Advertisement

இப்போது வாசித்தல்  அவளுக்கு சுவாசித்தல் போலாக,
 இதோ சிவகாமியின் சபதம் நான்காவது பாகம் வாசித்து கொண்டிருக்கிறாள். அதையும் தனது பேறுகாலத்திற்கு முன்னால் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று ஆண்டு இறுதி தேர்விற்காக தயாராகிக் கொண்டிருக்கும் வீட்டின் இளையவர்களுடன் தானும் போட்டி போட்டு கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் பவானி.
ஓடும் தண்ணீரில் எப்படி பாசிபிடிக்க முடியாதோ, அதேப்போல பவானியின் உலகம் வேலை, வாசித்தல் என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருக்க…இப்போதோ பயம் என்ற பாசி அவள் மனதில் படரவே முடியவில்லை.
“அக்கா…அக்கா…” என்ற பவித்ராவின் குரலுக்கு புத்தகத்திலிருந்து பார்வையை எடுக்காமலேயே
“என்னடி?” என்றாள் பவானி. குரலில் தன் வாசிப்பு தடைபட்ட எரிச்சல் தெரிந்தது.
“தூக்கம் வருது…” என்ற தங்கையை நிமிர்ந்து ஒருமார்க்கமாக பார்த்தவள்,”இதுக்கா என்னை கூப்பிட்ட? தூக்கம் வந்தா போய் தூங்கு டி” என்று சலித்தவாறே மீண்டும் புத்தகத்துக்குள் தன் தலையை நுழைத்து கொள்ள
“உன்கிட்ட இருக்கிற தலையணையைக் கொஞ்சம் குடுத்தா, இதோ இப்படியே கொஞ்ச நேரம் படுத்தெழும்பிட்டு படிக்க ஆரம்பிப்பேன்ல” என்று தான் உக்கார்ந்து படித்துக் கொண்டிருந்த இடத்துக்கு பக்கவாட்டில் கையை காட்டியபடியே பேச 
பக்கத்தில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த நந்தினிக்கு அவளின் கிண்டல் புரிந்து லேசான புன்னகை நெளிந்தது உதடுகளில். ஆனால் அதை அண்ணிக்கு காட்டாமல் மறைத்துக்கொண்டாள். 
“தலையணையா? எங்கிட்ட எங்கடி இருக்கு? உளர்றியா என்…” என்று சொல்லிக்கொண்டே வந்தவளுக்கு, அவளின் கிண்டல் புரிய,”நான் கைல வச்சிருக்க புக்கு தலையணை மாதிரி தெரியுதா உனக்கு? உன்னை…” என்றவாரே பவானி மெதுவாக எழும்ப முயல… வாய்கொள்ளா சிரிப்போடு விருட்டென்று எழுந்து இடத்தை காலிசெய்தாள் பவித்ரா. அவள் பின்னால் நந்தினியும் ஓடிவிட…
அந்த நேரம்,”என்ன நடக்குது இங்க?” என்று கேட்டவாறே சந்தோஷோடு வீட்டுக்குள் நுழைந்த திவ்யா, தம்பி மனைவியின் வரவேற்பை ஏற்றுக்கொண்டவாரே, “உன்னோட ஃபேவரைட் பேக்கரில வாங்குன ஸ்வீட்ஸ் பவானி” என்று அவள் கையில் ஒரு பார்சலை கொடுத்தவள், அவள் அருகில் அமர்ந்தாள்.
சந்தோஷ் தன் அன்னையின் மடியில் தன் கைகளை ஊன்றியபடியே பவானியை குறுகுறு என்று பார்த்தவன், திடீரென்று,”அத்த நீங்க ரொம்ப சாப்பிடுவீங்களோ?” என்றான் கிசுகிசுப்பாக ஏதோ ரகசியத்தை கேட்கும் தொனியில்
தானும் வழக்கத்திற்கு மாறாக இப்போதெல்லாம் நிறையவே சாப்பிடுவதால் சிறுவனிடம் மறைக்காமல், “ஆமாம் டா…செல்லம்” என்று பவானி சொல்ல
சற்றே சிந்தித்தவன்,”நானும் நிறைய தான் சாப்பிடுறேன். ஆனால் எனக்கு ஏன் உங்களை மாதிரி தொப்பை வரலை?” என்று அவன் சந்தேகத்தைக் கேட்க
‘ஓஹ்… இந்த சந்தேகத்தை கேட்க தான் பையன் அந்த கேள்வி கேட்டானா? இது தெரியாமல் நாம தான் சிக்கி கிட்டமோ?’ என்று நினைத்து திவ்யாவைப் பார்க்க அவளோ எனக்கொன்றும் தெரியாது என்னும் விதமாய் உதட்டைப் பிதுக்கினாள்…
‘ம்ம்…சமாளிப்போம்…’ என்ற எண்ணத்தோடு,”அது என்னை மாதிரி ஏஜ் குரூப்ல இருக்குற லேடீஸ் க்கு மட்டும் தான் டா சாப்பிட்டா வயிறு பெரிசாகும். உன்னை மாதிரி பசங்களுக்கெல்லாம் ஆகாது” என்று மெல்லிய குரலில் சொல்ல
“அப்போ எங்கம்மாவும் தான் நெறைய சாப்பிடுறாங்க, அவங்களுக்கு ஏன் உங்களை மாதிரி தொப்பை வரலை?” என்று அடுத்த கேள்வியை கேட்டு அங்கிருந்த இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவன்,
இதற்கு எப்படி பதில் சொல்லுவது என்று தெரியாமல் முழித்த பவானியின் முகத்திலிருந்தே பதில் வராது என்று நினைத்தானோ என்னவோ,” சித்தி…” என்று அழைத்தபடியே இடத்தை காலி செய்தான்.
சிறுவன் இடத்தை விட்டு அகன்றதும் வாய்நிறைய காற்றினை இழுத்து ஊஃப்ப்… என்று வெளியே விட்ட பவானி,”அம்மாவுக்கும் தொப்பை வரணும்னு சின்னவன் ஆசைப்படுறான்ல… நீங்களும் கொஞ்சம் அதிகமாத்தான் சாப்பிடுங்களேன் அண்ணி…” என்று திவ்யாவை கலாய்க்க
“இப்பல்லாம் உனக்கு எங்கிட்ட அண்ணி ங்குற பயமே இல்லாமல் போச்சு பவானி” போலியாக அங்கலாய்த்தபடியே தம்பி மனைவியோடு சேர்ந்து ரகசியச் சிரிப்பில் இணைந்து கொண்டாள் திவ்யா.
அப்போது அங்கே வந்த குமரன் அக்காவை பார்த்து சிரித்தபடியே, பவானியை”அண்ணி…” என்றழைக்க
“என்ன குமரா!” என்று கேட்டவளிடம் தன் கையிலிருந்த ஒரு புத்தகத்தை காட்டி,” என்னோட க்ளாஸ்ல மூனு கேர்ள்ஸ் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் அண்ணி. அவங்க மூனு பேரும் இந்த நாவலை படிச்சிட்டு ரொம்ப நல்லாருக்குன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.” 
நிறுத்தி மெதுவாக சிரித்தவன்,”நீங்களும் இப்போ ரீட் பண்ணுறீங்க இல்லையா ண்ணி… அதான் நீங்க வாசிப்பீங்கன்னு நான் அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்” என்றபடியே அந்த புத்தகத்தை பவானியிடம் நீட்ட “நன்றி” சொல்லி வாங்கிக்கொண்டாள் பவானி. 
“டேய்! காலேஜ் க்கு பாடம் படிக்க போறீங்களா? இல்லை கதை படிக்க போறீங்களாடா?” என்று விளையாட்டாக மிரட்டியவாறே தம்பியுடன் நகர்ந்தாள் திவ்யா..
தான் வாசிப்பதைப் பார்த்து தோழிகளிடமிருந்து நாவல் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் குமரனின் செயல் சிரிப்பை வரவழைத்தது பவானியிடம். ‘அந்த அளவுக்கா நாம முரட்டு ரீடர் ஆகிட்டோம்..?’ என்று சிந்தித்தபடியே நாவலின் ஆசிரியர் யாரென்று பார்த்தாள். 
ஆசிரியரின் பெயர் ‘அழகி’ நாவலின் பெயர்  ‘நிலவொன்று கண்டேனே” என்றது முன்பக்க அட்டைப்படம்.
 
‘பெயரே அழகியா! அப்போ ரொம்ப அழகா இருப்பாங்களோ?’ என்று நினைத்தவாறே புத்தகத்தை முன்னும் பின்னுமாக பார்த்தவள், எழுத்து எப்படித்தான் இருக்குன்னு பார்ப்போமே?’ என்று வாசிக்க ஆரம்பிக்க அந்த முதல் அத்தியாயத்திலேயே வீழ்ந்தே போனாள் பெண்.
சுவாரஸ்யமான அந்த எழுத்துநடை அவளை அந்த கதையின் உள்ளேயே இழுத்துக் கொள்ள கணவன் வந்து உணவருந்த அழைத்தது கூட தெரியாத வாசிப்பு அவளிடம்.
அழைத்த கணவனோடு சென்று உணவருந்தி வந்தவள் மீண்டும் வாசிக்க ஆரம்பிக்க,”நீ பரிட்சைக்கு படிச்சது போதும்.  நாளைக்கு லீவ் தானே மீதியை நாளைக்கே படிச்சுக்கலாம்” என்று புத்தகத்தை பிடுங்கி வைத்துக் கொண்டான் கணவன்.
அதற்குள் பவானி கதையில் பல அத்தியாயங்களை கடந்திருந்தாள். அன்றிரவு படுக்கைக்கு வந்த கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டே கதையின் நாயகி நித்திலாவைப் பற்றியும், நாயகன் யுகேந்திரனை பற்றியும், வாய் ஓயாது பேச, ஒரு சிரிப்போடு கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் ஆர்வத்தைப் பார்த்து
“மீதியையும் இப்பவே வாசிக்கணும்னு இருக்காடா” என்று  கேட்டான். ஆமாம்” என்று அவள் விழிகளை மூடித்திறக்க புத்தகத்தை கொடுத்தவன் அவளோடு சேர்ந்து தானும் தூங்காது முழித்திருந்தான். அவளோ ஒய்யாரமாக கணவனின் மார்பிலேயே சாய்ந்து கொண்டு கதை முழுவதையும் படித்து முடித்தாள்.
படித்து முடித்தவளின் மனதில் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அனாதை ஆஸ்ரமத்தில் பெற்றோரின்றி வளர்ந்து கலெக்டராக உயர்ந்து நின்ற அந்த நாயகியும், அவளின் தைரியமும், அவள் மனதில் கவிஞராய் நின்ற அந்த காட்டுஇலாகா அதிகாரியான நாயகனும், அவன் காதலும், அவனின் இலக்கிய பேச்சுகளும், அவனின் நேர்மையும், அவனது குடும்ப சூழ்நிலையுமே  உலாவந்தது.
அந்த வாசிப்பு தந்த உற்சாகத்தில் இரவு கண்விழித்து படிக்க அனுமதித்ததோடல்லாமல் கூடவே விழித்திருந்த கணவனின் இதழ்களில் சந்தோஷ மிகுதியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தவளைக் கண்டு அசந்து போன கணவன்,”என்னாச்சு?” என்று கேட்க
“கதையோட எஃபெக்ட் அப்படி…” என்று சொல்லி சிரித்தவளின் மனமோ “ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே…” என்று ஆனந்தமாய் பாடியது.
**********
ஒன்பதாம் மாதம் பிறக்கவும் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தாள் பவானி. வளைகாப்பு குறித்து பேச்சு வரவே “குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியை பெரிதாக செய்து கொள்ளலாம். இதை சிம்பிளாக செய்வோமே” என்று பவானி சொல்ல, அப்படியே செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
உண்மையைச் சொல்லப்போனால் கோதை நாயகி க்குமே வளைகாப்பு நிகழ்ச்சியை பெரிதாக செய்ய விருப்பமில்லை.
காரணம் வேறொன்றுமில்லை… சாதாரணமாகவே பவானி அழகி. இப்போதோ அலங்காரம் செய்த  தங்கத்தேரைப் போல அவள் பளிச்சிட, பெரிதாக வளைகாப்பு நிகழ்ச்சிவைத்தால் மருமகளுக்கு எங்கே திருஷ்டி பட்டுவிடுமோ என்ற பயம் அவருக்கு முளைத்திருந்தது.
அந்த பயத்தை மருமகளின் பதில் விரட்டி விட நல்லதொரு நாளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சூழ வளைகாப்பு நிகழ்ச்சியை நிறைவாகவே முடித்திருந்தார் கோதை நாயகி.
குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் புதுவரவிற்காக ஆவலுடன் காத்திருக்க சரியாக வளைகாப்பு முடிந்த நாளிலிருந்து பதினைந்தாவது நாள் அதிகாலை நான்கு மணியளவில் வந்த வலியில் துடித்துப்போன பவானி சட்டென்று தன்னருகே தூங்கிக்கொண்டிருந்த கணவனின் தோளை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.
பதறி விழித்த கணவனிடம் அவள் விபரம் சொல்ல, அவன் அதை அன்னையிடம் சொல்ல வீடே ஒருவித பரபரப்பில் மூழ்கியது. கோதை நாயகி ஹாஸ்பிடலுக்கு செல்ல ரெடியாக, குமரனோ வண்டியை ஷெட்டில் இருந்து எடுத்து வெளியே விட்டு விட்டு ரெடியாக நின்றான்.
கணவன் உதவி செய்ய  குளித்து எளிதான உடை அணிந்தவளுக்கு தன்னவனின் கரங்கள் நடுங்குவது புரிய அவனை லேசாக அணைத்து விடுவித்தவள் அவனது பயந்த முகம் கண்டு தனக்கு வந்த வலியைக் கூட மறைத்து “போலாமாப்பா…” என்று சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
உண்மையிலேயே வாழ்வில் முதன்முறையாக பயம் என்ற ஒன்றை உணர்ந்த பரணிதரன் ஓரளவிற்கு அதை மனைவியிடமிருந்து மறைத்தபடியே அவளை ஆதரவாக தன்கையணைவில் வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வர 
 அறையை விட்டு வெளியே  வந்த மருமகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்ட கோதை நாயகி தேவையான பொருட்களோடு வண்டியில் முன்பக்கம் ஏறிக் கொண்டார்.
பரணிதரன் மனைவியோடு பின்பக்கம் ஏறிக்கொண்டு ஆதரவாய் தன்மீது மனைவியை சாய்த்துக்கொள்ள குமரனின் கைகளில் கார் மருத்துவமனையை நோக்கி பறந்தது…
.

Advertisement