்ணி எத்தனையோ நாட்கள் வருந்தியிருக்கிறாள்  பவானி.
ஆனால் இன்றோ தன் பிள்ளைக்கு எல்லா உறவுகளும் கிடைத்திருக்க, நெகிழ்ந்து போன பவானி அதனை  கிடைத்த தனிமையில் தன் கணவரிடம் சொல்லவும் செய்தாள்.
அந்த மருத்துவமனை வளாகத்திலேயே உள்ள குழந்தைகள் நலமருத்துவரிடம் காட்டி வர குழந்தையை தூக்கிக் கொண்டு கோதை நாயகியும் திவ்யா வும் செல்ல 
மற்றவர்கள் அனைவரையும் அங்கிருந்த கேண்டீனுக்கு அழைத்து சென்றிருந்தார் மதியழகன்.
அறைக்கு வந்த பின் தங்களுக்கு கிடைத்த முதல் தனிமையில் தன் படுக்கைக்கு அருகே நாற்காலியில் உட்கார்ந்து இருந்த கணவனைப் பார்த்து,
“நன்றி பரணி…” என்றாள் பவானி. குரல் கொஞ்சம் நெகிழ்ந்திருந்தது.
இப்போது எதற்காக இந்த நன்றி என்று புரியாத பரணி,
 நன்றி சொல்லுற அளவுக்கு என்னாகிப்போச்சுடா?” என்று கேட்க
 
“நான் விலக்கி போனாலும் எனக்காக மூனு வருஷம் காத்திருந்து என்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கல்ல அதுக்கு தான்…” என்றவள் சிறிது நேரத்திற்கு முன்னால் தான் நினைத்ததை எல்லாம் அவனிடம் சொல்லியதோடல்லாமல், 
” நீங்க எனக்கு தந்த இந்த குடும்ப சூழலுக்கு கைமாறாக நான் உங்களுக்கு என்ன செய்யப்போறேன்னே தெரியலை” என்று சிறுபிள்ளைத்தனமாகச் சொல்ல
“பெருசா ஒன்னும் வேண்டாம் கண்ணம்மா…, இன்னும் ஒரு இரண்டே இரண்டு பேபீஸ் மட்டும் பெத்து குடுத்துடு…கைமாறு கணக்கு சரியா  போயிடும்” என்று உல்லாசமாக சொன்னவனின் தோளிலில் தன் கைகொண்டு மெதுவாக அடித்தாள் பவானி.
குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து விட்டு திரும்பி வந்திருந்த திவ்யா தம்பி மகளை கைகளில் வைத்திருந்தபடியே,”ம்மா…பாப்பா அப்படியே பரணி மாதிரியே இருக்கால்ல” என்று தன் அன்னையிடம் கேட்க 
“ஜாடை எல்லாம் இப்பவே தெரியாது திவ்யா… அதுக்கு இன்னும் கொஞ்சம் நாளாகும்” என்றவரை இடைவெட்டிய பவித்ரா 
“நல்லா பாருங்க அத்தம்மா… பாப்பு கிட்ட இந்த சித்தியோட ஜாடை கொஞ்சம் இப்பவே தெரியுதுல்ல” என்று குழந்தை மீதான தன் உரிமையை நிலைநாட்டிய இதே பவித்ரா தான் அக்காவை தனியறைக்கு கொண்டு வந்ததும் அடக்க முடியாமல் அழுதது. 
இதற்கெல்லாம் ஒருபடிமேலே போய் சந்தோஷ்,”அம்மா! எனக்கும் இதேமாதிரி ஒரு பாப்பாவை உங்க தொப்பையிலிருந்து சீக்கிரமா எடுத்து குடுங்க” என்று எல்லோர் முன்னிலையிலும் கேட்டு திவ்யாவை அலறவிட்டான்.
மருத்துவமனையில் அவர்களுக்கான அறை பெரியதாக இருக்க அங்கிருந்த நாற்காலியிலும் உடன் தங்குபவருக்காக போட்டு இருக்கும் கூடுதல் படுக்கையிலுமாக உட்கார்ந்து இருந்தார்கள் அனைவரும்.
அவர்கள் அனைவரது பேச்சின் மையப்புள்ளியாக தான் மட்டுமே இருப்பது அறியாமல் தன் சிப்பிஇமைகளை மூடி அத்தையின் மடியை மெத்தையாக்கி தூங்கிக் கொண்டிருந்ததாள் அந்த வீட்டு இளவரசி.
அனைத்தும் சுமுகமாக இருக்க திவ்யாவின் கணவரும் மதியழகனும் வீட்டுக்கு கிளம்பினார்கள். 
சிறிது நேரத்தில் அறைக்கு வெளியே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து இருந்த குமரனின் அலைபேசி ஒலிக்க எடுத்து பேசியவன்,”ஹேய்… அதுக்குள்ள வந்துட்டீங்களாப்பா? வண்டியை பார்க்கிங்ல விட்டுட்டு ரிஸப்ஷன் பக்கம் வாங்க நான் வந்துடுறேன்” என்றவாரே வேகமாக நகர்ந்தான்.
 தன் வகுப்புத் தோழிகள் என்று  மூன்று பேரை  அறைக்கு கூட்டி வந்தவன் அவர்களை சொப்னா,நிவேதா, அருணா என்று தன் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தினான்.   
ஆனால் அந்த பெண்களுக்கு குமரனின் குடும்பத்தாரைப் பற்றிய அறிமுகம் ஏதும் தேவையிருக்கவில்லை. அம்மா,அண்ணா,அண்ணி, அக்கா என்று அவர்களும் குமரன் அழைப்பது போலவே அனைவரையும் அழைத்து கலகலப்பாக பேசினார்கள். 
“அண்ணியோட வளைகாப்புக்கே வரணும்னு நினைச்சோம்.  ஆனால் நீங்க சிம்பிளா செய்றதா குமரன் சொன்னான். அதான் வரலை ம்மா…” என்று கோதை நாயகி யிடம் சொல்லிக்கொண்டார்கள். 
குழந்தையை தொட்டுப் பார்த்துவிட்டு,”பேபி எவ்வளவு சாஃப்ட் ல்ல” என்று அவர்களுக்குள்ளே சொல்லி மகிழ்ந்து கொண்டார்கள்.
ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி நட்பு அந்த நால்வரையும் இணைந்திருந்தது அவர்கள் பேசிய விதத்திலேயே தெரிந்தது.
இளையவர்களின் வருகைக்குப் பிறகு அறையில் இன்னும் கலகலப்பு அதிகமாகியது. அனாவசியமான உடல்மொழிகள் ஏதுமின்றி இயல்பாக பழகிய அந்த பெண்களை அனைவருக்கும் பிடித்திருந்தது.
சிறிது நேரத்தில் மூவரும் கிளம்ப ஆயத்தமாக, “எல்லாரையும் கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கிக்குடுத்து அனுப்பு குமரா” என்று சொன்ன பரணி,”அப்படியே நீங்களும் போய் சாப்டுட்டு வாங்க” என்று நந்தினி, பவித்ரா, சந்தோஷையும் சேர்த்தே குமரனுடன் அனுப்பி வைத்தான்.
அறையை விட்டு வெளியே வந்ததும் அருணா பவித்ராவைப் பார்த்து,”ஹாய்.. நீதான் பவித்ராவா?” என்று கேட்க
“ஆமாம்…” என்ற பவித்ரா  
“எப்படிக்கா உங்களுக்கு தெரியும்?” என்று கேட்க
” ம்ம்… நேற்று பிபிசி  நியூஸ்ல சொன்னாங்க. தெரியாதா உனக்கு?” என்று கிண்டலடித்தாள் சொப்னா.
ஏதோ ஞாபகத்தில்,”ஓ…” என்றவளுக்கு அப்போதுதான் அவர்கள் தன்னை கிண்டலடிப்பது புரிய,”அக்கா…” என்று சிணுங்கினாள்…அதைப் பார்த்து
“ரொம்ப கஷ்டமப்பா…” என்றாள் குமரனைப் பார்த்து  உதட்டைப் பிதுக்கியவாறே நிவேதா.
அவனோ எதையும் கண்டுகொள்ளாமல் கேண்டீனை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
மருத்துவமனை எவ்வளவு நேர்த்தியாக சுத்தமாக இருந்ததோ அதற்கு சற்றும் குறையாமல் மருத்துவமனை நிர்வாகத்தால் நடத்தப்படும் கேண்டீனும் இருந்தது.
ஒரு பெரிய வட்டவடிவ டேபிளை தேர்வு செய்து    அனைவரும் உட்கார்ந்து கலகலத்தபடியே சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீமில் லயித்திருந்தனர்.
 வாசலைப் பார்த்து உட்கார்ந்திருந்த  அருணா  பக்கத்தில் இருந்த நிவேதாவை லேசாக தட்டி கண்களால் கேண்டீன் வாசலை காட்ட, பார்த்தவளோ
“ஹையோ! கொடும கொடும ன்னு கோயிலுக்கு போனா அங்க  இரண்டு கொடுமை ஜங்கு… ஜங்கு…ன்னு நின்னு ஆடிச்சாம்” என்று சலித்தவள்
“க்ளாஸ்ல தான் இவனுங்க அலப்பறை தாங்கலை ன்னா, இங்கயுமா வந்துட்டானுங்க?” என்றாள்.
 இத்தனை கமெண்ட் க்கும் உரியவர்கள் இவர்களது வகுப்பில் படிக்கும் சகமாணவர்களான நவீனும் அவனது நண்பன் ராஜாவும் தான்.
நவீனுடன் வருபவன் பெயரில் தான் ராஜா. மற்றபடி அவன் நவீனின் முழுநேர கூஜா தான்.
எப்போதுமே இவர்களுக்கும் அந்த நவீன் குரூப் ற்கும் ஏழாம் பொருத்தம் எட்டாம் பொருத்தம் தான்.
“இவன் எங்கடி இங்க?” என்ற அருணாவிடம்,”நம்ம சொப்னாவை போய் அவன் கிட்ட கேக்கச்சொல்லு, பதில் உடனே கிடைச்சிடும்” என்றாள் நிவேதா கிண்டலாக
“என்ன பதில் வேணும்? யாருகிட்ட கேக்கணும்?” என்று தோழிகள் இருவரின் பேச்சில் இடையிட்ட சொப்னாவிடம்  வந்து கொண்டிருந்தவர்களை நிவேதா தன் கண்களால் காட்டினாள்.
“இவங்கிட்டயா? விளையாட்டு க்கு கூட அப்படி சொல்லாத நிவே…கொன்னேபோடுவேன் உன்ன” என்றவாறே நறுக்கென்று பக்கத்தில் இருந்தவளின் தொடையில் கிள்ள
“ஏன்டி எரும, மட்டன் வேணும்னா கேட்டு வாங்கிச் சாப்பிடணும் இப்படி நரமாமிசத்துக்கு அலையப்படாது” என்றாள் அசராமல் நிவேதா…
இவர்களுக்கிடையே நடந்த சலசலப்பைக் கண்டு என்ன என்பதுபோல அவர்களுக்கெதிரே இருந்த குமரன் பார்க்க அதற்கிடையில் அவர்களுக்கு பக்கத்தில் வந்திருந்தான் அந்த நவீன்.
அந்த நவீனும் இவர்களை இங்கே எதிர்பார்த்திருக்க மாட்டான் போலும். ஒருமுறை சொப்னாவை வட்டமிட்ட அவன் கண்கள் அவர்கள் யாரையும் அறியாதவன் போன்ற பாவனையில் அவர்கள் டேபிளுக்கு பக்கத்து டேபிளில் தன்னோடு வந்தவனுடன் போய் உட்கார்ந்து கொண்டு
“டேய் மாப்ள… நமக்கெல்லாம் உடம்புல தான் மச்சம் இருக்கு. ஆனால் ஒருசிலருக்கு மச்சத்திலேயே உடம்பிருக்கு, தெரியுமாடா உனக்கு?”  என்று அந்த கூஜாவிடம் கேட்க…
” தெரியுமா…வா? நான் அந்த மச்சக்காரனை பார்த்திட்டு தான் இருக்கேன் மச்சான்!” என்று ஓவர் எக்ஸ்பிரஸன் காட்டியது அந்த கூஜா…
“ஆமா… இதென்னடா வரவர மகளிரணியில் மெம்பர்ஸ் எல்லாம் அதிகரிச்சிட்டே போகுது…” நந்தினியையும் பவித்ராவையும் நோட்டமிட்டபடியே  நவீன் கேட்டான்.
இவர்கள் கல்லூரி அரசியல் எதுவும் தெரியாத நந்தினியும் பவித்ராவும் அவர்களுக்குள் பேசியபடி  இயல்பாய் இருந்தார்கள். குமரனுக்கோ கோபம் கொப்பளித்தது. கைமுஷ்டியை மடக்கியவனை பக்கத்தில் இருந்த சொப்னா அமைதிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட உடன் இன்னமும் வெறி கொண்டவன் போல அந்த நவீன்,”ஹையைய்யோ! கன்னம் சிவக்குது கழுத்தெலும்பு துடிக்குது மச்சான்… ஆனால் பொட்டபுள்ள கைபட்டா எல்லாம் சொத்துன்னு ஆகிப்போகுது” என்று சத்தமாக சிரித்தபடியே
‘நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி..’
 என்று சொப்னாவைப் பார்த்து பாட
 
 

Advertisement